Saturday, September 13, 2008

வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார் மன்மோகன் சிங். அவரோடு சேர்ந்து சோனியா, காங்கிரஸ், முலாயம், தி.மு.க, பா.ம.க எல்லாருக்கும் வரலாற்றில் இடம் கிடைத்துவிட்டது. அது என்ன இடம்? கடைசியில் சொல்வோம்.
அமெரிக்காவுடன் போடும் அணு ஒப்பந்தத்துக்குத் தேவையான அனுமதியை அணுசப்ளைக் குழு நாடுகள் கொடுத்துவிட்டன என்பது அவற்றுக்கும் அமெரிக்காவுக்கும்தான் சாதகமான செய்தி; இந்தியாவுக்கு அல்ல.


அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதவரை இந்தியாவை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஆறேழு நாடுகள் கடைசி வரை எதிர்ப்பு காட்டின. இந்தியா மறுபடியும் அணு ஆயுத சோதனை செய்யமுடியாமல் தடுக்க வேண்டும் என்பதே அவற்றின் நிபந்தனை.
அவர்களை மனம் மாற்றியது கடைசி நிமிடத்தில் வேண்டுமென்றே `வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் மூலம் அமெரிக்கா அம்பலமாக்கிய புஷ் அரசின் ரகசியக் கடிதம்.

இந்தியாவுக்கு சலுகை காட்டுகிறோமா என்ற கேள்விக்கு செனட்டர் பெர்மனுக்கு அமெரிக்க அரசு அனுப்பிய கடிதம் அது.
இந்தியா அணு குண்டு சோதனை செய்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும். எரிபொருள் நிறுத்தப்படும் என்பதை அந்தக் கடிதத்தில் அமெரிக்கா பகிரங்கமாக சொல்லிவிட்டது. 1973லும் அமெரிக்கா அப்படிச் செய்தது. இனிமேலும் இந்தியா குண்டு வெடித்தால் அமெரிக்கா கழுத்தறுத்துவிடும் என்பது நிச்சயமாகத் தெரிந்ததும் அணுசப்ளை குழுவின் 45 நாடுகளும் சம்மதம் கொடுத்தன.ஆனால், மன்மோகன் வகையறாக்கள் தொடர்ந்து இங்கே பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழந்துவிடவில்லை என்பது முதல் பொய். `நாங்களாகவே அணுகுண்டு சோதனை நடத்துவதை நிறுத்திவைத்துவிட்டோம். இனி நடத்தும் வாய்ப்பில்லை' என்ற வாக்குறுதியை சொல்லித்தான் அணு சப்ளைக் குழுவை இந்திய அதிகாரிகள் இணங்க வைத்திருக்கிறார்கள்.


இந்திய அணு சக்தித் துறைத் தலைவர் அனில் ககோட்கர் மறைமுகமாக சொல்லி விட்டார். குண்டு வெடிப்பதாக இருந்தால், அணு உலைகளுக்கு எரிபொருள் சப்ளை பாதிக்காமல் தொடர்வதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டுமென்றார். அதாவது குண்டு வெடித்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் சப்ளையை நிறுத்திவிடுவார்கள் என்று இதற்கு அர்த்தம்.

`இனிமேல் குண்டு வெடிக்க மாட்டோம், அணு ஆயுதப் பரவலை தடுப்பதுதான் எங்கள் கொள்கையும் கூட' என்று இந்தியா சொல்வது இன்னொரு பொய். அப்படியானால் இந்தியாவில் இருக்கும் எல்லா அணு உலைகளையும் சர்வதேச அணுக்கழகக் கண்காணிப்புக்கு உட்படுத்த முன்வரலாமே ? சில உலைகளை பிரிப்பது ஏன் ?

சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளும் பொய் சொல்கின்றன. எல்லாருக்கும் இன்னொருவர் சொல்வது பொய் என்பதும் தெரியும். இருந்தும் ஒரு நாடகமாடுகிறார்கள். ஏன்? இந்த நாடகம் எல்லாம் அணு ஆயுத தடுப்புக்காக அல்ல. அவரவர் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளத்தான்.
அணு சப்ளைக் குழு என்ற அமைப்பு, பெட்ரோலிய எண்ணெய் தயாரிக்கும் நாடுகளின் கூட்டமைப்பு போல இன்னொரு வணிக அமைப்புதான். அது ஆயில் வியாபாரம். இது அணு வியாபாரம்.

இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு என்ன லாபம் என்பதை ரகசியக் கடிதம் சொல்கிறது. இந்தியா வாங்கப் போகும் எட்டு அணு உலைகளில் இரண்டை அமெரிக்காவிடம் வாங்கினால் கூட, அங்கே 3000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 15 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்குமாம். அணு சப்ளைக் குழு சம்மதம் கொடுத்துவிட்டதை வைத்துக் கொண்டு, இந்தியா இதர நாடுகளுடன் அணு வர்த்தகத்தை ஆரம்பித்துவிடக் கூடாது. 123 ஒப்பந்தம் எங்கள் செனட்டில் ஏற்கப்படும்வரை காத்திருந்து எங்களுடன்தான் முதலில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் கான்டெலசா ரைஸ் பேச (புலம்ப) ஆரம்பித்துவிட்டார்.

இந்தியாவிலோ, ரிலையன்ஸ், ஜின்டால், வீடியோகான் முதலிய 40 தனியார் நிறுவனங்கள் வெளி நாட்டுக் கூட்டுடன் அணு உலை அமைக்க அரசிடம் மனு போடத் தொடங்கிவிட்டன. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இறங்கப் போகும் துறை இது.

இதுதான் அடுத்த பெரிய ஆபத்து. ஏனென்றால், அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது.

கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.
சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்பது இங்கே நடக்கும் ஊழல் ஆட்சிகளின் கீழ் ஒரு சட்டப்படியான மோசடி. தியாகராய நகரில் விதி மீறிக் கட்டிய வியாபாரிகளின் கட்டடங்களை இடிக்காமல் தடுக்க அவசரச் சட்டம் போட்டதில் தமிழகத்தில் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாருக்கும் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக உள் விஷயங்கள் அறிந்த பல நிருபர்கள் சொல்கிறார்கள்.

`சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் சிறுமிகளை கொத்தடிமையாக வேலைக்கு வைத்துச் சுரண்டும் தொழிலதிபர்களில் ஒருவர் கூட இது வரை கைது செய்யப்படவில்லை. திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை மாவட்டங்களில் தொடர்ந்து இந்தச் சுரண்டல் பாலியல் கொடுமை உட்பட நடக்கிறது.

அது மட்டுமல்ல, மேலை நாடுகளில் சுற்றுச்சுழல் இயக்கங்கள் விழிப்பாக இருப்பதால், அங்கிருந்து குப்பைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். வாராவாரம் பிரிட்டனில் வீடு தோறும் திரட்டும் குப்பை இந்தியாவுக்கு வருகிறது. அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும், வந்தாரை வாழவைக்கும் நம் தமிழகத்துக்கு.

கோவை அருகே விவசாயக் கிணறுகளில் 180 டன் அமெரிக்கக் குப்பைகளை கொட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் 1000 டன் இறக்குமதிக் குப்பை அழுகிக் கொண்டிருக்கிறது. சேது கால்வாய்த் திட்டம் தப்பித்தவறி நிறைவேறி, அதில் கப்பல்களும் ஓடினால், தமிழக அரசியல்வாதிகள், குப்பைக் கப்பல் கான்ட்ராக்ட் ஏலம் விட்டு இன்னும் கொள்ளையடிக்கதிட்டம் தீட்டலாம்.

`டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடும், பிரிட்டிஷ் டி.வியும் இந்தக் குப்பை மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. வேஸ்ட் பேப்பர் மறு சுழற்சி என்ற பெயரில் எப்படி எல்லா விதமான கழிவுகளும் தமிழகத்துக்கு அனுப்பப்படுகின்றன என்பதைப் படித்தால், வயிறு எரிகிறது. குமாரபாைளையத்தில் ஒரு விவசாயக் கிணற்றில் வெளி நாட்டு மருத்துவமனைக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன.

இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !

அதனால்தான் சொல்கிறேன். அணு ஒப்பந்தத்தைத் திணித்த மன்மோகன் முதல் ஆதரித்த அத்தனை பேருக்கும் வரலாற்றில் இடம் நிச்சயம் உண்டு. தேசத் துரோகிகள் பட்டியலில். இதர ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாரும் அதே பட்டியலில்தான்.

இன்னும் பத்து வருடம் ஆனாலும் புதிய அணுமின்சாரம் வரப்போவதில்லை. 20 வருடம் ஆனாலும் மொத்த மின்சாரத் தேவையில் பத்து சதவிகிதம் கூட கிடைக்காது. அணுகுண்டு தயாரிப்பது நிச்சயம் நடக்கும்.

இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது.

இந்த வாரக் குட்டுகள் மற்றும் கேள்விகள்:

திராவிடர் கழக மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மீ.கி.வீரமணி பட்டருக்கு.

குட்டு 1: பெரியார் எழுத்துகளை நாட்டுடைமையாக்க விடாமல் தடுப்பதை நான் ஓ பக்கங்களில் கண்டித்து எழுதியதற்காக என்னை `பார்ப்பான் என்றும் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாதவன் என்றும் கூலிக்காக தொலைக்காட்சியில் `அய்யா' தொடரைத் தயாரித்தேன் என்றும் விடுதலையில் என் மீது அவதூறுகள் செய்திருப்பதற்காக.கேள்வி 1: சொந்த பத்திரிகை நடத்த பணபலம் இல்லாதவனாக இருந்தபோதும் கருத்துச் சுதந்திரத்துக்காக சிறிய அளவில் ஒரு பத்திரிகையை நடத்த மீண்டும் மீண்டும் முயற்சித்து தோற்றுப்போவது எனக்குப் பெருமைதான். பெரியார் போல ஒருவர் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து சேர்த்த ணத்தில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்உங்களைப் போல எனக்கு இல்லாதது குற்றமா?

கேள்வி 2: பொதிகைக்காக அய்யா தொடரைத் தயாரித்ததில் எனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்புதான் ஏற்பட்டது என்பதை உங்கள் இயக்க நண்பர்கள் உட்பட பலரும் அறிந்திருக்கும் நிலையில், கூலிக்காகத் தயாரித்தேன் என்று சொல்லஉங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் வீடு, கார், ஏ.சி. அறை, உணவுச் செலவு, போக்குவரத்து செலவு உட்பட வாழ்க்கைச் செலவு அனைத்தையும் இத்தனை வருடமாக நீங்கள் என்ன தொழில் செய்து சம்பாதித்தீர்கள்? இவற்றையெல்லாம் தருவது உங்கள் இயக்க அமைப்புகள்தானே? எனவே நீங்கள் செய்து வந்த பெரியார் பிரசாரம் எல்லாமே கூலிக்காக செய்து வந்ததுதான் என்று சொன்னால் என்னை விட அதிகமாக உங்களுக்குத்தானே பொருத்தமாக இருக்கும் ?

கேள்வி 3: சில வருடங்களுக்கு முன்னர் , `நந்தன் வழி' இதழ் நிறுவனர் அருணாசலத்துக்கும் எனக்கும் கருத்து மோதல் ஏற்பட்டபோது, அவரை `புதிய பார்ப்பனர்' என்று நான் வர்ணித்து எழுதிய கடிதத்தைப் பாராட்டி என்னிடம் தொலைபேசியில் பேசியது மட்டுமல்ல, விடுதலையில் பிரசுரித்தும் மகிழ்ந்தீர்களே, அப்போது நான் பார்ப்பானாக உங்களுக்குத் தெரியவில்லையா?

கேள்வி 4: 1983-ல் காஞ்சி சங்கராச்சாரி ஜயேந்திர சரஸ்வதியை சின்னக் குத்தூசியும் நானும் சந்தித்து விட்டு வந்து அவரை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரைகளை நூலாக வெளியிட்டீர்களே, அப்போது நான் பார்ப்பானாகத் தெரியவில்லையா?

கேள்வி 5: பெரியாரின் எழுத்துகளின் அறிவுசார் சொத்துரிமை உங்களுக்கே உரியது என்று இப்போது உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறீர்களே, என் கட்டுரையை என் அனுமதி பெறாமல், எனக்குத் தெரிவிக்காமல் நூலாக உங்கள் அமைப்பு வெளியிட்டு 25 வருடமாக விற்பனை செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறதே? என் அறிவுசார் சொத்துரிமையை நீங்கள் திருடிக் கொண்டதும் குற்றம் இல்லையா? அதற்கான இழப்பீடாக வருடத்துக்கு 4 லட்சம் ரூபாய் வீதம் 25 வருடங்களுக்கான ஒரு கோடி ரூபாயை எப்போது எனக்கு அனுப்பிவைப்பீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?.

இந்த வாரப் பூச்செண்டு
சேலம் கந்தப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் நுழைய இதுவரை தடை செய்யப்பட்டிருந்த தலித்துகளை அனுமதிக்கும்படி உயர் நீதிமன்றம் இட்ட கட்டளையை போலீஸ் உதவியுடன் நிறைவேற்றியிருக்கும் தமிழக அரசுக்கு இ.வா.பூஇந்த வார நினைவூட்டல்

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு. பொது நலனுக்காக விவசாய நிலங்களையெல்லாம் கையகப்படுத்தும் உரிமையுடைய உங்கள் அரசு, அதே பொது நலன் கருதி செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்கு முன்பாக அவர் எழுத்துகளை நாட்டுடைமையாக்குவதை அறிவிக்க, இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி இருக்கிறது. உங்களுக்காக 129 பூச்செண்டுகள் காத்திருக்கின்றன.
thanks: Kumudam - Jnnani

No comments: