முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு
வணக்கம்.
காவல் துறையினருக்கு பாலின நிகர் நிலை வகுப்புகள், ஆசிரியர் இடமாற்றத்துக்கு பகிரங்க கவுன்சிலிங் முறை போன்ற உங்கள் ஆட்சியின் சில நல்ல பணிகளை நான் பாராட்டுகிறேன் என்றாலும் பொதுவாக நான் உங்கள் அரசியலை ஆதரிப்பவன் அல்ல.
எனினும் எனக்கும் நீங்கள்தான் முதலமைச்சர். உங்களுடன் உடன்படுவோர், உடன்படாதோர் எல்லாருடைய நலனும் உங்கள் பொறுப்புதான். எனவே தமிழகத்தின் ஒரு பொதுப் பிரச்சினையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்பி இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகத்தை நவீன வசதிகள் நிறைந்த வளாகமாக உருவாக்கும் கனவு ஒன்று உங்களுக்கு இருக்கிறது. அதற்காக இடம் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். மகாபலிபுரம் அருகே மலேசிய அரசு உதவியுடன் புதிய தலைமையகம் கட்ட திட்டம் கூடத் தீட்டியிருக்கிறீர்கள். தற்காலிகமாக ராணி மேரி கல்லூரி வளாகத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதன் சட்டப்படியான சரி தவறுகள் இப்போது நீதி மன்றத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இருக்கட்டும்.
மெரினாவானாலும் சரி , மகாபலிபுரமானாலும் சரி இரண்டுமே கல்பாக்கத்திலிருந்து எவ்வளவு தொலைவு என்பதுதான் முக்கியம். சென்னை 60 கிலோமீட்டருக்கும் குறைவு. மகாபலிபுரம் 10 கிலோமீட்டருக்கும் குறைவு. கல்பாக்கத்தில் ஒரு விபத்து நடந்தால் போதும். சென்னை நகரம் அவ்வளவுதான். செர்னோபில் கதி ஏற்படும். கதிர்வீச்சுக்கு ஆட்சி நடத்துவது அதிமுகவா, திமுகவா என்ற வேறுபாடுகளெல்லாம் கிடையாது. கடவுளை விடக் கதிர்வீச்சு சமத்துவத்தில் நம்பிக்கையுள்ளது. கடவுளாவது சிலரை ஏழையாகவும் சிலரை பணக்காரராகவும் சிலரை புத்திசாலிகளாகவும் சிலரைப் பாமரராகவும் படைத்துவிட்டார் என்கிறார்கள். கதிர்வீச்சு இந்த பேதம் எதுவும் பார்க்காது. அதற்கு நீங்களும் ஒன்றுதான். கருணாநிதியும் ஒன்றுதான்.
பயங்கரவாதிகளுக்கு கல்பாக்கம் போன்ற கடலோர அணு உலைகள் 'சிட்டிங் டக் ' என்று சொல்லக்கூடிய எளிமையான இலக்குகள். அதன் மீது விமானத்தில் ஒரு குண்டு போட்டால் போதும். அணுக்க்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும். அப்படியொன்று நடந்தால் அதை முன்கூட்டி அறிந்து தடுக்கும் அறிவும் அற்றலும் நமக்கு உண்டா என்பது எனக்கு சந்தேகம்தான். ஏனென்றால் அண்மையில் அமெரிக்க விமானமும் ஹெலிகாப்டரும் கல்பாக்கம் மீது ரவுண்ட் அடித்துவிட்டு சென்ரபோது அதைத்தடுக்கவோ, முன்கூட்டி அறியவோ நமக்கு முடியவில்லை என்று செய்தி படித்திருப்பீர்கள்.
அப்படி ஏதேனும் பயங்கரவாதிகள் வந்து தாக்கினால்தான் கல்பாக்கத்தால் ஆபத்து என்று நினைக்க வேண்டாம். கல்பாக்கத்திலே விபத்து நடந்தாலே போதும். விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. அப்படி விபத்து நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? உங்கள் அரசா ? மத்திய அரசா ? விபத்து வரையில் போக வேண்டாம். இப்போதே கல்பாக்கத்தின் கதிர் இயக்கத்தால் சுற்று வட்டாரங்களில் புற்று நோய் அதிகரித்தால் அதற்கு யார் பொறுப்பு ? உங்கள் அரசா ? மத்திய அரசா ?
மத்திய அரசுதான் என்று உங்கள் அதிகாரிகள் உங்களிடம் சொல்லக்கூடும். கல்பாக்கம் மத்திய அரசின் அணுசக்தித்துறை, ராணுவத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனம்; இதில் மாநில அரசுக்கு சம்பந்தமும் பொறுப்பும் கிடையாது என்பார்கள்.
மத்திய அரசு புத்திசாலி. உங்கள் அரசு அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொள்கிறது. நாளைக்கு ஏதாவது தவறு வந்தால், மாநில அரசே எல்லாம் சரியென்று சொல்லியிருக்கிறதே என்று வசதியாகச் சொல்லிவிட முடியும்.
கல்பாக்கத்தில் அணு குண்டு தயாரித்தாலும் சரி, அல்லது அணு சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரித்தாலும் சரி, எதைத் தயாரித்தாலும் அணுக்கழிவு என்பதே ஆபத்தானது. இன்று வரை உலகில் எங்கும் அணுக்கழிவை சக்தியிழக்கச் செய்து பாதுகாப்பானதாக ஆக்க எந்த தொழில் நுட்பமும் கிடையாது. பல தலைமுறைகளுக்கு அணுக்கழிவுகளிலிருந்தே கதிரியக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். எனவே கல்பாக்கம், கூடன்குளம் திட்டங்களெல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க நிறைய அறிவியல் ஆதாரங்கள் உண்டு என்றாலும், இப்போது என் கடிதத்தின் நோக்கம் அதை விவாதிப்பது அல்ல.
கல்பாக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களும், அங்கே தற்காலிக வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் சுற்று வட்டாரக் கூலித்தொழிலாளர்களும், அந்த வட்டாரப் பகுதி மக்களும் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது பற்றிய எங்கள் கவலையை தெரிவிப்பதே நோக்கம்.
கல்பாக்கம் வட்டாரத்திலேயே தனியார் மருத்துவராகப்பணி புரிந்து வருபவர் டாக்டர் புகழேந்தி.
கேரளத்தில் கதிரியக்க பாதிப்பு பற்றிய ஆய்வுக்காக புகழ் பெற்ற அறிஞர் வி.டி.பத்மநாபனுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர் புகழேந்தி. பாதுகாப்பான சூழலுக்கான மருத்துவர் அமைப்பு ( Doctors for Safer environment- DOSE) என்ற சமூக அககறை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.ரமேஷ். இவர் தமிழக அணு உலைத்திட்டங்கள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். இவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகுந்த கவலை தருகின்றன.
ஏனென்றால் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பவர்கள் உங்கள் அரசின் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள்.அண்மையில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டவர் உங்கள் அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சர். அது மெய்தானா என்று பரிசீலிக்க வேண்டியது உங்கள் அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம்.
அறிக்கைகள் எப்படியிருந்தாலும் அசல் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்டவே இந்தக் கடிதம்.
மாண்புமிகு அமைச்சர் செம்மலை கடந்த மாதம் 20ந்தேதியன்று ' அணு மின் நிலைய ஊழியர்களுக்கு கதிர்வீச்சினால் புற்று நோய் ஏற்படுவதில்லை ' என்று ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டார். ( தினமணி- 21-3-2003) இந்த ஆய்வைச் செய்தவர் உங்கள் அரசின் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வி.எஸ்.ஜெயராமன்.அறிக்கை கூறும் தகவல்கள் இதோ: கதிர்வீச்சால் பாதிப்பு உண்டா என்று கல்பாக்கத்தில் மொத்தம் 15,020 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஊழியர்கள் -5462. அவர்களுடைய இல்லத்துணைவர்கள் ( spouses)- 3969. குழந்தைகள் - 5589. இவர்களில் மொத்தம் 14 பேருக்கு மட்டுமே புற்று நோய் அறிகுறிகள் இருந்தனவாம்.
ஆனால் நமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி ஏற்கனவே அணு மின் நிலைய மருத்துவமனையிலேயே 167 பேர் புற்று நோய அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புற்று நோய் அறிகுறி இருக்கிறதா என்று காஞ்சி மருத்துவமனை எப்படி சோதித்தது ? நாம் விசாரித்த அளவில், ஊழியர்களின் சட்டையைக் கூடக் கழற்றி சோதனை செய்யவில்லை. அப்போதுதான் அக்குள் இடுக்கில் தொடை இடுக்கில் கட்டிகள் உருவாகியிருக்கிறதா என்பதை மருத்துவர் கண்டறியமுடியும். சாதாரணமான இருமல், சளிக்கு ஒரு மருத்துவரிடம் சென்றாலே, சட்டையைக் கழற்றிவிட்டு சோதிப்பார்கள். எனவே நடத்தப்பட்ட சோதனை எந்த அளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. பல சோதனைகள் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவை நடத்தப்படவே இல்லை என்று சோதனைக்குச் சென்ற பலர் மூலம் தெரிய வருகிறது.
ஓரளவுக்கு கதிர்வீச்சு இருப்பது உடலுக்கு நல்லது என்று வேறு உங்கள் அரசுமருத்துவர் ஜெயராமன் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த ஓரளவு என்ன என்று உலகிலேயே யாருக்கும் தெரியாது. இதில் வினோதம் என்ன்வென்றால், மத்திய அரசின் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ( atomic energy regulatory board) செயலாளர் திரு கே.எஸ்.பார்த்தசாரதி 27-2-2003ல் 'இந்து ' ஏட்டில் எழுதிய கட்டுரையில் ' குறைந்த அளவு கதிர்வீச்சு மனிதனுக்கு நலம் தருவதென்று ஒருபோதும் நிறுவப்படவில்லை. தீங்கு தருவது என்றும் முடிவு கட்டுவதற்கும் இல்லை. ' ( Low dose ezposure has never been shown to be beneficial to man. It has not been conclusively shown to be harmful either) என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல. இதே கட்டுரையில் அவர் ஐ.நா சபையின் அறிவியல் குழு, குறைவான கதிர் வீச்சு அளவு என்ற கோட்பாட்டையே ஏற்க மறுத்துவிட்டது என்று கூறியிருக்கிறார். அதாவது ஒருவர் வருடத்தில் எந்த அளவுக்கு கதிர் வீச்சை உடலில் வாங்கிக் கெ 'ள்ளலாம் என்பதற்கு அளவு நிர்ணயிக்க முடியும் என்பதையே அந்த குழு நிராகரித்து விட்டது.
பல மேலை நாட்டு ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான கதிர்வீச்சு ( 30 மடங்கு குறைவாக இருந்தபோது கூட) புற்று நோய் ஏற்பட்டது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Rosalie Bertell, Chris Busby என்று புகழ் பெற்ற ஆய்வாளர்களின் விவரமான அறிக்கைகள் இணைய தளத்தில் படிக்கக்கிடைக்கின்றன.
ஆனால், கல்பாக்கத்திலும் இந்தியாவின் மற்ற அணு உலைகளிலும், ஊழியர்கள் வருடத்தில் இந்த அளவு கதிர் வீச்சு வாங்கினால் ஆபத்து இல்லை என்று ஒரு அளவை வைத்துக் கொண்டுதான் இந்த நிர்வாகங்கள் வேலை வாங்கி வருகின்றன. ஊழியர்கள் அணியும் பிலிம் பேட்ஜில் கதிரியக்கம் பதிவாகும். இதைக் கொண்டுதான் அவருக்கு எவ்வளவு கதிர் வீச்சு ஊடுருவியது என்பது தெரியும். உள் ஊடுருவலை அளக்க தனி கருவி, தனி சோதனை தேவை.
இதில் கொடூரம் என்னவென்றால் எந்த ஊழியருக்கும் அவர் எந்த அளவுக்கு கதிர் வீச்சை வாங்கியிருக்கிறார் என்பதைத் தெரிவிப்பதில்லை. அவர் ஆபத்தான அளவுக்கு வாங்கிவிட்டார் என்று நிர்வாகம் கருதும்போதுதான் அவருக்கு தெரிவிக்கப்படும். என் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அவ்வப்போது வங்கியில் விசாரிக்கும் உரிமையை விட அதி முக்கியமான இந்த உரிமை ஊழியருக்குக் கிடையாது.
தற்காலிக வேலைக்காக பக்கத்து கிராமங்களிலிருந்து அழைத்து வரப்படும் படிப்பறிவற்ற கூலித் தொழிலாளர்களின் நிலைமை என்ன ? உங்கள் ஆதரவாளர்கள் பத்திரிகை படிப்பவர்கள் அல்ல என்று அண்மையில் கூறியிருந்தீர்கள். இந்தத் தொழிலாளர்கள் அந்தப் பிரிவினர்தான். பத்திரிகை படித்தால் கதிர்வீச்சு பற்றி எதிலேனும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்.
சுரேஷ் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 26) 2001ல் நிண நீர் சார்ந்த புற்று நோயில் ( non-hodghkins lymphoma) இறந்து போனார். ஆறுமுகம் என்ற தற்காலிகத்தொழிலாளருக்கு 24 வயதிலேயே 50 வயதுக்காரர்களுக்கு மட்டுமே பொதுவாக வரக்கூடிய குடல் புற்று நோய் ஏற்பட்டு செத்துப்போனார். செல்வகுமார் என்ற தற்காலிக ஊழியர் ( வயது 20) 9-7-2002 அன்று cotress spring என்ற பொருளை flaskலிருந்து எடுக்கும்படிபணிக்கப்பட்டார். எடுத்ததும் எச்சரிக்கை மணி ஒலித்தது. காரனம் அது அதிகக் கதிரியக்கம் உள்ள பொருள். அவரது மருத்துவப் பரிசோதனையில் ரத்தத்தில் neutrophils எண்ணிக்கை 22 சதவிகிதம்தான் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சாதாரணமாக இது ஒருவருக்கு 40 முதல் 75 சதம் வரை இருக்க வேண்டும். குறைந்திருப்பதற்கு கதிர்வீச்சு பாதிப்பே காரணம். புற்று நோய் வரும் ஆபத்தில் இருக்கும் செல்வகுமார் தனக்கு ஊடுருவிய கதிர்வீச்சு அளவைத்தெரிவிக்கும்படி கல்பாக்கம் நிர்வாகத்திடம் கடிதப்பூர்வமாகக் கேட்டிருக்கிறார். இது வரை பதில் இல்லை. உள் ஊடுருவல் கதிர்வீச்சை அளவிடும் கருவி தனியார் யாரிடமும் கிடையாது. அணு சக்தி அமைப்பிடம் மட்டுமே உண்டு.
இவ்வளவு அஜாக்கிரதை நிலவும் கல்பாக்கத்தில் பெரிய விபத்து ஏற்பட்டால் நீங்கள், நான், ரஜினிகாந்த், ஸ்டாலின், நக்கீரன் கோபால் எல்லாருமே ஒரே கதியைத்தான் அடைவோம். அப்படி பெரிய விபத்து ஏற்படாமல் இதுவரை இருப்பதற்குக் காரணம், சிறப்பான பாதுகாப்பு அக்கறை அல்ல. உங்கள் நம்பிக்கைப்படி பார்த்தால் கடவுள்தான் காப்பாற்றிவருகிறார். என் கருத்தில், தற்செயலாக தப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
பெரிய விபத்து நடந்துவிடக் கூடாதே என்ற கவலை அதிகமாவதற்குக் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரப் பின்பற்றப்படுவதில்லை என்பதால்தான். ஆனால் இதை வெளியில் தெரியவிடாமல், 1962ம் வருட அணு சக்தி சட்டம், ரகசியம் என்று பயமுறுத்தி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இல்லை என்று அங்குள்ள ஊழியர்களின் சங்கமே கவலை தெரிவித்து வேலை நிறுத்தம் செய்வோம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னால் எச்சரித்திருக்கிறது. BARC facilities employees ' association எனப்படும் ஊழியர் சங்கம் 24-1-2003ல் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கும் அதிர்ச்சியான தகவல்கள் இதோ:
2001 மே 30ந் தேதி இரவு புளுட்டோனியம் ரிகன்வர்ஷன் பகுதியில் விதிகளுக்கு முரணாக இரவு வேலை செய்யப்பட்டது. சேஃப்டி விதிகளை பின்பற்றாததால், நியோப்ரின் கையுறை ஓட்டையாகி, ஊழியர் எஸ்.சிவகுமார் என்பவருக்கு உள் கதிர்வீச்சு ஏற்பட்டது.
2002 டிசம்பர் 19 அன்று அதே பிரிவில் விபத்து ஏற்பட்டது. காற்றில் கதிரியக்கம் கடுமையாக அதிகரித்தது.இந்த தருணத்தில் தரப்பட வேண்டிய பிளாஸ்டிக் உடை, நல்ல காற்று சுவாசிப்பதற்கான கருவிகள் தரப்படவில்லை. ஊழியர்கள் மதுசூதனன், ராஜன் இருவருக்கும் கதிர் வீச்சு ஏற்பட்டது.
2003 ஜனவரி 21அன்று இதுவரை இந்திய அணுசக்தித்துறை வரலாற்றிலேயே ஏற்பட்டிராத ஒரு விபத்து கல்பாக்கம் KARPல் ஏற்பட்டது. சீனிவாச ராஜு என்பவர் ஒரு திரவத்தை எடுத்து வர அனுப்பப்பட்டார். அது என்ன திரவம், அதன் கதிரியக்கத்தன்மை என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரியாமல் அவர் அதை எடுத்து வரச் செய்யப்பட்டார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் அதைக் கையாண்டார். லேபரட்டரியின் எச்சரிக்கை மணி ஒலித்தபிறகுதான் அந்தத் திரவத்தின் அதிக கதிரியக்க ஆபத்தினால் எச்சரிக்கை எழும்புகிறது என்பது உணரப்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் காமா மீட்டர் இருந்திருந்தால் அவர் அதைக் கையாளாமல் தடுத்திருக்கலாம். இதன் விளைவு மிகச் சிறு வயதிலேயே ராஜு மிக அதிக உள் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டார். ஒரே நாளில் சுமார் 40 R அளவு. (ஒருவர் ஒரு வருடத்துக்கு அதிகபட்சம் 5 R அளவுக்கு உட்படுத்தப்படலாம் என்று பல ஆண்டுகள் முன்பு இருந்தது மாற்றப்பட்டு இப்போது அதிகபட்சம் ஆண்டுக்கு 1 R என்று உள்ளது. ராஜு பெற்றது ஒரே நாளில் 40 Rக்கு மேல்).
KARP அணு உலைப் பகுதியில் எப்போதும் கழுத்தை முறிக்கும் அவசரத்தில்தான் வேலை வாங்கப்படுகிறது. இப்படியே போனால் இன்னும் இங்கே நடக்காத ஒரே விபத்து உலையிலிருந்து கசிவு (criticality) ஏற்படுவதுதான். அதுவும் நடந்துவிடும்.
மேற்கண்ட தகவல்கள் ஊழியர் சங்கத்தின் கடிதத்தில் இருக்கின்றன. இதற்குப் பிறகு 15 நாட்கள் கழித்து 11-2-2003ல் இன்னொரு கடிதத்தை சங்கம் நிர்வாகத்துக்கு அனுப்பியது. முன்கடிதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எழுப்பிய 10 கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் மெளனமாக இருக்கிறது. இந்த மெளனம் தொடர்ந்தால், பிப்ரவரி 16 இரவு முதல் வேலை நிறுத்தம் தொடங்குவோம் என்று சங்கம் இந்தக் கடிதத்தில் எச்சரித்தது. அதன் பிறகுதான் ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. முழுமையான தீர்வுகள் இன்னமும் வரவில்லை.
இப்படி அதிஆபத்தான ஒரு அணு உலையில் அதிமெத்தனமாகவும் அதி அலட்சியமாகவும் இருக்கும் மத்திய அரசு, அங்கே எல்லாம் நன்றாகவே உள்ளது என்று மக்களை ஏமாற்ற உங்கள் அரசைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக்கூடாது. அணு உலைப் பணியாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பது உலகம் முழுவதும் விஞ்ஞானிகளால், மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டபிறகும், காஞ்சி அரசு மருத்துவமனை இயக்குநர் எதற்காக கல்பாக்கம் நிர்வாகத்தின் சார்பில் தவறான தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் ?
குறைந்தபட்ச அணுக்கதிர் வீச்சு உடலுக்கு நல்லது என்கிறார் அவர். ஒரே பிரிவில் பணியாற்றி 'குறைந்தபட்சக் கதிர்வீச்சு ' பெற்று செத்துப்போனவர்கள் பட்டியல் இதோ : திரு மோகன் தாஸ். இவருக்கு multiple myeloma. கதிரியக்கத்தால் வரும் சகஜமான புற்று நோய் இது. எலும்பு மஜ்ஜைப் பகுதியில் உருவாகும் பிளாஸ்மா செல்களை பாதிப்பது. அடுத்தவர் திரு சிவசங்கரன் பிள்ளை. ரத்தப் புற்று நோய். திரு செல்லப்பன் என்பவரின் குழந்தை ஊனமாகப் பிறந்து இறந்துவிட்டது. திரு கான் என்பவருக்கு பிறப்புறுப்பில் புற்று நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் வாழ்ந்து வருகிறார். நால்வரும் கல்பாக்கத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்கள்.
பாதிக்கப்படுவது கல்
பாக்கத்தில் பணி புரியும் ஊழியர்களும் குடும்பத்தினரும் மட்டுமல்ல.சுற்று வட்டாரங்களிலும் கதிரியக்கம் இருக்கிறது. ( ஏற்கனவே மீன்வளம் இந்தப்பகுதியில் பாதிக்கப்பட்டுவிட்டது தனிக்கதை.) மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஒரு சாட்சியம் ஆறாவது விரல்.
சினிமாவில் டபிள் ரோல் செய்யும்போது இரட்டையரில் ஒருவருக்கு மட்டும் ஆறு விரல் என்பதை வைத்து வில்லனை அடையாளம் கண்டுபிடிக்கச் செய்வது ஒரு உத்தி. உண்மையில் ஆறு விரல் என்பது மரபணு சிதைவின் அடையாளம். நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் ( consanguinous marriage) செய்வது பல மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதன் ஒரு வெளிப்பாடு ஆறு விரல். மருத்துவ ரீதியாக இது polydoctyly syndactyly என்று அழைக்கப்படுகிறது. ஆறு விரலுக்கு இத்தகைய மண உறவு அல்லாத காரணம் கதிர்வீச்சுதான். கதிரியக்கம் செல்களை பாதிப்பதால் இது ஏற்படுகிறது.
கடலோரம் உள்ள கல்பாக்கத்தின் வடக்கே 35 கிலோமீட்டர் தூரத்தில் கோவளம் இருக்கிறது. இடையில் புதிய கல்பாக்கம், தேவநேரி,மகாபலிபுரம்,வெண்புருசம்,கொக்கிலமேடு முதலிய இடங்கள் உள்ளன. தெற்கே 45 கிலோ மீட்டர் தூரத்தில் மரக்காணம். நடுவே மெய்யூர் குப்பம், செட்ராஸ் குப்பம்,புதுப்பட்டினம் குப்பம், ஒய்யாலி குப்பம்,கடப்பாக்கம், கைப்பாணி குப்பம் முதலிய இடங்கள் உள்ளன.
டாக்டர் புகழேந்தி இந்தப் பகுதிகளில் ஆறு விரல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்று ஆய்வு செய்தார். அதாவது நெருங்கிய உறவில் திருமணம் செய்யாத குடும்பங்களில் மட்டுமாக.12 வயதுக்குக் கீழே ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை : செட்ராஸ் குப்பம்- 2 டவுன்ஷிப்- 3 புதுப்பட்டினம் - 1 ஒய்யாலிகுப்பம் -2 தேவநேரி - 2 மகாபலிபுரம் - 1. இருபது 20 வயதுக்கு மேல் ஆறுவிரல்காரர்கள் எண்ணிக்கை - மரக்காணம் - 1, புதுப்பட்டினம் குப்பம் - 1, மெய்யூர் குப்பம் - 2 தேவநேரி குப்பம் - 3, ஒய்யாலிகுப்பம் - 4, செட்ராஸ் குப்பம் - 5.
இந்த விவரங்களை டாக்டர் ரமேஷ் உங்கள் அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கொடுத்து அவர்களை மேற்கொண்டு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பது என்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே எந்த நிறுவனமும் புதிய திட்டம் தொடங்கும் முன்பு உங்கள் அரசின் சுற்றுச்சூழல் வாரியத்திடமும் ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் முதலில் சூழல் பாதிப்பு அறிக்கையை ( envrionment impact assessment EIA) தயாரிக்க வேண்டும். பிறகு இது பற்றிய பொது விசாரணையை நடத்த வேண்டும். கல்பாக்கத்தில் புதிய 500 மெகாவாட் அதிவேக ஈனுலை ( prototype fast breeder reactor PFBR) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்காக சுற்றுச்சூழல் ஆய்வு நடத்திய கண்துடைப்பை டாக்டர் ரமேஷ் விவரிக்கிறார்.
ஜூன் 2001ல் காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பொது விசாரணை இன்னும் மூன்று தினங்களில் நடக்கும் என்று அறிவிக்கிறார். சட்டப்படி 30 நாள் நோட்டாஸ் தரவேண்டும்.இதை எதிர்த்து கோஸ்ட்டல் ஆக்ஷன் நெட்வொர்க் என்ற தொண்டு நிறுவனம் உயர் நீதி மன்றத்தில் வழக்கு போட்டதும், மறு நோட்டாஸ் தரப்பட்டு ஜூலை 27, 2002ல் பொது விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அணுசக்தி அமைப்பு தந்த சூழல் பாதிப்பு அறிக்கை பல டெக்னிக்கல் கோளாறுகளுடன் இருப்பதை விளக்கும் தன் அறிக்கையை டாக்டர் ரமேஷ் உங்கள் அரசின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் தந்தார். அதை அணுசக்தி அமைப்பு கண்டுகொள்ளவில்லை.
பொது விசாரணை காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தபோது பெரும் கூட்டம். அணு சக்தி நிர்வாகம் பஸ்சும் சோறும் கொடுத்து அழைத்து வந்திருந்த பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், சட்ட மன்ற உறுப்பினர் பலரும் கல்பாக்கம் நிர்வாகத்தால் பதில் கூற முடியாத கேள்விகளை எழுப்பினார்கள். கூட்டம் முடிந்ததும் அணுசக்தித்துறை இயக்குநர் டாக்டர் போஜ் நிருபர்களிடம் எப்படியும் திட்டமிட்டபடி டிசம்பரில் அணு உலை கட்டட வேலை தொடங்கும் என்றார். இப்படிச் சொல்வதை உங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் கடுமையாகக் கண்டித்தார். பொது விசாரணை விவரங்கள் டெல்லிக்கு அமைச்சகத்துக்கு சென்றன. டிசம்பரில் உலைக் கட்டட வேலை தொடங்கவில்லை.
பிறகு 2002 ஜூலை மாதத்தில் கட்டட வேலை ஜனவரி 2003ல் தொடங்கும் என்று டாக்டர் போஜ் அறிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைப்பும் மாநில சுற்றுச்சூழல் அமைப்பும் ஒப்புதல் தந்தது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
அதே ஜூலை மாதத்தில் 25ந் தேதியன்று கல்பாக்கம் மேப்ஸ்-2 உலையில் குளிர்விப்புப் பகுதி யில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளர் இறந்தார். பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அத்தனை பேரும் தற்காலிக தொழிலாளர்கள் என்கிறார் டாக்டர் ரமேஷ். இதே ரியாக்டரில் 1998ல் இதே பகுதி விபத்துக்குள்ளாயிற்று.
கல்பாக்கத்தில் விபத்து நடந்தால் உடனடியாக சுற்று வட்டார மக்களைப் பாதுகாப்பாக வேறு ஊர்க்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை ஜூலை 28ந்தேதியன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. அப்போது பஸ் பிரேக் டவுன் ஆயிற்று. காவல் துறை உட்பட எந்த அதிகாரியின் வயர்லெஸ் கருவிகளும் வேலை செய்யவில்லை. அசல் விபத்து நடந்தால், அப்போது இதே நிலைமை இருந்தால் மக்கள் கதி என்ன ?
முழு நேர ஊழியர்கள் சார்பில் தயங்கித் தயங்கியாவது குரல் எழுப்ப தொழிற்சங்கம் இருக்கிறது. காண்ட்டிராக்ட் கூலிகளாக வரும் எண்ணற்ற படிப்பறிவற்ற இளம் தொழிலாளர்களுக்காகவும் அப்பாவி பொது மக்களுக்காகவும் குரல் தரக்கூட ஆள் இல்லை.அது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்கவே இந்தக்கடிதம்.
புற்று நோய் என்பது ஒரே நாளில் வெளிப்பட்டுவிடுவதில்லை. நீண்ட காலம் இருந்து தொல்லை தந்து உயிர் குடிப்பது. இவ்வளவு அபாயகரமான நோயை ஏற்படுத்தக்கூடிய கதிரியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்ன தயாரிக்கிறோம் ? அணுகுண்டா ? மின்சாரமா ?
மின்சாரம் என்றே வைத்துக் கொள்வோம். ஏழை விவசாயிகளுக்கு மின் கட்டணத்தை நீங்களே இனி கட்டப்போவதாக அறிவித்திருக்கிறீர்கள். நல்லது. ஆனால் நீங்கள் வாங்கப்போகும் மின்சாரத்துக்கு எப்படி பணம் செலுத்துவீர்கள் ? கல்பாக்கம் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவைக் கட்டும்படி உங்களிடம் கேட்டால், மின்கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் கட்டுப்படி ஆகாது.
டாக்டர் ரமேஷின் ஆய்வுப்படி 1999-2000த்தில் தமிழ்நாட்டில் 4814.986 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆயிற்று. இதில் 27.562 சதவிகிதம் எடுத்துச் செல்லுவதில் வீணானது ( transmission loss). 21.297 சதம் விவசாயத்துக்கு. மின்வாரியத்துக்கு வருமானம் மீதி சுமார் 51 சதவிகிதத்திலிருந்துதான் வரவேண்டும். அதிலும் 20 சதம் (பொது விளக்கு, குடி நீர் போன்று) அரசு உதவி பெற வேண்டிய இனத்தில் சேரும். எனவே 31 சதம் மின்சாரத்தைதான் நீங்கள் விற்க முடியும். அதில் வரும் பணத்திலிருந்துதான் நெய்வேலிக்கும், கல்பாக்கத்துக்கும் பணம் தரமுடியும்.
கல்பாக்கம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆகும் செலவுக்கும் அதற்குக் கிடைக்கும் விலைக்கும் சம்பந்தமே கிடையாது. பெரும் நஷ்டம்தான். எதற்காக மத்திய அரசு தனக்கும் நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு தமிழக ஏழை மக்களுக்கும் புற்று நோயை ஏற்படுத்திக் கொண்டு கல்பாக்கத்தில் மின்சாரம் தயாரிக்க வேண்டும் ?
அணுகுண்டு தயாரிப்பதுதான் அசல் நோக்கமாக இருக்கலாம். அதை வெளியில் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழக மக்கள் தரும் விலை என்ன ? தலைமுறை தலைமுறையாகப் புற்று நோய், genetic disorders, மலட்டுத்தன்மை இவற்றை எதற்காக தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் ? வட தமிழ்நாட்டு வன்னியர்களும் தலித்துகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவது போதாது என்று தென் தமிழ் நாட்டு தேவர்களும் தலித்துகளும் மீனவர்களும் பாதிக்கப்படுவதற்காகக் கூடங்குளத்தையும் தாரை வார்த்து வைத்திருக்கிறோம்.
1988ல் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு சற்று முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கருணாநிதியையும் முரசொலி மாறனையும் சந்தித்து அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கினோம். எப்படி கேரளாவும் ஓரளவு கர்நாடகமும் இதற்கு அனுமதி தருவதே இல்லை என்பதை சுட்டிக் காட்டினோம். கூடன்குளத்தில் அணு உலை கூடாது என்று செயற்குழுவில் தீர்மானம் போட்ட தி.மு.க, ஆட்சியில் அமர்ந்த உடனே கொள்கை பல்டி அடித்துவிட்டது.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவர்கள் பதவி ஆசையுடைய அரசியல்வாதிகள். அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் சமூகத்தை நேசிக்கிற அரசியல் அறிஞர்கள் (statesmen). ஒரு stateswoman ஆக செயல்பட இது உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
இந்தியா அணுகுண்டு தயாரிப்பதையெல்லாம் உங்களால் நிறுத்த முடியாமல் இருக்கலாம்.
ஆனால் தமிழகக் குடிமக்களின் நலனுக்குப் பொறுப்பான முதலமைச்சர் என்ற முறையில் 'மிகக் குறைந்தபட்சம் கல்பாக்கமும் பின்னர் கூடன்குளமும் தங்கள் ஊழியர்களிடமும், பொது மக்களிடமும் கதிரியக்கம் பற்றிய எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகப் பகிர்ந்துகொண்டேயாக வேண்டும்; நியாயமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தே ஆக வேண்டும். சுயேச்சையான விசாரணைகளுக்கு தங்களை உட்படுத்தியே தீர வேண்டும் ' என்று கட்டாயப்படுத்தி செய்யவைக்க உங்களால் முடியும். அணுசக்தித்துறை எல்லாவற்றையும் மறுக்கும். போலியான அறிக்கைகளை அனுப்பி உங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கும். அதற்கெல்லாம் மசியாமல், நீங்கள் கல்பாக்கம் பகுதி மக்கள் நலனையும் கூடன்குளம் மக்கள் நலனையும் கருதி சுயேச்சையான விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரணையும் ஆய்வும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்வீர்களா ?
அன்புடன்
ஞாநி
Thursday, September 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment