தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு திடீரென்று ஏற்பட்டதல்ல. மின்னாக்கம் (மின்சார உற்பத்தி) மின்சாரத்தின் பயன்பாட்டுத் தேவையைவிட ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் தேவையை எட்ட முடியாத அளவுக்கு இடைவெளி அதாவது பற்றாக்குறைக் கூடிவிட்டது.
மின்சாரத்தை மற்ற பொருள்களைப் போலச் சேமித்து வைக்க முடியாது. உணவுப் பொருளான நெல்லைக் களஞ்சியங்களில் போதுமான அளவுக்குச் சேமித்து வைத்துக் கொண்டு தேவையானபோது எடுத்துப் பயன்படுத்துவதுபோல மின்சாரத்தைச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியாது.
மின்னாக்கிகள் தொடர்ந்து இயங்கிப் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை மின்சாரக் கட்டமைப்பக்குள் செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். தேவை கூடக் கூட மின்னாக்கமும் கூட வேண்டும். தேவைக்குக் கட்டுப்பாடில்லை. அது ஒரே சீராகப் பெருகிக் கொண்டே போகும். ஆனால் மின்னாக்கம் அப்படியில்லை. மின்னாக்கத்திற்கு ஒரு உச்சகட்ட அளவுண்டு. அதற்குமேல் இயங்கிக்கொண்டிருக்கிற மின்னாக்கிகள் அதாவது மின் நிலையங்களில் உள்ள மின்சார உற்பத்தி இயந்திரங்கள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் மின்சாரத்தை அளிக்க முடியாமற்போய் இயங்காமல் நின்றுவிடும்.
தமிழ்நாட்டில் உண்டாக்கப்படும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அனல்மின் நிலையங்கள் அளிக்கின்றன. எண்ணூர், தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்கள் முழுத் திறனளவில் இயங்குகின்றன.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உண்டாக்கப்படும் மின்சாரத்தில் தமிழ்நாட்டின் பங்காக ஓர் அளவு மின்சாரம் கிடைக்கிறது. இது நடுவணரசின்கீழ் உள்ள தனி நிறுவனம். ஆதலால் நம் தேவைக்கேற்ப மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் உரிமை தமிழ்நாட்டுக்கு இல்லை.
நீர்மின் நிலையங்கள் உண்டாக்கும் மின்சாரம் மிகமிகக் குறைவானதே.தமிழ்நாட்டில் உள்ள சிற்றாறுகளில் (காவிரி உள்பட) நீர்வரத்து மிகமிகக் குறைவு. இவ்வாறுகளிலும், பருவ காலங்களில் மட்டுமே ஓடும் குறைந்த அளவு நீரைத் தேக்கி அதிலிருந்து மின்சாரத்தை உண்டாக்கி வருகிறோம். நீர் மின் நிலையங்கள் நிறைவு நிலையை எய்தி விட்டமையால் இனிப் புதிதாக நிறுவத்தக்க நிலையங்களுக்கு வாய்ப்பு இல்லை. மிகச் சிறிய அளவில் காவிரியாற்றில் ஈரோட்டுக்கு அருகில் மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்... என்றொரு பழம்பாடல் இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.
காற்றாலைகள் மூலமும் மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. முதன்முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முள்ளக்காடு என்ற சிற்றூரில் காற்றாலைகள் நிறுவப்பட்டன. அக்கால கட்டத்தில் இக் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தைப் பெருமளவில் உண்டாக்க முடியுமா என்று அறிந்து கொள்ளவே இவ்வாலைகள் மின்வாரியத்தால் நிறுவப்பட்டன. அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு ஆகும் செலவு இல்லாமல் இயற்கையாக வீசும் காற்றின் விசையால் இவை இயங்குவதால் மின்சாரம் உண்டாக்கும் செலவு குறைவே. வெறும் பராமரிப்புச் செலவு மட்டுமே.
ஆனால் இவற்றால் உண்டாக்கப்படும் மின்சாரத்தின் அளவு அனல் மின் நிலைய மின்சார அளவோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவே. காற்றாலைகளின் மூலம் மின்சாரம் உண்டாக்கும் திட்டத்தை அப்போது வாரியமும் அரசும் விரிவுபடுத்தவில்லை. அப்போது கைவசம் வைத்திருந்த அனல்மின் நிலையத் திட்டங்கள் மூலம் தேவைக்கேற்ற மின்சாரத்தை உண்டாக்கிக் கொள்ள முடிந்த காரணத்தில் காற்றாலைத் திட்டங்களில் வாரியம் முனைப்புக் காட்டவில்லை. ஆனால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உண்டாக்குவதில் தனியார் துறை இறங்கியது.
முதலில் உயர் அழுத்த மின்சாரம் வாரியத்திடம் பெற்றுவந்த பெரிய பயனீட்டாளர்கள் காற்றாலைகள் மூலம் மின்சாரம் அமைப்பதற்கு அரசாங்கம் வழங்க முன்வந்த பல சலுகைகள் காரணமாக காற்றாலைகளை நிறுவத் தொடங்கினர். காற்றாலைகள் அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லையோரப் பகுதியில் மேற்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய் போன்ற காற்று வீசும் முப்பந்தல் என்ற ஊரைச் சுற்றியுள்ள நிலங்கள் ஏற்றவையாகக் கருதப்பட்டு அங்கே பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டன.
அதன்பிறகு நெல்லை மாவட்டம் கயத்தாரிலும், கோவை மாவட்டம் பல்லடம் வட்டத்திலும் மேலும் பல காற்றாலைகள் நிறுவப்பட்டன. இவையனைத்தும் தனியாரால் நிறுவப்பட்டவையே. இவ்வாலைகளின் மொத்தத் திறனளவு 3000 மெகாவாட்டுகளாகும். இவ்வாலைகள் உண்டாக்கும் மின்சாரத்தை மின் வாரியம் வாங்கிக் கொள்கிறது. காற்றாலைகளில் தென்மேற்கு, வடகிழக்குப் பருவ காலங்களில் பருவக்காற்று வீசும் மாதங்களில் மட்டுமே மின்சாரம் கிடைக்கும்.
காற்றாலைகளில் உணடாக்கப்படும் மின்சாரத்தின் அளவைத் தேவைக்கேற்பக் கூட்டவோ, குறைக்கவோ வழியில்லை. இயற்கையில் வீசும் காற்றின் அளவை ஒட்டியே மின்னாக்கம் அமைவதால் மின்சாரம் ஆண்டு முழுவதும் ஒரே அளவில் ஒரே சீராகக் கிடைக்க வாய்ப்பில்லை. கிடைப்பதை அப்படியே முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு அன்றாடத் தேவைக்கேற்ப அனல் மின்சாரத்தையும், புனல் மின்சாரத்தை யும் கூட்டியோ, குறைத்தோ மின்வாரியம் சமன்செய்து கொள்கிறது.
மின் வாரியத்தின்கீழ் இயங்கும் அனல் மின் நிலையங் களின் மொத்தத் திறனளவு 3290 மெகாவாட்டுகள். இம் மின் நிலையங்களில் பராமரிப்புப் பணியின் பொருட்டுச் சில அலகுகள் இயங்காத போதும் எஞ்சியுள்ளவை முழுத் திறனில் இயங்கும் நிலையில் 2850 மெகா வாட்டு மின்சாரம் கிடைக்கிறது. அதாவது இராமதாசு கேள்வியயழுப்பும் ஆக்குதிறன் 87 விழுக்காட்டில் அனல்மின் நிலையங்கள் இயங்கு கின்றன. இது அனைத்திந்திய சராசரிக்கும் மேலேயிருப்பதால் தமிழ்நாட்டு மின்வாரியத்தைக் குறை சொல்லமுடியாது.
நீர் மின் நிலையங்களின் மின்னாக்குத் திறன் அதிகமிருப் பினும் நீரின் இருப்புக்கேற்ப இவற்றிலிருந்து பெறும் மின்சாரம் இன்றைய நிலையில் 1793 மெகாவாட்டுகள். மின் வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனல் மின் நிலையங்கள் நீர் மின் நிலையங்கள் இரண்டும் சேர்ந்து 4640 மெ.வா. வழங்கு கின்றன. இன்றயை சூழ்நிலையில் தமிழ்நாட்டின் உச்சக்கட்ட மின்சாரத் தேவை 8650 மெகாவாட்டுகள்.
இத் தேவையில் பாதியளவுக்கே அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மின் நிலையங்கள் மின்சாரம் அளிக்கின்றன. எஞ்சிய தேவையைத் தமிழ்நாட்டு மின்சார வாரியம் நடுவணரசின் கட்டுப்பாட்டிலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் மூலம் நிறைவுசெய்து கொள்கிறது.இப்போது காற்றாலைகள் மூலம் பெற்றுவந்த மின்சாரம் காற்றின் விசையை ஒட்டி மின்னாக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக மிகவும் குறைந்து போயிற்று.
நெய்வேலி அனல் மின் நிலையம் நடுவணரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. 1ஆம் அனல் மின் நிலையத்தின் திறனளவு 600 மெகாவாட்டுகள். இந்த 600 மெகாவாட்டு மின்சாரத்தில் நெய்வேலி நிறுவனத்தின் தேவைபோக எஞ்சியுள்ள 475 மெகாவாட்டு மின்சாரமும் தமிழ்நாட்டுக்கே அளிக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். இம்மின் நிலையத்து மின்னாக்கத் தின் தொய்வு காரணமாக இப்போது 105 மெகா வாட்டுகள் மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறது.
நெய்வேலி 1ஆம் அனல் மின்நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட மின்நிலையத்தின் திறனளவு 420 மெ.வா. இதில் இப்போது உண்டாக்கப்படும் 226 மெ.வா. மின்சாரத்தில் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பது 166 மெ.வா. மட்டுமே.
நெய்வேலியின் 2ஆம் அனல்மின் நிலையத்தின் திறனளவு 1470 மெ.வா. இதில் தமிழ்நாட்டின் பங்கு 466 மெ.வா. ஆனால் கிடைப்பது 262 மெ.வா. மட்டுமே. மேலேகண்டுள்ள படி நெய்வேலியிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய - ஒப்பந்தப்படி உரிமையுள்ள மின்சாரம் (475 + 226 + 466) 1167 மெ.வா. ஆகும். மொத்தம் (600 + 420 + 1470) 2490 மெ.வா.
மின்னாக்குத்திறன் கொண்ட நெய்வேலி மின் நிலையத்தில் 80 விழுக்காடு மின்னாக்கம் இருப்பின் 2000 மெ.வா. கிடைக்கும்.இதில் தமிழ்நாட்டுக்கு ஒப்பந்தப்படி அளிக்கப்படவேண்டிய 1167 மெ.வா. போக எஞ்சியுள்ள 833 மெ.வா. மின்சாரம் அண்டை மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய 1167 மெ.வா. மின்சாரம் முழுதாகக் கிடைக்கப் பெற்றாலே தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த 1167 மெ.வா. மின்சாரத்தைக் குறைத்துக் கொண்டு இப்போது நெய்வேலி 533 மெ.வா. மட்டுமே கொடுக்கிறது.
அ. நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாட்டில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியால் இயங்குவது.
ஆ. மின்னாக்கும் திறனளவு 2490 மெ.வா.
இ. தமிழ்நாட்டுக்கு ஒப்பந்தப்படி அளிக்கப்பட¼ண்டியது 1167 மெ.வா.ஈ.
இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது 533 மெ.வா.திறனளவில் கால் பங்கு தமிழ்நாட்டுக்கு! முக்கால் பங்கு அண்டை மாநிலங்களுக்கு!
தமிழர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றப் படுகிறார்கள் என்று இதிலிருந்து தெளிவாக விளங்கும். தமிழ் நாட்டின் உரிமையைப் பறிக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டரசுக்கு இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நெய்வேலி அனல்மின் நிலையத்தின் மின்சாரம் முழுவதுமாகத் தமிழ்நாட்டுக்குக் கிடைக்குமானால் தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடே வர வாய்ப்பில்லை.
முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் முக்கால் பங்காவது, மின்சாரத் தட்டுப் பாட்டால் அவதியுறும் தமிழக மக்கள் அரசுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கிவிட்ட பிறகாவது அரசு இதில் கருத்தூன்றித் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்று இதற்கு ஒரு தீர்வுகாண முயலவேண்டாமா? முயலவேண்டும். இவ்வுரிமை கூட்டாட்சியில் நிலைநாட்டப்பட வேண்டும்.முன்னெப்போதும் கண்டிராத மின்சாரத் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை மின்சார வாரியத்தில் பெரும் பொறுப்புகளில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றுள்ள நான் என்னுடைய பட்டறிவின் அடிப்படையில் அரசின்மீது எவ்விதக் காழ்ப்புணர்ச்சியுமின்றி என் கருத்தை முன் வைக்கிறேன்.
அரசுக்கு மின்சாரத்துறை மிகவும் முகாமையான துறை. ஓர் ஆட்சியின் வெற்றி தோல்வி இத்துறையினைத் திறம்பட மேலாள்வதைப் பொறுத்தே அமைகிறது. இத்துறையின்மீது எப்போது அரசின் கவனம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இத்துறையை வெற்றிகரமாகக் கையாளுங்கால் ஏனைய துறைகளும் இத்துறையைச் சார்ந்தே இருக்குங் காரணத்தால் அனைத்துத் துறையிலும் வெற்றியை ஈட்டமுடியும்.துறையின் தலைமைக்கு ஆளுமைத் திறனும் தொழில் நுட்பப் பட்டறிவும் இன்றியமையாதன.
67க்குப் பிறகு அமைந்த அரசுகள் இதில் போதிய கவனஞ் செலுத்தவில்லை. அவ்வப் போது அரசுக்கு வேண்டியவர் என்ற ஒரே காரணத்தைவைத்து இன்னார் இத்துறைத் தலைமைக்குத் தகுதியுடையவரா என்று ஆய்ந்து பாராமல் தகுதியும், திறமையும் இல்லாத பல பேர் வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
மின்சாரத்தின் தேவை ஒவ்வோர் ஆண்டும் பெருகிக் கொண்டே வருகிறது. ஆனால் இத் தேவையை எதிர் கொள்ளத் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கான திட்டங்கள் உரிய காலத்தில் போட்டு, அவற்றுக்கான அரசின் ஆணைகள் பெற்றுத் திட்டங் களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். வருமுன் காப்போம் என்பது வெற்று முழக்கமாகப் போய்விட்டது. நடுவணரசு தமிழ் நாட்டைப் பற்றிப் போதுமான கவனம் எடுத்துக் கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் இருந்த அரசுகளும் இதில் போதிய கவனஞ் செலுத்துவதில்லை. ஏனோ தானோவென்று இருந்து விட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் மின்சாரத்தை உண்டாக்கும் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமலே போய்விட்டன. ஒரு திட்டத்தைப் போட்டால் அது செயல்பாட்டுக்கு வருவதற்கு அய்ந்தாறு ஆண்டுகள் ஆகலாம்.
திட்டமே இல்லாதபோது எப்படி நஞ்சு போல் ஏறிக்கொண்டிருக்கும் மின்சாரத் தேவையை எதிர் கொள்ளுமோ இந்த அரசு? எண்ணிப் பார்க்க வேண்டிய - முதன்மை தர வேண்டிய ஒன்றாகும் இது.
கூடங்குளம் அணுமின் நியைத்தில் அடுத்த ஆறு மாதங்களில் ஒரு யூனிட்டு செயல்படத் தொடங்குமெனச் சொல்லிக் கொண்டுள்ளனர். அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரும் என்று தெரியவில்லை.இப்படிப்பட்ட மிகவும் மோசமான சூழ்நிலையில் தட்டுப்பாட்டை மேலும் உண்டாக்கும் செயல் ஒன்றில் அரசு தன்னை அறியாமலே ஈடுபட்டு வருகின்றது. இலவயமாகத் தொலைக் காட்சி வழங்குவது எந்த அளவுக்கு மின்சாரத் தேவையை அதிகரிக்கும் என்று அரசு எண்ணிப் பாராதுள்ளது. வீட்டு மின்னிணைப்புகளில் பெரும்பகுதி மின்சாரம் தொலைக் காட்சிக்கே செலவிடப்படுகிறது என்பதை எம்முடைய ஆய்வு சொல்லுகிறது.
வசதியற்றோர் வீடுகளில் நாள்முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவயமாகக் கொடுத்த பிறகு மக்கள் அதைப் பார்க்காமலிருப்பார்களா? மக்கள் அனைவரும் தொலைக் காட்சியைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடியப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.முன்பெல்லாம் காலை 6 மணிமுதல் 8 மணிவரையும், மாலை 6 மணி முதல் 9 வரையிலும் மின்சாரப் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கும்.
காலையில் ஏற்படும் அதிகரிப்பு விவசாயப் பம்பு செட்டுகளை ஒரே நேரத்தில் இயக்குவதால் ஏற்படுவது, மாலையில் விளக்கெரிவதால் ஏற்படுவது. இப்போது தொலைக்காட்சிப் பயன்பாட்டுக்கு வந்து எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டபிறகு இரவு நேர மின்சாரப் பயன்பாட்டின் அளவு எதிர்கொள்ள முடியாத உயரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.
இக்கட்டுரை எழுதும் நாளன்று உச்சகட்ட மின்சாரம் 10625 மெ.வா. ஆகும். இதைக் குறைப்பதற்காகத்தான் சுமையை இறக்கிப்போடுதல் என்ற அதிரடி நடவடிக்கையயடுத்துச் சுமையைக் குறைக்கிறார்கள். இதனால்தான் பகல் இரவு எந்த நேரத்திலும் மின்சாரத் தடை உண்டாக்குகிறார்கள். இதற்கு முன்னறிவிப்புக் கொடுப்பதென்பது இயலாத ஒன்று.
சரி, இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு செய்யவேண்டியதென்ன என்பதையும் கூறுகிறோம்.நடுவணரசில் உள்ளவர்களில் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர் இல்லை. நடுவண் கட்டமைப்பிலிருந்து நம்முடைய இன்றைய மின் தேவைக்கேற்ப இப்போது பெறுவதை விடவும் மேலும் வலியுறுத்தி, கெடுபிடி செய்து பெற்றேயாகவேண்டும்.
நெய்வேலியிலிருந்து தமிழ்நாட்டின் தேவைபோக எஞ்சியதை மட்டுமே அண்டை மாநிலங்களுக்குப் பங்களிக்க வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது.அண்மையில், நடுவணரசின் மின்சாரத்துறை அமைச்சர் செயராம் ரமேசை, அசாம் மின்சாரத் துறை அமைச்சர் பிரதயுத் யோர்டோலாய என்பவர் 21.9.2008இல் சந்தித்துப் பேசியுள்ளார்.
அசாமில் தேசிய அனல் மின் குழுமத்தால் சாலகத்தி என்ற இடத்தில்750 மெ.வா. திறன் கொண்ட ஒரு அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது 2010ஆம் ஆண்டின் இறுதியில் இயக்கி வைக்கப்படஉள்ளதால் இம் மின் நிலையம் உண்டாக்கும் 750 மெ.வா. மின்சாரத்தையும் அசாமுக்கே அளிக்கவேண்டும் என்று அம்மாநில அமைச்சர் கேட்டுள்ளார். அப்படி ஒரு மாநிலத்தில் நிறுவப்படும் அனல் மின் நிலையத்தின் முழு மின்சாரத்தையும் அம் மாநிலத்துக்கே அளிப்பது என்பது புதிதல்ல.
இதற்கு முன்பே ஆந்திராவில் இம்மாதிரி அனல் மின் நிலைய மின்சாரமும் மற்றும் அரியாணாவில் பரிதாபாத் அனல் மின் நிலையத்தின் மின்சாரமும் முழுவதும் அந்தந்த மாநிலங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, அதுபோல அசாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுவரும் தேசிய அனல்மின் குழுமத்தின் சாலகத்தி அனல்மின் நிலையத்தின் 750 மெ. வாட் மின்சாரம் முழுவதையும் தன் மாநிலத்துக்கே ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். நடுவணரசின் அமைச்சரும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.
மேற்சொன்ன செய்தியையும், நம் மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி நடுவணரசிடம் எடுத்துச் சொல்லி, நம் மாநிலத்தில் உள்ள நெய்வேலி மற்றும் கூடங்குளத்தில் இவ்வாண்டின் இறுதியில் வரவிருக்கும் முழு மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே அளிக்கவேண்டுமென்றும், நம் தேவை போக எஞ்சியுள்ளதை மட்டுமே அண்டை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து, அப்படிப் பெறுவதில் வெற்றிபெற்றாலொழிய இப்போதைய கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு ஒருபோதும் நீங்காது.
இது தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடிக்கும், இன்னும் சொல்லப்போனால் இனிவரும் ஆண்டுகளில் தட்டுப்பாடு இதைவிடவும் மோசமாகி, கடுமையான சூழ்நிலை உருவாகிவிடும் என்பது உறுதி.
புதிய பெருந் திட்டங்களைப் போராடிப் பெற்று உடனடியாகச் செயல்படுத்தவேண்டும்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
- இக்குறளில் வாழ்க்கைக்குச் சொன்னது தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் பொருந்தும்.
நன்றி: பொறிஞர். கு.ம. சுப்பிரமணியன், கீற்று
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment