2010-11 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது உற்பத்தி (கலால்) வரி விதிக்கப்பட்டதும், கச்சா எண்ணெய் மீது மீண்டும் சுங்கத் தீர்வை விதிக்கப்ட்டதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2.50 முதல் ரூ.2.75 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் முதல் காய்கறிகள் வரை விலைகள் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 வரை உயர்ந்துள்ளதால், சரக்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். உணவுப் பொருட்களில் இருந்து காய்கறிகள் வரை உற்பத்தியாகும் இடத்திலிருந்து மொத்த விலை சந்தைகளுக்கு கொண்டுவரவும் லாரி தேவை. அதேபோல, மொத்த விலை சந்ததைகளில் இருந்து சில்லரை விற்பனை அங்காடிகளுக்குக் கொண்டு செல்லவும் லாரி, மினி லாரி ஆகியவற்றின் தேவை அவசியமாகிறது.
டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் உயரும், அந்த உபரிச் செலவை பொருட்களின் மீதுதான் வைத்து வணிகர்கள் விற்கப்போகிறார்கள். எனவே, அத்வாசியப் பொருட்களில் இருந்து தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் வரை அனைத்து விலைகளிலும் அது எதிரொலிக்கத்தான் போகிறது.
FILE
பெட்ரோல், டீசல் விலையுயர்வால் மொத்த விலையை அடிப்படையாகக் கொண்ட விலைவாசிக் குறீயீடு (Whole sale Price Index - WPI) 0.4 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கும் என்றும், இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, “மக்களை திருப்திபடுத்தும் நிதிக் கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிப்பதால் பணவீக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றி விட முடியாது. விலையுயர்வு மக்களில் சில பிரிவினரை பாதிக்கும்தான், ஆனால் நீண்ட கால கண்ணோட்டத்தோடு செயல்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
“மக்களைத் திருப்திபடுத்தும் கொள்கைகளை நீண்ட காலத்திற்குக் கடைபிடித்தால், அதன் விளைவாக முதலீட்டிற்கான சூழல் மறைந்து போய்விடும், அதன் விளைவாக புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்கக்கூடிய திறன் அடிபட்டுவிடும். ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று பொருளாதார வீச்சுடன் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
மொத்த விலை குறியீடு சரியான அளவீடு ஆகுமா?
ரூபாயின் பணவீக்கத்தை மொத்த விலைக் குறியீட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிப்பது சந்தையின் எதார்த்த நிலையை பிரதிபலிக்கவில்லை என்று கூறப்பட்டதையடுத்தே, பயனாளர் விலைக் குறியீட்டை (Consumer Price Index - CPI) - அதாவது மக்கள் நேரடியாகச் சென்று வாங்கும் சில்லரை விற்பனை அங்காடிகளில் உள்ள விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறிவருகின்றனர். சிறந்த பொருளாதார வல்லுனராகக் கருதப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த விவரம் தெரியாமலிருக்கவோ அல்லது பேட்டியளித்த நேரத்தில் நினைவிற்கு வராமலோ இருந்திருக்க நியாயமில்லை. ஆனால், மொத்த விலைக் குறியீடு 0.4 விழுக்காடு மட்டுமே உயரும், அது ‘மக்களில் சிலரை’ பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் ஒரு ரூபாய் உயர்ந்தால் அது சந்தையில் இரண்டு மடங்காக எதிரொலிக்கும் என்பது சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கும் நமது நாட்டு அன்றாடக் காய்ச்சிகளில் இருந்து நடுத்தர குடும்பத்தினர் வரை அனைவருக்கும் தெரிந்த எதார்த்தமாகும். ஆனால், அந்த உண்மையை மறைத்துவிட்டு, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரதமர்!
‘மக்களை திருபதிபடுத்தும் நிதிக் கொள்கைகளை கைவிட வேண்டும்’ என்று கூறுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதாவது பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலைகளை தற்போது அரசு நிர்ணயித்துவரும் முறையை (Price control) கைவிட்டுவிட்டு, சந்தையின் ஏற்றத் தாழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணியிக்கப்பட வேண்டும் என்ற திறந்த பொருளாதார கொள்கை நிலையை வலியுறுத்துகிறார்.
விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ளட்டும், ஆனால், மத்திய அரசு விதிக்கும் சுங்கத் தீர்வை, உற்பத்தித் தீர்வை ஆகியவற்றையும், மாநில அரசுகள் (அநியாயமான அளவிற்கு) விதித்துவரும் விற்பனை வரி, கூடுதல் விற்பனை வரி ஆகியவற்றையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவாரா மன்மோகன் சிங். மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்களுடைய நிர்வாகச் செலவு + இலாபம் ஆகியவற்றை மட்டும் சேர்த்து பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கட்டுமே? ஏன் அப்படிப் பேச மறுக்கிறது அரசு?
இந்தியா மட்டுமல்ல, முன்னேறிய நாடுகள் உட்பட உலகில் உள்ள அனைத்து அரசுகளும் தங்கள் மக்களை திருப்திபடுத்தும் திட்டங்களுடன் கூடிய நிதிக் கொள்கைகளைத்தான் கையாண்டு வருகின்றன. ‘சந்தை நிர்ணியிக்கும்’ என்று கூறும் பொருளாதார கொள்கை கொண்ட அமெரிக்கா, தனது நாட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மானியம் வழங்கவில்லையா? அதனை ‘ஓரளவிற்காவது’ விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இநதியா, பிரேசில், சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் வலியுறுத்தவன் காரணத்தால்தானே உலக வர்த்தக அமைப்பின் டோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவின்றி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது?
அப்படிப்பட்ட கொள்கை கடைபிடிக்கும் காரணத்தினால் அமெரிக்காவின் முதலீட்டுச் சூழல் கரைந்துவிட்டதா? எனவே, முதலீட்டுச் சூழலையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளின் விலை நிர்ணயத்தையும் முடிச்சுப்போடுவது பொறுந்தவில்லை.
சரி, இதுநாள்வரை - குறிப்பாக திறந்தப் பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கும் காலம் துவங்கிய 1991ஆம் ஆண்டு முதல் இந்த 20 ஆண்டுகளில் - நீங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பின் எண்ணிக்கையென்ன? அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது, அன்னிய நேரடி முதலீட்டிற்கான அனைத்துக் கதவுகளையும் திறந்துவிடுகிறீர்கள், அதன் மீதான உச்சவரம்பை துறை வாரிய தளர்த்திக் கொண்டேயிருக்கிறீர்கள், மத்திய அரசின் நவ்ரத்னாக்கள் முதலீட்டிற்கு திறந்துவிடப்படாது என்று கூறினீர்கள், இப்போது அதையும் திறந்து விடுகிறீர்கள்.
இவைகளால் உருவான வேலை வாய்ப்புகள் எவ்வளவு? அந்த நிறுவனங்களில் அதிகரித்த வேலை வாய்ப்பு எவ்வளவு? வெள்ளை அறிக்கை அளிக்கலாமே? அதன் மூலம் மக்களைத் திருப்திபடுத்தும் நிதிக் கொள்கையை ஒரே நாளில் சுருட்டி மூடிவிட்டு, அமெரிக்காவைப் போல எல்லாவற்றையும் திறந்துவிட்டுப் பார்க்கலாமே?
இந்த 20 ஆண்டுக் காலத்தில் மத்திய அரசின் வருவாய் அதிகரித்துள்ளது. அதன் செலவீனங்கள் அதிகரித்துள்ளன. இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்துள்ளது.
ஆனால், ஒட்டுமொத்த உள்நாட்டு வருவாய் (ஜிடிபி), கிராம்ப் புற வளர்ச்சி, விவசாய உற்பத்தி, தன்னிறைவை உறுதிசெய்யும் தொழில் வளர்ச்சி, பெருமளவிற்கு வேலை வாய்ப்பை அளிக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சி ஆகியன எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை மத்திய அரசு கூறட்டுமே?
இந்த விவரங்களையெல்லாம் வெள்ளை அறிக்கையாகத் தந்தால் தெரியும், இந்த நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படுவது ‘மக்களைத் திருப்திபடுத்தும் நிதிக் கொள்கையா’ அல்லது ‘வணிக நிறுவனங்களை வளப்படுத்தும் நிதிக் கொள்கையா’ என்று.
நன்றி http://tamil.webdunia.com