Monday, December 8, 2008

போலீசு, இராணுவம் - மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 4 )

மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள்.

பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்கும், இந்தித் திரைப்பட பிரபலம் ராம் கோபால் வர்மாவும் சென்றார்கள். தெறித்து விழுந்த இரத்தக்கறை இன்னமும் காயாத நிலையில் அதை சினிமாவாக்க லொகேஷன் பார்ப்பதற்கு ஒரு இயக்குநரை மாநில முதல்வர் அழைத்துச் செல்கிறார். அந்தப் படத்தில் அவர் மகன்தான் நாயகனென்றும் தகவல். சிவாஜ டெர்மினசில் கொல்லப்பட்ட மக்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட மும்பையின் அவலத்தை சினிமாவாக்கி காசாக்க முனைகிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இதில் சினிமாக்காரர்களை குற்றம் சொல்லுவதை விட நாளை அந்த சினிமா வந்தால் அதை பரபரப்பாக வெற்றிபெறச் செய்யும் இரசிகர்கள்தான் நம் விமரிசினத்திற்குறியவர்கள். அந்த இரசனைதான் மும்பை தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோக்களை சினிமா ஹீரோக்களைப் போல புகழ்கிறது. நாடு முழுக்க பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. கொல்லப்பட்ட மக்களுக்கு ஓரிரு இலட்சங்களை வழங்கும் அரசுகள் வீரர்களுக்கு மட்டும் பல இலட்சங்களை அள்ளி வழங்குகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியாராவோ அவர்களது குடும்பத்தாருக்கு கேஸ் உரிமம் அல்லது பெட்ரோல் ஏஜென்சி வழங்கப்படும் என்கிறார். உயிரிழக்கும் அபாயமுள்ள போர்த்தொழிலில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் கடமையைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

மும்பையில் உடன் பணியாற்றும் வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மேஜர் சந்தீப் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பெங்களூரிலிருக்கும் அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மேஜர் ஒரு மலையாளி என்பதால் கேரளப்பத்திரிகைகள் அம்மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து தேசபக்தி சென்டிமெண்டைக் கிளறி விடுகின்றன. பொதுவாகவே மலையாளிகளுக்கு ‘இந்திய உணர்வும், தேசபக்தியும்’ கொஞ்சம் அதிகம்தான். இதனால் தேசபக்த நெருக்கடிக்காளான முதல்வர் அச்சுதானந்தன் பெங்களுரு செல்கிறார். ஆனால் மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணணோ வீட்டிற்கு வந்த முதல்வரை அவமரியாதை செய்து அனுப்புகிறார். தன் மகன் ஒருமலையாளி இல்லை, அவன் ஒரு இந்தியன் என்பதாகவும், பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்தால் வந்த முதல்வரின் ஆறுதல் தேவையில்லையென திமிராகப் பேசுகிறார்.

நாடு முழுக்க எழுப்பிவிடப்பட்ட ஹீரோயிச உணர்வின் மேட்டிமைத்தனத்தில் உன்னி கிருஷ்ணன் தன் மகன் மாபெரும் சாதனை செய்த மிகப்பெரிய தியாகி என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார். இந்த மேஜர் மட்டும் இங்கு பிறக்கவில்லையென்றால் ஒரு நாய் கூட இந்த வீட்டிற்கு செல்லாது என பொருத்தமாக பேசிய அச்சுதானந்தன் பின்னர் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் தந்த நெருக்குதலால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு அதிகாரவர்கக்த்தின் ஒரு பிரிவாக இருக்கும் இராணுவத்தை தேசபக்தியின் சின்னமாக போற்றவைக்கிறது.

உண்மையில் காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் உள்ள முக்கியமான வேலை என்ன?

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.
உள்நாட்டில் தீவிரவாதிகளின் கடத்தல், தீடீர் தாக்குதலை முறியடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. இதில் எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி என இரண்டு பிரிவுகள் முறையே இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்டு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது.

எஸ்.ஆர்.ஜி பிரிவில் பாதிப்பேர் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். இது போக எஸ்.பி.ஜி எனப்படும் விசேட பிரிவு இந்திரா காந்தி குடும்பத்தினர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. சோனியா காந்தி குடும்பம், பிரதமர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கான பாதுகாப்பில் ஈடுபடும் இந்த எஸ்.பி.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் மட்டும் 180 கோடி. ஆனால் 100 கோடி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும் என்.எஸ்.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் 117 கோடி மட்டுமே.
பிரமுகர் பாதுகாப்பில் இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ், என பல பிரிவுகள் உள்ளன. இசட் பிளஸ் வகையில்தான் அத்வானி, மோடி, ஜெயலிலிதா, அமர்சிங், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாசிஸ்ட்டுகள் உள்ளனர்.

இவர்களை என்.எஸ்.ஜியின் கறுப்பு பூனைகள் பாதுகாக்கின்றனர். இசட் பிரிவில் 68 பிரமுகர்களும், ஒய் பிரிவில் 243 பேரும், எக்ஸ் பிரிவில் 81 அரசியல்வாதிகளும் இத்தகைய விசேடப் படைப் பிரிவுகளால் பாதுகாக்கப்படுகின்றனர். இது போக டெல்லயில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதின் பாதுகாப்பிற்காக 14,200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலங்களில் கொடுக்கப்படும் பாதுகாப்பு தனி. மத்திய அரசில் மட்டும் பிரமுகர் பாதுகாப்பிற்காக தோராயமாக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த டெல்லித் தலைவர்கள் விஜயம் செய்யும் போது பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இக்கணக்கில் வராது என்றால் இதன் மொத்தத் தொகை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த வி.ஐ.பி பாதுகாப்பில் டெல்லி சீக்கியர்களைக் கொன்ற வழக்கிலிருக்கும் காங்கிரசின் சஜ்ஜன் குமார், கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர் அமர் சிங், சந்தர்ப்பவாதத்திற்கு இலக்கணம் படைத்திருக்கும் தேவகவுடா போன்றவர்களும் அடக்கம்.

டெல்லி கமாண்டோப் படையைப் பார்த்து உள்ளுரில் அதேபோல ஆரம்பித்தார் அல்லி ராணி ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு கிராக் கமாண்டோ படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவில் இன்று 292 பேர்கள் உள்ளனர். இந்த பதினாறு ஆண்டில் 1996ஆம் ஆண்டு ரவுடி கபிலனை என்கவுண்டர் செய்தில் இந்தப் படையைச் சேர்ந்த பதினைந்து பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்தவிர இவர்களுக்கு வேறெந்த வேலையும் இல்லை. ஜெயலலிதாவின் தமிழக விஜயத்தில் பந்தாவுக்காக நிற்பதுதான் இப்படையின் சாதனை.

தற்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் சென்னை உள்ளதால் இப்படைக்கு நவீன ஆயுதங்களை வாங்க போலீசு அதிகாரிகள் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார்களாம். இப்படித்தான் நாடு முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசு அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. டெல்லியிலிருந்து ஒரு தலைவர் விஜயம் செய்தால் தனிவிமானம், புல்லட்புரூப் கார், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சோதித்தல், எல்லாம் புயல் வேகத்தில் நடக்கும். ஆனால் மும்பைத் தாக்குதலில் இப்படையினரின் செயல்பாட்டைப் பார்த்தால் இப்படை யாருக்கானது என்பது புரியவரும்.

புதன்கிழமை இரவு சிவாஜி டெர்மினசுக்குள் தீவிரவாதிகள் நுழையும் போது மணி 9.25. அப்போது கேரளாவிலிருந்த முதல்வர் தேஷ்முக்கிடம் இத்தகவல் தெரிவிக்கப்படும்போது நேரம் 11.00. அவர் உடனே டெல்லியிலிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் என்.எஸ்.ஜி படையினர் வேண்டுமெனக் கேட்டபோது நேரம் 11.30. அவர் எத்தனை வீரர்கள் வேண்டுமெனக் கேட்க முதல்வர் 200 எனப் பதிலளிக்கிறார்.

அடுத்து உள்துறை அமைச்சர் என்.எஸ்.ஜியின் தலைவர் ஜே.ஆர்.தத்தாவிடம் தொலைபேசியில் 200 வீரர்களை மும்பைக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார். தூக்கத்திலிருந்த கமாண்டோக்கள் எழுப்பப்பட்டு ஆயுதம், உடை தரித்து டெல்லி விமான நிலையம் செல்லும்போது நேரம் 1.00மணி. 200பேர்களை தாங்கிச் செல்லும் விமானம் அப்போது டெல்லியிலில்லை, சண்டீகரில் இருக்கிறது. அந்த நள்ளிரவில் ஐ.எல்.76 எனும் அந்த விமானத்தின் பைலட் எழுப்பப்பட்டு விமானத்தில் பெட்ரோல் நிரப்பி டெல்லி வந்து சேரும் போது நேரம் 2.00 மணி.

ஏர்பஸ், போயிங் போன்று இந்த விமானம் வேகமாக செல்லாதாம். டெல்லியிலிருந்து புறப்ப்பட்ட அந்த விமானம் மூன்று மணிநேரம் கழித்து அதிகாலை ஐந்து மணிக்கு மும்பை இறங்குகிறது. தூக்கக் கலக்கத்திலிருந்த கமாண்டோக்களை காத்திருந்த பேருந்துகள் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று இறக்கியது. அங்கு ஆப்பரேஷன் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு தீவிரவாதிகள் இருந்த இடத்திற்கு வீர்கள் செல்லும்போது மணி 7.30. அங்கு சாவகாசமாக உடைமைகளை இறக்கிய வீரர்கள் துப்பாக்கியை தூக்கியபடி நிலைகளுக்குச் செல்கின்றனர்.

ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அறிவுஜீவிகளின் வாதப்படி தீவிரவாதிகள் தாக்கத் துவங்கிய அரை மணிநேரத்திற்குள் எதிர்த்தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமாம். இல்லையேல் அவர்கள் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வார்களாம். இங்கு கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் தரப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள் இருந்த கட்டிடங்கள் குறித்து வீரர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் ஆரம்பத்தில ஒரே குழப்பம். ஆனால் கராச்சியிலிருந்து முதன்முறையாக மும்பை வந்திருக்கும் தீவிரவாதிகள் அந்த ஓட்டல்களின் புவியியலை மனப்பாடம் செய்திருந்தனர். காடு, கிராமம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் போரிட பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எப்படி சண்டையிடுவது என்று தெரியவில்லையாம். இதுவும் தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்திருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எல்லா இடங்களையும் சுற்றி வளைத்து, தாக்குதல் தொடுக்கும் ஒன்பது தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கு மொத்தம் 60 மணிநேரத்தை, சிலநூறு வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதிலும் இவர்களால் பணயக்கைதிகள் கொல்லப்பட்டது பற்றி கணக்கில்லை.

நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட 6 யூதர்களில் ஒரு சிலர் கமாண்டோக்களால் கொல்லப்பட்டதாக சில இசுரேலியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ராஜ்ஜிய உறவு பாதிக்கூடாது என்பதற்காக இசுரேல் அரசு இதை மறுத்திருக்கிறது.

அடுத்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலை ‘ரா’வும், ஐ.பியும் கடற்படைக்கும், மராட்டிய காவல் துறைக்கும் அனுப்பியதாகச் சாதிக்கின்றன. ஆனால் கடற்படை அட்மிரலும், மராட்டிய முதல்வரும் அப்படி ஒரு எச்சரிக்கை வரவேயில்லையென அடித்துக் கூறுகின்றனர். இதுதான் இவர்கள் செயல்படும் லட்சணமென்றால் புதிதாக வரப்போகும் தேசிய பெடரல் புலனாய்வு நிறுவனம் எதைச் சாதிக்கப்போகிறது? மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் நேரடியாக தலையீடு செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் கொண்ட இப்புதிய அமைப்பு மத்திய அரசின் சர்வாதிகார பணிகளுக்கே உதவி செய்யும். அதுவும் பா.ஜ.க ஆட்சியில் வந்தால் இந்துத்வத்தை எதிர்ப்பவர் அனைவரும் இப்பிரிவால் அடக்குமுறைக்குள்ளாவது நிச்சயம்.

பாக்கிற்கு ஐ.எஸ்.ஐ போல இந்தியாவிற்கு இருக்கும் ரா வின் ஒராண்டு பட்ஜட் ஆயிரம் கோடி ரூபாயாம். அதிலும் இந்தப்பணம் எப்படி ஏன் செலவழிக்கப்படுகிறது என்பது தேவரகசியம். பல ரா அதிகாரிகள் பிரம்மாண்டமாக வீடுகளை கட்டிக்கொண்டு ரா விற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களாம். மேலும் ரா வின் செயல்பாடுகள் என்பது ஐ.எஸ்.ஐயை விட சதித்தனமும் நரித்தனமும் நிறைந்தவை.

ஈழத்தில் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அழித்தது, அதேபோல வடகிழக்கில் பல்வேறு தேசிய இனங்களுக்கான குழுக்களின் முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டது, காஷ்மீரில் மதச்சார்பற்று இருந்த விடுதலைப் போராளிகளை மதச்சார்பாக மாற்றியது, கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, பாக்கிஸ்தானில் சன்னி பிரிவுக்கெதிரான ஷியா பிரிவுக்கு உதவி செய்தல், ஆப்கானில் வடக்குக்கூட்டணிக்கு ஆதராவாக வேலை செய்வது என அதன் கைங்கரியங்கள் பல. இதைத் தவிர மத்திய மாநில உளவுத் துறைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கான அரசியல் உளவுப்பணிகளில் ஈடுபடுவதுதான் முக்கியமான பணி.

இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படட இந்தப்படைப் பிரிவுகளும், புலனாய்வு அமைப்புக்களும் எந்தக் காலத்திலும் இந்திய மக்களைக் காப்பாற்ற முடியாது.

எவ்வித நியாயமுமின்றி அரசின் அலட்சியத்தால், அதிகார வர்க்கத்தின் திமிரால், ஏழையென்று ஒதுக்கும் இந்தச் சமூக அமைப்பால், நிஷா புயல் தாக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் 130க்கும் மேற்பட்ட மக்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தடியடி மூலம் கலைக்கும் போலீசுக்கு ஒரு ஆபத்தென்றால் அரசின் அடி முதல் தலை வரை துடிக்கும். மும்பைக்கு வந்த பயங்கரவாதிகளைக் கொன்று பல மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த போலீசு, இராணுவ வீரர்களை இவ்வளவு அலட்சியமாகப் பார்க்கலாமா என சில ‘ தேச பக்தர்கள் ‘ கொதிக்கலாம்.

சினிமாவின் செல்வாக்கில் இராணுவ வீரர்களை ஹீரோக்களாக பாவிப்பவர்கள் எவரும் போலீசு, இராணுவத்தின் உண்மை முகத்தை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

அமைதிப் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் கொன்ற கணக்கையும், கற்பழித்த கணக்கையும் ஈழத்தமிழர்களிடம் கேட்கவேண்டும். மனோரமா என்ற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரப்படுத்திச் சுட்டுக் கொன்ற அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவினரைக் கண்டித்து “இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்திய மணிப்பூர் தாய்மார்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்” என்ற சட்டத்தின் பாதுகாப்பில் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவத்தைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஐந்து லட்சம் துருப்புக்களை குவித்து எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை இராணுவத்தைப் பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

போலீசுக்காரர்களைப் பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஒரு காவல் நிலையத்தின் அருகிலேயே மக்களைக் கேட்டால் காததூரம் ஓடுவார்கள். இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரையும் தடியடி, துப்பாக்கிச்சூடு செய்து கொல்லுவதுதான் இத்துறையின் முதன்மைப்பணி. தாமிரபரணிப்படுகொலை முதல் நந்தி கிராம் படுகொலை வரை பல எடுத்துக்காட்டுகளை சமீப ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம்.

எனவே ஆட்சியாளர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இயங்கும் இந்தப் படைகள் புதிது புதிதாக பல பெயர்களில் பல நூறு கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெரும்பான்மைச் செலவே பாதுகாப்புத் துறைக்குத்தான் என்றாகிவிட்டது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரவர்க்கம் அதாவது ஐ.பி.எஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றால் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களென தற்போது பலரும் பேசுகிறார்கள்.

தெகல்கா நடத்திய முதல் ஆபரேஷனே இராணுவ அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். இதுபோக கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் மட்டுமல்ல விருது வாங்கியதிலும் ஊழல் சந்தி சிரித்தது இங்கே நினைவு கொள்ளவேண்டும். வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் தேவாரத்தின் அதிரடைப்படை நடத்திய அட்டூழியங்களை சதாசிவம் கமிஷனே அம்பலப்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.

இறுதியாக மும்பைத் தாக்குதலினால் கண்ட பலன் என்ன? இதுவரை அத்வானி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அதி உயர் பாதுகாப்பு இனி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், முத்தையா செட்டியார் போன்ற முதலாளிகளுக்கும் கிடைக்கும். மக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் இரண்டு பிரிவினரிடமிருந்தும் பாதுகாப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்ததாக நாம் அலசவேண்டிய கேள்வி மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள்?

-தொடரும்

நன்றி: http://vinavu.wordpress.com/2008/12/08/mumbai4/

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம்- 3 )

குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.

அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும்.

தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும் என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன?

இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.
ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை.

இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம்.

பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?
அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின.

இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார்.

இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்?

இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம்.

ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.
அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?

- தொடரும்

நன்றி: http://vinavu.wordpress.com/2008/12/05/mumbai3/

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 2 )

மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத்.

வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை.

தாஜ், ஓபராய் விடுதிகளில் உயிரிழந்து, அடிபட்ட முதலாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் சிவராஜ் பாட்டீல் உள்துறை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதில் நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.

மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற சிறிய தாக்குதல்கள் சகஜம் என்று கருத்துரைத்து ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மராட்டியத்தின் துணை முதல்வர் ஆர். ஆர். பாட்டீல் வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார். விலாஜிராவ் தேஷ்முக்கும் ராஜினாமா கடிதத்தை காங்கிரசு மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் முடிவு அவர்கள் கையில் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது விலகலையும் காங்கிரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோக காங்கிரசுக் காரிய கமிட்டியில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு விவாதித்தார்களாம்.

அவர்களுக்கு புரவலராக இருக்கும் முதலாளிகளுக்கு ஒரு ஆபத்து என்றதும் காங்கிரசின் மனசாட்டி துடிக்கிறது. ஏ.கே.அந்தோணி, பிரணாப் முகர்ஜி, இறுதியில் மன்மோகன் சிங்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்களாம். இறுதியில் சிவராஜ் பாட்டீலை மட்டும் இப்போதைக்கு விடுவித்து ஊடகங்களின் வாயை அடைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தார்மீகப் பொறுப்பு இப்போது மட்டும் நினைவுக்கு வரவேண்டிய அவசியமென்ன? காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?

2001 குஜராத் இனப்படுகொலையில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொடூரமாக சங்க பரிவார குண்டர்களால் கொல்லப்பட்டனரே அப்போது மோடியோ, அத்வானியோ, வாஜ்பாயியோ ஏன் ராஜினாமா செய்யவில்லை? மோடியின் தலைமையில் இந்துமதவெறிக் கும்பல் நடத்திய இந்த இனப்படுகொலையை கொலைகாரர்களின் வாக்குமூலத்திலிருந்தே தெகல்கா ஏடு அம்பலப்படுத்திய போதும் இவர்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியவில்லையே?

முதலாளிகளின் உயிருக்குள்ள மதிப்பு இசுலாமிய மக்களுக்கில்லையா? அவர்கள் என்ன ஆடுமாடுகளா? இன்றைய இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு அச்சாரம் போட்ட 93 மும்பைக் கலவரத்தை எடுத்துக் கொள்வோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களைக் கொன்று குவித்த இந்த கலவரத்தை தனது 300 ஆண்டு வரலாற்றில் மும்பை கண்டதில்லை. பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய கலவரத்தை நாடும் சந்தித்ததில்லை. உண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாதம் இதுதான். இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் இதுதான்.

92 டிசம்பர் ஆறாம் தேதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மும்பையில் அதைக் கொண்டாடும் முகமாக சிவசேனா மகா ஆரத்தி என்ற புதிய பண்டிகையை அறிமுகப்படுத்தியது. தெருவில் கும்பலாக நின்று கொண்டு முசுலீம் துவேச முழக்கங்களை முழங்கிக் கொண்டு ஆரத்தி எடுத்தவாறு இந்து மதவெறி மும்பை முழுவதும் தீயாய் பரப்பப்பட்டது. இதை அறுவடை செய்ய இந்துமதவெறியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தயாரிப்புடன் காத்திருந்தனர். மும்பைப் புறநகர் ஒன்றில் தொழிற்சங்க மோதலுக்காக இரு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டவுடன் சிவசேனா அதற்கு மதச்சாயம் பூசி கலவரத்தை துவக்கியது.

மூன்று இலட்சம் பிரதிகள் விற்கும் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் பால் தாக்கரே இசுலாமியர்களைக் கொல்லுமாறும் இனிவரும நாட்கள் நம்முடையவை எனவும் பகிரங்கமாகக் கலவரத்தைத் துவக்குமாறு ஆணையிட்டார். ஜனவரி 7 முதல் 20 வரை இரண்டு வார காலம் மும்பை சிவசேனா பிணந்தின்னிகளின் நகரமாகியது. உ.பியிலிருந்து ரொட்டித் தயாரிப்புத் தொழிலுக்காக வந்த முசுலீம் தொழிலாளிகள், மரவியாபாரம் செய்து வந்த கேரளாவின் மாப்ளா முசுலீம்கள், உ.பி, பீகாரின் சுமைதூக்கும் முசுலீம் தொழிலாளிகள் யாரும் தப்பவில்லை.

அன்றைய மும்பையின் மக்கள் தொகை ஒருகோடியே 26 இலட்சமென்றால் அதில் முசுலீம்களின் தொகை 14 இலட்சம். இதில் நான்கு லட்சம் முசுலீம் மக்கள் மும்பையை விட்டு வெளியேறினர். 40,000 பேர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஹிட்லரின் நாசிக் கட்சியின் பாணியில் முசுலீம் வீடுகளுக்கு பெயிண்டால் அடையாளமிட்டு ஆள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஏரியா மாறி சிவசேனா குண்டர்கள் இராணுவம் போல தாக்கினர். தாடிவைத்தவர்கள், சுன்னத் செய்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசுலீம்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டனர். அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளைக் கூட முசுலீம் குழந்தைகளா என்று பெயர் கேட்டு அடித்திருக்கின்றனர். சிவசேனாவை எதிர்த்து எழுதிய ஒருசில மும்பைப் பத்திரிகைகளும் பால்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கப்பட்டன. தாராவியிலிருந்த முசுலீம்களோடு தமிழ் மக்களும் கூட இந்தக்கலவரத்திற்காக நகரை விட்டு வெளியேறி தமிழகம் வந்தனர்.

மும்பைப் போலீசு சிவசேனாவின் பாதுகாப்புப் படையாக பணிபுரிந்தது. இன்றைக்கு தீவிரவாதிகளுடன் சமர்புரிந்தவர்கள் அன்று இந்து போலீசாக மட்டும் செயல்பட்டனர். அன்று முதலமைச்சராக இருந்த நாயக்கோ, பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு சிவசேனாவின் அட்டூழியங்களுக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர். அரசுக் கணக்குப்படி 500 முசுலீம்களும், பத்திரிகைகளின் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

எல்லோருக்கும் வாழ்வளித்து மாநகரக் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்த மும்பை இந்துமதவெறியால் அப்போதுதான் பிளவுண்டது. முதன்முறையாக பணக்கார முசுலீம்களும் கலவரத்தில் தாக்கப்பட்டனர். இப்போது தாஜ் ஓட்டலுக்காக கண்ணீரைத் தாரைவார்க்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் எதுவம் அன்று இரத்தக் கறைபடிந்த மும்பை தனது அழகை இழந்துவிட்டதென வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டுப் பாரமும் சுமக்கவில்லை. அப்படிடச் சுமந்திருந்தால் அவர்களது புண்ணியத் தலமான தாஜ் ஓட்டலுக்கு நேர்நத களங்கத்தை தவிர்த்திருக்கலாமே?

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வற்புறுத்தலால் பின்னாளில் காங்கிரசு அரசு 93 மும்பைக் கலவரம் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிழஷனை நியமித்தது. சிவசேனாவின் மிரட்டலான சூழ்நிலையையும் மீறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குற்றமிழைத்த தாக்கரேக் கட்சியனரையும், போலீசு அதிகாரிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் இந்தக்கமிஷனின் அறிக்கை இன்றுவரை குப்பைக் கூடையில் தூங்குவதுதான் கண்ட பலன். கலவரத்தைத்தான் தடுக்கவில்லை, கலவரத்தின் குற்றவாளியைக்கூட கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு யார் தார்மீகப் பொறுப்பேற்பது?

நாரிமன் இல்லத்தில் இசுரேலியர்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றதுமே இசுரேலிய அரசின் வற்புறுத்தலுக்கேற்ப அமெரிக்க அரசு கமாண்டோ படை அனுப்பட்டுமா என்று இந்திய அரசைக் கேட்டது. உடனே பிரனாப் முகர்ஜி இந்த நாட்டை 61 ஆண்டுகளாக ஆண்டு வருகிறோம், எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறோம், அமெரிக்க உதவி தேவையில்லை என்று ரோஷத்துடன் பேட்டியளித்தார்.

இந்த மானம் குஜராத், மும்பைக் கலவரங்கள் நடக்கும் போது எங்கே போயிற்று? பத்தாண்டு காலத்தில் இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது காங், பா.ஜ.க அரசின் வேளாண் துறை அமைச்சர்கள் எவரும் ராஜினாமா செய்வது இருக்கட்டும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே? இவ்வளவுபேர் இறந்து போனதால் வராத ரோஷம் தாஜ் ஓட்டலின் பாரைக் காலி செய்த உடன் பொத்துக் கொண்டு வருகிறதே?

இன்றைக்கு ஒன்றுக்கு மூன்று தாக்கரேக்கள் மராட்டியத்தில் வலம் வருகிறார்கள். மருமகன் ராஜ் தாக்கரே தனி சமஸ்தானத்தை உருவாக்குவதற்கு அப்பாவி பீகாரி தொழிலாளிகளையும், மாணவர்களையும் தனது வானரப்படையால் தாக்கி வருகிறார். அப்போது கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு பயம்? 2008 இல் இதுதான் நிலைமை என்றால் 93 இல் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அன்றைக்கு அப்பாவி முசுலீம்களை வேட்டையாடிய தாக்கரேக்கள் இப்போது துப்பாக்கியுடன் வந்தவர்களைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

மும்பைத் தாக்குதல் குறித்து பெரிய தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் ஒன்றும் சீறக் காணோம். இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?

இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் - புலனாய்வுப் பிரிவு - போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

- தொடரும்

நன்றி: http://vinavu.wordpress.com/2008/12/04/mumbaip/

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1)

” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எ

ந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.
குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்புதான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.


அந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள்.

தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.

இப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.

பத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக்குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர்.

இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன.

வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று.

இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.

குண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும் இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.


இந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.


அமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள். விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள்.

நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா, புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.

ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை.

இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.


அவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர்! உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை, பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு! தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர்.

இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.


சிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள்! உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம்.

தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கும் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை!


கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது! இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா?


சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும்? மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால் ஒரு அர்த்தம் உண்டு.

நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம்? ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது? ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.


மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம்.

இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.

மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.

புதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு!

ஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள்.

மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம்பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.

கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை.

அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?

- தொடரும்

நன்றி: http://vinavu.wordpress.com/2008/12/03/mumbaip1/

வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம்

வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நாங்கள் அடைந்த துன்பமெல்லாம் மிகச்சாதாரணம் எனுமளவுக்கு ஏனைய மக்களின் வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், டெல்டா மாவட்டங்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் தவிக்கின்றன. சில பகுதிகள் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பை நகரம் வழங்கியிருக்கிறது என்றாலும் கிராமங்களில் அந்த நிலைமை இல்லை. அவர்களின் வாழ்க்கை எல்லா விதத்திலும் அங்கேயே சிக்குண்டிருக்கிறது என்பதால் எதையும் விட்டுவிட்டு நினைத்த மாத்திரத்தில் வெளியேறுவது சாத்தியமில்லை.


பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படட சம்பாப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. சில இடங்களில் கால்நடைகளையும் கூட மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளையும், தெருக்களையும், முழுக் கிராமத்தையும் வெள்ளநீர் சூழ்ந்து எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறிப்பாக பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார்கள். இத்தகைய காட்சிகளை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.
சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு அத்தியாவசப் பொருட்கள் சப்ளை இல்லை.

உணவில்லாமல் பெரியவர்கள் வேண்டுமானால் சில நாட்கள் சமாளித்துக் கொள்ளலாம். பாலின்றி அழும் குழந்தைக்கு என்ன செய்வது? சுற்றிலும் மழைநீர் கடல்போல தேங்கியிருந்தாலும் குடிநீர் இல்லை, எங்கே சேகரிப்பது? கையில் பணமிருந்தாலும் வாங்குவதற்கு கடைகள் இல்லை என்றால் யாரிடம் முறையிடுவது? வீட்டில் எல்லா வசதிகளையும் அளிக்கும் எந்திரங்களும் இருந்தாலும் அவற்றை எப்படிக் காப்பாற்றுவது? இவ்வளவு இன்னல் இருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லையென்றால் சம்பளத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. வேலைக்குச் செல்லவேண்டுமென்றாலும் பேருந்துகள் இல்லை. ஆம், மழை தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் அளவில்லாதவை.


இதுவரை மழையினால் மட்டும் 130க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களைப் போலன்றி இங்கே இயற்கையான மழையின் தாக்குதலுக்காகப் பலி கொடுத்திருக்கிறோம். மேலை நாடுகளில் இந்த எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தால் அது உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி! ஏழை நாடு என்பதால் இங்கே பலியாகும் கணக்கிற்கு மதிப்பில்லை.
சாதாரண நாட்களிலேயே முடங்கிக்கிடக்கும் அரசு நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் மட்டும் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சோகங்களுடன் பல்லைக் கடித்துக்கொண்டு மழைக்காலத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவர்கள் இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இ

வ்வளவு துயரத்திற்கும் காரணம் புயலையும், பேய்மழையையும் பொதிந்து வைத்திருக்கும் இயற்கைதான் என்று சுலபத்தில் தீர்மானித்து விடலாம்தான். ஆனால் இந்த துயரத்திற்கு இயற்கை காரணமல்ல. வருடா வருடம் பெய்யவேண்டிய மழை சற்றுக்கூடியோ, குறைந்தோ காலத்திற்கேற்றபடி பெய்துகொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமாகும் பிரச்சினையால் இந்த அளவில் சில குளறுபடிகள் நடக்கலாம். பல நூற்றாண்டுகளாக தமிழக விவசாயிகள் அந்த மழை நீரை தேக்கிவைத்து, நீர் இல்லாத பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்காக உருவாக்கிய வலைப்பின்னல்கள் கடந்த முப்பதாண்டுகளாக நகரமயமாக்கம் என்ற பெயரில் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கின்றன.


இயல்பாகப் பெய்யும் மழை மண்ணில் நிரம்பி, தேவையான இடத்திற்கு செல்ல முடியாமல், கடலிலும் சேர வழியின்றி தாழ்வான மக்கள் குடியிருப்புக்களை வேறுவழியின்றி சூழ்ந்து கொள்கின்றது. தற்போது தமிழகத்தின் நகரமயமாக்கம் ஏறக்குறைய 50 சதவீதத்தை எட்டிவிட்டது. இந்த தீடீர் வளர்ச்சி விவசாயம் மற்றும் அதன் நீர்ப்பாசன வசதியைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட செயற்கையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து உப்பவைக்கப்பட்ட அடிப்படையற்ற அலங்காரமான வளர்ச்சி.
மேலை நாடுகளில் தொழிற்துறையின் தேவைகாரணமாக நகரங்கள் தோன்றி வளர்ந்தன. அதனால் அவை ஒரவளவிற்கு திட்டமிடப்பட்ட வகையில் மாநகரங்களாக வளர்நதன. விவசாயமும் நவீன முறை உற்பத்தியாக மாற்றப்பட்டு வளர்ச்சியடைந்ததால் அங்கே இந்தப் பிரச்சினை இந்தியாவின் அளவுக்கு இல்லை. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான இருபது ஆண்டுகளில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதனால் வாழவழியின்றி கோடிக்கணக்கான மக்கள் நகரங்களை பிழைப்பிற்காக தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நகரங்களும் தொழிற்துறை உற்பத்தியால் வளரவில்லை.

சொல்லப்போனால் உலகமயமாக்கம் அரங்கேறிய இந்த ஆண்டுகளில் பல சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கு எது தேவையோ அதை செய்து முடிப்பது என்ற அளவில் பொருளாதாரம் வடிவமைகக்ப்பட்டது. இதனால் இந்தியாவின் தேசிய பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு கிராமங்களிலிருந்து வரும் மக்களை குறைந்த ஊதியத்தில் தமது தேவைக்கேற்ற வேலைகளுக்காக முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


தமிழகத்தில் அப்படி ஒன்றும் தொழில் வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் இல்லை. சென்னை, கோவை என இரண்டு மண்டலங்களை நீக்கிவிட்டால் இங்கே பெரிய தொழிற்துறை வளர்ச்சி கிடையாதென அறுதியிடலாம். இந்த இரண்டு மண்டலங்களிலும் உற்பத்தி துறை நசிந்து, தகவல் தொழில் நுட்பத் துறை மட்டும் வளர்ந்திருப்பதுதான் யதார்த்த நிலவரம். ஆண்டுக்கு 7000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூரை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் பிரபலமான தொடர் கடைகளுக்காக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்நகரம் வாழ வழியற்ற தென்மாவட்ட மக்களுக்கு குறைந்த பட்ச வாழ்க்கையை உத்திரவாதம் செய்கிறது. 12 மணிநேர வேலை, தீப்பெட்டி குடியிருப்பு, ஆஸ்மா பிரச்சினை, குடிநீருக்கான நள்ளிரவு யுத்தம், நொய்யல் ஆறு ரசாயன கழிவால் நிரம்பியது, சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் மாசுபட்டது, என பல பிரச்சினைகள் திருப்பூரை கவ்வியிருக்கின்றன.


ஆக வால்மார்ட் அமெரிக்காவில் சம்பாதிப்பதற்காக இங்கே நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும் பாழ்படுத்தி நமது தொழிலாளிகளையும் கசக்கி பிழிகிறார்கள் என்றால் இதுதான் ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலுக்காக இந்தியாவில் உருவாக்கியிருக்கும் நகரமயமாக்கம். இத்தனைக்கும் திருப்பூரில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தாலும் இவர்களில் 90 சதவீதத்தினர் தினசரிக் கூலிகளாகத்தன் நடத்தப்படுகின்றனர். இவர்கள் திருப்பூரில் கழிக்கும் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மழை தரும் துன்பமெல்லாம் சாதாரணம். ஏதோ சில கோவை கவுண்டர்கள் சில கோடிகள் சம்பாதிப்பதற்கும், அமெரிக்க முதலாளிகள் பல நூறு கோடிகள் சம்பாதிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மாபெரும் நரகம்தான் திருப்பூர் நகரம்.

இதை தற்போது தமிழக அரசு மாநகரமாக அறிவித்திருக்கிறது. இந்தப் பெருமையை அறிந்து கொள்ள திருப்பூரில் ஒரு வருடம் தங்கினால் போதும், அதன் பிறகு உலகின் எவ்வளவு மோசமான நகர்ப்புறச் சேரிகளிலும் தங்குவதற்கான பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம். இதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.


சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சியால் மாநகரம் மா….நகரமாக பெருத்து வருகிறது. இதற்குத் தேவைப்படும் கட்டிடங்கள், அதைக் கட்டுவதற்கு இந்தியாவெங்கிலிருந்தும் வரும் தொழிலாளர்கள், மேட்டுக் குடியனருக்கு தேவைப்படும் கேளிக்கை வசதிகள், இப்படி சில பிரிவனருக்காக சேவை செய்கின்ற அளவில் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்பபணிக்கும் வகையில் நகரம் பெருத்து வருகிறது. சென்னையில் மாதம் சில பல ஆயிரங்களை வருமானமாக ஈட்டும் பிரிவினர் சில இலட்சமென்றால் இவர்களுக்காக ஆட்டோ ஓட்டுநராக, கட்டடம் கட்டும் தொழிலாளியாக, சத்யம் திரையரங்கு செக்யூரிட்டியாக, பேருந்து ஒட்டுநராக, கடைச் சிப்பந்தியாக வாழும் மக்கள் பல இலட்சம்பேர் இருக்கிறார்கள். ஐ.டி துறை புண்யவான்களின் தயாவால் ஏற்றிவிடப்ட்ட வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விலைகள் காரணமாக இந்த மக்கள் புறநகரங்களுக்கு செல்வதும், முன்னாள் ஏரிகள் இந்நாள் குடியிருப்புக்களாக மாற்றப்படுவதும் ராக்கெட் வேகத்தில் நடக்கிறது.


நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பெய்த பேய் மழை இப்போதைய அளவை விட அதிகமென்றாலும் அப்போதைய பாதிப்பைவிட இப்போதைய பாதிப்பு அதிகம். காரணம் இடைக்காலத்தில் பல தாழ்வுப் பிரதேசங்கள் பெருங் குடியிருப்புக்களாக மாறிவிட்டதுதான். ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தை வானில் விமானத்திலிருந்து பார்த்தால் மாபெரும் பூசணிக்காய் தோட்டம் போல தோன்றுமாம். ஏரிகள் பூசணிக்காய் போலவும் அவற்றை இணைக்கும் கால்வாய்கள் கொடிபோலவும் தெரியுமாம். இப்போது காயையும் காணவில்லை, கொடிகள் அழிந்த தடயமும் தெரியவில்லை, எல்லாம் காங்கீரீட் காடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.


தற்போது சென்னைக்கு குடிநீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், மற்றும் அம்பத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரி என பல ஏரிகளுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழையால் வரும் வெள்ளத்தை தேக்கிவைக்க முடியாமல் திறந்துவிடுகிறார்கள். முன்பு இந்த ஏரிகள் நிறைந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு ஏல்லா நீரையும் வீணாக்காமல் பகிர்நது கொள்ளும். இப்போது அந்த தொடர்பு சிங்காரச் சென்னையால் அறுக்கப்பட்டிருப்பதால் கடலிலும் சேர முடியால் வெள்ளம் தாழ்வான குடியிருப்புக்களை குறிவைத்துத் தாக்குகிறது.


இந்த மழையால் மட்டும் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைபட்டிருக்கின்றன. சென்னைக்கு நடந்ததுதான் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியிருக்கின்றது. நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்களையும், மேம்பாலங்களையும், வழுக்கிச் செல்லும் அகலமான சாலைகளையும் பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கும் அரசு விவசாய நீர்ப்பாசன வசதிகளுக்காக சில கோடிகளைக்கூட ஒதுக்கவில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் தேவையான நகரத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கும் அரசு கிரமாப்புறங்களையும், விவசாயத்தையும், நகரத்து சேரிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

எனவேதான் மீண்டும் வலியுறுத்துகிறோம், விவசாயத்தை அழித்து உருவாக்கப்படும் இந்த நகரங்கள் போர்களைவிட பேரழிவுகளைத்தான் கொண்டுவரும். இதற்கான முன்னோட்டம்தான் சமீக ஆண்டுகளாக வரும் மழைக்காலத் துயரங்கள். இன்னமும் கிராமங்களின் வாழ்க்கையால் பெரும்பான்மை மக்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது அந்த கிராமங்களின் பாதுகாப்புதான் இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சில இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது இந்த அரசு ஏகாதிபத்திய சேவைக்காக மட்டும் இருக்கிறது என்பதை உரக்க அறிவிக்கிறது.


இந்தியாவின் மாநகரங்கள் அனைத்தும் கிராமங்களை அழித்துத்தான் மிளிர்கின்றன. அப்படி மிளிரும் நகரங்களிலும் ஏழைகள் ஒதுக்குப்புறமான சேரிகளில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்காக சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லயில் காமன்வெல்த் விளையாட்டிற்காக சில ஆயிரம் கோடிகளை செலவழித்து வரும் அரசு பல சேரிகளை கொத்துக் கொத்தாக நகரைவிட்டு வெளியே தூக்கி எறிந்திருக்கிறது. மும்பையில்தான் நகரமயமாக்கம் நிகழ்த்தியிருக்கும் அநீதி உச்சத்தில் இருக்கிறது. அங்கே பெருமழை பெய்தால் தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்திருப்பவர்களைவிட அதிகமானபேர் பலியாவார்கள்.

போதிய இடமின்றி குவித்துவைக்கப்பட்ட தீப்பட்டிகளைப் போல இருக்கும் சேரிகளில் மழை பெய்தால் அது தோற்றுவிக்கும் அலத்தை இலக்கியம் கூடப் படம் பிடிக்க முடியாது. பம்பாயின் சேரிகளில் வாழ்வதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும். இத்தகைய சேரிகளில்தான் மாநகரங்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் உழைக்கும் மக்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கும் அதன் வளர்ச்சிக்குமெதிராக செயற்கையான முறையில் முதலாளிகளின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படும் இந்த நகர்ப்புற வளர்ச்சி பெரும்பான்மை மக்களை அன்றாடம் வதைக்கும் மாபெரும் காங்கீரிட் எந்திரமாக மட்டுமே இயங்குகிறது.


இந்த அநீதியை அரசியல் அரங்கில் நாம் எதிர்த்துப் போராடுவதில்தான் தீர்வு மறைந்திருக்கிறது. நகர்ப்புற பயங்கரவாதம் நகரத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் மொத்தமாக சித்திரவதை செய்து கொல்லும் கிருமிநாசினி. இதை இயற்கைப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி சுருக்கித் திரிக்காமல், அரசியல் பிரச்சினையாக உணர்ந்து கொள்வதுதான் தற்போதைய தேவை. அப்போதுதான் மழையின் துயரத்தை மனித சமூகம் வெற்றி கொள்ளும் நிலையை நாம் அடைய முடியும்.

நன்றி: http://vinavu.wordpress.com/2008/11/29/flood/
நமது கணினியில் எத்தனையோ கோப்புகள் (Files) இருக்கின்றன. ஒவ்வொரு கோப்புகளுக்கும் ஒவ்வொரு பெயர்கள்.

உதாரணமாக ஒரு கோப்பு : svchost.exeWindows Task Manager ல் பார்த்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, இந்த svchost.exe இயங்கிக் கொண்டிருக்கும்.

இது போல பலவிதமான கோப்புகளின் மூலம் கணினி இயங்குகிறது.ஏதேனும் ஒரு கோப்பால் நமது கணினிக்கு தீங்கு ஏதும் விளைந்திருக்குமோ என மனம் சந்தேகிக்கிறது.

Windows Task Managerல் தேவையில்லாமல் ஏதோ ஒன்று அதிக நினைவகத்தை ஆக்கிரமித்திருப்பது தெரிகிறது. சரி அந்தக் கோப்பின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, அதைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அதாவது அது தீங்கு விளைவிக்கக் கூடியதா? இல்லையா? - எனத் தெரிந்துகொள்ள என்ன செய்வது?http://www.whatisthatfile.com/ தளத்தை நாடவும்

அதில் உள்ள textbox ல் கோப்பின் பெயரை மட்டும் உள்ளீடு செய்யவும். தளம் நமக்குத் தரும் தகவலின் அடிப்படையில் கோப்பின் நன்மை / தீமைகளை அறியலாம்.

இது போன்று ஒரு .dll அல்லது .exe இவற்றின் தன்மைகளை அறிய இந்தத் தளத்தை நாடலாம் : http://www.processlibrary.com/

நன்றி: http://tamizh2000.blogspot.com/2008/12/blog-post_4499.html

ஆபீஸ் 2007ன் கோப்புகள் பற்றி ஒரு ஆய்வு

Microsoft நிறுவனத்தின் Office 2003 பயன்பாடு பற்றியும், அதன் compatibility mode (ஒத்திசைவு) எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில் அதன் கோப்பு வடிவம் -Fileformat ஆனது .DOC,.XLS, .PPT என்றே இருக்கும்.

ஆனால் ஆபீஸ் 2007ல் கோப்பு வடிவத்தை .DOCX,PPTX,XLSX என மாற்றிவிட்டனர் (வியாபார காந்தம் - Business Magnet).

இதனால் வந்த பின்விளைவு என்ன?DOCX கோப்புகளை Word 2007ல் மட்டும்தான் காண இயலும். ஆனால் நம்மிடம் இருப்பது Word 2003 தான்.

இப்போது DOCX கோப்புகளை குறைந்தபட்சம் பார்வையிடவாவது செய்ய வேண்டும்.Office 2007 வைத்து இருப்பவர்களுக்கு இந்தப் பதிவால் எந்த உபயோகமும் இல்லை.

இந்தப் பதிவின் முக்கிய எண்ணம் Office 2003, Office XP மட்டும் வைத்து இருப்பவர்களுக்கு உதவுவதே.அதற்காக இந்த மென்பொருள்களைத் தரவிறக்கி (Download) நிறுவவும் (Install).

Excel ViewerWord ViewerPowerPoint Viewer 2007பின்பு அவற்றை நிறுவி அதன் மூலம் Office 2007 மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளைக் கண்ணுறலாம்.

மேலும் ஆபீஸ் 2003 வாயிலாகவே, அடுத்த பரம்பரை கோப்பு வடிவங்களான docx, pptx, xlsx களை உருவாக்க என்ன செய்வது?

அதற்காக - Microsoft Office Compatibility Pack for Word, Excel, and PowerPoint 2007 File Formats மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

அல்லது இதற்கான மேம்படுத்தப்பட்ட Service Pack 1 : இதோ இங்கே இதையெல்லாம் இணையிறக்கி நிறுவ நேரமில்லை.

தடாலடியாக உடனே ஏதாவது செய்து 2007ல் உருவாக்கிய கோப்புகளை 2003க்கு மாற்றுவதற்கு என்ன செய்வது?http://www.zamzar.com/ தளத்தில் 2007 கோப்புகளை ஏற்றி இறக்கினால் போதும்.

ஆனால் அடுத்தவர் (3rd party) தளத்தில் இரகசியமான (confidential) விசயங்களை ஏற்றி,இறக்குவது சரியா?

நன்றி: http://tamizh2000.blogspot.com/2008/12/2007.html