Thursday, June 17, 2010

நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்

இராம்மோகன், எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் 76 துணை ராணுவத்தினர் கொலை செய்யப்பட்ட நிகழ்வின் காரண காரியங்களை அறியும் பொறுப்பை மத்திய அரசு இவருக்குக் கொடுத்துள்ளது. இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ...

வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டித் தாக்குதலுக்குப் பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது கருத்து?

rammohanஅவ்வாறு நடப்பின் அது ஒரு மிகப்பெரிய தவறாகும். நீங்கள் இந்தப் பிரச்சனையை(நக்சல்) எவ்வள‌வு தூரம் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மூலம் அணுகுகின்றீர்களோ, அந்த அளவிற்கு இப்பிரச்சனை மேலும் பலமான ஒன்றாக‌வே மாறும்.

சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய உங்களை உள்துறை அமைச்ச‌க‌ம் நிய‌மித்துள்ள‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ள் அனுப‌வ‌ம் ம‌ற்றும் முடிவு எடுக்கும் திற‌மையை வைத்து தான் இந்த‌ பொறுப்பை உங்க‌ளுக்குக் கொடுத்துள்ள‌து. இப்பொழுது இந்நாட்டில் நிலவி வ‌ரும் மாவோயிஸ்ட்டு பிர‌ச்ச‌னையை நீங்க‌ள் எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்?

முத‌லில் இதை ஒரு ச‌மூக‌நீதிப் பிர‌ச்ச‌னையாக‌வே நான் பார்க்கின்றேன். 1980ல் ஹைத‌ராபாத்தில் மைய‌ விசாரணைக் குழுவின் (CBI) பிராந்திய‌ த‌லைமை அதிகாரியாக‌ ப‌ணியாற்றிய‌போது ந‌க்ச‌ல் பிர‌ச்ச‌னைக‌ளை அறியத் தொடங்கினேன். என்னுட‌ன் ஒன்றாகப் ப‌யிற்சி பெற்ற‌ அஜ‌ய் தியோரா அப்பொழுது ஹைத‌ராபாத்தில் உளவுப் பிரிவின் த‌லைமை அதிகாரியாகப் ப‌ணியாற்றினார். அவர் நக்சல்களைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிக் கொண்டிருந்தார். நான் அசாமில் ப‌ணிபுரியும்போது இது போன்ற‌ க‌ல‌க‌ங்களைக் க‌ட்டுப‌டுத்தியுள்ளேன். மேலும் இந்திய‌ திபெத்திய‌ எல்லை காவ‌ல் ப‌டையிலும் இருந்துள்ளேன். அத‌ன் முக்கிய‌ நோக்க‌மே எதிரியின் ப‌குதிக்குள் சென்று ச‌ண்டையிடுவதே என்பதால், கொரில்லாப் போர் முறையை க‌ற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதிலிருக்கும் ச‌வால் என‌க்கு எப்போதும் பிடித்த‌ ஒன்று.

பெரும்பாலான‌ மாவோயிஸ்ட் த‌லைவ‌ர்க‌ள் ஆந்திராவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். இத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்று நீங்க‌ள் க‌ருதுகின்றீர்க‌ள்?

நான் பார்த்த‌வ‌ரையில் ஆந்திராவில் மிக‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னை நில‌ம் தான். ஆதிக்க‌ சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌லைமுறை, த‌லைமுறையாக‌ ப‌ழ‌ங்குடியின‌ரையும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ள‌து சுய‌ந‌ல‌த்திற்காக‌ பிழிந்து வ‌ருகின்றார்க‌ள். சுத‌ந்திர‌த்திற்கு முன் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு என்று எதுவுமில்லை. இத‌னால் இந்த‌ ஆதிக்க‌ சாதியின‌ர் பெரும‌ளவு நில‌ங்க‌ளை வ‌ளைத்துப் போட்டுள்ள‌னர். சில‌ நேர‌ங்க‌ளில் இது 1000 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வையும் தாண்டிச் சென்ற‌துண்டு. அதே நேர‌த்தில் இந்தப் ப‌ழ‌ங்குடியினர், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌மோ சிறித‌ளவு நில‌மோ அல்ல‌து நில‌மில்லாத‌ நிலையுமே இருந்து வ‌ந்துள்ள‌து. இந்த‌ சிறித‌ள‌வு நில‌ங்க‌ளையும் ஆதிக்க‌ சாதியின‌ர் பொய்க் க‌ண‌க்கு காட்டி, பிடுங்கி, அவ‌ர்க‌ளை எப்பொழுதும் க‌ட‌னாளியாக‌வே வைத்துள்ள‌ன‌ர். இந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ர் குத்தகை விவசாயிகளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு, இவ‌ர்க‌ளின் அறுவ‌டையில் மூன்றில் இர‌ண்டு ப‌ங்கு ஆதிக்க‌ சாதியின‌ருக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இந்தக் கார‌ண‌ங்க‌ளினால் முத‌லில் 1946ல் இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர் தெலுங்கானா ப‌குதிக‌ளில் வேலை செய்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ழ‌ங்குடியின‌ரை ஒரு கூட்ட‌மாக‌ சேர்த்து அவ‌ர்க‌ளின் வில், அம்பை மட்டுமே வைத்து ஆதிக்க‌ சாதியின‌ரின் வீட்டைச் சுற்றி வ‌ளைத்து அங்கு உள்ள‌ தானிய‌ங்க‌ளை இம்ம‌க்க‌ளுக்கு பிரித்து வ‌ழ‌ங்கின‌ர். மேலும் அவ‌ர்க‌ளிட‌ம் சென்று இன்றிலிருந்து விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு மூன்றில் இர‌ண்டு ப‌குதியும், மூன்றில் ஒரு ப‌குதி நில‌ உரிமையாள‌ருக்கும் செல்ல‌ வேண்டும் என்றும் கூறினார்க‌ள். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ நில‌ உரிமையாள‌ர்க‌ள் காவ‌ல் துறையின‌ரிட‌ம் சென்று புகார் கொடுக்க‌, காவ‌ல் துறை அங்கு வாழ்ந்து வ‌ரும் ம‌க்க‌ளை கைது செய்து அடித்து துன்புறுத்தின‌ர்.

சுத‌ந்திர‌த்திற்குப் பின்ன‌ர் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ ஆனால் அவை ஒரு பொழுதும் ஆந்திராவில் ந‌டைமுறைக்கு வ‌ர‌வே இல்லை. 1989ல் அர‌சாங்க‌ம் மாறிய‌போது நான் தியோராவை அழைத்துக் கொண்டு புதிய‌ வ‌ருவாய்த் துறை அமைச்சரைச் சென்று ச‌ந்தித்தேன். 'உங்க‌ளால் ஒரு பொழுதும் இந்தப் பிர‌ச்ச‌னையை(ந‌க்ச‌ல்) தீர்க்க‌ முடியாது' என அவரிடம் கூறினேன். நான் பேசிய‌ வித‌ம் அவ‌ருக்குப் பிடிக்க‌வில்லை எனத் தெரிந்தது. மேலும் அத‌ற்கான‌ கார‌ண‌த்தைக் கூறினேன். நீங்க‌ள் இந்த‌ போராட்ட‌த்தை நீர்த்துப் போக‌ச் செய்ய‌ நில‌ உச்ச‌ வ‌ர‌ம்புச் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கூறினேன். ஆனால் அத‌ற்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்ச‌ர் கூறிவிட்டார். அத‌ற்குக் கார‌ண‌ம் கூறுகையில் ம‌ற்றொரு அமைச்ச‌ரான‌ சுதாக‌ர் ராவிற்கு சொந்த‌மாக‌ 1,100 ஏக்க‌ர் இருப்ப‌தாக‌வும், இது போன்ற‌வ‌ர்க‌ள் நிறைய‌ இருப்ப‌தால் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வாய்ப்பே இல்லை என்று அவ‌ர் கூறினார்.

இது போன்ற‌ சாதிய‌ அமைப்பு முறையே ஆந்திராவில் நில‌வுகின்ற‌து. பெரும்பாலான‌ காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் இன்ன‌மும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்யப் ப‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஏனெனில் அந்த அறிக்கைகள் ப‌திவே செய்ய‌ப்ப‌டாது , அவ்வாறு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டாலும் அத‌ன் மேல் விசார‌ணையும் ந‌ட‌க்காது. மேலும் பெண்க‌ள் பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கு உள்ளாக்கப் ப‌டுகின்ற‌ன‌ர். வேலை செய்யும் விவசாயிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌னைவியை திருமணத்தின் முத‌ல் நாள் இர‌வு நில‌ உரிமையாள‌ருக்குக் கொடுக்க‌ வேண்டும். இது ப‌ழ‌ங்குடிக‌ளின் நாட்டுப்புற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌து. இந்த நாட்டில் பெண் வாழ்வ‌த‌ற்கு எந்த‌ ஒரு ந‌ம்பிக்கையும் இல்லை என்றும் அதே பாட‌லில் வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டாம‌ல் எவ்வாறு நீங்க‌ள் பிர‌ச்ச‌னைக்குத் தீர்வு காண்பீர்க‌ள்? இராணுவத்தின் மூலம் இத‌ற்குத் தீர்வு காண‌ முடியாது.

ஊட‌க‌ங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளை தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்தியுள்ள‌ன‌. இதை நீங்க‌ள் ஏற்றுக் கொள்கின்றீர்க‌ளா?

இங்கே எல்லோரும் ந‌க்ச‌ல்களைப் ப‌ற்றி ம‌ட்டுமே பேசுகின்றார்க‌ள். மிக‌வும் சில‌ரே இங்கே இர‌ண்டு வ‌குப்புக‌ள் உள்ள‌தை புரிந்துகொள்கின்ற‌ன‌ர். ப‌ழ‌ங்குடியின‌ர் ம‌ற்றும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பினர் சமூகத்தின் அடி மட்டத்தில் உள்ளனர். இந்திய‌ க‌ம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) க‌ட்சியின் தலைமையிலும் 99 விழுக்காடு ஆதிக்க‌ சாதியின‌ரே. இருந்தாலும் இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் த‌த்துவ‌த்தின் கார‌ண‌மாக‌ இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாதியைப் புற‌க்க‌ணித்து ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌ர். மாவோயிஸ்ட்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகிறார்கள். நான் ஒரு மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ விரும்ப‌வில்லை. ஆனால் நாம் த‌ற்பொழுது மேற்கொண்டுள்ள‌ காட்டுமிராண்டித்த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைகளைத் தொட‌ர்ந்தால் இந்தியா ஒரு மாவோயிஸ்ட் நாடாக‌ மாறியே தீரும். இங்கு ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ வேறுபாடு நிலவுகின்றது. க‌ம்யூனிஸ்ட் நாடுக‌ளான‌ இர‌ஷ்யா, சீனா சென்று பாருங்க‌ள். இன்று அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாமே க‌டைநிலையில் இருந்தவர்களே. உய‌ர் குடி ம‌க்க‌ள் இப்பொழுது அங்கு இல்ல‌வே இல்லை. இந்தியாவிலும் இது போன்ற‌ கிள‌ர்ச்சிக‌ள் ஏற்ப‌டலாம். ந‌ம் க‌ண்முன்னே உள்ள‌ ச‌மூக‌ நீதிப் பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌த‌ற்கு நாம் ஏன் இன்னும் முய‌ல ம‌றுக்கின்றோம் என‌ப்புரிய‌வில்லை.

நீங்க‌ள் இதுவ‌ரை ஆந்திராவை ப‌ற்றி பேசினீர்க‌ள், நீங்கள் ச‌ட்டீசுக‌ரை எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்?

ச‌ட்டீசுக‌ரில் காடுக‌ளின் மீதான‌ உரிமை என்பதுதான் பிரச்சினை. ப‌ழ‌ங்குடியின‌ர் ஆயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே சாதிய ஆதிக்கம் கார‌ண‌மாக‌ காடுக‌ளுக்குள் த‌ள்ள‌ப்ப‌ட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நில‌மே இல்லை. காடுக‌ளில் கிடைக்கின்ற‌ பொருட்க‌ளை ச‌ந்தைக‌ளில் விற்ப‌த‌ன் மூல‌மே த‌ங்க‌ள் வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்க‌ள். இவ்வாறு அவ‌ர்க‌ள் காடுக‌ளை விட்டு வெளியே வ‌ந்து ஒரு வ‌ணிகரைத் தேடி விற்கின்றார்க‌ள். யார் அந்த‌ வ‌ணிக‌ர்க‌ள்? வைசிய‌ ம‌ரபைச் சார்ந்த‌ வ‌ணிக‌ர்க‌ள். இத‌ன் மூல‌ப் பிர‌ச்ச‌னையாக‌ நான் மூன்றைச் சொல்லுவேன். த‌ந்திர‌மான பார்ப்பனன், காட்டுமிராண்டித‌ன‌மான‌ ச‌த்ரிய‌ன், பேராசை கொண்ட‌ வைசிய‌ன். சித‌ம்ப‌ர‌ம் ஏதேச்சையாக‌ வைசிய‌ குல‌த்தைச் சார்ந்த‌வ‌ர். இந்த‌ மூன்று குல‌ங்களும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ இவ‌ர்க‌ளை ந‌சுக்கி வ‌ருகின்ற‌ன‌ர். பாதிக்கப்ப‌டும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கு ஆத‌ர‌வாக மாவோயிஸ்ட்கள் கை கொடுத்தால் எதற்காக‌ நாம் அவ‌ர்களைக் குறை சொல்ல வேண்டும்? அவ‌ர்க‌ள் வைசிய‌ர்க‌ளின் க‌ண‌க்குப் புத்த‌க‌த்தை பார்த்து ப‌ழ‌ங்குடியின‌ர் ச‌ரியான‌ தொகை பெறுவ‌த‌ற்கு உத‌வுகின்ற‌ன‌ர். நீங்க‌ள் இந்த‌ வியாபார‌த்தை ஆராய்ந்து இருக்க‌ வேண்டும். இந்த வைசியர்களின் ப‌ண‌ம் தில்லியில் உள்ள ப‌ண‌க்கார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்குச் செல்கின்ற‌து. ஆனால் உழைக்கும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்ப‌தில்லை.

எந்தக் கிள‌ர்ச்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ங்க‌ளை எடுப்ப‌து இய‌ல்பு. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி இல்லை. இங்கே மாவோயிஸ்ட்க‌ளின் மூல‌ம் ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள‌து உரிமைக‌ளுக்காகப் போராட‌ க‌ற்றுக் கொள்கின்றனர். மார்க்சியப் பாட‌ங்க‌ளும், கொரில்லாப் போர் முறையும் அவ‌ர்களது பாட‌ங்க‌ளில் ஒன்று. இங்கே அதிக‌ரிக்கும் வ‌ன்முறைக‌ள், போராட்ட‌ங்க‌ள் எல்லாம் ஆயுதங்களைக் கைப்பற்றுவதை நோக்கியே உள்ள‌து. இதை எதிர்த்து ந‌ம‌து ப‌டையின‌ர் போராடும் போது அவ‌ர்க‌ள் க‌டும் கோப‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாறுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் 'நாங்க‌ள் 76 வீர‌ர்களைப் ப‌றிகொடுத்துள்ளோம்' என‌க்கூறி, க‌ண்ணில் ப‌டுப‌வரையெல்லாம் சுட்டுக் கொல்வார்க‌ள்.

இவ‌ர்க‌ளை க‌ட்டுக்குள் வைக்க‌ ஒரு ச‌ரியான‌ த‌லைமை தேவை. என‌து அச்ச‌ம் என்ன‌வென்றால் அவ்வாறான‌ த‌லைமை என்ற‌ ஒன்று ந‌ம‌து ப‌டையின‌ருக்கு இல்லை என்ப‌தே. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும்.

அப்ப‌டியென்றால் நீங்க‌ள் இத‌ற்கு என்ன‌ தீர்வு சொல்கின்றீர்க‌ள்? இந்தத் தீர்வுக‌ளை நோக்கி ந‌க‌ராம‌ல் ந‌ம்மை த‌டுப்ப‌து எது?

பாராளும‌ன்ற‌த்தில் இர‌ண்டு ச‌ட்ட‌ங்க‌ள் இன்னும் நிலுவையில் உள்ள‌ன‌. ஒன்று நில‌ அப‌க‌ரிப்பு ப‌ற்றிய‌து, இர‌ண்டாவ‌து காடுக‌ளின் உரிமை ப‌ற்றிய‌து. ஆனால் இங்கே பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் இந்தக் காடுக‌ளில் தனிமங்கள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இது த‌ற்போது ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய புதையலாகும். இந்த‌ தாதுக்க‌ளை எடுப்ப‌த‌ற்கு ப‌ல‌ மில்லிய‌ன் ம‌திப்புள்ள‌ ஒரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் போடப்ப‌ட்டால் அதில் குறிப்பிட்ட‌ விழுக்காடு அரசியல்வாதிகளின் சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கிற்குச் செல்லும். காடுக‌ளில் வாழும் இந்த‌ ஏழை ம‌னித‌ர்க‌ள் எளிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். பிகாரில் நிலச்சுவான்தார்கள் இவ்வாறு வெளிப்ப‌டையாக‌ சொல்வார்க‌ள் "நாங்க‌ள் எங்க‌ள‌து நில‌ங்க‌ளையும், ப‌ட்ட‌ங்க‌ளையும் எங்க‌ள‌து பூனை ம‌ற்றும் நாய்க‌ளின் பெய‌ரில் வைத்திருக்கிறோம்". இந்நிலைமை, போராட்ட‌ங்க‌ள் இல்லாம‌ல் இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் தொடர முடியும்?

மேலும் நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவ‌ம் வ‌ர‌ வேண்டுமென்று? நீங்க‌ள் ஏன் பிர‌ச்ச‌னையின் மூல‌ கார‌ண‌த்தைப் பார்க்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள்? அர‌சுக்கு மூளை என்று ஒன்று இருப்பின் அது பிர‌ச்ச‌னையைப் புரிந்து செயல்ப‌டும், இல்லையெனில் இது ஒரு மிக‌ப்பெரிய‌ பேரிட‌ரில் தான் சென்று முடியும்.

காவ‌ல்துறை, துணை இராணுவ‌ம் ந‌ட‌த்திய‌ ப‌ல‌ அட‌க்குமுறைக‌ள், க‌ற்ப‌ழிப்புக‌ள், கொலைக‌ள், ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை திருடுத‌ல் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ முறை தெக‌ல்கா ப‌திவு செய்துள்ள‌து. இதை நாம் அர‌சிட‌ம் கொண்டு சென்றால் நம்மை துரோகியாக‌வும், மாவோயிஸ்ட்க‌ளுக்கு உளவுத் த‌க‌வ‌ல்க‌ள் திர‌ட்டுப‌வ‌ர்க‌ளாக‌வுமே பார்க்கின்ற‌ன‌ர். காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோரின் ந‌ட‌த்தை ப‌ற்றிய‌ உங்க‌ள் பார்வை என்ன‌?

ச‌ல்வா ஜூடும் என்ப‌து அர‌சால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. அந்தப் ப‌டையின் செயல்பாடுக‌ள் நிலைமையை மேலும் மோச‌மாக்கின‌. முன்னர் நில‌ உரிமையாள‌ர்க‌ள் என்னென்ன கொடுமைகள் செய்தார்களோ, அதை இப்போது காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோர் செய்கின்ற‌ன‌ர். கிள‌ர்ச்சியை அட‌க்கும் போராட்ட‌ம் ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ப‌து என் ந‌ம்பிக்கை. இதைப் ப‌ற்றி பெரும்பால‌னோர் பேசுவ‌தில்லை. இராப‌ர்ட் தாம்ச‌னின் "க‌ம்யூனிஸ்ட் க‌ல‌க‌ங்க‌ளை வெற்றி கொள்வது எப்ப‌டி" என்ற‌ புத்த‌க‌ம் இந்த‌ வ‌ரியுட‌ன் துவ‌ங்கிற‌து "க‌ல‌க‌ங்க‌ளுக்கு எதிரான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ முக்கிய‌மாக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும்". இராப‌ர்ட் தாம்ச‌ன் போன்றோருக்கு கொரில்லா போர் ப‌யிற்சி அளித்த‌ வ‌ல்லுன‌ர்க‌ளே என‌க்கும் ப‌யிற்சி அளித்த‌ன‌ர் என்ப‌து என்னைப் பொருத்த‌வ‌ரை அதிர்ஷ்ட‌வ‌சமானது. இதை நான் அர‌சுக்கான எனது ப‌ரிந்துரைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தெரியப்ப‌டுத்தி உள்ளேன். இது போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் படையின‌ருக்கு த‌லைமையாக‌ இருப்ப‌வ‌ர் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்றார்.

கொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு, ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்களைப் பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று. அந்தப் ப‌டையின‌ரின் த‌லைவ‌ர் ச‌ரியாக‌ இருந்தால் இது போன்ற‌ செயல்க‌ளை செய்வ‌த‌ற்கே ப‌டையின‌ர் அஞ்சுவ‌ர். ப‌ணியிலிருக்கும் ப‌டையின‌ர் த‌வறு செய்தால் அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இது அங்கு உள்ள‌ கிராம‌வாசிக‌ளுக்குத் தெரிய‌ வேண்டும். அப்பொழுது தான் அவ‌ர்க‌ள் உங்க‌ளை ந‌ம்பி உங்க‌ள் ப‌க்க‌ம் வ‌ருவார்க‌ள்.

நான் இங்கே கூறியுள்ள‌ மைய‌ காவ‌ல் ப‌டை, எல்லை பாதுகாப்புப் ப‌டை என‌ எல்லாவ‌ற்றிலும் நான் ப‌ணியாற்றி உள்ளேன். மைய‌ காவ‌ல் ப‌டை ச‌ட்ட‌ ஒழுங்கை பாதுகாப்ப‌வ‌ர்க‌ள். த‌டிய‌டிக்குப் பெய‌ர் போன‌வ‌ர்க‌ள். ஆனால் இப்பொழுது காசுமீரில் அவ‌ர்க‌ள் ந‌ட‌த்துவ‌தோ வேறு. இவ‌ர்க‌ளும் கூட்ட‌த்தை நோக்கி க‌ற்க‌ளை எறிகின்ற‌ன‌ர். இது எப்பொழுதும் ந‌ட‌க்க‌கூடாத‌ ஒன்று. இப்பொழுது இங்கு ந‌ட‌ப்ப‌தெல்லாம் சீருடை அணிந்த‌ ஒரு க‌ல‌க‌க் கும்பல், சீருடை அணியாத‌ ஒரு கிள‌ர்ச்சிக் கும்பலின் மோதலே.

மைய‌ காவ‌ல் ப‌டையின் முக்கிய‌ பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் அவ‌ர்கள் ஒரு மாநில‌த்திற்குச் செல்லும் போது அங்கு உள்ள‌ காவ‌ல்துறையிட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளை கூட்ட‌த்தைக் க‌லைப்ப‌த‌ற்காக‌வும், க‌ல‌வ‌ர‌ங்க‌ளை க‌ட்டுக்குள் கொண்டுவ‌ருவ‌த‌ற்குமே மாநில‌ காவ‌ல் துறை பிர‌யோக‌ப‌டுத்துகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளின் ஒழுங்குமுறை மேலும் மோச‌ம‌டைகின்ற‌து. மிசோர‌ம், நாகாலாந்து போன்ற‌ இட‌ங்க‌ளில் இந்த‌ மைய‌ காவ‌ல் படையின‌ரே ஓரளவு ஒழுங்குட‌ன் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர் கார‌ண‌ம் அங்கு இவ‌ர்க‌ள் இராணுவ‌த்திட‌ம் ஒப்ப‌டைக்கப்ப‌ட்ட‌ன‌ர்.

இராணுவ‌த்தை ந‌க்ச‌ல்க‌ளுக்கு எதிராக‌ க‌ள‌மிற‌க்குவ‌து ஒரு பேர‌ழிவைத் த‌ரும் என்று நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள், அத‌ற்கான கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா?

பீகார் ப‌டைக்குழுவில் உள்ள‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஆதிவாசிக‌ளே, இதுவே இராணுவ‌த்தின் முத‌ல் பிர‌ச்ச‌னை. நீங்களே யோசித்துப் பாருங்க‌ள் இது போன்ற‌ ஒரு ப‌டைக்குழு, இன்னொரு ஆதிவாசி குழுவை எதிர்க்கும்போது என்ன‌ ந‌ட‌க்கும்‌?

அவ‌ன‌து குடும்ப‌ம் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து உற‌வின‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து இன‌க்குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம். இதுவே ஒரு பேர‌ழிவைத் த‌ரும். இது போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்குள் இராணுவ‌ம் வ‌ரவே கூடாது. என‌து க‌ருத்து மிக‌வும் தெளிவான‌து, பிர‌ச்ச‌னையின் மூல‌கார‌ண‌ங்க‌ளை அர‌சு க‌ளைய‌ முய‌ல‌ வேண்டும்.

இந்தப் பிர‌ச்ச‌னையில் நீங்க‌ள் யாரைத் தாக்கப் போகின்றீர்க‌ள்? யாரைப் பிடிக்க‌ போகின்றீர்க‌ள்? நீங்க‌ள் அவ்வாறு யாரையும் பிடிக்க‌ முடியாது. அவ்வாறு ஒரு திட்ட‌ம் உள்ள‌தென்று தெரிந்தாலே, அவ‌ர்க‌ள் நூறு வெவ்வேறு திசைக‌ளில் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்களது ஆயுதங்களும் ம‌றைந்து விடும். நீங்க‌ள் அங்கே வாழ்கின்ற‌ அப்பாவிக‌ளை ம‌ட்டுமே பார்ப்பீர்க‌ள். ந‌ம‌து ப‌டையின‌ர் அங்கு உள்ள அப்பாவி பழங்குடியினர் 30 பேரைக் கொன்று விட்டு நாங்க‌ள் 30 ந‌க்ச‌ல்களைக் கொன்றுவிட்டோம் என‌க்கூறுவார்க‌ள். இத‌ற்குப் பிற‌கு அங்கு பிற‌க்கும் ஒவ்வொரு குழ‌ந்தையும் போராளியாக‌ மாறிவிடுவான்.

நீங்க‌ள் ச‌ண்டை நிறுத்த‌ம் ஏதேனும் ஏற்ப‌டும் என்று க‌ருதுகின்றீர்க‌ளா?

நான் உங்க‌ளுக்கு உறுதி கூறுகின்றேன் அவ்வாறு எந்த‌ ஒரு ச‌ண்டை நிறுத்த‌மும் வராது. ஏனெனில் இதை ஒருங்கிணைக்கும் மாவோயிஸ்ட்க‌ள் ந‌ல்ல வேக‌‌த்தில் இயங்கிக் கொண்டுள்ள‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ள் இதை நிறுத்தினால் மீண்டும் இதை ஆரம்பிப்ப‌து என்பது அவர்களுக்கு மிக‌வும் க‌டின‌மான‌ ஒன்று. நான் அவ‌ர்க‌ள் ஆயுத‌ங்களைக் கீழே வைப்பார்க‌ள் என‌ நினைக்க‌வில்லை. நம‌து அர‌சு நில‌ம் ம‌ற்றும் காடுக‌ள் தொட‌ர்பான‌ கொள்கைக‌ளில் மாற்ற‌ம் கொண்டு வ‌ந்த பின் தான், அவ‌ர்களிடம் சொல்லிப் புரிய‌‌ வைத்து நம் மேல் ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியும்.

அவர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தைக் குறைத்து, இந்திய‌ ச‌ன‌நாய‌க‌த்தை மாவோயிஸ்ட் புர‌ட்சி அமைப்பை விட‌ ந‌ல்ல‌ ஒன்றாக‌ மாற்ற‌லாமே?

ச‌ரியான‌ வார்த்தை. இதை நிக‌ழ்த்துவ‌த‌ற்கு, எல்லா க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் அம‌ர்வுக‌ளில் இந்த‌ பிர‌ச்சனையைத் தீர்ப்ப‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்கச் சொல்லி அரசை வ‌லியுறுத்தி, அர‌சை நாம் ப‌லப்ப‌டுத்த‌ வேண்டும். க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை ச‌ரி செய்யாம‌ல் உங்க‌ளால் எதையும் மாற்ற‌ முடியாது. அதிகமான‌ இராணுவ‌ம் அல்ல‌து ப‌டை இப்பிர‌ச்ச‌னையை மேலும் மோச‌மான‌ ஒன்றாக‌வே மாற்றும்.

இதை அர‌சிட‌ம் கூறியுள்ளீர்க‌ளா?

எந்தக் கூட்ட‌ங்க‌ளிலெல்லாம் என்னால் பேச‌முடியுமோ அங்கெல்லாம் இதைப் ப‌ற்றி நான் பேசி உள்ளேன்.

இந்தப்‌ ப‌குதிக‌ளை முன்னேற்ற‌ வேண்டும் என‌ அர‌சு கூறுகின்ற‌தே?

முன்னேற்ற‌ம் என்ப‌து த‌வறான வார்த்தைப் பிரயோகம். அடிப்ப‌டை உரிமை என்ப‌தே ச‌ரியான‌ ஒன்று. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும். எப்ப‌டி நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ம் கேர‌ளாவில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து? ஏன் அங்கு மாவோயிஸ்ட் கிள‌ர்ச்சி இல்லை? அங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ தெரியுமா? ந‌ம்பூதிரிபாடின் ஆட்சியின் கீழ் அங்கே ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக‌ அம‌லுக்கு வ‌ந்தது. பனிரெண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு அந்த‌ நில‌ம் சொந்த‌ம் என்பது, நில‌ உரிமையாள‌ருக்கு எந்த‌ ஒரு இழ‌ப்பீடும் வ‌ழ‌ங்காமலும் அம‌லுக்கு வ‌ந்த‌து. ஆனால் நாம் இன்று 2010ல் உள்ளோம். பெரும்பாலான‌ ப‌குதிக‌ளில் ந‌ம‌து செய‌ல்பாடுக‌ளோ 1610ல் உள்ளதைப் போல‌வே உள்ள‌து. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ காடுக‌ளில் த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அங்கு வாழும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கே அது சொந்த‌ம் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியுமா? முத‌லில் இந்தியாவில் இதுபோல‌ த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்கப்ப‌ட்டால் அது அங்கு வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளுக்கே சொந்த‌ம் என்று அறிவிக்க‌வேண்டும். புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ங்களில் கையெழுத்திடுவது அங்கு வாழும் பழங்குடி ம‌க்களாக இருக்க வேண்டும். அத‌ன் பின்ன‌ர் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியான‌ உத‌விக‌ள் செய்து இலாப‌ம் அவ‌ர்க‌ள‌து க‌ண‌க்கிற்கு செல்கின்ற‌தா என‌ அர‌சு க‌வ‌னிக்க‌ வேண்டும். தில்லியில் உள்ள‌ அர‌சு இதை செய்வ‌த‌ற்குத் த‌யாரா? எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இதைச் செய்ய‌ மாட்டார்கள் என்றால், இங்கு ஒவ்வொரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்துட‌னும் அவ‌ர்க‌ளின் ஒரு சுவிஸ் வ‌ங்கிக் க‌ண‌க்கு இணைக்க‌ப்ப‌ட்டே உள்ள‌து.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் மாவோயிஸ்ட் நாட்டில் வாழ‌ மாட்டேன் என்று. அதே போல‌ அவ‌ர்க‌ள் ஒரு திற‌மையான‌ ஆயுத‌ குழு (அ) 200 மாவ‌ட்ட‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் க‌ண்காணிப்பில் உள்ள‌து என்ப‌தையும் ஒருவ‌ராலும் ம‌றுக்க‌ முடியாது. இங்கே ப‌ல‌ பேரிட‌ம் உள்ள‌ ஒரு கேள்வியை நான் கேட்கிறேன். துணை இராணுவ‌த்தை அவர்க‌ளுக்கு எதிராகப் போராட‌ அழைத்த‌து இங்கு மாவியிஸ்ட்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்தி உள்ள‌தா? ஏதாவ‌து ஒரு பிர‌ச்சினை தீர்ந்துள்ள‌தா?

ஒரு சிறிய‌ ப‌குதியை எடுத்துக்கொள்வோம். அங்கே ப‌த்து ப‌டைய‌ணிக‌ளை நிறுவுங்க‌ள். கோழி, ஆடு திருடாம‌ல் த‌டுக்க‌, பெண்களைக் க‌ற்ப‌ழிக்காம‌லிருக்க‌, வீடுக‌ளை எரிக்காம‌லிருக்க‌ ஒரு ந‌ல்ல‌ த‌லைமை அங்கு வேண்டும். நான் காசுமீரில் எல்லை பாதுகாப்புப் ப‌டையின‌ரின் த‌லைமை பொறுப்பில் இருக்கும் போது என‌து க‌ட்டுப்பாட்டில் 50 ப‌டைய‌ணிக‌ள் இருந்த‌ன‌. நான் தின‌மும் ந‌க‌ருக்குச் சென்று ஒன்று அல்ல‌து இர‌ண்டு ப‌டைய‌ணிக‌ளை சுழ‌ற்சி முறையில் க‌வ‌னித்து வ‌ருவேன். மேலும் அங்கு வாழும் ம‌க்க‌ளிட‌ம் ப‌டைய‌ணிக‌ள் ஏதேனும் குற்ற‌ம் புரிந்துள்ள‌ன‌ரா என‌வும் கேட்பேன். குறிப்பாக‌ அங்கு ஏதாவ‌து க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்கும் ப‌ணி முடிந்த‌வுட‌ன் அங்குள்ள‌ ம‌க்க‌ள் "உங்க‌ள் ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் எந்தத் த‌வ‌றும் செய்ய‌வில்லை" என‌க் கூற‌ வேண்டும். இவ்வாறு ம‌க்க‌ள் கூறினால் தான் நிலைமை க‌ட்டுக்குள் இருக்கின்றது என்று அர்த்தம். இது தான் ஒரு ச‌ரியான‌ த‌லைமை. என‌து ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளுக்குத் தெரியும் அவ‌ர்க‌ள் ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ த‌ண்டிக்கப்ப‌டுவார்க‌ள் என‌. அதனால் அவ‌ர்க‌ள் ஒழுங்காக‌ இருப்பார்க‌ள். இது தான் இங்கே தேவை. ஒரு ச‌ரியான‌ த‌லைமை ம‌ற்றும் க‌ள‌த்தில் ப‌ணிபுரிய‌ ஒழுங்கான‌ வீர‌ர்க‌ள். இந்த‌ அர‌சு செய்த‌ ஒரு த‌வ‌று என்ன‌வென்றால் அவ‌ர்க‌ளுக்கு 'ஆமாம்' சொல்பவர்களை மட்டுமே வைத்திருப்பது.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவத் த‌லைமை, துணை இராணுவ‌த்தை விட‌ சிற‌ந்த‌து என‌. ஆனால் வ‌ட‌ கிழ‌க்கு ம‌ற்றும் காசுமீரில் இராணுவ‌ம் செய்கின்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் இத‌ற்கு நேர்மாறாக‌ அல்ல‌வா உள்ள‌து?

ஆம். இராணுவ‌ம் வ‌ட‌கிழ‌க்குப் ப‌குதிக‌ளில் மிக‌ப் பெரிய‌ த‌வ‌றுக‌ளை செய்துள்ள‌து. நான் நாகாலாந்து ம‌ற்றும் மணிப்பூரில் வேலை செய்துள்ளேன். அந்தப் ப‌குதிக‌ள் மிக‌ தொலைவில் உள்ள‌தால் இங்கு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்றே தெரியாது. அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இந்தியாவுட‌ன் இருப்ப‌து பிடிக்க‌வில்லை என்ப‌தில் எந்த‌ ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை. இருந்தாலும் பொதுவாகக் கூறுகையில், இராணுவ‌ த‌லைமைக‌ள் ம‌ற்ற‌ படைத் த‌லைமைக‌ளை விட‌ மேல். ஏனெனில் இங்கு த‌லைமைக‌ள் அர‌சிய‌ல்வாதிக‌ளால் நிய‌மிக்கப்ப‌டுப‌தில்லை. முழு த‌குதி, திற‌மை அடிப்ப‌டையிலேயே இராணுவ‌த்தில் த‌லைமைப் ப‌த‌வி கொடுக்கப்ப‌டுகின்ற‌து. எல்லை பாதுகாப்புப் ப‌டையில் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பிற்கு வ‌ருவ‌த‌ற்கு நீங்க‌ள் எவ்வ‌ள‌வு கால்களை ந‌க்கியுள்ளீர்க‌ள் என்ப‌தே த‌குதி. இர‌ண்டிலும் அமைப்பு முறை மாறுப‌டுகின்ற‌து.

ந‌ன்றி: தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

மூல‌ப்ப‌திவிற்கான‌ இணைப்பு: http://www.tehelka.com/story_main45.asp?filename=Ne120610bringing_on.asp

- ப‌.ந‌ற்ற‌மிழ‌ன் ( esan.palani@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

ந‌ன்றி: Keetru.com, ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

No comments: