” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எ
ந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.
குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்புதான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.
அந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள்.
தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.
இப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.
பத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக்குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர்.
இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன.
வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று.
இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.
குண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும் இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.
அமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள். விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள்.
நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா, புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.
ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை.
இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.
அவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர்! உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை, பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு! தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர்.
இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.
சிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள்! உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம்.
தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கும் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை!
கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது! இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா?
சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும்? மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால் ஒரு அர்த்தம் உண்டு.
நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம்? ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது? ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம்.
இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.
மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.
புதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு!
ஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள்.
மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம்பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.
கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை.
அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?
- தொடரும்
நன்றி: http://vinavu.wordpress.com/2008/12/03/mumbaip1/
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment