கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை [Armed Forces (Special Powers) Act, 1958] டிசம்பர் 1 முதல் மேலும் ஓராண்டு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கிளம்பும் பூதாகாரச் செய்திகளில் மக்களின் முழுக் கவனமும் குவிந்திருக்கும் நிலையில், அரச பயங்கரவாதத்தின் முற்றதிகாரத்தை உறுதியாகச் செயற்படுத்தும் இது போன்ற முக்கியமான நேர்வுகள் போதுமான கவனத்தைப் பெறாமலே போய்விடுகிறது.
பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் தாலாட்டுக்குரிய மும்பை, தில்லி, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் முதலான பெருநகரங்களே இந்தியாவாக, இவற்றின் நீள அகல வளர்ச்சியே, இத் துணைக் கண்டத்தின் வளர்ச்சியாக ஊடகங்களாலும் ஊதிப் பெரிதாக்கிக் காட்டப்படுகின்றன. இச்சூழலில், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் இருப்பதே வெகுமக்கள் பலருக்கும் புதிய தகவல். கைவிடப்பட்ட சகோதரிகள்!
1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State). 1947 மணிப்பூர் அரசியல் சட்டம் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கியது. செயற்பாட்டு அதிகாரமுள்ள அரசரைத் தலைவராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையையும் கொண்டது அது. 1946 அக்டோபர் 15 அன்றே மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 முதல் யூனியன் பிரதேசமாகவே இருந்து வந்த மணிப்பூர் 1972-இல் தனி மாநிலமானது.
தொலை தூரத்திலுள்ள நடுவண் அரசை வளர்ச்சித் திட்டங்கள் மூலமின்றி எல்லைப் பாதுகாப்புப் படையினர் மூலமாக மட்டுமே அறிய நேர்ந்த மணிப்புரிகளில் சில புரட்சிகரச் சக்திகளால் 1960 மற்றும் 70களில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), காங்லிபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி (PREPAK), மக்கள் விடுதலைப் படை (PLA) முதலான இயக்கங்களின் மூலம் சுதந்திரச் சோஷலிசக் குடியரசை உருவாக்கும் நோக்கில் தன்னுரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களும் நடந்தன. இப்போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் செப்டம்பர் 1980-இல் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டம் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இம்பால் பள்ளத்தாக்கில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சட்டம், பின்னர் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. நடுவண் அரசின் இச்சட்டத்தை மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ நடைமுறைப்படுத்த மாநில அமைச்சரவையின் அனுமதி அவசியம். அதுபோன்றதொரு வருடாந்திரச் சம்பிரதாயமாகவே அச்சட்டத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மணிப்பூர் மாநில அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாநில அமைச்சரவையின் ஒப்புதலோடே இச்சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், இச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமுமில்லை. ஆயுதப் படையணிகளுக்கு சர்வசுதந்திரத்தை இச்சட்டம் வழங்குகிறது.
ஃ சந்தேகத்துக்குரியவராக ஆயுதப்படையால் கருதப்படும் எவரொருவரையும் அது சுட்டுக் கொல்லலாம்.
ஃ குற்றம் இழைத்தோர் எனப்படுவோர் மட்டுமல்ல; குற்றம் செய்ய வாய்ப்புள்ளவர்களாக ஆயுதப்படையால் சந்தேகிக்கப்படும் எவரையும் நீதிமன்றப் பிடியாணை ஏதுமின்றிக் கைது செய்யலாம்; சிறையில் தள்ளலாம்.
ஃ கைது செய்யப்பட்டவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க ஆயுதப்படைக்குக் காலக்கெடு ஏதுமில்லை; நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் நேர்நிறுத்த வேண்டும் என்பதுமில்லை.
ஃ சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகம், தொழிலகம், வணிக நிறுவனம் என எவ்விடத்திலும் எந்நேரமும் தேடுதல் வேட்டை நடத்த ஆயுதப் படைக்கு அதிகாரமுண்டு. அந்நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றவும் செய்யலாம்.
ஃ ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூடவும், ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஆயுதப் படை கருதும் எந்தவொரு பொருளையும் பொது மக்கள் எடுத்துச் செல்லவும் தடைவிதிக்க அதற்கு அதிகாரமுண்டு.
ஃ அரசுக்கு எதிரான போராட்டம் என்று இல்லை; ஒரு சிறு முணுமுணுப்பையும் பயங்கரவாதம் என்று முத்திரையிட்டுத் தண்டிக்க ஆயுதப் படையால் முடியும்.
ஃ குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆயுதப் படைவீரர்கள் மீது உடனடியாக வழக்கினைப் பதிவு செய்யவோ விசாரணை மேற்கொள்ளவோ மாநில அரசாலும் முடியாது; நடுவண் அரசின் அனுமதி வேண்டும்.
ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டம் மணிப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இதுவரை கடந்த முப்பதாண்டுகளில் ஆயுதப் படையால் கொல்லப்பட்டவர்கள் மட்டும் ஏறத்தாழ 30,000 பேர். சமூக அமைதி, பாதுகாப்பு என்ற பொருத்தமற்ற வார்த்தைகளில் ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும் இந்த ஆட்கொல்லிச் சட்டத்தை எதிர்த்து மணிப்புரிகள் பல்வேறு விதமான தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ஆம் தேதி தலைநகர் இம்பாலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள மாலோம் என்ற இடத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 10 அப்பாவிப் பொது மக்கள் ஆயுதப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்டித்து மாநிலமெங்கும் போராட்டங்கள் எழுந்தன. அந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று, ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மணிப்பூரிலிருந்து முற்றிலும் நீக்க வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா சானு என்ற இளம்பெண். (உண்ணாநிலை என்றதும் தயவுசெய்து தமிழகம் நினைவுக்கு வரவேண்டாம்.) தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரசால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட நிலையிலும் உண்ணாநிலையைத் தொடர்ந்தார்.
உணவூட்ட முயன்ற அரசின் முயற்சிகள் தோல்வியுற்ற பின், கட்டாயப்படுத்தி ஷர்மிளாவுக்கு மூக்கு வழியாகத் திரவ உணவு (Nasal Feed) செலுத்தப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சி என்ற பெயரில் நீதிமன்றத்தால் அதிக பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை என்ற வகையில், கடந்த பத்தாண்டுகளில் பலமுறை சிறையிலும் வெளியிலுமாகத் தன் உண்ணாநிலையைத் தொடர்ந்தே வருகிறார் ஷர்மிளா. கடந்த 2006-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ஆதரவாளர்களால் புதுதில்லி கொண்டுவரப்பட்டு, காந்தியின் சமாதியை வணங்கிய கையோடு, தில்லியிலும் தம் போராட்டத்தைத் தொடர்ந்தார். அதன் பிறகே இம் மாபெரும் மனித உரிமைப் போராட்டம் பிற மாநில மற்றும் உலக மக்களின் கவனத்திற்கு வந்தது. உடனடியாகப் புதுதில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டு மீண்டும் திரவ உணவு செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருடக்கணக்கில் திடஉணவு உட்கொள்ளாததால் எலும்புகள் முற்றிலும் வலுவிழந்து நாடிகளும் தளர்ந்து நகர முடியாத நிலைமையிலும் தம் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா சானு.
2004-ஆம் ஆண்டு இம்பாலைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா தேவி என்ற இளம்பெண் அசாம் ரைஃபிள்ஸ் என்ற அரசின் ஆயுதப்படைப் பிரிவினரால் வீடு புகுந்து கடத்திச் செல்லப்பட்டார். ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட அவளது உடலின் பெண்ணுறுப்பும் சுட்டுச் சிதைக்கப்பட்டிருந்தது. இது நடந்தது ஜூலை 11, 2004-இல். இப்படுகொலையைக் கண்டித்து எழுந்த போராட்டங்களின் உச்சகட்டமாக, ஜூலை 15-ஆம் தேதி அசாம் ரைஃபிள்ஸ் தலைமையகம் முன்பு "இந்திய இராணுவமே! எங்களையும் வன்புணர்!" (Indian Army! Rape Us), "இந்திய இராணுவமே! எங்கள் சதையையும் எடுத்துக் கொள்!" (Indian Army! Take our Flesh!) என்ற பதாகைகளை ஏந்தியபடி, மூத்த மணிப்புரிப் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியது பிரச்சினையின் தீவிரத்தைப் பெரும் அதிர்வோடு உலகுக்குச் சொன்னது.
எனினும், மனோரமா தேவி பாலியல் வல்லுறுவு மற்றும் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்ட ஆயுதப்படையினர் எவரும் இராணுவத்தாலும் விசாரிக்கப்படவில்லை. மாநில அரசு அமைத்த விசாரணைக் கமிஷனுக்கு நடுவண் அரசு அனுமதியும் வழங்கவில்லை.
இந்த ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரச்) சட்டத்தை மறு பரிசீலனை செய்ய நடுவண் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஜீவன் ரெட்டி கமிஷனும் தன் அறிக்கையில், "வெறுக்கத் தக்க வகையில் அடக்குமுறைக் கருவியாக இச் சட்டம் மாறிவிட்டது. ஏற்கனவே உள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமே போதுமான ஒன்று. அதிலும் தெரிந்தே ஆயுதப் படையினர் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்" என்று பரிந்துரைத்தது. ஐந்து ஆண்டுகளாக இவ்வறிக்கையையும் வெளியிட மறுத்து வருகிறது நடுவண் அரசு.
"ஆங்கில ஏகாதிபத்தியம் இந்நாட்டில் ஆட்சி செய்த போது கூட, இந்தியர்களை இப்படி அப்பட்டமாகச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தமது இராணுவத்திற்கு வழங்கவில்லை" என்கிறார் சாவர்க்கரும் இந்துத்துவமும், பாபர் மசூதி:1528 - 2003" என்ற நூல்களை எழுதியவரும், வழக்கறிஞரும், பேர் பெற்ற அரசியல் விமரிசகருமான அப்துல் கஃபூர் நூரணி.
பதவி உயர்வுக்காகவும் அரசு வழங்கும் பரிசுத் தொகைக்காகவும் கூட ஏராளமான போலி மோதல்களை மணிப்பூரில் இன்னமும் அரங்கேற்றி வருகின்றன அரசின் ஆயுதப் படைகள். சட்டத்தை நீக்கப் போராடுகிறார்கள் மக்கள். எட்டாத உயரத்தில் இருப்பதான எண்ணத்தோடு அச்சட்டத்தை அடுத்தடுத்து நீட்டிக்கிறது அரசு.
Thanks: யுவபாரதி, www.keetru.com
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
1 hour ago
No comments:
Post a Comment