Wednesday, April 6, 2011
ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் !
இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.
2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.
ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்.
பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது. விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. உண்மையில் பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.
இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது. தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது. உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம். வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம். இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.
இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை. சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது. மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன.
ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர்.
பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம். ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வதில்லை. மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே. சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).
இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது). ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும். மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல. இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது. தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).
இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்).
கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல. மாறாக, அரசின் கொள்கை முடிவு. இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட். இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை. கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.
அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.
நன்றி – தி இந்து 07/03/11)
- தமிழாக்கம் : சித்ரகுப்தன்
www.vinauv.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment