கச்சத்தீவு... நம்மில் பலருக்கும் இது ஒரு சர்ச்சைக்குரிய தீவாகவே காட்சியளிக்கிறது. ஆம் இங்கு மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை இலங்கை ரானுவம்(கடற்படை) ஏதோ குருவிகளை Fishermenசுட்டுத்தள்ளுவதைப் போல சுட்டுத்தள்ளுவதும், பிடித்துப்(கடத்தி) போய் சிறையிலடைப்பதுமாய் தனது சேட்டைகளை அரங்கேற்றி வருகிறது. நாளுக்குநாள் தனது வன்முறை எல்லையை விரித்துக் கொண்டே போகிறது. பாவம் தமிழக மீனவனை காப்பாற்றத் தெரியாமல் ஏதோ சர்வதேச பாதுகாப்பில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டு கடல் பகுதியில் சிங்கள ராணுவத்தால் பறிபோகும் தமிழனின் உயிரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன மாட்சிமை தங்கிய இந்திய கடலோரக்காவல்படையும், கப்பல் படையும்.
தொடர்ந்து சிங்கள ராணுவத்தால் குண்டடிபட்டு பலியாகிக் கொண்டிருக்கும் இந்திய(தமிழக) மீனவனை இந்திய அரசாலோ, இந்தியக் கடற்படையாலோ காப்பாற்றிட முடியுமா? என்ற கேள்வி மட்டும் மீனவர்களிடம் இன்றளவும் லட்சக்கணக்கில் உள்ளன. ஆனால் அவர்களின் கேள்விக்கு பதில் தான் இல்லை இந்திய அரசிடமிருந்து. இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆயிரம் மீனவர்களை ஒரே நேரத்தில் பிடித்துச் சென்று விசாரணை என்ற பெயரில் முடிந்தளவிற்கு கொடுமைப்படுத்திவிட்டு பிறகு விடுவித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. .
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே கடல் எல்லை வரையறை செய்யப்பட்ட பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கத் துவங்கியுள்ளது. 1974 ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்திற்கு முன்னர் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையே எந்தவிதமான பிரச்சனையும் ஏற்பட்டதே இல்லை. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் கடல் எல்லை வரையறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதே நேரம் இருநாட்டு மீனவர்களும் எந்தவிதமான பிணக்குமின்றி மீன்களை பிடித்து வந்துள்ள வரலாறும் உண்டு. அதே நேரம் ஒப்பந்தத்திற்கு பிறகு மீன் பிடிப்பதில் நிலைமைகள் மாறியுள்ளது.
1974ம் வருடத்திய ஒப்பந்தம் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்வதையோ, கடற்பகுதியில் மீன் பிடிப்பதையோ, மாதா கோவிலுக்கு செல்வதையோ, மீன் பிடிக்கும் போது ஓய்வு எடுத்து வலைகளை உலர்த்துவதையோ தடுக்காததால் சக்கத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்திய மக்களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. நிம்மதியாக தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கையில் 1983 ம் ஆண்டுக்கு பிறகு புலிகளுடன் மோதல் ஏற்பட்டதையடுத்து தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் என்பது தொடங்கியுள்ளது.
ஒரே நேரத்தில் இந்திய, இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்கள் என்பது தொடரத் தொடங்கியுள்ளது. புலிகளைக் காரணம் காட்டியே பல நேரங்களில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளனர் இலங்கை கடற்படையினர். அதே நேரம் இலங்கையில் இருதரப்பினருக்கும் இடையே சண்டை நிறுத்தம் இருந்த காலங்களில் கூட தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் மட்டும் தொடர்ந்துள்ளன. ஆனால் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தான் அதிகளவில் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் பலமுறை நடந்த நிலையிலும் தமிழக சட்டசபையில் பல நேரங்களில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இலங்கை அரசு மட்டும் செவிசாய்த்தபாடில்லை.
2006 ம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் அப்பாத்துரை இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது உண்மையெனில் மீனவர்களைக் காக்க, மீன் பிடி உரிமையை நிலைநிறுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் இ.அகமது 1974ம் வருட ஒப்பந்த கடல் எல்லைபடியும், 1976 ம் வருடத்திய இரு நாடுகளும் பரிமாறிக் கொண்ட கடிதங்களின் படியும் இலங்கைக்கு சொந்தமான கடற்பகுதியலும், வரலாற்று ரீதியிலான மீன் பிடி உரிமையுள்ள பகுதிகளிலும் இந்திய மீனவர்களோ, மீன் பிடி கப்பல்களோ, சென்று மீன் பிடிக்கக் கூடாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.
அதே நேரம் மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி 1974 மற்றும் 1976 ஆண்டு ஒப்பந்தங்களின்படி எல்லைக்கோட்டில் இலங்கைப் பகுதியில் தான் கச்சத்தீவு உள்ளது. ஒப்பந்தங்களும் நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் கச்சத்தீவிற்கு செல்லும் உரிமை என்பது அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடியதல்ல என்று குழப்பியுள்ளார். இப்படி தமிழக மீனவர்களின் நலன் இலங்கையிடம் இறையாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தெளிவில்லாத நிலைப்பாட்டின் காரணமாக நமது மீனவர்கள் மீது இலங்கையின் Fishermen2கொலைவெறித் தாக்குதல்கள் என்பது தொடர்கிறது. இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்ததால் தான் சுட்டோம் என்று ஓலமிட்டுக் கொண்டும் வருகின்றனர். பாக் நீரினைப் பகுதியில் காவல் காக்கும் மூன்று கடலோரக் காவல்படை கப்பல்களும். இந்தியக் கப்பல்படையின் போர்க்கப்பலும் ஏன் தமிழக மீனவர்களின் பக்கம் திரும்பவில்லை என்ற கேள்வியும் தற்போது எழத் தொடங்கியள்ளது. புலிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவாமல் தடுக்க்க் காவல் காத்து வருகிறோம் என்று கூறுபவர்கள் ஏன் இலங்கை படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்கவில்லை? புலிகளை தடுப்பது மட்டுமே தங்களின் பணி என்று அவர்கள் உள்ளனரோ?.
தற்போது அன்றாடம் தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொலை, கடத்தல், மாயம் என்பது தமிழகம் மட்டுமின்றி சர்வதேச பத்திரிகைகள் அனைத்திலும் தொடர் பார்வையாக மாறிவிட்டது. அதே நேரம் கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் முழங்கத் தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாக்கக் கோரியும், கச்சத்தீவை திரும்பப் பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து.ராஜா நாடாளுமன்றத்தில் உரத்தக் குரலில் பேசியுள்ளார், அவர் சார்ந்த இயக்கமோ தமிழகத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கங்களை நடத்தியதுடன் அண்மையில் சென்னையிலுள்ள இலங்கை துனைத் தூதரகத்தின் முன் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி கைதாகியுள்ளனர்.
தி.மு.க.வினரோ தமிழகம் முழுவதும் உண்ணாவிரதத்தை நடத்திய நிலையில் அதன் தலைவர் மு.கருணாநிதியோ கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அ.தி.மு.க தலைவி ஜெ.ஜெயலலிதாவோ கச்சத்தீவ ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார். ஆக தமிழக அரசியலார்கள் அனைவரும் கிட்டத்தட்ட கச்சத்தீவு பிரச்சனையில் தனித்தனியாக நின்றாலும் ஓரணியிலேயே உள்ளனர்.
கச்சத்தீவு விவகாரத்திலும், தமிழக மீனவர்கள் விசயத்திலும் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு இனிமேலாவது விழிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நமது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். 1974 ம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கேவுக்கும் இடையே எற்படுத்தப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்றும், ஒப்புதல் பெற்றாகிவிட்டது என்றும் இருவேறு விதமான கருத்துக்கள் உலவுவரும் நிலையில் பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து போர்பாணி யூனியனையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பான இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் எந்தவொரு பகுதியையும், மற்ற நாட்டிடம் வழங்க அரசியல் சட்டத்தின் 368 வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்படி கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுளதா என்பதை தற்போதைய மத்திய அரசு ஆய்வு செய்து இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே முறையான ஒப்புதல் பெற்றிருந்தாலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதிலும் தவறேதும் இல்லை. எனவே மத்திய அரசு அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தமிழக மீனவர்களை காப்பதிலும், நமககுள்ள உரிமையை நிலைநாட்டுவதிலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை மட்டும் அனைத்து தரப்பினரும் உணரவேண்டும்.
Thanks: - மு.ஆனந்தகுமார் ( anandhammu@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment