Tuesday, November 23, 2010

மணிப்பூர் அரசின் 'சிறப்பு அதிகாரப்' பயங்கரவாதம்

கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை [Armed Forces (Special Powers) Act, 1958] டிசம்பர் 1 முதல் மேலும் ஓராண்டு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கிளம்பும் பூதாகாரச் செய்திகளில் மக்களின் முழுக் கவனமும் குவிந்திருக்கும் நிலையில், அரச பயங்கரவாதத்தின் முற்றதிகாரத்தை உறுதியாகச் செயற்படுத்தும் இது போன்ற முக்கியமான நேர்வுகள் போதுமான கவனத்தைப் பெறாமலே போய்விடுகிறது.

பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் தாலாட்டுக்குரிய மும்பை, தில்லி, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் முதலான பெருநகரங்களே இந்தியாவாக, இவற்றின் நீள அகல வளர்ச்சியே, இத் துணைக் கண்டத்தின் வளர்ச்சியாக ஊடகங்களாலும் ஊதிப் பெரிதாக்கிக் காட்டப்படுகின்றன. இச்சூழலில், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் இருப்பதே வெகுமக்கள் பலருக்கும் புதிய தகவல். கைவிடப்பட்ட சகோதரிகள்!

1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State). 1947 மணிப்பூர் அரசியல் சட்டம் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கியது. செயற்பாட்டு அதிகாரமுள்ள அரசரைத் தலைவராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையையும் கொண்டது அது. 1946 அக்டோபர் 15 அன்றே மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 முதல் யூனியன் பிரதேசமாகவே இருந்து வந்த மணிப்பூர் 1972-இல் தனி மாநிலமானது.

தொலை தூரத்திலுள்ள நடுவண் அரசை வளர்ச்சித் திட்டங்கள் மூலமின்றி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மூலமாக மட்டுமே அறிய நேர்ந்த மணிப்புரிகளில் சில புரட்சிகரச் சக்திகளால் 1960 மற்றும் 70களில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), காங்லிபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி (PREPAK), மக்கள் விடுதலைப் படை (PLA) முதலான இயக்கங்களின் மூலம் சுதந்திரச் சோஷலிசக் குடியரசை உருவாக்கும் நோக்கில் தன்னுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களும் நடந்தன. இப்போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் செப்டம்பர் 1980-இல் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டம் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இம்பால் பள்ளத்தாக்கில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம், பின்னர் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நடுவண் அரசின் இச்சட்டத்தை மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ நடைமுறைப்படுத்த மாநில அமைச்சரவையின் அனுமதி அவசியம். அதுபோன்றதொரு வருடாந்திரச் சம்பிரதாயமாகவே அச்சட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மணிப்பூர் மாநில அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாநில அமைச்சரவையின் ஒப்புதலோடே இச்சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், இச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமுமில்லை. ஆயுதப் படையணிகளுக்கு சர்வசுதந்திரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

ஃ சந்தேகத்துக்குரியவராக ஆயுதப்படையால் கருதப்படும் எவரொருவரையும் அது சுட்டுக் கொல்லலாம்.

ஃ குற்றம் இழைத்தோர் எனப்படுவோர் மட்டுமல்ல; குற்றம் செய்ய வாய்ப்புள்ளவர்களாக ஆயுதப்படையால் சந்தேகிக்கப்படும் எவரையும் நீதிமன்றப் பிடியாணை ஏதுமின்றிக் கைது செய்யலாம்; சிறையில் தள்ளலாம்.

ஃ கைது செய்யப்பட்டவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க ஆயுதப்படைக்குக் காலக்கெடு ஏதுமில்லை; நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் நேர்நிறுத்த வேண்டும் என்பதுமில்லை.

ஃ சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகம், தொழிலகம், வணிக நிறுவனம் என எவ்விடத்திலும் எந்நேரமும் தேடுதல் வேட்டை நடத்த ஆயுதப் படைக்கு அதிகாரமுண்டு. அந்நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றவும் செய்யலாம்.

ஃ ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூடவும், ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஆயுதப் படை கருதும் எந்தவொரு பொருளையும் பொது மக்கள் எடுத்துச் செல்லவும் தடைவிதிக்க அதற்கு அதிகாரமுண்டு.

ஃ அரசுக்கு எதிரான போராட்டம் என்று இல்லை; ஒரு சிறு முணுமுணுப்பையும் பயங்கரவாதம் என்று முத்திரையிட்டுத் தண்டிக்க ஆயுதப் படையால் முடியும்.

ஃ குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆயுதப் படைவீரர்கள் மீது உடனடியாக வழக்கினைப் பதிவு செய்யவோ விசாரணை மேற்கொள்ளவோ மாநில அரசாலும் முடியாது; நடுவண் அரசின் அனுமதி வேண்டும்.

ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டம் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இதுவரை கடந்த முப்பதாண்டுகளில் ஆயுதப் படையால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் ஏறத்தாழ 30,000 பேர். சமூக அமைதி, பாதுகாப்பு என்ற பொருத்தமற்ற வார்த்தைகளில் ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும் இந்த ஆட்கொல்லிச் சட்டத்தை எதிர்த்து மணிப்புரிகள் பல்வேறு விதமான தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி தலைநகர் இம்பாலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள மாலோம் என்ற இடத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 10 அப்பாவிப் பொது மக்கள் ஆயுதப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்டித்து மாநிலமெங்கும் போராட்டங்கள் எழுந்தன. அந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று, ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மணிப்பூரிலிருந்து முற்றிலும் நீக்க வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா சானு என்ற இளம்பெண். (உண்ணாநிலை என்றதும் தயவுசெய்து தமிழகம் நினைவுக்கு வரவேண்டாம்.) தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரசால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நிலையிலும் உண்ணாநிலையைத் தொடர்ந்தார்.

உணவூட்ட முயன்ற அரசின் முயற்சிகள் தோல்வியுற்ற பின், கட்டாயப்படுத்தி ஷர்மிளாவுக்கு மூக்கு வழியாகத் திரவ உணவு (Nasal Feed) செலுத்தப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சி என்ற பெயரில் நீதிமன்றத்தால் அதிக பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை என்ற வகையில், கடந்த பத்தாண்டுகளில் பலமுறை சிறையிலும் வெளியிலுமாகத் தன் உண்ணாநிலையைத் தொடர்ந்தே வருகிறார் ஷர்மிளா. கடந்த 2006-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ஆதரவாளர்களால் புதுதில்லி கொண்டுவரப்பட்டு, காந்தியின் சமாதியை வணங்கிய கையோடு, தில்லியிலும் தம் போராட்டத்தைத் தொடர்ந்தார். அதன் பிறகே இம் மாபெரும் மனித உரிமைப் போராட்டம் பிற மாநில மற்றும் உலக மக்களின் கவனத்திற்கு வந்தது. உடனடியாகப் புதுதில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டு மீண்டும் திரவ உணவு செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருடக்கணக்கில் திடஉணவு உட்கொள்ளாததால் எலும்புகள் முற்றிலும் வலுவிழந்து நாடிகளும் தளர்ந்து நகர முடியாத நிலைமையிலும் தம் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா சானு.

2004-ஆம் ஆண்டு இம்பாலைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா தேவி என்ற இளம்பெண் அசாம் ரைஃபிள்ஸ் என்ற அரசின் ஆயுதப்படைப் பிரிவினரால் வீடு புகுந்து கடத்திச் செல்லப்பட்டார். ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட அவளது உடலின் பெண்ணுறுப்பும் சுட்டுச் சிதைக்கப்பட்டிருந்தது. இது நடந்தது ஜூலை 11, 2004-இல். இப்படுகொலையைக் கண்டித்து எழுந்த போராட்டங்களின் உச்சகட்டமாக, ஜூலை 15-ஆம் தேதி அசாம் ரைஃபிள்ஸ் தலைமையகம் முன்பு "இந்திய இராணுவமே! எங்களையும் வன்புணர்!" (Indian Army! Rape Us), "இந்திய இராணுவமே! எங்கள் சதையையும் எடுத்துக் கொள்!" (Indian Army! Take our Flesh!) என்ற பதாகைகளை ஏந்தியபடி, மூத்த மணிப்புரிப் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியது பிரச்சினையின் தீவிரத்தைப் பெரும் அதிர்வோடு உலகுக்குச் சொன்னது.

எனினும், மனோரமா தேவி பாலியல் வல்லுறுவு மற்றும் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்ட ஆயுதப்படையினர் எவரும் இராணுவத்தாலும் விசாரிக்கப்படவில்லை. மாநில அரசு அமைத்த விசாரணைக் கமிஷனுக்கு நடுவண் அரசு அனுமதியும் வழங்கவில்லை.

இந்த ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய நடுவண் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஜீவன் ரெட்டி கமிஷனும் தன் அறிக்கையில், "வெறுக்கத் தக்க வகையில் அடக்குமுறைக் கருவியாக இச் சட்டம் மாறிவிட்டது. ஏற்கனவே உள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமே போதுமான ஒன்று. அதிலும் தெரிந்தே ஆயுதப் படையினர் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது. ஐந்து ஆண்டுகளாக இவ்வறிக்கையையும் வெளியிட மறுத்து வருகிறது நடுவண் அரசு.

"ஆங்கில ஏகாதிபத்தியம் இந்நாட்டில் ஆட்சி செய்த போது கூட, இந்தியர்களை இப்படி அப்பட்டமாகச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தமது இராணுவத்திற்கு வழங்கவில்லை" என்கிறார் சாவர்க்கரும் இந்துத்துவமும், பாபர் மசூதி:1528 - 2003" என்ற நூல்களை எழுதியவரும், வழக்கறிஞரும், பேர் பெற்ற அரசியல் விமரிசகருமான அப்துல் கஃபூர் நூரணி.

பதவி உயர்வுக்காகவும் அரசு வழங்கும் பரிசுத் தொகைக்காகவும் கூட ஏராளமான போலி மோதல்களை மணிப்பூரில் இன்னமும் அரங்கேற்றி வருகின்றன அரசின் ஆயுதப் படைகள். சட்டத்தை நீக்கப் போராடுகிறார்கள் மக்கள். எட்டாத உயரத்தில் இருப்பதான எண்ணத்தோடு அச்சட்டத்தை அடுத்தடுத்து நீட்டிக்கிறது அரசு.

Thanks: யுவபாரதி, www.keetru.com

மணல் கொள்ளையும் தமிழக அரசியலும்

சட்டமன்றத் தேர்தல் (2011) நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக மக்களின் பால் அன்பும் அக்கறையும் பெருக்கடுக்கத் தொடங் கியுள்ளது.

அ.தி.மு.க. தலைவி செல்வி. ஜெயலலிதா தமது நெடுந்தூக்கம் கலைந்து கோவையில் ஒரு பொதுக் கூட்டமும், பின்பு திருச்சியில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தி பிரம்மாண்டமாக மக்கள் கூட்டத்தைக் கூட்டி ஆட்சியாளர்களுக்கு கிலி ஏற்படுத்தி உள்ளார். அவரது உரையில் தற்போதைய ஆட்சியின் ஊழலைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றில் மிக முக்கியமானது தமிழக ஆற்றுப் படுகையில் நடக்கும் “மணல் கொள்ளை”.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் ஊழல்குற்றச் சாட்டுகள் உண்மையானவையே.

ஆனால் அவர் பட்டியலிடும் அனைத்து ஊழல்களும் தேர்தலுக்காக பரிசுத்த வேடம் போடும் அம்மையார் ஆட்சியில் தொடங்கியவையே.

அதில் மணல் கொள்ளை அம்மையாரது இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்தில் அவதாரமெடுத்தது.

வெள்ள காலங்களில் ஆற்றுப் படுகைகளில் அடித்துக் கொண்டு வரப்படும் மணல், வெள்ளம் வழிந்தோடிய பிறகு ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தேங்கி விடுகிறது. ஆற்றுப் படுகையில் தள மட்டத்திற்கு மேல் தேங்கும் மணல் உபரியாகக் கருதப்படும். இந்த உபரி மணல் எடுக்கப்பட வேண்டிய இடமும் எடுக்கப்பட வேண்டிய அளவும் பொதுப் பணித்துறையால் குறிக்கப்பட்டு வருவாய்த் துறையால் ஏலமிடப்பட்டு வந்தது. இவ்வாறு குறிக்கப்படும் இடம் “மணல் குவாரி” என்று அழைக்கப்படுகிறது.

இந்த மணல் குவாரிகளில் அரசு விதி மீறல்களும் முறைகேடுகளும் நிறையச் செய்து, கொள்ளை இலாபம் பார்த்த குவாரி ஒப்பந்தக்காரர்கள், குவாரி ஆய்விற்கு வரும் நேர்மையான அதிகாரிகளைத் தாக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது.

2003ல் இதுபோன்ற நிகழ்வு ஒன்று அப்பொழுது முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களது கவனத்திற்கு வந்தது. கட்டட கட்டுமானப் பணியின் எல்லா மட்டத்திலும் மணல் தேவைப்படுகிறது. மணல் இல்லையேல் கட்டுமானப் பணிகள் இல்லை. எனவே மணல் குவாரி என்பது ஒரு தங்கச் சுரங்கம் என்பதை தொடர்புடையவர்கள் அம்மை யாருக்குத் தெளிவு படுத்தினார்கள்.

எனவே 2003ல் மணல் குவாரிகள் ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது. பொதுப் பணித்துறை மூலமாக அவற்றை அரசே நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.

2003 முதல் தமிழகத்தின் ஆற்றுப் படுகைகளிலுள்ள நூற்றுக் கணக்கான மணல் குவாரிகளில் நாள்தோறும் எடுக்கப்படும் பல்லாயி ரக்கணக்கான லாரி மணலுக்கு, ஒரு லோடுக்கு இவ்வளவு என கையூட்டு பொறியாளர்களால் வசூலிக்கப்பட்டு தொடர்புடைய அமைச்சர் மூலமாக அம்மையாரிடம் சென்றடைந்தது.

இவ்வாறு 2003லிருந்து 2006 வரை வசூலிக்கப்பட்ட கையூட்டுத் தொகை பல்லாயிரம் கோடிகள் என விவரமறிந்த பொறியாளர்கள் கூறு கிறார்கள். எனவே, தாம் விதை போட்டு வளர்த்து அனுபவித்து வந்த ஊழல் பண்ணையின் பலனை இன்று வேறொருவர் அனுபவிக் கிறார் என்ற வயிற்றெரிச்சல் அம்மையாருக்கு ஏற்படுகிறது. அதன் எதிரொலியே அவரது மணல் கொள்ளை ஊழல் எதிர்ப்புப் பேச்சு.

அம்மையாரால் உரம் போட்டு வளர்க்கப்பட்ட ஊழல் இன்று மிகப்பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என்பதுதான் உண்மை.

இவ்வாறு பலருக்கும் கையூட்டுக் கொடுத்து எடுக்கப்படும் மணலின் விலை மூன்று - நான்கு மடங்காகி அதனைப் பயன்படுத்தும் பொது மக்களுக்கு லோடு ஒன்று ரூ. 3000லிருந்து 5000 வரை விற்கப் படுகிறது. இதுவே கேரளாவிற்குக் கடத்தப்பட்டுலோடு ஒன்று ரூ. 10,000 லிருந்து 15,000க்கு விற்கப்படுகிறது. தற்சமயம் தமிழகத்திலிருந்து கேரளா விற்குக் கடத்தப்படும் மணல் அங்கிருந்து சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்குக் கொள்ளை லாபத்திற்கு விற்கப் படுவதாகத் தெரிய வருகிறது.

தமிழக மணல் கொள்ளையும் கேரளாவும்

கேரளாவில் 45க்கும் மேற் பட்ட ஆற்றுப் படுகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் மணல் எடுக்க கேரள அரசு தடை போட்டுள்ளது. அப்படியானால் கேரள மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகளின் மணல் தேவைக்கு என்ன செய்வது?

அங்குள்ள அரசியல்வாதி களிலிருந்து சாதாரண பள்ளிச் சிறுவர்கள்வரை யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் கிடைக்கக் கூடிய விடை “பாண்டிப் பயல்கள் (முட்டாள் தமிழர்கள்) கொண்டு வருவார்கள்” என்பது தான்.

இவ்வாறு கேரளாவிற்குக் கடத்தப்படும் மணல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரள - தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் கம்பீரமாகப் பவனி வருகின்றன. இவ்வாறு கடத்தப்படும் மணலைத் தடுத்தாலே, முல்லைப் பெரியாற்று அணையின் தமிழக உரிமையைத் தடுக்கும் கேரள அடாவடிகள் நின்றுவிடும்.

அரசு நினைத்தால் மணல் கடத்தலைத் தடுப்பது என்பது மிகச் சாதாரண நடவடிக்கை தான்.

இதனைச் செய்யும் எண்ணம் தற்போதைய அரசுக்கு மாத்திரமல்ல முந்தைய அரசுக்கும் எப்போதும் இருந்ததில்லை.

மணல் கொள்ளையால் தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?

தமிழக ஆற்றுப் படுகை களில் மணல் ஒட்டுமொத்தமாக சுரண்டி கொள்ளையடிக்கப்படு வதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இங்குள்ள மெத்தப்படித்த மேதாவிகளே புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்து பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற முகாமையான ஆற்றுநீர் உரிமை களை ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்கள் தடுத்து தமிழர்களை வஞ்சிக்கின்றன. இந்நிலையில் மழைநீரை உள்வாங்கி நிலத்தடி நீராக சேமித்துத் தரும் மணலும் இல்லையென்றால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஐந்து வகை நிலங்களில் ஒன்றான பாலை வனமாகிவிடும். அதன்பிறகு தமிழன் சங்கப் பாடல்கள் மூலம் தான் மற்ற நால்வகை நிலங்களைத் தெரிந்து கொள்ளமுடியும்.

தமிழர்களின் இன்றைய கையறு நிலை

மணல் கொள்ளையில் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் (பொதுவுடைமைக் கட்சிகள் தவிர) பங்கு கிடைக்கிறது. கூட்டணி தர்மம் கருதி பொதுவுடைமைக் கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன.

மணல் கொள்ளையருக்கு ஒரு கேள்வி

கொள்ளையடித்த பணத்தை கரன்சி நோட்டாகவும், தங்கமாகவும் மாற்றி அடுத்த தலைமுறை வாரிசு களுக்கு சேர்த்து வைப்பவர்களே, கரன்சி நோட்டுகளைத் தின்று பசியாற முடியுமா? இல்லை தங்கத்தைக் காய்ச்சித்தான் குடிக்க முடியுமா? நீங்கள் அடுத்த தலை முறைக்குச் சேமித்துப் பாதுகாக்க வேண்டியது உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாயுள்ள நீர் வளப் படுகைகளையல்லவா?

மணல் கொள்ளையைத் தடுக்க எந்த அரசியல் கட்சியும் மனதளவில் கூட அணியமாகாத இன்றைய நிலையில், தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றி, மாற்றி வாக்களித்து கொதிக்கும் எண்ணெய் சட்டிக்கு மாற்றாக எரியும் தணலில் பாயத் தயாராகும் கையறு நிலைதான் தமிழர்களது பரிதாபநிலை. காலம் மாறுமா? அப்பாவித்தமிழன் என்றாவது விழித்துக் கொள்வானா?

Thanks: பொன்னியின் செல்வன்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் களவாணித்தனம்

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மக்களிடையே ஏகோபத்திய ஆதரவு இருப்பதாக நண்பர் ஒருவர் என்னிடம் பெருமையாகச் சொன்னார். அவரும் அந்தத் திட்டத்தால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறுவதாக நம்பினார். அவரிடம் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசியல், பொருளாதார பின்னணிகள் குறித்து உரையாடினேன். நான் பேசியதையடுத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி அவர் கொண்டிருந்த மாயை உடைந்துபோனது. அவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று என்னைத் தூண்டியது.

இனி கட்டுரைக்குள் போகலாம்.

அண்மைக் காலமாக அமெரிக்காவில் மருத்துவமனைகளுக்குச் செல்வதில் அந்நாட்டு மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லையாம். சாதாரண உடல் உபாதைகள், உடல் நலக்கோளாறுகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த ஏற்கெனவே சாப்பிட்டு வந்த மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கிக் கொள்கிறார்களாம். இது ஏதோ கற்பனையில் கண்டுபிடித்து சொல்கிறேன் என்று நினைத்துவிட வேண்டாம். அண்மையில் அமெரிக்கா வுக்குச் சென்று வந்த என் தோழியின் சகோதரரனான கண் மருத்துவர்தான் இதை என்னிடம் சொன்னார்.

இந்தளவுக்கு அமெரிக்கர்கள் மருத்துவமனைகளை வெறுக்க என்ன காரணம் என்பதையும் அவரே என்னிடம் விளக்கினார்.

கண்மருத்துவ சேவையைத் தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்காதான் முன்னுதாரணம். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீட்டுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவை முற்றிலும் மறுக்கப்படுகிறது.

கண்காப்பீட்டு நிறுவனங்களின் கொள்ளையால் அமெரிக்காவில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப் படுகின்றனர்.

அமெரிக்காவில் மருத்துவச் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டதற்குக் காரணம் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்தான்.

காப்பீட்டு நிறுவனங்களின் களவாணித்தனம்

அமெரிக்கா மட்டுமல்ல வளர்ந்த (முதலாளிய) நாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அந்நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டு வசதிகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, அந்நாடுகளில் உள்ள பொதுமக்களும் ஆத்திர அவசரத்துக்கு உதவுமென்று மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்கிறார்கள். மொத்தத்தில், அந்நாடுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி விட்டது.

இவ்வாறு மருத்துவக் காப்பீடு பெற்றவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சிகிச்சைக் கட்டணத்தைக் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மருத்துவ மனை பெற்றுக் கொள்ளும். பயனாளிகள் நேரடியாகப் பணம் செலுத்துவதில்லை என்பதை சாதக மாக்கிக் கொண்டு, வழக்கத்தைவிட கூடுதலாக மருத்துவக் கட்டணம் வசூலிப்பது அந்நாட்டில் வழக்க மாகிவிட்டது. சாதாரணமாக ஓர் அறுவைச் சிகிச்சைக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொண்டால், அந்த அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்வதற்கு இரண்டு மடங்காக 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திக் காட்டி காப்பீட்டு நிறுவனங்களிடம் மருத்து வமனை நிர்வாகம் வசூலித்து விடும்.

இதே நிலை தொடர் கதையாகி, சாதாரணமாக சிகிச் சைக்கு வரும் நோயாளிகளிடமும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் போது பெறப்படும் கட்டணமே வசூலிக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால்தான், மருத்துவச் செலவு அங்கே அதிகரித்துவிட்டது” என்றார், அமெரிக்காவுக்குச் சென்று வந்த அந்த மருத்துவர். இந்நிலை அமெரிக் காவில் மட்டும்தான் என்று நினைத்து விட வேண்டாம். இந்தியாவிலும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இதே நிலை உருவாகிவிட்டது.

அதற்குக் காரணம் யார்?

அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு

‘ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு’ என்ற பன்னாட்டு காப்பீட்டு நிறுவனத் திடம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டிய லிட்டிருக்கும் தனியார் மருத்துவ மனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதந்தோறும் 50 ரூபாய் வசூலித்து, காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. இதன் மூலம் காப் பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப் படுத்தியுள்ளது.

உயிர்காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

அதே போல் உயிர் காக்கும் உயர் சிகிச்சை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண் டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீட்டுத் தொகையாக ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி விடும். இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீட்டுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீட்டு நிறுவனம் கொண்டு வந்து விடும். அதன்பிறகு மருத்துவத் துறையில் அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றாகி விடும். “காய்ச்சல் என்றால் ஆயிரம் கொடு” என்பார்கள். “சளி என்றால் பத்தாயிரம் கொடு” என்பார்கள். அப்புறம் என்ன? மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் அல்லது பணம் படைத்தவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்கிற ஆபத்தான நிலை (இப்போது அமெரிக்காவில் உள்ளது போல்) உருவாகிவிடும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்றைக்கு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், விவசாயிகள், கட்டடத் தொழி லாளர்கள், தினக் கூலிகள், தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. (மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் இலவச மாக சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் அதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி யாற்றும் மத்திய அரசு நிறுவனம் செலுத்திவிடும். இங்கேயும் மருத்து வச் செலவைக் கூடுதலாகக் காட்டி அரசிடம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது)

பணம் கறக்கும் காப்பீட்டு நிறு வனங்கள், கார்ப்ரேட் மருத்துவ மனைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருவோரிடம், “நோயாளியா பணம் தருகிறார், அரசு தானே தருகிறது” என்று தங்கள் விருப்பத்துக்கு மருத்துவச் செலவை உயர்த்திக் காட்டி தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கும் இதே நிலைதான். இதனால், காலப் போக்கில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வசூலிக்கப் படும் தொகையே எல்லோரிடமும் வசூலிக்கும் நிலை உருவாகிவிடும். “மற்ற நோயாளிகள் வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? நமக்குக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறதே” என்ற எண்ணத்தில் மருத்துவ மனைகள் செயல்படத் தொடங்கி விடும்.

அரசன் வழங்கிய பனிக்கட்டி!

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத் திருப்பது ரூ. 628.20 கோடி! ஆனால், பல்வேறு அறுவை சிகிச்சை களுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டண மாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடி. மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவ மனைகள் ஒன்றும் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை. பயனாளிகள் சார்பில் காப்பீட்டு நிறுவனம் மருத்தவமனைக்ளுக்கு செலுத்திய 415.43 கோடியில் மருத்துவமனைகளின் லாபப் பங்கு எவ்வளவு இருக்கும் என்பதை சிந்தியுங்கள்.

இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை ரூ. 750 கோடி. அரசன் வழங்கிய பனிக்கட்டி அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என கைமாறி வருவதற்குள் கரைந்து விடுமே அதுபோல இந்தத் திட்டத்தின் பயன் மக்களை வந்து சேர்வதற்குள் மக்களின் வரிப் பணத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவ மனைகளும் தான் கொள்ளை லாபம் அடிக்கப்போகின்றன. அத்துடன், கூடுதல் பலனாக காலப்போக்கில் அரசு மருத்துவமனைகளும், இன்றைக்குக் கிடைத்து வரும் இலவச மருத்துவமும் முற்றிலும் அழிந்துவிடும். தமிழக கார்ப்ரேட் மருத்துவமனைகளின் தரத்தில் நமது அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதுதான் முறையான நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்கும். அதை மறைத்து கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்பதே மக்கள் நலன் திட்டம் போல் விளம்பரம் செய்து வருகிறார்கள். மக்களும் கேள்வி கேட்காமல் அறியாமையில் ஏமாறுகிறார்கள்.

மருந்து மாத்திரைக்கென்று, தனியாக காசு பிடுங்குகிறார்கள்!

தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல், இருமல் என்று போனாலே உயிர் பயத்தை ஏற்படுத்தி, ‘சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்‘ என எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக் கூடியவை. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பட்டிய லிட்டிருக்கும் மருத்துவமனைகள் எல்லாமே பணக்காரர்களுக்கான மருத்துவமனைகள்தான். இனி அந்த மருத்துவமனைகள், “காப்பீட்டுத் தொகை முழுவதும் அறுவை சிகிக்சைக்கே சரியாகிவிட்டது. மருந்து மாத்திரைகளுக்கு 5 ஆயிரம், 6 ஆயிரம் செலுத்துங்கள்” என்று பிடுங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்கில் ஆகவேண்டிய மருத்துவச் செலவில் சில ஆயிரங்கள் மருத்து செலவோடு போய்விட்டதே என்று சிலர் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் மருந்து மாத்திரைக்கு ஆகும் செலவை சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அப்படியென்றால் அரசு மருத்துவமனைகள் எதற்கு?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்குகிறது. பத்து ஆண்டுகளில் மக்கள் வரிப் பணம் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே சிகிச்சையை நையா பைசா செலவில்லாமல் அரசு மருத்துவ மனைகளில் செய்ய முடியும் தானே? அப்படியிருக்கும் போது, தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு இந்த அரசே வழிவகை செய்ய என்ன காரணம்? உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலை சிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவ மனைகளிடம் அதனை ஒப்ப டைத்தது ஏன்?

நூறு கோடி ரூபாய் இருந்தால் அரசால் ஓர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையே கட்ட முடியும் என்கிற நிலையில், இவ்வளவு பெரிய தொகையை (ஆண்டுக்கு 750 கோடி ரூபாய்) தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். அப்படியென்றால், மருத்துவக் காப்பீட்டுக்குத் தனியாரிடம் ஒவ்வொராண்டும் போய்ச் சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர அரசு மருத்துவமனைகளைக் கட்ட முடியும்.

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கு கின்றன. இவற்றை முறைப் படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவ மனைகளின் உள் கட்டமைப்பையும் நிர்வாகத் தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சை யினை அரசே தரமுடியும்.

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சாதாரண மக்களும் உயர் சிகிச்சை பெறும் வசதியைச் செய்து விட்டதாகச் சொல்லும் தி.மு.க. அரசு, அதே சாதாரண மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தருவது தண்டத்திற்காகவா?

காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகள் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் எதுவும் அரசிடம் இல்லையே, ஏன்?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத் துக்காக ஆண்டுக்கு 750 கோடியை ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது. இத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு இந்தத் தொகையில் இருந்து மருத்துவக் கட்டணம் செலுத்தப் படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனமும் 50 சதவிகித லாப நோக்கு இல்லாமல் தொழிலில் இறங்காது. ஒவ்வொராண்டும் இந்தத் திட்டத்தின் மூலம் அந்நிறுவனம் பெறும் இலாபம் எவ்வளவு என்பதை அந் நிறுவனமோ அரசோ வெளியிடுமா?

‘இங்கே கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்’ என்று தனியார் மருத்துவமனைகள் விளம்பரம் செய்கின்றன. இதில் அவர்களுக்கு லாபம் இல்லை என்றால், விளம்பரம் செய்து மக்களை ஈர்க்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரே நேரத்தில் அரசு பணத்தில் (அதாவது மக்களின் வரிப் பணத்தில்) காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் ஈட்டும் போது இங்கே எப்படி முறையான நியாயமான மருத்துவம் கிடைக்கும்?

இது திட்டமிட்ட சதி

ஓரளவுக்கு நுகர்வோர் நலம் பாதுகாக்கப்படும் அமெரிக்கா விலேயே மருத்துவமனைகளின் கொள்ளை லாபத்தைத் தடுக்க முடியாத நிலையில், தி.மு.க. அரசு மக்கள் பக்கம் இருக்குமா? கொள்ளை லாபம் ஈட்டும் ஸ்டார் ஹெல்த் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் பக்கம் இருக்குமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவ மனைகளின் பெருக்கத் தையடுத்து அரசு மருத்துவ மனைகளின் வீழ்ச்சி தொடங்கியது. இது திட்டமிட்டே உருவாக்கப் பட்டது. நடுத்தர மக்கள் எலும்பு முறிவு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்குப் போனால், “இங்கே ஆப்ரேஷன் செய்தால் இன்ஃபெக்சன் ஏற்படும். எனக்குத் தெரிந்த தனியார் மருத்துவமனை இருக்கிறது. அங்கே வாருங்கள், குறைந்த செலவில் சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து விடுகிறேன்” என்று மூளைச் சலவை செய்யும் வேலையை அரசு டாக்டர்கள் தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.

எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மருத்துவமனைகளை அழித்துக் கொண்டிருப்பது என்று நினைத் திருப்பார்கள் போலும். ஒரேயடியாக அரசு மருத்துவ மனைகளை ஒழித்துக் கட்டிவிட்டு, தனியார் மருத்துவ மனைகளை வளர்க்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டது.

அழிவு விளிம்பில் அரசு மருத்துவமனைகள்!

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மறைமுக நோக்கம், அரசு மருத்துவமனைகளை முற்றிலும் செயலிழக்கச் செய்வதுதான்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்த நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதை அரசு நிறுத்திவிட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான வால்வுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் இப்போது இருப் பில்லை என்பது வேதனையான உண்மை.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஓராண்டு வழங்கப்படும் ரூ.750 கோடியை அரசு மருத்துவ மனைகளில் செலவிட்டால், அதன் தரம் உயர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். அரசு மருத்துவ மனைகளில் தீவிர கண்காணிப்பைச் செயல் படுத்தினால், நடுத்தர வர்க்க மக்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடி வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவற்றை எல்லாம் இந்த அரசு செய்யுமா? தனியார் நிறுவனங்கள் தூக்கிப் போடும் எலும்புத் தூண்டுகளுக்காக சொந்த மக்களைக் கொல்லக் கூடத் துணியும் என்பதற்கு போபால் விஷவாயு சம்பவத்தில் ஆண்டர்சனை தப்பிக்க விட்டது ஓர் உதாரணம். இப் போதும், அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறை வேற்றி அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிகப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கிறார்கள். அப்படி யான அரசுக்கு கங்காணி வேலை பார்க்கும் தி.மு.க. அரசும், அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்ளை போன்றவற்றில் இந்தியப் பேரரசை அடியொற்றி வருகிறது என்பதின் அடையாளமே உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!

(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

Thanks: பொன்னுசாமி, www.keetru.com

ஒபாமாவின் இந்திய படையெடுப்பு

ஒபாமாவின் இந்தியப் பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிப்படையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்திப் பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். பல்லாயிரம் கோடி பெறுமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தளவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்யப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சுக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாகக் கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது. ஒபாமா முக்கியமாகக் கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்கப் பொருட்களுக்கு சந்தை விரிவாகும் என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளைத் தொடங்கினால் நிச்சயம் அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தை விரிவடையப் போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்திப் பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாகக் குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லாப் பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தைக் கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிகப் பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தையும் அமெரிக்கப் பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லாக் கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போகப் போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள். அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பணத்தின் விளைவாகத் தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிகக் குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யப்படும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாகப் புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டுப்பாடுகளை மிகப் பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்கத் தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.

உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்கப்போவது இல்லை. பலன் அனைத்தும் மிகப் பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறியபடி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்திப் பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Thanks: சதுக்கபூதம், www.keetru.com