Monday, December 8, 2008

கிரியா ஊக்கிகள் பலன் தருமா?

கடந்த சில வருடங்களாக மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்த நமது பொருளாதாரம் இப்போது தளர்வுறும் நிலையில் உள்ளது. மீண்டும் பொருளாதாரத்தை செழிப்புற செய்ய இந்திய அரசாங்கம் மற்றும் தலைமை வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அவை பற்றியும் சந்தை போக்குகள் குறித்தும் இங்கு பார்போம்.

இந்திய அரசு சுமார் மூன்று லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நான்கு சதவீத சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்திய தலைமை வங்கியும் (RBI) தன் பங்குக்கு வட்டி வீத குறைப்பு, வீட்டு கடன் வழங்குவதில் விதி முறைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான அலசல் விரைவில். இப்போதைக்கு வரும் வார சந்தை மாற்றங்கள் குறித்து மட்டும் அலசுவோம்.


கடந்த வாரம் சிறப்பான துவக்கத்தை சந்தித்த பங்கு சந்தை அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம், உலக அளவில் முக்கியமாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார தேக்க நிலை உறுதிப்படுத்தப் பட்டிருப்பது.

இதன் காரணமாக நமது மென்பொருட் துறையை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை கடந்த வாரம் சந்தித்தன. மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது, வாகன துறை பங்குகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. அதே சமயத்தில், வட்டி வீதம் குறைக்கப் படும் என்ற நம்பிக்கையில் வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான நிதி நிலை அறிக்கையால் உலோக துறையை சார்ந்த பங்குகள் பெரும் முன்னேற்றம் கண்டன. இவ்வாறு மாறுபட்ட பங்குகளின் போக்கினால், பங்கு சந்தை பெரிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேலும், வார அடிப்படையில் முக்கிய குறியீடுகள் சிறிது வீழ்ச்சியைக் கண்டன.


அதே சமயத்தில், கடந்த இருவாரங்களாக நான் குறிப்பிட்ட முக்கிய அரண் நிலையான (Support) 8900 புள்ளிகளுக்கு மேலேயே சென்றவாரமும் சென்செக்ஸ் முடிவடைந்திருப்பது நல்ல நம்பிக்கையை தருகிறது. கடந்த வாரம் பணவீக்கம் 8.40% ஆக குறைந்ததும் கட்சா எண்ணெய் நாற்பது டாலருக்கு கீழே வீழ்ச்சி அடைந்ததும் சந்தைக்கு நல்ல செய்திகளாகும். இந்திய அளவிலும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவித்திருப்பதால், பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அரசும் தலைமை வங்கியும் அறிவித்துள்ள கிரியா ஊக்கி திட்டங்கள் சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.


விலை தொழிற்நுட்ப ஆராய்ச்சியின் (Technical Analysis) படி பங்கு சந்தைகள் வரும் வாரம் முன்னேற்றம் காணும் என்று நம்பப் படுகிறது. சென்செக்ஸ் குறியீடுக்கான எதிர்ப்பு நிலைகள் 9350, 9950, மற்றும் 10,200 எனும் நிலைகள். அரண் நிலைகள் 8350 மற்றும் 7600. 9350க்கு மேல் சந்தை முடிவடையும் பட்சத்தில் பங்கு வர்த்தகர்கள் மேல் செல்லும் நிலையை (long position) எடுத்துக் கொள்ளலாம்.


தலைமை வங்கி அறிவித்துள்ள வட்டி வீத குறைப்பால் பயன் பெறும் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். மேலும் அரசின் கட்டமைப்பு முதலீடுகளினால் பயன் பெறக் கூடிய கட்டுமானத் துறை, இயந்திர தயாரிப்பு துறை போன்றவற்றைச் சார்ந்த பங்குகளும் முன்னேற்றம் காணக் கூடும்.


இந்திய ருபாய் சந்தையும் சென்ற வாரம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேற்சொன்ன காரணங்களினால், வரும் வாரம் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது.


சந்தைகளில் சிறப்பாக செயல்படவும் வரும் வாரம் நல்ல வாரமாக அமையவும் வாழ்த்துக்கள்.

நன்றி: http://sandhainilavaram.blogspot.com/

No comments: