வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நாங்கள் அடைந்த துன்பமெல்லாம் மிகச்சாதாரணம் எனுமளவுக்கு ஏனைய மக்களின் வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், டெல்டா மாவட்டங்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் தவிக்கின்றன. சில பகுதிகள் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பை நகரம் வழங்கியிருக்கிறது என்றாலும் கிராமங்களில் அந்த நிலைமை இல்லை. அவர்களின் வாழ்க்கை எல்லா விதத்திலும் அங்கேயே சிக்குண்டிருக்கிறது என்பதால் எதையும் விட்டுவிட்டு நினைத்த மாத்திரத்தில் வெளியேறுவது சாத்தியமில்லை.
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படட சம்பாப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. சில இடங்களில் கால்நடைகளையும் கூட மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளையும், தெருக்களையும், முழுக் கிராமத்தையும் வெள்ளநீர் சூழ்ந்து எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறிப்பாக பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார்கள். இத்தகைய காட்சிகளை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.
சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு அத்தியாவசப் பொருட்கள் சப்ளை இல்லை.
உணவில்லாமல் பெரியவர்கள் வேண்டுமானால் சில நாட்கள் சமாளித்துக் கொள்ளலாம். பாலின்றி அழும் குழந்தைக்கு என்ன செய்வது? சுற்றிலும் மழைநீர் கடல்போல தேங்கியிருந்தாலும் குடிநீர் இல்லை, எங்கே சேகரிப்பது? கையில் பணமிருந்தாலும் வாங்குவதற்கு கடைகள் இல்லை என்றால் யாரிடம் முறையிடுவது? வீட்டில் எல்லா வசதிகளையும் அளிக்கும் எந்திரங்களும் இருந்தாலும் அவற்றை எப்படிக் காப்பாற்றுவது? இவ்வளவு இன்னல் இருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லையென்றால் சம்பளத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. வேலைக்குச் செல்லவேண்டுமென்றாலும் பேருந்துகள் இல்லை. ஆம், மழை தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் அளவில்லாதவை.
இதுவரை மழையினால் மட்டும் 130க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களைப் போலன்றி இங்கே இயற்கையான மழையின் தாக்குதலுக்காகப் பலி கொடுத்திருக்கிறோம். மேலை நாடுகளில் இந்த எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தால் அது உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி! ஏழை நாடு என்பதால் இங்கே பலியாகும் கணக்கிற்கு மதிப்பில்லை.
சாதாரண நாட்களிலேயே முடங்கிக்கிடக்கும் அரசு நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் மட்டும் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சோகங்களுடன் பல்லைக் கடித்துக்கொண்டு மழைக்காலத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவர்கள் இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இ
வ்வளவு துயரத்திற்கும் காரணம் புயலையும், பேய்மழையையும் பொதிந்து வைத்திருக்கும் இயற்கைதான் என்று சுலபத்தில் தீர்மானித்து விடலாம்தான். ஆனால் இந்த துயரத்திற்கு இயற்கை காரணமல்ல. வருடா வருடம் பெய்யவேண்டிய மழை சற்றுக்கூடியோ, குறைந்தோ காலத்திற்கேற்றபடி பெய்துகொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமாகும் பிரச்சினையால் இந்த அளவில் சில குளறுபடிகள் நடக்கலாம். பல நூற்றாண்டுகளாக தமிழக விவசாயிகள் அந்த மழை நீரை தேக்கிவைத்து, நீர் இல்லாத பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்காக உருவாக்கிய வலைப்பின்னல்கள் கடந்த முப்பதாண்டுகளாக நகரமயமாக்கம் என்ற பெயரில் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கின்றன.
இயல்பாகப் பெய்யும் மழை மண்ணில் நிரம்பி, தேவையான இடத்திற்கு செல்ல முடியாமல், கடலிலும் சேர வழியின்றி தாழ்வான மக்கள் குடியிருப்புக்களை வேறுவழியின்றி சூழ்ந்து கொள்கின்றது. தற்போது தமிழகத்தின் நகரமயமாக்கம் ஏறக்குறைய 50 சதவீதத்தை எட்டிவிட்டது. இந்த தீடீர் வளர்ச்சி விவசாயம் மற்றும் அதன் நீர்ப்பாசன வசதியைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட செயற்கையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து உப்பவைக்கப்பட்ட அடிப்படையற்ற அலங்காரமான வளர்ச்சி.
மேலை நாடுகளில் தொழிற்துறையின் தேவைகாரணமாக நகரங்கள் தோன்றி வளர்ந்தன. அதனால் அவை ஒரவளவிற்கு திட்டமிடப்பட்ட வகையில் மாநகரங்களாக வளர்நதன. விவசாயமும் நவீன முறை உற்பத்தியாக மாற்றப்பட்டு வளர்ச்சியடைந்ததால் அங்கே இந்தப் பிரச்சினை இந்தியாவின் அளவுக்கு இல்லை. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான இருபது ஆண்டுகளில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதனால் வாழவழியின்றி கோடிக்கணக்கான மக்கள் நகரங்களை பிழைப்பிற்காக தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நகரங்களும் தொழிற்துறை உற்பத்தியால் வளரவில்லை.
சொல்லப்போனால் உலகமயமாக்கம் அரங்கேறிய இந்த ஆண்டுகளில் பல சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கு எது தேவையோ அதை செய்து முடிப்பது என்ற அளவில் பொருளாதாரம் வடிவமைகக்ப்பட்டது. இதனால் இந்தியாவின் தேசிய பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு கிராமங்களிலிருந்து வரும் மக்களை குறைந்த ஊதியத்தில் தமது தேவைக்கேற்ற வேலைகளுக்காக முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் அப்படி ஒன்றும் தொழில் வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் இல்லை. சென்னை, கோவை என இரண்டு மண்டலங்களை நீக்கிவிட்டால் இங்கே பெரிய தொழிற்துறை வளர்ச்சி கிடையாதென அறுதியிடலாம். இந்த இரண்டு மண்டலங்களிலும் உற்பத்தி துறை நசிந்து, தகவல் தொழில் நுட்பத் துறை மட்டும் வளர்ந்திருப்பதுதான் யதார்த்த நிலவரம். ஆண்டுக்கு 7000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூரை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் பிரபலமான தொடர் கடைகளுக்காக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்நகரம் வாழ வழியற்ற தென்மாவட்ட மக்களுக்கு குறைந்த பட்ச வாழ்க்கையை உத்திரவாதம் செய்கிறது. 12 மணிநேர வேலை, தீப்பெட்டி குடியிருப்பு, ஆஸ்மா பிரச்சினை, குடிநீருக்கான நள்ளிரவு யுத்தம், நொய்யல் ஆறு ரசாயன கழிவால் நிரம்பியது, சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் மாசுபட்டது, என பல பிரச்சினைகள் திருப்பூரை கவ்வியிருக்கின்றன.
ஆக வால்மார்ட் அமெரிக்காவில் சம்பாதிப்பதற்காக இங்கே நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும் பாழ்படுத்தி நமது தொழிலாளிகளையும் கசக்கி பிழிகிறார்கள் என்றால் இதுதான் ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலுக்காக இந்தியாவில் உருவாக்கியிருக்கும் நகரமயமாக்கம். இத்தனைக்கும் திருப்பூரில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தாலும் இவர்களில் 90 சதவீதத்தினர் தினசரிக் கூலிகளாகத்தன் நடத்தப்படுகின்றனர். இவர்கள் திருப்பூரில் கழிக்கும் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மழை தரும் துன்பமெல்லாம் சாதாரணம். ஏதோ சில கோவை கவுண்டர்கள் சில கோடிகள் சம்பாதிப்பதற்கும், அமெரிக்க முதலாளிகள் பல நூறு கோடிகள் சம்பாதிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மாபெரும் நரகம்தான் திருப்பூர் நகரம்.
இதை தற்போது தமிழக அரசு மாநகரமாக அறிவித்திருக்கிறது. இந்தப் பெருமையை அறிந்து கொள்ள திருப்பூரில் ஒரு வருடம் தங்கினால் போதும், அதன் பிறகு உலகின் எவ்வளவு மோசமான நகர்ப்புறச் சேரிகளிலும் தங்குவதற்கான பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம். இதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.
சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சியால் மாநகரம் மா….நகரமாக பெருத்து வருகிறது. இதற்குத் தேவைப்படும் கட்டிடங்கள், அதைக் கட்டுவதற்கு இந்தியாவெங்கிலிருந்தும் வரும் தொழிலாளர்கள், மேட்டுக் குடியனருக்கு தேவைப்படும் கேளிக்கை வசதிகள், இப்படி சில பிரிவனருக்காக சேவை செய்கின்ற அளவில் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்பபணிக்கும் வகையில் நகரம் பெருத்து வருகிறது. சென்னையில் மாதம் சில பல ஆயிரங்களை வருமானமாக ஈட்டும் பிரிவினர் சில இலட்சமென்றால் இவர்களுக்காக ஆட்டோ ஓட்டுநராக, கட்டடம் கட்டும் தொழிலாளியாக, சத்யம் திரையரங்கு செக்யூரிட்டியாக, பேருந்து ஒட்டுநராக, கடைச் சிப்பந்தியாக வாழும் மக்கள் பல இலட்சம்பேர் இருக்கிறார்கள். ஐ.டி துறை புண்யவான்களின் தயாவால் ஏற்றிவிடப்ட்ட வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விலைகள் காரணமாக இந்த மக்கள் புறநகரங்களுக்கு செல்வதும், முன்னாள் ஏரிகள் இந்நாள் குடியிருப்புக்களாக மாற்றப்படுவதும் ராக்கெட் வேகத்தில் நடக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பெய்த பேய் மழை இப்போதைய அளவை விட அதிகமென்றாலும் அப்போதைய பாதிப்பைவிட இப்போதைய பாதிப்பு அதிகம். காரணம் இடைக்காலத்தில் பல தாழ்வுப் பிரதேசங்கள் பெருங் குடியிருப்புக்களாக மாறிவிட்டதுதான். ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தை வானில் விமானத்திலிருந்து பார்த்தால் மாபெரும் பூசணிக்காய் தோட்டம் போல தோன்றுமாம். ஏரிகள் பூசணிக்காய் போலவும் அவற்றை இணைக்கும் கால்வாய்கள் கொடிபோலவும் தெரியுமாம். இப்போது காயையும் காணவில்லை, கொடிகள் அழிந்த தடயமும் தெரியவில்லை, எல்லாம் காங்கீரீட் காடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.
தற்போது சென்னைக்கு குடிநீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், மற்றும் அம்பத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரி என பல ஏரிகளுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழையால் வரும் வெள்ளத்தை தேக்கிவைக்க முடியாமல் திறந்துவிடுகிறார்கள். முன்பு இந்த ஏரிகள் நிறைந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு ஏல்லா நீரையும் வீணாக்காமல் பகிர்நது கொள்ளும். இப்போது அந்த தொடர்பு சிங்காரச் சென்னையால் அறுக்கப்பட்டிருப்பதால் கடலிலும் சேர முடியால் வெள்ளம் தாழ்வான குடியிருப்புக்களை குறிவைத்துத் தாக்குகிறது.
இந்த மழையால் மட்டும் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைபட்டிருக்கின்றன. சென்னைக்கு நடந்ததுதான் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியிருக்கின்றது. நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்களையும், மேம்பாலங்களையும், வழுக்கிச் செல்லும் அகலமான சாலைகளையும் பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கும் அரசு விவசாய நீர்ப்பாசன வசதிகளுக்காக சில கோடிகளைக்கூட ஒதுக்கவில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் தேவையான நகரத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கும் அரசு கிரமாப்புறங்களையும், விவசாயத்தையும், நகரத்து சேரிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
எனவேதான் மீண்டும் வலியுறுத்துகிறோம், விவசாயத்தை அழித்து உருவாக்கப்படும் இந்த நகரங்கள் போர்களைவிட பேரழிவுகளைத்தான் கொண்டுவரும். இதற்கான முன்னோட்டம்தான் சமீக ஆண்டுகளாக வரும் மழைக்காலத் துயரங்கள். இன்னமும் கிராமங்களின் வாழ்க்கையால் பெரும்பான்மை மக்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது அந்த கிராமங்களின் பாதுகாப்புதான் இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சில இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது இந்த அரசு ஏகாதிபத்திய சேவைக்காக மட்டும் இருக்கிறது என்பதை உரக்க அறிவிக்கிறது.
இந்தியாவின் மாநகரங்கள் அனைத்தும் கிராமங்களை அழித்துத்தான் மிளிர்கின்றன. அப்படி மிளிரும் நகரங்களிலும் ஏழைகள் ஒதுக்குப்புறமான சேரிகளில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்காக சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லயில் காமன்வெல்த் விளையாட்டிற்காக சில ஆயிரம் கோடிகளை செலவழித்து வரும் அரசு பல சேரிகளை கொத்துக் கொத்தாக நகரைவிட்டு வெளியே தூக்கி எறிந்திருக்கிறது. மும்பையில்தான் நகரமயமாக்கம் நிகழ்த்தியிருக்கும் அநீதி உச்சத்தில் இருக்கிறது. அங்கே பெருமழை பெய்தால் தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்திருப்பவர்களைவிட அதிகமானபேர் பலியாவார்கள்.
போதிய இடமின்றி குவித்துவைக்கப்பட்ட தீப்பட்டிகளைப் போல இருக்கும் சேரிகளில் மழை பெய்தால் அது தோற்றுவிக்கும் அலத்தை இலக்கியம் கூடப் படம் பிடிக்க முடியாது. பம்பாயின் சேரிகளில் வாழ்வதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும். இத்தகைய சேரிகளில்தான் மாநகரங்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் உழைக்கும் மக்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கும் அதன் வளர்ச்சிக்குமெதிராக செயற்கையான முறையில் முதலாளிகளின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படும் இந்த நகர்ப்புற வளர்ச்சி பெரும்பான்மை மக்களை அன்றாடம் வதைக்கும் மாபெரும் காங்கீரிட் எந்திரமாக மட்டுமே இயங்குகிறது.
இந்த அநீதியை அரசியல் அரங்கில் நாம் எதிர்த்துப் போராடுவதில்தான் தீர்வு மறைந்திருக்கிறது. நகர்ப்புற பயங்கரவாதம் நகரத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் மொத்தமாக சித்திரவதை செய்து கொல்லும் கிருமிநாசினி. இதை இயற்கைப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி சுருக்கித் திரிக்காமல், அரசியல் பிரச்சினையாக உணர்ந்து கொள்வதுதான் தற்போதைய தேவை. அப்போதுதான் மழையின் துயரத்தை மனித சமூகம் வெற்றி கொள்ளும் நிலையை நாம் அடைய முடியும்.
நன்றி: http://vinavu.wordpress.com/2008/11/29/flood/
Monday, December 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment