Monday, July 27, 2009

குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூன் 8, 2006 அன்று சாகியா அஹ்சன் ஜாப்ரி, குஜராத்தின் அன்றைய காவல் துறை தலைவரான பி.சி. பாண்டேவுக்கு 119 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் மனுவை அனுப்பினார். இதில் நகை முரண் என்னவெனில், அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 29 ஆவது நபராக பி.சி. பாண்டேயின் பெயரும் இருந்தது. "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' எனும் சட்ட உதவி அமைப்பு தனது செயலாளர் தீஸ்தா செடல்வாட் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆவணத்தை தயாரிக்க சாகியாவுக்கு சட்ட உதவிகளை வழங்கியது. இந்த ஆவணத்தைத் தயாரிக்க ஏறத்தாழ 5 மாதங்கள் ஆயின. காவல் துறை உதவித் தலைவர் மகாபத்ராவை, புகார் அளித்தவரை சந்திக்க காவல் துறை தலைவர் அனுப்பியது போன்ற சில சடங்குகள் நடந்தாலும், 2000 பக்கத்திற்கு மறுக்க இயலாத சான்றுகள் அளிக்கப்பட்டிருந்த அந்த ஆவணத்தில், புகாருக்கு வலு சேர்ப்பதற்கான எதையும் கண்டுபிடிக்க காவல் துறை தலைவரால் முடியவில்லை.

Gujrat criminals தெளிவான சட்ட வழிமுறைகள் இருந்த போதிலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றங்களை விசாரிக்க குஜராத் காவல் துறை மறுத்து 8 மாதங்கள் கழித்து, மாநில காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும் புகாரை விசாரிக்கவும் ஆணையிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் புகார்தாரரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' அமைப்பும் இணைந்து வழக்கு ஒன்றினை பதிவு செய்தனர். நடந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், சி.பி.அய். மூலம் சார்பற்ற ஒரு விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 2007இல் நடந்த விசாரணையின்போது குஜராத் அரசின் சார்பாக வாதிட்ட அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி, மனுதாரரின் வாதங்களை கடுமையாக மறுத்து வாதிட்டார்.

தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மனுதாரர்கள் ஒரு கூடுதல் மனுவை அளித்தனர். அக்டோபர் 25, 2007 அன்று வெளியிடப்பட்ட "தெகல்கா' வின் ஆபரேசன் சலங்க்' மூலம் வெளிக் கொணரப்பட்டவை குற்றச் சதி திட்டத்தின் பின்னணி குறித்த சட்டத்தை மீறிய ஒப்புதல் வாக்குமூலங்களாகக் கருதி அவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்த கூடுதல் மனு கேட்டுக் கொண்டது. நவம்பர் 2007 இல் குஜராத் உயர் நீதிமன்றம் முதல் மனு, கூடுதல் மனு இரண்டையுமே தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சில மாதங்கள் கழித்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததில், மார்ச் 3, 2008 அன்று இம்மனு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பதில் தருமாறு தாக்கீது அனுப்பியதோடு, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனை நீதிமன்றத்திற்கு துணை புரிய "அமிகஸ் க்யூரியாக' நியமித்தது. புகாரின் குறிப்பான தன்மை மற்றும் குற்றச்சாட்டுகளின் பெரும் எண்ணிக்கையை அங்கீகரித்ததோடு, உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கூறியது : பெருமளவிலான ஆதாரங்கள் இருந்தும் காவல் துறை விசாரிக்க மறுத்தால், ஒரு குடிமகன் என்னதான் செய்ய இயலும்? அந்த குடிமகனுக்கு என்னதான் தீர்வு இருக்கிறது?

வழக்கமான நடைமுறை தாமதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏப்ரல் 27, 2009 அன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 26, 2008 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையின்படி சி.பி. அய்.யின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழு பிற 8 முக்கிய வழக்குகளை விசாரிப்பதோடு, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதி விசாரணையையும் மேற்பார்வையிடும் என ஆணையிட்டிருந்தது.

இந்தப் புகாரின் தகுதியையும் அதன்பின் இருக்கும் பெரும் உழைப்பையும் அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் உடனடியாக இந்த புகார்களை விசாரித்து மூன்று மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

புகாரில் குற்றம் சாட்டப்பட்ட 63 நபர்களில், 12 பேர் அரசியல்வாதிகள். அதிலும் 2006 இல் மாநில அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் நால்வர், முதல்வர் நரேந்திர மோடி (உள் துறை, போக்குவரத்து, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பொறுப்புகளை ஏற்றிருந்தார்), அமித் ஷா (உள்துறை இணை அமைச்சர்), இந்திர விஜய்சிங் கே. ஜடேஜா (சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்) மற்றும் பிரபாத் சிங் சவுகான் (பழங்குடியினர் மேம்பாட்டிற்கான இணை அமைச்சர்) ஆகியோர் அதிகாரத்திலும் பதவியிலும் தொடர்கின்றனர். 2007 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த அசோக் பட், தற்பொழுது மாநில சட்டமன்றத் தலைவராக இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் மீதமுள்ளவர்களில், 3 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்; 7 பேர் பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள்ளின் மாநிலப் பொறுப்பாளர்கள் (வி.எச்.பி.யின் அனைத்துலக பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன் தொகாடியாவும் இதில் அடக்கம்); 10 பேர் அய்.ஏ.எஸ். அதிகாரிகள், 28 பேர் அய்.பி.எஸ். அதிகாரிகள்.

புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 23ஆம் நபரான கேசவராம் காஷிராம் சாஸ்திரி, வி.எச்.பி.யின் குஜராத் பிரிவு முன்னாள் தலைவராகவும் மற்றும் அகமதாபாத்தின் பால்டியிலிருந்து, வெளிவந்த "விசுவ இந்து சமாச்சார்' இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் மார்ச் 2002இல் ரிடிப்டாட்.காம் இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் தேர்ந்தெடுத்த முறையில் சேதம் விளைவித்தமைக்காக மிகுந்த பெருமிதத்தோடு உரிமை கொண்டாடியிருந்தார்.

இந்தக் கட்டுரை அச்சேறும் தருணத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது போன்று விசாரணை நடப்பது இதுவே முதல் முறையாகும். சூன் 8, 2006 அன்று அளிக்கப்பட்ட புகாரில், விசாரணைக்கு உதவக்கூடிய சாட்சிகளின் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சாட்சிகள் அனைவரும் குஜராத்தின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள். நானாவதி-ஷா விசாரணைக் குழுவின் முன் காவல் அதிகாரிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் மனுக்கள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாக அளிக்கப்பட்டுள்ளன.

முதன்மைக் குற்றவாளி : நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வர்.

பாரதிய ஜனதா கட்சியின் அவதூறு உற்பத்தியாளர்களுடன் இந்தியாவின் பெரும் ஊடகங்களின் மந்தமான புலனாய்வுத் திறனும் இணைந்து, தற்பொழுது சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்கும் புகாரில் முதலமைச்சர் நரேந்திர மோடி மீது எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டும் இல்லை என்ற பிம்பத்தை வளரச் செய்தன. இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறு இருக்க முடியாது. மிக கவனமாக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலானது, நரேந்திர மோடி மீது நூற்றுக்கும் மேற்பட்ட நேரடியாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறது.

முதன்மைக் குற்றச்சாட்டுகள் :

கோத்ரா நிகழ்வு குறித்து தவறான புரிதலை உருவாக்குதல். பிப்ரவரி 27, 2002 அரசியல் சட்டத்தின் வழி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் அரசினால் முழுமையான அங்கீகாரம் அளிக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளை அரங்கேற்ற, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரசின் எஸ்-6 பெட்டியில் தீயினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், திரித்துப் பயன்படுத்தப்பட்டன.

கோத்ரா அமைந்துள்ள பஞ்ச்மகால் மாவட்டத்தின் நீதிபதியும் ஆட்சித் தலைவருமான ஜெயந்தி ரவி, ரயில் நிலையத்தில் நடந்தது ஒரு விபத்து என்று கூறினார். அதைப் போலவே அன்றைய பிரதமர் வாஜ்பாய், நிகழ்வு நடந்த அன்று மாலை 5 மணிக்கு நாடாளு மன்றத்திலேயே அந்த நிகழ்வு ஒரு விபத்து என்றே கூறினார். அன்று பிற்பகல் 2 மணிக்கு வி.எச்.பி.யைச் சேர்ந்த தனது நம்பிக்கைக்குரிய டாக்டர் ஜெய்தீப் படேல் போன்றவர்களுடன் கோத்ரா வந்து சேர்ந்த முதலமைச்சர் நரேந்திர மோடி வேறு மாதிரியாக முடிவெடுத்தார். அன்று இரவு 7.30 மணியளவில் அகில இந்திய வானொலியின் குஜராத்தி ஒலிபரப்பு ஒன்றில், கோத்ரா நிகழ்வு அய்.எஸ்.அய்.யால் இயக்கப்பட்ட (கோத்ரா முஸ்லிம்களால் நிறைவேற்றப்பட்ட) திட்டமிட்ட சதி என்றார். அதைத் தொடர்ந்த நாட்களில், மோடியின் குருவான எல்.கே. அத்வானியின் பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சகம், கோத்ரா நிகழ்விற்குப் பின்னால் ஒரு பெரும் சதி இருப்பதாக உலகை நம்ப வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இன்று வரை அப்படியான சதி ஒன்றும் கண்டறியவோ, நிரூபிக்கவோ படவில்லை.

மோடி அத்துடன் நிற்கவில்லை. எரிந்த அந்த ரயில் பெட்டி அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு மாவட்ட நீதிபதி ஜெயந்தி ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் எரிச்சலடைந்த மோடி அடுத்த செயலை செய்தார். எரிந்த உடல்கள் வி.எச்.பி.யின் அன்றைய மாநில பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உடல்களை ஒரு வாகனப் பேரணியாக அகமதாபாத் "சோலா' சமூக மருத்துவமனைக்கு எடுத்து வரவும் பணித்தார். அங்கு அந்த உடல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று காலை குஜராத்தி நாளிதழான "சந்தோஷ்' வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்ட எரிந்த உடல்களின் பெரிய வண்ணப்படத்தை ஏழு பத்திக்கு வெளியிட்டு, கொடூரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அந்தப் படத்தில் உடல்களின் அருகில் ஒரு சூலமும் தெரிந்தது. இதன் விளைவுகளைப் பற்றி எந்த அச்சமும் இன்றி உண்மையைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி மோடி தனது சூழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

படுகொலைகளைத் திட்டமிட நடைபெற்ற ரகசியக் கூட்டங்கள் :

பிப்ரவரி 27, 2002 காந்தி நகர், லூனா வாடா, கோத்ரா, பிப்ரவரி 27 அன்று பின்னிரவில் காந்தி நகரில் மோடி ஒரு ரகசியகூட்டத்திற்கு அழைத்திருந்தார். அக்கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் சிலரும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகள் போடப்பட்டன. காவல் துறையினரும் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டனர்.

நீதியரசர்கள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.பி. சாவந்த் ஆகியோரை கொண்ட "அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம்-குஜராத் 2002' வெளியிட்ட அறிக்கையின்படி, “உடனடியாக ஓர் இந்து எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அது எவ்வகையிலும் தடுத்து நிறுத்தப்படவோ, அடக்கப்படவோ கூடாது என்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசு நிர்வாக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியும் அவருடன் குறைந்தது அவரது அமைச்சரவையின் மூன்று சகாக்களேனும் நேரடியாகப் பங்கு பெற்றனர்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நடந்த நிகழ்வுகளுக்கு இணையாக மோசமானது என்னவெனில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் உட்பட கிடைத்துள்ள சந்தேகத்திற்கு இடமில்லாத சான்றுகளின்படி, முதல்வர் ஒரு ரகசிய கூட்டத்திற்கு அழைத்திருந்தார் என்பதும், அக்கூட்டத்தில் அன்றைய தலைமைச் செயலாளர் சுப்பாராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயண் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள பணிக்கப்பட்டிருந்தனர் என்பதும், அக்கூட்டத்தில் “இந்து கலவரக்காரர்களை தடுக்க வேண்டாம்'' என்று வெளிப்படையாக உத்தரவிடப்பட்டதும் தெரிய வந்தது. ஆக, சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உட்பட அனைத்து கொடூர வன்முறைகளுக்கும் அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டிருக்கிறது ("மனிதத்திற்கு எதிரான குற்றம்'-அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம், குஜராத் 2002 இன் அறிக்கை).

2002 மே மாதத்தில், மோடி அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் இந்த ஆயத்தின் முன் இது குறித்து சாட்சியம் அளித்திருக்கிறார். அவரது அடையாளம் மறைக்கப்பட்டிருந்தது. நவம்பர் 2002இல் ஆயத்தின் அறிக்கை வெளியானபோது, ஆய உறுப்பினர்களில் ஒருவர், அவ்வாறு சாட்சியம் அளித்தவர் ஹரன் பாண்டியா என்பதை "அவுட் லுக்' இதழில் வெளிப்படுத்தினார். சில மாதங்களிலேயே பாண்டியா கொல்லப்பட்டார்.

காவல் துறை கையகப்படுத்தும்

முதலமைச்சரின் அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களான அசோக் பட் (புகாரில் 2ஆவது குற்வாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்), இந்திர விஜய் சிங் கே ஜடேஜா (புகாரில் 3ஆவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்) ஆகியோர் காவல் துறையை தங்கள் விருப்பப்படி செயல்பட வைக்க எடுத்த சட்ட விரோத முயற்சிகள். முதலமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் தீட்டிய ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதி. அமைச்சர்கள் எவ்வாறு காந்தி நகர் மற்றும் ஷாஹிபாக்கில் காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலேயே அமர்ந்திருந்து காவல் துறை சட்டங்களையும் மரபுகளையும் உடைத்து, காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் இறங்காமல் பார்த்துக் கொண்டனர் என்பது குறித்தும், அதோடு பல நேரங்களில் குற்றத்திற்கு உடந்தையாகவும் சாட்சியங்களை அளிக்கவும் உத்தரவிட்டனர் என்பது குறித்து அக்காலக் கட்டத்தில் ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தன.

2002 முதல் 2007 வரை சட்ட அமைச்சராக இருந்த பட் இன்று சட்ட மன்றத் தலைவராக இருக்கிறார். குஜராத்தின் சட்ட மற்றும் நீதித்துறையின் ஒட்டுமொத்த தலைவர் என்ற முறையில் 2007 வரை அரசு வழக்குரைஞர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் அவர் பெற்றிருந்தார். பிப்ரவரி 27 கூட்டம் குறித்தும், அகமதாபாத் நகரம் மற்றும் குஜராத் மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளில் அமைச்சர்கள் அமர்ந்து, காவல் துறையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திய சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

மோடியின் "பழிக்குப் பழி”

Modi பிப்ரவரி 28, 2002 நரோதாவில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் "தெகல்கா' வெளியிட்ட ஒலிப்பதிவுகளில் உள்ளது. நரோதாவில் 112 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு வெகு நேரம் ஆவதற்குள் மோடி அங்கு வந்ததாகவும், தனது கறுப்புப் பூனை கமாண்டோக்கள் சுற்றியிருந்த நிலையிலும் கூட அக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவர் மனதாரப் பாராட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவில் அவர் குறிப்பிடுகிறார் (இதன் மூலம் மோடியின் கறுப்புப் பூனை கமாண்டோக்களும் இந்நிகழ்விற்கு சாட்சிகளாகின்றனர்).

"ஆபரேசன் கலங்க்' "தெகல்கா'வால் பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு அக்டோபர் 2007இல் வெளியிடப்பட்டது. 2002 குஜராத் இனப்படுகொலைகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலரது வாக்குமூலங்களும், உரையாடல்களும் கொண்ட ஒலிப்பதிவுகளை தற்போது சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் பல செய்திகளை அளிப்பனவாகவும் உள்ளன. கும்பல் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை அச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்வதோடு, பிப்ரவரி 27, 2002க்கு பல வாரங்களுக்கு முன்பாகவே கோத்ரா மற்றும் கோத்ராவிற்குப் பிந்தைய வன்முறைகளுக்கான திட்டமிடுதல்களும், பிற மாநிலங்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விளக்குகின்றனர்.

அதோடு கும்பல் கொலைகள் மற்றும் வன்புணர்ச்சிகளைத் தூண்டி விடுவதில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடி பங்கையும் விவரிக்கின்றன "தெகல்கா' ஒலிப்பதிவுகள் மூலம் வெளிப்பட்டவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த ஒலிப்பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். "தெகல்கா' பதிவில் பேசிய அனைவரையும், தங்கள் உரையாடலில் அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் (அவர்கள் எவ்வளவு அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்த போதிலும்) சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கணக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த வதோதரா என்பவருடன் இப்படியான ஓர்உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மோடி மற்றும் மோடியின் கையாளான பாபு பஜ்ரங்கியின் நேரடி உத்தரவுகள் குறித்து அவர் சொல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி சென்றது, கொடூரமாக பாதிக்கப்பட்டு சிதைந்து போய் அருகிலுள்ள புனரமைப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை காண அல்ல; இந்த உரையாடல்களின் மூலம் அவர் கொடூரத்தின் வெற்றி நாயகனாகவே அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. - அடுத்த இதழிலும்

“கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து கிரிக்கெட் விளையாடினோம்''

மோடி நடத்திய ஆவணப்படுத்தப்படாத ரகசியக் கூட்டங்கள் :


பிப்ரவரி 27, 2002 அன்று முதலமைச்சர் மோடியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்திற்கு கூட்டக் குறிப்புகளோ அல்லது வேறு ஆவணங்களோ இல்லாதது மட்டுமல்ல; இதே போன்ற பல கூட்டங்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு, அவர்களுக்கு கீழிருக்கும் அதிகாரிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதோடு, அந்தக் கூட்டங்களுக்கும் எவ்வித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை.

அன்று காவல் துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) பதவி வகித்த சஞ்சீவ் பட், இம்மாதிரியான பல கூட்டங்களில் காவல் துறை கூடுதல் தலைவரான ஜி.சி. ரெய்கரின் ஊழியர் அதிகாரியாக கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு இடப்பட்ட உத்தரவுகள் குறித்து எவ்வித ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை.

கே. என். ஷர்மா, அகமதாபாத் பகுதி காவல் துறை அய்.ஜி. பதவி வகித்த இவரது பகுதியில்தான், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவரும் இத்தகைய சட்ட விரோதமான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

தீபக் ஸ்வரூப், வதோரா பகுதி காவல் துறை அய்.ஜி. இவர் பதவி வகித்த பகுதியில்தான் கோத்ரா நிகழ்வு நடந்தது. அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் மற்றும் பிற வன்கொடுமைகளையும் நடத்தியிருக்கின்றன. இவரும் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

எம்.கே. டாண்டன், அகமதாபாத் உதவி ஆணையர். இவரது பகுதியில்தான் நரோதா பாட்டியா, குல்பர்கா சமூகம் உள்ளிட்ட பல கொடூர கும்பல் கொலைகள் நடந்துள்ளன. இவர் உயர் மட்ட வலைப் பின்னலின் பகுதியாக இருந்திருக்கிறார்.

குல்பர்கா தாக்குதலில் தப்பியவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடிய போதும், கொல்லப்பட்ட 70 பேரின் உடல்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்த போது அவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு, குல்பர்க் மற்றும் நரோதாவில் கொல்லப்பட்ட 133 உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட போது உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தன. "தெகல்கா' விடம் உரையாடும்போது குல்பர்க் சமூக படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் சவால், கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து தான் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பிடுகிறார், விடை தெரியாத கேள்வி என்னவென்றால் அந்த உடல்களைத் துண்டாடியதில் டாண்டனும் பங்கேற்றாரா என்பதே.

அமிதாப் பதக், காந்தி நகர் பகுதி அய்.ஜி. இவரது பகுதியில்தான் கோத்ராவிற்கு பிந்தைய கலவரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் பல இடங்கள். இவரும் இச்சதியில் பங்கு பெற்றிருந்தார்.

ஷவானந்த் ஜா, அகமதாபாத் காவல் துறை கூடுதல் ஆணையர். இவரது பகுதியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. இவர் முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர். 2004-2006க்கு இடைப்பட்ட காலத்தில் உள்துறைச் செயலாளராக, அரசு சார்பாக பல தவறான அறிக்கைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் என்பது நகை முரண்.

டி.டி. துதேஜா, வதோரா பகுதி காவல் துறை ஆணையர். ஏறத்தாழ 37க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் இவரது பகுதியில் நடந்துள்ளன. இதில் பெஸ்ட் பேக்கரி நிகழ்வும் அடங்கும்.

நன்றி : ‘கம்யூனலிசம் காம்பட்' தீஸ்தா செடல்வாட்

நன்றி : தமிழில் : பூங்குழலி

தமிழகத்தின் ஒருமித்த கோரிக்கையை அலட்சியப்படுத்திய இந்திய அரசு, நமக்கான அரசா?

“ஈழம் இனி செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் ஜூலை 10 ஆம் தேதி குடந்தையிலும், 11 ஆம் தேதி மயிலாடுதுறையிலும் நடந்த கழகப் பொதுக் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

ஈழத் தமிழர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பரிசீலிப்பதற்கு முன்னால், இதுவரை, நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஈழம் என்ற சொல், கடந்த காலங்களில் ஒட்டு மொத்த இலங்கையைக் குறிக்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருந் தாலும், இப்போது அது தமிழர்களின் தமிழர் தாயகத்தைக் குறிப்பதற்கான சொல்லாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம்.

தமிழர்களுக்கு தனி மாநிலம், ‘மாகாண சபை’, ‘மாநில சுயாட்சி’ என்ற கோரிக்கைகளை முன் வைத்த தமிழர்கள், 1976 இல் வட்டுக்கோட்டையில் கூடிய மாநாட்டில் தமிழ் ஈழக் கோரிக்கையை வைத் தார்கள். மாநாட்டின் தலைவர் தமிழர் கூட்டணியின் தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். அதே மாநாட்டில் தமிழர் கூட்டணியின் பெயர் ‘தமிழர் விடுதலை கூட்டணி’ என்று மாற்றப்பட்டது.

இனி சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என்று அறவழியில் போராடிய அரசியல் தலைவர்கள் எடுத்த முடிவு தனி ஈழம் என்பதாகும். பிறகு அதே கோரிக்கைக்காக விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடங் கினார்கள். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, ஈழத் துக்காக போராடிய ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலொ, புளோட் போன்ற அமைப்புகளின் ஆதரவாளர் களாக இருந்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் களாக தேர்வு பெற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் விடுதலைப்புலிகளை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். இன்று துரோகக் குழுக்களாக செயல் பட்டுக் கொண்டிருக்கிற குழுவினரும் தமிழ் ஈழக் கோரிக்கையையே முன் வைத்தனர். அங்கே - அமைதிப்படை என்ற பெயரில் சென்ற இந்திய ராணுவம் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற குழுவின் சார்பில் வரதராஜப் பெருமாள் என்பவரை வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக அமர வைத்தது. அந்த வரதராஜப் பெருமாளே முதலமைச்சராக இருந்தபோது, தமிழ் ஈழத்தையே பிரகடனம் செய்தார். அமைதிப் படை வெளியேறிய போது இனி அமைதி யாக இருக்க முடியாது என்று இந்தியாவுக்கு ஓடி வந்த வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழத்தை அறிவித்து விட்டுத்தான் ஓடி வந்தார். அவர்கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. இப்போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஆனந்த சங்கரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தமிழ் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, 1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தி லிருந்து அந்த நாட்டில் விடுதலைப்புலிகள் ஆனா லும் புலிகளை எதிர்ப்பவர்கள் ஆனாலும் பொது மக்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்களாகவே இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டில் வாழவே முடியாது என்று கருதி, புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள்கூட அந்த நாடுகளில் தமிழ் ஈழத்துக்காகப் போராடிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்கள் உரிமையற்றவர்களாக கேவலமானவர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு போராட வேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் போராடுவதற்கான உரிமைகள் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டில் 1938 இல் பெரியார் முன் வைத்த தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கத்தை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிற எங்களைப் போன்ற அமைப்புகளும் தமிழ்த் தேச தன்னுரிமை கோரும் தமிழ் தேசியவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலையை ஆதரித்தார்கள். இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பொதுவுடைமை கட்சியினரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவே போராடினார்கள். நமது ‘அகில இந்திய’ தி.மு.க.வின் தலைவர் கலைஞர்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயள விலாது பேசியே வந்தார். தமிழக அரசு கூட்டிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர்

2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உண்ணா விரதப் போராட்டத்தை அனைத்துக் கட்சி ஆதரவு டன் நடத்தியதைத் தொடர்ந்து மயிலை மாங் கொல்லையில் தி.மு.க. கூட்டத்தைக் கூட்டிப் பேசிய கலைஞர்கூட ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத இந்த அரசு இருக்கக்கூட தேவை இல்லை என்றார். பிறகு இந்த அரசு என்பது தமிழக அரசு என்று விளக்கம் கூறினார். ஒரு வேளை ‘இந்த அரசு’ என்பதை ‘மத்திய அரசு’ என்று தவறாக கருதி, தமது அரசு மீது 356’ பாய்ந்து விடக் கூடாது என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

அதற்குப் பிறகு அக்.14 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. மூன்று தீர்மானங்களை நிறை வேற்றினார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என்பது முதல் தீர்மானம். இந்திய அரசு அந்தப் போருக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பது இரண்டாவது தீர்மானம். குறிப்பிட்ட காலத்துக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பது. மூன்றாவது தீர்மானம் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட, அதில் பங்கேற்ற எல்லா கட்சிகளும், இத் தீர்மானங்களை ஆதரித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியே சென்று, பதவி விலகல் என்பது பற்றி மட்டும் பின்னால் கருத்து கூறுவதாக கூறியது. காங்கிரஸ் கட்சி, பதவி விலகல் பற்றி கூற முடியாது என்று கூறிவிட்டது. ஆனால், அதற்கு முன்னால் இருந்த இரண்டு தீர்மானங்களை எல்லா கட்சிகளுமே ஏற்றுக்கொண்டன. எந்தக் கட்சியும் மறுக்கவே இல்லை.

அந்தக் கூட்டத்துக்கு வராத ம.தி.மு.க.வும், ஜெய லலிதாவும் தீர்மானத்தை ஆதரித்தன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்பதில் கருத்து வேறுபட்டாலும், போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும், இந்தியா ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதையும், எந்தக் கட்சியும் இன்று வரை மறுக்கவே இல்லை. அதற்குப் பிறகு, மாணவர்கள், பொதுமக்கள், அரவாணிகள், பார்வையற்றவர்கள் என்று எல்லா பிரிவினரும் போராட்டம் நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், மனிதச் சங்கிலி என்று அனைத்து வடிவங்களிலும் போராட்டங்கள் நடந்தன. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட சபையில் தீர்மானங்களை மூன்று முறை நிறை வேற்றினார்கள். கடைசியாக ‘அய்யகோ, தமிழினம் அழிகிறதே’ என்று அழுதுகொண்டே கலைஞர் தீர்மானத்தைப் படித்தார். எல்லோரும் சேர்ந்து போய் பிரதமரிடம் வலியுறுத்தினார்கள். ஆக ஒட்டு மொத்த தமிழினமும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இப்படிப்பட்ட கோரிக்கைக்கு என்ன விளைவு ஏற்பட்டது? நமது தலைவர்களும் இந்த அடிமைப் பட்ட தமிழினமும் முன் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து நாம் என்ன பதிலைப் பெற்றோம்? கடைசியாக கலைஞர், மன்மோகன் சிங்கிடம் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையாவது கொழும்புக்கு அனுப்புங்கள் என்றார். கோரிக்கைகளைக்கூட இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டாம். விமானத்திலாவது ஒருமுறை கொழும்பு போய் வந்தால் போதும். அவ்வளவுதான். அதுதான் கடைசியாக பிரதமரிடம், கலைஞர் வைத்த கோரிக்கை.

அதுகூட பல மாதங்களாக நிறைவேற்றப்பட வில்லை. இந்தக் கோரிக்கைக்குக்கூட அதாவது, பிரணாப் போய் வரவேண்டும் என்பதற்காக - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழகம் வந்த மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டினோம். எங்கள் தோழர்கள் ஆயிரம் பேர் கைதானார்கள். அப்போதும் மன்மோகன் சிங் விரைவில் பிரணாப் கொழும்புக்கு செல்வார் என்றுதான் கூறினார். அப்புறம் பிரணாப் போய் வந்தார். போய் வந்தவர் சொன்னார், 48 மணி நேர போர் நிறுத்தம் வர இருக்கிறது என்று. உடனே, இது போர் நிறுத்தம் அல்ல; 48 மணி நேர கெடு. அதற்குள் எல்லோரும் போரில்லாப் பகுதிக்கு வந்து விட வேண்டும், அதற்கான கெடு என்று இலங்கை அரசு கூறியது.

ஆக, தமிழகத்தில் போராட்டங்கள், கோரிக்கை கள் எதற்கும் வளைந்து கொடுக்காத மத்திய அரசு, இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகும், ஒரே ஒரு முறை - பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி வைத்தது. அவ்வளவு தான். தமிழகத்தின் ஒட்டு மொத்தமான கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான அசைவைக் கூட தமிழர்களுக்கு சாதக மாகக் காட்டவில்லை.

ஆனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழும் தேசிய இனங்கள், பல்வேறு கோரிக்கை களை முன் வைக்கிறார்கள். மராட்டியத்தில் வாழும் மராட்டியர்கள், இந்தியில் பேசக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். மராட்டியில் பேசு என்கிறான். இந்தி பேசுவோரை மராட்டியத்தை விட்டு விரட்டுகிறான். சிறிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கூட தாக்குதல் நடத்துகிறான். ரயில்களை கொளுத்துகிறான். கன்னட செய்தி நேரத்தை தள்ளி வைத்து, சமஸ்கிருதத்தில் செய்தியை ஒளிபரப்பி யதற்காக கலவரம் நடத்தினான்.

கருநாடகத்தில் உள்ள இந்திய தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து கன்னடர்கள் தாக்கினார்கள். ஆஸ்திரியாவில் சீக்கிய மதகுரு தாக்கப்பட்டதற்காக பஞ்சாபில் சீக்கியர் கலவரம் நடத்தி ரூ.7000 கோடி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள். இதற்கெல்லாம் அம்மாநில அரசுகள் அவர்கள் மீதெல்லாம் வழக்குகள் போடவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை. பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் மத்திய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் புகுந்து தாக்கியவர்கள் மீது கூட அத்துமீறி நுழைந்ததாக மட்டும் வழக்கு தொடர்ந்தார்கள். அடுத்த நாளே அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆதரித்துப் பேசினாலே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படியே குற்றமல்ல என்று பலமுறை கூறிவிட்டது. ஆனாலும், தி.மு.க. ஆட்சி வழக்கு போடுவதை நிறுத்தவே இல்லை. ஒவ்வொரு வழக்கிலும் உயர்நீதிமன்றம் இந்த அரசின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. அதற்குப் பின்னாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு குலைந்து போனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது. பொது ஒழுங்கு குலைந்து போனால்தான் பயன்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு என்பது வேறு; பொது ஒழுங்கு என்பது வேறு. ஏற்கனவே பார்ப்பனர் பூணூலை அறுத்த ‘குற்றத்துக்காக’ இந்த ஆட்சி, எங்கள் தோழர்கள் பெரம்பலூர் லட்சுமணன், தாமோதரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி யது. வேறு எந்த முன் வழக்கும் அவர்கள் மீது இல்லை. இந்த ஒரே வழக்குக்காக, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் போட்டார் கலைஞர்.

மத்திய அரசுக்கு பயந்து அவர்களைத் திருப்திப் படுத்தவே தேசிய பாதுகாப்பு சட்டத்தைப் பயன் படுத்துவதாக சமாதானம் கூறினார்கள். இப்போது மத்திய அரசே கூறிவிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என்று. இராணுவ வாகன மறிப்பு வழக்கில் ம.தி.மு.க. மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீது தி.மு.க. ஆட்சி போட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக போடப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசே ரத்து செய்து விட்டது. அதற்குப் பின்னரும்கூட எங்கள் தோழர் சூலூர் வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகத் தில் வருவதைப்போல்

‘அரசனை விட அரசனை மிஞ்சிய இராஜ விசுவாசியாக’ இவர்கள் செயல் படுகிறார்கள்.

பிற மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினால் கூட வழக்குப் போடுவது இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பேசினாலே தேசிய பாதுகாப்பு சட்டம் என்றால், என்ன காரணம்? ஏன் விடுதலை இயக்கங்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்?

தமிழர்களை எப்படி அடக்கினாலும் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். எதிர்க்க மாட்டார்கள் என்பதுதான் காரணம். சீக்கியர்கள் கலவரம் நடத் தினால் பயப்படுகிறான்; மத்திய அரசு பணிகிறது. ஆனால், ஆறரை கோடி எண்ணிக்கையாக உள்ள ஒரு இனத்துக்கு ஏன் செவி சாய்க்க மறுக்கிறார்கள்? இந்த சிந்தனையோடுதான் ஈழத் தமிழர்களுக்குநாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் - தங்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அதில் உறுதியாக இருக்கிறார்கள். எல்லாம் முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்ட இந்த நிலையிலும்கூட முள்வேலிக் கம்பிக்குள் அகதி களாக அடைக்கப்பட்ட நிலையிலும்கூட அந்த அகதி முகாமுக்குள் இருந்த தமிழன், உயரமான கம்பத்தில் ஏறி புலிக் கொடியைக் கட்டிப் பறக்க விடுகிறான் (கைதட்டல்). அந்தத் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. தன்னுடன் முகாமுக்குள் உள்ள பெண்ணிடம் ராணுவம் அத்து மீறி நடக்கும்போது அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவனுக்கு இருக்கிறது. அப்படி எதிர்த்துக் கேட்ட இரண்டு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அத்துமீறி நடந்த ராணுவ அதிகாரியின் துப்பக்கியைப் பிடுங்கி அடித் திருக்கிறார்கள். அதற்காகவும் சுட்டுக் கொல்லப்பட் டிருக்கிறார்கள். முகாமில் அடைத்தாலும் விடுதலை உணர்வை அப்படியே காத்துக் கொண்டிருக்கிற உணர்வோடு அந்தத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக இங்கே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அடக்குமுறைகளை நேரில் அறிந்திடாத புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள்கூட ஆயுதம் ஏந்திப் போராடத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக எதுவும் செய்யாத, எதுவுமே செய்யும் துணிவில்லாதவர் களாகிய நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; என்ன செய்ய வேண்டும் என்று! என்ன செய்ய முடியும்? மீண்டும் ஆர்ப்பாட்டம்; ஊர்வலம்; இதைத்தான் செய்வோம். அதற்கு அரசு செவி சாய்க்குமா? பலன் ஏதும் தராமல் கோரிக்கைகளை முன் வைப்பது மட்டுமே பலன் சேர்க்குமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கலைஞர் வேண்டுமானால் கடிதம் எழுதுவார். பிற்காலத்தில் - வரலாற்றில் கடிதம் எழுதியதாக சொல்லிக் கொள்வதற்கு அது பயன்படும். அல்லது அஞ்சல் துறைக்கு 5 ரூபாய் லாபம் சேர்ப்பதற்கும் பயன்படும். வேறு எந்தப் பயனும் நிகழ்ந்து விடாது. பதிவு செய்யக்கூடிய போராட்டங்களாக நமது போராட்டங்கள் இருக்கக் கூடாது. சிறு போராட்ட மாக இருந்தாலும் அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டு நடத்துகிற போராட்டமாக நமது போரட்டம் இருக்க வேண் டும். அது அறவழிப்பட்ட போராட்டமானாலும் சரி, வேறு வகைப் போராட்டமானாலும் சரி, அரசு செவி சாய்க்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்குச் சட்டப்படியான தீர்ப்பை நாம் பெற்ற பிறகும்கூட அதை கேரள மார்க்சிஸ்ட் ஆட்சி அமுல் படுத்த மறுக்கிறது. அதையும் நாம் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்; இது தானே நமது நிலை.

ஈழத் தமிழர் மீதான இனப் படுகொலைகளை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக்கூட சீனாவும், கியுபாவும் தோற்கடிக் கின்றன. மாறாக, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டதாக நிதி உதவி கோரும் இலங்கை அரசு தீர்மானத்தை இந்தியாவும், சீனாவும் ஆதரிக்கின்றன. சாட்சிகளற்ற இனப்படுகொலையை அங்கே நடத்தி இருக்கிறார்கள். படுகொலைகளுக்கு சாட்சியாக இருந்த பத்திரிகையாளர் ‘இந்து’ பார்ப்பான் இராம் - மார்க்சியவாதி போல பேசிக் கொள்ளும் அந்த இராம் - தமிழர் அகதி முகாம்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக எழுதுகிறார். ஆனால் இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் நந்தன் சில்வா என்பவர் சுப்பிரமணியம் என்ற தமிழ் புகைப்படக் காரரை உடன் அழைத்துக்கொண்டு போய் அகதிகள் முகாமைப் பார்வையிட்டார். எல்லாவற்றையும் படம் பிடிக்கச் சொன்னார். அவர் தலைமை நீதிபதி என்பதால் புகைப்படம் எடுப்பதை தடுக்க முடியாது. அவர் அறிக்கை கொடுத்தார்.

“இலங்கை நாட்டின் குடிமகனாக இருப்பதை நான் கேவலமாக உணருகிறேன்”. அகதி முகாம்களில் எல்லாவற்றுக்கும் கியூ நிற்கிறார்கள். கூடாரத்துக்குள் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இடுப்பு ஒடிந்து விடும். 5 பேர் இருக்கவேண்டிய கூடாரத்தில் 30-க்கும் மேல் இருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த நாட்டின் தலைமை நீதிபதி அறிக்கை விடுத்தார்.

அந்நாட்டு தலைமை நீதிபதி கூறுவதையாவது உலக நாடுகள் காது கொடுத்து கேட்க வேண்டாமா? அதற்குப் பின்னால் அவர் பதவி ஓய்வு பெற்றார். இப்படிக் கூறுவதால், தனது உயிருக்கும் உடைமைக் கும் ஆபத்து நேரிடலாம் என்று கூறிவிட்டே பேட்டி கொடுத்தார். எங்கள் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே இல்லை. எங்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கும், அறவழிகளுக்கும் யாரேனும் இருந்ததாக உதாரணம் கூறவேண்டுமானால் அது பிரபாகரன் ஒருவர் தான் என்று, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தனது பதவி ஓய்வு பெறும் நாளில் பேசும் போது கூறியிருக்கிறார். (கைதட்டல்) எத்தனையோ வழக்குகளில் தமிழர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை எல்லாம் பட்டியல் போட்டுக் காட்டிவிட்டு கூறியிருக்கிறார். புலிகள் கட்டுப் பாட்டுப் பகுதியில் கிரிமினல் குற்றவாளிகள் இருப்பதை பட்டியல் போட்டுக் காட்டி நீதிமன்றம் வழியாக கேட்ட போது புலிகள் அந்த கிரிமினல் குற்றவாளிகளை இலங்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால், அதேபோல் புலிகள் கேட்ட குற்றவாளிகளை ஒருமுறைகூட இலங்கை நீதிமன்றம் ஒப்படைத்தது இல்லை என்று, அந்த நிகழ்ச்சியில் நீதிபதி கூறியிருக்கிறார்.

கடைசியாக தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்: நான் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குப் போன போது அவர்கள் மரியாதையுடன் நடத்தினார்கள். இவ்வளவு அறவழியைப் பின்பற்றுகிற விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் நான் பாராட்டுகிறேன் என்று. (பலத்த கைதட்டல்)

சிங்கள தேசிய இனத்திலிருந்தே இந்தக் குரல் கேட்கிறது, எத்தனையோ சிங்கள பத்திரிகை யாளர்கள் இலங்கையைக் கண்டித்து எழுதியதற்காக உயிருக்கு பாதுகாப்பு தேடி இந்தியாவில் அடைக் கலம் புகுந்துள்ளனர். அவர்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. காரணம், தமிழ்நாடு அரசை நம்பத் தயாராக இல்லை. அதைவிட டெல்லியில் இருக்கும் ஆட் சியை நம்பலாம் என்று டெல்லியில் இருக்கிறார்கள்.

ஒரு சிங்கள பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப் பட்டார். இப்படி சிங்கள இனத்தில் கூட சிலர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாது உரிமைக்கு குரல் கொடுக்கும்போது நம்முடைய தொப்புள்கொடி உறவான தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்? இங்கிருந்து செய்யும் கடமையை நாம் முழுமையாக செய்திருக்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

புலிகள் என்று பேசினாலே குற்றம் என்ற நிலை இங்கு இருந்தது. இனி அந்த நிலை வராது. காரணம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக அவர்களே கூறுகிறார்கள். எனவே தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரிப்பது குற்றமாகிவிடுமே என்ற அச்சம் நீங்கி நீங்கள் செயல்படலாம். ஆபத்து இல்லாத இத்தகைய போராட்டங்களில் ஆயிரக் கணக்கில் நீங்கள் திரண்டு நமது ஆதரவுக் குரலை எழுப்பவேண்டும். நூற்றுக்கணக்கில் கூடினால் மட்டும் போதாது.

சிறைக்குப் போகும் போராட்டத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். காலையில் போராட்டம் நடத்தி, மாலையில் விடுதலையாகும் போராட்டத் துக்கு நாம் பழகிவிட்டோம். எனவே 15 நாள் சிறையிலிருக்கும் போராட்டத்துக்காவாவது உணர்வுள்ள இளைஞர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் தமிழன் என்று உணர வேண்டும்; நமக்கான அடையாளத்துடன் தனித்த அரசை அமைத்து, நமக்கான அதிகாரம் நம்மிடம் வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் இருக்க வேண்டும் . அந்த ஆவல் வலுப்பட்டால்தான் இயக்கமாகும்; அந்த எண்ணத்தையாவது நாம் எழுப்ப வேண் டாமா? அதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா, என்பது தான் முக்கியம். குரல் எழுப்புவது மட்டும் போதாது; இதைச் சொன்னால் பிரிவினைவாதம் என்கிறார்கள்? என்ன பிரிவினைவாதம்? அய்.நா.சபை தோன்றிய பிறகு எத்தனை நாடுகள் தோன்றியிருக்கின்றன? ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரிந்துதான், மற்றொரு நாடு உருவாகிறது. எந்த நாட்டிலும் பிரிவினை வாதம் என்று பேசவில்லை.

இங்கேதான் பிரிவினை வாதம் என்று கூச்சல் போடுகிறான். ஆனால், அய்.நா.மன்றம், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனது உரிமையை நிர்ணயித்துக் கொள்ள உரிமை உண்டு என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அய்.நா. மன்றத்தின் சிவில் அரசியல் உரிமை பிரகடனத்தின் முதல் விதி அது தான். தேசிய இனம் பற்றிய புதிய சிந்தனைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. கனடா நாட்டின் அம்மையார் கரண்பார்க்கர். அவர் தொடர்ந்து தமிழ் ஈழத்துக்கான குரலை எழுப்பி வருகிறார். அதற்காக உலக நாடுகளில் உள்ள எல்லா வழக்கறிஞர்களையும் சந்தித்து, தனது குரலை பதிவு செய்து வருகிறார். அவர்களுக்கான தனித்த நிலம்; தனித்த அடையாளம்; தொடர்ந்த அரசுகள் பற்றி எல்லாம் அவர் சொல்கிறார். இவைகளைத் தவிர மேலும் இரண்டு புதிய கோட்பாடுகளை அவர் சொல்கிறார். அதுதான், இப்போது நம்மிடம் இல்லை. சுதந்திர வேட்கை (றடைட வடி கசநநனடிஅ) இருக்க வேண்டும் என்பது ஒன்று; அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றல் (உயயீயbடைவைல) இருக்கவேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டு மட்டும் நமக்கு இல்லை. ஆனால், நிலம், தொடர்ந்து நடந்த தமிழர் அரசுகள், கலாச்சாரம் என்ற மூன்றும் நம்மிடம் இருக்கிறது. நாம் சுதந்திர வேட்கையை அதை நிறைவேற்றிக் கொள்கிற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாததைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அல்லது அந்த நியாயமான உணர்ச்சிகள் நம்மிடம் இல்லை என்பதை விவாதத்திற்காகவாவது நாம் உட்படுத்த வேண்டும். அதைத்தான் தமிழர் களுக்கு உள்ள கடமையாக இப்போது நாம் உணருகிறோம்.

ஈழத் தமிழர்களுக்கான பிரச்சினை ஒரு நாளில் தீர்ந்துவிடப் போவது இல்லை. அது நீண்ட நாள் போராட்டம்; ஒன்றரை லட்சம் தமிழர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அதில் ஒரு லட்சம் பேர் ஊர்வலத்துக்கு வருகிறார்கள். ஆனால் ஆறரை கோடிப் பேராக இருக்கும் தமிழ்நாட்டில் 650 பேர்தான். அவ்வளவுதான் போராடியிருப்போம். எவ்வளவு வெட்கக்கேடான நிலை? எளிய போராட் டத்தைக்கூடநாம் நடத்த முன்வருவதில்லை. இப்படி எல்லாம் உள்ள ஒரு இனத்தை அல்லது மக்களை அரசும், அரசு அதிகாரங்களும் அடக்குகின்றன என்று சொன்னால், ஏன் அடக்க மாட்டார்கள்? அடக்கத்தான் செய்வார்கள். இந்த அடக்குமுறை அதிகமானால், நமக்கு ஒரு வேளை உணர்வு வரலாம். வீண் பெருமை பேசிக் கொண்டிருந்தால் போதாது. தமிழன் இமயத்தில் கொடி நாட்டினான் என்றெல்லாம் பேசுவதை விடுங்கள். முதலில் நமது நாட்டில் கொடியை உயர்த்த வேண்டும். நம் நாட்டில் நம் கொடியைப் பறப்பதற்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அதற்கான ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம். வேட்கையை வளர்ப்போம். ஆற்றலை வளர்த்துக் கொள்ள முயற்சிப்போம். இதைத்தான் ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தமிழர்கள் எடுக்க வேண்டிய முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதைத் தொடர்ந்து செய்யலாம். அதுவரை நமது நாட்டில் இருக்கிற, நமக்கு எதிரானவர்களை என்ன செய்யலாம்? முதலாவதாக எதிரானவர்களைப் புறக்கணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்; வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரி யாருடைய உழைப்பு, ஒரு சமூகச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருக்கிறார் என்றால், ஏறத்தாழ வேறு பெயரில் இருக்கிற பா.ஜ.க. அவர், நரேந்திர மோடிப் பதவி ஏற்றால், பதவி ஏற்புக்குப் போவார். சென்னைக்கு நரேந்திர மோடி வந்தால், வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார். ஆனால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், இந்த மண்ணின் சூழல் பா.ஜ.க.வின் கூட்டணியைப் புறக்கணிக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே அந்த உள்ளம் இருந்தா லும் உணர்வு இருந்தாலும், அவர்களோடு கூட்டுச் சேர அவர் துணியவில்லை. அதே போல, தீண்டத் தகாத கட்சியாக புறக்கணிக்க, வெறுக்கத்தக்க கட்சி யாக காங்கிரஸ் கட்சியை நாம் கருத வேண்டும். அந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு ஊட்ட வேண்டும். (கைதட்டல்) தொடர்ந்து, நமக்கு துரோகமே செய்து வந்திருக்கிற கட்சி, காங்கிரஸ். நமது உரிமைகளைப் பறித்தவன் யார்? ஈழத்தில் தமிழ்மொழி உரிமையை சிங்களன் பறித்தான் என்றால் - இங்கே நமது மொழி உரிமையைப் பறித்தது யார்?

கடந்த நாடாளுமன்ற இறுதிக் கூட்டத்திலேகூட 47 உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, மாநிலங் களவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். மக்களவையில் நிறைவேற்றுவதற்கு முன்பு, தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஒருவேளை, நாடாளு மன்றத்தில் இனி நிறைவேற்றப்படலாம். தமிழர்களை மட்டுமல்ல, சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குக்கூட, அவர்கள் துடிக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் நமது மாநில உரிமைக்காக காவிரி நீர் உரிமைக்கு வழங்கிய தீர்ப்பைக் கூட அமுல்படுத்த மறுக்கிறார்கள். ஆனால், நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்து கொண்டு நமது கூட்டணியில் இருக்கிறார்களே, எப்படி கண்டிப்பது என்று, கூட்டணி தர்மம் பேசி, காங்கிரஸ் கட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அய்ரோப்பிய நாடுகளில், மனித உரிமையை மிகவும் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில்கூட ஜெர்மனியில் ஹிட்லரைப் பாராட்டிப் பேசினால் குற்றம். இன்று வரை, அதை குற்றமாக வரையறுத்து வைத்துள்ளனர்.

அதுபோல் - தமிழ்நாட்டில் காங்கிரசை ஆதரிப்பது குற்றம் என்ற மனப்பான்மை நமக்கு வரவேண்டும். அதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இப்போது காங்கிரஸ்காரனைவிட நமது ‘அகில இந்திய’ திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஒருமைப்பாடு பேசுகிறது. கலைஞர் எல்லாம், இப்போது நமக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்கு கூட அறிவுரை கூறுகிறார். தனி ஈழம் எல்லாம் வேண்டாம். அதை எல்லாம் கைவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஏனென்றால், தி.மு.க. - அந்தக் கொள்கை எல்லாம் கைவிட்டு விட்டது அல்லவா? எனவே எல்லோருமே கொள்கைகளை கைவிட்டுவிட்டால், மக்கள் கொள்கைகளைப் பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள் அல்லவா?

ஆனால், அறிவு மிக்க இளைஞர்கள் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டார்கள். முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் அரசியல் தலைவர்களையெல் லாம் நம்பாதீர்கள் என்று எழுதி வைத்துவிட்டுப் போனார். எனவே பல இளைஞர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி முத்துக்குமார் பெயரில் இயக்கங்களைத் தொடங்கி வருகிறார்கள். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி - முத்துக் குமார் மன்றம் தொடங்கியிருப்பதாக திருப்பரங் குன்றத்தில் தோழர்கள் என்னிடம் கூறினார்கள். கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு நமது உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத மடை யர்களாக இனிவரும் இளைஞர் சமூகம் இருக்காது; இருக்கவும் கூடாது. கட்சியில் இருப்பதற்காகவே கட்சியின் கொள்கை துரோகங்களுக்கு துணை போய்க் கொண்டு, உணர்வுகளையேகூட வெளிப் படுத்தாது இருக்க வேண்டுமா?

இந்த மாநிலக் கட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்கள் மசோதா நிறைவேற்றினாலும் கூட, டெல்லியில் உள்ளவர்கள் ஒப்புதலைத்தான் பெற வேண்டும். பதவிக்குப் போகிறவரை கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கெள்கையைக் கைவிடுகிறோம் என்பார்கள். இதைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தக் கட்சிகளை வழிநடத்துகிற சக்திகளாக நாம் மாறவேண்டும்.

அகில இந்தியா பேசுகிற கட்சிகள்கூட வேறு மாநிலத்தில் எப்படி செயல்படுகிறான்? கருநாடகத்தில் அகில இந்தியாவைப் பேசும் கட்சிகள் தான் இருக்கின்றன. ஆனால், அவன் தனது மாநிலத்திற் காகத்தான் குரல் கொடுக்கிறான். கருநாடகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கட்சியின் பெயரில் அகில இந்தியா என்று இருக்கும். ஆனால் அவன் தனது மாநிலத்துக்காகத்தான் குரல் கொடுக்கிறான். தி.மு.க.வின் பெயரில் அகில இந்தியா இல்லை. ஆனால் அக்கட்சியின் சிந்தனை அகில இந்தியாவாகி விட்டது. இதுமட்டுமல்ல, சர்வ தேசியம் பேசுகிற கியுபா போன்ற நாடுகள் கதை என்ன? குறைந்த பட்சம், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கண்டனமாவது தெரிவித்திருக்கக் கூடாதா?

வியட்நாமில் மைலாய் எனும் கிராமத்தில் 148 பேரை குண்டுவீசி, அமெரிக்க படை கொன்றது. அதற்கு அமெரிக்க நாட்டிலேயே கொந்தளிப்பு எழுந்தது. அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று வீதிக்கு வந்து போராடினார்கள். வியட்நாமிலிருந்து அமெரிக்கப்படை விலகுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த ஆத்திரம் நமக்கு வந்ததா? நமது நாட்டுப் படை அமைதிப்படை என்ற பெயரில் இங்கிருந்து போய் கொன்றதே. 64000 பேரைக் கொன்றதாக, கணக்கு 70000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். 148 பேரைக் கொன்றதற்காக ஒரு ஆதிக்க நாட்டுக்காரன் நாட்டில் அவன் நாட்டிலேயே மக்கள் போராடியபோது நாம் 70000 மக்களைக் கொன்றதற்காக என்ன போராட்டத்தை நடத்தினோம்? அந்த அமைதிப் படையில் தளபதிகளாக இருந்தவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் மேத்தா, ஹர்கரந்த்சிங் போன்றவர்கள் எல்லாம் தாங்கள் சொன்னதை இந்தியா கேட்கவில்லை என்று பேசுகிறார்கள். புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார்?

இப்போது ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பேசுகிறார்களே. அந்த ஒப்பந்தத்தை முறையாக அமுல்படுத்து என்று வலியுறுத்திதான், திலீபன் உண்ணாவிரதம் இருந்தான். இப்போது அந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசும் காங்கிரசார், அப்போது, திலீபன் உண்ணாவிரதத்தை ஆதரித்து அல்லவா இருந்திருக்க வேண்டும்? திலீபனை போய் பார்ப்பதற்குக்கூட இந்திய அரசு அங்குள்ள இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதற்கு உத்தரவிடவில்லை.

இங்கேயும், நமது நாட்டிலும், என்ன நிலைமை? மக்கள் ரேஷன் கிடைக்கவில்லை, தண்ணீர் லாரி வரவில்லை என்று போராடினால், அதில் தொடர்புடைய அதிகாரிகளா வருகிறார்கள்? காவல்துறையைத்தான் எந்தப் போராட்டமானாலும் கைது செய்வதற்கு அனுப்புகிறான். தொடர்புடைய அதிகாரிகள் வருவது இல்லை. குடிமை உரிமைகளுக்கான போராட்டங்கள் நடக்கும்போது அதிகாரிகளோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. எல்லாவற்றுக்கும் காவல்துறைதான் வரும். மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், அதை காவல்துறை தான் தீர்த்து வைக்கும் என்று அரசு செயல்படுகிறது. இதை நாம் எதிர்க்காதவரை, அரசு இதைத் தானே செய்யும்? இந்தப் போராட்ட உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளாமல், வெறும் ரசிக மனப்பான்மையோடு விடுதலைப் புலிகளைப் பாராட்டிக் கொண்டு குதிரைப் போட்டிக்கு பந்தயம் கட்டுகிறவனைப் போல் நாம் நமது வேட்கையை வளர்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

ஈழத் தமிழினம் போராட்டத்துக்கு தயாராகிவிட்ட இனம். தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற இனம். அந்தப் போராட்ட உணர்வு இன்றும் குன்றாமல் அவர்களிடம் இருக்கிறது. எனவே அவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவார்கள். தங்களுக்கான உரிமையுள்ள ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு விடுவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம்? நமது குரலுக்கு செவி சாய்க்காத அரசோடு நாம் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா அல்லது இணைந்திருக்க முடியுமா என்பதுபற்றி சிந்திக்கக்கூடத் தயங்கினோம் என்றால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டுமே, ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கான விடையாய் உங்களிடம் விட்டு விடைபெற விரும்புகிறேன்.

நன்றி: கொளத்தூர் மணி

அமெரிக்காவிடமிருந்து இந்தியா கற்க மறுக்கும் பாடம்

"Too Big to Fail " இது தான் அமெரிக்கர்கள் அனைவராலும் வெறுப்பாக பேசப்படும் பாடம். "Too Big to Fail" என்றால் என்ன? கடந்த எழுபது ஆண்டுகளாக அவ்வப்போது நடைபெற்ற பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்க வங்கித் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வங்கிகளை எல்லாம் ஒரு சில வங்கிகள் முழுங்கி விட்டன. அதன் விளைவு தற்போது அமெரிக்காவில் மூன்று மாபெரும் வங்கிகளும் சில சிறிய வங்கிகளும், பல மிக சிறிய வங்கிகளும் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அமெரிக்காவில் மூன்று வங்கிகள் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேற்பட்ட சேமிப்புகளை வைத்துள்ளன. அதன் விளைவு - இந்த மூன்று வங்கிகளில் ஒன்று வீழ்ந்தாலும் அமெரிக்கப் பொருளாதாரமே நிலை குலையும் நிலையில் உள்ளது. எனவே மிக பெரிய வங்கிகள் விழவே கூடாது (Too big to fail) என்ற நிலை ஏற்பட்டது. அதை நன்கு உணர்ந்த பெரிய வங்கிகளும் பொறுப்பில்லாமல் பெரிய அளவில் ஆபத்தான முடிவுகளை குறுகிய கால அதிக லாபத்துக்கு எடுக்கத் தொடங்கின. நீண்ட கால அளவில் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், நட்டத்திலிருந்து அரசாங்கம் தங்களை காத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன. அமெரிக்க அரசாங்கமே பெரிய வங்கிகளின் கட்டுப்பாட்டில் வந்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Indian Bank இதிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள மறுக்கும் பாடம் என்ன என்று கேட்கிறீர்களா? இந்தியாவின் வங்கித் துறையில் அரசுத் துறை வங்கிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. அரசுத் துறை வங்கிகளும் ஒன்றாக இல்லாமல் பலவாக உள்ளன.

தற்போதைய மத்திய அரசோ அனைத்து அரசுத் துறை வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்றும் அரசுத் துறை வங்கிகளில் தனியாரின் (முக்கியமாக தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கும் மேல் நாட்டு வங்கிகளின்) முதலீட்டை அதிகரித்து சிறிது சிறிதாக முடிவில் அவர்களிடமே விற்று விடவும் முயற்சி செய்கிறது. (அதை உடனே நிறைவேற்றா விட்டால் கூட அது தான் அரசின் அனுகுமுறை என்று பலமுறை கூறப்பட்டுள்ளது) அதற்கு அரசு கூறும் முக்கிய காரணம் வங்கிகளை நடத்தும் செலவைக் குறைத்து பல வங்கிகளின் கிளையை மூடி லாபத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே.

இதனால் ஏற்படும் விளைவுகளை இப்போது பார்ப்போம்:

1. சிறு சிறு வங்கிகளை ஒன்றிணைத்து பெரிய வங்கிகளாக ஆக்குவதன் மூலம் ஒவ்வொரு பெரிய வங்கியும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மிக அதிகமாகும். ஒரு வங்கியின் தலைவர் தவறு செய்பவராக இருந்து அதன் மூலம் அந்த வங்கி வீழும் நிலைக்கு தள்ளப்பட்டால், அந்த வங்கியை காப்பாற்றுவது என்பது அரசுக்கு மிக பெரிய சுமையாகவும், அதே சமயத்தில் அதைக் காப்பாற்றியே ஆக வேண்டிய நிலைக்கும் தள்ளபடும். அதுதான் அமெரிக்காவில் தற்போது நடக்கிறது. இதுவே சிறிய வங்கியாக இருந்தால் அதன் தாக்கம் சிறிதாக இருப்பதாலும் அதைக் காப்பாற்ற அரசுக்கு ஆகும் செலவும் குறைவாக இருக்கும். உதாரணமாக இந்தியன் வங்கி கோபால கிருஷ்ணனின் தலைமையில் பல்லாயிரம் கோடி நட்டமடைந்து மூடும் நிலைக்கு வந்தபோது அதை அரசால் காப்பற்ற முடிந்தது. அதுவே பல வங்கிகளை ஒன்றிணைத்த பெரிய வங்கியாகி வீழும் சூழ்நிலை ஏற்பட்டால் அதைக் காப்பாற்ற பல லட்சம் கோடி தேவைப்படும். இதுவே அமெரிக்காவாக இருந்தால் மிகக் குறைந்த பின் விளைவில் பல்லாயிரம் கோடி ரூபாய் அச்சிட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் அமெரிக்க டாலர் இப்போது உலக சேமிப்பு நாணயமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் நிலை அப்படி இல்லை என்பதால் அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும். (பொதுத் துறை வங்கி என்று இல்லை, பெரிய தனியார் துறை வங்கி வீழ்ந்தாலும் அரசு காப்பாற்றித் தான் ஆக வேண்டும்). வங்கிகளின் நடவடிக்கையை முழுமையாக நெறிமுறைப்படுத்துவது என்பதும் தற்போது நடைமுறையில் சாத்தியம் இல்லாத செயல்.

2. சிறு வங்கிகளை ஒன்றாக்குவதால் முதலில் மூடப்போவது கிராமப்புறங்களைச் சேர்ந்த வங்கிகளைத் தான். இதன் விளைவாக ஏழை விவசாயிகள், சுய தொழில் தொடங்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் போன்றோர் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவர். தற்போதைய உலகமயமாதல் சூழ்நிலையில் இது போன்ற மிகப் பெரிய வங்கிகள் பெரிய கார்ப்பொரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்து லாபம் செய்ய முனைவர்.

3. ஒவ்வொரு வங்கியும் நாட்டின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு பார்த்தால் இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தமிழகத்தில் அதிக அளவு கவனம் செலுத்துகிறது. அதன் தலைமையகமும் தமிழ் நாட்டில் உள்ளது. அது தமிழகத்தில் உள்ளவர்களின் தேவையை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்ற சேவையை வழங்குகின்றது. இந்தியன் வங்கியை மற்ற வங்கியுடன் சேர்த்தால் இந்த தனித்தன்மை முழுமையாக பாதிக்கப்படும் (முழுமையாக அழியாவிட்டால் கூட பாதிப்பு அதிகம் இருக்கும்). பின் வரும் காலங்களில் வங்கிக்கு வரும் அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அந்த வங்கியின் கவனிப்பு இருக்கும் இடமும் மாறிப் போக வாய்ப்புள்ளது.

4. அதிகாரப் பரவலாக்கத்தின் (Decentralization) மூலம் தான் எந்த ஒரு துறையின் செயல்பாட்டின் திறனையும் அதிகரிக்க முடியும் என்பது இத்தனை நாள் அனுபவத்திலிருந்து கிடைத்த உண்மை. தற்போது வங்கிகள் அதிகார பரவலாக்கத்தோடு நன்கு செயல்பட்டு வருகின்றன. வங்கிகளை ஒன்றிணைப்பது மூலம் அதிகாரப் பரவலாக்கம் என்பது மாறி அதிகரம் ஒருமுனைப்படுத்தப்பட்டு அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.

5. வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியின் ஆணிவேர். அதை குறுகிய லாப நோக்கம் கொண்ட பன்னாட்டு தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தால் இன்று அமெரிக்கா அடைந்த நிலையை இந்தியாவும் அடையும்.

6. பன்னாட்டு வங்கிகள் சமூகத்தில் பின் தங்கியவர்களின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட போவது இல்லை. அவர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததிற்கு வங்கிகளின் பங்கு முக்கியம். தற்போதைய வளர்ந்து வரும் மக்கள் தொகை சூழ்நிலையில், விவசாய உற்பத்தியைப் பெருக்க வங்கியின் சேவை மிகவும் தேவை இக்கணம். மத்திய அரசின் தற்போதைய முயற்சியால் அது தடைபெற அதிக வாய்ப்புள்ளது.

இதை உணர்ந்து மத்திய அரசாவது ஒரு சில தனிப்பட்டவர்களின் நன்மையைப் பார்க்காமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.


ஏழை நாடுகளுக்கு outsource ஆகும் விவசாயம்

அவுட் சோர்ஸிங் என்பது உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் காலமிது. விவசாயம் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? விவசாயமும் தற்போது ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் ஆக தொடங்கி உள்ளது. மற்ற துறைகளில் அவுட் சோர்ஸிங் என்றால் வளரும் நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு என்று ஒரு சில பயன்கள் கிடைக்கும். ஆனால் விவசாயம் அவுட் சோர்ஸ் செய்யப்படுவதால் ஏழை நாடுகள் மிகப் பெரிய பட்டினி சாவிற்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

Paddy land சோமாலியா, சூடான் போன்ற நாடுகள் பற்றி கேள்விப்பட்டாலே நம் அனைவரின் கண் முன்னாலும் நிற்பது அந்நாட்டு மக்கள் பட்டினியில் வதைபடுவது பற்றி நாம் பார்த்த புகைப்படங்களாகத் தான் இருக்கும். அவ்வாறு பஞ்சத்தில் வாழும் நாடுகள் உணவுப் பொருட்களை சீனா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள் என்றால் ஆச்சிரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை!

உலக மக்கள் தொகை இன்று இருப்பதைவிட 2050ல் ஐந்து பில்லியன் உயரக்கூடும். ஆனால் விவசாய நிலமோ அதற்கேற்ப உயர சாத்தியம் இல்லை. தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நாளை உணவுப் பொருளுக்கும் வரக் கூடிய சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. இன்று அரபு நாடுகளிடம் பெட்ரோடாலர் பணம் அதிகம் குவிந்துள்ளது. சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலவாணி குவிந்துள்ளது. இந்த இரண்டு வகை நாடுகளும் வருங்காலத்தில் தனது மக்களின் உணவுப் பொருட்களுக்கான தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் கட்டாயத்தில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க மறுபுறமோ முதலீடுகளுக்கு வழி இல்லாமல், நல்ல இயற்கை வளங்கள், ஊழல் எதேச்சதிகார ஆட்சியாளர்களைக் கொண்டு, அவ்வப்போது பஞ்சத்தில் வாடும் ஏழை ஆப்ரிக்க நாடுகளும், ஒரு சில ஆசிய நாடுகளும் உள்ளன.

இவ்வகை நாடுகளிடம் அன்னிய முதலீட்டு கையிருப்பும் மிக குறைவு. அதன் விளைவு

1. உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகள் ஏழை ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் பணத்தை முதலீடு செய்கின்றனர். மிக அதிக அளவில் நிலங்களை வாங்கிக் குவித்து அல்லது நீண்ட கால குத்தகைக்கு எடுத்து, சிறு மற்றும் குறு ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி தங்கள் நாடுகளுக்குத் தேவையான உணவை நவீன விவசாயம் செய்து இறக்குமதி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

2.தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் நிதித் துறையில் பெரும் லாபம் குறைவதாலும், உணவு பொருளின் விலை ஏற்றத்தாலும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களும் ஏழை நாடுகளின் விவசாயத்தில் அதிக முதலீடு செய்து பெரும் லாபம் பார்க்க முனைகின்றனர். இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்து வறுமையின் பிடிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவது வரலாற்றில் புதிது அல்ல. அமெரிக்கா செவ்விந்திய மக்களிடமும், ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடமும் ஐரோப்பியர்கள் நிலத்தைப் பிடுங்கியது வரலாற்று செய்தி. ஆனால் இன்று ஏழை நாடுகளிடம் மீண்டும் நிலத்தைப் பிடுங்கும் அவல நில உலகெங்கும் நடக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் பத்திரிக்கைகளில் பெரிய அளவு இந்தச் செய்தி வெளியாவது இல்லை.

சமீபத்தில் தென் கொரிய நிறுவனம் மடகாஸ்கர் நாட்டின் பாதி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து தென் கொரிய நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் இட்டது. அந்நாட்டு மக்கள் புரட்சிக்குப் பின் இத்திட்டம் கை விடப்பட்டது. இது போன்ற செயல்களில் முக்கியமாக இறங்கியிருக்கும் நாடுகள் சீனா, கொரியா, ஜப்பான், அரபு நாடுகள் மற்றும் சில மேலை நாடுகள். இந்தியாவைச் சேர்ந்த கம்பெனிகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளன. இந்தியக் கம்பெனிகள் மடகாஸ்கரில் நெல், கோதுமை மற்றும் பயிறு வகைகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இவ்வகை வியாபரத்தில் சீனாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியாலும், தொழிற்மயமாதலாலும் விவசாய நிலம் குறைந்து வருகிறது. சீனா தன் வருங்கால விவசாயத் தேவையை பூர்த்தி செய்ய ஆப்ரிக்க (காங்கோ, சாம்பியா, சூடான், சோமாலியா என பல நாடுகள்), தென் அமெரிக்க, ரஷ்யா, பாக்கிஸ்தான் என பல நாடுகளில் பெருமளவு நிலத்தை வாங்கி குவித்து வருகிறது. இனி வரும் காலங்களில் சீனா சுமார் ஒரு மில்லியன் சீன விவசாயிகளை ஆப்ரிக்க நாடுகளில் விவசாயத்துக்காக குடி அமர்த்தப் போவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன.

அது போல் அரபு நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயம் செய்ய அதிக செலவு ஆவதாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் தங்கள் வருங்கால உணவுத் தேவையை சரி செய்ய பாக்கிஸ்தான், கம்போடியா, பிலிபைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் பெருமளவில் நிலங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கம்போடியா நாட்டில் குவைத், கத்தார் போன்ற நாடுகள் சுமார் 125,000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு வாங்கி உள்ளது.

தற்போதய நிதி நெருக்கடியால் மற்ற துறைகளில் லாபம் குறைவதாலும், விவசாயப் பொருட்களின் விலை ஏற்றத்தாலும் பெரும்பாலான மேலை நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இது போல் பெரிய அளவு ஏழை நாடுகளில் விவசாய நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்

இதனால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் நன்மைகளாக கூறப்படுபவை

1. ஏழை நாடுகளிடம் விவசாயத்தில் முதலீடு செய்ய அதிக பணம் இல்லாததால் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி தேவையான இடு பொருட்களை இட்டு அதிக உற்பத்தியைப் பெருக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இவ்வகை முதலீடுகளால் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக அளவு உற்பத்தியை ஏற்படுத்த முடியும்.

2. பல நாடுகளில் அதிக அளவு விவசாயம் செய்யும் நிலங்கள் இருந்தாலும் முதலீடு இல்லாததால் அவற்றை அந்நாட்டு மக்கள் விவசாயம் செய்வதில்லை. இது போன்ற வெளிநாட்டு முதலீடு மூலம் அந்த நிலங்களில் விவசாயம் செய்து உற்பத்தி பெருக்கம் செய்யலாம்

3. வெளிநாட்டினர் முதலீடு செய்யும்போது அவர்கள் நல்ல சாலை, சேமிப்புக் கிடங்கு, துறைமுகம் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவர். அதைப் பயன்படுத்தி ஒட்டு மொத்த நாடே வளர்ச்சி அடையும்.

4.பெரும்பாலான நாடுகள் ஏழை நாடுகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுக்கும் போது அந்நாடுகளில் நல்ல மருத்துவமனை கட்டி தருவது, கல்வி நிறுவனங்கள் அமைப்பது போன்ற வளர்ச்சிப் பணியில் அதிக கவனம் செலுத்த உறுதி அளித்துள்ளனர்.

5.ஏழை நாடுகளில் இது அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும்.

இந்த நில பிடுங்கல் ஏழை நாட்டு மக்களுக்கு தீமையை ஏற்படுத்தும் காரணங்கள்

1. நிலத்தை விற்கும் ஏழை நாடுகள் இது போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அவர்களுடைய நன்மையை ஒப்பந்தத்தில் சேர்க்கும் அளவு பேசுவதற்கு ஏற்ற உயர்ந்த நிலையில் (bargaining power) இல்லை. அதாவது அவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டைக் கவர எதற்கும் அவர்கள் ஒத்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும் இது போன்ற நாடுகளின் உயர்மட்டத்தில் ஊழல் அதிக அளவு இருப்பதால் விவசாயிகளின் நன்மைக்கான சரத்துகளை ஒப்பந்தத்தில் சேர்ப்பது கேள்விக்குறியே.

2. லாப நோக்கில் பெரிய அளவில் இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு பெரிய அளவில் இயந்திரங்கள் கொண்டு விவசாயம் செய்யப்படும்.

3. சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் இழந்து விடுவர். அதே நேரம் இயந்திரமயமான விவசாயம் செய்யப் போவதால் நிலம் இழந்த அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம்.

4. ஏற்கனவே இந்த நாடுகளில் அவ்வப்போது பஞ்சமும் பட்டினியும் காணப்படுகிறது. இனி பெரும்பாலான உணவு பொருட்களை விளைவித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதால் இது போன்ற பஞ்சத்தின் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும்.

5. ஒப்பந்தத்தால் பயிரிடப்படும் பயிர்கள் பெரும்பாலான நாடுகளில் அந்த நாட்டினரால் விரும்பி உண்ணபடுவது இல்லை. அதனால் இந்தப் பயிரினால் உள்நாட்டு மக்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது.

6, அந்நாடுகளில் பாரம்பரிய வகையில் செய்யப்படும் விவசாயமும், பாரம்பரிய பயிர் வகைகளின் பன்முகமும் (crop diversity) அழிக்கப்படும்.

7. நவீன விவசாயத்தால் சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்படைவதுடன், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் அதிக அளவு அழிக்கப்பட வாய்ப்புள்ளது

8. வேளாண் இடு பொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை அதிக அளவு இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

ஏழை நாடுகளுக்கு முதலீடு அதிகம் கிடைத்தாலும் அதனால் பயனடையப் போவது அங்கு பெரும்பான்மையாக இருக்கும் ஏழை விவசாயிகளாக இருப்பது சந்தேகமே.

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய சிறு மற்றும் குறு விவசாயிகள் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அரசு அந்நிய செலவாணி கிடைக்கும் என்பதால் நம்ப ஊர் நிலங்களையும் பெரிய பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி: சதுக்கபூதம், (sathukapootham@yahoo.com)

அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை?

ndia’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்றவை இருப்பதுடன் அதிகம் செலவழிக்கும் மன போக்கு இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ளனர்.

Youth in US வருங்காலத்தில் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை பெருகப் போவதுதான். அங்கு 2050ல் இரண்டு பேர் வேலை பார்த்தால் ஒருவர் பென்ஷன் வாங்குபவராக இருப்பார். பத்தில் ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார். கீழே உள்ள புள்ளிவிவரத்தை பார்த்தால் இது பற்றிய விவரம் உங்களுக்கு புரியும்.

15 முதல் 59 வயது வரை உள்ள மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 2050 வரை இந்தியாவில் இந்த மாற்றம் மிக குறைவாகவே இருக்கும். இந்தியாவின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொண்டால் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

மேல் நாட்டு பன்னாட்டு கம்பெனியின் முக்கிய சந்தையாக அமெரிக்கா இது வரை இருந்து வந்தது. மக்கள் தொகை பெருக்கம் குறைவால் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் வளர்ச்சிக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போது அதிக இளைஞர்களை கொண்ட வளரும் நாடுகளாக இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். எனவே இந்தியாவின் வளரும் மத்திய தர மக்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியின் அச்சாணியாக இருக்கப் போகிறார்கள்.

பொருட்களின் மதிப்பிற்கும் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வித்தியாசம் அதிகரிக்கப்படும். ஏனென்றால் மேலை நாடுகளில் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை குறையப் போவதால் உற்பத்தி இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு விடும். உலக வர்த்தக நிறுவனம் மூலம் பொருட்களுக்கான உரிமமுறை (patent) உலகெங்கிலும் கடுமையாக பின்பற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கான விலையும் லாபமும் அதிகரிக்கப்படும். (அவுட்சோர்சிங் மூலம் உற்பத்தி செலவு கணிசமாக குறைக்கப்படும்). அதற்காக தான் உலக வர்த்தக பேச்சுவார்த்தையை மேலைநாடுகள் துரிதப்படுத்துகிறது.

அடுத்ததாக வேகமாக குறைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரளவாவது அதிகரிக்க வேண்டும். நல்ல தரமான புதிய தொழிலாளர்கள் உலக சந்தையில் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி மிகவும் தேவை. அப்போது தான் நல்ல தரமான தொழிலாளர்கள் இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுவர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் காரணமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவை சிறிது குறைந்து இருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும் போது வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையும் அதிகமாகும். தற்போது அமெரிக்க மக்கள் தொகை பெருக்கத்தில் 40 சதவிதம் புதிதாக வெளிநாடுகளிருந்து வரும் தொழிலாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்கு இந்திய மத்திய வர்க்கத்தின் வளர்ச்சியின் தேவைக்கான முழு காரணமும் உங்களுக்கும் இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி: சதுக்கபூதம், (sathukapootham@yahoo.com)

இந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்


தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மின்சாரம் எப்பொழுது வருகிறது என்கிற தகவலை ஏறக்குறைய அனைவருமே கச்சிதமாய் தெரிந்து வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை ஏற்றுவது முதல் சிறுவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, எல்லாமே அட்டவணையாக மாறிப் போனது. ஏதோ சென்னை போன்ற நகரங்களுக்கு இதில் விதிவிலக்காக கொஞ்சம் இரக்கம் காட்டப்படுவதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொது மக்கள் முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடும் விவாதங்கள் வரையிலும், பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சூழல் வரையிலும் அனைத்திற்கும் ஒரு விஷயமே காரணம். அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.

Koodankulam இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று, "இந்த ஒப்பந்தம் அடிமைத்தனமானது, இந்திய நலன்களும், உரிமைகளும் அமெரிக்க அடகுக் கடையில் அடமானம் வைக்கப்பட்டு விட்டன' என்று பேச முயன்றால் உடனே பலரிடமும் கிடைத்தது ஒரே பதில்தான்: “ஏங்க அப்ப மின்சாரமே உங்களுக்கு வேண்டாமா? நாட்டையே இருட்டாக வச்சிருக்கலாமுனு நினைக்கிறீங்களா? மின்சாரம் இல்லைனா எப்படி தொழில் பெருகும்-நாடுன்னா வளர்ச்சி வேண்டாமாங்க?'' அணு உலைகள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கும் கனவு, இன்று சாமானியர்கள் வரை எட்டியுள்ளது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

இன்னும் ஒருபடி மேலே சென்று, “அட இந்த அணு உலை எல்லாம் வெறும் முகமூடி தாங்க. உண்மையான நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதற்கான கச்சா பொருள் தயாரிப்புதாங்க'' என்றால் அதற்கும் உடனே பதில் வரும்: “என்னங்க நாடுன்னா அணு ஆயுதம் வேண்டாமா? அணுகுண்டு வச்சிருந்தாதான் நாலு பய நம்ம நாட்ட மதிப்பான், பயப்படுவான்.'' இது, சாமானியரின் குரல் என்றால், வேறு ஒரு முக்கிய நபரின் வாக்குமூலத்தையும் கேளுங்கள். மும்பை தாக்குதல்கள் நிகழ்ந்து நாடு ஒருவித கொதி நிலையில் இருந்த சம காலத்தில் பத்திரிகை பேட்டியாக இது அளிக்கப்பட்டது : “பாகிஸ்தானுடன் இன்றைய சூழ்நிலையில் போர் ஏற்பட்டால், அது கண்டிப்பாக ஓர் அணு ஆயுதப் போராகவே இருக்கும். பேய்களை ஒழிக்க வேறு வழி இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த பேரழிவுக்குப்பின் ஒரு புதிய உலகம் மலரும். அது மிகவும் அற்புதமாகத் திகழும். அங்கே தீயவர்கள், தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள்.'' இது வேறு யாரும் இல்லை, ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பின் "சர்சங்சலக்' கே.எஸ். சுதர்சன் அளித்துள்ள பேட்டி.

1948 இல் அணு சக்தி கழகம் அமைக்கப்பட்டது. அது பின்னர் 1954இல் அணு சக்தித் துறையாக உயர்வு பெற்றது. அது முதல் அணு ஆற்றலை நன்மைக்கும் அமைதிக் கும் பயன்படுத்துவது என்கிற நோக்குடன் தன் பணியை அக்கழகம் தொடங்கியது. 1987இல் இத்துறை சார்பில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம் என்ற முழக்கம் பெரிதாக ஒலித்தது. 2000 ஆம் ஆண்டில் அது 45 ஆயிரம் மெகா வாட்டை எட்டிப் பிடிக்கும் என திருத்தப்பட்டது. இப்பொழுது அது மீண்டும் புதிய ஒப்பனையுடன் 2020 இல் 20 ஆயிரம் மெகாவாட் என்று கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 90 ஆயிரம் மெகாவாட். இதில் அணு உலைகளிலிருந்து பெறப்பட்டவை வெறும் 1840 மெகாவாட் மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது 2 சதவிகிதம் மட்டுமே. 2000 இல் அது 3 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது 14 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஓர் உலை கூட அதன் அடைவு நிலையை எட்டியதில்லை. தாராப்பூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா ஆகிய இடங்களில் தலா இரண்டு அணு உலைகளும் ராவத்பாட்டாவில் நான்கு உலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தான் அடைவு நிலையை எட்ட இயலவில்லை என வெளிப்படையாகவே முன்னாள் கப்பற்படைத் தளபதி டாக்டர் பி.கே. சுப்பாராவ் தெரிவிக்கிறார். நாம் மிக எளிதாக இன்று அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மற்றும் காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவையும், அதற்கு அரசு செய்யும் செலவையும், அணு உலைகளுக்கும் அரசு செலவிட்டுள்ள பெருந்தொகைகளுடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். அணு உலைகளுக்காக மத்திய அரசு கணக்கிட முடியாத அளவுக்கு அரசு வருவாயை இழந்துள்ளது. இப்பொழுது அவர்கள் 2020 இல் 20,000 மெகாவாட் என்று சொல்லும்போதுகூட அதற்கான செலவை அறிவிக்க மறுக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் அதனை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்.

இத்தனைப் பெரும் தொகையை அரசால் இன்று ஒதுக்க இயலாது என்பதற்காகவே 1962 இல் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தை இப்பொழுது ஒரு பெரிய குழு திருத்தம் செய்யும் வேலையில் இறங்கி யுள்ளது. இந்தத் திருத்தம் மிகவும் ஆபத்தான நோக்கம் கொண்டது. முதன் முறையாக அணு உலைகள் அமைப்பதில் தனியாருக்கு அனுமதியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. பிரான்சின் அர்வேரா (அணூதிஞுணூச்) நிறுவனம், மகாராட்டிர மாநிலத்தின் ஜைத்தா பூரில் ஆறு அணு உலைகளை அமைக்க இருக் கிறது. அந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் சொந்தமான யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. கூடங்குளத்தில் மொத்தம் 8 அணு உலைகள் அமைக்க ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஹரிப்பூரில் அமெரிக்க நிறுவனம் அணு உலைகள் அமைக்க இருக்கிறது. இவை தவிர குஜராத்தில் மீதிவிதீ, ஒரிசாவில் பிட்டீ சொனாப்பூர், ஆந்திராவில் கோவாடா, மகாராட்டிரத்தின் மாத்பன் என இந்தியாவில் திரும்பிய பக்கம் எல்லாம் இனி அணு உலைகள்தான். மேற்குலக நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவை அனைத்தையும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

இத்தனை அணு உலைகளை அமைக்கும் அதே வேளையில், இவை அனைத்தையும் எத்தகைய ஜனநாயக நடைமுறையையும் பின்பற்றாமல், ஒரு சர்வாதிகார நடைமுறையில் மிகத் துரிதமாக அதிகார வர்க்கம் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இதில் அரசியல் கட்சிகள் முதல் அப்பகுதி பொது மக்கள் வரை எவரும் ஆலோசிக்கப்படுவதில்லை. மக்கள் கருத்தாய்வு என்கிற நடைமுறைகள் கூட காவல் துறையின் தடிகளின் நிழலில் நடத்தப்படும் நாடகமாக மாறிப் போய் விட்டன. சுற்றுச் சூழல் மதிப்பாய்வு அறிக்கை என்பதுகூட, நாடாளுமன்றம் முதல் சாமானிய மக்கள் வரையிலும் நாட்டில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த அணு உலைகள் குறித்த சாதாரண தகவல்களைக்கூட நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அத்தகைய ஆபத்தான சட்டமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இந்த 1962 அணு சக்தி சட்டம் விளங்குகிறது.

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாத சூழலில், மக்கள் இந்த தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. அதனை அவர் களுக்கு அளிப்பது அரசின் ஜனநாயகக் கடமையே அன்றி வேறு அல்ல. இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இப்படியான விஷயங்களில் எந்த அக்கறையும் இல்லை. இடதுசாரிகளைப் பொருத்த வரை, அவர்கள் அணு ஆயுதத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் அணு உலைகள் அமைப்பதை ஆதரிக்கிறார்கள். இருப்பினும் அணு உலையை ஆதரிக்கிறவர்கள் கூட, அந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக வாழ்பவர்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் தலையிடாதது பெரும் முரண்பாடாகவே இருக்கிறது.

கடற்கரை ஒழுங்குச் சட்டம், கடற்கரைப் பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் பகுதிக்குள் மனிதர்கள் வசிப்பது, வணிக நடவடிக்கைகள் என அனைத்தையும் அது தடை செய்தது. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக, தமிழகத்தில் இரு உலைகளும் கடற்கரை அருகிலேயே அமைந்துள்ளன. இப்பொழுது அமையவிருக்கும் பல அணு உலைகளும் இதே வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரை சார் சட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. கடல் சார் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மேல்தட்டு மக்களுக்கும் சொகுசான தங்கும் விடுதிகள், கேளிக்கைத் தளங்கள் அமைப்பது என பெரும் அநீதி அரங்கேறி வருகிறது. மேலும், கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள மோனோசைட், தோரியம், செர்டியம், கார்நெட், ரூடைல், இல்மெனைட் போன்ற தாதுக்களை, கனிமங்களை அறுவடை செய்யும் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

2004இல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்பு மிகக் கொடூரமானது. அதுவும் குறிப்பாக கல்பாக்கம் உலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி எஸ்.பி. உதயக்குமார் "தெகல்கா' வார இதழில் "கதிர் வீச்சு சுனாமி' என்றொரு கட்டுரை எழுதினார். அது, ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் இது குறித்து கவலை தெரிவித்தனர். கல்பாக்கத்தில் செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகு ஆபத்துகளை எல்லாம் உணர்ந்த இந்திய பிரதமர், உடனே அணு சக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கரை விரைவாக கல்பாக்கத்துக்கு அனுப்பினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவசர கதியில் வரவழைக்கப்பட்டனர். ராணுவம் களமிறங்கியது. அங்கிருந்து 15 ஆயிரம் பேர் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 200–300 பேரை காணவில்லை என தகவல்கள் கசிந்தன. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சிலர் கூட அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். கல்பாக்கம் தொலைபேசி நிலையம் மூழ்கிய தால் அனைத்து தொலைபேசிகளும் செயல் இழந்தன. தனியார் கைபேசிகள் மட்டுமே அப்பொழுது இயங்கின.

அங்கு பொதுவாக தரையில் குவிக்கப்படும் மென் கதிர் வீச்சுடைய கழிவுகள் அனைத்தையும் கடல் அலை அடித்துச் சென்று விட்டதாக விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த மென் கதிர்வீச்சு கழிவுகள் நிலத்தடி நீரிலும், கடலில் உள்ள மீன்கள் உண்டு, அதன் வழியாக மனித உடலை கதிர்வீச்சு வந்தடையும். இது, பலவித நோய்கள் முதல் விதவிதமான புற்றுநோய் வரை ஏற்படுத்த காரணமாக அமையும். ஏற்கனவே கல்பாக்கம் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் உள்ள புற்று நோய்கள் குறித்து வி.டி. பத்மநாபன் பல ஆய்வுக் கட்டுரை களை தீவிர கள ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளõர்.

1953 இல் அமெரிக்காவின் அல்பன்-ட்ராயி என்ற இடத்தில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்த அணு உலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் லிட்டர் கதிர்வீச்சுக் கழிவு மிசிசிப்பி ஆற்றில் கலந்தது. அது அந்த ஆற்றின் மொத்த நீளத்திற்கும் படுகைகளை நாசப்படுத்தியது. 1971இல் கூர்க்ஸ் அணு உலை முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இன்றும் கூட உலகில் 10 அணு உலைகளும், 50 அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் கடற்கரைகளில் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளதாக "கிரீன் பீஸ்' அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மறுபுறம் ரஷ்யாவின் செர்னோபில் விபத்து, நவீன வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. 1986 ஏப்ரல் 25 அன்று உக்கிரைன் பிரதேசத்திற்கே ஒரு துயர நாளாக நிலைத்து நிற்கிறது. விபத்து நடந்தவுடன் 93 ஆயிரம் பேர் இறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் ரஷ்யாவில் 60 ஆயிரம் பேரும், ÷பலாரஸ் பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் சடலங்களாக மாறினர். அங்கிருந்து 2000 மைல் தொலைவில் சுவீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மான்கள் செத்து மடிந்தன. மொத்தம் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகள் மனித இனத்திற்கே பல ஆழமான படிப்பிடினைகளை வழங்குகிறது. ஆனால் அரசதிகாரம் மட்டும் இவைகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நாடுகளே பல விபத்துக்களை சந்திக்க நேரும்பொழுது, மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலையைப் பற்றி யோசிக்கக்கூட மனம் தயங்குகிறது. இவற்றின் அடிப்படையில்தான் குறைந்தபட்சமாக பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளையேனும் முறையாக செய்ய வேண்டிய தேவை எழுகிறது.

பொதுவாக, ஓர் அணு உலையின் மய்யக் குவியலிலிருந்து (Stack) 1.6 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை விலக்கல் பகுதி (Exclusion Zone) என்கிறார்கள். இந்தப் பகுதியில் உலை தவிர்த்த வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. அதே போல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாப்பான பகுதி (Sterile zone) என்கிறார்கள். இந்தப் பகுதி மனிதர்கள் வசிக்க லாயக்கற்றது. கதிர்வீச்சு ஆபத்திலிருந்தும் ஒரு விபத்துச் சூழலில் உடனே மக்களை வெளியேற்ற இப்படியான பல பாதுகாப்பு நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இப்படியான எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணு உலையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில்கூட வசிப்பிடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் வழியாக சென்றவர்களுக்கு அது துல்லியமாக விளங்கும். அருகில் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 25 ஆயிரம், இடிந்த கரையின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம். இது தவிர மனவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மந்தைக்காடு புதூர், பரப்பற்× என பல கிராமங்கள் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளன. கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இதில் விவேகானந்தரும் திருவள்ளுவரும் விலக்கல்ல.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அடிமை சாசன ஒப்பந்தத்தால், இனி இந்திய அணுசக்தி துறை தனது தலைமை அலுவலகத்தை வாஷிங்டனுக்கு மாற்றியாகிவிட்டது. கடும் விதிமுறைகளில் இனி நம்மால் உண்மையாகவே ஓர் அணுவைக்கூட அசைக்க இயலாது. இனி ஒரு சிறு அணு சோதனையை நடத்தினால்கூட, மொத்த அணு உலைக்கான எரிபொருளும் நிறுத்தப்படும். கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என பல சுருக்கு கயிறுகள் நம்மை இறுக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்தியா வசம் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் பிரித்துதான் வைக்கப்பட்டுள்ளனவாம். இது தவிர்த்து 1000 அணு குண்டுகளுக்கான கச்சா பொருளை இந்தியா தன் கைவசம் வைத்துக் கொண்டுதான் அணு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அணு ஆயுத அந்தஸ்தை (?) அடைய நாம் எத்தகைய விலைகளை கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் யுரேனிய சுரங்கங்கள் உள்ள பகுதிகள்-சுத்திகரிப்பு ஆலைகள், அணு உலையை சுற்றியுள்ள பகுதிகள் என நாடெங்கும் விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். புற்று நோய், உருச்சிதைந்த குழந்தைகள் பிறப்பது, எந்த அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைவு, குழந்தைகள் வித வித ஊனங்களுடன் பிறப்பது என சகிக்க முடியா துரயங்களும் அவலங்களும் முடிவற்று நீள்கின்றன. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், அணு உலை விபத்து அல்லது கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வரை எவரும் இழப்பீடு வழங்குவதில்லை. அணு தொடர்புடைய அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

இந்தச் சூழலில்தான் 2009 சூன் மாதம் 4, 5, 6 நாட்களில் கன்னியாகுமரியில் ஒரு தேசிய அளவிலான கலந்தாய்வு மற்றும் மாநாடு நடைபெற்றது (National Convention on The Politics of Nuclear Energy and Resistance). இதனை "அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் இயக்கம்' மற்றும் தில்லியில் உள்ள "அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டமைப்பு' இணைந்து ஒழுங்கமைத்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு எதிர்ப்பு இயக்கங்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், போராளிகள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமித்தனர். அணு ஆயுதம், அணு ஆற்றல் தொடர்புடைய பல்வேறுபட்ட விவாதங்கள் நடைபெற்றன. பல கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. யுரேனியம் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது, உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது முதல் கழிவை சுத்திகரிப்பது வரையிலான பல கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகள், நடைமுறை குளறுபடிகள் குறித்து அறிஞர்கள் விவாதித்தனர். கன்னியாகுமரி தீர்மானம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

Nuclear waste கூடங்குளம் அணு உலையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. இலங்கை மற்றும் சில தெற்காசிய நாடுகள் வரை இதன் பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளன. எனவே, முன்னெப்போதைக் காட்டிலும் விழிப்படைய வேண்டிய தருணமிது; அல்லது மறைந்த சூழலியலாளர் அசுரன் கூறியது போல் தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! 

ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கான எரிபொருள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து சாலை வழியே அது கூடங்குளம் அணு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் வரையான இந்தப் பாதை நெடுகே அடர்த்தியான கிராமங்கள் உள்ளன. இவ்வாறு செரிவான யுரேனியத்தை கொண்டு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சாலையின் இரு பக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த யுரேனியம் கொண்டு வரும் வாகனம் செல்லும். இது ஒரு பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து இது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள். பொதுவாக குழந்தைகளை இன்னும் கூட அதிக தொலைவுக்கு கொண்டு செல்வது நடைமுறை. ஆனால் அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை. அந்த வாகனம் நாகர்கோவிலை கடக்கும்பொழுது, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை ஒரு பெரிய வாகனம் என்று பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லோருக்கும் ஒரு நல்ல அளவு கதிர்வீச்சு "டோஸ்' இலவசமாய் கிடைத்ததுதான் மிச்சம்!

மேற்கண்ட இந்த பீப்பாய்களில் உள்ளது எல்லாம் எரிக்கப்பட்ட ஆற்றல் இழந்த யுரேனியம். அணு உலையிலிருந்து வெளியேறிய இவை அடுத்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை கையாளுவதற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் அந்தக் கழிவுகள் ரஷ்யா கொண்டு செல்லப்படும் என்கிறது அணு சக்தி துறை. நடக்குமா?

சுனாமியை விட கொடூரமான கதிர்வீச்சு

காசா நகர், உலகின் மிக அதிசயக் குடியிருப்பு. இது ஏதோ நிலவில் கட்டப்பட்ட ஓர் அபூர்வ குடியிருப்போ, தென் துருவத்தில் விஞ்ஞானிகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளோ அல்ல. இவைதான் இன்று இந்தியாவில் அணு சக்தி துறை எவ்வாறு செயல்படுகிறது; அது எவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்கிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆழிப்பேரலை தமிழகத்தை ஒரு கை பார்த்த பிறகு தங்களின் வாழ்வாதாரங்களை, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்கதியாய் நின்ற லட்சக்கணக்கானவர்களில் இடிந்தகரை கிராமத்து மக்களும் அடக்கம். அதன் பிறகு பல இடங்கள் மாறி இவர்கள் கடைசியாக "காசா' (Churches Auxillary for Social Action - CASa) என்கிற அமைப்பு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளில் குடியேறினார்கள். அங்கு சுமார் 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். இது, திருநெல்வேலி மாவட்ட இடிந்தகரை கிராமத்தை அடுத்து உள்ளது.

அணு உலையின் பயன்பாடுகளை அறியாத ஒன்று மறியா மக்கள், மகிழ்ச்சி பொங்க தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்த வீடுகளில் குடியேறினர். இந்த வீடுகள் அணு உலையின் மய்ய குவியலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளி யில் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியில் (Sterile Zone) மிகவும் அத்தியாவசியம் கருதி கட்டப்படும் கட்டடங்களுக்கு, அணு சக்தித் துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இப்பொழுது கூடங்குளம் கிராமத்தில் மாடி வீடுகள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலில் இந்த திட்டத்திற்கு யார் அனுமதியளித்தனர் என்பது பெரும் கேள்வியாய் எழுந்து நிற்கிறது.

அங்குள்ள மக்களிடம் உரையாடிய போது, அவர்கள் அணு உலை இவ்வளவு அருகில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்கவில்லை. பொதுவாக ஓர் அணு உலை இயங்கத் தொடங்கினால், அதிலிருந்து இடைவிடாது கழிவுகள் பல வழிகளில் வெளி யேறிய வண்ணம் இருக்கும். இந்த ஆண்டு (2009) இறுதியில் கூடங்குளத்தின் முதல் அணு உலை இயங்கத் தொடங்கும் பொழுது, அது ஒவ்வொரு நொடியிலும் 130,000,000,000,000 கதிர் வீச்சுத் துகள்களை காற்றில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படி துகள்கள் வெளிப்படும் என்று நாம் கூறவில்லை; அய்.நா. வின் அணுக் கதிர் வீச்சை ஆய்வு செய்யும் அறிவியல் குழுவே (UNSCEAR – United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation) விரிவாகக் கூறுகிறது. இவற்றின் அடிப்படையில்தான் விலக்கல் பகுதி, பாதுகாப்பான பகுதி என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் "காசா' நகரோ அணு உலையின் மய்யக் கட்டடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. அப்படி என்றால் அங்கு வசிப்பவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இளம்பருவ புற்று நோய், ரத்தப் புற்றுநோய் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. கிராமங்களில் கூட Goiter & Autoimmune thyroiditis போன்ற நோய்கள் காணப்படுகின்றன. ஆழிப்பேரலைக்குப் பின் வாழ்வாதாரங்கள் இழந்தவர்களுக்கு இது போல பல இடங்களில் அரசாங்கத்தின் புரிந்துணர்வில் தொண்டு நிறுவனங்கள் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளன. ஒவ்வொரு குடும்பமும் அந்த வீடுகள் வழங்கப்படுவதற்கு முன்பு ஓர் ஒப்பந்தத் தின் விதிகளுக்கு உட்பட்ட பின்னர்தான் வீடுகள் வழங் கப்பட்டுள்ளன. அதன் ஒரு நகல் இப்பொழுது இந்த கட்டுரையாளரிடம் உள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் பிரிவுகள் உள்ளன. குழந்தை, கணவர், மனைவி, உறவுகள், சொத்துக்கள், தொழில் தளவாடங்கள் என பலவற்றையும் இழந்து புதிய வாழ்வைத் தொடங்க ஒரு நம்பிக்கையை, ஆதரவை ஏங்கி நிற்பவர்களிடம் அரசு எப்படி பேரம் பேசுகிறது என அடுத்து வரும் வரிகளில் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

விதி 2 இவ்வாறு கூறுகிறது : “மேற்படி நிலத்தின் ஒப்படை செய்யப்பட்ட பகுதி, அரசுக்கு அவசியமான விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதாக அரசாங்கம் கருதினாலும், மேற்படி ஒப்படை நிலத்தினை எந்த விதமான நஷ்ட ஈடும் தராமல் திரும்பப் பெற அரசுக்கு முழு உரிமை உண்டு.'' எப்படி உள்ளது கதை?! இந்த நிலத்தை விட்டு அவர்கள் செல்லும்பொழுது காலி செய்ய வேண்டுமாம். அடுத்த விதியைப் பாருங்கள்.

இது விதி 6 : “அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் இலவசமாகப் பெறப்படும் நிலம் மற்றும் புதிய வீடு ஆகியவை பெறப்பட்ட நபர் முன்னால் குடியிருந்த பகுதி நிலம் மற்றும் பகுதி நிலத்தை மீண்டும் உரிமை கொள்ளவோ உற்றார் உறவினர்களுக்கு தானாமாகக் கொடுக்கவோ தடை செய்யப்படும். மேற்படி திரும்பப் பெறப்படும் நிலத்தை அரசு நிலமாக கிராம மற்றும் வட்ட கணக்காக பராமரிக்கப்படும் தடையாணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.''

அனைத்தையும் இழந்து நிற்பவர்களை இதை விட வயிற்றில் அடிக்க ஓர் அரசால் திட்டமிட முடியாது. அதைவிட பல இடங்களில் மீனவர்களிடம் அவர்களது கடற்சார் உரிமைகள் ரத்து செய்யும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது சார்ந்த ஓர் கள ஆய்வை மக்கள் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ள ஒப்பந்தங்கள், இந்திய கடற்கரை நெடுகிலும் சரி பார்க்கப்பட வேண்டும்.

"காசா' நகர மக்களின் உடல் நலம் தொடர்புடைய ஓர் ஆய்வை இப்பொழுது மேற்கொள்வது மிகவும் அவசியமானது. குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை, பெண்களின் பேறுகால நோய் கள் குறித்த விவரங்கள், கடந்த பத்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு தொடர்புடைய விவரங்கள், பிறந்த எடை, இறப்பு விகிதம் உட்பட, பால்வாடிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான தனித்துவமான நோய் கூராய்வு, குழந்தைகளின் நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் பொழுது, கை நீளம், கை சுற்றளவு என இது போல் பல அடிப்படைத் தரவுகளை நாம் இப்பொழுது தொகுக்கத் தொடங்கினால்தான் நாளை வரும் புதிய மாற்றங்களை ஒப்பிட இயலும். குழந்தைகளின் அறிவுக்கூர்மையை ஓவியம் வரைதல் முறையில் சோதிக்க வேண்டும். இப்படியான மருத்துவம் சார்ந்த தகவல்கள் நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போல, ஒவ்வொரு மாவட்டத்திற்கான தகவல்களையும் அரசாங்கம் தன் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டாமா?

நன்றி: அ. முத்துக்கிருஷ்ணன்
http://www.keetru.com/dalithmurasu/jun09/muthukrishnan.php