சிலர் விஷம் கொடுத்து கொல்வார்கள், சிலர் வெல்லம் (இனிப்பு) கொடுத்துக் கொல்வார்கள். இதில் வெல்லம் கொடுத்துக் கொல்பவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பார்கள். தமிழக பொது சுகாதாரத்தை இன்று வெல்லம் கொடுத்து கொல்லும் வேலையை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செய்து வருகிறது. காலம் காலமாக சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளேயே நம்பி இருந்து வருகின்றனர். அதனை பல இடங்களில் `தர்ம' ஆஸ்பத்ரி என அழைப்பது இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் அங்கு சென்றால் தர்மம் செய்வது போன்று பிரதிபலனை எதிர்பாராமல் இலவசமாக சிகிச்சை செய்யப்படும் அதனை பெயரிலேயே சொல்வதுதான் தர்ம ஆஸ்பத்ரி. ஆனால் இன்று தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் தர்மம் செய்கிறதா? அதாவது காலம் காலமாக இருந்து வரும் தர்ம ஆஸ்பத்ரியின் உயிரை எடுத்து அதனை ஊட்டச்சத்தாக உட்கொண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நகர்ந்து மலைப்பாம்பாக செல்கிறது என்பதுதான் உண்மை. மேலோட்டமாக கலைஞர் காப்பீட்டை பார்த்தால் தனியார் மருத்துவமனையில் இலவசமாகத்தானே மருத்துவம் செய்றாங்க இதனை ஏன் குறை சொல்ல வேண்டும் என்று எண்ணத் தோன்றும். அதுவும் உண்மைதான். ஆனால் யாராவது கண்களை விற்று சித்திரம் வாங்குவார்களா? அதைத்தான் தமிழக அரசு செய்கிறது.
அதாவது ஒரு வருடத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணம் முழுவதும் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற தனியாரிடம் பிரீமியத் தொகையாக ஒப்படைக்கப்படுகிறது. ஏதாவது பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால். அதற்காக அவர்கள் கையில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையில் ரூ 1 லட்சம் வரை ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு அதனை காப்பீட்டுத் தொகையாக அளித்து விடும். இதுதான் நடைமுறை. அதே நேரத்தில் அனைத்து அறுவை சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின் கீழ் செய்து கொள்ள முடியாது. ஏன் சாதாரண வயிற்று போக்கு அல்லது காய்ச்சல் என்றால் கூட இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.
மேலும் மக்களை அதிகமாக தாக்கும் ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும் என்றால் அந்த அறுவை சிகிச்சையே இந்த திட்டத்தில் இருக்காது. உதராணமாக சிறுநீர் கல் அடைப்பு என்றால் அதன் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை வரும். ஆனால் அந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்று ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த சிகிச்சை கலைஞர் காப்பீட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சர்க்கரை நோய்க்கு இந்த திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. ஏனென்றால் நோய்களின் எண்ணிக்கை சுருங்கினால்தான் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் பெருகும். இதுதான் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் `காப்பீட்டு பார்முலா'.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலாம் ஆண்டில் அரசு ரூ. 628.20 கோடி கொடுத்தது. இதில் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக செலுத்திய தொகை ரூ 415.43 கோடி. மீதமுள்ள ரூ 212.77 கோடி முதலாமாண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் ஆகும். இதில் அரசின் பணம் யாருக்கு ``காப்பீடாக'' மாறியிருக்கிறது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இரண்டாவது ஆண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டு தொகையாக அரசு ரூ.750 கோடியை செலுத்தியிருக்கிறது. ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தை கொட்டிக் கொடுக்க வேண்டும்? ஏன் பொதுத்துறையில் இன்சூரன்ஸ் நிறுவனம் இல்லையா?
இந்தியப் பொருளாதாரத்தையே அவ்வப்போது தாங்கி நிற்கும் நிறுவனமாக இன்று அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திகழ்ந்து வருகிறதே. அப்படியே காப்பீடு செய்ய வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனத்தில் காப்பீடு செய்யாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டும்? திமுக அரசுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை?. காலம் காலமாக பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இப்படி தனியாருக்கு திருப்பி விடுவது எந்த வகையில் நியாயம் ஆகும். அப்படி திருப்பிவிடும் பணத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருபவர்களை விட அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? அதுவும் இல்லை.
உதாரணமாக 2009ஆம் ஆண்டு ஜூலை முதல் 2010 செப்டம்பர் வரை 15 மாதங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 492 பேர். ஆனால் தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2002 ம் ஆண்டில் ( 12 மாதம்) மட்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 366 பேர் ஆவர். இந்தாண்டு (2009_10) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றிருக்கும் அறுவை சிகிச்சை புள்ளி விபரம் அரசு இணையதளத்தில் திட்டமிட்டு பதிவேற்றம் செய்யப்படவில்லை. 2002ஆம் ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதே உண்மை. புள்ளி விபரங்களை பதிவேற்றம் செய்தால் உண்மை ஊருக்கு தெரிந்து விடும் அல்லவா? அது ஆளும் அரசிற்கு ஆபத்தாக முடியும் என்பது நன்றாகவே தெரியும். அதனால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும்.
அரசு கலைஞர் காப்பீட்டுக்கு இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 750 கோடியை அரசு மருத்துவ மனைகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதும். தனியார் மருத்துவனைகளை விட நூறு மடங்கு எண்ணிக்கையில் அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் இருதய நோய்களுக்கான அறுவை சிகிச்சையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள 32 அரசு மருத்துவமனைகளில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தற்போது இங்கு இருதயவால்வு மாற்றுசிகிச்சைக்கு தேவையான வால்வு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க சுகாதாரத்துறையில் காசு இல்லை. ( பெரும்பகுதி பணம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.) அதனாலோயே மதுரை, சென்னையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சை நடந்து வந்தது.
தினமும் நடந்து வந்த இந்த அறுவை சிகிச்சையை தற்போது மதுரை மருத்துவமனையில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அறுவை சிகிச்சைகளே மேற்கொள்கின்றனர். காரணம் அதற்கான வால்வு மற்றும் மருந்துப் பொருட்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் பலர் காடுமேடுகளை விற்றும், வட்டிக்கு வாங்கியும் தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்கின்றனர். இருதய அறுவை சிகிச்சை செய்ய உபகரணம் மற்றும் வசதி ஏற்படுத்தி கொடுக்க ஒரு மருத்துவமனைக்கு ரூ 1 கோடி மட்டுமே செலவு ஆகும். கலைஞர் காப்பீட்டிற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் 32 கோடியை மட்டும் ஒதுக்கினால் தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இலவசமாகவே அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
ஒரு முறை முதலீடு செய்து வருடம் தோறும் இலவசமாக சிகிச்சை அளிப்பது சிறந்ததா? அல்லது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் தனியாருக்கு பல நூறு கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் தூக்கி கொடுப்பது சிறந்ததா?. இதே போல் சிறுநீரகம் அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் `` லித்தோட்ரிப்சி '' கருவி மதுரை மற்றும் சென்னை அரசு மருதுவமனையில் மட்டுமே இருக்கிறது. லித்தோட்ரிப்சி கருவி உள்ளிட்டு சிகிச்சை வசதி ஏற்படுத்த ஒரு மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடியே ஆகும். அப்படியானால் ரூ 80 கோடியை இதற்கென ஒதுக்கினாலே போதும். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய 32 அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதி வந்து விடும். ஆனால் இதனை செய்ய அரசு தயாராக இல்லை. அது மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பார்க்கும் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் தனியார் மருத்துவமனைக்கு நோயளிகளை அனுப்பி அரசே ஏன் பணம் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன?
தமிழகத்தில் உள்ள 1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008_09 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி ஒவ்வொரு நாளும் 1 லட்சத்து 99 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் 500 பேருக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே இருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 130 நகராட்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நலவாழ்வு சேவைகள் இல்லை. இன்னும் நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் இல்லை. இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது அது ஒரு தனி அத்தியாயம். இப்படி அரசு சுகாதாரத் துறையே அவசர சிகிக்சைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்திற்கு இருக்கும் நிதியையும் தனியார் மருத்துவமனை களுக்கும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
கடந்த பல ஆண்டுகளாக அரசுமருத்துவமனையையும், ஆரம்ப சுகாதார நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி அகில இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. உதாரணமாக தற்போது பல மருந்துகள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை வெளியில் சென்று காசு கொடுத்து வாங்கி அரசு மருத்துவரிடம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு மருத்துவமனையில் காசு கொடுத்தால் நல்ல சிகிச்சை என்ற பசப்பு வார்த்தைகளால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பணம் கொடுத்து சிகிச்சை பெறும் பிரிவு துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றிக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை மக்களிடம் உருவாக்கும் வேலை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற சுகாதாரத் திட்டங்களிலும் தனியாரின் பங்களிப்பு என்ற முறையில் தனியார் மயம் நஞ்சாக ஊடுருவச் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக காலம் காலமாக தொற்று நோய்களுக்கு அரசுதான் இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்கி வரும். ஆனால் தற்போது அந்த நிலையும் இல்லை என்றாகி விட்டது.
சமீபத்தில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை அரசே கொள்முதல் செய்து விலைக்கு விற்கும் அவலமும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நீதி மன்றம் தலையிட்டு தலையில் கொட்டிய பின்பும் பெயரளவிற்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. அரசு மருத்துவ மனைகளில் தனியார் மருந்து நிறுவனங்கள் கடைவிரித்து மருத்துகளை விற்று வருகின்றனர். இதனை திமுக அமைச்சர்கள் சென்று, முதல் விற்பனையை துவங்கி வைத்து வருகின்றனர். இப்படி அரசுத்துறையை காலி செய்து தனியார் துறையை போற்றி வளர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இதனை அப்படியே நேரடியாக செய்தால் மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் ``வெல்லம் கொடுத்து கொல்லும் முறையை திமுக பின்பற்றி வருகிறது''. கொஞ்சம் கொஞ்சமாக பொதுச் சுகாதார நிதியை தனியாருக்கு திருப்பி விட்டு அரசு மருத்துவமனைகளின் உயிரை காவு வாங்குவது. பின் அரசு மருத்துவ மனைகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மொத்த சுகாதாரத்தையும் தனியார் கையில் கொடுத்து விடுவது. அதில் ஏதாவது கிடைத்தால் அதையும் முடிந்த வரை சுருட்டுவது என்ற ரீதியில் தமிழகத்தில் திமுக அரசு வேலைகளை முழுவீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது.
Thanks: எம்.கண்ணன், keetru
அசல்கள்
1 hour ago