Tuesday, May 11, 2010

சிறப்புக் கொள்ளையடிக்கும் மண்டலங்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த ஒரு புள்ளிவிவரப்படி, 2005-08 வரையிலான மூன்று ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் தமிழகத்தில் இட்ட முதலீடு ரூ. 338 கோடி. ஆனால் தமிழக அரசிடம் இருந்து நோக்கியா பெற்ற வரிச் சலுகை ரூ. 638 கோடி ரூபாய்க்கு மேல். சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் தமிழகத்துக்குக் கிடைத்த லாபம் (!) இதுதான்.

'இந்தியா' என்ற கருத்தாக்கத்தை ஆங்கிலேயன் உண்டாக்கினான். அதற்கு முன்பு 56 தனிநாடுகளாக இருந்தன. வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயன் படிப்படியாக அடிமைப்படுத்தி, ஆள வசதியாக 56 தனிநாடுகளை ஒன்றாக்கினான்; 'இந்தியா' என்றான். "இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதலும் முதன்மையுமான செய்தி என்னவென்றால் இந்தியா என்ற ஒரு நாடு இப்போதும் இல்லை; அது எப்போதும் இருந்தது இல்லை. ஐரோப்பிய எண்ணங்களின்படி அரசியல், சமுதாய, மத ஒற்றுமை கொண்டதாகச் சொல்லப்படுகின்ற இந்தியா என்று எந்த நாடும் கிடையாது; நாம் அதிகமாகக் கேள்விப்படுகிற இந்தியா என்ற நாடும், இந்தியாவின் மக்கள் என்பவர்களும் நடப்பில் இல்லாத ஒரு விஷயமே ஆகும்" என்கிறார் சர் ஜான் ஸ்டிராச்சி. இதே கருத்துப்பட பல அரசியலறிஞர்கள் பல்வேறு நூல்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

காலனி ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை நேரடியாக அடிமைப்படுத்தி ஆண்டன. இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது. ஆனால், இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை ஆட்சி செய்கின்றன. மறைமுகமான ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்காக காட் அமைப்பு 1995இல் உலக வணிக அமைப்பாக மாற்றப்பட்டு, வளரும் நாடுகளின் மீது ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இன்று உலகில் முதன்மையாக உள்ள 200 பன்னாட்டு நிறுவனங்களில் 83 அமெரிக்காவில் உள்ளன. ஆக, உலக வணிக அமைப்பு எனும் போர்வையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகியவற்றின் மீது ஆளுமை செலுத்தி வருகின்றன.

காட் ஒப்பந்தப்படி அரசுகள் தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை, சந்தையை மாற்றியமைக்க வேண்டும். தனியார்மயமாக்கல் என்பது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அரசுத் துறைகளை, பொதுத் துறைகளைத் தனியார்முதலாளிகள் வசம் ஒப்படைக்க வைப்பதாகும். தாராளமயமாக்கல் என்பது ஒப்பந்தங்களில் கையழுத்திட்ட நாடுகளில் எவ்வகைத் தடையும் இன்றி பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களைத் தாராளமாகக் கொட்டி விற்பனை செய்வதாகும். உலகமயமாக்கல் என்பது தனியார்மயமாக்கப்பட்ட தாராளமயச் சந்தையை உலகம் முழுக்க விரித்துச் செல்வதாகும். இந்த உலகமயமாக்கல் என்பது முதலாளித்துவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த மிகப்பெரிய தந்திரம்.

உலகமயப் பொருளாதாரத்தின் ஒரு கூறே சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. 1986களில் இந்தியா தொழில் துறைக்கு புதிய வேகமளிக்கும் வகையிலும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் எண்ணத்துடனும் ஏற்றுமதிச் செயல்பாட்டு மண்டலங்கள் (Export Processing Zones) ஏற்படுத்தப்பட்டன. இதன்மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காத காரணத்தால் அதிலிருந்து மீள, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உருவாக்கப்பட்டத் திட்டமே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். பகுத்தறிவு, மத எதிர்ப்பு பேசிய கும்பல் பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்று, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வணிக அமைச்சராக இருந்த மறைந்த முரசொலி மாறனால் 01-4-2000ல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து முன்மொழியப்பட்டது. அதுவரை செயற்பட்டு வந்த ஏற்றுமதிச் செயற்பாட்டு மண்டலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டன. 10-05-2005 அன்று நாடாளுமன்ற ஒப்புதலும், 2006ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்ட நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டன.

சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் (சி.பொ.ம.சட்டம்) - 2005இன் சுருக்கம்:

இந்தியாவிலுள்ள இந்திய நிறுவனங்கள் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்துக் கொள்ளலாம். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் தன்சான்று (Self Certification) அடிப்படையில் ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொள்ளலாம். அரசின் இசைவு பெறத் தேவையில்லை. எந்த இசைவும் பெறாமல் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெளிநாட்டு முதலீடு பெறலாம். இம்மண்டலத்தில் செயற்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 250 கோடி வரை வெளிநாட்டு வணிக வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அரசின் இசைவு தேவையில்லை. பல பொருள்களை உருவாக்கும் (Multi Product Zone) சிறப்புப் பொருளாதார மண்டலம் இருப்பின் குறைந்த அளவு 2,500 குறுக்கப் ((Acre) பரப்பில் அமைய வேண்டும். 3,500 குறுக்கம் வரை ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குக் கையகப்படுத்தலாம். சிறப்புக் காரணங்களுக்காக வரம்பற்ற பரப்பளவிலும் இம்மண்டலங்கள் அமைக்கலாம். வேளாண் நிலம் உள்ளிட்ட எந்த நிலமானாலும் கையகப்படுத்திக் கொள்ள இந்திய அரசு - மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

மண்டலங்களை நிறுவும் அல்லது அதில் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100%, அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு வழங்கப்படும். இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை. உற்பத்தி வரி, இறக்குமதி வரி கிடையாது; மத்திய விற்பனை வரியோ சேவை வரியோ கிடையாது. மற்ற இறக்குமதிப் பொருள்களைப் போல் இம்மண்டலத்திற்கு இறக்குமதியாகும் பொருள்கள் சுங்க ஆய்வுக்கு உட்படுத்தப்படாது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தயாரிப்புப் பணி நடைபெறாத பரப்பு மொத்தப் பரப்பளவில் 75% வரை இருக்கலாம். இங்குள்ள குடியிருப்பு, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கிடங்கள், குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து ஆகிய கட்டுமானப் பணிகளுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முழு வருமான வரிவிலக்கு உண்டு. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம்; அவர்களுக்கு பணிநிலைப்போ பிற சட்ட உரிமைகளோ இல்லை; பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை 24 மணி நேரமும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என மேலும் பல அதிகாரங்கள், சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள வணிகர்கள் அரசிடம் வரிச்சலுகைகளைக் கேட்டுப் போராடியும் கிடைக்காத நிலையில், எங்கிருந்தோ வந்து நாட்டைச் சுரண்டிக் கொழுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிவிலக்குகளை வாரி வழங்குவது என்ன ஞாயம்?

தொழிலாளர் நிலை

இம்மண்டலங்களில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமையில்லாததால் 8 மணி நேரத்திற்கு மேலும் வேலை வாங்குவதும் விரும்பினால் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதும், மிகக் குறைந்த ஊதியம் அளிப்பதும் நடக்கிறது. ஐ.நா.வின் உலகத் தொழிலாளர் அமைப்பு உலகம் முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உழைப்புச் சுரண்டலை ஈவிரக்கமின்றிக் கடுமையாக நடைமுறைப்படுத்துகின்றன என்றும் அதனால் பல தொழிலாளர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.

உலகமயமாக்கலால், புதிய தொழில்நுட்பத்தால் தொழிலாளர்கள் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு உட்படுகின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து, போலந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உலகத் தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் பத்தில் ஒருவருக்கு மனஉளைச்சல் நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது தெரிகிறது. இதை வலியுறுத்தி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிவுரை வழங்கியும் இந்தியா காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ரூ. 50 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்தவொரு தொழிலுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environment Impact Assessment Notification) தயாரிக்க வேண்டும். வளங்குன்றா வளர்ச்சிக்குப் பொருத்தமான வகையில் இயற்கை வளங்களைக் கையாளுவதை முறைப்படுத்தவே 1986இன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி 29 வகையான தொழில்களை உள்ளடக்கி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இவை மட்டுமன்றி குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மூலதனமிடப்படும் தொழில்களுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (1994) தயாரிக்க வேண்டும் என்று 1997 ஏப்ரல் 10இல் திருத்தப்பட்டது. பட்டியலில் உள்ள 29 வகை தொழில்களுக்கும் பொது விசாரணை நடத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இப்படி இருக்கையில், பல கோடிகளுக்கு மேல் முதலீடு செய்யப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை தேவையில்லை என்று மத்திய அரசு தளர்த்தியுள்ளது வெட்கக்கேடானது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. "நிலம் என்பது அரசமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆயினும், தொழில்வளர்ச்சி கருதி இந்தியாவின் எந்த இடத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் இறையாண்மையுள்ள உரிமை இந்திய அரசுக்கு உண்டு" என சி.பொ.ம சட்டம் கூறுகின்றது. இது அடிப்படையில் மாநில அரசுகளுக்கு எதிரானது.

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் 63, கர்நாடகாவில் 36, அரியானாவில் 34, ஆந்திராவில் 29, தமிழ்நாட்டில் 27, குஜராத்தில் 20, உ.பி.யில் 9, பஞ்சாபில் 7 என 225 மண்டலங்கள் தொடங்கப்படவுள்ளன. இவை 367 ஆக உயர்த்தப்பட்டு 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 18 மாதங்களில் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 237 மண்டலங்களுக்கு இசைவளிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கானக் குறுக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒவ்வொன்றுக்கும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு வளர்ச்சி ஆணையர் உண்டு. அவரது உத்தரவின்றி உள்ளே யாரும் உள்ளே செல்ல முடியாது. மாநில அரசு அதிகாரிகள்கூட செல்ல முடியாது. ஆக, ஒவ்வொரு மண்டலமும் மாநில அரசுக்குக் கட்டுப்படாத தன்னாட்சிப் பகுதிகள்தான். ஆனால், இதை "சுதந்திர வர்த்தக மண்டலம்" என்கிறது இந்திய அரசு. உண்மைதான்! சுரண்டிக் கொழுக்கும் இந்திய முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் இந்த மண்டலங்கள் "சுதந்திர வர்த்தக மண்டலங்கள்"தான்.

கடந்த சூலை 2006 வரை 67 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு தந்த சலுகைகளால் உண்டான இழப்பு ரூ. 1,75,000 கோடி என சர்வதேச நிதி நிறுவனம் கூறியுள்ளது. முன்பு செயல்பட்டு வந்த 28 மண்டலங்களால் மட்டும் ரூ. 90,000 கோடி இழப்பு என இந்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. "ஒரு லட்சம் கோடி மூலதனத்தைப் பெற ரூ. 90,000 கோடி வருவான வரியை இழக்க வேண்டுமா?" என நிதியமைச்சகம் அரசிடம் வினா எழுப்பியுள்ளது. 1998இல் தலைமைத் தணிக்கை அறிக்கை கூறியதாவது : "ஏற்றுமதி மண்டலங்கள் பெற்ற சலுகையால் சுங்கவரி இழப்பு ரூ. 7,500 கோடி உருவானது. நமக்கு வந்த வெளிநாட்டுச் செலாவணியோ ரூ. 4,700 கோடி மட்டுமே".

மற்ற மாநிலங்களில்...

டெல்லி அரசு ரிலையன்சு நிறுவன மின்திட்டத்திற்காக 25,000 குறுக்க வேளாண்நிலத்தை உழவர்களிடமிருந்து பறித்து அம்பானிக்கு வழங்கியுள்ளது. ஒரிசாவில் தென்கொரிய போஸ்கோ நிறுவனம் அமைக்கவுள்ள பலநோக்குச் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 1,601 குறுக்க நிலத்தை அரசு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.பொ.ம. எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்கள் மீது, அரசே "சல்வா ஜீடும்" எனும் ஆயுதமேந்திய குண்டர்படை துணையுடன் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு வங்கம் நந்திகிராமில் 14,500 குறுக்க வேளாண்நிலங்களையும் சிங்கூரில் 999.1 குறுக்க வேளாண் நிலங்களையும் கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கும் இந்தோனேசியவைச் சார்ந்த சலீம் குழு நிறுவனத்திற்கும் வழங்க முயற்சித்ததை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் நடந்தன. 06.01.2007 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உழவர்கள் சிலர் கொல்லப்பட்டனர்; பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; பலர் அடித்து நொறுக்கப்பட்டனர். நவம்பர் 2007இல் நந்திகிராம் பகுதியில் உண்மை நிலையை அறியச் சென்ற நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவி மேதா பட்கர் தாக்கப்பட்டார். புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் சுமித் சர்க்கார், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தன், இதழாளர் பிரஃபுல் பித்வாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுத்துறையினர் நவம்பர் 13இல் "மேற்கு வங்க அரசை வன்மையாகக் கண்டித்து நந்தி கிராம் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் என்றும் இருப்போம்" என்று அறிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில்...

தமிழகத்தில் 27 இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய உழவர்களிடமிருந்து வேளாண் நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது "தகவல் தொழில்நுட்பப் பூங்கா" என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஜெயங்கொண்டத்தில் மின் உருவாக்கத் திட்டம் உட்பட நாங்குநேரி, ஓசூர், மதுரை உட்படப் பல்வேறு இடங்களில் உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறிக்கும் வேலையை தமிழக அரசு செய்து வருகிறது. மதுரை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சின்ன உடைப்பு, பரம்புப்பட்டி, வளையங்குளம், வளையப்பட்டி, சோளங்குருணி ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் நடந்தேறி வருகிறது. இப்பகுதிகளில் சகாரா நிறுவனம் பல ஆயிரம் குறுக்க நிலங்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி வைத்துள்ளது. சிறீபெரும்புதூருக்கு அருகே நோக்கியா கைபேசி குழுமத்திற்காகச் சிறப்புப் பொருளியல் மண்டலம் அமைத்துத்தர தி.மு.க. அரசு முடிவெடுத்து அதற்குரிய வேலைகள் நடந்து வருகின்றன.

சென்னை - எண்ணூர் 2,500 குறுக்கம், ஓசூர் 3,600 குறுக்கம் மற்றும் நாங்குநேரி, துரைப்பாக்கம், கோவை என தமிழகத்தின் பிறபகுதிகளிலும் இதே வேலை நடைபெறுகிறது. ஆக, 11,000 குறுக்க விளைநிலங்களைப் பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்க உள்ளது தமிழக அரசு. 27 தனித்தனித் தன்னாட்சிப் பகுதிகள் உருவாகின்றன என்பதே இதன் பொருள். இந்த இடங்களில் தமிழக அரசின் அதிகாரம் செல்லாது.

தெலுங்கானா பிரிவினை குறித்துப் பேசும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு, தமிழகத்தில் ஏற்கனவே 27 தன்னாட்சிப் பகுதிகள் உருவாகி வருகின்றன என்பது தெரியாதா? அங்கு தமிழக அரசின் எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது என்பதும் தெரியாதா? மாநிலத் சுயாட்சி கேட்கும் இவர், இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் புகழ்மிக்க ஊசுட்டேரின் வடபுறத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கரசூர், சேதராப்பட்டு, துத்திப்பட்டு ஊர்களில் உள்ள வேளாண் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண் தொழில் அடியோடு ஒழிந்துபோகும், ஊசுட்டேரிக்கு நீர்வரத்து குறைந்து போகும். மேலும், துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையில் தேங்காய்த்திட்டு மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். இங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் புதுச்சேரி அரசு செய்யும் எனக் கூறியுள்ளது. இம்மண்டலத்திற்காகவே இப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டமாநத்தம் எனும் ஊரில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் பல தொழிற்பேட்டைகள் நலிந்து வருகையில், "வளர்ச்சி" என்ற பெயரில் நல்ல விளைச்சல் தரும் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பது மேலும் சீரழிவையே கொண்டுவரும். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு சுற்றுச்சூழல் - பொதுநல அமைப்புகள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றன. புதுச்சேரி அரசுக்கு நிதிநெருக்கடி எற்பட்டுள்ளதால் தற்போதைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கெல்லாம் நேர்மாறாக சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. சீனாவில் நிலத்தைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே தனியார் முதலாளிகளுக்கு மாற்றித் தரப்படுகிறது. நிலம் அரசிடமே இருக்கும். தொழிற்சாலைகளுக்கு மட்டுமே சீனாவில் நிலம் ஒதுக்கப்படுகையில் இந்தியாவில் தங்கும் விடுதி, வணிகவளாகம், பெரிய உணவு விடுதி, மீதமுள்ள நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்றல் ஆகியவற்றுக்கு இசைவு அளிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க விளைநிலங்களை பயன்படுத்த சீன அரசு தடைவிதித்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

இந்தியத் தொழிற்சாலைகளை மூடச் செய்கிறது.

பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் துணை போகிறது.

விளைச்சல் தரும் வேளாண் நிலத்தையும் கையகப்படுத்துகிறது.

மண்ணின் மைந்தர்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டுகிறது.

நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, வறுமையை அதிகரிக்கச் செய்கிறது.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கிறது.

சுற்றுச்சூழலைச் சீரழிக்கிறது. அந்நியச் செலவாணியை மந்தமாக்கி உள்ளது.

நாட்டை மீண்டும் அடிமைப்படுத்தத் துணை போகிறது. இதனால்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்கிறோம். இவற்றை சிறப்புப் கொள்ளையடிக்கும் மண்டலங்கள் என்பதே சரியாக இருக்கும்.

நன்றி :

சூழல் இதழ் எண்கள் 98, 99/2006, இதழ்கள்/பூவுலகின் நண்பர்கள் புதுச்சேரி, சிறப்புப் பொருளாதார மண்டலம் (தொகுப்பு - அ.சி. சின்னப்பத் தமிழர்)/ சவால்களை முறியடிக்கத் தமிழ்த்தேசியமே - கி. வெங்கட்ராமன், சிந்தனையாளன் பொங்கல் மலர் 2007/ க. முகிலன் கட்டுரை
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Thanks: புதுவை சீனு.தமிழ்மணி

1 comment:

தமிழ் அஞ்சல் said...

உங்கள் வாசிப்பு திறனுக்கு.. ஒரு சல்யூட் பாஸ் !தகவல்கள் தளும்ப தளும்ப கிடக்கிறது.