நமது மத்திய இந்தியாவில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்டுகளின் இயக்கம் அரச படைகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகிறது. பாரத பிரதமர் மன்மோகன் சிங் ‘மாவோயிஸ்டுகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்’ என்று வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகள் என்று மாவோயிஸ்டுகளை அழைத்து வந்த ஆங்கில காட்சி ஊடகங்கள் கடந்த ஓராண்டில் சிகப்பு பயங்கரவாதிகள் என்று பெயர் மாற்றி அழைக்கத் துவங்கி விட்டன. CNN IBN ஆங்கிலத் தொலைக்காட்சி நக்சல் என்ற ஆங்கில எழுத்தில் வரும் ஓ என்ற சொல்லை பெரியதாகக் காட்டி அது ஒழிக்கப்பட வேண்டியது என்பதை வெளிப்படுத்தி வருகிறது.
adivasi_womenமாவோயிஸ்டுகளின் வன்முறைத் தாக்குதல்கள் நிகழும் சமயம் இந்தக் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் நாடகபாணி பின் இசைகளுடன் செய்திகளை பரபரப்பாக்கி வெளியிடுவதும், விவாதம் நடத்துவதும் நடக்கிறது. இவ்விவாதங்களில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களை நீங்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளரா என்ற வகையில் கேள்விகளைக் கேட்பதும், ஆனால் கேள்விக்கு மனித உரிமையாளர்கள் பதில் தரும்போது அதனை முழுதும் உள்வாங்காது அலட்சியப்படுத்துவதுமான போக்குகளும் தொடர்கின்றன. மாவோயிஸ்டுகள் காவல்படைகளுடன் மோதிய அன்னைத்து நிகழ்வுகளுக்குப் பின்னும் இவ்வூடகங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் விவாதப் பொருளாகி வந்துள்ளனர்.
கடந்த 07.04.2010-ம் தேதி மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். படையினரை கொன்ற நிகழ்வு, பேருந்து கண்ணி வெடியில் சிக்கிக்கொண்ட நிகழ்வு, இரயில் கவிழ்ப்பு - இவைகளுக்குப் பின் நாள்கணக்கில் நாடக பாணியில் ஒரு சேர ஆங்கில தொலைக்காட்சிகள் மனித உரிமையாளர்களைத் திட்டித் தீர்ப்பதைக் காண முடிந்தது. சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கள் தலையங்கங்களில் மனித உரிமையாளர்களுக்கு இனி நல்ல பிள்ளைகளாக நடக்கச் சொல்லி அறிவுரை கூறின. புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், வங்க எழுத்தாளர் மகேஸ்வதா தேவி போன்றோர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று இவைகள் முத்திரை குத்தி விட்டன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்களை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்போவதாக மிரட்டி வருகின்றார். இதன் எதிர்வினையாக மகேஸ்வதாதேவி தன்னை கைது செய்வது பற்றி கவலைப்படவில்லை என்றும், அதற்கு முன் தனக்கு நக்சல்பாரி தொடர்பு உள்ளதை ப.சிதம்பரம் நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விட்டார்.
கடந்த 2010 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி சி.ஆர்.பி.எப்.வீரர்கள் கொல்லப்பட்ட அன்று Times Now தொலைக்காட்சி திரைப்படக் கலைஞர் அபர்ணா சென்னிடம் பேட்டி கண்டது. அப்பேட்டியில் அவர் இந்த வன்முறைக்கு அரசுதான் காரணம், இவ்வாறு நிகழக்கூடாது என்பதால் தான் தாங்கள் ‘பச்சை வேட்டை’ கூடாது என்று பேசி வந்ததாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அத்தொலைக்காட்சி ‘துரோகி’ என்று தலைப்பும் கொடுத்தது. யார் தேசபக்தன், யார் துரோகி என்பதை - ஒரு மனிதனின் அரசியல் நேர்மையை - கண நேரத்தில் முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்ற அதிகார மையங்களாக இத்தொலைக் காட்சிகள் உருவாகி விட்டது ஆச்சரியமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.
வணிகப்போட்டி சூழலில் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்திகளை முந்தித் தருவதிலும் அதன் மூலம் தங்களின் TRP என்ற இலாப வணிகத்தை உயர்த்தவும் தொடர்ந்து பரபரப்பான செய்திகளுக்குப் பின்னே இவை ஓடிக்கொண்டே உள்ளன. கொலைகள், பாலியல் வன்முறை உள்ளிட்ட பலவற்றை நாள் கணக்கில் ஒளிபரப்பி பார்வையாளர்களை திகிலடைய வைப்பதுண்டு. பிரபஞ்சம் பிறப்பு குறித்த “பெரும் வெடிப்பு” சோதனை நிகழ்வை இத்தொலைக்காட்சிகள் கண்டு கொள்ளாத சூழலில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அச்செய்தியை வெளியிட இந்த கூட்டு ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் பின் இந்த நிகழ்வு பற்றி இத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. ஆனால் இதே ஊடகங்கள் டெல்லியில் 14 வயது சிறுமி அனுர்சி கொலை செய்யப்பட்ட செய்தியையும், அதில் அப்பெண்ணின் தந்தை டாக்டர்.தல்வார் என்பவர் காரணமாக உள்ளதாகவும் தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு புலனாய்வுத் துறையை நிர்ப்பந்தப்படுத்தியது. வேறு வழியின்றி அப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். கைதான நபர் அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பின்னர் நடந்தது. இதுபோன்ற பரபரப்பான செய்திக் கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, அறிவியல் அற்புதமான பெருவெடிப்பு போன்ற நிகழ்வுகளுக்குத் தரவில்லை.
மாவோயிஸ்ட் பிரச்சனையில் 2010 மே 17-ம் தேதி NDTV தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு பெரிய அளவில் அதிகாரம் தேவை என்றும் வான்படைத் தாக்குதலுக்கு ஆதரவு தேவை என்றும் மாநில முதலமைச்சர்கள் இதனை விரும்புவதாகவும் கேட்டுக் கொண்டார். மென்மையாகவும், நயமாகவும் உள்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டும் அதே தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்தான் மனித உரிமை ஆர்வலர்கள் பழங்குடி மக்களுக்காகப் பரிந்து பேசும்போது மாவோயிஸ்டு ஆதரவாளர்களா என்று கேட்டவர்கள். உண்மையில் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 2004 வரை வேதாந்தா குழுமம் என்ற பகாசுர பன்னாட்டு கம்பெனியின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். அதற்காக வருடத்திற்கு 70,000 டாலர் சம்பளம் பெற்று வந்தார். (1) கம்பெனி பழங்குடி மக்களின் நிலங்களை சட்ட விரோதமாக அபகரித்ததற்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கும் பல சான்றுகள் உள்ளன. 2003-ம் ஆண்டு இந்த நிறுவனம் சுங்க வரி மோசடி செய்ததற்கு நடவடிக்கை எடுப்பதிலிருந்து தடுக்க ப.சிதம்பரம் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றுத் தந்தார். அவர் நிதியமைச்சர் ஆன பின்பும் சுங்கவரி பாக்கியை வசூ்லிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சட்ட விரோதமாக அரசாங்கப் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டும் உள்ளது என பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் ப.சிதம்பரத்தைப் பார்த்து ஒரு நேர்மையான ஊடகம் அது குறித்தான கேள்விகளை கேட்டிருக்க முடியும். ஆனால் இவை அதுபற்றி கேட்டு ப.சிதம்பரத்தை சங்கடப்படுத்தத் தயாராக இல்லை.
அமெரிக்காவில் 1946 ஆம் ஆண்டு ஜோசப் ஆர்.மெக்கார்தே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு விஸ்கான்சின் பகுதி நீதிபதியாக பணிபுரிந்தவர். 1950 வரை இவரைப் பற்றி பலருக்குத் தெரியாது. ஆனால் 1950-ல் இவர் தன் அதிரடியான பேச்சுக்களால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசின் துறைகளில் 205 கம்யூனிஸ்டுகள் ஊடுருவி விட்டதாகவும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் கூறினார். இப்பரபரப்பில் 1952-ல் மீண்டும் இவர் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் செனட்டர்களின் புலனாய்வு கமிட்டிக்கு இவர் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த அதிகாரத்தை வைத்து இரண்டு ஆண்டுகளில் தான் சந்தேகப்படும் பலர் மீது கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டை சுமத்தி பணிநீக்கமும் செய்தார். தனது ஆதரவாளர்களுக்கு தன்னை தேசபக்தனாகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதனாகவும் காட்டிக் கொண்ட மெர்கார்த்தேயின் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான புளுகு மூட்டை என்பதும் மெக்கார்த்தே ஒரு தேர்ந்த புளுகினி என்பதையும் 1954-ல் அறிந்த அமெரிக்கா, சிவில் உரிமைகளை மறுத்த மெக்கார்த்தேயின் செயல்பாடுகளுக்காக அவரை கைது செய்தது. அப்பட்டமான புளுகுகளை அவிழ்த்து விடுவதும் தன்னுடன் சேராதவர்கள் எதிரியின் ஆட்கள் என சவடால் விடுவதையும் மெக்கார்த்தேயிசம் என்று அழைக்கப்படுகிறது.
ப.சிதம்பரம் மனித உரிமை ஆர்வலர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்களா என்று கேட்பதும், தொலைக்காட்சிகள் ‘எங்கே போனார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்’ என்று கேலி செய்வதும் இந்த மெக்கார்த்தேயிசம் தான். மெக்கார்த்தேயிசம் பாசிச சிந்தனைப் போக்கின் இணைபிரியாத சக்தியாக இருந்து வந்திருக்கிறது. முன்பு அமெரிக்கா இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11, 2001-ன் போது அன்றைய அமெரிக்க அதிபர் புஷ் சொன்னார் ‘நீங்கள் எங்களோடா அல்லது எதிரிகளோடா?’ என்று. பாரதீய ஜனதாக் கட்சி பொடா சட்டத்தைக் கொண்டு வந்த விவாதத்தின்போது எல்.கே.அத்வானி சொன்னார் “பயங்கவாத தடுப்புச் சட்டமான பொடாவை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்” என்று.
கடந்த 2010 பிப்ரவரி 18-ல் டெல்லி தீன் வடிகால் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் கோபன் காந்தி என்பவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப் பத்திரிக்கையில் அரச வன்முறையை விமர்சனம் செய்த PUCL உள்ளிட்ட சில மனித உரிமை இயக்கங்கள் மாவோயிஸ்ட் அமைப்பின் வெகுஜன அமைப்புகள் என்று முத்திரை குத்தப்பட்டது. இந்திய உளவுத்துறை மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு இயக்கங்கள் என்று PUCL உள்ளிட்ட 57 இயக்கங்களின் பெயர்களை வெளியிட்டு அவைகளைக் கண்காணிக்கும் வேலையும் செய்து வருகிறது.
கடந்த 2007 மே-17ல் சத்தீஸ்கர் மாநிலத்தில் அம்மாநிலத்தின் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) செயலரான டாக்டர்.பினாயக் சென் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என முத்திரை குத்தி கைது செய்யப்பட்டார். அரசின் மெக்கார்த்தேயிச பிரச்சாரத்தால் உச்ச நீதிமன்றத்தில் கூட பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடும் சிறைவாசத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. நாடு முழுவதும் பல மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சத்தீஸ்கரில் ஆவணப்பட தயாரிப்பாளர் டி.ஜே.அஜய் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 2010 பிப்ரவரியில் PUCL உத்திரபிரதேச மாநிலச் செயலாளர் திருமதி. சீமா ஆசாத் என்பவர் டெல்லி புத்தக கண்காட்சிக்குச் சென்று திரும்பும் வழியில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறி அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். இவர் தன் பத்திரிக்கையில் பழங்குடிகளுக்கு எதிரான அரச வன்முறையை விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் வனவாசி சேட்னா ஆசிரமம் என்ற காந்தி வழி ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஹிம்மன்ஸ் குமார் என்ற PUCL அமைப்பைச் சார்ந்தவர். இவரது ஆசிரமம் சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையாலும் அரசப் படைகளாலும் உடைத்து எறியப்பட்டது. ஹிம்மன்ஸ் குமார் அரச வன்முறையைக் கண்டித்து மனித உரிமைகளுக்காகப் பேசி வந்தார் என்பதே அந்த காந்தியவாதி செய்த பிழை.
சில மாநிலங்களிலிருந்த நக்சல்பாரி இயக்கச் செயல்பாடு இன்று 250 மாவட்டங்கள், 23 மாநிலங்கள் என்று விரிவடைந்ததற்கு காரணங்களைத் தேட வேண்டியது அவசியமானது. நமது அரசியலமைப்பின் முகப்புரை இந்தியா ஒரு ஜனநாயக சோசலிச நாடு என்று பறை சாற்றுகிறது. நமது அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை மாநிலங்கள், அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சொல்கிறது. இயற்கை வளங்கள் பொது சமூகப் பயன்பாட்டிற்கு என்றும், ஏழைகள், பணக்காரன் என்ற பாகுபாடு சமூகத்தில் மறைய வாய்ப்புகளை, வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நமது அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை பழங்குடி மக்களின் நிலங்களை அம்மக்களின் கவுன்சில் அனுமதியின்றி பிற கம்பெனிகளோ, நபர்களோ அபகரிப்பதைத் தடை செய்கிறது. மேலும் 2005-ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய வன உரிமைச் சட்டம் பழங்குடி மற்றும் வனத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்கும் சட்ட வழி வகைகளைக் கொண்டுள்ளது.
இவ்வகையான பல்வேறு சட்ட பாதுகாப்புகளும் அதனை அரணாக நின்று காக்க நீதிமன்ற அமைப்புகளும் இருக்கும் சூழலில் ஏன் நக்சல்பாரிகளின் மாவோயிசம் வளர்கிறது? ஏனெனில் நமது அரசியலமைப்பின் உரிமைகளையும், நமது ஜனநாயக உயிர்ப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் நமது ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், செல்வந்தர்களின் கூட்டு செல்லரிக்கச் செய்து வீழ்த்தி தோல்வி பெறச் செய்த இடத்திலிருந்தே மாவோயிஸ்டுகளுக்கான சிந்தனையும், ஆதரவும் வேர் விடுகின்றது. உலக மயமாக்கல் என்ற பொருளாதார வன்முறை ஏழை, எளிய பழங்குடி மக்களின் மீது திணிக்கப்பட்ட சமயம் நமது பாராளுமன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறையின் செயல்பாடுகள் முழுவதும் ஜனநாயக சோசலிசம் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறி முதலாளித்துவ சேவை என்ற நிலைக்கு சென்று விட்டது. மத்திய இந்தியாவில் பழங்குடிகளை ஆயுதம் தூக்கச் செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கை விட ஜனநாயகத்தை தடம் புரளச் செய்த நமது ஆட்சியாளர்களின் பங்கே அதிகம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 28 வகை பெரும் கனிமங்கள் கிடைக்கின்றன. இரும்புத்தாது இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இடமாகவும் இது உள்ளது. பாக்சைட், டால்மியம் உள்ளிட்ட பல கனிமங்கள் இங்கு உள்ளது. இப்பூமியில் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் நிலச் சீர்திருத்தம் குறித்த அறிக்கையில் இப்பகுதியில் முன்பு மேற்கொள்ளப்பட்ட நில ஆர்ஜித முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதையும் எனவே கனிம வளங்களை எடுக்க வேறு முயற்சி அரசுக்கு தேவைப்பட்டதையும் சுட்டிக் காட்டியது. (2) எனவே ‘அமைதி இயக்கம்’ என்ற சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியது அரசு. இப்படைகளுக்கு இரும்பு கம்பெனிகளான டாடாவும், எஸ்ஸாரும் பெரும் தொகை கொடுத்து உதவி வருகின்றன. இக்கூலிப் படைகள் அரச படைகளுடன் சேர்ந்து மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களை பழங்குடி மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டனர். கொலைகள்? பாலியல் வன்முறை? சித்திரவதை என அது நீண்டது. அதன் விளைவாக சத்தீஸ்கர் மாநில தண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 664 கிராமங்களை முற்றிலும் கைவிட்டு பழங்குடி மக்கள் பக்கத்திலுள்ள மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திரா காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். காலியான இப்பகுதிகளை சுரங்க நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதாக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது. (2)
சத்தீஸ்கரில் உள்ள கனிமங்களை இரயில் மூலம் கொண்டு செல்வதற்கு அதிகப் பணம் செலவாகிறது என்பதற்காக குழாய்கள் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கம்பெனிக்கு நேரிடையாக கொண்டு செல்ல எஸ்ஸார் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்கு எதிராக 25 மீட்டர் அகலத்தில் 267 கிலோ மீட்டர் குழாய்கள் சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் வரை கட்டப்பட்டது. இதில் இரும்பு தாதுக்களுடன் தண்ணீர் கலந்து அனுப்பப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 2.5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.(3) எனவே எஸ்ஸார் கம்பெனிக்காக சபரி ஆற்றின் பெரும்பகுதி திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று சத்தீஸ்கரில் ஓடும் முக்கிய நதிகளான கேலு, குர்குட், கருணா, சியோநாத், மானத் போன்ற ஆறுகளும் தனியார் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராய்க்கர் என்ற ஊரின் வழியாக சென்ற கேலு நதி ஜிண்டால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டாகி விட்டது. தினமும் 35,400 கியூபிக் மீட்டர் தண்ணீரை இந்த ஆலைகள் தாங்கள் கட்டியுள்ள தனியார் அணைகள் மூலம் எடுத்துக் கொள்கின்றன.(4) ஆக பழங்குடிகள், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான தண்ணீர் பயன்பாட்டு உரிமையை முற்றிலும் இழந்து விட்டனர்.
tribes_331நமது வளர்ச்சித் திட்டங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பொது நலனைப் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் உருவாக்கப்பட்டவை. இதனால் உலகில் வேறு எங்கும் நிகழாத ஒரு பெரும் சோகம் இங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக சொந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட எளிய மக்களின் எண்ணிக்கை 6 கோடியாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் பழங்குடி மக்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பின மக்களை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்தியதால் 200 ஆண்டு சோக நிகழ்வில் இடம் பெயர்ந்த கருப்பின மக்களின் எண்ணிக்கையே 5 கோடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.(5) இவ்வாறு சொந்த நாட்டில் அகதிகளாக ‘வளர்ச்சிக்காக’ இடம் பெயரச் செய்யப்பட்ட இம்மக்களுக்கு அரசின் மறு வாழ்வு என்பதும் வெறும் கானல் நீரே. ஆக மலைகளிலும், வனங்களிலுமிருந்து இம்மக்கள் விரட்டப்படுவது குறித்துப் பேசுபவர்கள், அரசின் பொருளாதார வன் செயல்களையும், அரச வன்முறைகளையும் விமர்சிப்பவர்கள் காட்சி ஊடகங்கள் மற்றும் இதர அரசின் ஊதுகுழல்களில் முக்கிய இலக்காக குறி வைத்து தாக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) தவிர பழங்குடி மக்கள் மீதான அரச வன்முறையை ஆதரிக்கின்றன. மாவோயிஸ்ட் பிரச்சனையில் பாரதீய ஜனதா கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்விதமான கருத்து வேறுபாடும் கிடையாது. கனிம வளங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அனுமதிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பின் ஆட்சியாளர்களுக்கு வரும் பெரும் இலாபம் பற்றி விரிவாக விவாதிக்கத் தேவையில்லை. சமீபத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் கணக்கில் வராத சொத்து மதிப்பு மட்டும் ரூ.4000 கோடிக்கு மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு, ஜனநாயகம் என எல்லா வகைக் கூறுகளையும் தூக்கி எறிந்து விட்ட இக்கொடிய பொருளாதார வன்முறையையும், அதைப் பாதுகாக்கும் அரச வன்முறையையும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரிப்பது வெட்கக்கேடானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெருத்த பின்னடைவும் கூட.
இச்சூழலில் மனித உரிமை ஆர்வலர்களின் குரல்கள் மட்டுமே ஒற்றைக் குரல்களாக இக்கொடுமைகளுக்கு எதிராக ஒலிக்கின்றன. எனவே மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), அருந்ததிராய், அபர்ணாசென், மகேஸ்வதாதேவி மற்றும் பிற மெல்லிய எதிர்ப்புக் குரல்களை நசுக்கிவிடத் துடிக்கிறது அரச வன்முறை. தாக்குதலை நியாயப்படுத்த தாக்குவதற்கு முன் வெறிபிடித்து விட்டது என்ற கதையாடல்கள் பரப்ப ஆதாய செய்திகளை (Paid News) வெளியிடும் ஊடகங்கள் தேவைப்படுகிறது. இவ்வூடகங்களின் கருத்துருவாக்கம் போலீஸ் மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. அது சமூகத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. பயங்கரவாத இயக்கத் தொடர்பு, மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், வன்முறையாளர்கள் என மெக்கார்தேயிசத்தை வெளிப்படுத்துகிறது.
அரச வன்முறைக்கு எதிராக ஜனநாயகக் கடமையாற்றுவது என்பதை பல்வேறு சூழல்களில் உயிருக்கும், வாழ்க்கைக்கும் அஞ்ச வேண்டிய நிலைக்கு அரச வன்முறை தள்ளுகிறது. மனித உரிமை செயல்பாட்டாளர்களும், ஜனநாயக சக்திகளும் அரச வன்முறைக்கு மிக எளிய இலக்காக மாற்றப்படுகின்றனர். பொய் வழக்கு, சிறை, சித்திரவதை, கொலை என பல்வேறு இழப்புகளைக் கொடுத்து ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும் மக்கள் ஆதரவு சக்திகள் போராடி வரும் நிலை உள்ளது. மனித உரிமை சக்திகளின் செயல்பாடு வெளிப்படையானது, ஜனநாயகப் பூர்வமானது, சட்ட ரீதியானது. மேலும் சமூக அமைதியை மையமாகக் கொண்டது. சட்டத்தை மதிக்கும் அறப்பண்புள்ள யாரும் இவர்களை விரோதிகளாகப் பார்க்க முடியாது. PUCL தேசியத் தலைவர் பிரபாகர் சின்கா கூறியதைப் போல, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பணி ஒரு மருத்துவரின் பணி போலத்தான். எந்தவொரு கொடிய குற்றவாளிக்கும் மருத்துவ உரிமையை மறுப்பது கூடாது என்பதைப் போலத்தான், அவருக்கான மனித உரிமைகளை மறுப்பதும்.
நீங்கள் யார் பக்கம் என்ற கேள்விக்கு, நாங்கள் வறுமையில் வாடும் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்படும் ஆதரவற்ற அந்த மக்களின் பக்கம். நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பது போல மாவோயிஸ்டுகள் பல சமயங்களில் நிற்கிறார்கள். அதற்காக மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. உண்மையில் ஏழைகளைப் புறக்கணிக்கும் இந்த அரசும் சொந்த மக்களின் மீது பச்சை வேட்டை என்ற பெயரில் விமானப்படை தாக்குதலுக்குத் தயாராகி வரும் அரச பயங்கரவாதம், வன்முறைகளுக்கெல்லாம் தலையானதாகவும், வரலாற்று பிழையாகவும் இருக்கப் போகிறது. 'நீங்கள் யார் பக்கம்? மாவோயிஸ்ட் பக்கமா? அரசு பக்கமா?' என்ற தொலைக்காட்சி வர்ணணையாளர் கேள்விக்கு நாம் வைக்கும் எதிர்க் கேள்வி 'ஊடகங்களே! நீங்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் பக்கமா? இந்திய ஏழைப் பழங்குடி மக்களின் பக்கமா? இந்நாட்டில் ஏழை, எளிய பழங்குடி மக்கள் மனித கண்ணியத்தோடு வாழும் உரிமை அவர்களுக்கு உள்ளதா, இல்லையா? சொந்த மக்களைக் கொன்றொழிக்க போர்ப் பிரகடனம் அறிவிக்க இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு குறைந்தபட்ச சிறுதார்மீக உரிமையாவது உள்ளதா?'
குறிப்புகள்:
(1) Vedanta’s Billions by Rohit Poddar.
(2) Committee on State Agrarian Relations and Unfinished Task of Land Reforms. Volume I, draft report pg 161. Ministry of Rural Development, Government of India.
(3) http://radicalnotes.com, 28 August 2009.
(4) Deccan chronicle Newspaper 09.04.2010, Page-8.
(5) The Third position Non-alignment with violence by Sudhir Vombakere.
Thanks: - ச.பாலமுருகன் ( balatnpucl@rediffmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
(கட்டுரையாளர் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தமிழ்நாடு புதுவை மாநிலங்களின் பொதுச் செயலாளர்)
சென்னை புத்தகவிழா, ஒரு பழைய கேள்வி
1 hour ago
No comments:
Post a Comment