Wednesday, December 1, 2010

யாருக்கும் வெட்கமில்லை……

ரத்தம் கொதித்தது – நவம்பர் 18ந்தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வியில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்,

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தான் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தன் குடும்பமே பேரன் பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு… எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதி மாறன்.பக்கத்தில் அழகிரி.

இவர்கள் இரண்டு பேர் சண்டையில்தானே மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்களுக்குக் கொள்ளி வைத்தீர்கள்.. கொள்ளி வைத்த கும்பல் எல்லாம் சிறப்பு விருந்தினர்களாக எதிரே ஜொலிக்கும் பந்தலில்…

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லாரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப்படுத்தப்பட்ட நீரா ராடியா போன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் அஞ்சலி வரை அத்தனை நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. தமிழக வரலாற்றில் இதற்கு முன்பும் சரி, இனியும் சரி, இப்படி ஒரு குடும்பம் இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும் ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும் இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான் இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார். பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம் சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும் செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ்நாட்டின் மானத்தை டெல்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படியாவது காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

இந்த வாரப் பூச்செண்டு

ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பம் முதல் தொடர்ந்து விடாபிடியாக அம்பலப்படுத்தி வந்திருக்கும் பயனீர் ஆங்கில ஏட்டின் செய்தியாளர் கோபிகிருஷ்ணனுக்கு
இ.வாப

இந்த வாரக் கேள்வி

தன் ஆட்சியில் பூஜைகளும் பூமி பூஜைகளும் நடத்திய ஜெயலலிதாவுக்கு அண்ணா, பெரியார் பற்றிப் பேச என்ன தகுதி என்று கேட்டிருக்கும் கருணாநிதியின் அரசு புதிய தலைமைச் செயலகம்/சட்டமனறக் கட்டடத்துக்கு அய்யர்களை வைத்து பூமி பூஜை நடத்தியது எந்தத் தகுதியில் ?

கல்கி 27.11.2010

Thanks: gnani & kalki magazine

No comments: