Saturday, September 13, 2008

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் வாக்கியம் இது.


கேள்வி 1: ரேஷன் கடைகளில் அரிசி விலையை ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என்று நீங்கள் அறிவித்திருப்பதால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடையப் போவதாக கூறியிருக்கிறீர்கள். ஒரு குடும்பம் என்பது மிகக் குறைந்தபட்சம் மூன்று பேர் என்று வைத்துக் கொண்டால் கூட, தமிழ்நாட்டின் மொத்த குடும்பங்கள் 2 கோடி 20 லட்சம்தான். அப்படியானால், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத கதியில் இருக்கிறார்களா? ஐந்து முறை நீங்கள் முதலமைச்சராக இருந்ததன் விளைவு இதுதானா? என்ன கொடுமை......


கேள்வி 2: செல்வகணபதி என்று ஒரு ஊழல் பேர்வழியை...... மன்னிக்கவும், அவரைப் பற்றி அப்படி நான் சொல்லவில்லை. நீங்கள், உங்கள் அரசு சொன்னதுதான் அது. தி.மு.க.வில் இணைத்துக் கொண்டு உருகோ உருகென்று உருகிப் பேசியிருக்கிறீர்களே.... என்ன பேச்சு சார் அது ? இத்தனை காலமாக உங்களோடு வராமல் அவர் அ.தி.மு.க.வில் இருந்துவிட்டது பற்றி அப்படி ஒரு உருக்கம் உங்களுக்கு. ஒருவர் செத்த பிறகு அவரை எரித்து இறுதி அஞ்சலி செலுத்த வரும் இடத்தில், பிணம் பாதுகாப்பாக எரிவதற்கான கொட்டகைகளுக்குக் கூரை போடுவதில் கூட செல்வகணபதி ஊழல் செய்தார் என்று, அவர் மீது வழக்கு போட்டதே உங்கள் ஆட்சிதானே ?
அப்படிப்பட்டவர் இத்தனை காலமாக உங்களுடன் இல்லாமற் போனாரே என்று எதற்கு உருகுகிறீர்கள் ? சாவு வீட்டில் கூட கொள்ளை அடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஒரு கை, உங்கள் ஊழல் ஆட்டத்தில் குறைகிறதே என்ற வருத்தமா? அவர் ஊழல் செய்யாதவர், நேர்மையாளர் என்றால், உங்கள் அரசு போட்டது பொய் வழக்கா? நீதிமன்றத்திற்குப் போய் `இவர் மீது பொய் வழக்கு போட்டுவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று உங்கள் அரசு சொல்லத் தயாரா? வழக்கு போட்டது சரிதான் என்றால், இப்போது கட்சியில் சேர்த்துக் கொண்டது ஏன் ? தி.மு.க.வில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்று, எதிலும் ஊழல் செய்து சம்பாதிக்கும் சாமர்த்தியம் என்று அறிவிப்பீர்களா? என்ன கொடுமை........


கேள்வி 3: ஒருவர் மீது வழக்கு இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதா வந்தால் கூட சேர்த்துக் கொள்வோம் என்று அறிவித்திருக்கிறீர்களே.... அது நிச்சயம் சும்மனாங்காட்டி இல்லைதானே? உங்கள் ஆழ்மன விருப்பம் அதுதான் என்று நான் அறிந்த உளவியல் அணுகுமுறை சொல்கிறது. அவரோ, தான் ஒரு போதும் தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வராது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர விண்ணப்பிக்கும் நிலை வரும் என்று லாவணி பாடிவிட்டார். அதாவது அவருக்கும், நீங்களும் அவரும் ஒரே கட்சியில் இருப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிகிறது. தி.மு.க.வில் அவர் சேருவதா, அல்லது அ.தி.மு.க.வில் நீங்கள் சேருவதா என்பது மட்டும்தான் பிரச்சினை போலிருக்கிறது. கங்கை - காவிரி நதி நீர் இணைப்பு நடக்கிறதோ இல்லையோ, அரசியலில் ஊழல் கங்கையையும் ஊழல் காவிரியையும் இணைத்து மகிழ்வோம். பார்ப்பன எதிர்ப்பு ஒரு பிரச்சினையே அல்ல. பொது எதிரிக்கு எதிராக ராஜாஜியோடு அன்று கை கோர்க்கவில்லையா? இன்றைய உங்கள் பொது எதிரிகள் ராமதாஸ், விஜய்காந்த் எல்லாரையும் கூண்டோடு காலி செய்ய சிறந்த வழி இதுதான்.
உதவாதினி தாமதம். உடனே சசிகலாவுக்கு பரிச்சயமானவரான டி.ஆர்.பாலுவை விட்டுப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். எவ்வளவு சீக்கிரம் இரு கழக இணைப்பு நடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தமிழக அரசியலுக்கு நல்லது. அண்ணா நூற்றாண்டில் இந்த முயற்சியைத் தொடங்கினால், உங்கள் 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுக்குள் முடித்துவிடலாம். செய்வீர்களா ? என்ன கொடுமை.......


கேள்வி 4: 40 லட்ச ரூபாய்களை கழகத்திலிருந்து எடுத்து அண்ணாவின் ரத்த வாரிசுகளுக்கு `அள்ளிக்' கொடுத்திருக்கிறீர்கள். 20 சதவிகித பண வீக்க காலத்தில் இந்த 40 லட்ச ரூபாய்க்கு அசல் மதிப்பு என்ன என்பதை ப.சிதம்பரத்தைக் கேட்டால், உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்வார்.
அண்ணாவின் வாரிசுகளின் அசல் மதிப்பு இவ்வளவுதான் என்பதை இதை விட நாசூக்காக எடுத்துச் சொல்லும் திறமை வேறு யாருக்கும் கிடையாது. கனிமொழி எம்.பி தேர்தலில் போட்டியிடும்போது அறிவித்த கோடிக்கணக்கான சொத்துக் கணக்கோடு ஒப்பிட்டால் இது நன்றாகவே புரியும்.

அண்ணா குடும்பத்துக்கு எதற்காக இப்போது இந்த உதவி? உதவி தேவைப்பட்டவர்கள் என்றால், நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய தேவை என்ன? குடும்பத்தின் மூத்தவர் டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் நல்ல வேளை இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால், அவர் தற்கொலை செய்துகொள்ள இன்னொரு காரணமாக இது ஆகியிருக்கும் அல்லவா. அண்ணாவின் குடும்பம் பொருளாதார நிலையில் வசதியாகவே இருக்கிறது. பேராசைகள் இல்லாத குடும்பம் அது. அரசோ கட்சியோ ஏதேனும் செய்வதாக இருந்தால், அண்ணாவின் கருத்துக்களை, வாழ்வியலை மக்களிடம் பரப்ப உதவி செய்தால் போதும் என்றுதான் பரிமளம் கடைசி வரை சொல்லி வந்தார்.

ஏன் இதுவரை உங்கள் அரசோ, கட்சியோ அண்ணாவின் எழுத்து அனைத்தையும் ஒரு செம்பதிப்பாக, காந்திக்கும் அம்பேத்கருக்கும் உள்ளது போல கொண்டு வரவில்லை? உங்கள் எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபலுக்கு அனுப்புவதாக சொல்லி ஜால்ரா அடிக்கிற பல்கலைக்கழகத்துக்கு, நீங்கள் முதலில் பெரியாரையும் அண்ணாவையும் பரப்புங்கள் என்று ஏன் சொல்லவில்லை? அவர்களை எல்லாம் பரப்பி, தமிழக மக்களுக்கு விழிப்பு வந்துவிட்டால், அவர்களோடு உங்களை ஒப்பிடத்தொடங்கிவிட்டால், உங்கள் அரசியலுக்கும் அரசியல் வாரிசுகளுக்கும் சிக்கல் என்பதுதானே உங்கள் பயம் ? என்ன கொடுமை......


கேள்வி:5 ராமாயண தசரதனைப் போல காதோரம் நரை தோன்றியதும் ஆட்சிப் பொறுப்பை வாரிசிடம் ஒப்படைக்கும் பக்குவம் இல்லாமல் வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பவர் நீங்கள் என்று கட்டுரை எழுதியதற்காக நெடுமாறன் மீது மயிர் அர்ச்சனை செய்து கவிதை எழுதியிருக்கிறீர்களே.... ஏதோ கோபத்தில் சொன்னதாக வசவுகளை விட்டுவிடலாம்.

ஆனால், உங்கள் கவிதையில் நீங்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் தேச முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே, அதைப் பற்றித்தான் இந்தக் கேள்வி. விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதாக நெடுமாறன் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்களே. தடை செய்யப்பட்ட இயக்கத்திடம் நெடுமாறன் பணம் வாங்கினார் என்பது உண்மையானால், முதலமைச்சரான நீங்கள் ஏன் இதுவரை அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? எடுக்காதது குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றமல்லவா? புலிகள் தலைவருக்கு அஞ்சலிக் கவிதை பாடியவர் என்பதால் நீங்களும் நெடுமாறனுக்கு உடந்தை என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக ஒரு நீதி மன்றம் கருத முடியுமல்லவா?
உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் பொய், கட்டுக்கதை என்றால், நெடுமாறனை அவதூறு செய்ததற்காக நீங்கள் அவரிடமும் புலிகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டாமா? எது சரி ? என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ன கொடுமை.......

கேள்வி 6: உலக அளவில் பல்வேறு பகுத்தறிவாளர்கள் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். பெர்ட்ரன்ட் ரஸ்ஸல், இங்கர்சால், கோவூர் என்று நீண்ட பட்டியலே உண்டு. உங்கள் பிராண்ட் தனி. வறுமையின் நிறம் சிவப்பு என்பது போல பகுத்தறிவின் நிறம் மஞ்சள் (சால்வை) என்று அதற்கும் ஒரு தனி அடையாளம் வகுத்தவர் நீங்கள். உங்கள் பெயரில் இயங்கும் கலைஞர் டி.வி மட்டும் இதில் பின்தங்கிவிட முடியாதல்லவா.
அதனால்தான் இந்தியத்தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக இந்துப் பண்டிகை நாளில் வசூலுக்காக நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளை, `விநாயக சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவிக்காமல், `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்று அறிவித்து பகுத்தறிவு சாதனை படைத்திருக்கிறது. இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் அவ்வளவு ஏன்? ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூட இதே போல `விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி' என்றே அறிவிக்கச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முழுப் பூசணிக்காயையும் மறைக்கும் அருமையான பகுத்தறிவு சோற்றில் ஒரே ஒரு கல். விநாயக சதுர்த்தி, மன்னிக்கவும் விடுமுறை நாள் நிகழ்ச்சியைக் காலை 6 மணிக்கு பக்திப் பாடல்களுடன் தொடங்குவதாகப் போட்டிருக்கிறது. பக்தி என்றால் என்ன? வேளச்சேரி ஸ்டாலின், மயிலை கனிமொழி, மதுரை அழகிரி முதலிய கலிகால தெய்வங்கள் மீதான பாடல்களாகத்தானே இருக்கும்? வாதாபி கணபதியாக இருக்காதல்லவா? என்ன கொடுமை.......


கேள்வி 7: மின்தடை பற்றித்தான் நியாயமாகக் கேட்கவேண்டும். ஆனால், அதைப்பற்றிய எந்த கேள்விக்கும் நியாயமான பதில் உங்கள் அரசிடமிருந்து வருவதே இல்லை. ஹூண்டாய், ஃபோர்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டபோது 24 மணி நேரம் இடையறாத மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் போடுகிறீர்கள். ஆனால் உள்ளூர் சிறு தொழிற்சாலைகளுக்கு தினமும் எட்டு மணி நேரம் கூட அத்தகைய மின்சாரம் தரப்படுவது இல்லை. தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள் முதல் விவசாயிகள் வரை படும் பாடு தெரியாத ஏ.சி வாழ்க்கையில் நீங்களும் உங்கள் சகாக்களும் திளைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆடம்பர விழாக்கள் நடத்த வேண்டாமென்று மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. ஸ்டாலின் போகுமிடமெல்லாம் நடப்பதற்கு என்ன பெயர்? ஏழைக் குழந்தைகள் கல்விக்கு நிதி திரட்ட என்ற பெயரில் கனிமொழியைப் பயன்படுத்தி ஒரு மாரத்தான் ஓட்டம் நடத்தி ஒரு நாள் முழுக்க, இதில் ஓடாத இதர சென்னைவாசிகளையும் தெருத்தெருவாக திண்டாடவிட்டீர்கள். மாரத்தான் செலவுப்பணத்தையும் பரிசுப் பணத்தையும் ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திருந்தாலே போதும். அது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை ?
மின்வெட்டைப்பற்றி 1973-ல் உங்கள் முதல் ஆட்சியின்போது எங்கள் கிறித்துவக் கல்லூரி ஆண்டு மலரில் என் சக மாணவர் ஒருவர் எழுதிய கவிதையை உங்களுக்கு இப்போது அர்ப்பணிக்கிறேன். கவிதை உங்கள் மனச்சோர்வை ஆற்றும் அருமருந்தல்லவா... இதோ கவிதை: "இந்த ஆட்சியில் வாழ்வதை விட சாவது மேல் என்று மின் கம்பியைத் தொட்டால், சே.. மின்வெட்டாம்.''

பின்குறிப்பு: இந்த ஓ பக்கங்களைப் படித்துவிட்டு என்னைத் திட்டி கவிதை எழுதி என்னை கவுரவித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த வேலையை சின்னக் குத்தூசி தலைமையிலான உங்கள் ரசிகர் மன்றத்தினர் பார்த்துக் கொள்வார்கள்.

இ.வா.பூச்செண்டுசகிப்புத்தன்மையின் உச்சத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு.

thanks: Kumudam - Jnanni

No comments: