இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.
லீனா மணிமேகலைலீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.
பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.
ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.
மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.
அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?
இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?
குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.
பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?
சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?
leenamanimekalai‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?
இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.
கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.
நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.
உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.
ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.
பெண்ணியப் படைப்பு என்னவென்பதை முன்னோடிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. நல்ல படைப்புகளைத் தாருங்கள்! வாழ்த்துக்கள்!!
Thanks:- மினர்வா ( minerva@keetru.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment