Wednesday, January 5, 2011

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.
‘ஜனநாயகம்’ என்ற சொல்லிலிருந்து குடிமக்களின் உரிமைகள் மென்மேலும் அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், முசோலினி வகுத்த இலக்கணத்திற்கு மிகவும் அண்மையில் இருக்கிறது இந்திய அரசு. எனினும், கார்ப்பரேட் அதிகாரம்தான் ஜனநாயகம் என்ற புதிய தாராளவாதக் கருத்து உலகெங்கும் கோலோச்சுவதாலும், ஜனநாயக அங்கியைக் கழற்றி வீசாமலேயே தமது நோக்கத்ததை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலும், இந்திய ஜனநாயக சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான, நடுநிலையான அரசு அதிகாரம் நிலவுவதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து பேணப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் கொள்ளை தொடர்பாக, அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுகின்றன. டாடா குழுமத்தின் அதிகாரத் தரகராகப் பணியாற்றி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு டாடாவுக்குத் தரகு வேலை பார்த்த நீரா ராடியா, ராசா மற்றும் அதிகாரிகளின் வீடுகளும் நிறுவனங்களும் சோதனையிடப்படுகின்றன. இவர்களையெல்லாம் சி.பி.ஐ., ‘துருவித்துருவி’ விசாரிக்கிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியவர்களும், இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுமான டாடாவோ பிற தரகு முதலாளிகளோ விசாரிக்கப்படவில்லை. அவர்களது நிறுவனங்களை சி.பி.ஐ. சோதனையிடவும் இல்லை.

எனினும், தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் வெளியிடப்பட்டுவிட்டதனால் தனது உயிர்வாழும் உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக டாடா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பாரம்பரியமிக்க இந்தியத் தொழிலதிபர்கள் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாகவும், அவர்களையெல்லாம் அரசு உடனே சமாதானப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல், தமது முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் எச்.டி.எஃப்.சி. என்ற பன்னாட்டு வங்கியின் தலைவர் தீபக் பரேக்.

பிரதமரும் பெரும் விசனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தோற்றுவித்துள்ள அச்சத்தைப் புரிந்து கொள்வதாகவும், அதனைப் போக்குவதற்கு ஆவன செய்வதாகவும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘லாபியிங் செய்வது ஜனநாயக உரிமை’ என்றும் அதனை முறைப்படுத்துவதற்கு ஆவன செய்வதாகவும் முதலாளிகளுக்கு உறுதியளித்திருக்கிறார், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். புதிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் நாயகர்களான டாடா, அனில் அம்பானி, மிட்டல் ஆகியோரை நேரில் சந்தித்து தொலைதொடர்புக் கொள்கை வகுப்பது குறித்த அவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.

இப்படி ஊழல் நதியின் ஊற்றுமூலமான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் சந்நிதியில் மன்மோகன் சிங் அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடிய சாக்கடைகளான ராடியாவையும், ராசாவையும், இன்ன பிறரையும் சி.பி.ஐ., தூர் வாரிக்கொண்டிருக்கும் கேலிக்கூத்து பரபரப்பு செய்தியாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல; ஊழல் குறித்த விவாதங்கள் அனைத்தும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான திசையில் திட்டமிட்டே கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள்தான் தனியார்மயக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், முதலாளிகளுக்குச் சோர்வை ஏற்படுத்துவதாகவும், எனவே இத்தகைய ஊழல்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சாமியாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். இத்தகைய மெகா ஊழல்களைச் சாத்தியமாக்கிய தனியார்மயக் கொள்கையும், இந்த ஊழல்களால் பல்லாயிரம் கோடி ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளுமே ‘பாதிக்கப்பட்டவர்கள்’ போலச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ராடியா, கனிமொழி, ராசா போன்றவர்களின் கையில் சிக்கி இந்திய ஜனநாயகம் சிரிப்பாய்ச் சிரிப்பதாகவும், டாடாவைப் போன்ற பாரம்பரியமிக்க கவுரவமான தொழிலதிபர்கள் இந்த நாலாந்தர மனிதர்களிடம் விவரம் தெரியாமல் சிக்கிச் சீரழிந்து நிற்பதாகவும் சித்தரிக்கிறார் “சோ” ராமஸ்வாமி. தனது தமிழ் வெறுப்பு, திராவிட வெறுப்பு, சாதித் துவேசம் ஆகியவற்றை வன்மத்துடன் வெளியிடுவதற்கான நல்வாய்ப்பாகவும் தி.மு.க.வினரின் இந்தக் களவாணித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், பார்ப்பன-இந்திய தேசியவாதிகள்.

மொத்தத்தில் இந்த ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் எல்லா ஊழல்களையும் காட்டிலும் பெரிய ஊழலாகும்.
பொதுச்சொத்தை அம்பானி திருடினால், அது திறமை!
ஆ.ராசா திருடினால், அது ஊழலாம்!

இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ எதிரான பொதுக்கருத்தையும், அறம் சார்ந்த வெறுப்புணர்ச்சியையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் ‘ஊழல்’ என்பது மிக முக்கியமான கருவியாக இருந்துவந்திருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் வலிமையானதொரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமும் ‘ஊழல்’ தான். “அரசுத்துறை என்றால் ஊழல், தனியார் துறை என்றால் நேர்மை; அரசுத்துறை என்றால் திறமையின்மை, அலட்சியம்; தனியார்துறை என்றால் திறமை, பொறுப்புணர்ச்சி” என்ற கருத்தினைப் பரப்பி, அவற்றின் மீது சவாரி செய்துதான் அரசுத்துறைகளை விழுங்கும் தனது நோக்கத்துக்கு ஆதரவான பொதுக்கருத்தைத் தரகு முதலாளி வர்க்கம் உருவாக்கியது. நகராட்சி, மின்வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், போலீசு நிலையம், நீதிமன்றம் முதலான அனைத்து வகையான அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊழலையும் அதிகாரத்திமிரையும் அன்றாடம் அனுபவித்து வரும் மக்களும் ஆளும் வர்க்கத்தின் இந்தச் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகினர், இன்னும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளில், அதாவது தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991-க்குப் பிறகுதான் இந்திய அரசியலில் நாம் கேள்விப்படும் ஊழல்களின் தொகைகள் 40,50 கோடியிலிருந்து ஆயிரம் கோடிகளுக்கும் இன்று இலட்சம் கோடிகளுக்கும் உயர்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஹர்சத் மேத்தா, கேதன் பரேக் முதல் சத்யம் ராஜு வரையிலான அனைவரும் தனியார்மயம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே. 1990-க்கு முன் எவையெல்லாம் சட்டவிரோதமென்றும், ஊழலென்றும் வரையறுக்கப்பட்டிருந்தனவோ, அவை அனைத்தையும் 1991 முதல் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் படிப்படியாகச் சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. அந்நியச் செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்தும் சட்டம் நீக்கப்பட்டு, மோசடி சட்டபூர்வமாக்கப்பட்டது; கருப்பை வெள்ளையாக்கும் பல திட்டங்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது; வரி ஏப்புகளைத் தண்டிப்பதற்கு பதிலாக, முதலாளிகளுக்கான பல வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமானவை அனைத்தும் சட்டபூர்வமானவை ஆக்கப்பட்டு விட்டதால், 1991-க்கு முன் முதலாளிகளின் ஊழல்களாகக் கருதப்பட்டவை அனைத்தும் இப்போது அவர்களது உரிமைகள் ஆகிவிட்டன.

டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இரும்புத் தாதுவை டன் 27 ரூபாய்க்கு சுரங்க முதலாளிகளுக்கு விற்பனை செய்கிறது அரசு. இதனை ஊழல் என்றோ பகற்கொள்ளை என்றோ நாம் கூறலாம். ஆனால், முறையாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்த விற்பனை நடப்பதால், இது சட்டபூர்வமானதாகிவிட்டது. எண்ணெய் வயல்கள், பொதுத்துறை ஆலைகள், விளைநிலங்கள் போன்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள். மலைகளும் ஆறுகளும் காடுகளும் காணாமல் போகின்றன. தற்போது இரும்புத்தாது வெட்டியெடுக்கப்படும் வேகத்தில், அடுத்த 30 அண்டுகளில் இந்தியாவில் இரும்புக் கனிமமே இருக்காது என்று எச்சரிக்கிறார்கள், துறைசார் வல்லுநர்கள். ஒரு மிகப்பெரும் சூறையாடலையும் பேரழிவையும் கண்முன்னே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். நாட்டின் தொழில் வளர்ச்சி என்று இது போற்றப்படுகிறது.

இப்படி ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து அம்பானி, அகர்வால், டாடா, மித்தல் போன்ற பெரும் தரகு முதலாளிகள் தமது சொத்துகளை 40,50 மடங்கு பெருக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாக உயர்ந்திருப்பதும், அவர்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளையே விலைக்கு வாங்குவதும் அவர்களுடைய தொழில் திறமைக்குக் கிடைத்த சன்மானமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வல்லரசாவதற்கான ஆதாரமாகவும் காட்டப்படுகிறது.

இந்தக் கொள்ளைக்கே தனியார்மயம் என்று பெயர் சூட்டி, சட்டபூர்வமான கொள்கையாக மாற்றி, நிறைவேற்றித் தருகின்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் இதற்காக முதலாளிகளிடம் கையூட்டு பெறுவதும், இதே தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்தி கருணாநிதி, சரத் பவார் முதலான அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பொதுச்சொத்துக்களை வளைப்பதும் மட்டும்தான், ஊழல் என்ற பெயரில் மக்கள் முன் நிறுத்தப்படுகிறது.

தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விவாதங்களையே எடுத்துக் கொள்வோம். இதில் “அரசின் சொத்தான அலைக்கற்றைகளை ஏன் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டும்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அவ்வாறு விற்பனை செய்வதற்கு கையாளப்பட்ட வழிமுறை, பின்பற்றத் தவறிய நெறிமுறைகள், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்கிய அமைச்சர்கள் – அதிகாரிகளின் முறைகேடுகள் ஆகியவற்றை மையப்படுத்தியே ஊழல் குறித்த இந்த விவாதம் சுழன்று கொண்டிருக்கிறது.

அதாவது, அரசு சொத்துகளை முதலாளிகளுக்குத் தாரை வார்க்கின்ற தனியார்மயக் கொள்கை என்பது பொருளாதார ரீதியில் மிகவும் சரியான, அப்பழுக்கற்ற, அறிவுபூர்வமான கொள்கை போலவும், அதனை அமல்படுத்துகின்ற அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கைப் போல, மோடி, புத்ததேவ், நிதிஷ் குமாரைப் போல தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்காத உத்தமர்களாக நடந்து கொள்ளும் பட்சத்தில், இந்தியா வல்லரசாவது உறுதி என்பது போலவுமே சித்தரிக்கப்படுகிறது.
முதற்பெரும் ஊழல் - தனியார்மயமே!

தனியார்மயம் என்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மன்மோகன், அலுவாலியா, சிதம்பரம் முதலான பொருளாதார மேதைகள் இராப்பகலாகக் கண்விழித்து ஆராய்ந்து கண்டுபிடித்த கொள்கை அல்ல.

முன்பு இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அரசுத் துறை ஏற்படுத்தப்பட்டதற்கும், தொலைபேசி, மின்சாரம், ரயில்வே, சுரங்கங்கள், துறைமுகங்கள் போன்ற கேந்திரமான துறைகளிலிருந்து முதலாளிகள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. இத்தகைய துறைகளை நிர்மாணம் செய்வதற்குத் தேவைப்படும் மூலதனம் அதிகம், இலாபம் குறைவு என்ற காரணத்தினால் முதலாளிகளே இவற்றை அரசின் தலையில் கட்டி விட்டு, அந்தச் சேவைகளை மட்டும் சலுகை விலையில் அனுபவித்தனர். மேலும், இத்தகைய உயிர்நாடியான துறைகளை முதலாளிகளின் முழுக்கட்டுப்பாட்டில் விடுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணமாகக் காட்டித்தான், அரசு இத்துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இத்தகைய துறைகளைத் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பது என்று முந்தைய கொள்கையைத் தலைகீழாக மாற்றிய போது, இதனால் நாட்டின் தற்சார்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எந்தக் கட்சியும் விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இக்கொள்கை டில்லியில் உருவாக்கப்பட்டதல்ல; அது வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது.

அது, அமெரிக்காவின் தலைமையிலான உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் முதலான நிறுவனங்கள், பன்னாட்டு நிதிமூலதனத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிய கொள்கை. இந்தியா போன்ற நாடுகளின் மீது அவர்களால் விதிக்கப்பட்ட ஆணை. பிரதமர் நாற்காலியில் மன்மோகனுக்குப் பதிலாக சேடப்பட்டி முத்தையா அமர்ந்திருந்தாலும் அமலாகியிருக்கக்கூடிய கொள்கை இதுதான். வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியாவின் பிரதமர் முதல், சின்னஞ்சிறு ஆப்பிரிக்க நாட்டை ஆளுகின்ற யாரோ ஒரு பழங்குடி யுத்தப்பிரபு வரையிலான அனைவரின் தலையிலும் அணிவிக்கப்பட்டிருக்கும் தொப்பி அது. அத்தொப்பிக்கு ஏற்ப தலையைச் செதுக்குவதும், தனியார்மயம் என்ற கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பொதுக் கருத்தை உருவாக்குவதும்தான், ஓட்டுக்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கியிருக்கும் பணி. எனவே, ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மென்று துப்பியதைத் தின்று எடுக்கும் வாந்திதான், தனியார்மயத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங் முதலானோர் தயாரித்துப் பரிமாறும் வாதங்கள்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் தொடங்குவதற்கு முன், அரசும் ஆளும் வர்க்கங்களும் முன்வைத்த வாதங்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.

இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய நிதி மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் முதல் பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி வரையிலான எல்லா யோக்கிய சிகாமணிகளும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினர்.

முதன் முதலாக 1991-92 – இல் (மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது) விற்கப்பட்ட பொதுத்துறைப் பங்குகள் அனைத்தும் சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டதால், இந்த விற்பனையை ஒரு ‘மோசடி’ என்று அன்றைய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. பொதுத்துறை பங்கு விற்பனை குறித்த கணக்குத் தணிக்கையாளரின் 20 ஆண்டு அறிக்கைகளைத் தொகுத்தால், ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த மோசடியின் மொத்தத் தொகை பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.

இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.

இன்று, “2-ஜி அலைக்கற்றை உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றுக் கொள்ளையடிக்க சில நிறுவனங்களுக்கு உதவினார்” என்பதுதான் ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ‘ராசா தந்திரம்’தான் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையிலும் நடந்திருக்கிறது. சில நூறு கோடிகளுக்குப் பொதுத்துறை பங்குகளை வாங்கி, கம்பெனியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அதன் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கும், விற்றுக் காசு பார்ப்பதற்கும் ஏற்ற ‘கொள்கையை’ வகுத்துத் தருவதற்காகவே ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி’ என்றொரு கமிட்டி (அதாவது பொதுத்துறை முதலீடுகளை விற்பதற்கான கமிட்டி) நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை வகுத்துத் தந்த கோமான், ரங்கராஜன் என்பவரின் பெயரால் அது ரங்கராஜன் கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பது, உலக வங்கியின் ஆணைப்படி பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியை இவர் முன்வைத்தார். சர்வதேசக் கடன் நிறுவனங்களிடம் இந்திய அரசு வாங்கிய கடனுக்கு ஈடாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு விற்றுவிடலாம் என்பதே அந்த யோசனை. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகளையும் சொத்துக்களையும் அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது என்பதே இந்த யோசனையின் விளைவு.(இப்பேர்ப்பட்ட அரிய யோசனையை வழங்கிய அந்த ரங்கராஜன்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார ஆலோசகர்!)

பிறகு வந்த பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது சி.பி.ஐ. அவரைத் துருவித்துருவி விசாரிக்கிறதாம். பெஜால் என்ன பதில் சொல்வார்? “1999 முதல் 2006 வரை அரசு அதிகாரி என்ற முறையில் நான் தனியார்மயக் கொள்கை வழி நடந்தேன். ஓய்வு பெற்ற பின்னரும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் தனிப்பட்ட முறையில் அதனை அமல்படுத்தினேன்” என்று தனது வரலாற்றுக்கு அவர் சீர் பிரித்து இலக்கணம் கூறக்கூடும். ஓய்வு பெற்றபின் அவர் நீரா ராடியாவின் நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை; நெஸ்லே, ஜி.வி.கே. பவர்ஸ் அண்டு இன்ப்ஃராஸ்ட்ரக்சர்ஸ், பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களிலும் அவர் பதவி வகிக்கிறார்.

பொதுத்துறை விற்பனைகளுக்கு விலை நிர்ணயம் செய்த முறை குறித்து அவரிடம் சி.பி.ஐ. கேட்குமானால், அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர் ரங்கராஜன்தான் என்று அவர் வாக்குமூலம் தருவார்; ரங்கராஜனைக் கேட்டால் தனது பொருளாதார ஞானகுரு என்று மன்மோகன் சிங்கை அடையாளம் காட்டுவார்; மன்மோகன் சிங்கோ “நான் ஐ.எம்.எஃப். – க்குப் பிறந்தவன் என்ற உண்மையை எந்தக் கமிட்டியின் முன்னாலும் சொல்லத் தயார். இதைத் தவிர என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என்று பதிலளிக்கக்கூடும்.

நேற்று தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த பெஜால், இன்று நெஸ்லே என்ற ஏகாதிபத்திய தொழில் நிறுவனத்தின் இயக்குநர். நேற்று ஐ.எம்.எஃப். என்ற ஏகாதிபத்திய கந்து வட்டி நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த மன்மோகன் சிங், இன்று பிரதமர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? தனியார்மயத்துக்கும் ஊழல்மயத்துக்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாடுதான்! ஒழுக்க சீலர் மன்மோகனுக்கும் அயோக்கியன் பெஜாலுக்கும் என்ன வேறுபாடு? சங்கிலியைத் திருடுவதற்காக பெண்ணின் கழுத்தை மட்டும் அறுக்கும் ‘நல்லவனுக்கும்’, கற்பழித்துவிட்டு அதன்பின் கழுத்தை அறுக்கும் ‘அயோக்கியனுக்கும்’ உள்ள வேறுபாடு!
விலையைக் குறைப்பது ஊழல் – வரியைக் குறைப்பது?

2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக் கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம். இத்தகைய அனுமானங்கள் எதற்கும் இடம் வைக்காமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையில் புதிது புதிதான நேர்முக வரித் தள்ளுபடிகள், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித் தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள் அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக் கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம். “அலைக்கற்றைகளின் விலையை முதலாளிகளுக்குக் குறைத்துக் கொடுத்தால் கட்டணத்தையும் குறைப்பார்கள்; செல்பேசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும்; அதனால்தான் விலையைக் குறைத்தேன்” என்று கூறுகிறார், ராசா. சிதம்பரம் ஆங்கிலத்தில் விளக்குவதைத்தானே ஆ.ராசா அழகு தமிழில் விளக்குகிறார். தமிழ் ஊழலென்றால் ஆங்கிலமும் ஊழல்தானே!

“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த 1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது. அலைக்கற்றை விற்பனையை ஊழல் என்று அழைத்தால், வரித் தள்ளுபடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வைப் பேயாப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்போதே, நோக்கியாவுக்கு 600 கோடி ரூபாய் வரி மானியத்தை வாரி வழங்குகிறார், கருணாநிதி. இதனை ஊழல் என்று சொல்வாரில்லை. தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் கொடுத்ததாக ராடியா கூறும் 600 கோடி மானியம் மட்டும்தான் “சோ” வுக்கு ஊழலாகத் தெரிகிறது.

ராடியா டேப் அதை மட்டுமா சொல்கிறது? வரித்தள்ளுபடி குறித்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேறுகின்றன என்ற இரகசியத்தையும்தான் விளக்குகிறது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையையும்தான் புட்டு வைக்கிறது.

இந்த 91,000 கோடி என்பது அலைக்கற்றை ஊழல் போல அனுமான இழப்பு அல்ல; பருண்மையான இழப்பு. எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் இதனைக் கூட்டாக நிறைவேற்றியிருப்பதனால்தான், இதற்கு “நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று பா.ஜ.க. கோரவில்லை போலும்! அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றிய ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையையே தானும் பின்பற்றியதாகக் கூறுகிறார், ராசா. சில சில்லறைத் தில்லுமுல்லுகளை மட்டும் தவிர்த்திருப்பாரேயானால், கருணாநிதி சொன்னதைப் போல “தி.மு.க.- வின் தகத்தகாயமாக மின்னும் கொள்கைத் தங்கமாகவே” ராசா நீடித்திருந்திருப்பார். தேசிய நலனை முன்னிட்டு அம்பானிக்குப் படைக்கப்பட்ட 91,000 கோடியைப் போலவே, இந்த 1,76,000 கோடியும் தேசத்துக்கு வைக்கப்பட்ட படையலாகவும், தனியார்மயக் ‘கொள்கை வழியில்’ தேச முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட முடிவாகவுமே விளக்கப்பட்டிருக்கும்.

“பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அலைக்கற்றை விற்பனையால் 1.43 இலட்சம் கோடி இழப்பு” என்று ஒரு குண்டை தற்போது அமைச்சர் கபில் சிபல் வீசியிருக்கிறார். இந்தத் தொகை மொத்தமுமே தேசிய நலனுக்கு படைக்கப்பட்ட பொங்கல்தானா, அல்லது தம்பி தயாநிதியும், அண்ணன் அருண் ஷோரியும் இதில் கொஞ்சம் வழித்து நக்கியிருப்பார்களா? தரகு முதலாளிகளுக்கிடையே சமாதான உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் யுத்தம் நீடித்தால், மேலும் பல உண்மை கசியக்கூடும்.
ராசா..! அரண்மனைக்கு அடியில்
எத்தனை பெரிய பெருச்சாளிப் பொந்து!

‘ராசா ஊழல்’ என்று சித்தரிக்கப்படும் இந்த அலைக்கற்றை ஊழலுக்குள் கையை விட்டால், அந்தப் பெருச்சாளிப் பொந்து அரண்மனை முழுவதற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கியிருக்கும் நிறுவனங்கள், அரசு வங்கிகளிடமே ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அரசுக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிர்ந்து விட்டார்களாம். பொதுத்துறை நிறுவனங்களை வளைத்துப் போடும் இந்தியத் தரகு முதலாளிகள், எந்தக் காலத்திலும் தம் கைக்காசைப் போட்டு அவற்றை வாங்கியதில்லை என்ற உண்மை, ‘கற்றறிந்த’ நீதிபதிகளுக்குத் தெரியாது போலும்! அரசு வங்கிகள்தான் அவர்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. மருத்துவத்துக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவிட அரசாங்கத்திடம் பணமில்லையென்பதால்தான் பொதுத்துறைப் பங்குகளை விற்க வேண்டியிருப்பதாகச் சொல்லி தனியார்மயத்தை நியாயப்படுத்தினார், அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். முதலாளிகளோ அதே நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கிகளின் கையை வெட்டி அரசுக்கே சூப் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது சிதம்பரம் அறியாத இரகசியமல்ல. மக்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் சிதம்பர இரகசியம்.

தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும், “ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், கேதன் பரேக் ஊழல்” என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு தாய்ப்பிள்ளைகளே. அலைக்கற்றை ஊழலிலிருந்து ஒரு கிளை வலப்புறம் பிரிந்து வீட்டுக் கடன் ஊழலுடன் இணைகிறது. அங்கிருந்து அது இடப்புறம் திரும்பி அரசு வங்கியுடன் போய் இணைகிறது. அரசு வங்கியிலிருந்து பிரியும் பைபாஸ் சாலை மீண்டும் ஸ்பெக்ட்ரம் நெடுஞ்சாலையில் சங்கமிக்கிறது.

வீட்டுக் கடன் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டீஸ் என்ற நிறுவனம், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டிருக்கும் எடிசாலட் டி.பி. என்ற நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது, இல்லாத வீட்டை அடமானம் வைத்து அரசு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய டி.பி.ரியால்டீஸ் நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை வைத்து, தொலைபேசிச் சேவையே நடத்தாத ‘தொலைத்தொடர்புக் கம்பெனியான’ எடிசாலட் டி.பி. என்ற தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமத்தை விலைக்கு வாங்குகிறது. அந்த லைசன்சு காகிதத்தை அடமானம் வைத்து மீண்டும் வங்கியில் கடன் வாங்குகிறது. பிறகு அந்த உரிமத்தை வங்கியிலிருந்து மீட்டு, அதனை 4 மடங்கு விலைக்கு விற்று சில ஆயிரம் கோடிகளையும் சுருட்டுகிறது.

அலைக்கற்றை உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் பினாமி ‘உப்புமா’ கம்பெனிகள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். உரிமத்தை ரத்து செய்தால் திவாலாகப்போவதும் அவர்களல்ல, உரிமக் காகிதத்தை அடமானம் வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே. எனவேதான், இவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று முடிவு செய்துவிட்டார், அமைச்சர் கபில் சிபல்.

விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ., போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து, அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே. இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான்.
எது இலஞ்சம், எது ஊழல், எது கொள்கை?
விடை காண முடியாத தத்துவஞானக் கேள்வி!

ஸ்பெக்ட்ரம் மோசடிக்காக முன்னாள் அமைச்சர் ராசா முதல் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தேடிச் செல்கிறது சி.பி.ஐ. ஆனால், ஸ்பெக்ட்ரம் பணத்தை விழுங்கிச் செரித்த டாடா, மித்தல், அம்பானி போன்றோரை வீடு தேடிச் சென்று சந்தித்து, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை வகுப்பதற்கு அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார், அமைச்சர் கபில் சிபல். இதுவும் பா.ஜ.க. அரசு ஏற்கெனவே போட்ட பாட்டின் ரீ மிக்ஸ்தான். அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம் இயற்றப் போவதாக 2003 – இல் சொன்னார் வாஜ்பாயி. இந்தச் சட்டத்துக்கான முன்வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு, ரூயா, பிர்லா, ராஜீவ் சந்திரசேகர் முதலான தரகு முதலாளிகள் அடங்கிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியில் அரசு வங்கிகளுக்கு ரூயா வைத்திருந்த கடன் பாக்கி 1577 கோடி, பிர்லா 212 கோடி, சந்திரசேகர் 56 கோடி. இதுதான் அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதி!

திருடர்களுக்குக் கடனை வாரிவழங்குமாறு வங்கிகளுக்கு அரசு கொடுத்த வழிகாட்டுதலாகட்டும், திருடர்களைத் தண்டிப்பதற்கான ‘சட்ட முன்வரைவினை’ தயாரிக்கும் பொறுப்பைத் திருடர்கள் கமிட்டியிடமே ஒப்படைத்ததாகட்டும்; இவையெல்லாம் சிதம்பரமும், யஷ்வந்த் சின்காவும், வாஜ்பாயியும் மேற்கொண்ட கொள்கை முடிவுகள்தான். ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்று அலைக்கற்றையை வாரி வழங்கியதும்கூட ‘கொள்கை முடிவு’ என்றுதான் ராசா சொல்கிறார். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ‘கொள்கை’ முடியும் இடம் எது – ‘ஊழல்’ தொடங்கும் இடம் எது? இதனை எவ்வாறு கண்டறிவது?

தனியார்மயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மான்டேக் சிங் அலுவாலியா இதற்கான விடையை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். “40,000 கோடி வீட்டுக்கடன் ஊழலை, ‘ஊழல்’ என்று அழைப்பது தவறு. அது வழக்கமான இலஞ்சம் மட்டுமே” என்று விளக்கியிருக்கிறார். நமக்குத் தெரிந்த இலஞ்சங்களான டிராபிக் போலீசு லஞ்சம், தாலுக்கா ஆபீஸ் லஞ்சம், ஆர்.டி.ஓ. ஆபீஸ் லஞ்சம் போன்றவை மூன்று நான்கு பூச்சியங்களைத் தாண்டியதில்லை. நாடு வல்லரசாகி வரும் காரணத்தினாலும், கோடீசுவரர்களின் எண்ணிக்கை பெருகிவரும் காரணத்தினாலும் இலஞ்சத்தின் இலக்கணம் தற்போது மாறியிருக்கக் கூடும். எத்தனை பூச்சியங்கள் வரையில் ‘இலஞ்சம்’, எத்தனை பூச்சியங்களுக்குப் பின் ‘ஊழல்’, எத்தனை பூச்சியங்களுக்கு மேல் ‘கொள்கை’ என்பது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தி, தேசிய பொதுக்கருத்தை எட்டினால் மட்டுமே, ஊழல் விவாதங்களினால் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டிருக்கும் தேசிய கவுரவத்தைக் காப்பாற்ற முடியும் போலும்!
நீரா ராடியா அல்லது சல்வா ஜுடும்!

அலைக்கற்றைகளாக இருக்கட்டும், ஆலைகள், சுரங்கங்கள், காடுகள், விளைநிலங்களாக இருக்கட்டும்; அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தடையற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் தனியார்மயம் என்ற கொள்கை. காசை வாங்கிக் கொண்டு, கதவைத் திறந்து விடக் காத்திருப்போரிடம் டாடா – அம்பானிகளின் சார்பில் ராடியா பேச்சுவார்த்தை நடத்துவார். ராடியாக்களுடன் பேச மறுக்கும் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் போன்றோரிடம் டாடாவின் சார்பில் இந்தியத் துணை இராணுவப்படை பேசுகிறது.

ராடியா ஒரு அதிகாரத் தரகர் என்பதால் அவர் நடத்திய பேரங்கள் ஊழல் என்றும் முறைகேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இதே நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையையோ, சட்டிஸ்காரில் துணை இராணுவப் படைகள் நடத்தும் காட்டுவேட்டையையோ ஊழல் என்று யாரும் அழைப்பதில்லை.

ஒரு கொள்கைக்குரிய கவுரவத்துடன் அழைக்கப்படுகின்ற ‘தனியார்மயம்’ என்பதும் கூட தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்திக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைதான். தீவட்டிக் கொள்ளையர்களைத் தமது நாயகர்களாக எந்த சமூகமும் கொண்டாடியதில்லை. ஆனால் டாடா, அம்பானி, மித்தல் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். “பில் கேட்ஸை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடுவார் முகேஷ் அம்பானி” என்ற செய்தி, இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியாக மொழிபெயர்க்கப்பட்டு மக்களின் காதில் ஓதப்படுகிறது.

“இந்திய முதலாளிகளின் தொழில் முனைப்பைத் தனியார்மயக் கொள்கை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது” என்று போற்றப்படுகிறது. அதே கொள்கைதான் டில்லியில் ராடியாவையும் சட்டீஸ்கரில் சல்வாஜுடுமையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கொள்ளையர்கள் கட்டவிழ்த்து விடப்படுவதனால் நேரும் விளைவு பகற்கொள்ளையே அன்றி முன்னேற்றமல்ல. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையிட்ட வெள்ளையர்களும் கூட “இந்தியாவை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றுதான் கூறிக்கொண்டார்கள். 200 ஆண்டுகளில் அவர்கள் அடித்த கொள்ளையை விட, தனியார்மயம் அமலாகத் தொடங்கிய 20 ஆண்டுகளில் இந்தியத் தரகுமுதலாளிகள் அடித்திருக்கும் கொள்ளையும், வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்திருக்கும் பணமும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
அரசுத் தலையீடின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை:
முதலாளித்துவ மூலமந்திரங்களின் உட்பொருள்!

இவையெதுவும் தம் தொழில் முனைப்பினாலோ, திறமையினாலோ அவர்கள் உருவாக்கிய செல்வம் அல்ல. அமெரிக்காவின் சப் பிரைம் மோசடியில் தொடங்கி இந்தியாவின் ஸ்பெக்ட்ரம் மோசடி வரை கார்ப்பரேட் வர்க்கம் நிரூபித்திருக்கும் திறமை என்பது, சூதாடிகளும் பிக்பாக்கெட் திருடர்களும் கொண்டிருக்கும் திறமையை மட்டும்தான்.

ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடி, “முதன் முதலில் எனது உறவினர்களை வைத்தே கிரிக்கெட் டீம்களை ஏலம் எடுக்க வைத்து, கொள்ளை இலாபம் கிடைத்ததாக அவர்களை ‘சாட்சியம்’ சொல்லவைத்து, அதைக் காட்டியே மற்றவர்களையெல்லாம் கவர்ந்திழுத்தேன்” என்று லண்டன் பத்திரிகையொன்றிற்கு பெருமை பொங்க பேட்டி கொடுத்திருக்கிறார். இதுதானே, நம்மூர் மூணு சீட்டுக்காரன் மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு அன்றாடம் செய்து கொண்டிருக்கும் தந்திரம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடியதும், வரி விலக்குகளால் கோடி கோடியாக ஆதாயம் அடைந்ததும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து காடுகளையும் விளைநிலங்களையும் தம் உடைமையாக்கிக் கொண்டதும்தான் இவர்களது சொத்து மதிப்புகள் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்ததற்குக் காரணம். 1667 கோடிக்கு ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கி, அதில் 28 சதவீதத்தை மட்டும் (சுமார் 400 கோடி மதிப்பு) 13,000 கோடி ரூபாய்க்கு டோகோமோ நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் டாடா.
இதனைக் கொள்ளை என்பதா, ஊழல் என்பதா அல்லது டாடாவும், அம்பானியும், ராடியாவும் வெளிப்படுத்தியிருக்கும் திறமை என்பதா?

தொழில் – வர்த்தகத் துறைகளில் நிலவும் அரசுத் தலையீடுகள்தான் ஊழலுக்கு அடிப்படை என்றும், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அரசு நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் (transparency) கொண்டுவருவதன் மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவ்வப்போது பேசி வரும் இந்த கார்ப்பரேட் யோக்கிய சிகாமணிகள்தான், அரசாங்கத்துடன் தாங்கள் போட்டுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மட்டும் அரசாங்க இரகசியமாகப் பேணச் சொல்கிறார்கள். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் நோக்கியா நிறுவனம் போட்டிருக்கும் மூலதனத்தை விட அதிகம் என்ற உண்மையும், குஜராத்தில் நானோ காருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காரின் உற்பத்திச் செலவுக்கே இணையானது என்ற உண்மையும் தோண்டித் துருவி வெளியே எடுக்கப்பட்ட பின்னர்தானே தெரியவந்தது! தனியார்துறை – அரசுத்துறை கூட்டு என்ற பெயரில் சாலைகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றில் போடப்படும் ஒப்பந்தங்கள், கனிமவளங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகியவை அனைத்தையும் அரசாங்க இரகசியங்களாக மறைக்கச் சொல்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இந்தத் தடையே ஊழலா, அல்லது இத்தகைய தடைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு ராடியாக்கள் நடத்தும் தரகு வேலைகள் மட்டும்தான் ஊழலா, எது முதற்பெரும் ஊழல் என்பதே கேள்வி.

“கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை மக்களுக்குத் தெரியாத இரகசியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் கொள்ளையர்களுக்கிடையே வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்பதுதான் அவர்கள் கோருகின்ற வெளிப்படைத் தன்மை (transparency).

‘அரசின் தலையீடுகளை அகற்றுதல்’ என்ற அவர்களுடைய தாராளமயக் கோரிக்கையின் உட்பொருள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசின் தலையீடுகளை’ நீக்கவேண்டும் (deregulation) என்பது மட்டும்தான். மற்றபடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்பது, எதிர்த்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவது, தொழிற்சங்கங்களை ஒடுக்குவது போன்ற விசயங்களில் அவர்கள் அரசின் உறுதியான தலையீட்டை வரவேற்கவே செய்கிறார்கள். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடினாலும் குறைந்தாலும் அதற்கேற்ப ஏற்றுமதியாளருக்கும் இறக்குமதியாளருக்கும் மானியம் வழங்குவது, பணப்புழக்கத்தை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பது, கல்வி வியாபாரம், கார் வியாபாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் சுறுசுறுப்பாக நடப்பதற்கு ஏற்ப நுகர்வோர் கடன்களை வாரி வழங்குமாறு அரசு வங்கிகளைத் தூண்டுவது போன்ற விசயங்களிலும் அவர்கள் அரசின் அக்கறையுள்ள தலையீட்டைக் கோரவே செய்கிறார்கள். மக்களுடனான முரண்பாட்டில் சிங்குரிலும் நந்திக்கிராமிலும் அரசு தங்கள் சார்பாகத் தலையீடு செய்ததை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்கவே செய்தார்கள்.

அலைக்கற்றைப் போரில் எழுந்த முரண்பாடோ கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலானது. டாடா – மித்தலுக்கு இடையிலான இந்த பாரதப் போரில் அரவான் களப் பலி ஆ.ராசா. சாம்ராச்சியச் சண்டையான பாரதப்போர், தரும யுத்தமாகச் சித்தரிக்கப்படுவதைப் போலவே, இந்த கார்ப்பரேட் யுத்தமும் ஊழலுக்கு எதிரான போராக சித்தரிக்கப்படுகிறது. தனியார்மயக் கொள்கையின் அமலாக்கத்திலிருந்து ஊழலை மட்டும் நீக்கிவிட்டால் சொர்க்கலோகத்தைக் கண்டு விடலாம் என்றும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும் கயிறு திரிக்கிறார்கள், கார்ப்பரேட் வியாசர்கள். முதலாளித்துவத்திடமிருந்து ஊழலை நீக்குவதென்பது அதன் இதயத்தையே நீக்குவதாகும். இலாபம்தான் அதன் இலட்சியம். அதனை அடைவதற்கு எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்பதே முதலாளித்துவ நிர்வாகவியலின் முதல் விதி.

மோதிக்கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் தமக்கிடையிலான போட்டியில் யுத்த தருமத்தையும், ஒழுக்கத்தையும் எந்தக் காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள்? ஒரு விமானக் கம்பெனி தொடங்க விரும்பியதாகவும், அதற்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதால், விமானக் கம்பெனி தொடங்கும் யோசனையையே கைவிட்டு விட்டதாகவும் கூறி, தனக்குத் தானே ஒளிவட்டம் சூட்டிக்கொண்டார் ரத்தன் டாடா. அடுத்த வந்த நாட்களில் நல்லொழுக்க சீலர் டாடாவின் யோக்கியதையை ராடியா டேப்புகள் நாட்டுக்கே ஒளிபரப்பின.

பா.ஜ.க.-ராடியா கள்ள உறவு குறித்த செய்திகளைக் கசியவிட்டு பதிலடி கொடுக்கிறது காங்கிரசு. ராடியாவை ஆளாக்கி வளர்த்ததே பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த்குமார் தான் என்றும், பா.ஜ.க. வின் ஆட்சிக் காலத்தில்தான் ராடியா தனது தொழிலில் கொடி நாட்டினார் என்றும், டில்லியில் ராடியாவின் ஸ்பான்சர்ஷிப்பில் பேஜாவர் ஸ்வாமிகள் நடத்திய வைபவத்துக்கு அத்வானி வருகை புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. தனியார்மயத்தின் முதல் பத்தாண்டுக்கு, ஹவாலா ஊழல் – ஜெயின் டயரி. இரண்டாவது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராடியா டயரி!

இந்திய நாடாளுமன்றத்துக்கு கீழே ஒரு நிலவறை இயங்குவதும், நிஜ உலக ஜனநாயகத்தில் பரிமாறப்படும் கதை – வசனங்கள் அனைத்தும் நிலவறையின், கார்ப்பரேட் சமையலறையில் தயாராவதும் அம்பலமாகிச் சந்தி சிரிப்பதைக் கண்டு இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பூசாரிகள் சங்கடத்தில் நெளிகின்றனர். ‘முழுதும் நனைந்த பின்னே முக்காடு எதற்கு?’ என்று எண்ணிய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “லாபியிங் (தரகு வேலை) ஒரு ஜனநாயக உரிமை. அதை முறைப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது” என்று பிரகடனமே செய்து விட்டார். “வரி ஏப்பு அதிகரித்தால் அதற்குத் தீர்வு, வரிகளை நீக்குதல்; கறுப்புப் பணம் அதிகரித்தால் அதற்குத் தீர்வு, அவற்றை வெள்ளையாக்கும் திட்டத்தை அறிவித்தல்’’ – இதுதானே புதிய தாராளவாதக் கொள்கையின் ஒழுக்கவிதி!

எனவே, லாபியிங் உரிமையை முறைப்படுத்துதவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. “அமெரிக்காவில் இருப்பதைப் போல, எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கும் இருக்கவேண்டும்” என்று ஊழல் ஒழிப்புக்கான ‘அமெரிக்க வழி’யை முன்மொழியத் தொடங்கிவிட்டனர், முதலாளித்துவ அறிவுஜீவிகள். ‘கட்டுப்பாடுகளை நீக்குதல்’ என்ற புதிய தாராளவாதத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு, ‘ஒழுக்கத்தை நீக்குதல்’ என்ற கலாச்சார கொள்கை பொருந்தித்தான் வருகிறது

மற்றெல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டாலும், புதியதோர் உரிமையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது தனியார்மயம்! நமக்கு வழங்கப்படவிருக்கும் இந்த உரிமைக்குப் பொருள்தான் என்ன?

எந்த எம்.பி., எந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை! அல்லது டாடா-அம்பானி-மித்தல்-அகர்வால்-ரூயா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள், எந்த அமைச்சரின் உதவியுடன் நமது சட்டைப் பைக்குள் கை விடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை. அரசு அதிகாரத்தின் உண்மையான பொருள் கார்ப்பரேட் முதலாளிவர்க்கத்தின் அதிகாரம்தான் என்று தெரிந்து கொள்ளும் உரிமை!

இனி இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் செல்வோம். அட, இந்த உரிமையை தனது நாட்டு மக்களுக்கு சென்ற நூற்றாண்டிலேயே வழங்கியிருக்கிறாரே முசோலினி!

Thanks: - மருதையன், புதிய ஜனநாயகம், ஜனவரி-2011

Tuesday, December 21, 2010

தனியார் மயமாகும் தமிழக சுகாதாரம்

சிலர் விஷம் கொடுத்து கொல்வார்கள், சிலர் வெல்லம் (இனிப்பு) கொடுத்துக் கொல்வார்கள். இதில் வெல்லம் கொடுத்துக் கொல்பவர்களே மிகவும் ஆபத்தானவர்கள் என்பார்கள். தமிழக பொது சுகாதாரத்தை இன்று வெல்லம் கொடுத்து கொல்லும் வேலையை கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செய்து வருகிறது. காலம் காலமாக சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளேயே நம்பி இருந்து வருகின்றனர். அதனை பல இடங்களில் `தர்ம' ஆஸ்பத்ரி என அழைப்பது இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் அங்கு சென்றால் தர்மம் செய்வது போன்று பிரதிபலனை எதிர்பாராமல் இலவசமாக சிகிச்சை செய்யப்படும் அதனை பெயரிலேயே சொல்வதுதான் தர்ம ஆஸ்பத்ரி. ஆனால் இன்று தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் தர்மம் செய்கிறதா? அதாவது காலம் காலமாக இருந்து வரும் தர்ம ஆஸ்பத்ரியின் உயிரை எடுத்து அதனை ஊட்டச்சத்தாக உட்கொண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நகர்ந்து மலைப்பாம்பாக செல்கிறது என்பதுதான் உண்மை. மேலோட்டமாக கலைஞர் காப்பீட்டை பார்த்தால் தனியார் மருத்துவமனையில் இலவசமாகத்தானே மருத்துவம் செய்றாங்க இதனை ஏன் குறை சொல்ல வேண்டும் என்று எண்ணத் தோன்றும். அதுவும் உண்மைதான். ஆனால் யாராவது கண்களை விற்று சித்திரம் வாங்குவார்களா? அதைத்தான் தமிழக அரசு செய்கிறது.

அதாவது ஒரு வருடத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இந்தப் பணம் முழுவதும் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற தனியாரிடம் பிரீமியத் தொகையாக ஒப்படைக்கப்படுகிறது. ஏதாவது பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால். அதற்காக அவர்கள் கையில் இருந்து பணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையில் ரூ 1 லட்சம் வரை ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனைக்கு அதனை காப்பீட்டுத் தொகையாக அளித்து விடும். இதுதான் நடைமுறை. அதே நேரத்தில் அனைத்து அறுவை சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின் கீழ் செய்து கொள்ள முடியாது. ஏன் சாதாரண வயிற்று போக்கு அல்லது காய்ச்சல் என்றால் கூட இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது.

மேலும் மக்களை அதிகமாக தாக்கும் ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை மூலமே சரி செய்ய முடியும் என்றால் அந்த அறுவை சிகிச்சையே இந்த திட்டத்தில் இருக்காது. உதராணமாக சிறுநீர் கல் அடைப்பு என்றால் அதன் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை வரும். ஆனால் அந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்று ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த சிகிச்சை கலைஞர் காப்பீட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதே போல் சர்க்கரை நோய்க்கு இந்த திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. ஏனென்றால் நோய்களின் எண்ணிக்கை சுருங்கினால்தான் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் லாபம் பெருகும். இதுதான் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் `காப்பீட்டு பார்முலா'.

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலாம் ஆண்டில் அரசு ரூ. 628.20 கோடி கொடுத்தது. இதில் ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக செலுத்திய தொகை ரூ 415.43 கோடி. மீதமுள்ள ரூ 212.77 கோடி முதலாமாண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபம் ஆகும். இதில் அரசின் பணம் யாருக்கு ``காப்பீடாக'' மாறியிருக்கிறது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இரண்டாவது ஆண்டு ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டு தொகையாக அரசு ரூ.750 கோடியை செலுத்தியிருக்கிறது. ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தை கொட்டிக் கொடுக்க வேண்டும்? ஏன் பொதுத்துறையில் இன்சூரன்ஸ் நிறுவனம் இல்லையா?

இந்தியப் பொருளாதாரத்தையே அவ்வப்போது தாங்கி நிற்கும் நிறுவனமாக இன்று அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திகழ்ந்து வருகிறதே. அப்படியே காப்பீடு செய்ய வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனத்தில் காப்பீடு செய்யாமல் ஏன் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டும்? திமுக அரசுக்கு இதில் ஏன் இவ்வளவு அக்கறை?. காலம் காலமாக பொதுச் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி இப்படி தனியாருக்கு திருப்பி விடுவது எந்த வகையில் நியாயம் ஆகும். அப்படி திருப்பிவிடும் பணத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவருபவர்களை விட அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? அதுவும் இல்லை.

உதாரணமாக 2009ஆம் ஆண்டு ஜூலை முதல் 2010 செப்டம்பர் வரை 15 மாதங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 492 பேர். ஆனால் தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2002 ம் ஆண்டில் ( 12 மாதம்) மட்டும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 366 பேர் ஆவர். இந்தாண்டு (2009_10) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றிருக்கும் அறுவை சிகிச்சை புள்ளி விபரம் அரசு இணையதளத்தில் திட்டமிட்டு பதிவேற்றம் செய்யப்படவில்லை. 2002ஆம் ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்பதே உண்மை. புள்ளி விபரங்களை பதிவேற்றம் செய்தால் உண்மை ஊருக்கு தெரிந்து விடும் அல்லவா? அது ஆளும் அரசிற்கு ஆபத்தாக முடியும் என்பது நன்றாகவே தெரியும். அதனால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. இருக்கட்டும்.

அரசு கலைஞர் காப்பீட்டுக்கு இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 750 கோடியை அரசு மருத்துவ மனைகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதும். தனியார் மருத்துவனைகளை விட நூறு மடங்கு எண்ணிக்கையில் அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் இருதய நோய்களுக்கான அறுவை சிகிச்சையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள 32 அரசு மருத்துவமனைகளில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தற்போது இங்கு இருதயவால்வு மாற்றுசிகிச்சைக்கு தேவையான வால்வு மற்றும் மருந்து பொருட்கள் வாங்க சுகாதாரத்துறையில் காசு இல்லை. ( பெரும்பகுதி பணம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.) அதனாலோயே மதுரை, சென்னையில் மட்டும் இந்த அறுவை சிகிச்சை நடந்து வந்தது.

தினமும் நடந்து வந்த இந்த அறுவை சிகிச்சையை தற்போது மதுரை மருத்துவமனையில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அறுவை சிகிச்சைகளே மேற்கொள்கின்றனர். காரணம் அதற்கான வால்வு மற்றும் மருந்துப் பொருட்கள் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால் பலர் காடுமேடுகளை விற்றும், வட்டிக்கு வாங்கியும் தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்கின்றனர். இருதய அறுவை சிகிச்சை செய்ய உபகரணம் மற்றும் வசதி ஏற்படுத்தி கொடுக்க ஒரு மருத்துவமனைக்கு ரூ 1 கோடி மட்டுமே செலவு ஆகும். கலைஞர் காப்பீட்டிற்கு ஒதுக்கியிருக்கும் தொகையில் 32 கோடியை மட்டும் ஒதுக்கினால் தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தகுதியுள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் இலவசமாகவே அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

ஒரு முறை முதலீடு செய்து வருடம் தோறும் இலவசமாக சிகிச்சை அளிப்பது சிறந்ததா? அல்லது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் தனியாருக்கு பல நூறு கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் தூக்கி கொடுப்பது சிறந்ததா?. இதே போல் சிறுநீரகம் அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் `` லித்தோட்ரிப்சி '' கருவி மதுரை மற்றும் சென்னை அரசு மருதுவமனையில் மட்டுமே இருக்கிறது. லித்தோட்ரிப்சி கருவி உள்ளிட்டு சிகிச்சை வசதி ஏற்படுத்த ஒரு மருத்துவமனைக்கு ரூ 1.5 கோடியே ஆகும். அப்படியானால் ரூ 80 கோடியை இதற்கென ஒதுக்கினாலே போதும். தமிழகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய 32 அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதி வந்து விடும். ஆனால் இதனை செய்ய அரசு தயாராக இல்லை. அது மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பார்க்கும் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும் தனியார் மருத்துவமனைக்கு நோயளிகளை அனுப்பி அரசே ஏன் பணம் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கான தேவை என்ன?

தமிழகத்தில் உள்ள 1539 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008_09 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி ஒவ்வொரு நாளும் 1 லட்சத்து 99 ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் 500 பேருக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்திலேயே இருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 130 நகராட்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நலவாழ்வு சேவைகள் இல்லை. இன்னும் நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் இல்லை. இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது அது ஒரு தனி அத்தியாயம். இப்படி அரசு சுகாதாரத் துறையே அவசர சிகிக்சைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்திற்கு இருக்கும் நிதியையும் தனியார் மருத்துவமனை களுக்கும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

கடந்த பல ஆண்டுகளாக அரசுமருத்துவமனையையும், ஆரம்ப சுகாதார நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி அகில இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. உதாரணமாக தற்போது பல மருந்துகள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை வெளியில் சென்று காசு கொடுத்து வாங்கி அரசு மருத்துவரிடம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு மருத்துவமனையில் காசு கொடுத்தால் நல்ல சிகிச்சை என்ற பசப்பு வார்த்தைகளால் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் பணம் கொடுத்து சிகிச்சை பெறும் பிரிவு துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றிக்கும் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை மக்களிடம் உருவாக்கும் வேலை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற சுகாதாரத் திட்டங்களிலும் தனியாரின் பங்களிப்பு என்ற முறையில் தனியார் மயம் நஞ்சாக ஊடுருவச் செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக காலம் காலமாக தொற்று நோய்களுக்கு அரசுதான் இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்கி வரும். ஆனால் தற்போது அந்த நிலையும் இல்லை என்றாகி விட்டது.

சமீபத்தில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை அரசே கொள்முதல் செய்து விலைக்கு விற்கும் அவலமும் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நீதி மன்றம் தலையிட்டு தலையில் கொட்டிய பின்பும் பெயரளவிற்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. அரசு மருத்துவ மனைகளில் தனியார் மருந்து நிறுவனங்கள் கடைவிரித்து மருத்துகளை விற்று வருகின்றனர். இதனை திமுக அமைச்சர்கள் சென்று, முதல் விற்பனையை துவங்கி வைத்து வருகின்றனர். இப்படி அரசுத்துறையை காலி செய்து தனியார் துறையை போற்றி வளர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. இதனை அப்படியே நேரடியாக செய்தால் மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் ``வெல்லம் கொடுத்து கொல்லும் முறையை திமுக பின்பற்றி வருகிறது''. கொஞ்சம் கொஞ்சமாக பொதுச் சுகாதார நிதியை தனியாருக்கு திருப்பி விட்டு அரசு மருத்துவமனைகளின் உயிரை காவு வாங்குவது. பின் அரசு மருத்துவ மனைகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மொத்த சுகாதாரத்தையும் தனியார் கையில் கொடுத்து விடுவது. அதில் ஏதாவது கிடைத்தால் அதையும் முடிந்த வரை சுருட்டுவது என்ற ரீதியில் தமிழகத்தில் திமுக அரசு வேலைகளை முழுவீச்சில் முடுக்கி விட்டிருக்கிறது.

Thanks: எம்.கண்ணன், keetru

Thursday, December 9, 2010

டாடா குழுமத்தின் கோர முகம் -2


நச்சுப் பொருட்களின் கிடங்கு உப்புக் கழிவு:

2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.
ஜூக்சாலை-கழிவுப் பொருட்களின் மலைகள்:

ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.
ஜோடா சுரங்கங்கள்:

டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.
கரிக்குழம்புகளின் குவியல்:

மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.
பேராபத்து விளைவித்த நிகழ்வுகள் - நிறுவனர் நாள் தீ:

1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.
டாடா குழுமத்தின் தொழிலாளர் விரோத முன்னுதாரணங்கள்

1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.
தொழிலாளர் தற்கொலைகள்:

1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.

1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளர் முறை ஒப்பந்தம் – வேலைப் பாதுகாப்பின்மையைப் புகுத்துதல்:

செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
கதவடைப்பு:

தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.
தொழிற்சங்கங்களை உடைப்பது:

1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.
படுகொலைகள்:

குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.
டாடாவுக்கு டாடா:

நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
டாடாக்களின் தரகு வரலாறு போதை மருந்து கடத்தல்:

1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போவிட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)
எம்ப்ரஸ் (பேரரசி):

1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.
பிரிட்டானிய விரிவாக்கத்துக்குத் தூபம் போடும் வேலை:

முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”
பிரிட்டானியப் படைக்கு டாடா சப்ளை:

1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.

(முற்றும்)
(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.)

Thanks: vinavu

டாடா குழுமத்தின் கோரமுகம் -1

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.

தாராளமயம் புகுத்தப்பட்டதற்கு முன்புவரை, லைசென்சு (தொழில் துறையின் மீது உரிமக் கட்டுப்பாடு) ஆட்சியில் முடிசூடா மன்னர்களாக டாடாக்கள் இருந்தார்கள். வாரிக் கொடுக்கும் தாராள வள்ளல் தன்மைகள் மூலம் மனித உரிமை மீறல், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள் ஆகிய அவர்களின் திரைமறைவுச் செயல்களை மூடி மறைத்து வந்தார்கள். உலகமயமாக்கச் சூழலில் இத்தகைய உண்மைகள் சாக்கடைக் கழிவுகளாக வெளிப்படத் தொடங்கியபோது, அவர்களின் விசுவாச ஊழியர்கள் உட்பட மேலும் மேலும் கூடுதலான மக்கள் டாடாக்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

தேசத்தைக் கட்டியெழுப்புவது, கூட்டுப் பங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் ஆகிய டாடாவின் பசப்பு வார்த்தைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். டாடா கம்பெனிகளின் சொந்தப் பங்குதாரர்கள் தவிர, வேறு யாருடைய நலனுக்கும் பொறுப்பானவர்களாக அவர்கள் இல்லை என்பதையும் அறிந்தார்கள். டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் அவர்களின் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்று பின்வரும் தொகுப்புச் செய்திகள் காட்டுகின்றன.

================
கொலைகார கார்பைடுக்கு டாடாவின் உதவி

1984 டிசம்பரில் போபால் நச்சுவாயு பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்த ஒரு சில இந்தியர்களில் ஒருவராக ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியதாலும், நச்சு ஆலையில் சோதித்தறியப்படாத தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலும் நிகழ்ந்த பேரழிவுக்கு ஆண்டர்சன் நேரடிப் பொறுப்பாளராகிறார். முக்கியமாக, போபால் நச்சு ஆலையின் கழிவு மற்றும் பயன்பாட்டுச் சாதனங்கள் டாடா பொறியியல் கம்பெனி (Tata Consulting Engineers) யால் கட்டியமைக்கப்பட்டவை.

போபாலில் உள்ள நச்சு ஆலையில் யூனியன் கார்பைடு கம்பெனி விட்டுச் சென்றுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும் தர்ம காரியத்துக்குத் தலைமையேற்று யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் புதிய சொந்தக்காரரான டௌ கெமிக்கல்சின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2006 நவம்பரில் ரத்தன் டாடா முன் வந்தார். அக்கழிவுகளை அகற்றுவது டௌ கெமிக்கல்சின் கடப்பாடு என்றும், அதற்காக அந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு அப்போது வாதாடிக் கொண்டிருந்தது. டௌ கெமிக்கல்ஸ் கடப்பாடுடையது என்கிற சட்டப்படியான முயற்சியைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் டாடாவின் தர்மகாரிய முன் வருகை. மேலும், இந்த முன்வரவின் நோக்கம் இந்தியாவில் டௌ கெமிக்கல்சின் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கமுடையது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். போபால் நச்சுவாயு வெளியேற்றத்துக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான இயக்கத்தால் இந்தியாவில் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் நிலைகுலைந்து போகும், அதன் எந்தவொரு தொழில் முனைப்பும் அதிகரித்த சிக்கலுக்குள்ளாகும் என்ற பயத்தின் காரணமாக பெருமளவிலான முதலீடுகளை டௌ நிறுவனம் தானே மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.
ஜனநாயகத்துக்கு மாறான கொல்லைப்புற அதிகாரம்

இந்தியக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் டாடாவின் கட்டளை:

2005-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் கார்ப்போரேட் (கூட்டுப் பங்கு) கம்பெனிகளிடம் நட்புப் பாராட்டும் முனைப்புகளால் தூண்டுதல் பெற்று, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கும்பலைக் கொண்ட இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை என்ற அமைப்பை அமெரிக்கா மற்றும் இந்தியத் தொழில் – வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கின. “தொழில் வர்த்தகத் துறையில் இரு நாடுகளிடையே அதிகரிக்கும் அளவிலான பங்காளிகளாவது மற்றும் கூட்டுறவுக்கான ஒரு பாதை வரைபடத்தை வகுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதாக அந்தப் பேரவை இருக்கும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான வகையில் தற்போதைய சட்டத்தைத் திருத்தியும், புதிய கொள்கைகளை நிறுவியும், புதிய சட்டங்களை வகுப்பதற்கான பல பரிந்துரைகளை, ரத்தன் டாடாவை இணைத் தலைவராகக் கொண்ட அந்தப் பேரவை செய்துள்ளது. பலவீனமான தொழிலாளர் சட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வசதிகள், பட்ட மேற்படிப்புக்குக் கூடுதலான முனைப்பு, நட்டஈடு கடப்பாடுச் சட்டங்களைத் தளர்த்துவது, சர்ச்சைக்குரிய வழக்குகளை-குறிப்பாக போபால் பேரழிவு போன்ற நிகழ்வுகளை ஒட்டி எழும் வழக்குகளை விரைந்து முடிப்பது ஆகியவற்றைப் பேரவை முன்தள்ளுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் உச்சமட்டத்திலான ஒப்பிசைவு காரணமாக இப்போது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதாகப் பேரவை மாறியுள்ளது.
கார்ப்போரேட் சர்வாதிகாரப்பிடி

இந்தியாவிலுள்ள ஒரே ஒரு தனியார் நகரை டாடாக்கள் சொந்தமாகக் கொண்டு நடத்துகிறார்கள். 1904-ஆம் ஆண்டு ஜாம்சேத்ஜி டாடா நிறுவிய ஜாம்சேத்பூர் என்ற எஃகு நகர், ஒரு நகராட்சியோ, தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு எந்த உள்ளூராட்சியோ இல்லாத ஒரு சில இந்திய நகரங்களில் ஒன்று. ஆறு லட்சம் மக்களைக் கொண்ட அந்த நகரை டாடா எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாம்சேத்பூர் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் கம்பெனிதான் நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் 74-ஆவது திருத்தம், நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, அம்மாதிரியான உள்ளூராட்சிகளுக்குக் காலக்கிரமப்படி தேர்தல்கள் நடத்துவதற்கான சட்டங்களை இயற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வேண்டுகிறது. ஆனால், அம்மாதிரி ஜனநாயகபூர்வ உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் டாடாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரை மாற்றுவதற்கு டாடா எஃகு நிறுவனம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. ஒரு ஜனநாயக அமைப்பைவிட டாடா எஃகு நிறுவனம் போன்றதொரு பரோபகார ஆட்சியின் கீழ் அந்நகரம் இருப்பதுதான் அதிகப்படியாக விரும்பத்தக்கது என்றார்கள். “ஒரு நூறாண்டு காலம் வெற்றிகரமாக இருந்துவரும் மாதிரிக்கு மாற்றாக, எவ்வளவுதான் உயர்ந்த நோக்கமுடையதாக இருந்தாலும் இன்னமும் சோதித்தறியப்படாத வேறொரு மாதிரியைக் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்கிறார், டாடா எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பி.முத்துராமன்.
இராணுவ சர்வாதிகார கும்பலுடன் – தொழில் வர்த்தகக் கூட்டு

அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக உலகே வெறுத்து ஒதுக்கிய மியன்மார் இராணுவ சர்வாதிகார அரசாங்கம் இந்தியாவில் ஒரு நண்பனைக் கொண்டிருக்கிறது-அவன்தான் டாடா. ஜனநாயக சக்திகளுக்கு வழிவிட வேண்டுமென்று மியன்மார் இராணுவ அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு முயற்சியாக, பெப்சி கம்பெனி போன்ற பல பன்னாட்டுத் தொழில்கழகங்கள், அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஒரு சமயத்தில், அந்த ஒடுக்குமுறை ஆட்சிக்கு கனரக மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்குவதாக டாடா மோட்டார் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரவலான பாலியல் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், மியன்மாரின் செழிப்பான இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளில் கட்டாயப்படுத்தித் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும், மியன்மார் சர்வாதிகார இராணுவக் கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இராணுவ சர்வாதிகார கும்பலுக்கு எதிராகப் பழங்குடிக் குழுக்கள் கடுமையான வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். (தற்போது விடுவிக்கப்பட்டுள்ள – வினவு) நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி, 1989 முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இராணுவ பாசிச சர்வாதிகாரக் கும்பலுடன்தான் டாடாக்கள் தொழில் வர்த்தகக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
பழங்குடி மக்களின் நிலங்களை களங்கப்படுத்தும் டாடாக்கள்

பூமியைத் தீக்கிரையாக்கும் தந்திரங்கள்

டாடா எஃகு நகரம் உருவாக்கப்பட்ட இடம், சில வளமிக்க இரும்புக் கனிமங்களின் குவியல்களைப் பெற்றுள்ள, அடர்ந்த காட்டு நிலங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. அந்த நிலங்களுக்கு முன்போ, இப்போதோ உரிமைப் பட்டா, பத்திரங்களைப் பழங்குடியின மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய 364 ஏக்கர் நிலங்களை 46.32 கோடி ரூபாய்க்கு டாடா கம்பெனி விலைக்கு வாங்கியது. நோவா முடியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கத்துக்காகவும், ஜாம்சேத்பூர் நகரியம் அமைக்கவும் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய அரசாங்கம் டாடாக்களுக்கு நிலங்களைக் கையளித்தபோது பழங்குடி மக்கள் அகற்றப்பட்டார்கள்.

1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர். 2000-ஆம் ஆண்டு பூமியைத் தோண்டும் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியிலிருந்த ஒரு நீரூற்றை டாடாக்கள் அழித்து விட்டார்கள்; அந்த நீரூற்றுதான் டாடாக்களது நிலக்கரி சுரங்கத்தின் விளிம்பில் உள்ள 22 குடிகளைக் கொண்ட குக்கிராமமான அகாடிய தோலாவின் பழங்குடி மக்களுடைய ஒரே நீராதாரமாக இருந்தது. அவர்களுடைய நீராதாரமாக விளங்கியதோடு, அந்த நீரூற்று அருகிலுள்ள கிராமத்தவர்களுக்கான சமூக உறவாடுதலுக்கான மையமாகவும் இருந்தது.

குரோமிய நச்சு

சுகிந்தா பள்ளத்தாக்கை உச்ச அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட பகுதியாக அங்குள்ள குரோமைட் சுரங்கங்கள் ஆக்கிவிட்டன என்று இந்திய அரசாங்கத்தின் பொதுத் தணிக்கை அதிகாரி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று ‘டவுன் டு எர்த்’ என்ற பத்திரிக்கை எழுதியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய அளவுக்கு குரோமைட் வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா கம்பெனியாகும். அளவுக்கு அதிகமாகக் குவித்து வைத்துள்ள கிடங்குகளில் இருந்து கசியும் ஹெக்சாவேலண்ட் குரோமியம் என்ற நச்சு இரசாயனத்தால், அபாய அளவுக்கு மேல் மாசுபட்ட தோம்சாலா ஆறு மற்றும் 30 ஓடைகள் இப்பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்றன. சுவாசக் குழாயில் எரிச்சல், மூக்குக் குழலில் புண், எரிச்சலுடன் தோல் புண், மூச்சுத் திணறல், நிமோனியா காச்சல் ஆகியவை ஹெக்சாவேலண்ட் குரோமியத்தால் ஏற்படுகின்றன. ஒரிசா சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் நார்வே அரசாங்க நிதி உதவியுடன் நடந்த ஆய்வுப்படி அப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் 25 சதவீத மக்கள் இந்த மாசுபடுதலால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் புகலிடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி

1990-களில், கர்நாடகா மாநிலம்-நகராஹோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகளின் புகலிடம் அமைந்துள்ள பகுதியின் மத்தியில் ‘கேட்வே டஸ்கர் லாட்ஜ்’ என்ற சொகுசு விடுதி கட்டுவதற்காக டாடாவுக்குச் சொந்தமான தாஜ் ஓட்டல்கள் குழுமம் ஒரு பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு வனமுகாம் என்ற முன்மொழிதலைக் காட்டி, ஆனால் முழுமையான சுற்றுலா வசதிகள், மின்உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர் மற்றும் கலந்துரையாடல்களுக்கான அறைகள் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்காகத் திட்டமிடப்பட்டது. ஒரு தேசியப் பூங்காவிற்குள் எந்த நடவடிக்கைக்கும் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவே இல்லை. இத்திட்டத்துக்குப் பெருமளவு பழங்குடி மக்களின் எதிர்ப்பு மற்றும் அதற்கு எதிரான சட்டமுறைப்பாடு காரணமாக இறுதியில், புலிகளின் புகலிடத்திலிருந்து டாடாக்கள் பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.
டாடாக்களின் வன்முறைகளும் படுகொலைகளும்:

கலிங்கா நகர் நந்திகிராமம்

குவா படுகொலைகள்

பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு வன்முறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் சுரங்கத் தொழில் மாவட்டங்களில் சர்வசாதாரணமானது. நோவாமுடியில் டாடாவின் விமான நிலையம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1980 செப்டம்பர் 7 அன்று, நிலத்தைப் பறி கொடுத்த கிராமத்தவர்கள், டாடா எஃகு நிறுவனத் தலைவர் ரூசி மோடியை எதிர் கொண்டு மனு அளிப்பதற்காக விமான நிலையத்துக்குப் போனார்கள். கும்பலைப் பார்த்ததும், மோடியினுடைய விமானம் அங்கே தரையிறங்காமல் ஜாம்சேத்பூருக்குத் திரும்பியது. இவையெல்லாம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த, பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியைத் தனிப் பழங்குடி மாநிலமாக்குவதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடந்தது. பழங்குடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசாங்கத்தை டாடாக்களும் பிற சுயநலக் கும்பல்களும் நிர்பந்தப்படுத்தின. செப்டம்பர் எட்டாம் நாளே அவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; பழங்குடியினரின் கொந்தளிப்பை அடக்குவதற்காக குவா நகரின் சந்தையில் வைத்து அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நிராயுதபாணிகளான எட்டுப் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கலிங்காநகர் படுகொலை

2006, ஜனவரி 2 அன்று, ஒரிசா மாநிலம் கலிங்கா நகரில், கொடூரமாக ஆயுதமேந்திய ஒரு போலீசுப் படை பழங்குடி கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பன்னெடுங்காலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் டாடா எஃகு நிறுவனம் சட்டவிரோதமாக சுற்றுச்சுவர் கட்டியதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியபோது தான் இது நடந்தது. டாடா எஃகு நிறுவனம் அங்கு வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அந்தப் படுகொலைக்கு முன்புதான் டாடா எஃகு நிறுவன நிர்வாகத்தினர் மூன்றுமுறை ஒரிசா முதலமைச்சரைச் சந்தித்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்று சிதைக்கப்பட்ட எட்டு உடல்கள் போலீசாரால் பிரேதப் பரிசோதனைக்கு தரப்பட்டன. இறந்து போயிருந்த ஒரு பெண்ணின் மார்பு அறுத்தெறியப்பட்டிருந்தது; துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு சிறுவனின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா உடல்களிலும் இருந்து உள்ளங்கைகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. “இச்சம்பவம் தீவினைப்பயனானது (துரதிருஷ்டவசமானது)” என்று சொன்ன டாடா, “எதிர்ப்பிருந்தபோதும் அதே இடத்தில் திட்டமிட்டபடி ஒரு எஃகு ஆலை நிறுவுவது தொடரும்” என்று அறிவித்தார்.

சிங்கூர் ஒடுக்குமுறை

2006-ஆம் ஆண்டு டாடாவுக்கு ஒரு பெரும் கொடை கிட்டியது. கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. அங்கே லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்ற அறிவிப்புடன் கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது; ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த சிங்கூர் கிராமம் போர்க்களமாக மாற்றப்பட்டது; டாடா மோட்டார் நிறுவன இடத்தையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. (தொடரும்)

Thanks: vinavu

இந்தியா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்: யார் அந்த "ஜி'?

ஊரெல்லாம் இதே பேச்சுதான். "ஸ்பெக்ட்ரம்' என்கிறார்கள் சிலர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்கிறார்கள் வேறு பலர். எப்படி அழைத்தால்தான் என்ன, ஒட்டுமொத்த இந்தியாவையே சூறாவளியாகச் சுற்றியடிக்கும் விஷயம் எது என்று கேட்டால் "2ஜி'யாகத்தான் இருக்கும்.

கூகுள் இணையதளத்தில் 2ஜி என உள்ளிட்டுத் தேடினால், நொடிக்கும் குறைவான நேரத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து கொட்டுகின்றன. கூகுளில் இந்தி நடிகர் ஷாருக்கானை விடவும் 2ஜி 29 மடங்கு பிரபலம்; ரஜினிகாந்தை விட 17 மடங்கு! 2ஜி எந்த அளவுக்குப் பிரபலமோ அந்த அளவுக்கு ஊழலிலும் 2ஜியை விஞ்ச எதுவும் இல்லை போலிருக்கிறதே. 1.76 லட்சம் கோடி என்கிற பெரிய தொகையை எண்ணில் எழுதிக் கூட்டிப் பாருங்கள். தலைசுற்றும்.

இப்படி மலைப்பை ஏற்படுத்தும் விஷயத்தைப் பற்றித்தான் பிரதமரிடம் நாடு கேட்கிறது; "ஐயா 2ஜி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்று.

ஊஹூம்... பிரதமர் அசைந்து கொடுப்பதாக இல்லை. இங்கே மின்னஞ்சலிலும் எஸ்எம்எஸ்ஸிலும் பரபரப்பான விவாதமாகிக் கொண்டிருக்கும் ஒரு விவகாரம் பற்றி பிரதமர் மெüனம் சாதிக்கிறார். ஒரு வழியாக தனது மெüனத்தைக் கலைத்து அவர் ஏதாவது கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் என்னதான் சொல்வார்? எனக்குத் தெரிந்த 2ஜி என்பது சோனியாஜியும் ராகுல்ஜியும்தான் என்று சொன்னால்கூட வியப்பில்லை.

இதைவிட வேதனையான இன்னொரு விஷயம் இருக்கிறது. அதை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர் என்று கடந்த 24-ம் தேதி அவருக்கு "அக்மார்க்' சான்றிதழ் வழங்கியிருப்பது யார் தெரியுமா? சோனியா காந்திதான், வேறு யார்? அத்தோடு விட்டாரா என்றால் அதுதான் இல்லை. "நான் ஊழலைப் பொறுக்காதவள்' என்று ஒரு அண்டப்புளுகையையும் அடுத்த நாளே அவிழ்த்துவிட்டார்.

என்ன கொடுமை? சோனியாவிடம் இருந்து மன்மோகனுக்கு நற்சான்று. இதைவிடப் பிரதமரை இழிவுபடுத்தும் வேறொரு செயல் இருக்க முடியுமா என்று யாரும் அதிர்ச்சி அடையாதீர்கள். இது எதிர்பார்த்ததுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை இருக்கிறது. சோனியாவின் இத்தாலிய நண்பர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை (மிஸ்டர் க்யூ) மன்மோகன் காப்பாற்றிய கதை அது.

இங்குள்ள சிபிஐ போல ஸ்வீடனில் தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்று இருக்கிறது. ஸ்டென் லின்ட்ஸ்டோர்ம் என்பவர் அதன் தலைவராக இருந்தார். அவர்தான் போஃபர்ஸ் ஊழல் குறித்து விசாரித்தவர்.

6.4.1998 அவுட்லுக் இதழில் வெளியான அவரது பேட்டியில்,போஃபர்ஸிடம் இருந்து மிஸ்டர் க்யூவின் நிறுவனங்கள் பெருந்தொகையைப் பெற்றது எப்படி என சோனியா விளக்க வேண்டும் என்று கூறியிருந்தார். யாரோ ஒருவர் பணம் பெற்றது பற்றி சோனியா ஏன் விளக்கமளிக்க வேண்டும்? என்றுதானே கேட்கிறீர்கள்! காரணம் இருக்கிறது. போஃபர்ஸýக்கு மிஸ்டர் க்யூவை அறிமுகப்படுத்தியவரே சோனியா காந்திதானே!

6 ஆண்டுகளுக்குப் பிறகு 8.4.2004-ல் "போஃபர்ஸ் ஊழல் பற்றி சோனியாவிடம் விசாரணை நடத்த வேண்டும்" என்று லின்ட்ஸ்டோர்ம் மீண்டும் எழுதினார். அதற்கு அனுமதி வழங்காமல் காப்பாற்றியவர் இப்போது சோனியா காந்தியால் அப்பழுக்கற்றவர் என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் திருவாளர் மன்மோகன் சிங்தான். சோனியாவின் சர்ட்டிபிகேட்டுக்குக் காரணம் இப்போது புரிகிறதா?

இந்த ஊழலில் கமிஷன் கொடுத்த போஃபர்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மார்ட்டின் ஆட்போ தனது நாள்குறிப்பில், "காந்தி டிரஸ்ட் வழக்கறிஞரை' தாம் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார். போஃபர்ஸ் ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய ஆவணம் இது.

இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மிஸ்டர் க்யூ இறுதியாக இந்தியாவுக்கு வந்தபோது, ஒரு திருடனைப் போல்தான் நடந்து கொண்டார். அவர் மீதான புகார்களுக்கு ஆதாரங்கள் கிடைத்த நிலையில், 1993-ம் ஆண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு, சோனியா கொடுத்த நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்பது உலகறிந்த ரகசியம்.

1999-ல் மிஸ்டர் க்யூவுக்கு சோனியா வெளிப்படையாக ஆதரவளித்தார். க்யூ ஒரு அப்பாவி; அவர்மீது வேண்டுமென்றே பாஜக அரசு பழிபோடுகிறது என்றார். பத்தாண்டுகள் கழித்து க்யூவை தொந்தரவு செய்ததற்காக மன்மோகன் அரசு சோனியாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. போஃபர்ஸ் ஊழலின் முக்கியக் குற்றவாளியான க்யூவை ஒவ்வொரு கட்டத்திலும் சோனியா தொடர்ந்து காப்பாற்றினார். சட்டச் சிக்கல்களிலிருந்து க்யூ தப்புவதற்கு மன்மோகன் அனுமதித்தார்.

இப்படிப் பலவகையிலும் போஃபர்ஸ் ஊழலில் சந்தேக நிழல் படிந்த சோனியா, இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்; தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர். அவர் சொல்கிறார் ஊழலை நான் பொறுப்பதில்லை என்று. மன்மோகனுக்கு நற்சான்று வேறு. இது இரட்டைச் சோகம் இல்லையா?

எதற்காக இந்த போஃபர்ஸ் பின்னணி எல்லாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தப் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு மேலே படியுங்கள் புரியும்.

கடந்த சில மாதங்களில் ஊழல்களின் சுனாமி நம்மைப் பலமுறை தாக்கியிருக்கிறது. அதில் முதலாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் 1.76 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்தான். சோனியாவால் திருவாளர் பரிசுத்தம் என சான்றளிக்கப்பட்ட மன்மோகன் சிங்தான் இந்தக் கொள்ளைக்கு அனுமதியளித்தவர். 2ஜி ஊழல் குறித்து விசாரணை கோரிய சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை கோப்பில் தூங்க வைத்த "திருவாளர் பரிசுத்தம்', இப்போது அதுபற்றிய சட்டப் பிரச்னைகளைப் பேசி, சட்டத்தின் பிடியிலிருந்தும், தனது தார்மிகக் கடமையிலிருந்தும் ஓடி ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறார்.

ராசாவை தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சராக்கும் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவுடன் அரசியல் வாதிகள் மட்டுமல்லாமல், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பேசிய உரையாடல்கள் வெளியே கசிந்திருக்கிறது. 8 ஆயிரம் கோடி மோசடி நடந்திருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல். 600 கோடி ஊழல் நடந்த மும்பை ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல். இப்படி ஊழல் சுனாமிகள் இந்தியாவை விழுங்கிவிடும் ஆபத்தான நிலைமை.

இவை அனைத்தையும் சேர்த்தால் சுமார் 1.85 லட்சம் கோடி வருகிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட்டில் இது 18.5 சதவீதம். இவ்வளவு பெரிய ஊழலுக்கு இடையே எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல் காங்கிரஸýக்குக் கிடைத்த ஆறுதல். நீ மட்டும் என்ன ஒழுங்காம் என்று திருப்பிக் கேள்வி கேட்கக் கிடைத்த வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட 1.86 லட்சம் கோடி ஊழலுடன் ஒப்பிட்டால் அது வெறும் கொசுறுதான் என்றாலும், ஊழலை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தார்மிக உரிமையை பாரதிய ஜனதா கட்சி இழந்துவிட்டது. அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது.

நாம் முன்னே குறிப்பிட்ட முறைகேடுகளின் பட்டியலில் உள்ளவை 2ஜி ஊழல் தொடர்பானது. இந்த ஊழலில் நாட்டுக்கு 67 ஆயிரம் கோடியிலிருந்து

1.76 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தலைமைத் தணிக்கைக் கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதும் அரசுக்குப் பேரிழப்பு என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அது எப்படிப்பட்ட ஊழல் என்பது தெரியும்போதுதான் தலைசுற்றல் ஏற்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்படும் அலைக்கற்றை என்பது ஒருவகையான மின்காந்த அலையைக் குறிப்பது. செல்போனில் பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும், கணினிகளை இணைப்பதற்கும் ஸ்பெக்ட்ரம் பயன்படுகிறது. இது நாட்டின் சொத்து.

2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 2008-ம் ஆண்டு இதை விற்பனை செய்து நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தியதுடன் ஒரு சிலர் லாபம் ஈட்டியதுதான் இந்த மோசடியின் பின்னணி.

2001-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட 8 ஆண்டுகளின் பணவீக்க வேறுபாடு மட்டுமே இழப்பு அல்ல. நகருக்கு நடுவே 2001-ம் ஆண்டு வாங்கிய நிலத்தை, அதே விலைக்கு 2008-ம் ஆண்டில் விற்பதைப் போன்றதுதான் அன்றைய முறையைப் பின்பற்றி அதே விலை நிர்ணயத்தில் இப்போது அலைக்கற்றை ஒதுக்கீட்டைச் செய்திருப்பது.

2008-ம் ஆண்டில் மட்டுமே பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 20 மடங்கு உயர்ந்தன என்றால் 8 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

தனது செயலை நியாயப்படுத்தும் ஆ.ராசா, 2001-ம் ஆண்டின் விலையிலேயே 2003 ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததைச் சுட்டிக் காட்டுகிறார். அதாவது தனது செயலை நியாயப்படுத்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா முன்வைக்கும் நொண்டி வாதம் இது.

2003-ம் ஆண்டில் இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 5 பேர்தான் செல்போன் வைத்திருந்தார்கள். மொத்தமே தொலைபேசி வைத்திருந்த இந்தியர்கள் 1.3 கோடி பேர்தான். 2006-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தையே சந்தித்து வந்தன. அரசு உதவிக்கு ஏங்கிக் கிடந்தன.

ஆனால், 2003-க்கும் 2008-க்கும் இடையே நிலைமை மாறியது. தொலைபேசி வைத்திருப்போரின் எண்ணிக்கை 14 மடங்கு உயர்ந்தது. தொலைத்தொடர்பு வருவாய் 4 மடங்கு அதிகமானது. அந்தத் துறையின் பங்குகள் 4.4 மடங்கு உயர்ந்தன.

2001-ல் செல்போன் வைத்திருந்தோரின் எண்ணிக்கை வெறும் 30 லட்சம்தான். அது 2003-ல் 1.3 கோடியானது. 2008-ம் ஆண்டில் அதுவே 18 கோடியானது. இப்போது 68.8கோடி. 2003-ம் ஆண்டைக் காட்டிலும் 53 சதவீதம் அதிகம். 2003-ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடியாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய், 2008-ம் ஆண்டில் 1.69 லட்சம் கோடியானது.

தொலைத்தொடர்புத் துறை எந்த அளவுக்கு வளமானதாக மாறியிருக்கிறது என்பதையும், அந்தத் துறையில் தொழில் செய்யும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு லாபம் பெறுகின்றன என்பதையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதனால், 2008-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் என்பது 2003-ம் ஆண்டைக் காட்டிலும் பலமடங்கு மதிப்புடையதாக மாறியிருக்கும்; அதைப் பெறுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்திருக்கும் என்பதைச் சொல்லியா தெரியவேண்டும்?

]இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டில் 99.3 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறதென்றால், ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு பற்றி வேறென்ன சொல்ல?

2007 செப்டம்பரில் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் குறித்த கொள்கையை அறிவித்தார் அன்றைய அமைச்சராக இருந்த ஆ. ராசா. இது தொடர்பாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 1 என செப்டம்பர் 24-ம் தேதி அறிவித்தார். ஆனால் அவரே ஒருவாரம் கழித்து, செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதாவது ஒரே நாள் அவகாசத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்று பொருள். எப்படி இருக்கிறது கதை? அப்படியும், பலர் விண்ணப்பித்திருப்பதால், தனக்கு வேண்டப்பட்டவர்களைத் தவிர ஏனையோரைத் தட்டிக் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

அதன் பிறகு 100 நாள்கள் கழித்து ஜனவரி 10-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு அவரிடம் இருந்து இன்னொரு திடீர் அறிவிப்பு பறந்தது. ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பாக செப்டம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை உடனடியாக அன்றையதினமே மதியம் 3.30-க்குள் அனுப்பி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அரசின் ஒப்புதலைப் பெற்று, அன்று மாலைக்குள் உரிய தொகையைச் செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. எப்படி இருக்கிறது பாருங்கள், ஆ. ராசாவின் முறையான ஒதுக்கீட்டுக் கொள்கை. இதற்குப் பெயர்தான் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதாம்.

இந்த அறிவிப்பையடுத்து தில்லி தொலைத்தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. வரிசையில் முதலில் வருவதற்குக் கடும் போட்டி. இருக்காதா பின்னே? முதலில் வரும் சிலருக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்றால் நிறுவனங்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வராமல் இருக்குமா?

மொத்தம் வந்த 574 விண்ணப்பங்களில் 454 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தெரியாமல் பல விண்ணப்பதாரர்கள் திகைத்தனர். உண்மையில் என்ன நடந்தது என்பது தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்தானே தெரியும்?

இதுபற்றிய சிஏஜி அறிக்கை தெளிவாக நடந்தேறிய நாடகத்தைப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது. "13 விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையுடன் தயாராக இருந்தனர்' என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. அதாவது அந்த 13 பேருக்கும் முன்பே தகவல் தெரிந்திருக்கிறது!

ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா! பல கோடிக்கான வங்கி வரைவோலையுடனும், வங்கி உத்தரவாதத்துடனும், தேவையான ஆவணங்களோடும் ஒரு சில நிறுவனங்கள் தயாராக வந்திருந்தன என்றால் அது எப்படி சாத்தியம்? காசோலையை மாற்றுவதற்கே அரைநாள் வேண்டும் என்கிற நிலைமையில் இவர்கள் முன்தேதியிட்ட வங்கி வரைவோலைகளுடன் தயாராக வந்திருந்தார்கள் என்றால் எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்ட சதியல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே விவகாரம் தொடங்கிவிட்டது. ஆ.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறையை நிராகரித்த பிரதமர், வெளிப்படையாக நடந்துகொள்ளும்படி 2007 நவம்பரில் வலியுறுத்தி இருக்கிறார். சில மணி நேரங்களிலேயே அதற்குப் பதிலளித்த ராசா, முந்தைய அரசுகளின் கொள்கைப்படியே தாம் நடந்து கொள்வதாகப் பதிலளிக்கிறார்.

இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்க ஒருமாத அவகாசம் எடுத்துக் கொண்ட பிரதமர், தான் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக மட்டும் தகவல் அனுப்பினார். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என ராசாவுக்கு அனுமதியளிப்பது போன்றதுதானே இது?

ஜனவரி 10-ம் தேதி ஆ.ராசா தனது மோசடித் திட்டத்தை அரங்கேற்றினார். ஆனால் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை.

ஏற்கெனவே இருக்கும் கொள்கையையே தாம் பின்பற்றுவதாக ராசா தம்மிடம் தெரிவித்தார் என்று 15 மாதம் கழித்து 24.05.2010-ல் பிரதமர் ஒப்புக் கொள்கிறார். வெளிப்படையாக நடந்து கொள்ளச் சொன்ன பிரதமரின் தடாலடி பல்டிக்கு என்ன காரணம்? இந்தக் கொள்ளை ரகசியமானது அல்ல; எல்லோருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நாம் அகராதியைப் புரட்ட வேண்டியதில்லை.

இந்தப் பகல் கொள்ளையில் பெரிய கூட்டுச் சதி இருக்கிறது. ராசாவை மட்டுமல்ல, முதலில் ஏனய்யா மறுப்புத் தெரிவித்தீர்கள்? பிறகு ஏன் மெüனமானீர்கள், கடைசியாக ஏன் ஆதரவளிக்கிறீர்கள் என்று பிரதமரையும் அல்லவா கேட்க வேண்டும்!

2ஜி ஊழல் தொடர்பான முறைகேடுகள் மூன்று வழிகளில் கசியத் தொடங்கின. முதலாவது வழி எஸ்டெல் வழக்கு. அனைத்திந்திய உரிமம் பெறுவதற்காக முயன்ற எஸ்டெல் நிறுவனம், உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே ராசாவுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. 1,658 கோடிக்கு விற்பனையாகும் உரிமத்தைத் தங்களுக்கு 13,621 கோடிக்குத் தரும்படி அந்த நிறுவனம் கேட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் எஸ்டெல் முறையிட்டது. அந்த நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உடனே ராசாவின் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்தச் சமயத்தில் என்ன நடந்ததோ, எஸ்டெல் நிறுவனம் தங்கள் மனுவை விலக்கிக் கொண்டு, வழக்கிலிருந்து ஒதுங்கியது. ஆனால், ஊழல் விவகாரம் வெளிவர இந்த வழக்கு உதவியது. எஸ்டெல் வழங்க முன்வந்த தொகையின் அடிப்படையில்தான் 67,300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்கள். தொலைத் தொடர்புத் துறைக்கு மிகவும் புதியவைகளான இந்த நிறுவனங்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த இரு நிறுவனங்களும் 2ஜி உரிமம் பெற்ற சில வாரங்களில் தங்களது நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குகளை பல மடங்கு லாபத்தில் விற்றன.

1,658 கோடிக்கு உரிமம் பெற்ற யூனிடெக், தனது 67 சதவீதப் பங்குகளை 6,120 கோடிக்கு விற்றது. அதாவது உரிமத்தின் மொத்த மதிப்பு 9,100 கோடி இதேபோல், 1,537 கோடிக்கு உரிமம் பெற்ற ஸ்வான், தனது 44.7 சதவீதப் பங்குகளை 3,217 கோடிக்கு விற்றது. 25 கோடிக்கு சிறிய உரிமங்களைப் பெற்ற எஸ்டெல் நிறுவனம், தனது 5.61 சதவீதப் பங்குகளை 238.5 கோடிக்கு விற்றது. இதன் அடிப்படையில்தான் இழப்பு 57,600 கோடியில் இருந்து 69,300 கோடிவரை இருக்கலாம் என அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை சிஏஜி முடிவு செய்திருக்கிறார்.

மூன்றாவதாக, 3ஜி ஏலம். இந்த ஏலத்தில் அரசுக்குக் கிடைத்த வருவாயின் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மதிப்பு கணக்கிடப்பட்டதில் அரசுக்கு 1,76,645 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைதான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியாகி பரபரப்புக்குள்ளானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்திருப்பது வெளிப்படையான மோசடி. திருவாளர் பரிசுத்தம், கறையே படியாத கரங்களுக்குச் சொந்தமானவர், நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும் சோனியா காந்திக்கும் தெரிந்தேதான் இது நடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ராசாவின் அமைச்சகத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ராசா தெளிவாகத் திருப்பிக் கேட்டார், "எல்லாவற்றையும் பிரதமருடன் ஆலோசித்துத்தான் செய்திருக்கிறேன். அவருக்குத் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முந்தைய ஒதுக்கீடுகளைப் போல நடந்திருக்கிறது. பிறகு, நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்?' என்று!

ராசாவின் கருத்தை பிரதமர் மறுக்கவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து கடந்த மே மாதம், "இந்த விவகாரம் குறித்து ராசா தம்முடன் ஆலோசனை நடத்தினார்' என்று பிரதமர் ஒப்புக்கொண்டார். பிரதமருக்குத் தெரிந்தே எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிடத் தெளிவான வாக்குமூலம் வேறென்ன வேண்டும்?

முதலில் "நிராகரிப்பு', பின்னர் "தடை எதுவும் இல்லை', அதன் பிறகு "ஒப்புதல்' என தனது நிலையை பிரதமர் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார். இப்போது சிஏஜி அறிக்கை மூலம் மோசடிகள் அம்பலமாகியிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றம் உள்பட நாட்டில் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிய பிறகும் வாயைத் திறக்க மறுக்கிறாரே ஏன்? பிரதமருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லையா?

ராசா விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள். அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது உங்கள் பதவிக்கே கூட ஆபத்தாக முடியலாம் என 2007-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் யாராவது பிரதமருக்கு உணர்த்தியிருப்பார்கள். இல்லாவிட்டால் ராசாவின் செயலை முதலில் நிராகரித்தவர், ஏற்றுக் கொள்ளாதவர், எச்சரித்தவர், பிறகு ஏன் பார்த்தும் பார்க்காமல் மெüனம் சாதித்தார்? அப்படி, பிரதமர் மன்மோகன் சிங்கின் கையையும் வாயையும் கண்களையும் கட்டிப் போடும் சக்தி ஒருவருக்குத்தான் உண்டு. அது நிச்சயமாக சோனியா காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

கதை இன்னும் தொடர்கிறது. 2ஜி விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தவை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. ஒருகையில் டாடா குழுமத்தையும் மறு கையில் ரிலையன்ஸ் குழுமத்தையும் வைத்திருக்கும் நீரா ராடியா, தில்லி அரசியல் வட்டத்தில் செல்வாக்குப் படைத்தவர். 9 தொலைபேசிகள் மூலமாக 180 நாள்கள் அவர் நிகழ்த்திய உரையாடலை வருமான வரித்துறை சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்தது. சிபிஐயின் வேண்டுகோள்படி 20.11.2009-ம் தேதி நடந்த உரையாடலின் சிறு பகுதியை மட்டும் விசாரணைக்காக அது வழங்கியது. அந்தச் சிறுபகுதியே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் கிழித்துப் போட்டிருக்கிறது.

ராடியாவின் 5,800 தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இணையத்தில் கிடைப்பது 104. அவற்றில் 23 மட்டுமே எழுத்து வடிவமாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தையும் தோண்டினால் இன்னும் என்னென்ன பூதங்களெல்லாம் கிளம்புமோ?

வருமானவரித்துறை சிபிஐக்கு அனுப்பிய குறிப்பில் கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, ராடியாவும் ராசாவும் நெருக்கமானவர்கள். யூனிடெக், ஸ்வான், டேடாகாம் நிறுவனங்களுக்குத் தொலைத்தொடர்பு உரிமம் பெற்றுக் கொடுத்ததில் ராடியாவுக்குப் பங்குண்டு.

இரண்டாவது, தான் அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு உரிமத்திலேயே ராசாவுக்குப் பங்கு உண்டு.

மூன்றாவது, ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக்குவதற்கு பர்கா தத், வீர் சாங்வி ஆகிய பத்திரிகையாளர்கள் வழியாக ராடியாவும் கனிமொழியும் முயன்றிருக்கிறார்கள்.

நான்காவது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டரும் ராடியாவும் நெருக்கமானவர்கள்.

ஐந்தாவது, யூனிடெக், ஸ்வான் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் ராடியா உதவி செய்திருக்கிறார்.

இந்த ஐந்தும் சிறு துரும்புதான். முழு விவரமும் இன்னும் வெளிவரவில்லை.

ராசாவுக்கு தொலைத்தொடர்புத்துறை கிடைப்பதை முதலில் அவரிடம் உறுதி செய்வதே ராடியாதான். தொலைபேசி உரையாடலில் அது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. தயாநிதி மாறன் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு நெருக்கடி கொடுப்பது பற்றிக் குறிப்பிட்டு வீர் சாங்வியுடன் ராடியா பேசும்போது, "ஸ்டாலினின் அம்மா தயாளுவிடம் ரூ.600 கோடியை தயாநிதி மாறன் கொடுத்திருப்பார்' எனக் குறிப்பிடுகிறார்கள். வெட்கமே இல்லாமல் அமைச்சர் பதவி விற்கப்பட்டிருக்கிறது. அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாகியிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

2ஜி விவகாரத்தில் ராசா மட்டும் தனியொருவராகக் கொள்ளை அடித்திருக்க முடியாது. முக்கியப் பயனாளிகள் அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமரையே எதிர்க்கும் அளவுக்கு ராசாவுக்கோ அல்லது திமுகவுக்கோ தைரியமும் கிடையாது, திறனும் கிடையாது. திமுக வெளியேறிவிட்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால்தான் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பின்னணியில் இருப்பது யார்? அது நிச்சயமாக, கருணாநிதியோ, கனிமொழியோவாக இருக்க முடியாது. அவர்களுக்குப் பயந்து பிரதமர் மெüனம் சாதித்திருக்க முடியாது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்ட ஒருவர்தான் இந்த மோசடியை பின்னால் இருந்து நடத்தியிருக்கிறார். அவர் யாராக இருக்க முடியும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?

அந்த உண்மை வெளிவந்தால்தான் பிரதமரின் ஆலோசனையை ராசா மீறியது ஏன் என்பதும், பிரதமர் அவ்வப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பதையும், இந்த மெகா மோசடியின் பின்னணிதான் என்ன என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும்.

அதனால்தான் அதை வெளிக்கொணர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குத்தான், பிரதமர் உள்பட யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு விசாரிக்க அதிகாரம் உண்டு. அதனால்தான் கூட்டுக் குழு என்று சொன்னாலே அரசு தரப்பு பயப்படுகிறது. அதை எதிர்க்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங் நூறு விழுக்காடு நேர்மையானவர். சரி, சோனியா காந்தி சொல்வதை ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், 2ஜியின் பின்னணியில் இருக்கும் அந்த "ஜி' யார்?

Thanks: எஸ். குருமூர்த்தி, Dinamani

Wednesday, December 8, 2010

2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை!

நாட்டையே அதிரவைத்து எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது, இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில் இதுவே மிகப் பெரியது என்று சித்தரிக்கப்படும் அலைக்கற்றை ஊழல். இந்த ஊழலால் அரசுக்கு ரூ. 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஊழல் பற்றி ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த போதிலும், இதில் மக்களின் கவனம் திரும்பிவிடாதபடி காங்கிரசும் தி.மு.க.வும் கவனித்துக் கொண்டன. கருணாநிதி குடும்பச் சண்டையில் இந்த ஊழல் மீண்டும் புகையத் தொடங்கிய போதிலும், பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட தற்காலிக சமரசத்துக்குப் பின்னர் அது ஈரப் போர்வையால் மூடப்பட்டது. நீதிமன்றத்தின் கண்டங்கள், கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த தொலைபேசி உரையாடல்கள் முதலானவற்றைத் தொடர்ந்து இந்த ஊழல் மீண்டும் பரபரப்பாகி, தொலைத்தொடர்புத் துறையின் தி.மு.க. அமைச்சரான ராசா இப்போது பதவி விலகியுள்ளார்.

ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா செல்போன்கள் இயங்க ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கற்றைக் கதிர்கள் அவசியம். வான்வெளியில் உள்ள ரேடியோ ஃபிரீக்வன்சி ஸ்பெக்ட்ரம் எனும் அலைவரிசையைக் கொண்டு செல்போன்களை இயக்க முடியும். தனியார்மயமும் தாராளமயமும் திணிக்கப்பட்ட பிறகு, 2001 முதல் பொதுச்சொத்தான அலைக்கற்றைத் தனியாருக்கு ஒதுக்கித் தரப்பட்டதில் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கோடிகளைக் குவித்துக் கொண்டன.

பின்னர், புகைப்படங்கள் – வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளும் புதிய அம்சங்கள் கொண்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) அறிவியல் வளர்ச்சியில் வந்தது. இதற்கான ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சரான ராசா, தனியார் நிறுவனங்களுக்கு செய்த ஒதுக்கீட்டில் ரூ. 1,76,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்றச்சாட்டு. இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய ராசாவோ, “நான் எந்தக் கையாடலும் செய்யவில்லை, சட்டபூர்வமாகத்தான் செய்துள்ளேன், பிரதமரிடம் தெரிவித்துவிட்டுத்தான் செய்தேன்” என்கிறார்.

ஆனால், 2ஜி அலைக்கற்றை விற்பனை குறித்து அரசின் தணிக்கைச் செயலாளரின் யோசனைகள், பிரதமரின் கடிதம், சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் கருத்துக்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கள் எனப் பலவற்றையும் அமைச்சர் ராசா புறக்கணித்துள்ளார். 2001-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட அதே விலைக்கு எந்த மாற்றமும் இல்லாமல் 2008-இல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். வெளிப்படையான ஏல முறையைப் புறக்கணித்து முதலில் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம் என்ற அடிப்படையில் 122 பேருக்கு ஒரே நாளில் அதிரடியாக உரிமம் வழங்கினார். தொலைத் தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பெயர் தெரியாத தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் வீட்டுமனை நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அந்த நிறுவனங்கள் அடுத்த நிமிடமே அந்த ஒதுக்கீட்டை வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ள தாராள அனுமதியும் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ராசா இதுவரை பதிலளிக்கவில்லை. இதில் ராசாவும் ராசாவுக்குப் பின்னால் உள்ளவர்களும் ஆதாயமடைந்தது எத்தனை கோடிகள் என்பதும் இதுவரை தெரியவில்லை.

ராசாவின் ஒப்புதலுடன்தான் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஸ்வான், யுனிடெக் முதலான வீட்டுமனை நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன. ஷாகித் பாவ்லா, வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம், 1,537 கோடி கொடுத்து 13 தொலைத்தொடர்பு வட்டங்களைப் பெற்றது. மொரீஷியசைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்துக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது 44.73 சதவீதப் பங்குகளை ரூ.3,217 கோடிகளுக்கு விற்றது. இதன்படி பார்த்தால், ஸ்வான் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையின் மதிப்பு ரூ.7,192 கோடிகளாகும். இப்படி யுனிடெக், எஸ் டெல், டாடா டெலிசர்வீஸ் – எனப் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்குகளைப் பல்லாயிரம் கோடிகளுக்கு உடனடியாகவே விற்று ஏப்பம் விட்டன. இந்த உத்தேச மதிப்பை வைத்துத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 1,76,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அரசுக்குக் கிடைத்ததோ வெறும் ரூ.9,014 கோடிகள்தான்.

ஒரு முதலாளி இலஞ்சம் கொடுத்து உரிமம் அல்லது ஒப்பந்தத்தைப் பெறுவது தவறல்ல; அது அந்த முதலாளியின் தொழில் முனைப்பு; அந்த உரிமத்தை அந்த முதலாளி ஊக வணிகத்தில் விட்டு, கூடுதலாக மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளலாம், இலாபமடையலாம்; அது தவறில்லை என்பதுதான் தனியார்மய- தாராளமயக் கொள்கை. அதன்படியே 2ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அதை ஊக வணிகத்தின் மூலம் பல்லாயிரம் கோடிகளுக்குபப் பல முதலாளிகள் விற்றுக் கொழுத்த ஆதாயம் அடைந்திருப்பதை எப்படித் தவறானது, முறைகேடானதென்று குற்றம் சாட்டமுடியும் என்பதுதான் தனியார்மயத் தாசர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் எழுப்பும் கேள்வி.

அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை, அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம்-தாராளமயம் தொடங்கப்பட்ட 1991-92 ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ,3442 கோடிகள். 2000 ஆண்டு முதல் 2002 -க்குள் பால்கோ, இந்துஸ்தான் துத்தநாக நிறுவனம், வி.எஸ்.என்.எல், ஐ.பி.சி.எல், உள்ளிட்ட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றபோது, அந்நிறுவனங்களின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டி அரசுக்குப் பல்லாயிரம் கோடி இழப்பையும் முதலாளிகளுக்குக் கொழுத்த ஆதாயத்தையும் ஏற்படுத்தியதாக அரசின் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே குற்றம் சாட்டியது.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் தொலைத்தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கு வசதியாக தேசியத் தொலைத்தொடர்புக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த ஏலத்தில் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.9,45,000 கோடி வருமானம் தரத்தக்க இச்சேவைப் பிரிவுகள் டாடா, எஸ்ஸார், ரிலையன்சு, பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு வெறும் 1,15,000 கோடி ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்கள் வரிப்பணத்தில் உருவான தொலைத்தொடர்புத் துறையின் வலைப்பின்னலைப் பயன்படுத்திக் கொண்டு கொழுத்த ஆதாயமடைந்த இத்தகைய நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை நிலுவையான ஏறத்தாழ 8,000 கோடிகளைக்கூடத் தள்ளுபடி செய்ய வைத்து ஏப்பம் விட்டன. பின்னர் வந்த வாஜ்பாய் அரசு தனியார்மய-தாராளமயத்தைத் தீவிரப்படுத்தி புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை அறிவித்தது. இக்கொள்கையால் அடுத்த பத்தாண்டுகளில் அரசுகக்கு ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று குற்றச்சாட்டுகளும் புகார்களும் வந்த போதிலும் அவசரஅவசரமாக இதை அறிவித்து முதலாளிகளின் கொள்ளைக்குக் காவடி தூக்கியது, பா.ஜ.க.

இப்படி காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சிகள் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி, காடுகள், மலைகள், கனிம வளங்கள், ஆறுகள், குளங்கள், மணல், தண்ணீர் முதலான அனைத்தையும் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அற்ப விலைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தன. கிருஷ்ணா-கோதாவரி இயற்கை எரிவாயுப் படுகையை அம்பானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோடு, வரிச் சலுகைகளையும் வாரியிறைத்தது அரசு. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டி ரிலையன்சு நடத்திய மோசடியால் அரசுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதிலும், ரிலையன்சுக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. போஸ்கோ நிறுவனம், ஒரிசாவில் ஆலையை நிறுவுவதற்கான வெகுமதியாக, ஓராண்டுக்கு ஏறத்தாழ 96,000 கோடி மதிப்புடைய இரும்புத் தாதுவை அள்ளிச் செல்ல ஒப்பந்தம் போடப்பட்டது.

அதேபோலத்தான் விண்வெளியில் உள்ள பொதுச் சொத்தான அலைக்கற்றையும் அற்ப விலைக்கு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்த சுக்ராம், பிரமோத் மகஜன், தயாநிதி மாறன் ஆகியோர் பெருமுதலாளிகளின் சூறையாடலுக்குத் துணைநின்று ஆதாயமடைந்துள்ளனர். பெருமுதலாளிகளுக்கிடையிலான நாய்ச்சண்டையாலும், பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறினாலும் இப்போது அமைச்சர் ராசா சிக்கிக் கொண்டு பலிகிடாவாக்கப்பட்டுவிட்டார். பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்ட பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகுப் பெருமுதலாளித்து கும்பல்களும், அதிகார வர்க்கமும், காங்கிரசும், ஊடகங்களும் இப்போது விவகாரம் அம்பலமானவுடன், பந்தி பரிமாறிய ராசாவை மட்டும் பலிகொடுத்துவிட்டு, மற்றவர்களைத் தப்புவிக்க முயற்சிக்கின்றன. ஊழல் மோசடியில் சிக்கியுள்ள அமைச்சர் ராசாவைத் தண்டிப்பதென்பது மொத்த விவகாரத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய தனியார்மயச் சூறையாடல்களைக் கொள்கையாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதுதான் அதைவிட முக்கியமானது.

இத்தகைய கொள்ளைகள் அம்பலமாகி, விசாரணையின் போது நீதித்துறை கேள்விகள் எழுப்புவதை வைத்து ஏதோ கிடுக்கிப்பிடி போடுவதாகவும் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என்பது போலவும் ஊடகங்கள் சூடேற்றுகின்றன. நீதித்துறையின் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. ஆனால்,விசாரணயின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்பு வேறு விதமாகவே உள்ளது. அரசுத்துறை நிறுவனங்கள், பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று காசாக்குவது என்பதுதான் அரசின் கொள்கை. அக்கொள்கை விசயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்பதுதான் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் நீதித்துறை தெரிவித்துள்ள கருத்து. தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளையிடுவது சட்டப்படி குற்றமல்ல, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் வர்த்தகச் சுதந்திரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்று கோகோ கோலாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது, கேரள உயர்நீதிமன்றம்.

இப்போது நாடாளுமன்றத்தில் பெருங்கூச்சல் போடும் ஓட்டுக்கட்சிகள் எவையும் அலைக்கற்றை ஊழலால் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.1.76 லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த பெருமுதலாளிகளிடமிருந்து அதனைப் பறிமுதல் செய் என்று கோரவில்லை. தொடரும் இத்தகைய பகற்கொள்ளைக்கும் சூறையாடலுக்கும் காரணமான தனியார்மய -தாராளமயக் கொள்கையை எதிர்க்க முன்வரவுமில்லை. மாறாக, கூட்டுச் சேர்ந்து கும்மியடிக்க நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை நிறுவக் கோருகின்றன. ஆனால், 1987-இல் போபர்ஸ் ஊழல் தொடங்கி இதுவரை அமைக்கப்பட்ட நான்கு நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுக்களின் விசாரணையில் ஒருவர்கூடக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

பெருகிவரும் இத்தகைய கொள்ளைகளுக்கும் ஊழல்களுக்கும் மோசடி முறைகேடுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது, தனியார்ம-தாராளமயக் கொள்கை. அதைச் சட்டபூர்வமாக்குவதுதான் இன்றைய முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலமைப்பு முறை. இத்தகைய கொள்ளைக்கும் ஊழலுக்கு உரிமம் கோருவதுதான் ஓட்டுச்சீட்டு முறை. மோசடிகளை மூடிமறைக்கவும், ஊழலில் ஊறித்திளைக்கவும்தான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் அமைப்பு முறையும் அதன் சட்டம், நீதி, போலீசு, புலனாவு அமைப்புகளும் துணை நிற்கின்றன. இந்நிலையில், ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மயம்-தாராளமயம் என்னும் மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கும் எதிராகப் போராடுவது ஒன்றுதான், தொடரும் இத்தகைய தனியார் பெருமுதலாளிகளின் கொள்ளையையும் சூறையாடல்களையும் தடுப்பதற்கான ஒரேவழி.

Thanks: புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010