Tuesday, December 9, 2008

மரண வியாபாரிகள்
சென்ற வாரம் எனது மூளை ஸ்தம்பித்திருந்தது. ஒரு வரியைக்கூட கோர்க்கமுடியாமல் செயலிழந்து போயிற்று. அத்துடன் எழுதி என்ன சாதித்தோம் என்ற துயரமும் சோர்வும் மனத்தை ஆக்கிரமித்து வெறுப்படைய வைத்தது. மூளை செயலிழந்ததற்கு மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் உறைய வைக்கும் கொடூரமான தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சி மட்டும் காரணம் இல்லை என்று ஒரு வாரம் கழித்துப் புரிகிறது. மிகப் பெரிய அவமான உணர்வும் என்னை அதிர்ச்சி கொள்ள வைத்திருந்தது இப்போது தெளிவாகப் புரிகிறது.

இந்தியக் காட்சி ஊடகங்களின் மீது, முக்கியமாக மும்பையிலிருந்தும் தில்லியிலிருந்தும் இயங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி சானல்கள் மீதும், மைக்கை நீட்டியதும் பொன்மொழிகளை உதிர்க்கத் தயாராக இருக்கும், அல்லது சந்தர்ப்பத்தின் தீவிரத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கும் நமது அசட்டு அரசியல்வாதிகள் மீதும் ஏற்பட்ட எனது கோபம் கட்டுக்கடங்காமல் போனதே என்னை நிலை குலைய வைத்ததாகத் தோன்றுகிறது. சாமான்ய மும்பைக்காரரின் வெடித்துச் சிதறிய கேள்விகளை விடுங்கள் தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் தயார் நிலையில் நிர்வாகம் ஏன் இல்லை? அச்சுறுத்தல் வரலாம் என்கிற எச்சரிக்கைகளை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?

பல முறை பயங்கரவாதத் தாக்குதல்களை, கடந்த மிகச் சில வருஷங்களாக அனுபவித்து வந்தும், இதை சும்மா விடமாட்டோம், தக்கபடி எதிர்கொள்வோம் என்று வீறாப்புப் பேசுவதைத்தவிர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போலீஸுக்குத் தேவைப்படும் கனரக ஆயுதங்கள் வழங்கப் படாதது ஏன்? ராணுவ கமாண்டோக்கள் வந்து சேர, தாமதமானது ஏன்? என்ற இந்தக் கேள்விகள் நியாயமானவை . பாதிக்கப்பட்டவரின் ஆவேசச் சொற்களில் ஏமாற்றப்பட்டதான உணர்வு வெளிப்பட்டதில் நிறைய அர்த்தம் இருந்தது. கேட்கும்போதெல்லாம் நம்மையும் குற்றவாளிகளாக்கிற்று.

ஆனால் மக்களது அதிர்ச்சியும் பீதியும் சோகமும் , 200க்கு மேற்பட்ட விவஸ்தையற்ற வெறியாட்டக்காரர்களின் கையில் பலியான உயிர்களும் வெறியர்களைப்பிடிக்க உயிரைப் பணயம் வைத்து போதிய நவீன தற்காப்புக் கவசமற்ற நமது கமாண்டோக்களின் 48 மணிநேரப் போராட்டமும் நமது தொலைக்காட்சி சேனல்களால் வியாபாரமாக்கப்பட்டது. மகாக் கேவலமாக TRP ரேட்டிங் போட்டியில் ஒவ்வொன்றும் இறங்கிற்று. விஷயத்தில் சரக்கு இருப்பதைக் கண்டு சேனல்களின் மூத்த நிருபர்கள் தில்லியிலிருந்து மும்பை பறந்து சென்றார்கள்.

சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் 56 பேரை - சாமான்ய மனிதர்களை- இரக்கமில்லாமல் கொன்றுவிட்டுப் போனதை எடுத்துச் சொல்ல எந்த நிருபருக்கும் நேரமோ அக்கறையோ இருக்கவில்லை. பணக்காரர்களும் வி.ஐ.பிக்களும் மட்டுமே செல்லும் , பயங்கரவாதத் தாக்குதலுக்கு உட்பட்ட தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் ஓபராய் ட்ரைடண்ட் ஆகிய இடங்களில் மட்டுமே டேரா போட்டார்கள். இஸ்ரேலிய யூதர்கள் இருந்த நாரிமன் ஹவுஸும் இரண்டாம் பட்சமாயிற்று. எல்லா நிருபர்களுமே தாங்கள் சொல்வதும் காண்பிப்பதும் பிரத்யேகக் காட்சி என்றார்கள். விநாடிக்கு விநாடி Breaking news என்று நிரூபிக்க முடியாத செய்தியை 'உடைத்தார்கள்.'

பார்ப்பவர்களின் காது செவிடு என்று எல்லாரும் நினைத்து கத்தோ கத்து என்று கத்தினார்கள். உணர்ச்சி வசப்பட்டார்கள். கண்ணில் பட்ட மும்பைக்காரரை எல்லாம் இழுத்துப் பிடித்து அவர்களது மன நிலையை அறியத் துடித்தார்கள். பிணங்கள் கிடக்க அவற்றைக்கடந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கலவரத்துடன் ஹோட்டலுக்கு வெளியில் வந்து சேரும் வெளிநாட்டு டூரிஸ்டுகளின் முகத்திற்கு முன் மைக்கை நீட்டி 'how do you feel?' என்றபோது நான் அவமானத்தில் குன்றிப் போனேன். நிருபர்களின் கேள்விகளுக்கு ஒத்துழைத்தவர்கள் வேடிக்கை பார்க்கவந்த அல்லது வீட்டில் அமர்ந்து என்னைப் போல் டிவியில் பார்த்த மக்கள். 'அதிர்ச்சியாக இருக்கிறது. கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.' என்றார்கள்.

பிறகு நம்மைப் பார்த்து நிருபர்கள் தவறாமல் சொன்னார்கள். மும்பைக்காரர்கள் கோபமாக இருக்கிறார்கள். யார்மீது? அரசியல்வாதிகள் மீது. நிர்வாகத்தின் மீது. நானும் கவனித்து வந்தேன். ஒருத்தர்கூட, மிகக் கோபத்தில் இருந்த தெருவில் நடந்த சாமான்ய மனிதர்கூட இது பாகிஸ்தான் செய்த சதி என்றோ, முஸ்லிம் தீவிரவாதிகளின் வேலை என்றோ சொல்லவில்லை. தாக்குதலை எதிர்கொள்ளத் தவறிய நிர்வாகத்தின் மீது தான் கோபம். ரயில் நிலையத்திலும் தெருவிலும் குண்டுபட்டு இறந்தவர்களில் அநேகம் பேர் முஸ்லிம்கள் என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.


எல்லா சேனல்களுக்கும் மகத்தான தீனிகிடைத்துவிட்டது. அதற்கு உப்பும் காரமும் சேர்ப்பதில் முனைந்தன. விவாதத்திற்கு அரசியல்வாதிகளைக் கூப்பிட்டன. பிரபலங்களை அழைத்தன. பாகிஸ்தான் பிரபலங்கள், மாஜி ராணுவத்தினர்,
பத்திரிகையாளர்கள் சாட்டிலைட் மூலம் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டார்கள். விவாதம் இந்திய அரசியல் செயலின்மையைச் சாடியதோடு, பாகிஸ்தானை நேரடியாகக் குற்றம் சாட்டிற்று. பாகிஸ்தான் அரசியல் அதிகாரபூர்வ அங்கம் வகிக்காத மறுபக்கம் கலந்துகொள்ள வந்தவர்கள் அரசுசார்பில் பதில் சொல்லியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்கள் காதுபட விவாதம் என்ற பெயரில் நடக்கின்றன- தரக்குறைவான சாடல்கள்..

மும்பை மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்; ஆவேசத்தில் இருக்கிறார்கள் என்ற கூக்குரல்கள்.. அரசியல் தலைவர்களை மிகக் கேவலமான கோப வார்த்தைகளில், கச்சிதமான ஆங்கிலத்தில் உதிர்க்கும் மும்பை பிரபலங்கள். நீங்கள் யார் எங்களை விமர்சிக்க என்று தங்கள் கோபத்தை எதிரொலிக்கும் கூப்பிட்டவுடன் டி வி காமிராவுக்கு எதிரில் வந்து நிற்கும் இந்திய அரசியல் தலைவர்கள்...விவாதத்தின் முடிவில் எல்லை தாண்டிவந்த பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தானே பொறுப்பு என்கிற ரீதியில் பேச்சுகள். மறுபக்கம் இருந்த பாகிஸ்தானியர்களை இந்த விவாதம் எரிச்சல் மூட்டியதில் வியப்பில்லை.

இந்தியாவுக்கு சாதகமாகப் பேசும் பாக் பத்திரிகையாளர்களும் கோபப் பட்டார்கள் . கடைசித் தீவிரவாதி தாஜ் ஹோட்டலில் பிடிபடுவதற்குள் சேனல்கள் இரு நாட்டுக்கிடையே போர் மூட்டிவிடும் என்று தோன்றிற்று.
இது ஜனநாயகம் என்கிற தெம்பில் நடக்கும் கேவலமான அத்துமீறல்கள். வேறு எந்த நாட்டிலாவது இத்தகைய அராஜகம் நடக்குமா? செய்தியை அளிப்பது மட்டுமே நிருபர்களின் வேலை. விவாதங்களில் ஓரளவு காரண காரியங்களை அலசலாமே தவிர, திட்டவட்டமாகக் குற்றம் சாட்டுவதும் , மிக அபாயமான காலகட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டுவதும் எந்தவிதத்தில் நியாயம்? பாதுகாப்பு அமைச்சரை அழைத்து பாகிஸ்தான் நமது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் இனி இந்தியா போர் தொடுக்குமா என்கிற கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவேண்டிய அவசியமென்ன?

முதலாவது பேட்டிக்கு ஒப்புக்கொள்வானேன்? கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுசில் இறங்குவதை எல்லாம் விலாவாரியாக சேனல்கள் காண்பிக்கக் கூடாது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தடை விதித்திருக்கவேண்டாமா? சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது அசைவையும் நடவடிக்கைகளையும் காட்டியது எதிரிகளும் பார்க்க நேர்ந்ததால் தங்களது செயல்பாடுகளுக்கு இடையூறாகிப் போயிற்று என்று கமாண்டோ அதிகாரிகள் பின்னால் சொன்னார்கள். ஊடகத்துறைக்குக் கொடுக்கப்படும் சுதந்திரம் பொறுப்பானது. காட்சி ஊடகத்தின் தாக்கம் மிக வலுவானது. பொறுப்பை மறந்தால் அராஜகம் மட்டுமல்ல ,தேசத் துரோகம்.
பயங்கரவாதம் என்பது உலகம் இன்று எதிர்கொள்ளும் பொதுவான ஆபத்து. அதற்கு முகமில்லை; தேசிய அடையாளமும் இல்லை. அது சில அரசியல் தலைவர்களால் அவர்களின் அராஜகச் செயல்களால் கிளம்பிவிட்ட பூதங்கள். பாகிஸ்தானின் ISI இந்தியாவுக்கு எதிராகப் பயிற்சி முகாம்கள் நடத்திய தகவல்கள் உண்டுதான். ஆனால் அவற்றை விவாதிக்கும் சமயம் இதுவல்ல.

சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாரியன் ஹோட்டல் தாக்கப்பட்டது. இன்று நமது தாஜ் தாக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தால் இரு நாடுகளும் காயப்படுகின்றன. இது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ஆன போரில்லை. பயங்கரவாதத்துடனான போர். பாகிஸ்தான் அதிபரின் பேச்சு முன்னுக்குப் பின் முரணாக இருந்தால் அவர் மிகுந்த உள்நாட்டு நிர்ப்பந்தத்தில் இருப்பது காரணம். இரு நாடுகளுக்கும் இடையே உயர் மட்டத்தில் ராஜதந்திர ரீதியில் பேசி பயங்கரவாதக் குழுக்களைக் கூட்டு முயற்சியில் அகற்ற முயற்சி செய்யவேண்டுமே தவிர பொறுப்பற்ற காட்சி ஊடகங்கள் அது தங்கள் வேலை என்கிற நினைப்பில் திமிர் பிடித்த விவாதங்களில் ஈடுபடக்கூடாது.

இன்றைய காட்சி ஊடகங்களின் போக்கு அநாகரிகமானது. பண்பற்றது. அவர்களது கேள்விகளுக்குத் தீனி போட அரசியல் தலைவர்கள் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களது அசட்டையான நிர்வாகத்தின் மேலிருக்கும் மக்களின் கோபம் இதனால் திசை திருப்பப்படும். ஒன்று மட்டும் நிச்சயம்.

இந்த மும்பை தாக்குதலில் எல்லா அரசியல்வாதிகளின் , பாஜகவோ, கம்யூனிஸ்டோ, காங்ரஸோ - முகத்திரை விலகிவிட்டது. கடவுளே , எத்தனை அசிங்கமான முகங்கள்! விழிப்புடன் பிரஜைகள் இருக்கவேண்டிய காலகட்டம் இது. அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பார்கள். ஜனநாயகத்தில் அது நேர் எதிர் . மக்கள் எவ்வழி அவ்வழி நிர்வாகம். அதை நாம் உணராதவரை நமக்குப் பேச வக்கில்லை.

நன்றி: வாஸந்தி, uyirosai@uyirmmai.com

No comments: