“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”
என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.
‘ஜனநாயகம்’ என்ற சொல்லிலிருந்து குடிமக்களின் உரிமைகள் மென்மேலும் அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், முசோலினி வகுத்த இலக்கணத்திற்கு மிகவும் அண்மையில் இருக்கிறது இந்திய அரசு. எனினும், கார்ப்பரேட் அதிகாரம்தான் ஜனநாயகம் என்ற புதிய தாராளவாதக் கருத்து உலகெங்கும் கோலோச்சுவதாலும், ஜனநாயக அங்கியைக் கழற்றி வீசாமலேயே தமது நோக்கத்ததை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலும், இந்திய ஜனநாயக சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான, நடுநிலையான அரசு அதிகாரம் நிலவுவதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து பேணப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் கொள்ளை தொடர்பாக, அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுகின்றன. டாடா குழுமத்தின் அதிகாரத் தரகராகப் பணியாற்றி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு டாடாவுக்குத் தரகு வேலை பார்த்த நீரா ராடியா, ராசா மற்றும் அதிகாரிகளின் வீடுகளும் நிறுவனங்களும் சோதனையிடப்படுகின்றன. இவர்களையெல்லாம் சி.பி.ஐ., ‘துருவித்துருவி’ விசாரிக்கிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியவர்களும், இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுமான டாடாவோ பிற தரகு முதலாளிகளோ விசாரிக்கப்படவில்லை. அவர்களது நிறுவனங்களை சி.பி.ஐ. சோதனையிடவும் இல்லை.
எனினும், தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் வெளியிடப்பட்டுவிட்டதனால் தனது உயிர்வாழும் உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக டாடா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பாரம்பரியமிக்க இந்தியத் தொழிலதிபர்கள் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாகவும், அவர்களையெல்லாம் அரசு உடனே சமாதானப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல், தமது முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் எச்.டி.எஃப்.சி. என்ற பன்னாட்டு வங்கியின் தலைவர் தீபக் பரேக்.
பிரதமரும் பெரும் விசனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தோற்றுவித்துள்ள அச்சத்தைப் புரிந்து கொள்வதாகவும், அதனைப் போக்குவதற்கு ஆவன செய்வதாகவும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘லாபியிங் செய்வது ஜனநாயக உரிமை’ என்றும் அதனை முறைப்படுத்துவதற்கு ஆவன செய்வதாகவும் முதலாளிகளுக்கு உறுதியளித்திருக்கிறார், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். புதிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் நாயகர்களான டாடா, அனில் அம்பானி, மிட்டல் ஆகியோரை நேரில் சந்தித்து தொலைதொடர்புக் கொள்கை வகுப்பது குறித்த அவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.
இப்படி ஊழல் நதியின் ஊற்றுமூலமான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் சந்நிதியில் மன்மோகன் சிங் அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடிய சாக்கடைகளான ராடியாவையும், ராசாவையும், இன்ன பிறரையும் சி.பி.ஐ., தூர் வாரிக்கொண்டிருக்கும் கேலிக்கூத்து பரபரப்பு செய்தியாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல; ஊழல் குறித்த விவாதங்கள் அனைத்தும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான திசையில் திட்டமிட்டே கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள்தான் தனியார்மயக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், முதலாளிகளுக்குச் சோர்வை ஏற்படுத்துவதாகவும், எனவே இத்தகைய ஊழல்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சாமியாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். இத்தகைய மெகா ஊழல்களைச் சாத்தியமாக்கிய தனியார்மயக் கொள்கையும், இந்த ஊழல்களால் பல்லாயிரம் கோடி ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளுமே ‘பாதிக்கப்பட்டவர்கள்’ போலச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ராடியா, கனிமொழி, ராசா போன்றவர்களின் கையில் சிக்கி இந்திய ஜனநாயகம் சிரிப்பாய்ச் சிரிப்பதாகவும், டாடாவைப் போன்ற பாரம்பரியமிக்க கவுரவமான தொழிலதிபர்கள் இந்த நாலாந்தர மனிதர்களிடம் விவரம் தெரியாமல் சிக்கிச் சீரழிந்து நிற்பதாகவும் சித்தரிக்கிறார் “சோ” ராமஸ்வாமி. தனது தமிழ் வெறுப்பு, திராவிட வெறுப்பு, சாதித் துவேசம் ஆகியவற்றை வன்மத்துடன் வெளியிடுவதற்கான நல்வாய்ப்பாகவும் தி.மு.க.வினரின் இந்தக் களவாணித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், பார்ப்பன-இந்திய தேசியவாதிகள்.
மொத்தத்தில் இந்த ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் எல்லா ஊழல்களையும் காட்டிலும் பெரிய ஊழலாகும்.
பொதுச்சொத்தை அம்பானி திருடினால், அது திறமை!
ஆ.ராசா திருடினால், அது ஊழலாம்!
இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ எதிரான பொதுக்கருத்தையும், அறம் சார்ந்த வெறுப்புணர்ச்சியையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் ‘ஊழல்’ என்பது மிக முக்கியமான கருவியாக இருந்துவந்திருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் வலிமையானதொரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமும் ‘ஊழல்’ தான். “அரசுத்துறை என்றால் ஊழல், தனியார் துறை என்றால் நேர்மை; அரசுத்துறை என்றால் திறமையின்மை, அலட்சியம்; தனியார்துறை என்றால் திறமை, பொறுப்புணர்ச்சி” என்ற கருத்தினைப் பரப்பி, அவற்றின் மீது சவாரி செய்துதான் அரசுத்துறைகளை விழுங்கும் தனது நோக்கத்துக்கு ஆதரவான பொதுக்கருத்தைத் தரகு முதலாளி வர்க்கம் உருவாக்கியது. நகராட்சி, மின்வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், போலீசு நிலையம், நீதிமன்றம் முதலான அனைத்து வகையான அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊழலையும் அதிகாரத்திமிரையும் அன்றாடம் அனுபவித்து வரும் மக்களும் ஆளும் வர்க்கத்தின் இந்தச் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகினர், இன்னும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர்.
எனினும் கடந்த 20 ஆண்டுகளில், அதாவது தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991-க்குப் பிறகுதான் இந்திய அரசியலில் நாம் கேள்விப்படும் ஊழல்களின் தொகைகள் 40,50 கோடியிலிருந்து ஆயிரம் கோடிகளுக்கும் இன்று இலட்சம் கோடிகளுக்கும் உயர்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஹர்சத் மேத்தா, கேதன் பரேக் முதல் சத்யம் ராஜு வரையிலான அனைவரும் தனியார்மயம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே. 1990-க்கு முன் எவையெல்லாம் சட்டவிரோதமென்றும், ஊழலென்றும் வரையறுக்கப்பட்டிருந்தனவோ, அவை அனைத்தையும் 1991 முதல் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் படிப்படியாகச் சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. அந்நியச் செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்தும் சட்டம் நீக்கப்பட்டு, மோசடி சட்டபூர்வமாக்கப்பட்டது; கருப்பை வெள்ளையாக்கும் பல திட்டங்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது; வரி ஏப்புகளைத் தண்டிப்பதற்கு பதிலாக, முதலாளிகளுக்கான பல வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமானவை அனைத்தும் சட்டபூர்வமானவை ஆக்கப்பட்டு விட்டதால், 1991-க்கு முன் முதலாளிகளின் ஊழல்களாகக் கருதப்பட்டவை அனைத்தும் இப்போது அவர்களது உரிமைகள் ஆகிவிட்டன.
டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இரும்புத் தாதுவை டன் 27 ரூபாய்க்கு சுரங்க முதலாளிகளுக்கு விற்பனை செய்கிறது அரசு. இதனை ஊழல் என்றோ பகற்கொள்ளை என்றோ நாம் கூறலாம். ஆனால், முறையாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்த விற்பனை நடப்பதால், இது சட்டபூர்வமானதாகிவிட்டது. எண்ணெய் வயல்கள், பொதுத்துறை ஆலைகள், விளைநிலங்கள் போன்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள். மலைகளும் ஆறுகளும் காடுகளும் காணாமல் போகின்றன. தற்போது இரும்புத்தாது வெட்டியெடுக்கப்படும் வேகத்தில், அடுத்த 30 அண்டுகளில் இந்தியாவில் இரும்புக் கனிமமே இருக்காது என்று எச்சரிக்கிறார்கள், துறைசார் வல்லுநர்கள். ஒரு மிகப்பெரும் சூறையாடலையும் பேரழிவையும் கண்முன்னே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். நாட்டின் தொழில் வளர்ச்சி என்று இது போற்றப்படுகிறது.
இப்படி ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து அம்பானி, அகர்வால், டாடா, மித்தல் போன்ற பெரும் தரகு முதலாளிகள் தமது சொத்துகளை 40,50 மடங்கு பெருக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாக உயர்ந்திருப்பதும், அவர்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளையே விலைக்கு வாங்குவதும் அவர்களுடைய தொழில் திறமைக்குக் கிடைத்த சன்மானமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வல்லரசாவதற்கான ஆதாரமாகவும் காட்டப்படுகிறது.
இந்தக் கொள்ளைக்கே தனியார்மயம் என்று பெயர் சூட்டி, சட்டபூர்வமான கொள்கையாக மாற்றி, நிறைவேற்றித் தருகின்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் இதற்காக முதலாளிகளிடம் கையூட்டு பெறுவதும், இதே தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்தி கருணாநிதி, சரத் பவார் முதலான அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பொதுச்சொத்துக்களை வளைப்பதும் மட்டும்தான், ஊழல் என்ற பெயரில் மக்கள் முன் நிறுத்தப்படுகிறது.
தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விவாதங்களையே எடுத்துக் கொள்வோம். இதில் “அரசின் சொத்தான அலைக்கற்றைகளை ஏன் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டும்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அவ்வாறு விற்பனை செய்வதற்கு கையாளப்பட்ட வழிமுறை, பின்பற்றத் தவறிய நெறிமுறைகள், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்கிய அமைச்சர்கள் – அதிகாரிகளின் முறைகேடுகள் ஆகியவற்றை மையப்படுத்தியே ஊழல் குறித்த இந்த விவாதம் சுழன்று கொண்டிருக்கிறது.
அதாவது, அரசு சொத்துகளை முதலாளிகளுக்குத் தாரை வார்க்கின்ற தனியார்மயக் கொள்கை என்பது பொருளாதார ரீதியில் மிகவும் சரியான, அப்பழுக்கற்ற, அறிவுபூர்வமான கொள்கை போலவும், அதனை அமல்படுத்துகின்ற அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கைப் போல, மோடி, புத்ததேவ், நிதிஷ் குமாரைப் போல தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்காத உத்தமர்களாக நடந்து கொள்ளும் பட்சத்தில், இந்தியா வல்லரசாவது உறுதி என்பது போலவுமே சித்தரிக்கப்படுகிறது.
முதற்பெரும் ஊழல் - தனியார்மயமே!
தனியார்மயம் என்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மன்மோகன், அலுவாலியா, சிதம்பரம் முதலான பொருளாதார மேதைகள் இராப்பகலாகக் கண்விழித்து ஆராய்ந்து கண்டுபிடித்த கொள்கை அல்ல.
முன்பு இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அரசுத் துறை ஏற்படுத்தப்பட்டதற்கும், தொலைபேசி, மின்சாரம், ரயில்வே, சுரங்கங்கள், துறைமுகங்கள் போன்ற கேந்திரமான துறைகளிலிருந்து முதலாளிகள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. இத்தகைய துறைகளை நிர்மாணம் செய்வதற்குத் தேவைப்படும் மூலதனம் அதிகம், இலாபம் குறைவு என்ற காரணத்தினால் முதலாளிகளே இவற்றை அரசின் தலையில் கட்டி விட்டு, அந்தச் சேவைகளை மட்டும் சலுகை விலையில் அனுபவித்தனர். மேலும், இத்தகைய உயிர்நாடியான துறைகளை முதலாளிகளின் முழுக்கட்டுப்பாட்டில் விடுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணமாகக் காட்டித்தான், அரசு இத்துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இத்தகைய துறைகளைத் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பது என்று முந்தைய கொள்கையைத் தலைகீழாக மாற்றிய போது, இதனால் நாட்டின் தற்சார்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எந்தக் கட்சியும் விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இக்கொள்கை டில்லியில் உருவாக்கப்பட்டதல்ல; அது வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது.
அது, அமெரிக்காவின் தலைமையிலான உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் முதலான நிறுவனங்கள், பன்னாட்டு நிதிமூலதனத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிய கொள்கை. இந்தியா போன்ற நாடுகளின் மீது அவர்களால் விதிக்கப்பட்ட ஆணை. பிரதமர் நாற்காலியில் மன்மோகனுக்குப் பதிலாக சேடப்பட்டி முத்தையா அமர்ந்திருந்தாலும் அமலாகியிருக்கக்கூடிய கொள்கை இதுதான். வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியாவின் பிரதமர் முதல், சின்னஞ்சிறு ஆப்பிரிக்க நாட்டை ஆளுகின்ற யாரோ ஒரு பழங்குடி யுத்தப்பிரபு வரையிலான அனைவரின் தலையிலும் அணிவிக்கப்பட்டிருக்கும் தொப்பி அது. அத்தொப்பிக்கு ஏற்ப தலையைச் செதுக்குவதும், தனியார்மயம் என்ற கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பொதுக் கருத்தை உருவாக்குவதும்தான், ஓட்டுக்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கியிருக்கும் பணி. எனவே, ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மென்று துப்பியதைத் தின்று எடுக்கும் வாந்திதான், தனியார்மயத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங் முதலானோர் தயாரித்துப் பரிமாறும் வாதங்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் தொடங்குவதற்கு முன், அரசும் ஆளும் வர்க்கங்களும் முன்வைத்த வாதங்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.
இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய நிதி மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் முதல் பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி வரையிலான எல்லா யோக்கிய சிகாமணிகளும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினர்.
முதன் முதலாக 1991-92 – இல் (மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது) விற்கப்பட்ட பொதுத்துறைப் பங்குகள் அனைத்தும் சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டதால், இந்த விற்பனையை ஒரு ‘மோசடி’ என்று அன்றைய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. பொதுத்துறை பங்கு விற்பனை குறித்த கணக்குத் தணிக்கையாளரின் 20 ஆண்டு அறிக்கைகளைத் தொகுத்தால், ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த மோசடியின் மொத்தத் தொகை பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.
இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.
இன்று, “2-ஜி அலைக்கற்றை உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றுக் கொள்ளையடிக்க சில நிறுவனங்களுக்கு உதவினார்” என்பதுதான் ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ‘ராசா தந்திரம்’தான் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையிலும் நடந்திருக்கிறது. சில நூறு கோடிகளுக்குப் பொதுத்துறை பங்குகளை வாங்கி, கம்பெனியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அதன் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கும், விற்றுக் காசு பார்ப்பதற்கும் ஏற்ற ‘கொள்கையை’ வகுத்துத் தருவதற்காகவே ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி’ என்றொரு கமிட்டி (அதாவது பொதுத்துறை முதலீடுகளை விற்பதற்கான கமிட்டி) நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை வகுத்துத் தந்த கோமான், ரங்கராஜன் என்பவரின் பெயரால் அது ரங்கராஜன் கமிட்டி என்று அழைக்கப்பட்டது.
இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பது, உலக வங்கியின் ஆணைப்படி பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியை இவர் முன்வைத்தார். சர்வதேசக் கடன் நிறுவனங்களிடம் இந்திய அரசு வாங்கிய கடனுக்கு ஈடாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு விற்றுவிடலாம் என்பதே அந்த யோசனை. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகளையும் சொத்துக்களையும் அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது என்பதே இந்த யோசனையின் விளைவு.(இப்பேர்ப்பட்ட அரிய யோசனையை வழங்கிய அந்த ரங்கராஜன்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார ஆலோசகர்!)
பிறகு வந்த பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது சி.பி.ஐ. அவரைத் துருவித்துருவி விசாரிக்கிறதாம். பெஜால் என்ன பதில் சொல்வார்? “1999 முதல் 2006 வரை அரசு அதிகாரி என்ற முறையில் நான் தனியார்மயக் கொள்கை வழி நடந்தேன். ஓய்வு பெற்ற பின்னரும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் தனிப்பட்ட முறையில் அதனை அமல்படுத்தினேன்” என்று தனது வரலாற்றுக்கு அவர் சீர் பிரித்து இலக்கணம் கூறக்கூடும். ஓய்வு பெற்றபின் அவர் நீரா ராடியாவின் நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை; நெஸ்லே, ஜி.வி.கே. பவர்ஸ் அண்டு இன்ப்ஃராஸ்ட்ரக்சர்ஸ், பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களிலும் அவர் பதவி வகிக்கிறார்.
பொதுத்துறை விற்பனைகளுக்கு விலை நிர்ணயம் செய்த முறை குறித்து அவரிடம் சி.பி.ஐ. கேட்குமானால், அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர் ரங்கராஜன்தான் என்று அவர் வாக்குமூலம் தருவார்; ரங்கராஜனைக் கேட்டால் தனது பொருளாதார ஞானகுரு என்று மன்மோகன் சிங்கை அடையாளம் காட்டுவார்; மன்மோகன் சிங்கோ “நான் ஐ.எம்.எஃப். – க்குப் பிறந்தவன் என்ற உண்மையை எந்தக் கமிட்டியின் முன்னாலும் சொல்லத் தயார். இதைத் தவிர என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என்று பதிலளிக்கக்கூடும்.
நேற்று தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த பெஜால், இன்று நெஸ்லே என்ற ஏகாதிபத்திய தொழில் நிறுவனத்தின் இயக்குநர். நேற்று ஐ.எம்.எஃப். என்ற ஏகாதிபத்திய கந்து வட்டி நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த மன்மோகன் சிங், இன்று பிரதமர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? தனியார்மயத்துக்கும் ஊழல்மயத்துக்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாடுதான்! ஒழுக்க சீலர் மன்மோகனுக்கும் அயோக்கியன் பெஜாலுக்கும் என்ன வேறுபாடு? சங்கிலியைத் திருடுவதற்காக பெண்ணின் கழுத்தை மட்டும் அறுக்கும் ‘நல்லவனுக்கும்’, கற்பழித்துவிட்டு அதன்பின் கழுத்தை அறுக்கும் ‘அயோக்கியனுக்கும்’ உள்ள வேறுபாடு!
விலையைக் குறைப்பது ஊழல் – வரியைக் குறைப்பது?
2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக் கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம். இத்தகைய அனுமானங்கள் எதற்கும் இடம் வைக்காமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையில் புதிது புதிதான நேர்முக வரித் தள்ளுபடிகள், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.
வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித் தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள் அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக் கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம். “அலைக்கற்றைகளின் விலையை முதலாளிகளுக்குக் குறைத்துக் கொடுத்தால் கட்டணத்தையும் குறைப்பார்கள்; செல்பேசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும்; அதனால்தான் விலையைக் குறைத்தேன்” என்று கூறுகிறார், ராசா. சிதம்பரம் ஆங்கிலத்தில் விளக்குவதைத்தானே ஆ.ராசா அழகு தமிழில் விளக்குகிறார். தமிழ் ஊழலென்றால் ஆங்கிலமும் ஊழல்தானே!
“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த 1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது. அலைக்கற்றை விற்பனையை ஊழல் என்று அழைத்தால், வரித் தள்ளுபடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வைப் பேயாப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்போதே, நோக்கியாவுக்கு 600 கோடி ரூபாய் வரி மானியத்தை வாரி வழங்குகிறார், கருணாநிதி. இதனை ஊழல் என்று சொல்வாரில்லை. தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் கொடுத்ததாக ராடியா கூறும் 600 கோடி மானியம் மட்டும்தான் “சோ” வுக்கு ஊழலாகத் தெரிகிறது.
ராடியா டேப் அதை மட்டுமா சொல்கிறது? வரித்தள்ளுபடி குறித்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேறுகின்றன என்ற இரகசியத்தையும்தான் விளக்குகிறது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையையும்தான் புட்டு வைக்கிறது.
இந்த 91,000 கோடி என்பது அலைக்கற்றை ஊழல் போல அனுமான இழப்பு அல்ல; பருண்மையான இழப்பு. எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் இதனைக் கூட்டாக நிறைவேற்றியிருப்பதனால்தான், இதற்கு “நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று பா.ஜ.க. கோரவில்லை போலும்! அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றிய ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையையே தானும் பின்பற்றியதாகக் கூறுகிறார், ராசா. சில சில்லறைத் தில்லுமுல்லுகளை மட்டும் தவிர்த்திருப்பாரேயானால், கருணாநிதி சொன்னதைப் போல “தி.மு.க.- வின் தகத்தகாயமாக மின்னும் கொள்கைத் தங்கமாகவே” ராசா நீடித்திருந்திருப்பார். தேசிய நலனை முன்னிட்டு அம்பானிக்குப் படைக்கப்பட்ட 91,000 கோடியைப் போலவே, இந்த 1,76,000 கோடியும் தேசத்துக்கு வைக்கப்பட்ட படையலாகவும், தனியார்மயக் ‘கொள்கை வழியில்’ தேச முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட முடிவாகவுமே விளக்கப்பட்டிருக்கும்.
“பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அலைக்கற்றை விற்பனையால் 1.43 இலட்சம் கோடி இழப்பு” என்று ஒரு குண்டை தற்போது அமைச்சர் கபில் சிபல் வீசியிருக்கிறார். இந்தத் தொகை மொத்தமுமே தேசிய நலனுக்கு படைக்கப்பட்ட பொங்கல்தானா, அல்லது தம்பி தயாநிதியும், அண்ணன் அருண் ஷோரியும் இதில் கொஞ்சம் வழித்து நக்கியிருப்பார்களா? தரகு முதலாளிகளுக்கிடையே சமாதான உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் யுத்தம் நீடித்தால், மேலும் பல உண்மை கசியக்கூடும்.
ராசா..! அரண்மனைக்கு அடியில்
எத்தனை பெரிய பெருச்சாளிப் பொந்து!
‘ராசா ஊழல்’ என்று சித்தரிக்கப்படும் இந்த அலைக்கற்றை ஊழலுக்குள் கையை விட்டால், அந்தப் பெருச்சாளிப் பொந்து அரண்மனை முழுவதற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கியிருக்கும் நிறுவனங்கள், அரசு வங்கிகளிடமே ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அரசுக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிர்ந்து விட்டார்களாம். பொதுத்துறை நிறுவனங்களை வளைத்துப் போடும் இந்தியத் தரகு முதலாளிகள், எந்தக் காலத்திலும் தம் கைக்காசைப் போட்டு அவற்றை வாங்கியதில்லை என்ற உண்மை, ‘கற்றறிந்த’ நீதிபதிகளுக்குத் தெரியாது போலும்! அரசு வங்கிகள்தான் அவர்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. மருத்துவத்துக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவிட அரசாங்கத்திடம் பணமில்லையென்பதால்தான் பொதுத்துறைப் பங்குகளை விற்க வேண்டியிருப்பதாகச் சொல்லி தனியார்மயத்தை நியாயப்படுத்தினார், அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். முதலாளிகளோ அதே நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கிகளின் கையை வெட்டி அரசுக்கே சூப் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது சிதம்பரம் அறியாத இரகசியமல்ல. மக்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் சிதம்பர இரகசியம்.
தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும், “ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், கேதன் பரேக் ஊழல்” என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு தாய்ப்பிள்ளைகளே. அலைக்கற்றை ஊழலிலிருந்து ஒரு கிளை வலப்புறம் பிரிந்து வீட்டுக் கடன் ஊழலுடன் இணைகிறது. அங்கிருந்து அது இடப்புறம் திரும்பி அரசு வங்கியுடன் போய் இணைகிறது. அரசு வங்கியிலிருந்து பிரியும் பைபாஸ் சாலை மீண்டும் ஸ்பெக்ட்ரம் நெடுஞ்சாலையில் சங்கமிக்கிறது.
வீட்டுக் கடன் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டீஸ் என்ற நிறுவனம், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டிருக்கும் எடிசாலட் டி.பி. என்ற நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது, இல்லாத வீட்டை அடமானம் வைத்து அரசு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய டி.பி.ரியால்டீஸ் நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை வைத்து, தொலைபேசிச் சேவையே நடத்தாத ‘தொலைத்தொடர்புக் கம்பெனியான’ எடிசாலட் டி.பி. என்ற தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமத்தை விலைக்கு வாங்குகிறது. அந்த லைசன்சு காகிதத்தை அடமானம் வைத்து மீண்டும் வங்கியில் கடன் வாங்குகிறது. பிறகு அந்த உரிமத்தை வங்கியிலிருந்து மீட்டு, அதனை 4 மடங்கு விலைக்கு விற்று சில ஆயிரம் கோடிகளையும் சுருட்டுகிறது.
அலைக்கற்றை உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் பினாமி ‘உப்புமா’ கம்பெனிகள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். உரிமத்தை ரத்து செய்தால் திவாலாகப்போவதும் அவர்களல்ல, உரிமக் காகிதத்தை அடமானம் வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே. எனவேதான், இவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று முடிவு செய்துவிட்டார், அமைச்சர் கபில் சிபல்.
விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ., போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து, அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே. இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான்.
எது இலஞ்சம், எது ஊழல், எது கொள்கை?
விடை காண முடியாத தத்துவஞானக் கேள்வி!
ஸ்பெக்ட்ரம் மோசடிக்காக முன்னாள் அமைச்சர் ராசா முதல் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தேடிச் செல்கிறது சி.பி.ஐ. ஆனால், ஸ்பெக்ட்ரம் பணத்தை விழுங்கிச் செரித்த டாடா, மித்தல், அம்பானி போன்றோரை வீடு தேடிச் சென்று சந்தித்து, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை வகுப்பதற்கு அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார், அமைச்சர் கபில் சிபல். இதுவும் பா.ஜ.க. அரசு ஏற்கெனவே போட்ட பாட்டின் ரீ மிக்ஸ்தான். அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம் இயற்றப் போவதாக 2003 – இல் சொன்னார் வாஜ்பாயி. இந்தச் சட்டத்துக்கான முன்வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு, ரூயா, பிர்லா, ராஜீவ் சந்திரசேகர் முதலான தரகு முதலாளிகள் அடங்கிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியில் அரசு வங்கிகளுக்கு ரூயா வைத்திருந்த கடன் பாக்கி 1577 கோடி, பிர்லா 212 கோடி, சந்திரசேகர் 56 கோடி. இதுதான் அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதி!
திருடர்களுக்குக் கடனை வாரிவழங்குமாறு வங்கிகளுக்கு அரசு கொடுத்த வழிகாட்டுதலாகட்டும், திருடர்களைத் தண்டிப்பதற்கான ‘சட்ட முன்வரைவினை’ தயாரிக்கும் பொறுப்பைத் திருடர்கள் கமிட்டியிடமே ஒப்படைத்ததாகட்டும்; இவையெல்லாம் சிதம்பரமும், யஷ்வந்த் சின்காவும், வாஜ்பாயியும் மேற்கொண்ட கொள்கை முடிவுகள்தான். ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்று அலைக்கற்றையை வாரி வழங்கியதும்கூட ‘கொள்கை முடிவு’ என்றுதான் ராசா சொல்கிறார். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ‘கொள்கை’ முடியும் இடம் எது – ‘ஊழல்’ தொடங்கும் இடம் எது? இதனை எவ்வாறு கண்டறிவது?
தனியார்மயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மான்டேக் சிங் அலுவாலியா இதற்கான விடையை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். “40,000 கோடி வீட்டுக்கடன் ஊழலை, ‘ஊழல்’ என்று அழைப்பது தவறு. அது வழக்கமான இலஞ்சம் மட்டுமே” என்று விளக்கியிருக்கிறார். நமக்குத் தெரிந்த இலஞ்சங்களான டிராபிக் போலீசு லஞ்சம், தாலுக்கா ஆபீஸ் லஞ்சம், ஆர்.டி.ஓ. ஆபீஸ் லஞ்சம் போன்றவை மூன்று நான்கு பூச்சியங்களைத் தாண்டியதில்லை. நாடு வல்லரசாகி வரும் காரணத்தினாலும், கோடீசுவரர்களின் எண்ணிக்கை பெருகிவரும் காரணத்தினாலும் இலஞ்சத்தின் இலக்கணம் தற்போது மாறியிருக்கக் கூடும். எத்தனை பூச்சியங்கள் வரையில் ‘இலஞ்சம்’, எத்தனை பூச்சியங்களுக்குப் பின் ‘ஊழல்’, எத்தனை பூச்சியங்களுக்கு மேல் ‘கொள்கை’ என்பது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தி, தேசிய பொதுக்கருத்தை எட்டினால் மட்டுமே, ஊழல் விவாதங்களினால் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டிருக்கும் தேசிய கவுரவத்தைக் காப்பாற்ற முடியும் போலும்!
நீரா ராடியா அல்லது சல்வா ஜுடும்!
அலைக்கற்றைகளாக இருக்கட்டும், ஆலைகள், சுரங்கங்கள், காடுகள், விளைநிலங்களாக இருக்கட்டும்; அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தடையற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் தனியார்மயம் என்ற கொள்கை. காசை வாங்கிக் கொண்டு, கதவைத் திறந்து விடக் காத்திருப்போரிடம் டாடா – அம்பானிகளின் சார்பில் ராடியா பேச்சுவார்த்தை நடத்துவார். ராடியாக்களுடன் பேச மறுக்கும் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் போன்றோரிடம் டாடாவின் சார்பில் இந்தியத் துணை இராணுவப்படை பேசுகிறது.
ராடியா ஒரு அதிகாரத் தரகர் என்பதால் அவர் நடத்திய பேரங்கள் ஊழல் என்றும் முறைகேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இதே நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையையோ, சட்டிஸ்காரில் துணை இராணுவப் படைகள் நடத்தும் காட்டுவேட்டையையோ ஊழல் என்று யாரும் அழைப்பதில்லை.
ஒரு கொள்கைக்குரிய கவுரவத்துடன் அழைக்கப்படுகின்ற ‘தனியார்மயம்’ என்பதும் கூட தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்திக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைதான். தீவட்டிக் கொள்ளையர்களைத் தமது நாயகர்களாக எந்த சமூகமும் கொண்டாடியதில்லை. ஆனால் டாடா, அம்பானி, மித்தல் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். “பில் கேட்ஸை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடுவார் முகேஷ் அம்பானி” என்ற செய்தி, இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியாக மொழிபெயர்க்கப்பட்டு மக்களின் காதில் ஓதப்படுகிறது.
“இந்திய முதலாளிகளின் தொழில் முனைப்பைத் தனியார்மயக் கொள்கை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது” என்று போற்றப்படுகிறது. அதே கொள்கைதான் டில்லியில் ராடியாவையும் சட்டீஸ்கரில் சல்வாஜுடுமையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கொள்ளையர்கள் கட்டவிழ்த்து விடப்படுவதனால் நேரும் விளைவு பகற்கொள்ளையே அன்றி முன்னேற்றமல்ல. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையிட்ட வெள்ளையர்களும் கூட “இந்தியாவை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றுதான் கூறிக்கொண்டார்கள். 200 ஆண்டுகளில் அவர்கள் அடித்த கொள்ளையை விட, தனியார்மயம் அமலாகத் தொடங்கிய 20 ஆண்டுகளில் இந்தியத் தரகுமுதலாளிகள் அடித்திருக்கும் கொள்ளையும், வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்திருக்கும் பணமும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
அரசுத் தலையீடின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை:
முதலாளித்துவ மூலமந்திரங்களின் உட்பொருள்!
இவையெதுவும் தம் தொழில் முனைப்பினாலோ, திறமையினாலோ அவர்கள் உருவாக்கிய செல்வம் அல்ல. அமெரிக்காவின் சப் பிரைம் மோசடியில் தொடங்கி இந்தியாவின் ஸ்பெக்ட்ரம் மோசடி வரை கார்ப்பரேட் வர்க்கம் நிரூபித்திருக்கும் திறமை என்பது, சூதாடிகளும் பிக்பாக்கெட் திருடர்களும் கொண்டிருக்கும் திறமையை மட்டும்தான்.
ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடி, “முதன் முதலில் எனது உறவினர்களை வைத்தே கிரிக்கெட் டீம்களை ஏலம் எடுக்க வைத்து, கொள்ளை இலாபம் கிடைத்ததாக அவர்களை ‘சாட்சியம்’ சொல்லவைத்து, அதைக் காட்டியே மற்றவர்களையெல்லாம் கவர்ந்திழுத்தேன்” என்று லண்டன் பத்திரிகையொன்றிற்கு பெருமை பொங்க பேட்டி கொடுத்திருக்கிறார். இதுதானே, நம்மூர் மூணு சீட்டுக்காரன் மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு அன்றாடம் செய்து கொண்டிருக்கும் தந்திரம்!
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடியதும், வரி விலக்குகளால் கோடி கோடியாக ஆதாயம் அடைந்ததும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து காடுகளையும் விளைநிலங்களையும் தம் உடைமையாக்கிக் கொண்டதும்தான் இவர்களது சொத்து மதிப்புகள் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்ததற்குக் காரணம். 1667 கோடிக்கு ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கி, அதில் 28 சதவீதத்தை மட்டும் (சுமார் 400 கோடி மதிப்பு) 13,000 கோடி ரூபாய்க்கு டோகோமோ நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் டாடா.
இதனைக் கொள்ளை என்பதா, ஊழல் என்பதா அல்லது டாடாவும், அம்பானியும், ராடியாவும் வெளிப்படுத்தியிருக்கும் திறமை என்பதா?
தொழில் – வர்த்தகத் துறைகளில் நிலவும் அரசுத் தலையீடுகள்தான் ஊழலுக்கு அடிப்படை என்றும், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அரசு நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் (transparency) கொண்டுவருவதன் மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவ்வப்போது பேசி வரும் இந்த கார்ப்பரேட் யோக்கிய சிகாமணிகள்தான், அரசாங்கத்துடன் தாங்கள் போட்டுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மட்டும் அரசாங்க இரகசியமாகப் பேணச் சொல்கிறார்கள். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் நோக்கியா நிறுவனம் போட்டிருக்கும் மூலதனத்தை விட அதிகம் என்ற உண்மையும், குஜராத்தில் நானோ காருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காரின் உற்பத்திச் செலவுக்கே இணையானது என்ற உண்மையும் தோண்டித் துருவி வெளியே எடுக்கப்பட்ட பின்னர்தானே தெரியவந்தது! தனியார்துறை – அரசுத்துறை கூட்டு என்ற பெயரில் சாலைகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றில் போடப்படும் ஒப்பந்தங்கள், கனிமவளங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகியவை அனைத்தையும் அரசாங்க இரகசியங்களாக மறைக்கச் சொல்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இந்தத் தடையே ஊழலா, அல்லது இத்தகைய தடைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு ராடியாக்கள் நடத்தும் தரகு வேலைகள் மட்டும்தான் ஊழலா, எது முதற்பெரும் ஊழல் என்பதே கேள்வி.
“கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை மக்களுக்குத் தெரியாத இரகசியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் கொள்ளையர்களுக்கிடையே வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்பதுதான் அவர்கள் கோருகின்ற வெளிப்படைத் தன்மை (transparency).
‘அரசின் தலையீடுகளை அகற்றுதல்’ என்ற அவர்களுடைய தாராளமயக் கோரிக்கையின் உட்பொருள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசின் தலையீடுகளை’ நீக்கவேண்டும் (deregulation) என்பது மட்டும்தான். மற்றபடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்பது, எதிர்த்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவது, தொழிற்சங்கங்களை ஒடுக்குவது போன்ற விசயங்களில் அவர்கள் அரசின் உறுதியான தலையீட்டை வரவேற்கவே செய்கிறார்கள். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடினாலும் குறைந்தாலும் அதற்கேற்ப ஏற்றுமதியாளருக்கும் இறக்குமதியாளருக்கும் மானியம் வழங்குவது, பணப்புழக்கத்தை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பது, கல்வி வியாபாரம், கார் வியாபாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் சுறுசுறுப்பாக நடப்பதற்கு ஏற்ப நுகர்வோர் கடன்களை வாரி வழங்குமாறு அரசு வங்கிகளைத் தூண்டுவது போன்ற விசயங்களிலும் அவர்கள் அரசின் அக்கறையுள்ள தலையீட்டைக் கோரவே செய்கிறார்கள். மக்களுடனான முரண்பாட்டில் சிங்குரிலும் நந்திக்கிராமிலும் அரசு தங்கள் சார்பாகத் தலையீடு செய்ததை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்கவே செய்தார்கள்.
அலைக்கற்றைப் போரில் எழுந்த முரண்பாடோ கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலானது. டாடா – மித்தலுக்கு இடையிலான இந்த பாரதப் போரில் அரவான் களப் பலி ஆ.ராசா. சாம்ராச்சியச் சண்டையான பாரதப்போர், தரும யுத்தமாகச் சித்தரிக்கப்படுவதைப் போலவே, இந்த கார்ப்பரேட் யுத்தமும் ஊழலுக்கு எதிரான போராக சித்தரிக்கப்படுகிறது. தனியார்மயக் கொள்கையின் அமலாக்கத்திலிருந்து ஊழலை மட்டும் நீக்கிவிட்டால் சொர்க்கலோகத்தைக் கண்டு விடலாம் என்றும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும் கயிறு திரிக்கிறார்கள், கார்ப்பரேட் வியாசர்கள். முதலாளித்துவத்திடமிருந்து ஊழலை நீக்குவதென்பது அதன் இதயத்தையே நீக்குவதாகும். இலாபம்தான் அதன் இலட்சியம். அதனை அடைவதற்கு எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்பதே முதலாளித்துவ நிர்வாகவியலின் முதல் விதி.
மோதிக்கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் தமக்கிடையிலான போட்டியில் யுத்த தருமத்தையும், ஒழுக்கத்தையும் எந்தக் காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள்? ஒரு விமானக் கம்பெனி தொடங்க விரும்பியதாகவும், அதற்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதால், விமானக் கம்பெனி தொடங்கும் யோசனையையே கைவிட்டு விட்டதாகவும் கூறி, தனக்குத் தானே ஒளிவட்டம் சூட்டிக்கொண்டார் ரத்தன் டாடா. அடுத்த வந்த நாட்களில் நல்லொழுக்க சீலர் டாடாவின் யோக்கியதையை ராடியா டேப்புகள் நாட்டுக்கே ஒளிபரப்பின.
பா.ஜ.க.-ராடியா கள்ள உறவு குறித்த செய்திகளைக் கசியவிட்டு பதிலடி கொடுக்கிறது காங்கிரசு. ராடியாவை ஆளாக்கி வளர்த்ததே பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த்குமார் தான் என்றும், பா.ஜ.க. வின் ஆட்சிக் காலத்தில்தான் ராடியா தனது தொழிலில் கொடி நாட்டினார் என்றும், டில்லியில் ராடியாவின் ஸ்பான்சர்ஷிப்பில் பேஜாவர் ஸ்வாமிகள் நடத்திய வைபவத்துக்கு அத்வானி வருகை புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. தனியார்மயத்தின் முதல் பத்தாண்டுக்கு, ஹவாலா ஊழல் – ஜெயின் டயரி. இரண்டாவது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராடியா டயரி!
இந்திய நாடாளுமன்றத்துக்கு கீழே ஒரு நிலவறை இயங்குவதும், நிஜ உலக ஜனநாயகத்தில் பரிமாறப்படும் கதை – வசனங்கள் அனைத்தும் நிலவறையின், கார்ப்பரேட் சமையலறையில் தயாராவதும் அம்பலமாகிச் சந்தி சிரிப்பதைக் கண்டு இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பூசாரிகள் சங்கடத்தில் நெளிகின்றனர். ‘முழுதும் நனைந்த பின்னே முக்காடு எதற்கு?’ என்று எண்ணிய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “லாபியிங் (தரகு வேலை) ஒரு ஜனநாயக உரிமை. அதை முறைப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது” என்று பிரகடனமே செய்து விட்டார். “வரி ஏப்பு அதிகரித்தால் அதற்குத் தீர்வு, வரிகளை நீக்குதல்; கறுப்புப் பணம் அதிகரித்தால் அதற்குத் தீர்வு, அவற்றை வெள்ளையாக்கும் திட்டத்தை அறிவித்தல்’’ – இதுதானே புதிய தாராளவாதக் கொள்கையின் ஒழுக்கவிதி!
எனவே, லாபியிங் உரிமையை முறைப்படுத்துதவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. “அமெரிக்காவில் இருப்பதைப் போல, எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கும் இருக்கவேண்டும்” என்று ஊழல் ஒழிப்புக்கான ‘அமெரிக்க வழி’யை முன்மொழியத் தொடங்கிவிட்டனர், முதலாளித்துவ அறிவுஜீவிகள். ‘கட்டுப்பாடுகளை நீக்குதல்’ என்ற புதிய தாராளவாதத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு, ‘ஒழுக்கத்தை நீக்குதல்’ என்ற கலாச்சார கொள்கை பொருந்தித்தான் வருகிறது
மற்றெல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டாலும், புதியதோர் உரிமையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது தனியார்மயம்! நமக்கு வழங்கப்படவிருக்கும் இந்த உரிமைக்குப் பொருள்தான் என்ன?
எந்த எம்.பி., எந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை! அல்லது டாடா-அம்பானி-மித்தல்-அகர்வால்-ரூயா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள், எந்த அமைச்சரின் உதவியுடன் நமது சட்டைப் பைக்குள் கை விடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை. அரசு அதிகாரத்தின் உண்மையான பொருள் கார்ப்பரேட் முதலாளிவர்க்கத்தின் அதிகாரம்தான் என்று தெரிந்து கொள்ளும் உரிமை!
இனி இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் செல்வோம். அட, இந்த உரிமையை தனது நாட்டு மக்களுக்கு சென்ற நூற்றாண்டிலேயே வழங்கியிருக்கிறாரே முசோலினி!
Thanks: - மருதையன், புதிய ஜனநாயகம், ஜனவரி-2011
அசல்கள்
2 hours ago
No comments:
Post a Comment