கலைஞரின் எழுத்துகளில் ஒன்றுகூட இலக்கியமாகத் தேறாது என ஜெயமோகன் என்கிற தமிழ் எழுத்தாளர் தனது நூல்களின் வெளியீட்டு விழாவில் கூறியது இன்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. தமிழில் எழுதுபவர்களில் வெறும் மூன்று சதம் பேரே சிற்றிதழ் சார்ந்தவர்கள், மற்ற தொண்ணூற்றேழு சதம் எழுத்தாளர்களாகவும் உள்ளனர் என்று சில நாட்கள் முன்பு கலைஞர் கலந்து கொண்ட கூட்டமொன்றில் பேசப்பட்டதை ஒட்டி ஜெயமோகன் இந்தக் கருத்தைச் சொல்லியுள்ளார். அந்த மூன்று சத எழுத்தாளர்கள் சார்பாக நின்று கலைஞரை முற்றிலுமாக நிராகரித்துப் பேசியுள்ளார்.
சிற்றிதழ் சார்ந்த மூன்று சதம் எழுத்தாளர்களின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக் கொள்ள இவருக்கு யார் அதிகாரம் அளித்தது என்ற கேள்வி ஒருபுறமிருக்க இந்த ஜெயமோகனும் இவரால் பிரமாதமான எழுத்தாளர் எனப் பட்டியலிடப்படுகிற எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் என்ன மாதிரி விசயங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்து மத புராணக் குப்பைகளை எந்த விமர்சனமுமில்லாமல் மறுவாசிப்புச் செய்யும் திருக்காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ‘விஷ்ணுபுரம்’ ‘உப பாண்டவம்’ முதலிய நூல்கள் இதற்குச் சாட்சி.
புதுமைப்பித்தன் முதலியவர்களும் கூட நமது பழைய பஞ்சாங்கப் பார்வைகளைக் ‘கடும் விமர்சனமும்’ ‘நாரத ராமாயணமும்’ செய்த்து குறிப்பிடத்தக்கன. எனவே இவர்கள் புதுமைப்பித்தனின் பாரம்பரியத்தைக் கோருவது அபத்தம்.கலைஞரைப் பொருத்தமட்டில் அவர் வெகுசனத் தளத்தில் இயங்கியவர். வர்களையோ அல்லது இலக்கியத் தளத்தில் இயங்கிய இன்னொரு அரசல்வாதியான ராஜாஜியைப் போலவோ புராண இதிகாசக் குப்பைகள் போக்கம் போகாதவர். மதச்சார்பற்ற பண்டைய இலக்கியங்களை வெகுசனத்தளத்திற்கு கொண்டு சென்றவர். தனால்தான் இவர்கள் பெரியாரையும் திராவிட இயக்கத்தாரையும் வெறுப்பது போலவேக் கலைஞரையும் காய்கின்றனர்.
ஜெயமோகன் நூலகளை ஆர்,எஸ்.எஸ்.கடைகளில் வைத்து விற்பனை செய்வதையும் இவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் என்பதை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் ‘கணையாழி’ என்னும் இதழில் இது குறித்து அவர் என்னைக் கடுமையாகச் சாடியிருந்தார். தான் இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவதாகவும் ஆர்.எஸ்.எஸில் எப்போதோ இருந்து போலவே இப்போது மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்திலிருப்பதாகவும் பதட்டத்துடன் கூறியிருந்தார்.
எல்லாம் சரி நீங்கள் மார்க்சிசத்தை விமர்ச்சிக்கிற அளவு எப்போதாவது ஆர்.எஸ்.எஸ்.சை விமர்சித்திருக்கிறீர்களா என ஜாகிர் ராஜா என்றொரு வாசகர் அடுத்த இதழில் கேட்டிருந்தார். ஜெயமோகனிடம் பதிலில்லை. ராஜா மறந்து போன இன்னொரு கேள்வியை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. எப்போதே நீர் ஆர்.எஸ்.எஸ் சில் இருந்திருக்கலாம், ஆனால் இப்போதும் கூட அவர்கள் உம் நாவலைக் கடைபரப்பி விற்பதன் பொருளென்ன? இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியலுக்கு ‘விஷ்ணுபுரம்’ சார்பாக இருப்பதை தவிர இதற்கு வேறேன்ன காரணம் சொல்ல முடியும்?
தமிழில் நவீன இலக்கியங்கள், புதிய சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானதுதான், எனினும் வெகுசனங்களிடமிருந்து விலகிய மேட்டிமைத் தன்மை, மக்களைப் பாதிக்கும் அரசியலிலிருந்து முற்றாக விலகி நிற்றல், மேற்சாதிப் பின்புலம், திராவிட /மார்க்சியக் கருத்தியல்களின் மீதான வெறுப்பையும் சிற்றிதழ்களைக் கூர்ந்து கவனிக்கும் போது இவற்றொடு இஸ்லாமிய வெறுப்பையும் சிற்றிதழ்களின் பண்புகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஆதரவான ஒரு கட்டுரை இந்துத்துவ அரசியல் இதழ்களைத் தவிர ‘காலச்சுவடின்’ முந்தைய அவதாரம் அது. அப்போது அதன் ஆசிரியர் இன்று ஜெயமோகன் வியந்து பாராட்டுகிற இன்னொரு எழுத்தாளர். இன்றைய காலச்சுவடு கண்ணனின் தந்தை சுந்தரராமசாமி. மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே இடிப்பது சரிதான் என்கிற ரீதியில் எழுதப்பட்டது அக்கட்டுரை.சிற்றிதழ்கள் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் வெகுசன இதழ்களைப் போல கோயில், மாகத்மியம், சாமியார் புகழ் பாடாதிருந்த நிலை பாராட்டக் கூடிய ஒன்றாக இருந்தது.
இந்நிலையை மாற்றிப் புரட்சி செய்தவரும் ஜெயமோகன்தான். தனது ‘சொல்புதிது’ இதழில் நித்தய் சைதன்யயதி என்னும் சாமியாரை அட்டையில் போட்டு, பேட்டி வெளியிட்டு, கட்டுரை எழுத வைத்துச் சாமியார் புகழ்பாடினார் ஜெயமோகன். இன்னும் அந்நிலை தொடர்கிறது. வெகுசன ஊடகங்களில் ரஜினி போன்றோர் ‘பாபா’க்களைத் தேடிய போது அதே காலகட்டத்தில் இவர்கள் வாழும் பாபாக்களை முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பொருத்தம் இருப்பதால்தான் ஞானக் கூத்தன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சிற்றிதழ்கள் எளிதாகக் கமலஹாசனுடனும் ரஜினியுடனும் ஒட்டிக்கொண்டு விடுகின்றனர்.‘காலச்சுவடு’ இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள (செப்டம்பர்-அக்டோபர் 2003 )மதச்சார்பின்மையை மறு ஆய்வு செய்யும் சிறப்பிதழ் கடும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.
இன்று அமெரிக்காவில் குடியேறியிருக்கும் பழைய சிற்றிதழ்காரர்களின் துணையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘திண்ணை’ என்னும் இணையத்தளத்தில் இந்துத்துவச் சார்பாக அவ்வப்போது எழுதி வந்த காசு கண்ணனை ஆசிரியராகக் கொண்ட காலச்சுவடு இதழின் இந்துத்துவச் சார்பை விரிவாக ஆராய்தல் தகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். எனினும் சில குறிப்புகள்: அரவிந்தன் நீலகண்டன் என்றொரு ஆர்.எஸ்.எஸ் நபர் காலச்சுவடில் அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஒருமுறை ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் பெருமைகள் குறித்து அவர் ஒரு கட்டுரையே எழுதியிருந்தார். காசு கண்ணனின் பார்ப்பன மூளை அதை ஒரு கட்டுரையாக வெளியிடாமல் வாசகர் கடிதம் பொன்ற வடிவில் வெளியிட்டது.
சென்ற இதழில் (ஜூலை-ஆகஸ்ட் 2003)களந்தை பீர்முகம்மதின் கட்டுரை ஒன்றையும் சல்மாவின் கதையொன்றையும் வெளியிட்டது காலச்சுவடு. முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளத்தது நல்ல அம்சன் தான் என மகிழ்ந்து போய்விடாதீர்கள். தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்தவைக்கும் தந்திரம் அது. ‘சாபம்’ என்கிற சல்மாவின் கதையைப் பாருங்கள். திருமணமாகாத ஒரு ஏழை முஸ்லிம் பெண்ணின் மன உணர்வுகளாக விரியும் இக்கதை விரைவில் தடம் மாறுகிறது. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒவ்வொருவராகப் பைத்தியம் பிடித்து அழியும் கதை இது. அழிவதற்கு ஒரு சாபம் காரணமாக இருக்கிறது.
ஒரு பார்ப்பனக் கணவன், மனைவி, அவர்களின் சிறு குழந்தை ஆகியவர்களை அந்தக் குடும்பத் தலைவர் நகைக்காகக் கொலை செய்து கிணற்றில் போட்டு விடுகிறார். மோதிரத்திற்காகக் குழந்தையின் பிஞ்சு விரலை வெட்டுகிற கொடூர முஸ்லீம் அவர். பார்ப்பனக் குடும்பத்தின் சாபத்தால் இன்று அந்த முஸ்லிம் குடும்பம் அழிகிறது என்பதுதான் கதை.முஸ்லிம்களின் இன்றைய அவலங்களுக்கெல்லாம் அன்று முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்துக்களுக்குச் செய்த கொடுமைகள்தான் காரணம் என்கிற இந்துத்துவக் கருத்தியலுக்கு உடுக்கை அடிக்கிறார் சல்மா. ‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என்கிற நரேந்திர மோடி இக்கதையைக் குஜராத்தி மொழியில் பெயர்த்து வெளியிட வாய்ப்பிருக்கிறது. சல்மா முயற்சித்துப் பார்க்கலாம்.
களந்த பீர் முகமதின் கட்டுரையோ முஸ்லிம்கள் எத்துணை முறை ஹஜ் யாத்திரை சென்றார்கள் என்கிற தகுதியின் அடிப்படையிலேயே திருமண முன்னுரிமை பெறுவதாகப் பகடி செய்கிறது. முஸ்லிம்கள் மத நம்பிக்கைகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதாகக் குறிப்புணர்த்துகிறது. மனுஷ்ய புத்திரன் காலி செய்த காலச்சுவடு இடத்தை யார் நிரப்புவது எனச் சல்மாவுக்கும் களந்தை பீர் முகம்மதுக்கும் கடும் போட்டி. ‘சபாஷ்’ என மேலுதட்டைத் தடவுகிறார் காசு கண்ணன்.
காலச்சுவட்டின் மதச்சார்பின்மை மறு ஆய்வுச் சிறப்பிதழில் காசு கண்ணன் மற்றும் ரவிக்குமாரின் கட்டுரைகள் விஷமத்தனமானவை. காசுவின் கட்டுரை வெளிப்படையாக இதைச் செய்கிறது. ரவிக்குமார் அதையே நாசுக்காகச் செய்கிறார். முஸ்லிம்களிடம் ஜனநாயகத் தன்மை இல்லை என ‘வல்லினம்’ என்ற சிற்றிதழுக்குக் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்துத்துவ எதிர்ப்பை நான் முன்வைத்து வருவதற்காக என்னைத் தாலிபான் ஆதரவாளர் என்றும் அப்பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இப்படியான செய்கைகள் மூலம் முஸ்லிம் மக்களின் நியாயங்களைப் பேசுகிற ஓரிரு வாய்களையும் மூடுவதே இதன் நோக்கம். எல்லோருடனும் சேர்ந்து கொண்டு எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்று நாமும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் பயங்கரவாதிகள் என்பார்கள். கட்டுரை எழுதி ஆள்காட்டிக் கொடுப்பார்கள்.
வடக்கே உள்ள அளவிற்குத் தமிழ்நாட்டில் இந்துத்துவ வகுப்புவாதம் தலைதூக்க இயலாமற் போனதில் இஸ்லாமியரையும் திராவிடராக ஏற்றுக் கொண்டு அணுக்கம் காட்டிய திராவிட இயக்கம் ஒரு முக்கியபங்கு வகிக்கிறது. அதை இருட்டடிப்புச் செய்வதே ரவிக்குமார் கட்டுரையின் நோக்கமாக உள்ளது. கடந்த எழுபத்தைந்தாண்டுகளில் இந்துத்துவவாதிகளின் சொல்லாடல்களுக்கு எதிர்ச் சிந்தனையாளர்களின் பங்கு மகத்தானது.
இந்திய, தமிழக வரலாறு குறித்த அரைகுறையான புரிதல்களுடனும் தர்மாகுமார், சஞ்சய் சுப்பிரமணியம் போன்ற மார்க்சிய எதிர்ப்பாளர்களின் துணையோடும் இந்துத்துவத்துக்கு எதிராக முற்போக்காளர்கள் மேற்கொண்ட பணி மீது சேறுவாரி இறைக்கிறது ரவிக்குமாரின் கட்டுரை.
புத்தமதம் வீழ்ந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிகிற வரலாற்றிஞர்கள் இதுவரை தோன்றவில்லை என்கிற தர்மாகுமாரின் கருத்தை வியந்தோதுகிற ரவிக்குமாரின் கண்களில் அம்பேத்கர், ஜமந்தாஸ், கெய்ல் ஆம்வெத் போன்ற தலித்திய அறீஞர்களும் சிந்தனையாளர்களும் கண்ணில்படாமற் போனது வியப்பே. பார்ப்பனச் சுங்க மன்னர்களின் காலத்தில் பவுத்த பிக்குகளின் தலைக்கு நூறு காசு வைத்து வேட்டையாடப்பட்டது பற்றி அம்பேத்கர் எழுதியுள்ளமை ஏன் ரவிகுமாரின் கண்ணில்படவில்லை என்பதும் விளங்கவில்லை.
பவுத்தம் வீழ்த்தப்பட்டதில் பார்ப்பனீயத்தின் பங்கை இவர்கள் வலியுறுத்துவது ரவிக்குமாருக்குப் பிடிக்கவில்லை.இஸ்லாமுக்குப் பெரிய அளவில் இந்துக்கள் மதம் மாறியதற்கான காரணங்களில் பிரதானமானது இங்குள்ள சாதீயமும் தீண்டாமையும்தான்.
சமீபத்திய உதாரணம் மீனாட்சிபுரம். அங்கொன்றும் இங்கொன்றுமான சிற்சில எடுத்துக்காட்டுகளைக் காட்டி இஸ்லாமுக்கு மதம் மாறியதற்கு ‘பிராமண ஒடுக்குமுறை’ காரணமல்ல என ரவிக்குமார் நிறுவ முயல்கிறார். தஞ்சைக்கும் குடந்தைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்டத்தக்க அளவிற்குப் பார்ப்பனர்கள் இஸ்லாமியராயினர். இதனால் தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களெல்லாம் ‘பூர்வ’ பார்ப்பனர்கள் எனச் சொல்லுவது போன்ற அவத்தம்தான் இதுவும்.மதவாதம் என்பது ஒரு நவீனத்துவ வெளிப்பாடு.
தேசியம் முதலிய கருத்தாக்கங்களுடன் இணையாதத் தோற்றம் கொள்வது. மத்திய கால மதப் போராட்டங்கள், சமணம் ஒழிக்கப்பட்டது ஆகியவற்றுடன் இன்றைய குஜராத்தையோ இந்துமதவாதத்தையோ ஒப்பிடுவதில் பல சிக்கல்கள் உண்டு. எல்லாக் காலங்களிலும் மாற்று மதக்காரர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று நிறுவுவதும் அதன் மூலம் இன்றைய இந்து மதப் பாசிஸ்டுகளுக்கு நியாயம் வழங்க முயல்வதுமே கட்டுரையின் நோக்கமாக உள்ளது.
வரலாற்றின் தொடர்ச்சியை வலியுறுத்துவதைக் காட்டிலும் வரலாற்றில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியின்மையும் இடைவெளிகளையும் சுட்டிக் காட்டுவதே முக்கியம் என்கிற நவீன சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிராக ஒலிக்கிறது ரவிக்குமாரின் குரல்.பார்ப்பனர்களுக்கும் சைவ மடங்களுக்கும் இணையாகச் சமண பவுத்தப் பள்ளிகளுக்குத் தவறு.
மத்திய கால ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது இதற்கான சான்றுகள் ஏதுமில்லை. பவுத்த விஹார்களுக்கு அளிக்கப்பட்ட தானங்களில் சில வெளிநாட்டு பவுத்த மன்னர்களோடு தமிழ் மன்னர்கள் செய்து கொண்ட ஒப்பஎதத்தின் அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிரவும் தமிழகத்தில் சமணம் வன்முறையாக அழிக்கப்பட்டது போல பவுத்தம் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் பெருமளவில் இல்லை. நுணுக்கமாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகள் இவை.
கட்டுரை முழுவதும் பார்ப்பனரைப் ‘பிராமணர்’ என விளித்து ரவிக்குமார் பவ்யம் காட்டுவதும் கவனிக்கத்தக்கது. காசு கண்ணனின் கட்டுரை முஸ்லிம் வெறுப்பை உமிழும் அப்பட்டமான பார்ப்பனப் பார்வை. ஏதோ இங்கு இந்துத்துவத்திற்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதம் கொடிகட்டிப் பறப்பது போலவும் அதை மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் இடதுசாரிகளும் கண்டுகொள்வதில்லை எனவும் தாண்டிக் குதிக்கிறார் காசு. பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற அரசியற்பார்வை தேவையில்லை என்ற இந்துத்துவச் சொல்லாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இக்கட்டுரை.
‘இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் பெரிய அளவில் ஒன்று திரண்டது ஷாபானு விவகாரத்தில்தான்’ எனக் காசு சொல்வது அப்பட்டமான வரலாற்றுத் திரிபு. அஸ்கர் அலி என்ஜினியரை முன்னிறுத்தி இந்த வாதத்தை நிறுவிவிட இயலாது. ஏ.ஜி. நூரானி போன்றவர்கள் இது குறித்து விரிவான ஆதாரங்களைத் தொகுத்துள்ளனர்.சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் சோகம் நிரம்பியது. அநீதிகள் நிறைந்தது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர்.
முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவராகிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுக்கத் தயாராக இல்லை.அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.
1.உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.
2.பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.
3.பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.
இதேகாலலட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம்.தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது.
எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அலவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவேயில்லை.1961ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10,11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி.
இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பீரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964 ல் ஜாம்ஷெட்பூரில் மிகப் பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8,9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ணா சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே,கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றிலிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும் தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான பார்ப்பனத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடந்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ள நரித்தனம்.இன்றைய சூழலில் முஸ்லிம்களின் தற்காப்பற்ற மனநிலையை வெளிப்படுத்தும் ஷாஜஹானின் கட்டுரைகளை, பின்னணியிலிருந்து விலக்கிய மேற்கோள்களைக் காட்டி தீவிரவாத ஆதரவுக் கருத்துகளாகப் படம் பிடித்துக் காட்டுவதில் காசு கண்ணனுக்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு.
காலச்சுவட்டின் ஆதிக்க வலையில் ஷாஜஹான் சிக்க மறுத்தத் தலைநிமிர்ந்து நிற்பதுதான் அது. எப்படியாவது அவருக்குத் தீவிரவாதப் பட்டம் கட்டித் தனிப்பட்ட முறையில் ஊறு விளைவிக்க முயற்சிக்கும் கண்ணனின் பல செயல்பாடுகளில் இக்கட்டுரையும் ஒன்று.இந்தியாவில் தோன்றிய மதங்கள் தவிர கிறிஸ்தவம் போன்ற இந்தியாவுக்கு வந்த மதங்கள் கூட சாதியத்திற்குப் பலியாகியுள்ளபோது முஸ்லிம் மதம் மட்டும் இந்நிலையை வென்றுள்ளது. இந்துமயமாகும் முயற்சியை இஸ்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்துள்ளது. அது பொறுக்கவில்லை கண்ணனுக்கு. (பசுஞ்)சாணியைப் புனிதமாகக் கருதி வீட்டில் மெழுகவில்லையாம், கோமூத்திரத்தைக் குடிக்கவில்லையாம், தர்காவில் பேயோட்டிச் சமாதி வணக்கம் செய்யும் பழக்கங்களுக்கு மாற்றுக் கருத்துகள் முஸ்லிம் சமுதாயத்தில் எழுகிறதாம்.
இதெல்லாம் முஸ்லிம் அடிப்படைவாதமாம்.இறுதியாக முஸ்லிம்கள் தனித்துவத்துடன் இயக்கமாகத் திரள்வது கண்டு எரிகிறது கா.சு. இதுவும் இந்துத்துவ சக்திகள் காலம் காலமாய்ச் சொல்லி வரும் அறிவுரைதான். தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டிய காலகட்டம் இது. பாசிசத்தை எதிர்கொள்வதற்கான சரியான வழியும் அதுவே. பன்மைத்துவம் என்பதன் பொருளும் அதுவே.சிற்றிதழ்ப் பாரம்பரியத்தின் முஸ்லிம் வெறுப்பையும் திராவிட/பெரியார் எதிர்ப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நாம் காணமுடியும்.
தமக்குள் எத்தனைக் குத்து வெட்டு, சண்டைகள், கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும் சுந்தர ராமசாமி, ஜெயமோகன், அசோகமித்திரன், காசு கண்ணன், ரவிக்குமார் முதலியோர் சந்திக்கும் புள்ளியாகவும் இது அமைகிறது. சந்திக்கும் புள்ளி என்பதைக் காட்டிலும் இதை ஒரு வலைப்பின்னல் என்று சொல்வதே பொருத்தம்.
அது சரி, இந்த வலைக்குள் கனிமொழி என்ற நல்ல கவிஞர் சிக்கிக் கொண்டதெப்படி? இவர்களின் திராவிட எதிர்ப்புக் கருத்துகளையும் பெரியார் எதிர்ப்பையும் ஆதரித்துப் பேட்டி கொடுப்பது, நந்தன் போன்ற இதழ்களில் கூட திராவிட இயக்க வெறுப்பை வெளிப்படுத்துவது, இவர்களது வெளீயீடுகளாகத் தன் புத்தகங்களைக் கொணர்வது, இவர்களிடம் முன்னுரை வாங்குவது என்பதையெல்லாம் எப்படி சொல்ல? என்ன சொல்ல?
நன்றி: அ.மார்க்ஸ், சமநிலைச் சமுதாயம்நவம்பர் 2003
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
45 minutes ago
No comments:
Post a Comment