Monday, April 25, 2011

ரா ராடியா: டெல்லி அதிகார அரசியலின் தொடர்ச்சி


இப்போது எல்லா ஊடகங்களிலும் அடிபடும் நீரா ராடியா டேப்களைக் கேட்கும்போதும், அவைகளைப்பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும்போதும், இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையாருக்கு அடுத்தபடியாக பாரதப் பிரதமரை மிரட்டி, யார் யாரை மந்திரிசபையில் சேர்ப்பது, அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்குவது போன்ற ‘சிறிய’ விஷயங்களில் முடிவு எடுப்பது நீரா ராடியா அம்மையார்தான் என்ற எண்ணம் நமக்கு மட்டுமல்ல... மந்திரிப் பதவி வேட்பாளர்களுக்கும், மூத்த பத்திரிகையாசிரியர்களுக்கும் கூட இருந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சம்! எல்லோருமே அதிகாலையில் ராடியாஜியின் தூக்கத்தைக் கெடுத்து, அதற்காக ‘ஸாரி’ சொன்னவாறே அன்றையதினம் யார் யார் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விருப்பமாக இருந்திருக்கிறார்கள். அவரும் ஒரு ‘குறிப்பிட்ட நபர்’ அந்த லிஸ்ட்டில் இருப்பதற்கான / இல்லாமல் போனதற்கான காரணங்களைத் தன் நுனிநாக்கு ஆங்கிலத்தில்/ஹிந்தியில் அடுக்குகிறார். அவர்களும் அவற்றைப் பிரதமர் வாயிலிருந்து வரும் கூற்றாக நினைத்து அடுத்தநாளும் அவர் தூக்கத்தைக் கெடுக்க முடிவு செய்கிறார்கள்! என்னய்யா நடக்கிறது நம் நாட்டில்? Has our great country become a ‘Banana Republic’? இந்த ‘இரண்டரை அணா’ நீராராடியா யார்? இவரைப்போல Names dropping Power Brokers/Lobbyists தில்லியில் முன்பும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; எப்போதும் இருப்பார்கள்! எந்த தொழிலதிபருக்கும் அந்தக் காலத்து, லைஸன்ஸ், பெர்மிட் கோட்டா ராஜ்யத்தில், தில்லியில் சரியான காய்களை நகர்த்தி, காரியங்களைச் சாதித்துக்கொள்ள இம்மாதிரி ஓர் ஆள் அவசியம் தேவை. ஒரு தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர் தீர்மானிக்கும்போதே, தில்லியில் உத்யோக் பவன் ஏறி இறங்க திறமையானவரைத் தேட ஆரம்பித்து விடுவார். ஆதௌ கீர்த்தனாரம்ப காலத்தில், தெருவுக்கு ஒரு பெட்டிக் கடை என்கிற சின்ன ரேஞ்சில் ஆரம்பித்து, இப்போது கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப ‘பல்மாடி அங்காடி’களாக பரிணமித்திருக்கிறது. தொழில் துறையில் அரசு குறுக்கீடுகள் இருக்கும்வரை, மனிதனுக்குப் பணத்தின் மேல் ஆசை இருக்கும்வரை, இவர்களெல்லாம் அவசியத் தேவைகள். இந்த வர்க்கத்துக்கு Liaison Officers என்பது பெயர். அந்தப் பெயரை யாரும் விரும்புவதில்லை. காரணம் Oxford Dictionary-யில் அந்த வார்த்தைக்கு ‘Anillicit sexual relationship’ - ‘தகாத உடல் உறவு’ என்றும் பொருள் சொல்லியிருப்பார்கள்! அதனால் எங்கள் விஸிட்டிங் கார்டில் எங்கள் பதவி Chief Executive என்றே இருக்கும்! சிலர் Public Relations Officers என்று அறியப்படுவார்கள். இதில் Public என்பதில் L எழுத்தை எடுத்து விட்டு, அவர்களை Pubic Relations Officer என்று கேலி செய்வோம்!தினமும் அரைமணி நேரம் செல் போனில் பேசும் என் மகள் அனுஷா, சில மாதங்களுக்கு முன், ‘அப்பா! இன்று நானும் ரிதேஷும் தியேட்டரில் ‘Badmaash Company’ ஹிந்திப் படம் பார்த்தோம். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அந்தக் காலத்திலே செய்த சட்டத்தை மீறாத திருட்டுத்தனங்கள்..அந்த Mutton Tallow Import.. அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. டைரக்டர் சோப்ரா உங்ககிட்டே கேட்டிருந்தா, நீங்க நிறைய உருப்படியான ஐடியா கொடுத்திருக்கலாம். நீங்க செய்யாத திருகுதாளங்களா?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். ‘ஏய்! உங்கப்பன் இன்னி வரை, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் கைகட்டி நின்னதில்லே. எனக்கு வேறே அனுகூல சத்ருக்களே தேவையில்லே. நீ ஒருத்தியே போதும்’ என்று கோபத்துடன் பதிலளித்தேன்.

என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார். என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!

1991-ல் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகளைத் திறந்துவிடும் முன்வரை, நாம் லைஸன்ஸ் பெர்மிட் கோட்டா ராஜ்யத்தில்தான் இருந்தோம். எதற்கெடுத்தாலும் அரசின் அனுமதி தேவை. தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் Chief Controller of Imports and Exports (CCI&E) அலுவலகமும் Directorate General of Technical Development (DGTD) காரியாலயமும் இருந்த ‘உத்யோக் பவன்’ தான் எங்களைப் போன்றவர்களுக்குக் கோவில். வருடத்தில் ஓரிரு முறையே தில்லி உத்தர சுவாமி மலைக் கோவிலுக்குப் போவேன். ஆனால் இந்த ‘கோவிலுக்கு’ தினசரி நாலைந்து தடவையாவது ‘க்ஷேத்ராடனம்’ நடக்கும். அதில் நம்மால் ‘கவனிக்க’ப்படவேண்டிய ‘பூசாரிகள்’ நிறைய இருந்தார்கள்! முதல் பூசாரி உத்யோக் பவன்/நார்த் பிளாக், சௌத் பிளாக் போன்ற அரசாங்க அலுவலகங்களில் காவல் தெய்வங்களாக உட்கார்ந்திருக்கும் Reception Officers. என் முதலாளி பி.எம். பிர்லா மதியம் மூன்று மணிக்கு வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கிறார் என்றால் 2.30-க்கே அவர் பெயரில் Gate Pass தயாராக இருக்கவேண்டும். அவர் வந்தபிறகு அவரை நிறுத்திவைத்து ரெஜிஸ்டரில் பெயர், விலாசம், பார்க்கவேண்டிய மந்திரியின் பெயர், அப்பாயிண்ட்மெண்ட் உண்டா/இல்லையா, கூடவரும் நபர்கள் பெயர் எல்லாம் அவரை எழுதவைத்து, கையெழுத்துப் போடச்சொல்வது பிர்லாவுக்கு அவமானமில்லை. அவரைக் கூட்டிப் போகும் என் போன்றவர்களுக்குத் தான் தலைக்குனிவு. அதைத் தவிர்க்க, அந்த ‘காவல் தெய்வங்களை’ வருடம் பூராவும் “கவனிக்க”வேண்டும். பிர்லா தன் காரிலிருந்து காரியாலயப் படிகள் ஏறும்போதே இந்தக் காவல் தெய்வங்கள் எழுந்து நின்று, அவருக்குப் புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லி, தயாராக வைத்திருக்கும் கேட் பாஸ்களை முறுவல் மாறாமல், என் கையில் கொடுப்பதுதான் அவர்களுக்கும் அழகு.....எனக்கும் அழகு!

இப்போது நீரா ராடியா காலத்தில் TRAI அமைப்பின் தலைவர் திரு. பிரதீப் பெய்ஜால் ரிட்டயரான பிறகு ராடியாவிடமே வேலைக்குச் சேர்கிறார். எங்கள் காலத்தில், நாங்கள் தினமும் உத்யோக் பவன் போய்சலாம் போட்டு பேட்டிக்குக் காக்கவைக்கும், எங்களை ஆட்டிப் படைத்து அலைக்கழிக்கும் ஒரு D.G.T.D. அண்டர் செக்ரட்டரி, ரிட்டயரான ஆறு மாதத்தில் எங்கள் கம்பெனியில் எங்களை ‘குட் மார்னிங் சார்’ என்று காலையில் கும்பிட்டு வரவேற்கும் ஊழியராக வேலைக்குச் சேர்வார். நீரா ராடியா ‘இரண்டரையணா’...நாங்களெல்லாம் ‘ஓட்டைக்காலணா..... அரையணா’ பேர்வழிகள்! ராடியாவுக்கு Sky is the limit! என்னைப்போன்ற ‘எள்ளுருண்டைகள்’ நாங்களாகவே ஒரு லட்சுமண ரேகை போட்டுக் கொண்டு, ‘This far and no further!’ என்று Delhi Development Authority-யின் அடுக்குமாடிக் குடியிருப்பிலும், மாருதி-800 காரிலும் சந்தோஷமடைந்தவர்கள்! அந்த ரேகை இல்லாதவர்களுக்கு சத்தர்பூரில் பார்ம் ஹௌஸ்... BMW கார்! வானமே எல்லை!!

இதற்கு ஒரு சின்ன உதாரணம்: தொழில்துறை அமைச்சரவையில் ஒரு IAS அதிகாரி ஜாயின்ட் செக்ரட்டரியாக இருந்தார். ஒரு புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கான எல்லா காகித வேலைகளும் முடிந்து, அடுத்த நாள் அவரிடமிருந்து கடைசி அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். முந்தையதினம் அவரைக் ‘குளிப்பாட்ட’ ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன். முதலில் ‘சோமபானம்’.... பிறகு அங்கேயே பெரிய விருந்து. முடிந்ததும், ‘சரி, நாளைக் காலையில் சந்திப்போம்’ என்று சொல்லி விடைகேட்டேன். அவர் தன் பஞ்சாபி கலந்த ஹிந்தியில், ‘எங்கே கண்ணா இவ்வளவு சீக்கிரம் ஓடுகிறாய்? முதலில் மனதுக்குப் பிடித்தமான ட்ரிங்க்ஸ்... பிறகு நிறைவான சாப்பாடு... அடுத்தது என்ன?... உனக்குத் தெரியாததா?’ இழுத்தார். என்ன கேட்கிறார் என்பது தெரிந்தும், ‘தெரியவில்லை’ என்றேன். சுத்த பஞ்சாபியில், இதற்கப்புறம் ‘மனதைக் குளிர வைக்க’ - அவர் சொன்ன வார்த்தை Dilbehlaanekeliye- எங்கே போக வேண்டுமோ.... அங்கே போவோம். ‘Evening is still young!’ என்றவரை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தேன். ‘மிஸ்டர் சோப்டா! நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதற்கு என்னைத் துணை சேர்க்காதீர்கள். நாளைக் காலை உங்களிடமிருந்து அனுமதிப் பத்திரம் வாங்கவேண்டுமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்கள் தந்தாலும் தரா விட்டாலும் எனக்குக் கவலையில்லை. பணம்தான் உங்கள் பிரச்சினையென்றால் இதோ....’ என்று சொல்லி பத்து நூறு ரூபாய் நோட்டுகளை - அறுபதுகளில் அதன் மதிப்பு மிக அதிகம்-அவர் பையில் திணித்து விட்டு அவரைத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டேன். இரவு தூக்கம் வரவில்லை. ‘என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே!’ என்று அடுத்த நாள் காலை சரியாகப் பத்துமணிக்கு அவர் அலுவலகம் போனேன். சுத்தமாக எனக்கு நம்பிக்கையில்லை. நேராக உள்ளே போனால் என்னைப் பார்க்கவும் அவர் மறுத்துவிடுவாரென்று நினைத்து, அவரது பியூனிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘ஸாப்கோ தே தோ!’ என்றேன். அவர், ‘என்ன ஸாப் இது புதுப் பழக்கம்?.... உள்ளே அவருடன் பீ.ஏ. மட்டும்தான் இருக்கிறார். நீங்கள் தாராளமாகப் போகலாம்!’ என்றார். ‘இல்லை... இதை அவரிடம் கொடுத்துவிட்டு வா. நான் காத்திருக்கிறேன்’ என்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். பியூன் உள்ளே சென்ற மறுநிமிடம் சோப்டாவே கையில் என் கார்டுடன் வெளியே வந்தார். ‘என்ன மணி! இன்னிக்குப் புது பழக்கம்? உள்ளே வாங்க’ என்று என் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அங்கேயிருந்த பீ.ஏ.விடம் அப்புறம் பார்க்கலாம் என்று வெளியே அனுப்பி வைத்தார். ஸிட் டௌன் என்றதும் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல், தயங்கி நாற்காலியில் உட்கார்ந்தேன்... இரு நிமிட மௌனம்... அதைக் கலைத்தார் அவர். ‘மிஸ்டர் மணி! நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். மற்றவர்களைப் போல் உங்களையும் நினைத்துவிட்டேன். நீங்கள் வித்தியாசமானவர்..... நேற்று நடந்ததற்கு நான் நாணித் தலைகுனிகிறேன். நேற்று ஒன்றுமே நடக்கவில்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம்!’ என்று சொல்லிவிட்டு, மேசையில் கையெழுத்திட்டு தயாராக வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தை என் கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு எழுந்த என்னிடம் வந்து, ‘You have taught me a lesson in my life. God bless You!’ என்று சொல்லிக்கொண்டே நேற்று நான் அவர் பாக்கெட்டில் திணித்த அதே பத்து நூறு ரூபாய் நோட்டுகளை என் பாக்கெட்டில் திணித்து வாசல்வரை தோளில் கை போட்டுக் கொண்டே வந்து வழியனுப்பினார் அந்த வயதானவர். அதன்பின் அவர் ரிட்டயராகும் வரை இருவரும் இன்னும் நெருக்கமான நண்பர்களானோம். இதுதான் எனது லட்சுமண ரேகை!

இப்போதிருக்கும் உயர் அரசு அதிகாரிகள் மிகத் தெளிவாகிவிட்டார்கள். விஞ்ஞான யுகமல்லவா? அவர்களுக்கு இந்த ‘சோளப்பொரி’யெல்லாம் வேண்டாம். ‘கொடுப்பதைப் ‘பெட்டி’யாகவே கொடு. என்ன வேண்டுமென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்’ என்று சொல்லி, ரிட்டயராகுமுன் Disproportionate Income என்ற வகையில் தன் மாமனார், கொழுந்தியாள் வீடுகளிலும் இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கு ஆளாகிறார்கள். பெரிய மீன் எதுவும் சிக்குவதில்லை. ஏதோ ஒரு சிற்றூரில் கிராம அதிகாரி ஐநூறோ ஐயாயிரமோ லஞ்சம் வாங்கியதாகத் தீர்ப்பாகி தண்டிக்கப்படுகிறார்! லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜி மந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA - 50 L என்று எழுதி வைத்திருந்ததற்கு, தன் ‘அத்வானி’ என்ற மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத் தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். C.B.I.யும் ஏற்றுக்கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!

அப்போதெல்லாம் நமக்கு வேலை ஆகவேண்டியவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஆராயவேண்டும். நிதித்துறையிலிருந்த ஒரு அதிகாரி ‘ஜெயகாந்தன் பிரியர்.’ அவருக்காக மதுரை மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்து ஜெயகாந்தன் அதுவரை எழுதிய புத்தகங்களின் கட்டு வரவழைத்து அவர் வீட்டுக்கு அனுப்புவேன். இன்னொரு அதிகாரிக்காக பிராங்க்பர்ட்டிலிருந்து விலையுயர்ந்த டென்னிஸ் ராக்கெட்டில் ஒரு செட் அனுப்பப்படும். மற்றொரு பக்திமானுக்கு மாதம் ஒருமுறை ஹரித்வார் போய்வர கார் அனுப்பவேண்டும். நாலாமவர் கல்கத்தா ரஸகுல்லாவுக்கு அடிமை! இன்னொருவருக்கு மாதத்தில் ஒருமுறை திருப்பதி பிரசாதம்! ஓர் ஆங்கில இலக்கியப் பிரியருக்கு, லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில், இந்தியாவில் கிடைக்காத Mario Puzo எழுதிய ‘Godfather’ நாவலை சுடச்சுட வாங்கிவந்து கொடுத்தேன்! (க.நா.சு.வுக்கும் இன்னொரு பிரதி வாங்கிவந்தேன்.) எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. அதைக் கண்டு பிடிப்பதுதான் எங்கள் வேலை! நான் பிர்லாவில் இருந்த பத்தாண்டு காலத்தில், எல்லா மாதமும் முதல் வாரத்தில் ஐந்து மத்திய மந்திரிகளுக்கு தலா ரூ.5,000 வீட்டில் கொண்டுபோய் பட்டுவாடா செய்ய வேண்டும். அப்போது ரூ. 5,000 மந்திரிகளின் இருமாதச் சம்பளம்! அதில் அப்போதிருந்த தகவல் ஒலிபரப்பு மந்திரி திரு. சத்ய நாராயண் சின்ஹாவும் அடக்கம்! அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி பிரதமராக அறிவிக்கப்பட்டபோது, தன் மந்திரிசபையில் இவரைத் தவிர்த்துவிட்டு, 50 மந்திரிகளின் பட்டியலைத் தயார் செய்து, ராஷ்டிரபதி பவன் எடுத்துச்சென்றார். ஆனால் அன்று அதிகாலை வெளியிடப்பட்ட ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் 51-வது பெயராக Shri Satya Narain Sinha - Union Minister Without Portfolio என்று இவர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது! இந்த மாற்றம் எப்படி நடந்ததென்பது எனக்கும், எனது ‘பாஸ்’ மறைந்த திரு. பி.எம். பிர்லாவுக்கும் மட்டுமே தெரியும். என் வாழ்வில் நான் செய்த திருகுதாளங்களில் இதுவும் முக்கியமானது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததென்றாலும், அந்த ரகசியத்தை உங்களுக்கு சத்தியமாகச் சொல்லமாட்டேன்! காரணம், எனது ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தில் ‘காந்திபாய் தேசாய் - தலைவர்களும் தனயர்களும்’ கட்டுரையின் கடைசிப் பாராவில் சொல்லியிருக்கிறேன்! ‘இதைப் போன்ற, இதைவிடக் ‘கனமான’ சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வந்தாலும், அவைகளையெல்லாம் நான் எழுத ஆரம்பித்தால், எனக்குப் பிடித்த தில்லியில், எனக்குப் பிடிக்காத திஹார் ஜெயிலில், நிரந்தரமாக எனக்கு ஓர் இடம் நிச்சயம்! ‘அங்கே... ஏ....ஏ.... எனக்கோர் இடம் வேண்டும்!’ என்று இந்த வயதில் நான் பாடத் தயாரில்லை!’

அந்தக் காலத்து மூத்த அதிகாரிகளிடம் மந்திரிகளுக்கு வளையாத முதுகெலும்பும், தேவைக்கு அதிகமான நேர்மையும் இருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சொந்த முயற்சியால் I.C.S. தேர்வில் முதலிடம் பெற்ற இளைஞர்களுக்கு, பணக்காரக் குடும்பங்களிலிருந்து பெண் கொடுக்க முன்வந்தார்கள். உதாரணத்துக்கு எஸ். பூதலிங்கம், I.C.S. (மனைவி எழுத்தாளரான மதுரம் எனும் ‘கிருத்திகா’), டி.எஸ். ஸ்வாமிநாதன், I.C.S. (சுந்தரி ஸ்வாமிநாதன்), சி.எஸ்.ராமச்சந்திரன், I.C.S. (மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் சென்னையில் பிரபலமான டாக்டர் திருமூர்த்தியின் மகள். டாக்டர் திருமூர்த்தியின் பெயரில் நுங்கம்பாக்கத்தில் ஒரு நகரே இருக்கிறதாம்!) போன்றவர்கள். எனக்கு ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர் வாரிசுகளில் ஒரு மகள் உட்பட நான்கு I.A.S. அதிகாரிகள். மற்றொரு மகன் I.A.&.A.S. திரு. ராமச்சந்திரன் சிறந்த பக்திமான். அதிர்ந்து பேசாதவர். தினமும் அதிகாலை பூஜை முடித்து, நெற்றி நிறைய விபூதி குங்குமமில்லாமல் வெளியே இறங்க மாட்டார் (தில்லியில் பஜனை சமாஜ், சௌத் இந்தியன் சமாஜ் போன்ற அமைப்புகளின் தலைவர்). அறுபதுகளில் இவர் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தபோது, நேரு தன் காபினெட்டில் லண்டனில் ஹை கமிஷனராக இருந்த கிருஷ்ண மேனனைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கிறார். பதவியேற்றபிறகு, மரியாதை நிமித்தம் தன்னை முதன் முதல் பார்க்க வந்த செயலரிடம் கிருஷ்ணமேனன் கையைக் காட்டி, ‘ராமச்சந்திரன், இதென்ன பட்டை பட்டையாக நெற்றியில்? நாளையிலிருந்து நான் இதைப் பார்க்க விரும்பவில்லை!’யென்றதும், ராமச்சந்திரன் பணிவாக, ‘No Sir, You will not see this tomorrow! I promise you!’ என்று பதிலளித்துவிட்டு வெளியேறினார். உடனே அப்போது காபினெட் செக்ரட்டரியாக இருந்த திரு. கே.பி. லால், I.C.S. அலுவலகத்துக்குச் சென்று, அன்று மதியமே பாதுகாப்புத் துறையிலிருந்து விடுபட்டு, வர்த்தக-தொழிற்துறை செயலராக உத்யோக் பவனில் பொறுப்பேற்றார். கிருஷ்ணமேனன் இறக்கும்வரை அவரைச் சந்திக்கவேயில்லை! இப்படிப்பட்ட செயலர்களிடம் எந்த அரசியல்வாதிக்கு ஊழல் குறித்தோ, லஞ்சம் குறித்தோ பேச தைரியமிருக்கும்?

பல்லாயிரம் கோடி நிறுவனமான ஏர்டெல் (Airtel) அதிபர் சுனில் மித்தலின் தந்தை சத்ய பால்மித்தல் (மிட்டல் அல்ல) காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் பொருளாளராகவும் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் பெயரில் அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக ஒரு வழக்குப் பதிவானது. அந்த மகானுபாவரும் வழக்குத் தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். அவர் மீதிருந்த வழக்கும் வாபஸானது. அந்தப் பணம்தான் சுனில் மித்தலின் ஏர் டெல்லுக்கு ஆரம்ப மூலதனம் என்று என் டெல்லி நண்பன் அடித்துச் சொல்லுவான்!

தில்லியில் எங்கள் ‘வியாபகம்’ தொழிற்துறை/நிதித்துறைகளைக் கடந்தும் இருக்கும்/இருக்கவேண்டும். சங்கீத நாடக அகாதெமி, சாகித்ய அகாதெமி, Directorate of Film Festivals, Department of Culture, கலைஞர்களை வெளிநாட்டுக்கனுப்பும் Indian Council of Cultural Relations போன்ற அமைப்புகளிலும் ‘நம் ஆட்கள்’ இருக்கவேண்டும். சாகித்ய அகாதெமியில் செயலராக இருந்த பிரபாகர் மாச்வே, இந்திரநாத் சௌத்திரி போன்றவர்களும் எனக்கு நண்பர்கள். அந்த வருடம் யாருக்கு விருது என்பது நான்கு நாட்களுக்கு முன்பாகவே தகவல் வந்துவிடும். தமிழ்நாட்டில் அவர்கள் Land Line-ஐத் தேடிக் கண்டுபிடித்து, எல்லோருக்கும் முன்பாக, ‘ஸார், இந்த வருடம் ஃபைனல் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறது. Congrats!’ என்று சொன்னால், முதலில் நம்ப மறுப்பார்கள். அதிகாரபூர்வமாகத் தெரிந்தபிறகு, ‘மணி சார்! ரொம்ப நன்றி!’ என்று நாம் செய்யாத வேலைக்கு நன்றி சொல்வார்கள். 1986-ல் க.நா.சு.வுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது பற்றி எனக்கு மூன்று நாட்கள் முன்பே தெரியவந்தது. நான் சொன்னதை அவர் நம்பவில்லை. சென்னை எழுத்தாள நண்பர்களுக்கு போன் போட்டுத் தெரிந்தபிறகு தான் நம்பிக்கை வந்தது. மறைந்த வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்யநாதன் தனது ‘பத்மஸ்ரீ’ விருதுக்காக ஒரு பெரிய ஃபைலே தயார் செய்து எனக்கனுப்பியிருந்தார் (அதில் அவர் நெற்றியில் வழக்கமாக இருக்கும் - நாம் ஜுரத்துக்குப்போடும் பற்றைப்போல - பச்சை/கருப்பு/வெள்ளை பற்றுக்களுடன் ஒரு முழு ரூபாய் அளவில் குங்குமப்பொட்டோடு கோட் சூட்டு, டையுடன் இருந்த போட்டோவும் அடக்கம்!) இரு வருடங்கள் முனைந்து பாடுபட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. மூன்றாம் வருடம் நான் முயற்சி எடுக்கவேயில்லை. ஆனால் அந்த வருடம் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைத்தது! அது என் முயற்சியால்தான் என்று அவர் இறக்கும்வரை பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்வார்! இப்போதிருந்தால் அவரிடம் உண்மையை சொல்லியிருப்பேன்!

இப்போது மேலே என் மகள் சொன்ன ‘Mutton Tallow திருகுதாளம்’ என்ன என்பதைப் பார்ப்போம். பழையகால ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் பற்றி புத்திசாலியான உங்களுக்குப் புரியவைப்பதற்கான எழுத்துச் சாதுரியம் என்னிடம் உண்டாவென்று தெரியவில்லை. முயன்றுதான் பார்க்கிறேனே!

அப்போதெல்லாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி எங்களுக்கு மிக முக்கியமான நாள். ‘முட்டாள்கள் தினம்’ என்பதால் மட்டும் அல்ல! அன்று தான் அரசு அந்த வருடத்துக்கான ஏற்று-இறக்குமதிக்கான Export-Import Policy வெளியிடும். பட்ஜெட் தொடர் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத்தில்தான் அந்தப் புத்தகம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதுதான் எங்களுக்கு அந்த வருடத்திய திருக்குறள்-பைபிள்-கீதை எல்லாம்! அடுத்த வாரம் கனாட் பிளேஸிலிருக்கும் ஜெயின் புக் டிப் போவில் ரூ.20-க்கு வாங்கக் கிடைக்கும் அந்தப் புத்தகத்துக்கு அன்றைய பிளாக் மார்க்கெட் விலை ரூ.2,000க்கு குறையாது. முக்கால்வாசி எம்.பி.க்கள் அதை சுடச்சுட கிடைக்கும் விலைக்கு விற்றுவிடுவார்கள். இரு பகுதிகளாக வரும் அந்தப் புத்தகத்தை வேகவேகமாக, ஆழப்படித்து, புரிந்துகொண்டு பதவுரை-பொழிப் புரையோடு தேவையானவர்களுக்கு விளக்கம் அளிக்க என்னைப்போன்ற ‘பரிமேலழகர்கள்’ தில்லியில் நிறைய இருந்தார்கள்! பகல் 12 மணியிலிருந்து கல்கத்தா, ஜலந்தர், ஜெய்ப்பூர், பம்பாய், அஹமதாபாத், நவ்ஸாரி, சூரத் போன்ற இடங்களிலிருந்து தொழிலதிபர்கள்-இறக்குமதியாளர்கள் தங்கள் துறையில் இந்த வருடம் என்னென்ன மாற்றங்கள், அவை தமக்கு சாதகமா பாதகமா என்றறிய ஆவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். என் வீட்டுத் தொலைபேசிக்கு நள்ளிரவுவரை ஓய்வே கிடையாது. அவரவர்கள் ராசிக்கு (அவர்கள் செய்யும் தொழிலைப்பொறுத்து) அந்த வருடத்திய பலன்களைச் சொல்ல வேண்டும். பல நண்பர்கள் ஓசியிலேயே உபாயம் கேட்பார்கள். எல்லோருக்கும் பொறுமையாகப் பதிலளிக்கவேண்டும்.

அப்படியான ஒரு ஏப்ரல் மாத முதல்வாரத்தில், ஜெயின் எக்ஸிம் என்ற பெரிய அமைப்பை நடத்தி வந்த திரு. ஜெயினைப் பார்க்கப் போயிருந்தேன். வயதில் இளையவரானாலும், மார்வாடிகளுக்கே உரித்தான கூரிய வியாபார மூளையுடையவர். எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவர். நாட்டில் எந்தெந்த பொருட்களுக்குத் தட்டுப்பாடிருந்ததோ, அவைகளையெல்லாம் இறக்குமதி செய்து பணம் பார்த்துக் கொண்டிருந்தவர். சிமெண்ட், நியூஸ்பிரிண்ட், சர்க்கரை போன்ற Canalised Items-ஐ STC-க்கு வெளி நாட்டிலிருந்து தருவித்துக் கொடுப்பவர். அந்த லிஸ்ட்டில் Mutton Tallow (மாமிசக்கொழுப்பு)ம் இருந்தது. அப்போது இதை விலைகுறைந்த சோப் உற்பத்திக்கு மூலப்பொருளாக உபயோகித்தார்கள் (இப்போது இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்). நாம் தினமும் பார்க்கும் தார் ரோட்டுக்கான தார் போல பெரிய பீப்பாயில் வரும். விலை ஒரு டன்னுக்கு நூறு டாலருக்குள்ளாகவே இருக்கும். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஜெயின் ஸாப்! பாலிஸி புத்தகத்தில் வருடாவருடம் எதையாவது கோட்டை விடுகிறார்கள். இந்த வருடம் Exim Policy-யில் மட்டன் டாலோவுக்கான கொள்கலன் பற்றிய விவரணையை மறந்துவிட்டார்கள். பீப்பாய் தகரத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, Mutton should be packed in any Metal container of 3 mm thickness and of 500 Kg. net.wt. என்று பொதுவாக விட்டுவிட்டார்கள். என்னிடம் மட்டும் இப்போது இரண்டு கோடி ரூபாய் இருந்தால், அரசாங்க விதிமுறைகளை மீறாமல், ஆறு மாதத்தில் இருநூறு கோடியாக ஆக்கிக்காட்டுவேன்!’ என்று சொன்னேன். ‘எப்படி?’யென்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘Any Metal’ என்று பொதுவாகச் சொன்னால், கொள்கலன் தங்கத்திலும் ஆகலாம்... வெள்ளியிலும் ஆகலாம். தங்கம்... வெள்ளியென்றால் Contraband என்று முடக்கி விடுவார்கள். நான் என் வெளிநாட்டு சப்ளையர்களிடம் எனக்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 3 mm- 500 Kg. கொள்கலனில் Mutton Tallow அனுப்பச் சொல்வேன். இப்போது இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெள்ளியை விட விலை அதிகம். அதில் வரும் மட்டன் டாலோவைக் கடலில் கொட்டிவிட்டு எனக்குக் கொள்கலன் மட்டும் போதும். நான் அரசை ஏமாற்றவில்லை. அவர்களது வழிமுறைக்கு உட்பட்டே நடக்கிறேன்! அரசாங்கம் விழித்துக் கொண்டு இதற்கு ஓர் Amendment கொண்டு வருவதற்குள் இருநூறு கோடி பார்த்துவிடுவேன்!’ என்று விளையாட்டாகச் சொல்லி, அவர் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு வீட்டுக்குப் போனேன்.

இது நடந்தது ஏப்ரல் மாதம். அந்த வருட தீபாவளிக்கு நான்கு நாள் முந்தி ஜெயின் என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னால், மூன்று அலங்கரிக்கப்பட்ட கூடைகளை - ஒன்றில் நிறைய பழங்கள், இரண்டாவதில் உயர்ந்த இனிப்பு வகைகள், மூன்றாவதில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், அக்ரூட் வகையறா- தவறாமல் என் வீட்டுக்கு அனுப்புவார். அதற்குத்தான் இருக்குமென்று அனுமானித்துக் கொண்டேன். போனதும் மேசையிலிருந்த என் கார் சாவியை எடுத்து தன் பியூனிடம் கொடுத்து, ‘மணி ஸாப் டிக்கியில் எல்லாவற்றையும் வைத்து விடு!’ என்று சொல்லியனுப்பினார். நான் புறப்படத் தயாரானதும், ஒரு சிறிய பெட்டியை என் பக்கம் தள்ளி, ஹிந்தியில் ‘இது உங்களுக்காக.....’ என்றார். திறந்து பார்த்தால் அதில் இரண்டு லட்சம் நோட்டாக இருந்தது. ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்றதற்கு, ‘உங்கள் குழந்தைகளுக்கு என் சார்பில் தீபாவளிக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்!’ நான் மறுக்கவில்லை.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஏதோவொரு நாள் மாலையில் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரை நான் ஜெயின் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். கும்பகோணத்துக்காரர். உட்காரச் சொன்னேன். ‘ஸார்! இப்ப நான் ஜெயின்கிட்டே இல்லே. உங்களிடம் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு.. .அவன் கிட்டே வேலை பாத்ததுனாலே சொல்லமுடியலே... இன்னிக்குத்தான் வாய்ச்சுது. எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்போ நீங்க குடுத்த ஐடியா பிரகாரம் நாலு ஷிப்மெண்ட் வந்தது. அதுக்குள்ளே Container Amendment வந்துடுத்து. அஞ்சாவதிலே மாட்டிண்டான். சின்ன பெனால்டி குடுத்து க்ளியர் பண்ணினான். ஆறு மாசத்திலே பம்பாயிலே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வித்தே 250 கோடிக்கு மேலே லாபம்! உங்களுக்கு 2 லட்சம்தான் குடுத்தாங்கிறதும் தெரியும். இதை நீங்க விடப்படாது. . . அவங்கிட்டே கேக்கணும்!’

இது நடந்து நான் சென்னை திரும்பும்வரை இருபது வருடங்களுக்கும் மேலாக திரு. ஜெயினிடம் பழகி வந்தேன். மறந்தும் இதைக் குறித்து அவரிடம் கேட்டதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் போகிறபோக்கில் கொடுத்த ஒரு ஐடியாவுக்கு வரவு ரூ. 2 லட்சம்! ஒரு புது வீட்டுக்கு அச்சாரம் கொடுக்க முடிந்தது! என் வாயளவில் இருந்த ஐடியாவை, தலை நிறைய முடியிருக்கும் திரு.ஜெயின் எனும் சிங்காரி அதை அள்ளி முடிந்து கொண்டால், அதற்கு நான் எப்படிப் பொறாமைப்பட முடியும்?

இன்றைய பத்திரிகைச் செய்தியில், லண்டனில் ருடால்ஃப் எல்மர் எனும் முன்னாள் ஸ்விஸ் பாங்க் ஊழியர், 2,000-க்கும் மேற்பட்ட கருப்புப்பண முதலைகளின் பட்டியலை ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சேயிடம் கொடுத்திருக்கிறார். அந்த லிஸ்ட் வெளிவரும் போது நாம் 2-ஜி ஊழலையும், நீரா ராடியாவையும் சுத்தமாக மறந்துவிடுவோம்!

எனக்கொரு சந்தேகம்! ஒரு நீரா ராடியா எப்படி தொழில்முறை போட்டியுள்ள ரத்தன் டாடாவுக்கும், அனில் அம்பானிக்கும் ஒரே சமயத்தில் வலதுகையாக இருக்க முடியும்? சாத்தியமா? இருவரும் எப்படி ராடியாவை நம்புகிறார்கள்? தில்லியில் ஒரு ஜோக் கேட்டேன்: மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காபினெட் மீட்டிங்கை மந்திரிகள் தவிர்க்கலாம். தப்பில்லை. ஆனால் மாலை வேளை நீரா ராடியா தன் சத்தர்பூர் ஃபார்ம் ஹௌஸில் நடத்தும் பார்ட்டிகளுக்கு அவசியம் போயாக வேண்டும். எல்லாம் காலத்தின் கோலம்! தில்லியில் இதற்கு முன்பும் நீரா ராடியாக்களும், பர்க்கா தத், வீர் சங்வி, பிரபு சாவ்லாக்களும் இருந்திருக்கிறார்கள். அப்போது தில்லியிலிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் எஸ். நிஹால் சிங், ராம்நாத் கோயங்கா, பி.ஜி. வர்கீஸ், கே.எஸ். ஷெல்வங்கர், ஜிகே ரெட்டி, குல்தீப் நய்யார் போன்றவர்களுக்குத் தெரியாத அரசாங்க ரகசியங்களா பிரபு சாவ்லாக்களுக்கு தெரியப்போகிறது? ஒவ்வொரு மந்திரிசபை மாற்றத்தின் போதும், நேரு ‘ஹிந்து’ பத்திரிகையின் மூத்த தில்லி நிருபர் கே.எஸ். ஷெல்வங்கரை தீன்மூர்த்தி பவனுக்கு அழைத்து, சேர்க்கப்போகும் மந்திரிகளின் திறமை, நாணயம் பற்றி விவாதிப்பாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று டாக்டர் மன் மோகன் சிங், பர்க்கா தத்தை 7, ரேஸ்கோர்ஸ் ரோடுக்கு அழைப்பாரா?

அப்போது இரவு நேரங்களில், தில்லி ராய்ஸினா ரோடிலிருக்கும் தில்லி பிரஸ் க்ளப்பில் ஒரு கிளாஸ் விஸ்கியுடன் ஓரத்து மேஜையில் உட்கார்ந்திருந்தாலே பல ராடியா டேப்களைக் கேட்கும் பாக்கியம் கிட்டும்! நேரம் ஆக ஆக, உண்மையான கிசுகிசுக்கள் ‘சூடு’ பிடிக்கத் தொடங்கும்!

Thanks: Bhrathimani, http://www.uyirmmai.com

No comments: