அசுரன், இணை ஆசிரியர், சுற்றுச்சூழல் புதிய கல்வி -மாத இதழ்
கடந்த பிப்ரவரி மாதம் குப்பிக் குடிநீரின் தரம் குறித்த விரிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் கின்லே, அக்வாபினா மற்றும் முன்னணி நிறுவனமான பிஸ்லரி உட்பட பலவற்றில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிப்படுத்தியது டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன் விளைவாக அரசு குப்பியில் அடைக்கப்பட்ட தண்ணீருக்குத் தர நிர்ணயம் செய்யவேண்டிய கட்டாயம் உருவானது. இவற்றை அருந்துவதைவிட நீரை சுட வைத்துக் குடிப்பதே சிறப்பானது என்ற 'நல்ல ' முடிவுக்குப் பொதுமக்களும் வந்தனர்.
6 மாதங்களின் பின்னர் அதிரடியாய் மற்றொரு தாக்குதலையும் மேற்கொண்டிருக்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். அதன்மூலம் கோக், பெப்சி ஆகிய இருபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான 12 குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி நச்சுக்களின் எச்சம் இருப்பதை வெளிப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட உடனேயே நாடாளுமன்றத்திலும் நாட்டிலும் ஒட்டுமொத்த உணர்வும் இவற்றிற்கு எதிராக வெடித்துக் கிளம்பியது. உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தடை விதித்தன. வணிகர்களும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவமாணவியரும் களத்தில் இறங்கி இவற்றை உடைத்தனர்.
கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டதைப் போன்ற உணர்வை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தின. இந்த ஆய்வு குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய இயக்குநர் சுனிதா நாராயணன்,
'குப்பி நீரைக் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, பிற தயாரிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தியக் குப்பிக் குடிநீர்ச் சந்தையின் மதிப்பு 1000 கோடி ருபாய். இந்தியக் குளிர்பானச் சந்தையின் மதிப்போ சுமார் 7,000 கோடி ரூபாய். இது இன்னும் பலமடங்கு விரிவடைய வாய்ப்பும் உள்ளது.
இன்னொரு முக்கிய விசயமும் உள்ளது. குப்பிக் குடிநீரோ, குளிர்பானமோ அல்ல, பூச்சிக்கொல்லிதான் எமது இலக்கு. பூச்சிக் கொல்லிகளை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த கொள்கை உருவாக்கப்படவேண்டும். ஒருமுறை நமது மண், உணவு, நீர் மாசுபட்டுவிட்டால் அவற்றை தூய்மையாக்க ஆகும் செலவு மிக அதிகம். நமக்கு இவற்றை ஒழுங்குபடுத்தக்கூடிய மிகக் கடுமையான சட்டங்கள் தேவை ' என்கிறார்.
இந்த ஆய்வில் பெப்சி நிறுவனத்தின் பெப்சி, மவுண்டன் டியூ, டயட் பெப்சி, மிரிண்டா ஆரஞ்சு, மிரிண்டா லெமன், புளூ பெப்சி, செவன் அப், கோகோ கோலா நிறுவனத்தின் கோகோ கோலா, ஃபான்டா, லிம்கா, ஸ்பிரைட், தம்ஸ்அப் ஆகியவையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசு கண்காணிப்பு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன. இதில் இந்தக் குளிர்பானங்களில் லின்டேன், டி.டி.ற்றி., குளோர்பைரிபாஸ், மாலதியான் போன்ற பல்வேறு நச்சுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நச்சுக்களின் தன்மை என்ன என்றும் அவை எவ்வளவு இருந்தன என்றும் பார்ப்போம்.
லிண்டேன்: அனைத்து குளிர்பானங்களிலும் இது காணப்பட்டது. இது அனுமதிக்கத்தக்க அளவைக்காட்டிலும் 42 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக 21 மடங்கு அதிகமாக இருந்தது.
இது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தையும், நோய் எதிர்ப்பாற்றலையும் சீர்குலைக்கும் தன்மை வாய்ந்தது. புற்று நோயையும் உருவாக்கக்கூடியது. இது சுவாச மண்டலம், செரிமான மண்டலங்கள் மூலமாக கொழுப்புத் திசுவில் சேர்கிறது. இது மனித கல்லீரல், சிறுநீரகம் முதலியவற்றைப் பாதிக்கும். பிறப்புக் கோளாறுகள், ஆண்மைக் குறைவு, பெண்களின் பாலியல் உணர்வைக் குறைப்பது போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
டி.டி.ற்றி: டை குளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் எனப்படும் இந்த பூச்சிக்கொல்லி டயட் பெப்சி தவிர அனைத்து குளிர் பானங்களிலும் காணப்பட்டது. இதுவும் 42 மடங்குவரை அதிகமாகக் காணப்பட்டது. சராசரியாக பெப்சி தயாரிப்புகளில் 16 மடங்கும் கோகோ கோலா தயாரிப்புகளில் 9 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டது.
இது பாலியல் வள˜ச்சியை சீர்குலைக்கும், ஆண்களின் விந்தணுவின் தரத்தைக் குறைக்கும், பெண்களிடம் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. இது ஈஸ்ரோஜன் போன்று செயல்படுவதால் மார்பகப் புற்று, கருச்சிதைவு, எலும்பின் அடத்தியை குறைப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குளோர்பைரிஃபாஸ்: இது அனைத்து குளிர்பானங்களிலும் காணப்பட்டது. இது அதிகபட்சமாக 72 மடங்கு காணப்பட்டது. சராசரியாக 42 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.
இது குழந்தைகளையும் தாய்மார்களையும் அதிகமாகப் பாதிக்கும். குழந்தைகளின் மூளை வள˜ச்சியைப் பாதிக்கும். தொடர்ந்து பாதிக்கப்படுவோர் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், வலுவற்ற தசைகள் போன்ற பாதிப்புக்கு ஆளாவார்கள்.
மாலதியான்: இது 97% குளிர்பானங்களில் காணப்பட்டது. 196 மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது. கோகோ கோலாவில் 137 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.
இது மனித மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல, பிறப்புக் கோளாறுகள், தசைகளை பலவீனப்படுத்தல், பக்கவாதம், போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது.
மொத்தமாகப் பார்க்கும்போது, பூச்சிக்கொல்லிகள் மிரிண்டா லெமனில் 70 மடங்கும், கோகோ கோலாவில் 45 மடங்கும் ஃபான்டாவில் 43 மடங்கும், மிரிண்டா ஆரஞ்சில் 39 மடங்கும் பெப்சியில் 37 மடங்கும் செவன் அப்பில் 33 மடங்கும் லிம்காவில் 30 மடங்கும் புளூபெப்சியில் 29 மடங்கும் மவுண்டன் டியூவில் 28 மடங்கும் தமஸ் அப்பில் 22 மடங்கும் டயட் பெப்சியில் 14 மடங்கும் ஸ்பிரைட்டில் 11 மடங்கும் அதிகமாகக் காணப்பட்டன.
இதில் பெரும் கொடுமை என்னவென்றால் குளிர்பானங்களின் தரம் குறித்த எந்த வரையறையும் இந்தியாவில் இல்லை என்பதுதான். (தற்போது, குப்பிக் குடிநீருக்கான தரமே குளிர்பானங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.)
உலக சுகாதார நிறுவனம், உணவு மற்றும் வேளாண்துறை, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை எனப் பலவும் பலவிதத் தர அளவைகளைக் கொண்டுள்ளன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது ஐரோப்பிய தர அளவை தனது சோதனைக்கு பயன்படுத்தியது.
இதே பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் குளிர்பானங்களும் டெல்லியில் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் அவற்றில் எவ்வித பூச்சிக்கொல்லிகளும் காணப்படவில்லை.
இதைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமன்றத்தில் பிரச்சினை பெரிதாக வெடித்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'உங்களைப் போல் இந்த தகவல் என்னையும் திடுக்கிட வைத்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து உறுப்பினர்கள் இங்கு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ' என்றார்.
ஆனால், ஆகஸ்ட் 21 ஆம் நாள், நாடாளமன்றத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், 'பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட 12 வகை குளிர்பானங்களின் மாதிரிகள் சோதனைக்காக மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்தட்ப ஆராய்ச்சி கழகம், கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது வந்து இருக்கின்றன. குளிர்பானங்களில் அபாயகரமான கூடுதல் நச்சுத்தன்மை ஏதும் இல்லை என்று அந்த முடிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது.
சில மாதிரிகளில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைவிட நச்சுத் தன்மை குறைவாகவே உள்ளது. ஆனால் 9 மாதிரிகளில் சில மடங்குகள் அதிகமாக இருக்கின்றன. உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் பார்த்தால் இந்த குளிர்பானங்கள் நல்ல நிலையில் பாதுகாப்பானதாகவே உள்ளன. ஆனால் குளிர்பான தயாரிப்பாளர்கள் கூறியதைப் போல 100க்கு 100 என்ற அளவில் ஐரோப்பிய நாடுகளின் தரம் பின்பற்றப்படுகிறது என்ற உறுதி மொழி நிரூபிக்கப்படவில்லை ' என்றார்.
சுஷ்மா சுவராஜின் அறிக்கைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ் வழங்க எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர் சதுர்வேதி கேள்வி விடுத்தார்.
'உற்பத்தி செய்யப்பட்ட காலம், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மழையால் நீரிலுள்ள பூச்சிக்கொல்லிகளின் வீரியம் குறைவது என இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நாங்கள் எடுத்த மாதிரிகள் இன்னமும் இருக்கின்றன. அவர்கள் சோதித்த முறையை கணக்கில் கொண்டே இதற்கான சரியான காரணத்தைக் கூற முடியும். எனினும், தாம் சோதனை செய்ததில், தமது தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லிகளே இல்லை என்று தெரிந்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவித்தது பொய் என்றாகிவிட்டது. டி.டி.ற்றியும், லின்டேனும் எமது சோதனையில் கண்டறியப்பட்டதைவிட அதிக அளவில் இருப்பது அரசின் சோதனையில் தெரியவந்துள்ளது ' என்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர்.
ஆய்வுக்கூட முடிவுகள் உண்மைதானா என்பதைக் கண்டறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத் தன்மை இருந்ததாக கூறப்பட்டது குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தும் என்று சபாநாயகர் மனோகர் ஜோஷி அறிவித்தார்.
இதனிடையே குளிர்பானங்களில் கூடுதல் நச்சுத்தன்மை இல்லை என்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் சுஸ்மா சுவராஜின் படத்துடன் பெப்சி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக குறைகூறினர். இதையடுத்து சுஸ்மா சுவராஜின் தொனி மாறியது. பெப்சியை கண்டித்ததுடன் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினார். பெப்சி நிறுவனமும் அவ்வாறே நடந்துகொண்டது. ஆனால் இதன்விளைவாக மைசூர் ஆய்வறிக்கை, கொல்கத்தா ஆய்வறிக்கை இரண்டுமே குளிர்பானங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதை வெளிக்காட்டிய செய்தி தன் சக்தியை இழக்கச்செய்யப்பட்டது.
இதனிடையே குமுதம் இதழ் இயற்கை வேளாண்மைப் பிரச்சாரகர் கோ. நம்மாழ்வாரின் பேட்டியுடன் ' காய்கறிகளிலும் பூச்சிக்கொல்லிகள் அதிகமிருக்கிறது ' என்ற செய்தியை 'போஸ்டரில் ' போட்டு வியாபாரம் நடத்தியது. இதனால், 'எல்லாவற்றிலுமே பூச்சிக்கொல்லி இருக்கிறது; குளிர்பானத்திலும் இருக்கிறது ' என்ற எண்ணம் சராசரி மக்களின் மனதில் விதைக்கப்பட்டது. புகழுபெற்ற சிறுநீரக மருத்துவரும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான மதுரை டாக்டர் சேதுராமன் கோக், பெப்சி அருந்தும் போராட்டத்தை அறிவித்தார். நடிகர் மன்சூர் அலிகானும் இதையே செய்தார்.
'தண்ணீர் உட்பட விவசாய மூலப்பொருட்களில் மட்டும்தான் எந்தளவுக்கு பூச்சிக்கொல்லி வேதிகள் உள்ளன என்று ஆராயலாம். கோக், பெப்சி போன்ற நிறைவு செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்தக்கூடாது; அப்படி நடத்துவது சரியல்ல ' என்று ஆகஸ்ட் 31 அன்று டெல்லியில் நிருபர்களைக் கூட்டிவைத்து ஓலமிட்டனர் கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் குப்தாவும் பெப்சி கோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பக்சியும்.
பன்னாட்டு நிறுவனங்கள் என்றாலே தரமானவையாக இருக்கும், அவங்களோட குவாலிட்டிய நாம மெயின்டெய்ன் பண்ண முடியுமா ? என்றெல்லாம் பேசும் மோகிகள் மேற்கண்ட சொற்களை கூர்ந்து படிக்கட்டும்.
இன்னும் சில விசயங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
பூச்சிக்கொல்லிகள் என்பன இந்தக் குளிர்பானங்களில் கலந்துள்ள மாசுக்கள். ஆனால், இக்குளிர்பானங்களின் தயாரிப்பில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் மணமூட்டிகள், சுவையூட்டிகளின் இனிப்பான்கள், கரியமிலவாயு, வண்ணமூட்டிகள், அமிலங்கள் போன்றவை குறித்தும் அறிவியல் உலகம் இப்போது கவலைப்படத் தொடங்கியுள்ளது.
ஏனெனில், குளிர்பானங்களில் முக்கியபொருள் தண்ணீராகும். இது 86%-90% வரை இருக்கிறது. சுவையூட்டுவதற்கு காஃபின் போன்ற சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இனிப்பிற்காக, சீனி, சாக்கரின், அஸ்பர்டேம் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
குளிர்பானம் மேலும் குளிர்ச்சியாய்த் தெரிய வைப்பவை அதில் சேர்க்கப்படும் கரியமில வாயுவாகும். இது குமிழிகளாக வெளியேறும்போது குளிர்பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள மணமும் வெளித்தெரிகிறது.
தாகம் தணிப்பது, இனிப்பை நிலைப்படுத்துவது போன்றவற்றுக்காக சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. கராமல், அல்லது பீட்டா கரோட்டின் போன்றவை வண்ணமூட்டிகளாக பயன்படுத்தப் படுகின்றன.
கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காக நாட்டிரியம் பென்சோயேட், பொட்டாசியம் சோர்பேட், கந்தக டை ஆக்சைடு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. காற்றேறி கெடுக்காமல் இருப்பதற்காக (ஆண்டி ஆக்சிடென்ட்) அஸ்கார்பிட் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. திண்மையூட்டுவதற்கு பெக்டின், ஆல்ஜினேட்ஸ், கராஜென் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால், தொப்பை வயிறு, நீரிழிவு, பற்சிதைவு, சத்துக்குறைவு, இதய நோய், பலவித நரம்புக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இக்குளிர்பானங்களை அருந்துவதால் பொதுவாக ஏற்படும் சிக்கல், உடலில் அமிலத்தன்மை அதிகமாவதாகும். இதனால் வயிறு எரிதல், வயிறு பாதிக்கப்பட்டு வயிற்றுவலி, நிரந்தர செரிமானக் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் ஏற்படும்.
கரியமிலவாயுவானது தேவையில்லை என நமது உடலால் வெளியிடப்படும் ஒரு பொருளாகும். ஆனால் இக்குளிர்பானங்களை அருந்தும்போது பெருமளவு சர்க்கரையும் கரியமிலவாயுக் குமிழ்களும், பாஸ்பாரிக் அமிலமும் நம் உடலிற்குள் சென்று, எலும்புகளிலுள்ள தாதுக்களை அகற்றி பலவீனப்படுத்துகின்றன. இதனால் எலும்புகள் எளிதில் உடையலாம். குறிப்பாக பாஸ்பாரிக் அமிலமானது எலும்புகளிலுள்ள சுண்ணாம்புச் சத்தை கரைத்துவிடுகிறது.
இக்குளிர்பானங்களின் அமிலத்தைன்மையால் பல்லின் மேற்பூச்சு அரிக்கப்பட்டு பற்சிதைவு ஏற்படுகிறது.மேலும், குளிர்பானங்களுக்கு கருவண்ணம் கொடுக்க பயன்படுத்தப்படும் 'கராமல் ' என்ற பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாகும்.
நம் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடிய காஃபின் இக்குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது உடலின் சுண்ணாம்புச் சத்து சிறுநீர் மூலம் வெளியேறுவதை அதிகரிக்கிறது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு கருவளர்ச்சிக் குறைபாடு, குறைப் பிரசவம், பழக்க வழக்கங்களில் மாற்றம், மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படும். மேலும், தூக்கமின்மை, பதற்றம், கவலை, கோபப்படுதல், இதய துடிப்பில் மாற்றம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
ஆக, பூச்சிக் கொல்லிகளே இல்லாமற்போனாலும் கூட இந்தக் குளிர்பானங்களால் நமக்குக் கெடுதல் ஏற்படும் என்பதே உண்மை.
அப்புறம் ஏன் நாம் இவற்றை அருந்தித் தொலைக்க வேண்டும் ?
000000
இரு கட்டுரைகளும் ஆகஸ்ட் மாத சுற்றுச்சூழல் புதிய கல்வி இதழில் வந்துள்ளன. அவற்றில் கூடுதல் செய்திகள் திண்ணைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன.
-அசுரன்
அசல்கள்
2 hours ago