மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சூன் 8, 2006 அன்று சாகியா அஹ்சன் ஜாப்ரி, குஜராத்தின் அன்றைய காவல் துறை தலைவரான பி.சி. பாண்டேவுக்கு 119 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் மனுவை அனுப்பினார். இதில் நகை முரண் என்னவெனில், அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 29 ஆவது நபராக பி.சி. பாண்டேயின் பெயரும் இருந்தது. "நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' எனும் சட்ட உதவி அமைப்பு தனது செயலாளர் தீஸ்தா செடல்வாட் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆவணத்தை தயாரிக்க சாகியாவுக்கு சட்ட உதவிகளை வழங்கியது. இந்த ஆவணத்தைத் தயாரிக்க ஏறத்தாழ 5 மாதங்கள் ஆயின. காவல் துறை உதவித் தலைவர் மகாபத்ராவை, புகார் அளித்தவரை சந்திக்க காவல் துறை தலைவர் அனுப்பியது போன்ற சில சடங்குகள் நடந்தாலும், 2000 பக்கத்திற்கு மறுக்க இயலாத சான்றுகள் அளிக்கப்பட்டிருந்த அந்த ஆவணத்தில், புகாருக்கு வலு சேர்ப்பதற்கான எதையும் கண்டுபிடிக்க காவல் துறை தலைவரால் முடியவில்லை.
தெளிவான சட்ட வழிமுறைகள் இருந்த போதிலும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து குற்றங்களை விசாரிக்க குஜராத் காவல் துறை மறுத்து 8 மாதங்கள் கழித்து, மாநில காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவும் புகாரை விசாரிக்கவும் ஆணையிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் புகார்தாரரும், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' அமைப்பும் இணைந்து வழக்கு ஒன்றினை பதிவு செய்தனர். நடந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதால், சி.பி.அய். மூலம் சார்பற்ற ஒரு விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. செப்டம்பர் 2007இல் நடந்த விசாரணையின்போது குஜராத் அரசின் சார்பாக வாதிட்ட அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி, மனுதாரரின் வாதங்களை கடுமையாக மறுத்து வாதிட்டார்.
தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மனுதாரர்கள் ஒரு கூடுதல் மனுவை அளித்தனர். அக்டோபர் 25, 2007 அன்று வெளியிடப்பட்ட "தெகல்கா' வின் ஆபரேசன் சலங்க்' மூலம் வெளிக் கொணரப்பட்டவை குற்றச் சதி திட்டத்தின் பின்னணி குறித்த சட்டத்தை மீறிய ஒப்புதல் வாக்குமூலங்களாகக் கருதி அவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்த கூடுதல் மனு கேட்டுக் கொண்டது. நவம்பர் 2007 இல் குஜராத் உயர் நீதிமன்றம் முதல் மனு, கூடுதல் மனு இரண்டையுமே தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சில மாதங்கள் கழித்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததில், மார்ச் 3, 2008 அன்று இம்மனு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்றம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பதில் தருமாறு தாக்கீது அனுப்பியதோடு, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனை நீதிமன்றத்திற்கு துணை புரிய "அமிகஸ் க்யூரியாக' நியமித்தது. புகாரின் குறிப்பான தன்மை மற்றும் குற்றச்சாட்டுகளின் பெரும் எண்ணிக்கையை அங்கீகரித்ததோடு, உச்ச நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கூறியது : பெருமளவிலான ஆதாரங்கள் இருந்தும் காவல் துறை விசாரிக்க மறுத்தால், ஒரு குடிமகன் என்னதான் செய்ய இயலும்? அந்த குடிமகனுக்கு என்னதான் தீர்வு இருக்கிறது?
வழக்கமான நடைமுறை தாமதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏப்ரல் 27, 2009 அன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 26, 2008 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையின்படி சி.பி. அய்.யின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழு பிற 8 முக்கிய வழக்குகளை விசாரிப்பதோடு, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதி விசாரணையையும் மேற்பார்வையிடும் என ஆணையிட்டிருந்தது.
இந்தப் புகாரின் தகுதியையும் அதன்பின் இருக்கும் பெரும் உழைப்பையும் அங்கீகரித்த உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் உடனடியாக இந்த புகார்களை விசாரித்து மூன்று மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
புகாரில் குற்றம் சாட்டப்பட்ட 63 நபர்களில், 12 பேர் அரசியல்வாதிகள். அதிலும் 2006 இல் மாநில அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் நால்வர், முதல்வர் நரேந்திர மோடி (உள் துறை, போக்குவரத்து, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பொறுப்புகளை ஏற்றிருந்தார்), அமித் ஷா (உள்துறை இணை அமைச்சர்), இந்திர விஜய்சிங் கே. ஜடேஜா (சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்) மற்றும் பிரபாத் சிங் சவுகான் (பழங்குடியினர் மேம்பாட்டிற்கான இணை அமைச்சர்) ஆகியோர் அதிகாரத்திலும் பதவியிலும் தொடர்கின்றனர். 2007 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த அசோக் பட், தற்பொழுது மாநில சட்டமன்றத் தலைவராக இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மீதமுள்ளவர்களில், 3 பேர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்; 7 பேர் பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள்ளின் மாநிலப் பொறுப்பாளர்கள் (வி.எச்.பி.யின் அனைத்துலக பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன் தொகாடியாவும் இதில் அடக்கம்); 10 பேர் அய்.ஏ.எஸ். அதிகாரிகள், 28 பேர் அய்.பி.எஸ். அதிகாரிகள்.
புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 23ஆம் நபரான கேசவராம் காஷிராம் சாஸ்திரி, வி.எச்.பி.யின் குஜராத் பிரிவு முன்னாள் தலைவராகவும் மற்றும் அகமதாபாத்தின் பால்டியிலிருந்து, வெளிவந்த "விசுவ இந்து சமாச்சார்' இதழின் ஆசிரியராகவும் இருந்தவர். அவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் மார்ச் 2002இல் ரிடிப்டாட்.காம் இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் தேர்ந்தெடுத்த முறையில் சேதம் விளைவித்தமைக்காக மிகுந்த பெருமிதத்தோடு உரிமை கொண்டாடியிருந்தார்.
இந்தக் கட்டுரை அச்சேறும் தருணத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது போன்று விசாரணை நடப்பது இதுவே முதல் முறையாகும். சூன் 8, 2006 அன்று அளிக்கப்பட்ட புகாரில், விசாரணைக்கு உதவக்கூடிய சாட்சிகளின் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சாட்சிகள் அனைவரும் குஜராத்தின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள். நானாவதி-ஷா விசாரணைக் குழுவின் முன் காவல் அதிகாரிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் மனுக்கள் ஆகியவை முக்கிய ஆதாரங்களாக அளிக்கப்பட்டுள்ளன.
முதன்மைக் குற்றவாளி : நரேந்திர மோடி, குஜராத்தின் முதல்வர்.
பாரதிய ஜனதா கட்சியின் அவதூறு உற்பத்தியாளர்களுடன் இந்தியாவின் பெரும் ஊடகங்களின் மந்தமான புலனாய்வுத் திறனும் இணைந்து, தற்பொழுது சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்கும் புகாரில் முதலமைச்சர் நரேந்திர மோடி மீது எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டும் இல்லை என்ற பிம்பத்தை வளரச் செய்தன. இதைவிட உண்மைக்குப் புறம்பானது வேறு இருக்க முடியாது. மிக கவனமாக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலானது, நரேந்திர மோடி மீது நூற்றுக்கும் மேற்பட்ட நேரடியாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிறது.
முதன்மைக் குற்றச்சாட்டுகள் :
கோத்ரா நிகழ்வு குறித்து தவறான புரிதலை உருவாக்குதல். பிப்ரவரி 27, 2002 அரசியல் சட்டத்தின் வழி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் அரசினால் முழுமையான அங்கீகாரம் அளிக்கப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளை அரங்கேற்ற, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரசின் எஸ்-6 பெட்டியில் தீயினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், திரித்துப் பயன்படுத்தப்பட்டன.
கோத்ரா அமைந்துள்ள பஞ்ச்மகால் மாவட்டத்தின் நீதிபதியும் ஆட்சித் தலைவருமான ஜெயந்தி ரவி, ரயில் நிலையத்தில் நடந்தது ஒரு விபத்து என்று கூறினார். அதைப் போலவே அன்றைய பிரதமர் வாஜ்பாய், நிகழ்வு நடந்த அன்று மாலை 5 மணிக்கு நாடாளு மன்றத்திலேயே அந்த நிகழ்வு ஒரு விபத்து என்றே கூறினார். அன்று பிற்பகல் 2 மணிக்கு வி.எச்.பி.யைச் சேர்ந்த தனது நம்பிக்கைக்குரிய டாக்டர் ஜெய்தீப் படேல் போன்றவர்களுடன் கோத்ரா வந்து சேர்ந்த முதலமைச்சர் நரேந்திர மோடி வேறு மாதிரியாக முடிவெடுத்தார். அன்று இரவு 7.30 மணியளவில் அகில இந்திய வானொலியின் குஜராத்தி ஒலிபரப்பு ஒன்றில், கோத்ரா நிகழ்வு அய்.எஸ்.அய்.யால் இயக்கப்பட்ட (கோத்ரா முஸ்லிம்களால் நிறைவேற்றப்பட்ட) திட்டமிட்ட சதி என்றார். அதைத் தொடர்ந்த நாட்களில், மோடியின் குருவான எல்.கே. அத்வானியின் பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சகம், கோத்ரா நிகழ்விற்குப் பின்னால் ஒரு பெரும் சதி இருப்பதாக உலகை நம்ப வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது. இன்று வரை அப்படியான சதி ஒன்றும் கண்டறியவோ, நிரூபிக்கவோ படவில்லை.
மோடி அத்துடன் நிற்கவில்லை. எரிந்த அந்த ரயில் பெட்டி அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு மாவட்ட நீதிபதி ஜெயந்தி ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் எரிச்சலடைந்த மோடி அடுத்த செயலை செய்தார். எரிந்த உடல்கள் வி.எச்.பி.யின் அன்றைய மாநில பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உடல்களை ஒரு வாகனப் பேரணியாக அகமதாபாத் "சோலா' சமூக மருத்துவமனைக்கு எடுத்து வரவும் பணித்தார். அங்கு அந்த உடல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மறுநாள் பிப்ரவரி 28, 2002 அன்று காலை குஜராத்தி நாளிதழான "சந்தோஷ்' வெள்ளைத் துணியில் போர்த்தப்பட்ட எரிந்த உடல்களின் பெரிய வண்ணப்படத்தை ஏழு பத்திக்கு வெளியிட்டு, கொடூரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அந்தப் படத்தில் உடல்களின் அருகில் ஒரு சூலமும் தெரிந்தது. இதன் விளைவுகளைப் பற்றி எந்த அச்சமும் இன்றி உண்மையைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி மோடி தனது சூழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
படுகொலைகளைத் திட்டமிட நடைபெற்ற ரகசியக் கூட்டங்கள் :
பிப்ரவரி 27, 2002 காந்தி நகர், லூனா வாடா, கோத்ரா, பிப்ரவரி 27 அன்று பின்னிரவில் காந்தி நகரில் மோடி ஒரு ரகசியகூட்டத்திற்கு அழைத்திருந்தார். அக்கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் சிலரும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகள் போடப்பட்டன. காவல் துறையினரும் அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டனர்.
நீதியரசர்கள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.பி. சாவந்த் ஆகியோரை கொண்ட "அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம்-குஜராத் 2002' வெளியிட்ட அறிக்கையின்படி, “உடனடியாக ஓர் இந்து எதிர்வினை எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அது எவ்வகையிலும் தடுத்து நிறுத்தப்படவோ, அடக்கப்படவோ கூடாது என்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசு நிர்வாக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியும் அவருடன் குறைந்தது அவரது அமைச்சரவையின் மூன்று சகாக்களேனும் நேரடியாகப் பங்கு பெற்றனர்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நடந்த நிகழ்வுகளுக்கு இணையாக மோசமானது என்னவெனில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் உட்பட கிடைத்துள்ள சந்தேகத்திற்கு இடமில்லாத சான்றுகளின்படி, முதல்வர் ஒரு ரகசிய கூட்டத்திற்கு அழைத்திருந்தார் என்பதும், அக்கூட்டத்தில் அன்றைய தலைமைச் செயலாளர் சுப்பாராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயண் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள பணிக்கப்பட்டிருந்தனர் என்பதும், அக்கூட்டத்தில் “இந்து கலவரக்காரர்களை தடுக்க வேண்டாம்'' என்று வெளிப்படையாக உத்தரவிடப்பட்டதும் தெரிய வந்தது. ஆக, சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உட்பட அனைத்து கொடூர வன்முறைகளுக்கும் அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் வழங்கப்பட்டிருக்கிறது ("மனிதத்திற்கு எதிரான குற்றம்'-அக்கறையுள்ள குடிமக்கள் ஆயம், குஜராத் 2002 இன் அறிக்கை).
2002 மே மாதத்தில், மோடி அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் இந்த ஆயத்தின் முன் இது குறித்து சாட்சியம் அளித்திருக்கிறார். அவரது அடையாளம் மறைக்கப்பட்டிருந்தது. நவம்பர் 2002இல் ஆயத்தின் அறிக்கை வெளியானபோது, ஆய உறுப்பினர்களில் ஒருவர், அவ்வாறு சாட்சியம் அளித்தவர் ஹரன் பாண்டியா என்பதை "அவுட் லுக்' இதழில் வெளிப்படுத்தினார். சில மாதங்களிலேயே பாண்டியா கொல்லப்பட்டார்.
காவல் துறை கையகப்படுத்தும்
முதலமைச்சரின் அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களான அசோக் பட் (புகாரில் 2ஆவது குற்வாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்), இந்திர விஜய் சிங் கே ஜடேஜா (புகாரில் 3ஆவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்) ஆகியோர் காவல் துறையை தங்கள் விருப்பப்படி செயல்பட வைக்க எடுத்த சட்ட விரோத முயற்சிகள். முதலமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் தீட்டிய ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதி. அமைச்சர்கள் எவ்வாறு காந்தி நகர் மற்றும் ஷாஹிபாக்கில் காவல் துறை கட்டுப்பாட்டு அறையிலேயே அமர்ந்திருந்து காவல் துறை சட்டங்களையும் மரபுகளையும் உடைத்து, காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் இறங்காமல் பார்த்துக் கொண்டனர் என்பது குறித்தும், அதோடு பல நேரங்களில் குற்றத்திற்கு உடந்தையாகவும் சாட்சியங்களை அளிக்கவும் உத்தரவிட்டனர் என்பது குறித்து அக்காலக் கட்டத்தில் ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தன.
2002 முதல் 2007 வரை சட்ட அமைச்சராக இருந்த பட் இன்று சட்ட மன்றத் தலைவராக இருக்கிறார். குஜராத்தின் சட்ட மற்றும் நீதித்துறையின் ஒட்டுமொத்த தலைவர் என்ற முறையில் 2007 வரை அரசு வழக்குரைஞர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் அவர் பெற்றிருந்தார். பிப்ரவரி 27 கூட்டம் குறித்தும், அகமதாபாத் நகரம் மற்றும் குஜராத் மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைகளில் அமைச்சர்கள் அமர்ந்து, காவல் துறையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்திய சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன.
மோடியின் "பழிக்குப் பழி”
பிப்ரவரி 28, 2002 நரோதாவில் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் "தெகல்கா' வெளியிட்ட ஒலிப்பதிவுகளில் உள்ளது. நரோதாவில் 112 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டு வெகு நேரம் ஆவதற்குள் மோடி அங்கு வந்ததாகவும், தனது கறுப்புப் பூனை கமாண்டோக்கள் சுற்றியிருந்த நிலையிலும் கூட அக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவர் மனதாரப் பாராட்டியதாகவும் அந்த ஒலிப்பதிவில் அவர் குறிப்பிடுகிறார் (இதன் மூலம் மோடியின் கறுப்புப் பூனை கமாண்டோக்களும் இந்நிகழ்விற்கு சாட்சிகளாகின்றனர்).
"ஆபரேசன் கலங்க்' "தெகல்கா'வால் பல மாதங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு அக்டோபர் 2007இல் வெளியிடப்பட்டது. 2002 குஜராத் இனப்படுகொலைகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த பலரது வாக்குமூலங்களும், உரையாடல்களும் கொண்ட ஒலிப்பதிவுகளை தற்போது சி.பி.அய். நீதிமன்றத்திற்கு வெளியே பெறப்பட்ட வாக்குமூலங்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த உரையாடல்களின் உள்ளடக்கங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் பல செய்திகளை அளிப்பனவாகவும் உள்ளன. கும்பல் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றை அச்சமின்றி வெளிப்படையாக ஒப்புக் கொள்வதோடு, பிப்ரவரி 27, 2002க்கு பல வாரங்களுக்கு முன்பாகவே கோத்ரா மற்றும் கோத்ராவிற்குப் பிந்தைய வன்முறைகளுக்கான திட்டமிடுதல்களும், பிற மாநிலங்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விளக்குகின்றனர்.
அதோடு கும்பல் கொலைகள் மற்றும் வன்புணர்ச்சிகளைத் தூண்டி விடுவதில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இருந்த நேரடி பங்கையும் விவரிக்கின்றன "தெகல்கா' ஒலிப்பதிவுகள் மூலம் வெளிப்பட்டவற்றின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இந்த ஒலிப்பதிவுகளின் நம்பகத்தன்மை குறித்து ஆராய வேண்டும். "தெகல்கா' பதிவில் பேசிய அனைவரையும், தங்கள் உரையாடலில் அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் (அவர்கள் எவ்வளவு அதிகாரம் கொண்ட பதவிகளில் இருந்த போதிலும்) சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கணக்கு அலுவலகத்தில் பணிபுரிந்த வதோதரா என்பவருடன் இப்படியான ஓர்உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் மோடி மற்றும் மோடியின் கையாளான பாபு பஜ்ரங்கியின் நேரடி உத்தரவுகள் குறித்து அவர் சொல்கிறார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி சென்றது, கொடூரமாக பாதிக்கப்பட்டு சிதைந்து போய் அருகிலுள்ள புனரமைப்பு முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை காண அல்ல; இந்த உரையாடல்களின் மூலம் அவர் கொடூரத்தின் வெற்றி நாயகனாகவே அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது. - அடுத்த இதழிலும்
“கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து கிரிக்கெட் விளையாடினோம்''
மோடி நடத்திய ஆவணப்படுத்தப்படாத ரகசியக் கூட்டங்கள் :
பிப்ரவரி 27, 2002 அன்று முதலமைச்சர் மோடியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட ரகசியக் கூட்டத்திற்கு கூட்டக் குறிப்புகளோ அல்லது வேறு ஆவணங்களோ இல்லாதது மட்டுமல்ல; இதே போன்ற பல கூட்டங்கள் உயர் அதிகாரிகளால் நடத்தப்பட்டு, அவர்களுக்கு கீழிருக்கும் அதிகாரிகள் அதில் கலந்து கொண்டுள்ளனர் என்பதோடு, அந்தக் கூட்டங்களுக்கும் எவ்வித ஆவணமும் பராமரிக்கப்படவில்லை.
அன்று காவல் துறை கண்காணிப்பாளர் (பாதுகாப்பு) பதவி வகித்த சஞ்சீவ் பட், இம்மாதிரியான பல கூட்டங்களில் காவல் துறை கூடுதல் தலைவரான ஜி.சி. ரெய்கரின் ஊழியர் அதிகாரியாக கலந்து கொண்டுள்ளார். ஆனால் தனக்கு இடப்பட்ட உத்தரவுகள் குறித்து எவ்வித ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை.
கே. என். ஷர்மா, அகமதாபாத் பகுதி காவல் துறை அய்.ஜி. பதவி வகித்த இவரது பகுதியில்தான், அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தனர். இவரும் இத்தகைய சட்ட விரோதமான கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
தீபக் ஸ்வரூப், வதோரா பகுதி காவல் துறை அய்.ஜி. இவர் பதவி வகித்த பகுதியில்தான் கோத்ரா நிகழ்வு நடந்தது. அதோடு, சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் மற்றும் பிற வன்கொடுமைகளையும் நடத்தியிருக்கின்றன. இவரும் இக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.
எம்.கே. டாண்டன், அகமதாபாத் உதவி ஆணையர். இவரது பகுதியில்தான் நரோதா பாட்டியா, குல்பர்கா சமூகம் உள்ளிட்ட பல கொடூர கும்பல் கொலைகள் நடந்துள்ளன. இவர் உயர் மட்ட வலைப் பின்னலின் பகுதியாக இருந்திருக்கிறார்.
குல்பர்கா தாக்குதலில் தப்பியவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு தப்பியோடிய போதும், கொல்லப்பட்ட 70 பேரின் உடல்கள் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்த போது அவர் அந்த இடத்தில் இருந்திருக்கிறார். 3 நாட்களுக்குப் பிறகு, குல்பர்க் மற்றும் நரோதாவில் கொல்லப்பட்ட 133 உடல்கள் மொத்தமாக புதைக்கப்பட்ட போது உடல்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தன. "தெகல்கா' விடம் உரையாடும்போது குல்பர்க் சமூக படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதன் சவால், கொல்லப்பட்டவர்களின் தலையை வைத்து தான் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பிடுகிறார், விடை தெரியாத கேள்வி என்னவென்றால் அந்த உடல்களைத் துண்டாடியதில் டாண்டனும் பங்கேற்றாரா என்பதே.
அமிதாப் பதக், காந்தி நகர் பகுதி அய்.ஜி. இவரது பகுதியில்தான் கோத்ராவிற்கு பிந்தைய கலவரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, மெஹ்சானா மாவட்டம் சர்தார்புரா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் பல இடங்கள். இவரும் இச்சதியில் பங்கு பெற்றிருந்தார்.
ஷவானந்த் ஜா, அகமதாபாத் காவல் துறை கூடுதல் ஆணையர். இவரது பகுதியில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. இவர் முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர். 2004-2006க்கு இடைப்பட்ட காலத்தில் உள்துறைச் செயலாளராக, அரசு சார்பாக பல தவறான அறிக்கைகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்தார். தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர் என்பது நகை முரண்.
டி.டி. துதேஜா, வதோரா பகுதி காவல் துறை ஆணையர். ஏறத்தாழ 37க்கும் மேற்பட்ட வன்முறை நிகழ்வுகள் இவரது பகுதியில் நடந்துள்ளன. இதில் பெஸ்ட் பேக்கரி நிகழ்வும் அடங்கும்.
நன்றி : ‘கம்யூனலிசம் காம்பட்' தீஸ்தா செடல்வாட்
நன்றி : தமிழில் : பூங்குழலி
நவீன அறிவியலின் வழிமுறைகள்
10 hours ago