இன்றைய காலகட்டத்தில் இலவச அறிவிப்பும் அதை நிறைவேற்றுவதும் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிவிட்டது. மக்களைப் பொருத்தவரை தேர்தல் வாக்குறுதிகளை அந்தந்த கட்சியின் கொள்கையாக கருதுபவர்கள் உண்டு. கட்சிக்குள் இருப்பவர்கள் தம் கட்சிக்கென்று கொள்கை உண்டு என்று நம்பியும் வருகின்றனர். கட்சிகளுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லை என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் உண்மையில் கட்சிகளுக்கென்று கொள்கைகள் இருக்கின்றன. அவை எல்லாத் தடைகளையும் மீறி நிறைவேற்றவும் படுகின்றன. சென்ற ஐந்தாண்டு திமுக கருணாநிதி ஆட்சியிலும் கொள்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறதன. அத்தகைய தமிழக அரசின் பொருளாதார கொள்கைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடலாம்.
1. விவசாயக் கொள்கை
karunanidhi_213முதன்மையாக திமுக அரசின் வேளாண் கொள்கையைப் பார்ப்போம். 2009 சூன் மாத இறுதியில் விவசாயத்தை ஒழுங்குபடுத்துவது என்று "வேளாண் மன்ற சட்டம்" என்ற பெயரில் பாரம்பரிய விவசாய முறையில் புதுமையைப் புகுத்தப் பார்த்தது. இச்சட்டத்தின்படி வேளாண் பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளைக் கொண்டு 'வேளாண் மன்றம்' என்னும் அமைப்பை புதிதாகத் தொடங்குவதற்கு அடித்தளமிட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் யாரும் இதில் பங்கேற்க முடியாது. வேளாண்மன்றத்தில் உறுப்பினராக இல்லாத யாரும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கக் கூடாது. வழங்கினால் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அச்சட்டம் கூறுகிறது. தமிழக விவசாயிகளின் பாரம்பரிய அறிவை ஏற்றுக் கொள்ள மறுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனைப்படி அந்நிறுவனங்கள் பங்கேற்கும் விதமாக நவீன விவசாய முறைகளைத் திணித்து விவசாயம் சார்ந்த துறைகளையும் தனியார்மயமாக்குவது இச்சட்டத்தின் 'சிறப்புக் கொள்கை.'
'தமிழ்நாட்டில் விவசாய ஏற்றுமதி வாய்ப்புகள்' குறித்து சென்னையில் செப்டம்பர் 23 அன்று தமிழக வேளாண் பல்கலைக்கழகமும், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கம் இதை உறுதிபடுத்தியது. அக்கருத்தரங்கில், "வெங்காயத்துக்கு பெங்களுரிலும், மாம்பழத்துக்கு கிருஷ்ணகிரியிலும், தக்காளிக்கு ஒசூரிலும், திராட்சைக்கு தேனி மாவட்டத்திலும் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகங்களை, ஓவ்வொன்றுக்கும் 2 கோடி செலவில் அமைக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும்" என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிய பேச்சும், "கெர்க்கின் என்ற சீமை வெள்ளரிக்கு நிறைய ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இதைப் பயிரிட்டால், ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதைப் பதப்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, இரசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஏற்றுமதி நோக்குடன் செயல்படுபவர்களுக்கு எங்கள் வங்கி கடனுதவி வழங்கிவருகிறது" என்று பாரத ஸ்டேட் வங்கியின் அலுவலர் அருணாச்சலம் பேசிய பேச்சும், "உங்களின் ஏற்றுமதிக் கனவை நனவாக்குவதுதான் எங்கள் வங்கியின் முக்கிய குறிக்கோள்" என்று இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொது மேலாளர் பிரகலாதன் பேசிய பேச்சும், தமிழக விவசாயத்தைத் தனியார் மயமாக்கி, ஏற்றுமதிக்கான விவசாயமாக மாற்றத்துடிக்கும் தமிழக அரசின் கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.
இந்தக் கொள்கையின் பலன் என்னவென்று பார்த்தால், ஏற்கனவே நவீன விதை, ஏற்றுமதிப் பயிர் எனத் தமிழக விவசாயிகளைச் சீரழித்த இந்த கனவான்கள் தற்போது மரபணு பசுமைப் புரட்சி என்ற பெயரில் வல்லாதிக்க சுரண்டல் வலைக்குள் தமிழக விவசாயிகளைச் சிக்க வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் மாண்சான்டோ நிறுவனம் தயாரிக்கின்ற, ஈனும் திறனற்ற, பி.டி. விதைகளை அமோக விளைச்சலைத் தரும் நவீன விதைகள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி அறிமுகப்படுத்தினர். இந்த விவசாய முறையில் விளைச்சலும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் உணவுக்கான சேமிப்புமில்லாமல் கடன்பட்டாவது விளைச்சலைக் காணவேண்டும் எனத் துடிக்கும் விவசாயிகளுக்குக் கடன் சுமைகளே அதிகரித்தன.
புதிதாக முளைத்த சில விவசாயக் கம்பெனிகள் சக்கரை சோளத்தையும், காட்டாமணக்கையும் பயிர் செய்தால் கடனையெல்லாம் அடைத்து விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டின. ஆனால், விளைந்த சர்க்கரை சோளத்தையும், காட்டாமணக்கையும் விற்க முடியாமல் விவசாயிகள் ஏமாந்து நின்றனர்.
இன்னும் உயிரோடு இருந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் விளை நிலங்களோ, நகர விரிவாக்கத்திற்காகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்காகவும், உடைமை வர்க்கத்தின் உல்லாச மாளிகைகளுக்காகவும், இராயல் எஸ்டேட்டுகளுக்காகவும் பறிக்கப்படுவதும் அரசின் கொள்கைகளுள் ஒன்று.
விவசாய விளைப் பொருள்கள் மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டதால், பற்றாக்குறையை ஈடுகட்டுவது என்ற உணவு தானியங்களும், பணப்பயிர்களும், ஒட்டு விதைகளும், இரசாயன உரங்களும், இயந்திரங்களும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், அன்னிய விளைப் பொருள்களின் தரத்தோடும், விலையோடும் போட்டி போட இயலாத நிலை ஏற்பட்டு, உள்நாட்டுப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட சரிவாலும் மின்சாரம், டீசல், விதை, உரம் போன்றவற்றின் விலையேற்றத்தாலும் நட்டமடைந்த விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், மாண்சான்ட்டோ கார்கில், நெஸ்லே, கோத்ரெஜ், டாடா, ரிலையன்ஸ் போன்ற வல்லாதிக்க - வல்லாதிக்கத்திற்குத் துணை நிற்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இலாபமிட்டி தருகின்றன.
கரும்புக்குக் கட்டுப்படியான விலை கொடுக்க அரசு மறுப்பதாலும், உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதாலும் விவசாயிகளில் பலர் கரும்பு விவசாயத்தையே மறந்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில், 2006 - 07இல் 3.91 லட்சம் எக்டேராக இருந்த கரும்புச் சாகுபடி பரப்பு 2008 - 09இல் 3.23லட்சம் எக்டேராகக் குறைந்தன இன்று 2.50 எக்டேராக இருந்து வருகின்றன. ஆலைகளுக்குப் போதுமான கரும்பு கிடைக்காததில், சர்க்கரை உற்பத்தி குறைந்து சர்க்கரை விலை விரைவாக உயர்ந்து வருகிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட கரும்புக்குக் கட்டுப்படியான விலை கொடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்குச் சர்க்ரையை இறக்குமதி செய்ய உலகமயமாக்கல் கொள்கையில் நின்று தீர்மானிக்கிறது.
மேலும், எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயத்தை அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் நிலப்பரப்பும் குறைந்துகொண்டே போயின. இதனால் ஏற்பட்ட சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மீண்டும் இறக்குமதியை, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைபடுத்தியது. கார்கில், மாண்சான்ட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதில் பெருத்த ஆதாயமடைந்தன.
தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், ஒப்பந்த விவசாயம் போன்ற திட்டங்களின் அடிப்படையில், அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை அப்படியே புகுத்துவதற்கேற்றவாறு நிலக்குவிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது, அவர்களின் உற்பத்திப் பொருள்களை நல்ல விலையில் விற்றுக் கொடுப்பது என்ற பெயரில், ஐ.டி.சி போன்ற வல்லாதிக்க - வல்லாதிக்கத்திற்கு துணைநிற்கும் உள்நாட்டு நிறுவனங்கள் சிறு - நடுத்தர விவசாயிகளைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர முயற்சிக்கினறன. அதற்கு அரசின் கொள்கை துணை நிற்கின்றது.
இப்படி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக விவசாயத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற இச் சீர்திருத்தங்கள் அனைத்தும் சிறு - நடுத்தர விவசாயிகளின் நலனுக்கு எதிரானவைகளாக இருப்பதோடு விவசாயத் துறையை பெரும் நெருக்கடிக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.
அரசின் இத்தகைய பொருளாதாரக் கொள்கையால் சிறு - நடுத்தர, கூலி விவசாயிகளை வேளாண் துறையிலிருந்து அன்னியப்படுத்தி, உணவு விளைச்சலுக்கான நடவடிக்கையை முற்றாக நிறுத்தி விடுவதன் மூலம், உணவுத் தேவைக்காக அன்னிய வல்லாதிக்க நாடுகளிடம் கையேந்தி நிற்கவைக்கும் நிலைக்கு நம்மை தள்ளிக் கொண்டிருக்கின்றன. எப்படியெனில், சோமாலியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைப் போன்று அதாவது, உணவுப் பயிர்களுக்கான மானியங்களை நிறுத்தி, ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிட வைப்பதன் மூலமும், உணவு தானியக் கொள்முதல், பதப்படுத்தல் ஆகியவற்றால் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதன் மூலமும், நீராதார அமைப்புகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டதோடு, நீர்நிலைகள் மீது விவசாயிகளுக்கு இருந்து வந்த உரிமைகளையும் பறித்துக் கொண்டதன் மூலம் புதிய அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
2. தொழில் கொள்கை
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் இருந்து வந்தது. தமிழகம் நெசவுத் தொழில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது. இன்று அரசின் தவறான கொள்கையின் விளைவாக அதாவது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்யப்படுகின்றது, மலிவு விலை பஞ்சால் உள்ளுர் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் போனது. அதோடு இறக்குமதி செய்யப்பட்ட மலிவான பஞ்சோடு போட்டி போட இயலாததாலும் பருத்தி விவசாயிகள் விவசாயத்தை விட்டனர்.
இதன் விளைவாக விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை பார்த்தவர்களெல்லாம் கோவைக்கும், திருப்பூருக்கும் வேலைத் தேடி புலம் பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர். கோவை மாநகரத்திலுள்ள நூற்பாலைகளும் மூடப்பட்டு வருகின்றன என்பது கொடுமை.
பருத்தி சாகுபடியால் ஏற்பட்ட வீழ்ச்சியில், உள்நாட்டுத் தொழில்களுக்குத் தேவையான பருத்தி கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், இங்கே விளையும் தரமான பருத்தியை எவ்விதத் தடையுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொள்கையைக் கடைபிடித்து வருவதால், நெசவுத் தொழில் நசிவடைகின்றது.2007இல் ரூ.11.000 கோடிகளாய் இருந்த, தமிழ் நாட்டின் துணி ஏற்றுமதி 2008இல் 10,000 கோடிகளாகச் சரிந்துள்ளது. இப்படியாக கடந்த இரண்டு ஆண்டில் ஏறக்குறைய 2,000 கோடி சரிந்துள்ளன. நெசவுத் தொழில் நிறைந்த திருப்பூர் பகுதியில் சுமார் 1.5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 2.5 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்றுமதித் துறையில் 16,000 தொழிலாளர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் 6.59 சதவீதமாகச் சரிந்துள்ளன.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கும் 2 இலட்சம் விசைத் தறிகளிலும், இத் துறையோடு இணைக்கப்பட்டுள்ள பருத்தி அரவை ஆலைகளிலும், நூற்பாலைகளிலும், சாயப்பட்டறைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், சுமை தூக்குவோர் என பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகக் கொடுமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன. கூலி குறைப்பு, வேலை இழப்பு, கந்துவட்டிக்குக் கடன் என தொழிலாளர்களின் வாழ்க்கைத் துயரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.
மேலும், எஃகு துறையில் 30,000 சிறிய, பெரிய வணிக நிறுவனங்கள் (40 - 50 சதவீதம்) வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால், 7 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். எரிசக்தி துறையில் சிறந்து விளங்கும் ' பெல்' நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், சென்னை, திருச்சி, இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இயங்கி வரும் அந்நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஆள்குறைப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலாலும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பீடி சுருட்டுதல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பட்டாசு போன்ற பிறவற்றை தயாரிக்கும் உள்நாட்டுத் தொழில்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கப்படுகின்றன. மெழுகுவர்த்தி தயாரிப்பிலும், விற்பனையிலும் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. "சிட்கோ" நிறுவனத்தின் மூலம் மெழுகுவர்த்தி தயாரிப்புக்குப் பயன்படும் பாரஃபின் மெழுகை " கோட்டா" முறையில் வழங்கிவந்த தமிழக அரசாங்கம், அக்கோட்டா முறையை நிறுத்திவிட்டதால், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் என்ற நிறுவனமே அதனை வெளிச் சந்தையில் விற்று வருகிறது. இத் தாராளமயமாக்கல் கொள்கையால், பாரஃபின் விற்பனையில் பதுக்கலும், கள்ளச் சந்தையும் வளர்ந்து பாரஃபின் மெழுகின் விலை உயர்ந்து கொண்டே போவதால் இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்காக கடமையுணர்வுடன் சேவை செய்யும் திமுக அரசு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பட்டாசு, சோப்பு, கற்பூரம் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு - நடுத்தர உள்நாட்டுத் தொழிலில் ஏற்பட்டுள்ள மூலப் பொருள்களுக்கான நெருக்கடியைத் தீர்க்க மறுக்கின்றது. மின்வெட்டின் பாதிப்பு சிறிதுமில்லாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கத் தடையின்றி தாராளமாக மின்சாரம் வழங்குகிறது. அதுவும் ஒரு யூனிட்டை 1.60 காசுக்கு வழங்குகிறது. ஆனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொடர் மின் வெட்டை ஏற்படுத்துவதோடு, அவற்றிடம் யூனிட் ஒன்றுக்கு 5.50 பைசாவை மின்கட்டணமாக வசூலிக்கிறது.
எனவே கருணாநிதி அரசின் கொள்கை என்பது உள்நாட்டுத் தொழிலை நசுக்கி, அன்னிய வல்லாதிக்க நிறுவனங்களை ஊட்டி வளர்க்கும் கொள்கையே. அது வேலை வாய்ப்பற்ற தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் கொள்கையே.
அரசின் இத்தகைய தவறான கொள்கையினால் ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்கிற கோட்பாட்டின்படி இன்று ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே வியப்புக்குரிய வகையில் அதிகரித்துள்ள ஏற்றத் தாழ்வுகள் பெருமளவிலான எழுச்சிக்கு இட்டுச் செல்கி்னறன. விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலிப் பணத்தைச் சுருட்டியவர்களுக்கெதிராக நடந்த கூலி விவசாயிகளின் போராட்டங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிரான தருமபுரி, பெருந்துறை, வலையாபட்டி, புதுக்கோட்டை கும்மிடிபூண்டி சிப்காட் போன்ற பிற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களும், கோவையில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களும், ஆம்பூரில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும் நாளை நடைபெறவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.
பொதுவாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் வெவ்வேறான கொள்கையிருப்பதாய் சொன்னாலும், 'வோட்டுக் கட்சிகள்' அதன் இலக்கை அடைந்ததும் பொதுவான கொள்கையாக மேற்கூறிய கொள்கை மட்டும் கடைபிடிக்கின்றன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் காலங்களில் அத்தகைய கட்சிகள் கவர்ச்சியான சலுகைகளை, இலவசங்களை அறிவித்து பொருளாதார நெருக்கடிகளையும், வாழ்வாதார போராட்டங்களையும் மறக்க, மறைக்கச் செய்கின்றன.
எனவே வோட்டுக் கட்சிகளின் மக்களுக்கெதிரான, தவறான கொள்கைகளுக்கெதிராக தமிழக உழைக்கும் மக்களாகிய நாம் நம் நாட்டை வல்லாதிக்கத்தின் பிடியிலிருந்தும், அதற்குத் துணை நிற்கும் இந்திய - தமிழக ஆளும் வர்க்கங்களின் பிடியிலிருந்தும் எதிர்த்துப் போராடி மீட்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இலக்கு பணப் பேய்களை எதிர்த்து போராடி வெற்றி பெற கட்டாயப்படுத்தபட்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவாதவரை இத்தகைய 'கொள்கை'யாளர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- இரா.பாலன்
Thanks: ra.balan & www.keetru.com
Tuesday, April 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment