Monday, July 27, 2009

இந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்


தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக, மின்சாரம் எப்பொழுது வருகிறது என்கிற தகவலை ஏறக்குறைய அனைவருமே கச்சிதமாய் தெரிந்து வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை ஏற்றுவது முதல் சிறுவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வரை, எல்லாமே அட்டவணையாக மாறிப் போனது. ஏதோ சென்னை போன்ற நகரங்களுக்கு இதில் விதிவிலக்காக கொஞ்சம் இரக்கம் காட்டப்படுவதாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொது மக்கள் முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடும் விவாதங்கள் வரையிலும், பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சூழல் வரையிலும் அனைத்திற்கும் ஒரு விஷயமே காரணம். அது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்.

Koodankulam இந்த காலகட்டத்தில் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று, "இந்த ஒப்பந்தம் அடிமைத்தனமானது, இந்திய நலன்களும், உரிமைகளும் அமெரிக்க அடகுக் கடையில் அடமானம் வைக்கப்பட்டு விட்டன' என்று பேச முயன்றால் உடனே பலரிடமும் கிடைத்தது ஒரே பதில்தான்: “ஏங்க அப்ப மின்சாரமே உங்களுக்கு வேண்டாமா? நாட்டையே இருட்டாக வச்சிருக்கலாமுனு நினைக்கிறீங்களா? மின்சாரம் இல்லைனா எப்படி தொழில் பெருகும்-நாடுன்னா வளர்ச்சி வேண்டாமாங்க?'' அணு உலைகள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்கும் கனவு, இன்று சாமானியர்கள் வரை எட்டியுள்ளது என்பது இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

இன்னும் ஒருபடி மேலே சென்று, “அட இந்த அணு உலை எல்லாம் வெறும் முகமூடி தாங்க. உண்மையான நோக்கம் அணுகுண்டு தயாரிப்பதற்கான கச்சா பொருள் தயாரிப்புதாங்க'' என்றால் அதற்கும் உடனே பதில் வரும்: “என்னங்க நாடுன்னா அணு ஆயுதம் வேண்டாமா? அணுகுண்டு வச்சிருந்தாதான் நாலு பய நம்ம நாட்ட மதிப்பான், பயப்படுவான்.'' இது, சாமானியரின் குரல் என்றால், வேறு ஒரு முக்கிய நபரின் வாக்குமூலத்தையும் கேளுங்கள். மும்பை தாக்குதல்கள் நிகழ்ந்து நாடு ஒருவித கொதி நிலையில் இருந்த சம காலத்தில் பத்திரிகை பேட்டியாக இது அளிக்கப்பட்டது : “பாகிஸ்தானுடன் இன்றைய சூழ்நிலையில் போர் ஏற்பட்டால், அது கண்டிப்பாக ஓர் அணு ஆயுதப் போராகவே இருக்கும். பேய்களை ஒழிக்க வேறு வழி இல்லை. ஆனால் என்னால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த பேரழிவுக்குப்பின் ஒரு புதிய உலகம் மலரும். அது மிகவும் அற்புதமாகத் திகழும். அங்கே தீயவர்கள், தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள்.'' இது வேறு யாரும் இல்லை, ஆர்.எஸ்.எஸ். பாசிச அமைப்பின் "சர்சங்சலக்' கே.எஸ். சுதர்சன் அளித்துள்ள பேட்டி.

1948 இல் அணு சக்தி கழகம் அமைக்கப்பட்டது. அது பின்னர் 1954இல் அணு சக்தித் துறையாக உயர்வு பெற்றது. அது முதல் அணு ஆற்றலை நன்மைக்கும் அமைதிக் கும் பயன்படுத்துவது என்கிற நோக்குடன் தன் பணியை அக்கழகம் தொடங்கியது. 1987இல் இத்துறை சார்பில் 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம் என்ற முழக்கம் பெரிதாக ஒலித்தது. 2000 ஆம் ஆண்டில் அது 45 ஆயிரம் மெகா வாட்டை எட்டிப் பிடிக்கும் என திருத்தப்பட்டது. இப்பொழுது அது மீண்டும் புதிய ஒப்பனையுடன் 2020 இல் 20 ஆயிரம் மெகாவாட் என்று கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 90 ஆயிரம் மெகாவாட். இதில் அணு உலைகளிலிருந்து பெறப்பட்டவை வெறும் 1840 மெகாவாட் மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், அது 2 சதவிகிதம் மட்டுமே. 2000 இல் அது 3 சதவிகிதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது 14 அணு உலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஓர் உலை கூட அதன் அடைவு நிலையை எட்டியதில்லை. தாராப்பூர், கல்பாக்கம், நரோரோ, காக்ராபர், கைகா ஆகிய இடங்களில் தலா இரண்டு அணு உலைகளும் ராவத்பாட்டாவில் நான்கு உலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால் தான் அடைவு நிலையை எட்ட இயலவில்லை என வெளிப்படையாகவே முன்னாள் கப்பற்படைத் தளபதி டாக்டர் பி.கே. சுப்பாராவ் தெரிவிக்கிறார். நாம் மிக எளிதாக இன்று அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மற்றும் காற்றாலைகளின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவையும், அதற்கு அரசு செய்யும் செலவையும், அணு உலைகளுக்கும் அரசு செலவிட்டுள்ள பெருந்தொகைகளுடன் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். அணு உலைகளுக்காக மத்திய அரசு கணக்கிட முடியாத அளவுக்கு அரசு வருவாயை இழந்துள்ளது. இப்பொழுது அவர்கள் 2020 இல் 20,000 மெகாவாட் என்று சொல்லும்போதுகூட அதற்கான செலவை அறிவிக்க மறுக்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் அதனை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடுகிறார்கள்.

இத்தனைப் பெரும் தொகையை அரசால் இன்று ஒதுக்க இயலாது என்பதற்காகவே 1962 இல் இயற்றப்பட்ட அணுசக்தி சட்டத்தை இப்பொழுது ஒரு பெரிய குழு திருத்தம் செய்யும் வேலையில் இறங்கி யுள்ளது. இந்தத் திருத்தம் மிகவும் ஆபத்தான நோக்கம் கொண்டது. முதன் முறையாக அணு உலைகள் அமைப்பதில் தனியாருக்கு அனுமதியளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி யுள்ளன. பிரான்சின் அர்வேரா (அணூதிஞுணூச்) நிறுவனம், மகாராட்டிர மாநிலத்தின் ஜைத்தா பூரில் ஆறு அணு உலைகளை அமைக்க இருக் கிறது. அந்த நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா, கஜகஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் சொந்தமான யுரேனிய சுரங்கங்கள் உள்ளன. கூடங்குளத்தில் மொத்தம் 8 அணு உலைகள் அமைக்க ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஹரிப்பூரில் அமெரிக்க நிறுவனம் அணு உலைகள் அமைக்க இருக்கிறது. இவை தவிர குஜராத்தில் மீதிவிதீ, ஒரிசாவில் பிட்டீ சொனாப்பூர், ஆந்திராவில் கோவாடா, மகாராட்டிரத்தின் மாத்பன் என இந்தியாவில் திரும்பிய பக்கம் எல்லாம் இனி அணு உலைகள்தான். மேற்குலக நாடுகள் கடந்த 25 ஆண்டுகளாக அணு உலைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அவை அனைத்தையும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்டும் பணியை தீவிரமாக செய்து வருகின்றன.

இத்தனை அணு உலைகளை அமைக்கும் அதே வேளையில், இவை அனைத்தையும் எத்தகைய ஜனநாயக நடைமுறையையும் பின்பற்றாமல், ஒரு சர்வாதிகார நடைமுறையில் மிகத் துரிதமாக அதிகார வர்க்கம் தன் மனம் போன போக்கில் செயல்படுகிறது. இதில் அரசியல் கட்சிகள் முதல் அப்பகுதி பொது மக்கள் வரை எவரும் ஆலோசிக்கப்படுவதில்லை. மக்கள் கருத்தாய்வு என்கிற நடைமுறைகள் கூட காவல் துறையின் தடிகளின் நிழலில் நடத்தப்படும் நாடகமாக மாறிப் போய் விட்டன. சுற்றுச் சூழல் மதிப்பாய்வு அறிக்கை என்பதுகூட, நாடாளுமன்றம் முதல் சாமானிய மக்கள் வரையிலும் நாட்டில் எவரிடமும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்த அணு உலைகள் குறித்த சாதாரண தகவல்களைக்கூட நீங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. அத்தகைய ஆபத்தான சட்டமாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக இந்த 1962 அணு சக்தி சட்டம் விளங்குகிறது.

ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படாத சூழலில், மக்கள் இந்த தகவல்களைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. அதனை அவர் களுக்கு அளிப்பது அரசின் ஜனநாயகக் கடமையே அன்றி வேறு அல்ல. இந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு இப்படியான விஷயங்களில் எந்த அக்கறையும் இல்லை. இடதுசாரிகளைப் பொருத்த வரை, அவர்கள் அணு ஆயுதத்திற்கு எதிரானவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள்; ஆனால் அணு உலைகள் அமைப்பதை ஆதரிக்கிறார்கள். இருப்பினும் அணு உலையை ஆதரிக்கிறவர்கள் கூட, அந்தப் பகுதியில் பூர்வக்குடிகளாக வாழ்பவர்களின் இடப்பெயர்வு, பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் தலையிடாதது பெரும் முரண்பாடாகவே இருக்கிறது.

கடற்கரை ஒழுங்குச் சட்டம், கடற்கரைப் பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடற்கரையிலிருந்து 500 மீட்டர் பகுதிக்குள் மனிதர்கள் வசிப்பது, வணிக நடவடிக்கைகள் என அனைத்தையும் அது தடை செய்தது. ஆனால் இவற்றுக்கு நேர் மாறாக, தமிழகத்தில் இரு உலைகளும் கடற்கரை அருகிலேயே அமைந்துள்ளன. இப்பொழுது அமையவிருக்கும் பல அணு உலைகளும் இதே வகையில்தான் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த கடற்கரை சார் சட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. கடல் சார் மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மேல்தட்டு மக்களுக்கும் சொகுசான தங்கும் விடுதிகள், கேளிக்கைத் தளங்கள் அமைப்பது என பெரும் அநீதி அரங்கேறி வருகிறது. மேலும், கிராமங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள மோனோசைட், தோரியம், செர்டியம், கார்நெட், ரூடைல், இல்மெனைட் போன்ற தாதுக்களை, கனிமங்களை அறுவடை செய்யும் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.

2004இல் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்பு மிகக் கொடூரமானது. அதுவும் குறிப்பாக கல்பாக்கம் உலையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி எஸ்.பி. உதயக்குமார் "தெகல்கா' வார இதழில் "கதிர் வீச்சு சுனாமி' என்றொரு கட்டுரை எழுதினார். அது, ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலகம் முழுவதும் உள்ள முக்கிய அணு விஞ்ஞானிகள் பலர் இது குறித்து கவலை தெரிவித்தனர். கல்பாக்கத்தில் செர்னோபில் அளவுக்கு ஒரு பெரும் விபத்து நடைபெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகு ஆபத்துகளை எல்லாம் உணர்ந்த இந்திய பிரதமர், உடனே அணு சக்தி கழகத் தலைவர் அனில் ககோட்கரை விரைவாக கல்பாக்கத்துக்கு அனுப்பினார். வெளிநாட்டு நிபுணர்கள் அவசர கதியில் வரவழைக்கப்பட்டனர். ராணுவம் களமிறங்கியது. அங்கிருந்து 15 ஆயிரம் பேர் அசுர வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். அங்கு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களில் 200–300 பேரை காணவில்லை என தகவல்கள் கசிந்தன. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் சிலர் கூட அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். கல்பாக்கம் தொலைபேசி நிலையம் மூழ்கிய தால் அனைத்து தொலைபேசிகளும் செயல் இழந்தன. தனியார் கைபேசிகள் மட்டுமே அப்பொழுது இயங்கின.

அங்கு பொதுவாக தரையில் குவிக்கப்படும் மென் கதிர் வீச்சுடைய கழிவுகள் அனைத்தையும் கடல் அலை அடித்துச் சென்று விட்டதாக விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த மென் கதிர்வீச்சு கழிவுகள் நிலத்தடி நீரிலும், கடலில் உள்ள மீன்கள் உண்டு, அதன் வழியாக மனித உடலை கதிர்வீச்சு வந்தடையும். இது, பலவித நோய்கள் முதல் விதவிதமான புற்றுநோய் வரை ஏற்படுத்த காரணமாக அமையும். ஏற்கனவே கல்பாக்கம் சுற்று வட்டாரத்தில் பல கிராமங்களில் உள்ள புற்று நோய்கள் குறித்து வி.டி. பத்மநாபன் பல ஆய்வுக் கட்டுரை களை தீவிர கள ஆய்வின் அடிப்படையில் எழுதியுள்ளõர்.

1953 இல் அமெரிக்காவின் அல்பன்-ட்ராயி என்ற இடத்தில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்கிருந்த அணு உலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் லிட்டர் கதிர்வீச்சுக் கழிவு மிசிசிப்பி ஆற்றில் கலந்தது. அது அந்த ஆற்றின் மொத்த நீளத்திற்கும் படுகைகளை நாசப்படுத்தியது. 1971இல் கூர்க்ஸ் அணு உலை முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இன்றும் கூட உலகில் 10 அணு உலைகளும், 50 அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளும் கடற்கரைகளில் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளதாக "கிரீன் பீஸ்' அமைப்பு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மறுபுறம் ரஷ்யாவின் செர்னோபில் விபத்து, நவீன வரலாற்றின் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது. 1986 ஏப்ரல் 25 அன்று உக்கிரைன் பிரதேசத்திற்கே ஒரு துயர நாளாக நிலைத்து நிற்கிறது. விபத்து நடந்தவுடன் 93 ஆயிரம் பேர் இறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் ரஷ்யாவில் 60 ஆயிரம் பேரும், ÷பலாரஸ் பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் சடலங்களாக மாறினர். அங்கிருந்து 2000 மைல் தொலைவில் சுவீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மான்கள் செத்து மடிந்தன. மொத்தம் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வரலாற்று நிகழ்வுகள் மனித இனத்திற்கே பல ஆழமான படிப்பிடினைகளை வழங்குகிறது. ஆனால் அரசதிகாரம் மட்டும் இவைகளிலிருந்து பாடம் கற்க மறுக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நாடுகளே பல விபத்துக்களை சந்திக்க நேரும்பொழுது, மூன்றாம் உலக நாடுகள் குறிப்பாக இந்தியாவின் நிலையைப் பற்றி யோசிக்கக்கூட மனம் தயங்குகிறது. இவற்றின் அடிப்படையில்தான் குறைந்தபட்சமாக பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளையேனும் முறையாக செய்ய வேண்டிய தேவை எழுகிறது.

பொதுவாக, ஓர் அணு உலையின் மய்யக் குவியலிலிருந்து (Stack) 1.6 கிலோ மீட்டர் வரையிலான இடத்தை விலக்கல் பகுதி (Exclusion Zone) என்கிறார்கள். இந்தப் பகுதியில் உலை தவிர்த்த வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது. அதே போல் 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியை பாதுகாப்பான பகுதி (Sterile zone) என்கிறார்கள். இந்தப் பகுதி மனிதர்கள் வசிக்க லாயக்கற்றது. கதிர்வீச்சு ஆபத்திலிருந்தும் ஒரு விபத்துச் சூழலில் உடனே மக்களை வெளியேற்ற இப்படியான பல பாதுகாப்பு நடை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் இப்படியான எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் அணு உலையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில்கூட வசிப்பிடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து வாழ்கிறார்கள் தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் வழியாக சென்றவர்களுக்கு அது துல்லியமாக விளங்கும். அருகில் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 25 ஆயிரம், இடிந்த கரையின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம். இது தவிர மனவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மந்தைக்காடு புதூர், பரப்பற்× என பல கிராமங்கள் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளன. கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இதில் விவேகானந்தரும் திருவள்ளுவரும் விலக்கல்ல.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அடிமை சாசன ஒப்பந்தத்தால், இனி இந்திய அணுசக்தி துறை தனது தலைமை அலுவலகத்தை வாஷிங்டனுக்கு மாற்றியாகிவிட்டது. கடும் விதிமுறைகளில் இனி நம்மால் உண்மையாகவே ஓர் அணுவைக்கூட அசைக்க இயலாது. இனி ஒரு சிறு அணு சோதனையை நடத்தினால்கூட, மொத்த அணு உலைக்கான எரிபொருளும் நிறுத்தப்படும். கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என பல சுருக்கு கயிறுகள் நம்மை இறுக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்தியா வசம் இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன. அவை ஏவுகணைகளில் பொருத்தப்படாமல் பிரித்துதான் வைக்கப்பட்டுள்ளனவாம். இது தவிர்த்து 1000 அணு குண்டுகளுக்கான கச்சா பொருளை இந்தியா தன் கைவசம் வைத்துக் கொண்டுதான் அணு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக சிலர் மார்தட்டிக் கொள்கிறார்கள்.

இந்த அணு ஆயுத அந்தஸ்தை (?) அடைய நாம் எத்தகைய விலைகளை கொடுத்துள்ளோம். நாடு முழுவதிலும் யுரேனிய சுரங்கங்கள் உள்ள பகுதிகள்-சுத்திகரிப்பு ஆலைகள், அணு உலையை சுற்றியுள்ள பகுதிகள் என நாடெங்கும் விளிம்பு நிலை மக்கள் லட்சக்கணக்கில் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். புற்று நோய், உருச்சிதைந்த குழந்தைகள் பிறப்பது, எந்த அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைவு, குழந்தைகள் வித வித ஊனங்களுடன் பிறப்பது என சகிக்க முடியா துரயங்களும் அவலங்களும் முடிவற்று நீள்கின்றன. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால், அணு உலை விபத்து அல்லது கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வரை எவரும் இழப்பீடு வழங்குவதில்லை. அணு தொடர்புடைய அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

இந்தச் சூழலில்தான் 2009 சூன் மாதம் 4, 5, 6 நாட்களில் கன்னியாகுமரியில் ஒரு தேசிய அளவிலான கலந்தாய்வு மற்றும் மாநாடு நடைபெற்றது (National Convention on The Politics of Nuclear Energy and Resistance). இதனை "அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் இயக்கம்' மற்றும் தில்லியில் உள்ள "அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டமைப்பு' இணைந்து ஒழுங்கமைத்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு எதிர்ப்பு இயக்கங்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், போராளிகள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கமித்தனர். அணு ஆயுதம், அணு ஆற்றல் தொடர்புடைய பல்வேறுபட்ட விவாதங்கள் நடைபெற்றன. பல கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டன. யுரேனியம் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது, உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது முதல் கழிவை சுத்திகரிப்பது வரையிலான பல கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகள், நடைமுறை குளறுபடிகள் குறித்து அறிஞர்கள் விவாதித்தனர். கன்னியாகுமரி தீர்மானம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது.

Nuclear waste கூடங்குளம் அணு உலையால் தமிழகம் மட்டுமின்றி, கேரளாவின் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட உள்ளன. இலங்கை மற்றும் சில தெற்காசிய நாடுகள் வரை இதன் பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளன. எனவே, முன்னெப்போதைக் காட்டிலும் விழிப்படைய வேண்டிய தருணமிது; அல்லது மறைந்த சூழலியலாளர் அசுரன் கூறியது போல் தமிழர்களே பிணமாகத் தயாராகுங்கள்! 

ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கான எரிபொருள் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தது. அங்கிருந்து சாலை வழியே அது கூடங்குளம் அணு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் வரையான இந்தப் பாதை நெடுகே அடர்த்தியான கிராமங்கள் உள்ளன. இவ்வாறு செரிவான யுரேனியத்தை கொண்டு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சாலையின் இரு பக்கங்களிலும் 100 மீட்டர் தொலைவுக்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த யுரேனியம் கொண்டு வரும் வாகனம் செல்லும். இது ஒரு பெரும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும். மக்கள் தொடர்ந்து இது குறித்து அறிவுறுத்தப்படுவார்கள். பொதுவாக குழந்தைகளை இன்னும் கூட அதிக தொலைவுக்கு கொண்டு செல்வது நடைமுறை. ஆனால் அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லை. அந்த வாகனம் நாகர்கோவிலை கடக்கும்பொழுது, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனை ஒரு பெரிய வாகனம் என்று பலரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லோருக்கும் ஒரு நல்ல அளவு கதிர்வீச்சு "டோஸ்' இலவசமாய் கிடைத்ததுதான் மிச்சம்!

மேற்கண்ட இந்த பீப்பாய்களில் உள்ளது எல்லாம் எரிக்கப்பட்ட ஆற்றல் இழந்த யுரேனியம். அணு உலையிலிருந்து வெளியேறிய இவை அடுத்த 1 லட்சம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை கையாளுவதற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் அந்தக் கழிவுகள் ரஷ்யா கொண்டு செல்லப்படும் என்கிறது அணு சக்தி துறை. நடக்குமா?

சுனாமியை விட கொடூரமான கதிர்வீச்சு

காசா நகர், உலகின் மிக அதிசயக் குடியிருப்பு. இது ஏதோ நிலவில் கட்டப்பட்ட ஓர் அபூர்வ குடியிருப்போ, தென் துருவத்தில் விஞ்ஞானிகளுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளோ அல்ல. இவைதான் இன்று இந்தியாவில் அணு சக்தி துறை எவ்வாறு செயல்படுகிறது; அது எவ்வாறு பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்கிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆழிப்பேரலை தமிழகத்தை ஒரு கை பார்த்த பிறகு தங்களின் வாழ்வாதாரங்களை, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்கதியாய் நின்ற லட்சக்கணக்கானவர்களில் இடிந்தகரை கிராமத்து மக்களும் அடக்கம். அதன் பிறகு பல இடங்கள் மாறி இவர்கள் கடைசியாக "காசா' (Churches Auxillary for Social Action - CASa) என்கிற அமைப்பு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளில் குடியேறினார்கள். அங்கு சுமார் 450 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் சுமார் 2000 பேர் வசித்து வருகிறார்கள். இது, திருநெல்வேலி மாவட்ட இடிந்தகரை கிராமத்தை அடுத்து உள்ளது.

அணு உலையின் பயன்பாடுகளை அறியாத ஒன்று மறியா மக்கள், மகிழ்ச்சி பொங்க தங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்த வீடுகளில் குடியேறினர். இந்த வீடுகள் அணு உலையின் மய்ய குவியலிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவான இடைவெளி யில் கட்டப்பட்டுள்ளன. பொதுவாக 5 கிலோ மீட்டர் வரையிலான பகுதியில் (Sterile Zone) மிகவும் அத்தியாவசியம் கருதி கட்டப்படும் கட்டடங்களுக்கு, அணு சக்தித் துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இப்பொழுது கூடங்குளம் கிராமத்தில் மாடி வீடுகள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியான ஒரு சூழலில் இந்த திட்டத்திற்கு யார் அனுமதியளித்தனர் என்பது பெரும் கேள்வியாய் எழுந்து நிற்கிறது.

அங்குள்ள மக்களிடம் உரையாடிய போது, அவர்கள் அணு உலை இவ்வளவு அருகில் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்கவில்லை. பொதுவாக ஓர் அணு உலை இயங்கத் தொடங்கினால், அதிலிருந்து இடைவிடாது கழிவுகள் பல வழிகளில் வெளி யேறிய வண்ணம் இருக்கும். இந்த ஆண்டு (2009) இறுதியில் கூடங்குளத்தின் முதல் அணு உலை இயங்கத் தொடங்கும் பொழுது, அது ஒவ்வொரு நொடியிலும் 130,000,000,000,000 கதிர் வீச்சுத் துகள்களை காற்றில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படி துகள்கள் வெளிப்படும் என்று நாம் கூறவில்லை; அய்.நா. வின் அணுக் கதிர் வீச்சை ஆய்வு செய்யும் அறிவியல் குழுவே (UNSCEAR – United Nations Scientific Committee on the Effects of Atomic Radiation) விரிவாகக் கூறுகிறது. இவற்றின் அடிப்படையில்தான் விலக்கல் பகுதி, பாதுகாப்பான பகுதி என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் "காசா' நகரோ அணு உலையின் மய்யக் கட்டடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டருக்கு உட்பட்டு உள்ளது. அப்படி என்றால் அங்கு வசிப்பவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இளம்பருவ புற்று நோய், ரத்தப் புற்றுநோய் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. கிராமங்களில் கூட Goiter & Autoimmune thyroiditis போன்ற நோய்கள் காணப்படுகின்றன. ஆழிப்பேரலைக்குப் பின் வாழ்வாதாரங்கள் இழந்தவர்களுக்கு இது போல பல இடங்களில் அரசாங்கத்தின் புரிந்துணர்வில் தொண்டு நிறுவனங்கள் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளன. ஒவ்வொரு குடும்பமும் அந்த வீடுகள் வழங்கப்படுவதற்கு முன்பு ஓர் ஒப்பந்தத் தின் விதிகளுக்கு உட்பட்ட பின்னர்தான் வீடுகள் வழங் கப்பட்டுள்ளன. அதன் ஒரு நகல் இப்பொழுது இந்த கட்டுரையாளரிடம் உள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் பிரிவுகள் உள்ளன. குழந்தை, கணவர், மனைவி, உறவுகள், சொத்துக்கள், தொழில் தளவாடங்கள் என பலவற்றையும் இழந்து புதிய வாழ்வைத் தொடங்க ஒரு நம்பிக்கையை, ஆதரவை ஏங்கி நிற்பவர்களிடம் அரசு எப்படி பேரம் பேசுகிறது என அடுத்து வரும் வரிகளில் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

விதி 2 இவ்வாறு கூறுகிறது : “மேற்படி நிலத்தின் ஒப்படை செய்யப்பட்ட பகுதி, அரசுக்கு அவசியமான விரிவாக்கம் செய்யப்பட வேண்டியிருப்பதாக அரசாங்கம் கருதினாலும், மேற்படி ஒப்படை நிலத்தினை எந்த விதமான நஷ்ட ஈடும் தராமல் திரும்பப் பெற அரசுக்கு முழு உரிமை உண்டு.'' எப்படி உள்ளது கதை?! இந்த நிலத்தை விட்டு அவர்கள் செல்லும்பொழுது காலி செய்ய வேண்டுமாம். அடுத்த விதியைப் பாருங்கள்.

இது விதி 6 : “அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் இலவசமாகப் பெறப்படும் நிலம் மற்றும் புதிய வீடு ஆகியவை பெறப்பட்ட நபர் முன்னால் குடியிருந்த பகுதி நிலம் மற்றும் பகுதி நிலத்தை மீண்டும் உரிமை கொள்ளவோ உற்றார் உறவினர்களுக்கு தானாமாகக் கொடுக்கவோ தடை செய்யப்படும். மேற்படி திரும்பப் பெறப்படும் நிலத்தை அரசு நிலமாக கிராம மற்றும் வட்ட கணக்காக பராமரிக்கப்படும் தடையாணை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.''

அனைத்தையும் இழந்து நிற்பவர்களை இதை விட வயிற்றில் அடிக்க ஓர் அரசால் திட்டமிட முடியாது. அதைவிட பல இடங்களில் மீனவர்களிடம் அவர்களது கடற்சார் உரிமைகள் ரத்து செய்யும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது சார்ந்த ஓர் கள ஆய்வை மக்கள் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும். ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்காக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்துள்ள ஒப்பந்தங்கள், இந்திய கடற்கரை நெடுகிலும் சரி பார்க்கப்பட வேண்டும்.

"காசா' நகர மக்களின் உடல் நலம் தொடர்புடைய ஓர் ஆய்வை இப்பொழுது மேற்கொள்வது மிகவும் அவசியமானது. குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலை, பெண்களின் பேறுகால நோய் கள் குறித்த விவரங்கள், கடந்த பத்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு தொடர்புடைய விவரங்கள், பிறந்த எடை, இறப்பு விகிதம் உட்பட, பால்வாடிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான தனித்துவமான நோய் கூராய்வு, குழந்தைகளின் நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் பொழுது, கை நீளம், கை சுற்றளவு என இது போல் பல அடிப்படைத் தரவுகளை நாம் இப்பொழுது தொகுக்கத் தொடங்கினால்தான் நாளை வரும் புதிய மாற்றங்களை ஒப்பிட இயலும். குழந்தைகளின் அறிவுக்கூர்மையை ஓவியம் வரைதல் முறையில் சோதிக்க வேண்டும். இப்படியான மருத்துவம் சார்ந்த தகவல்கள் நம்முடைய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போல, ஒவ்வொரு மாவட்டத்திற்கான தகவல்களையும் அரசாங்கம் தன் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டாமா?

நன்றி: அ. முத்துக்கிருஷ்ணன்
http://www.keetru.com/dalithmurasu/jun09/muthukrishnan.php

No comments: