Tuesday, December 20, 2011

மக்களைக் கசக்கிப் பிழியும் கடும் விலை உயர்வு

நடுவண் அரசும், மாநில அரசுகளும், தாராள மயம், தனியார்மயம், உலகமயம் எனும் கொள்கை களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதால், ‘மக்கள் நல அரசு’ என்ற கோட்பாடு வேகமாகக் கைவிடப்பட்டு வருகிறது.

எனவே மக்களின் அடிப்படைத் தேவைகளையும், உள்ளார்ந்த விழைவுகளையும் நிறைவேற்றுவதை விட, சந்தையைக் கட்டுப்படுத்துகின்ற - பொருள்களின் விலையைத் தங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக் கின்ற ஆற்றல்களாக உள்ள - பெருமுதலாளிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் முழு முனைப் புடன் அரசுகள் செயல்படுகின்றன. அரசுகள் பெருமுத லாளியக் குழுமங்களின் பூசாரிகளாக மாறிவிட்டன.

“மக்களுக்கு வாழ்வளித்துக் காக்க வேண்டியது அரசின் கடமை அல்ல; அந்தப் பொறுப்பு, தாராளமய உலகச் சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது; எனவே உலகச் சந்தைதான் இனி உங்கள் கடவுள்; ஆகவே உலகச் சந்தையின் அருள்வேண்டி, கைகூப்பித் தொ ழுங்கள்” என்று அரசுகள், மக்களை நோக்கிக் கூறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதன்விளைவாக, உணவுப் பொருள்களின் விலை யும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மற்ற பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. 2010 திசம்பர் முதல் பொதுப் பணவீக்கம் 9 விழுக்காட்டுக்குமேல் இருந்து வருகிறது. உணவுப் பொருட்களின் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதம் 12 விழுக்காட்டைத் தாண்டிவிட்டது. இதனால் வெகுமக்கள் தங்கள் வருவாயில், பெரும் பகுதியை உணவுக்காகவே செலவிடுகின்றனர். மற்ற இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நோயுற்றால் மருத்துவரிடம் செல்ல இயலாமல், உயிருடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விரைவில் விலைகள் குறைந்துவிடும் என்று ‘பொருளாதாரப் புலி’ பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஓராண்டுக்குமுன் இதே சமயத் தில், நிதி அமைச்சர், “இந்த ஆண்டு இந்தியா முழு வதும் பருவமழை தேவைக்குமேல் பெய்துள்ளது. எனவே காரிப், ரபி (குறுவை, சம்பா) பருவங்களில் வேளாண் அறு வடை முடிந்து, விளைபொருள்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதும் விலைகள் குறைந்து விடும். 2011 மார்ச்சு மாதத்திற்குள் பணவீக்கம் 7 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைந்துவிடும்” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இவ்வாண்டு, 22.11.2011 அன்று தொடங்கிய குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் திலும், நிதி அமைச்சர், 2012 மார்ச்சு மாதத்திற்குள் பணவீக்கம் 6 முதல் 7 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துவிடும் என்று கூறியிருக்கிறார். இப்படிப் பொய்யும் புனைசுருட்டும் சொல்லியே மக்களை ஏய்ப்பதும் வஞ் சிப்பதும் ஆட்சியாளர்களின் வாடிக்கையாகிவிட்டது.

“மக்களின் வாழ்க்கைத்தரமும், வருவாயும் உயர்ந்து வருகிறது. அதனால் மக்கள் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, இறைச்சி, மீன் முதலானவற்றை அதிகம் வாங்குகின்ற னர். இதனால் இவற்றின் தேவை அதிகமாகி வருகிறது. ஆனால் இவற்றின் விளைச்சல் இத்தேவையை ஈடு செய்யும் வகையில் அதிகமாகவில்லை. தேவை - வழங்கல் (Demand and supply) முரண்பாட்டால்தான் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது” என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சரும் விலை உயர்வுக்கு விளக்கமளிக்கின்ற னர். இக்கூற்றில் சிறுபகுதி உண்மை இருக்கிறது. ஊட்ட மான உணவுப் பொருள்களை உண்பது அதிகமாகி இருக்கிறது. ஆனால் இவற்றை உண்பவர்கள் யார்? தாராளமயச் சந்தையால் பயன் பெறும் - மேல்தட்டு - நடுத்தர வர்க்கமாக உள்ள 30 விழுக்காடு குடும்பத்தினர் தாம் இவற்றில் பெரும் பகுதியைத் துய்க்கின்றனர். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வும், முன் பேர - ஊகவணிகமும் உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முதன்மையான காரணங்களாகும். அதனால் தான் 2010-11ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவில், உணவுப் பொருள்களின் விளைச்சல் 24 கோடி டன் என்ற அளவுக்கு உயர்ந்திருந்த போதிலும் விலை குறையவில்லை.

மேலும் மேலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது - அதாவது அரசின் கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த முடியும் என்று எப்போ தும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் மன்மோகன் சிங். இதன் அடிப்படையில் பெட்ரோல் விலையை, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை 2010 சூன் மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டது. அதே சமயத்தில்தான், உரங்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையும் உர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது.

“பெட்ரோலியப் பொருள்களுக்குத் தொடர்ந்து பெருந் தொகையை மானியமாக அளிப்பதால், அவற்றின் உற் பத்திச் செலவைக்கூட ஈடுகட்ட முடியவில்லை. இந்த இழப்பை ஈடுகட்ட அரசு பெருந் தொகையை அளிப்ப தால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பயனடைவோரே - நுகர்வோரே பெட்ரோலியப் பொருள் களின் உற்பத்திச் செலவை ஏற்க வேண்டும்” என்பதை அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இதன் முதல்கட்ட மாகத்தான் மகிழுந்துகளில் மோட்டார் சைக்கிள்களில், நேரடியாகப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் விலையை முடிவு செய்யும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நடுவண் அரசு விளக்க மளிக்கிறது.

பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்திச் செலவை நுகர்வோரே ஏற்க வேண்டும் என்ற அரசின் கொள் கையின்படியும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவளி ஆகியவற்றுக்கு அரசு அளித்துவரும் மானியச் சுமையைக் குறைக்கும் நோக்குடனும், 2011 சூலை மாதம், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.3.00; மண்ணெண் ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.2.00; சமையல் எரிவளி உருளைக்கு ரூ.50.00 என விலை உயர்த்தப்பட்டது.

சரக்குந்துகள் அனைத்தும் டீசலால் இயங்குகின்றன. இதனால் எல்லாச் சரக்குகளின் விலையும் உயருகிறது. வேளாண்மையில் நீர் இறைக்க 60 விழுக்காடு அளவுக்கு டீசல் என்ஜின்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் 9 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு இல்லை. இந்த வீடுகளில் இரவில் மண்ணெண்ணெய் விளக்கே பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் சாதாரணக் குடும்பங்கள்கூட சமையல் எரிவளி இணைப்புப் பெற் றுள்ளன. ஆனால் இவ்வாறு வெகுமக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவது பற்றி அரசு கவலைப்பட வில்லை. மாறாக, பெட்ரோல் விலையைப் போலவே, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவளி ஆகிய வற்றின் விலையை முடிவு செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே விரைவில் அளிக்கப் போவதாக அரசு அவ்வப்போது கூறிக் கொண்டிருக் கிறது.

“2011 நவம்பர் 1 நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசலில் ரூ.8.58, மண்ணெண்ணெயில் ஒரு லிட்டருக்கு ரூ.25.66, சமையல் எரிவளி உருளையில் ரூ.260-50 என அவற்றின் உற்பத்திச் செலவைவிடக் குறைவாக விற்கப்படுகிறது. இதனால் இந்த நிதி ஆண்டில், இவற்றுக்கு மானியமாக அளிக்கும் வகையில், அரசுக்கு ரூ.1,30,000 கோடி இழப்பு ஏற்படும்” என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார் (தி இந்து 3.11.11).

பெட்ரோலியப் பொருள்களை மானிய விலையில் மக்களுக்கு அளிப்பதால், அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று அரசு திரும்பத் திரும்பக் கூறிவருவது அப்பட்டமான பொய். பெட்ரோல் விலையில் 48 விழுக்காடும் மற்ற வற்றின் விலையில் 20 விழுக்காடும் நடுவண் அரசுக் கும், மாநில அரசுகளுக்கும் வரியாகச் செல்கிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான அரசின் வரிகள், அமெரிக்கா, கனடா, பாக்கிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளின் விரிவி கிதங்களைவிட அதிகமாக உள்ளன (பிரண்ட்லைன் 2011, சூலை 29).

மக்களுக்குக் குறைந்த செலவில் - இவர்களுக்குச் சுமையாக இல்லாத வகையில் - பொதுப் போக்கு வரத்து வசதி களைச் செய்துதர வேண்டியது அரசின் தலையாயக் கடமைகளுள் ஒன்று என்பதை மறந்து விட்டு, தமிழ் நாட்டு முதலமைச்சர் செயலலிதா 17.11.11 அன்று அதிரடியாக ஒரே இரவில், பேருந்துக் கட்டணத்தைக் கிட்டதட்ட இரண்டு மடங்காக உயர்த்திவிட்டார். “2001 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.18.26ஆக இருந்தது. இப்போது ரூ.43.95 ஆக உயர்ந்து இருக் கிறது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்துக்கும் சேர்த்து ரூ.6,150 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே கட்டணத்தை உயர்த்த வேண்டி யது தவிர்க்க இயலாததாகிவிட்டது” என்று அறிக்கை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் டீசல் மீது விதிக்கப்படும் வரி மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி எவரும் ஏன் வாய் திறப்பதில்லை.

நடுவண் அரசுக்கு உற்பத்தி வரி மூலம் கிடைக்கும் வருவாயில் 5இல் 2 பங்கு பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலமே கிடைக்கிறது. 2010-11ஆம் ஆண்டில் பெட்ரோலியத் துறை மூலம் நடுவண் அரசுக்கு ரூ.1,36,000 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.80,000 கோடியும் வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டில் அரசு அளித்த மானியம் (பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் உட்பட) ரூ.40,000 கோடியாகும். அதாவது அரசுக்குப் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் கிடைத்த வருவாயில் 20 விழுக்காடு மட்டுமே மானியமாக அளிக்கப்பட்டது. மக்கள் வரியாகவும் தீர்வையாகவும் ரூ.100 அரசுக்கு அளித்ததில், ரூ.20 மட்டுமே மானியமாகப் பெற்றனர். இந்த உண்மையை மறைத்துவிட்டு மானியம் அளிப்ப தால் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது; இந்த மானியத் தொகையை மக்கள் நலத் திட்டங்களுக் காகச் செலவிட முடியாமல் போகிறதே என்று ஆட்சி யாளர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் எண்ணெய்த் தொழிலில் உள்ளன. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதி ஆண்டுகளில் இம்மூன்று நிறு வனங்களும் சேர்ந்து, ரூ.36,653 கோடி இலாபம் பெற்றுள்ளன. நடுவண் அரசுக்கு இதே காலத்தில் இவற்றின் மூலம் ரூ.4,73,000 கோடி இலாபம் கிடைத்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியன் ஆயில் நிறுவனம், வரிப் பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி இலாபம் ஈட்டியிருக்கிறது. இந்த நிறுவனம் அரசுக்கு இலாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடி கொடுத்திருக்கிறது. இதேபோல், பாரத் பெட்ரோலிய மும், இந்துஸ்தான் பெட்ரோலியமும் பலகோடி உருபா இலாபம் ஈட்டியுள்ளன (தினமணி 20.10.2011).

இவ்வாறு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நல்ல இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கையில், இவை உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட முடியாத அள வுக்குப் பெரும் இழப்பில் இருப்பதாக ஆட்சியாளர்கள் ஆந்தைகள் போல் அலறி ம்க்களை மிரட்டிக் கொண்டி ருக்கிறார்கள். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள சி. ரங்கராசன், “பண வீக்கத்தின் அளவு குறையத் தொடங்கியதும் டீசல், சமையல் எரிவளி ஆகியவற்றின் விலையைப் பன் னாட்டுச் சந்தையுடன் இணைத்திட அரசு முடிவு செய் துள்ளது. ஏனெனில் எண்ணெயைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) தொடர்ந்து இழப்பை இனியும் தாங்க முடியாது. ‘அரசின் கட்டுப்பாட்டில் விலைகளை நிர்ணயம் செய்தல்’ என்ற பழையக் கோட்பாட்டி லிருந்து விலகி வெகுதொலைவு வந்துவிட்டோம். இனியும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது” என்று கூறியுள்ளார் (தி இந்து 9.11.11).

எண்ணெய் நிறுவனங்கள் - குறிப்பாக ரிலையன்சு போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவே பொய்யான இழப்புக் கணக்குக் காட்டப்படுகிறது. பெட்ரோலியப் பொருள்கள் மட்டுமின்றி, எல்லாப் பொருள்களையும் உலகச் சந்தையுடன் இணைப் பதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு வழி அமைப்பதே நடுவண் அரசின் கொள்கையாகக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. உலகச் சந்தையில் எல்லாச் சரக்குகளின் விலையையும் ஊசலாட்டமான நிலைக்கு உட்படுத்தி - ஊகபேர வணிகத்தின் மூலம் கொள்ளை இலாபம் பெறவேண்டும் என்பதே பன்னாட்டு நிறு வனங்களின் - நிதி ஆதிக்க நிறுவனங்களின் நோக்க மாகும்.

“இயந்திரங்கள் மூலமான பொருள் உற்பத்தியை அச்சாணியாகக் கொண்டு வளர்ந்த முதலாளியம், நிதி மூலதனத்தை முதன்மையாகக் கொண்டதாக மாறி வருவதே ஏகாதிபத்தியத்திற்கு அடிப்படையாகும்” என்று லெனின் சொன்னார். நிதி ஆதிக்கக் கும்பல்களின் தில்லுமுல்லுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண் டும் என்றார். லெனின் குறிப்பிட்டதை விட, இன்று, இந்த நிதி ஆதிக்கக் கும்பல், பன்மடங்கு ஆதிக்கச் சக்தி யாக வளர்ந்துள்ளது. உலகமயச் சூழலில், கணினியின் உயர்தொழில்நுட்ப வலைப்பின்னல் மூலம், உலகச் சந்தையையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் சராசரி விலை உயர்வின் ஏற்றத்தாழ்வு வரைபடமாகக் கீழே தரப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதில்லை. தேவை - வழங்கல் என்பதில் திடீரென்று பெரிய இடைவெளி உண்டாவ தில்லை. உலக அளவில் எண்ணெயின் தேவை ஆண்டிற்கு 1 முதல் 2 விழுக்காடு என்ற அளவில்தான் அதிகமாகிறது. எனவே கச்சா எண்ணெய் விலையின் ஊசலாட்டங்களுக்கும், திடீர் ஏற்ற இறக் கங்களுக்கும் இந்த வணிகத்தில் நிகழும் முன்பேர - ஊகவணிகமே காரணமாகும். நியூயார்க்கில் மெர்க் கண்டைல் எக்ஸ்சேன்ஜ்-இல் முன்பேர வணிகத்தின் அளவு 2001ஆம் ஆண்டு இருந்ததைவிட 400% அதிகமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 60% உயர்ந்திருக்கிறது.

கச்சா எண்ணெய் வணிகம், உலகில் பிரென்ட் குரூட், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடி யேட், துபாய் குரூட் ஆகிய மூன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. 1970கள் முதற்கொண்டு, பெரும் பாலும் அரபு நாடுகளைக் கொண்ட அமைப்பான பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கட்டுப்பாட்டில் தான், கச்சா எண்ணெய் விலை நிர்ண யம் செய்வது இருந்தது. ஆனால் 2005க்குப்பின் இது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பன்னாட்டு நிறுவனங் களின் கைக்கு மாறிவிட்டது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வின் இலாபங்களின் பெரும்பகுதி முன் பேர வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், பெட்ரோலியப் பொருள் வணிகத்தில் உள்ள எக்சான் மொபைல், செவ்ரான், கோனோகோ பிலிப்ஸ், ஆங்கிலோ-டச்சு, இராயல் டச்சு ஷெல் போன்ற பன்னாட்டு நிறு வனங்களுக்கும் சென்று குவிகிறது.

இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனம், மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெறும் இலாபத்தைவிட அதிகமான இலாபத்தைக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோலியப் பொருள்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறுகிறது. ரிலையன்சு நிறுவனம் எண்ணெய் யைத் துரப்பணம் செய்தல், உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்களையும் செய்கிறது. கோதாவரிப் படுகையின் எண்ணெய் வயல்களில் உற்பத்தி-பகிர்வு ஒப்பந்த (PSC) விதிகளுக்குப் புறம்பாக ரிலையன்சு செயல்படு கிறது என்று அந்நிறுவனத்தின் மீது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. கோதாவரிப் படுகை டி6 எண்ணெய் வயலில் 1.85 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்திச் செலவைப் பொய் யாகக் காட்டியுள்ளது. இதை ரிலையன்சு நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும் என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை உயர்த்துவதற்கு நடுவண் அரசு இப்போது புதிய காரணத்தைக் கண்டுபிடித் துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான உருபாயின் மதிப்பு சரிந்து கொண்டே போவதால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை அதிகமாகிறது. இதைச் சரிக்கட்டுவதற்காக என்று கூறி 3.11.11 அன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப் பட்டது. அப்போது ஒரு டாலருக்கான உருபாயின் மதிப்பு ரூ.49.15 ஆக இருந்தது. இந்த விலை உயர்வுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. பெட்ரோல் விலையை முடிவு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது; இதில் நடுவண் அரசு தலையிட முடியாது என்று நிதி அமைச்சர் கூறினார்.

ஆனால், 15.11.11 அன்று பெட்ரோல் விலை ரூ.2.35 குறைக்கப்பட்டது. 21.11.2011 அன்று நாடாளுமன்றத் தில் விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிப்பதை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற் காகவே இந்த விலைக் குறைப்பு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5 டாலர் குறைந் துள்ளது என்பது விலைக் குறைப்புக்குக் காரணமாகக் காட்டப்பட்டது. கடந்த 33 மாதங்களில் உலகச் சந் தையில் கச்சா எண்ணெய் விலையில் இறக்கம் ஏற் பட்ட போதெல்லாம் அரசு ஏன் விலையைக் குறைக்க வில்லை? மேலும் 21.11.11 அன்று டாலருக்கு நிகரான உருபாயின் மதிப்பு ரூ.52.20 ஆக இருந்தது.

டாலருக்கு நிகரான உருபாயின் வீழ்ச்சியால் இறக்கு மதியாகும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறும் நடுவண் அரசு, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி யாகும் பெட்ரோலியப் பொருள்கள் மூலம் இதே காரணத்தால் கூடுதல் வருவாய் கிடைப்பதை மறைக் கிறது. 2010-11ஆம் நிதி ஆண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பு கொண்ட பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பில் இது 16.53% ஆகும்.

கச்சா எண்ணெயின் மொத்தத் தேவையில் 70% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தி யாவில் 30% உற்பத்தியாகிறது. இந்த உண்மையும் மறைக்கப் படுகிறது. இவ்வாறு அரசால் மறைக்கப்படும் பல உண்மைகளின் அடிப் படையில்தான், பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால், எண்ணெய் நிறு வனங்களும், அரசும் தொடர்ந்து பெருத்த இலாபம் பெற்று வருகின்றன. ஆனால் ‘இழப்பு-இழப்பு’ என்று அரசு ஒப்பாரி வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறது.

“பணவீக்கத்திற்கு நிலையான தீர்வு காணப்பட, வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; உணவு வழங்கல் முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும்; தொழில்துறையில் முழுத்திறனை அடையவேண்டும்” என்று 22.11.11 அன்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக வேளாண்மையை அரசுகளே அடியோடு புறக்கணித்துவிட்டன. வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலும் முன்பேர வணிகத்திலும் தனியாரை அனுமதித்துவிட்டு, வேளாண்மையில் வளர்ச்சியை எப்படி எய்த முடியும்?

இருபது ஆண்டுகளுக்குமுன் 75 கிலோ நெல் மூட்டை ரூ.500-550க்கு விற்றது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. ஆனால் வேளாண் இடு பொருட் களான இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் முதலான வற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. உர நிறுவனங்களே, உரங்களின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளும் நிலை இருப்பதால், விவசாயிகளால் வாங்க முடியாத அளவுக்கு உர விலைகள் உயர்த் தப்பட்டுள்ளன.

2011 மார்ச்சு மாதம் டி.ஏ.பி. 50 கிலோ மூட்டை விலை ரூ.486 ஆக இருந்தது. இப்போது ரூ.910 ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பொட்டாஷ் ஒரு மூட்டை ரூ.230லிருந்து ரூ.565ஆகவும், 15 : 15 : 15 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.267லிருந்து 556 ஆகவும் உயர்ந்துள்ளது. 2011 அக்டோபர் மாதத்தில் மட்டும் 16 : 20 காம்பளக்ஸ் உரம் ஒரு மூட்டை ரூ.533லிருந்து ரூ.720ஆகவும், 20:20 உரம் ரூ.510லிருந்து ரூ.740ஆகவும், 14:28:14 உரம் ரூ.545லிருந்து ரூ.755ஆகவும் டி.ஏ.பி. ரூ.686லிருந்து ரூ.925 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இக்கொடிய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வக்கற்ற மன்மோகன் சிங் ஆட்சி ஏன் நீடிக்க வேண்டும்? இந்நிலையில் வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மானம் வெட்கம் இல்லாமல் பிராணப் முகர்ஜி கூறுகிறார். மு.க. அழகிரி உரங்களுக்கான அமைச்சராகப் பதவியில் நீடிக்கிறார்.

அரசு நிறுவனங்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு, அரசுக்கு இழப்பு - நிதி பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கும் அரசுகள், பணவீக்கத்தால், பொருள்களின் விலை உயர்வால், மக்கள் எவ்வளவு தொல்லைகளும் துன்பங்களும் பட்டாலும் அவை பற்றிக் கவலைப்படாதவைகளாக உள்ளன. ஆனால் அதே சமயத்தில் பெருமுதலாளி களுக்கு மேலும் மேலும் வரிச்சலுகைகளையும் பற்பல உதவிகளையும் தொடர்ந்து செய்கின்றன.2005-06 முதல் 2010-11 காலத்திலான 6 ஆண்டுகளில் நடுவண் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகையாக ரூ.3,74,937 கோடி, உற்பத்தி வரிச் சலுகையாக ரூ.7,49,623 கோடி, சுங்கவரிச் சலுகை யாக ரூ.10,00,463 கோடி என மொத்தம் ரூ.21,25,023 கோடி அளித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்குக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.240 கோடி தள்ளு படி செய்துள்ளது. ஆனால் பெட்ரோலியப் பொருள் களுக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.319 கோடி இழப்பு ஏற்படுவதாகப் பொய்யான புள்ளிவிவரத்தை அரசு அளிக்கிறது.

1995 முதல் 2010 வரையிலான காலத்தில் அரசின் கணக்குப்படியே, 2,56,913 உழவர்கள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை மறந்துவிட்டு உரங்களின் விலை ஒரே மாதத்தில் 50 கிலோ மூட்டைக்கு ரூ.250 உயர்த்தப் படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு ஒழிக்கப்பட வேண்டியதல்லவா? ஆனால் கடந்த 19 மாதங்களில் 13 முறை வங்கிகளில் முக்கிய கடன் களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று ரிசர்வ் வங்கி மூலம் நடுவண் அரசு ‘ஜீபூம்பா’ வேலை காட்டுகிறது.

‘அண்ணன்’ மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் ஆட்சி நடக்கும் வழியிலேயே, ‘தங்கை’ செயலலிதா தலைமையிலான தமிழ்நாட்டு அரசு, நடந்து, ஒரே சமயத்தில், பேருந்துக் கட்டணம், பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் விலை உயர்வை நியாயப்படுத்தி அறிக்கை விடுவதைப் போலவே, முதலமைச்சர் செயலலிதாவும், நடுவண் அரசையும், முன்பு ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சியையும் காரணங் காட்டி, கடுமையான விலை உயர்வை நியாயப்படுத்து கிறார்.

கிராமப்புறங்களில் ஒருவர் ரூ.26, நகர்ப்புறத்தில் ரூ.32 வருவாயுடன் வாழ முடியும் என்று உச்சநீதி மன்றத்தில் அலுவாலியா தலைமையிலான திட்டக் குழு அறிக்கை அளித்திருக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு பால் வாங்க முடியுமா? பயணம் செய்ய முடியுமா? இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழக அரசு விலையை உயர்த்தி உள்ளது. தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் பாலில் ஆறில் ஒரு பங்கு தான் ஆவின் நிறுவனம் வாங்குகிறது. ஆரோக்கியா போன்ற பல பெரிய பால் நிறுவனங்கள் செயல்படு கின்றன. பால் விலை உயர்வால், உண்மையில் பெரும் இலாபம் அடையப் போகிறவர்கள் இத்தனியார் நிறுவனங்களே! ஆனால் சாதாரண குடும்பங்களின் குழந்தைகளுக்காகப் பால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உழைப்பாளித் தோழன் விரும்பும் போது தேநீர் குடிக்க முடியாது.

பேருந்துக் கட்டண உயர்வால், தனியார் பேருந்து முதலாளிகளுக்கு மேலும் கொள்ளை இலாபம் கிடைக்கும். நாள்தோறும் கூலி வேலைக்காகப் பேருந்தில் பயணம் செய்யும் பல இலட்சம் ஆண்-பெண் தொழிலாளர் களின்-பொதுமக்களின் வயிற்றில் அடிக்கிறது பேருந்துக் கட்டண உயர்வு. அதை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்தியிருப்பது மாபெரும் கொடுமை!

வீடுகளுக்கான மின்கட்டணம் 50 யூனிட் வரை 75 காசு, 51-100 வரை 85 காசு, 101-200 வரை ரூ.1.50, 201-600 வரை ரூ.2.20, 600 யூனிட்டுக்கு மேல் ரூ.4.05 என்று அயந்து அடுக்காக இருந்த கட்டண முறை, இப்போது 200 யூனிட் வரை ரூ.2.00, 201-500 வரை ரூ.3.50, 500க்குமேல் ரூ.5.75 என உயர்த்தப்படப் போவதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன. மொத்த மின்நுகர்வில் வீடுகளில் 23% மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மொத்த மின் இணைப்பில் 65% வீடுகளின் மின் இணைப் பாகும். எனவே வெகுமக்களைப் பாதிக்கும் மின்கட்ட ணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.

அரசியல் ஆதாயத்திற்காக இலவசங்கள் வழங்கு வதைத் தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின்கீழ் இலவசமாக அரிசி வழங்குவது, வேளாண் தொழிலையே இழிவுபடுத்து வதாகும். தரமான அரிசி ரூ.25, ரூ.30 என்று விற்கப் படும் நிலையில், பொது விநியோகத்தில், கிலோ அரிசி ரூ.3 அல்லது ரூ.5 விலையில் வழங்கப்பட வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, மின் விசிறி, கிரைண் டர், ஆடு, மாடு போன்ற இலவசங்கள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்.

மின்கடத்தல்-பகிர்மானம் மூலமான இழப்பைக் குறைத்தல், மின் திருட்டைத் தடுத்தல், நிருவாகத்தைச் சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மின்துறைச் செலவைக் குறைக்க முடியும். போக்குவரத்துக் கழகங்களின் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒழிப்பதன் மூலம் அதனால் ஏற்படும் இழப்பைக் குறைக்க முடியும்.

பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் வழங்கும் சலுகைகளை நிறுத்தி, அவர்கள் மீது கூடுதல் வரி விதித்து, பொது மக்களுக்கான திட்டங்களின் பற்றாக் குறையை ஈடுசெய்ய வேண்டும். நடுவண் அரசும், மாநில அரசும் ஒரு பனியாவைப் போல் வெறும் இலாபக் கண்ணோட்டத்துடன் செயல்படாமல், மக்களுக்கான அரசுகளாகச் செயல்பட வேண்டும்.

உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடுவதன் மூலம், அரசுகள் இவ்வாறு செயல்படுமாறு செய்ய வேண்டும். அமெரிக்காவில் 1% ஆக உள்ள பெரும் பணக்காரர்கள் நாட்டின் வருவாயில் பெரும் பகுதியைக் கொள்ளை யிடுகின்றனர் என்று கூறி, ‘99% மக்கள் போராட்டம்’ என்ற பெயரில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். நாம் எப்போது வீதிக்கு வரப் போகிறோம்?

Thanks: க.முகிலன் & கீற்று

Tuesday, June 28, 2011

கச்சத் தீவு ... மூழ்காத உண்மைகள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக... முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.



“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.



தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.



கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ...



தாரை ஒப்பந்தம்



28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.



இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.



ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.



கச்சத் தீவின் வரலாறு...



கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னா; சேதுபதி அவா;களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளாh;.



1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல்; புனித அந்தோணியாh; ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்... ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.



இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனா;. அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.



வாலி தீவு



கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார். எவ்வளவு பெரிய இந்து மத நம்பிக்கையை நாம் இழந்துள்ளோம்!



காரணங்கள்...



இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.



இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி செய்தது என்ன?



அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறாh; கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான் அவா; இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 - லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து... 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவா; செய்யவில்லை.



‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.



ஜெயலலிதா செய்தது என்ன?



நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல... 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடா;பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளாh;.

ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?



13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்

போருக்கு வித்திடும் கச்சத் தீவு



கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.



“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவா;களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.



இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!



Rajasenthur_Pandian

ந.இராஜா செந்தூர் பாண்டியன்

வழக்கறிஞர்.





நன்றி

தமிழக அரசியல்

Tuesday, April 26, 2011

உள்நாட்டு தொழில்களை நசுக்கும் கருணாநிதி அரசின் கொள்கை

இன்றைய காலகட்டத்தில் இலவச அறிவிப்பும் அதை நிறைவேற்றுவதும் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிவிட்டது. மக்களைப் பொருத்தவரை தேர்தல் வாக்குறுதிகளை அந்தந்த‌ கட்சியின் கொள்கையாக கருதுபவர்கள் உண்டு. கட்சிக்குள் இருப்பவர்கள் தம் கட்சிக்கென்று கொள்கை உண்டு என்று நம்பியும் வருகின்றனர். கட்சிகளுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லை என்ற வாதத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் உண்மையில் கட்சிகளுக்கென்று கொள்கைகள் இருக்கின்றன. அவை எல்லாத் தடைகளையும் மீறி நிறைவேற்றவும் படுகின்றன. சென்ற ஐந்தாண்டு திமுக கருணாநிதி ஆட்சியிலும் கொள்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறதன. அத்தகைய தமிழக அரசின் பொருளாதார கொள்கைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடலாம்.

1. விவசாயக் கொள்கை

karunanidhi_213முதன்மையாக திமுக அரசின் வேளாண் கொள்கையைப் பார்ப்போம். 2009 சூன் மாத இறுதியில் விவசாயத்தை ஒழுங்குபடுத்துவது என்று "வேளாண் மன்ற சட்டம்" என்ற பெயரில் பாரம்பரிய விவசாய முறையில் புதுமையைப் புகுத்தப் பார்த்தது. இச்சட்டத்தின்படி வேளாண் பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளைக் கொண்டு 'வேளாண் மன்றம்' என்னும் அமைப்பை புதிதாகத் தொடங்குவதற்கு அடித்தளமிட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள் யாரும் இதில் பங்கேற்க முடியாது. வேளாண்மன்றத்தில் உறுப்பினராக இல்லாத யாரும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கக் கூடாது. வழங்கினால் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என்று அச்சட்டம் கூறுகிறது. தமிழக விவசாயிகளின் பாரம்பரிய அறிவை ஏற்றுக் கொள்ள மறுத்து, பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசனைப்படி அந்நிறுவனங்கள் பங்கேற்கும் விதமாக நவீன விவசாய முறைகளைத் திணித்து விவசாயம் சார்ந்த துறைகளையும் தனியார்மயமாக்குவது இச்சட்டத்தின் 'சிறப்புக் கொள்கை.'

'தமிழ்நாட்டில் விவசாய ஏற்றுமதி வாய்ப்புகள்' குறித்து சென்னையில் செப்டம்பர் 23 அன்று தமிழக வேளாண் பல்கலைக்கழகமும், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கம் இதை உறுதிபடுத்தியது. அக்கருத்தரங்கில், "வெங்காயத்துக்கு பெங்களுரிலும், மாம்பழத்துக்கு கிருஷ்ணகிரியிலும், தக்காளிக்கு ஒசூரிலும், திராட்சைக்கு தேனி மாவட்டத்திலும் குளிர்பதன கிடங்குடன் கூடிய வணிக வளாகங்களை, ஓவ்வொன்றுக்கும் 2 கோடி செலவில் அமைக்க தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும்" என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிய பேச்சும், "கெர்க்கின் என்ற சீமை வெள்ளரிக்கு நிறைய ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இதைப் பயிரிட்டால், ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதைப் பதப்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, இரசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஏற்றுமதி நோக்குடன் செயல்படுபவர்களுக்கு எங்கள் வங்கி கடனுதவி வழங்கிவருகிறது" என்று பாரத ஸ்டேட் வங்கியின் அலுவலர் அருணாச்சலம் பேசிய பேச்சும், "உங்களின் ஏற்றுமதிக் கனவை நனவாக்குவதுதான் எங்கள் வங்கியின் முக்கிய குறிக்கோள்" என்று இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொது மேலாளர் பிரகலாதன் பேசிய பேச்சும், தமிழக விவசாயத்தைத் தனியார் மயமாக்கி, ஏற்றுமதிக்கான விவசாயமாக மாற்றத்துடிக்கும் தமிழக அரசின் கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் கொள்கையின் பலன் என்னவென்று பார்த்தால், ஏற்கனவே நவீன விதை, ஏற்றுமதிப் பயிர் எனத் தமிழக விவசாயிகளைச் சீரழித்த இந்த கனவான்கள் தற்போது மரபணு பசுமைப் புரட்சி என்ற பெயரில் வல்லாதிக்க சுரண்டல் வலைக்குள் தமிழக விவசாயிகளைச் சிக்க வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் மாண்சான்டோ நிறுவனம் தயாரிக்கின்ற, ஈனும் திறனற்ற, பி.டி. விதைகளை அமோக விளைச்சலைத் தரும் நவீன விதைகள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி அறிமுகப்படுத்தினர். இந்த விவசாய முறையில் விளைச்சலும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் உணவுக்கான சேமிப்புமில்லாமல் கடன்பட்டாவது விளைச்சலைக் காணவேண்டும் எனத் துடிக்கும் விவசாயிகளுக்குக் கடன் சுமைகளே அதிகரித்தன.

புதிதாக முளைத்த சில விவசாயக் கம்பெனிகள் சக்கரை சோளத்தையும், காட்டாமணக்கையும் பயிர் செய்தால் கடனையெல்லாம் அடைத்து விடலாம் என்று விவசாயிகளுக்கு ஆசை காட்டின. ஆனால், விளைந்த சர்க்கரை சோளத்தையும், காட்டாமணக்கையும் விற்க முடியாமல் விவசாயிகள் ஏமாந்து நின்றனர்.

இன்னும் உயிரோடு இருந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் விளை நிலங்களோ, நகர விரிவாக்கத்திற்காகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்காகவும், உடைமை வர்க்கத்தின் உல்லாச மாளிகைகளுக்காகவும், இராயல் எஸ்டேட்டுகளுக்காகவும் பறிக்கப்படுவதும் அரசின் கொள்கைகளுள் ஒன்று.

விவசாய விளைப் பொருள்கள் மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டதால், பற்றாக்குறையை ஈடுகட்டுவது என்ற உணவு தானியங்களும், பணப்பயிர்களும், ஒட்டு விதைகளும், இரசாயன உரங்களும், இயந்திரங்களும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், அன்னிய விளைப் பொருள்களின் தரத்தோடும், விலையோடும் போட்டி போட இயலாத நிலை ஏற்பட்டு, உள்நாட்டுப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட சரிவாலும் மின்சாரம், டீசல், விதை, உரம் போன்றவற்றின் விலையேற்றத்தாலும் நட்டமடைந்த விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், மாண்சான்ட்டோ கார்கில், நெஸ்லே, கோத்ரெஜ், டாடா, ரிலையன்ஸ் போன்ற வல்லாதிக்க - வல்லாதிக்கத்திற்குத் துணை நிற்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இலாபமிட்டி தருகின்றன.

கரும்புக்குக் கட்டுப்படியான விலை கொடுக்க அரசு மறுப்பதாலும், உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதாலும் விவசாயிகளில் பலர் கரும்பு விவசாயத்தையே மறந்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தில், 2006 - 07இல் 3.91 லட்சம் எக்டேராக இருந்த கரும்புச் சாகுபடி பரப்பு 2008 - 09இல் 3.23லட்சம் எக்டேராகக் குறைந்தன இன்று 2.50 எக்டேராக இருந்து வருகின்றன. ஆலைகளுக்குப் போதுமான கரும்பு கிடைக்காததில், சர்க்கரை உற்பத்தி குறைந்து சர்க்கரை விலை விரைவாக உயர்ந்து வருகிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட கரும்புக்குக் கட்டுப்படியான விலை கொடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்குச் சர்க்ரையை இறக்குமதி செய்ய உலகமயமாக்கல் கொள்கையில் நின்று தீர்மானிக்கிறது.

மேலும், எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் விவசாயத்தை அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் நிலப்பரப்பும் குறைந்துகொண்டே போயின. இதனால் ஏற்பட்ட சமையல் எண்ணெய் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மீண்டும் இறக்குமதியை, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைபடுத்தியது. கார்கில், மாண்சான்ட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதில் பெருத்த ஆதாயமடைந்தன.

தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், ஒப்பந்த விவசாயம் போன்ற திட்டங்களின் அடிப்படையில், அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை அப்படியே புகுத்துவதற்கேற்றவாறு நிலக்குவிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது, அவர்களின் உற்பத்திப் பொருள்களை நல்ல விலையில் விற்றுக் கொடுப்பது என்ற பெயரில், ஐ.டி.சி போன்ற வல்லாதிக்க - வல்லாதிக்கத்திற்கு துணைநிற்கும் உள்நாட்டு நிறுவனங்கள் சிறு - நடுத்தர விவசாயிகளைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர முயற்சிக்கினறன. அதற்கு அரசின் கொள்கை துணை நிற்கின்றது.

இப்படி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக விவசாயத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற இச் சீர்திருத்தங்கள் அனைத்தும் சிறு - நடுத்தர விவசாயிகளின் நலனுக்கு எதிரானவைகளாக இருப்பதோடு விவசாயத் துறையை பெரும் நெருக்கடிக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.

அரசின் இத்தகைய பொருளாதாரக் கொள்கையால் சிறு - நடுத்தர, கூலி விவசாயிகளை வேளாண் துறையிலிருந்து அன்னியப்படுத்தி, உணவு விளைச்சலுக்கான நடவடிக்கையை முற்றாக நிறுத்தி விடுவதன் மூலம், உணவுத் தேவைக்காக அன்னிய வல்லாதிக்க நாடுகளிடம் கையேந்தி நிற்கவைக்கும் நிலைக்கு நம்மை தள்ளிக் கொண்டிருக்கின்றன. எப்படியெனில், சோமாலியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளைப் போன்று அதாவது, உணவுப் பயிர்களுக்கான மானியங்களை நிறுத்தி, ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிட வைப்பதன் மூலமும், உணவு தானியக் கொள்முதல், பதப்படுத்தல் ஆகியவற்றால் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதன் மூலமும், நீராதார அமைப்புகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டதோடு, நீர்நிலைகள் மீது விவசாயிகளுக்கு இருந்து வந்த உரிமைகளையும் பறித்துக் கொண்டதன் மூலம் புதிய அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

2. தொழில் கொள்கை

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத் தொழில் இருந்து வந்தது. தமிழகம் நெசவுத் தொழில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது. இன்று அரசின் தவறான கொள்கையின் விளைவாக அதாவது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்யப்படுகின்றது, மலிவு விலை பஞ்சால் உள்ளுர் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் போனது. அதோடு இறக்குமதி செய்யப்பட்ட மலிவான பஞ்சோடு போட்டி போட இயலாததாலும் பருத்தி விவசாயிகள் விவசாயத்தை விட்டனர்.

இதன் விளைவாக விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் அவற்றில் வேலை பார்த்தவர்களெல்லாம் கோவைக்கும், திருப்பூருக்கும் வேலைத் தேடி புலம் பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர். கோவை மாநகரத்திலுள்ள நூற்பாலைகளும் மூடப்பட்டு வருகின்றன என்பது கொடுமை.

பருத்தி சாகுபடியால் ஏற்பட்ட வீழ்ச்சியில், உள்நாட்டுத் தொழில்களுக்குத் தேவையான பருத்தி கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலும், இங்கே விளையும் தரமான பருத்தியை எவ்விதத் தடையுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொள்கையைக் கடைபிடித்து வருவதால், நெசவுத் தொழில் நசிவடைகின்றது.2007இல் ரூ.11.000 கோடிகளாய் இருந்த, தமிழ் நாட்டின் துணி ஏற்றுமதி 2008இல் 10,000 கோடிகளாகச் சரிந்துள்ளது. இப்படியாக கடந்த இரண்டு ஆண்டில் ஏறக்குறைய 2,000 கோடி சரிந்துள்ளன. நெசவுத் தொழில் நிறைந்த திருப்பூர் பகுதியில் சுமார் 1.5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 2.5 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்றுமதித் துறையில் 16,000 தொழிலாளர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் 6.59 சதவீதமாகச் சரிந்துள்ளன.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கும் 2 இலட்சம் விசைத் தறிகளிலும், இத் துறையோடு இணைக்கப்பட்டுள்ள பருத்தி அரவை ஆலைகளிலும், நூற்பாலைகளிலும், சாயப்பட்டறைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், சுமை தூக்குவோர் என பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகக் கொடுமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன. கூலி குறைப்பு, வேலை இழப்பு, கந்துவட்டிக்குக் கடன் என தொழிலாளர்களின் வாழ்க்கைத் துயரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும், எஃகு துறையில் 30,000 சிறிய, பெரிய வணிக நிறுவனங்கள் (40 - 50 சதவீதம்) வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால், 7 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். எரிசக்தி துறையில் சிறந்து விளங்கும் ' பெல்' நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், சென்னை, திருச்சி, இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் இயங்கி வரும் அந்நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஆள்குறைப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலாலும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பீடி சுருட்டுதல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பட்டாசு போன்ற பிறவற்றை தயாரிக்கும் உள்நாட்டுத் தொழில்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கப்படுகின்றன. மெழுகுவர்த்தி தயாரிப்பிலும், விற்பனையிலும் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. "சிட்கோ" நிறுவனத்தின் மூலம் மெழுகுவர்த்தி தயாரிப்புக்குப் பயன்படும் பாரஃபின் மெழுகை " கோட்டா" முறையில் வழங்கிவந்த தமிழக அரசாங்கம், அக்கோட்டா முறையை நிறுத்திவிட்டதால், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் என்ற நிறுவனமே அதனை வெளிச் சந்தையில் விற்று வருகிறது. இத் தாராளமயமாக்கல் கொள்கையால், பாரஃபின் விற்பனையில் பதுக்கலும், கள்ளச் சந்தையும் வளர்ந்து பாரஃபின் மெழுகின் விலை உயர்ந்து கொண்டே போவதால் இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்காக கடமையுணர்வுடன் சேவை செய்யும் திமுக அரசு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பட்டாசு, சோப்பு, கற்பூரம் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு - நடுத்தர உள்நாட்டுத் தொழிலில் ஏற்பட்டுள்ள மூலப் பொருள்களுக்கான நெருக்கடியைத் தீர்க்க மறுக்கின்றது. மின்வெட்டின் பாதிப்பு சிறிதுமில்லாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கத் தடையின்றி தாராளமாக மின்சாரம் வழங்குகிறது. அதுவும் ஒரு யூனிட்டை 1.60 காசுக்கு வழங்குகிறது. ஆனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு தொடர் மின் வெட்டை ஏற்படுத்துவதோடு, அவற்றிடம் யூனிட் ஒன்றுக்கு 5.50 பைசாவை மின்கட்டணமாக வசூலிக்கிறது.

எனவே கருணாநிதி அரசின் கொள்கை என்பது உள்நாட்டுத் தொழிலை நசுக்கி, அன்னிய வல்லாதிக்க நிறுவனங்களை ஊட்டி வளர்க்கும் கொள்கையே. அது வேலை வாய்ப்பற்ற தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் கொள்கையே.

அரசின் இத்தகைய தவறான கொள்கையினால் ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்கிற கோட்பாட்டின்படி இன்று ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே வியப்புக்குரிய வகையில் அதிகரித்துள்ள ஏற்றத் தாழ்வுகள் பெருமளவிலான எழுச்சிக்கு இட்டுச் செல்கி்னறன. விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலிப் பணத்தைச் சுருட்டியவர்களுக்கெதிராக நடந்த கூலி விவசாயிகளின் போராட்டங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிரான தருமபுரி, பெருந்துறை, வலையாபட்டி, புதுக்கோட்டை கும்மிடிபூண்டி சிப்காட் போன்ற பிற இடங்களில் நடைபெற்ற போராட்டங்களும், கோவையில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களும், ஆம்பூரில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும், நெய்வேலியில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும் நாளை நடைபெறவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுகின்றன.

பொதுவாக ஒவ்வொரு கட்சிகளுக்கும் வெவ்வேறான கொள்கையிருப்பதாய் சொன்னாலும், 'வோட்டுக் கட்சிகள்' அதன் இலக்கை அடைந்ததும் பொதுவான கொள்கையாக மேற்கூறிய கொள்கை மட்டும் கடைபிடிக்கின்றன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் காலங்களில் அத்தகைய கட்சிகள் கவர்ச்சியான சலுகைகளை, இலவசங்களை அறிவித்து பொருளாதார நெருக்கடிகளையும், வாழ்வாதார போராட்டங்களையும் மறக்க, மறைக்கச் செய்கின்றன.

எனவே வோட்டுக் கட்சிகளின் மக்களுக்கெதிரான, தவறான கொள்கைகளுக்கெதிராக தமிழக உழைக்கும் மக்களாகிய நாம் நம் நாட்டை வல்லாதிக்கத்தின் பிடியிலிருந்தும், அதற்குத் துணை நிற்கும் இந்திய - தமிழக ஆளும் வர்க்கங்களின் பிடியிலிருந்தும் எதிர்த்துப் போராடி மீட்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய இலக்கு பணப் பேய்களை எதிர்த்து போராடி வெற்றி பெற கட்டாயப்படுத்தபட்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவாதவரை இத்தகைய 'கொள்கை'யாளர்களின் ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

- இரா.பாலன்

Thanks: ra.balan & www.keetru.com

Monday, April 25, 2011

ரா ராடியா: டெல்லி அதிகார அரசியலின் தொடர்ச்சி


இப்போது எல்லா ஊடகங்களிலும் அடிபடும் நீரா ராடியா டேப்களைக் கேட்கும்போதும், அவைகளைப்பற்றிய சர்ச்சைகளைப் படிக்கும்போதும், இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையாருக்கு அடுத்தபடியாக பாரதப் பிரதமரை மிரட்டி, யார் யாரை மந்திரிசபையில் சேர்ப்பது, அவர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் ஒதுக்குவது போன்ற ‘சிறிய’ விஷயங்களில் முடிவு எடுப்பது நீரா ராடியா அம்மையார்தான் என்ற எண்ணம் நமக்கு மட்டுமல்ல... மந்திரிப் பதவி வேட்பாளர்களுக்கும், மூத்த பத்திரிகையாசிரியர்களுக்கும் கூட இருந்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சம்! எல்லோருமே அதிகாலையில் ராடியாஜியின் தூக்கத்தைக் கெடுத்து, அதற்காக ‘ஸாரி’ சொன்னவாறே அன்றையதினம் யார் யார் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விருப்பமாக இருந்திருக்கிறார்கள். அவரும் ஒரு ‘குறிப்பிட்ட நபர்’ அந்த லிஸ்ட்டில் இருப்பதற்கான / இல்லாமல் போனதற்கான காரணங்களைத் தன் நுனிநாக்கு ஆங்கிலத்தில்/ஹிந்தியில் அடுக்குகிறார். அவர்களும் அவற்றைப் பிரதமர் வாயிலிருந்து வரும் கூற்றாக நினைத்து அடுத்தநாளும் அவர் தூக்கத்தைக் கெடுக்க முடிவு செய்கிறார்கள்! என்னய்யா நடக்கிறது நம் நாட்டில்? Has our great country become a ‘Banana Republic’? இந்த ‘இரண்டரை அணா’ நீராராடியா யார்? இவரைப்போல Names dropping Power Brokers/Lobbyists தில்லியில் முன்பும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; எப்போதும் இருப்பார்கள்! எந்த தொழிலதிபருக்கும் அந்தக் காலத்து, லைஸன்ஸ், பெர்மிட் கோட்டா ராஜ்யத்தில், தில்லியில் சரியான காய்களை நகர்த்தி, காரியங்களைச் சாதித்துக்கொள்ள இம்மாதிரி ஓர் ஆள் அவசியம் தேவை. ஒரு தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர் தீர்மானிக்கும்போதே, தில்லியில் உத்யோக் பவன் ஏறி இறங்க திறமையானவரைத் தேட ஆரம்பித்து விடுவார். ஆதௌ கீர்த்தனாரம்ப காலத்தில், தெருவுக்கு ஒரு பெட்டிக் கடை என்கிற சின்ன ரேஞ்சில் ஆரம்பித்து, இப்போது கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப ‘பல்மாடி அங்காடி’களாக பரிணமித்திருக்கிறது. தொழில் துறையில் அரசு குறுக்கீடுகள் இருக்கும்வரை, மனிதனுக்குப் பணத்தின் மேல் ஆசை இருக்கும்வரை, இவர்களெல்லாம் அவசியத் தேவைகள். இந்த வர்க்கத்துக்கு Liaison Officers என்பது பெயர். அந்தப் பெயரை யாரும் விரும்புவதில்லை. காரணம் Oxford Dictionary-யில் அந்த வார்த்தைக்கு ‘Anillicit sexual relationship’ - ‘தகாத உடல் உறவு’ என்றும் பொருள் சொல்லியிருப்பார்கள்! அதனால் எங்கள் விஸிட்டிங் கார்டில் எங்கள் பதவி Chief Executive என்றே இருக்கும்! சிலர் Public Relations Officers என்று அறியப்படுவார்கள். இதில் Public என்பதில் L எழுத்தை எடுத்து விட்டு, அவர்களை Pubic Relations Officer என்று கேலி செய்வோம்!



தினமும் அரைமணி நேரம் செல் போனில் பேசும் என் மகள் அனுஷா, சில மாதங்களுக்கு முன், ‘அப்பா! இன்று நானும் ரிதேஷும் தியேட்டரில் ‘Badmaash Company’ ஹிந்திப் படம் பார்த்தோம். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அந்தக் காலத்திலே செய்த சட்டத்தை மீறாத திருட்டுத்தனங்கள்..அந்த Mutton Tallow Import.. அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. டைரக்டர் சோப்ரா உங்ககிட்டே கேட்டிருந்தா, நீங்க நிறைய உருப்படியான ஐடியா கொடுத்திருக்கலாம். நீங்க செய்யாத திருகுதாளங்களா?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். ‘ஏய்! உங்கப்பன் இன்னி வரை, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் கைகட்டி நின்னதில்லே. எனக்கு வேறே அனுகூல சத்ருக்களே தேவையில்லே. நீ ஒருத்தியே போதும்’ என்று கோபத்துடன் பதிலளித்தேன்.

என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார். என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார். அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!

1991-ல் நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளாதாரத்தின் கதவுகளைத் திறந்துவிடும் முன்வரை, நாம் லைஸன்ஸ் பெர்மிட் கோட்டா ராஜ்யத்தில்தான் இருந்தோம். எதற்கெடுத்தாலும் அரசின் அனுமதி தேவை. தொழில்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் Chief Controller of Imports and Exports (CCI&E) அலுவலகமும் Directorate General of Technical Development (DGTD) காரியாலயமும் இருந்த ‘உத்யோக் பவன்’ தான் எங்களைப் போன்றவர்களுக்குக் கோவில். வருடத்தில் ஓரிரு முறையே தில்லி உத்தர சுவாமி மலைக் கோவிலுக்குப் போவேன். ஆனால் இந்த ‘கோவிலுக்கு’ தினசரி நாலைந்து தடவையாவது ‘க்ஷேத்ராடனம்’ நடக்கும். அதில் நம்மால் ‘கவனிக்க’ப்படவேண்டிய ‘பூசாரிகள்’ நிறைய இருந்தார்கள்! முதல் பூசாரி உத்யோக் பவன்/நார்த் பிளாக், சௌத் பிளாக் போன்ற அரசாங்க அலுவலகங்களில் காவல் தெய்வங்களாக உட்கார்ந்திருக்கும் Reception Officers. என் முதலாளி பி.எம். பிர்லா மதியம் மூன்று மணிக்கு வர்த்தகத்துறை அமைச்சரை சந்திக்கிறார் என்றால் 2.30-க்கே அவர் பெயரில் Gate Pass தயாராக இருக்கவேண்டும். அவர் வந்தபிறகு அவரை நிறுத்திவைத்து ரெஜிஸ்டரில் பெயர், விலாசம், பார்க்கவேண்டிய மந்திரியின் பெயர், அப்பாயிண்ட்மெண்ட் உண்டா/இல்லையா, கூடவரும் நபர்கள் பெயர் எல்லாம் அவரை எழுதவைத்து, கையெழுத்துப் போடச்சொல்வது பிர்லாவுக்கு அவமானமில்லை. அவரைக் கூட்டிப் போகும் என் போன்றவர்களுக்குத் தான் தலைக்குனிவு. அதைத் தவிர்க்க, அந்த ‘காவல் தெய்வங்களை’ வருடம் பூராவும் “கவனிக்க”வேண்டும். பிர்லா தன் காரிலிருந்து காரியாலயப் படிகள் ஏறும்போதே இந்தக் காவல் தெய்வங்கள் எழுந்து நின்று, அவருக்குப் புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லி, தயாராக வைத்திருக்கும் கேட் பாஸ்களை முறுவல் மாறாமல், என் கையில் கொடுப்பதுதான் அவர்களுக்கும் அழகு.....எனக்கும் அழகு!

இப்போது நீரா ராடியா காலத்தில் TRAI அமைப்பின் தலைவர் திரு. பிரதீப் பெய்ஜால் ரிட்டயரான பிறகு ராடியாவிடமே வேலைக்குச் சேர்கிறார். எங்கள் காலத்தில், நாங்கள் தினமும் உத்யோக் பவன் போய்சலாம் போட்டு பேட்டிக்குக் காக்கவைக்கும், எங்களை ஆட்டிப் படைத்து அலைக்கழிக்கும் ஒரு D.G.T.D. அண்டர் செக்ரட்டரி, ரிட்டயரான ஆறு மாதத்தில் எங்கள் கம்பெனியில் எங்களை ‘குட் மார்னிங் சார்’ என்று காலையில் கும்பிட்டு வரவேற்கும் ஊழியராக வேலைக்குச் சேர்வார். நீரா ராடியா ‘இரண்டரையணா’...நாங்களெல்லாம் ‘ஓட்டைக்காலணா..... அரையணா’ பேர்வழிகள்! ராடியாவுக்கு Sky is the limit! என்னைப்போன்ற ‘எள்ளுருண்டைகள்’ நாங்களாகவே ஒரு லட்சுமண ரேகை போட்டுக் கொண்டு, ‘This far and no further!’ என்று Delhi Development Authority-யின் அடுக்குமாடிக் குடியிருப்பிலும், மாருதி-800 காரிலும் சந்தோஷமடைந்தவர்கள்! அந்த ரேகை இல்லாதவர்களுக்கு சத்தர்பூரில் பார்ம் ஹௌஸ்... BMW கார்! வானமே எல்லை!!

இதற்கு ஒரு சின்ன உதாரணம்: தொழில்துறை அமைச்சரவையில் ஒரு IAS அதிகாரி ஜாயின்ட் செக்ரட்டரியாக இருந்தார். ஒரு புதிய தொழிற்சாலை தொடங்குவதற்கான எல்லா காகித வேலைகளும் முடிந்து, அடுத்த நாள் அவரிடமிருந்து கடைசி அனுமதிப் பத்திரம் பெறவேண்டும். முந்தையதினம் அவரைக் ‘குளிப்பாட்ட’ ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றேன். முதலில் ‘சோமபானம்’.... பிறகு அங்கேயே பெரிய விருந்து. முடிந்ததும், ‘சரி, நாளைக் காலையில் சந்திப்போம்’ என்று சொல்லி விடைகேட்டேன். அவர் தன் பஞ்சாபி கலந்த ஹிந்தியில், ‘எங்கே கண்ணா இவ்வளவு சீக்கிரம் ஓடுகிறாய்? முதலில் மனதுக்குப் பிடித்தமான ட்ரிங்க்ஸ்... பிறகு நிறைவான சாப்பாடு... அடுத்தது என்ன?... உனக்குத் தெரியாததா?’ இழுத்தார். என்ன கேட்கிறார் என்பது தெரிந்தும், ‘தெரியவில்லை’ என்றேன். சுத்த பஞ்சாபியில், இதற்கப்புறம் ‘மனதைக் குளிர வைக்க’ - அவர் சொன்ன வார்த்தை Dilbehlaanekeliye- எங்கே போக வேண்டுமோ.... அங்கே போவோம். ‘Evening is still young!’ என்றவரை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தேன். ‘மிஸ்டர் சோப்டா! நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அதற்கு என்னைத் துணை சேர்க்காதீர்கள். நாளைக் காலை உங்களிடமிருந்து அனுமதிப் பத்திரம் வாங்கவேண்டுமென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதை நீங்கள் தந்தாலும் தரா விட்டாலும் எனக்குக் கவலையில்லை. பணம்தான் உங்கள் பிரச்சினையென்றால் இதோ....’ என்று சொல்லி பத்து நூறு ரூபாய் நோட்டுகளை - அறுபதுகளில் அதன் மதிப்பு மிக அதிகம்-அவர் பையில் திணித்து விட்டு அவரைத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டேன். இரவு தூக்கம் வரவில்லை. ‘என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே!’ என்று அடுத்த நாள் காலை சரியாகப் பத்துமணிக்கு அவர் அலுவலகம் போனேன். சுத்தமாக எனக்கு நம்பிக்கையில்லை. நேராக உள்ளே போனால் என்னைப் பார்க்கவும் அவர் மறுத்துவிடுவாரென்று நினைத்து, அவரது பியூனிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘ஸாப்கோ தே தோ!’ என்றேன். அவர், ‘என்ன ஸாப் இது புதுப் பழக்கம்?.... உள்ளே அவருடன் பீ.ஏ. மட்டும்தான் இருக்கிறார். நீங்கள் தாராளமாகப் போகலாம்!’ என்றார். ‘இல்லை... இதை அவரிடம் கொடுத்துவிட்டு வா. நான் காத்திருக்கிறேன்’ என்று அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். பியூன் உள்ளே சென்ற மறுநிமிடம் சோப்டாவே கையில் என் கார்டுடன் வெளியே வந்தார். ‘என்ன மணி! இன்னிக்குப் புது பழக்கம்? உள்ளே வாங்க’ என்று என் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார். அங்கேயிருந்த பீ.ஏ.விடம் அப்புறம் பார்க்கலாம் என்று வெளியே அனுப்பி வைத்தார். ஸிட் டௌன் என்றதும் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல், தயங்கி நாற்காலியில் உட்கார்ந்தேன்... இரு நிமிட மௌனம்... அதைக் கலைத்தார் அவர். ‘மிஸ்டர் மணி! நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும். மற்றவர்களைப் போல் உங்களையும் நினைத்துவிட்டேன். நீங்கள் வித்தியாசமானவர்..... நேற்று நடந்ததற்கு நான் நாணித் தலைகுனிகிறேன். நேற்று ஒன்றுமே நடக்கவில்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம்!’ என்று சொல்லிவிட்டு, மேசையில் கையெழுத்திட்டு தயாராக வைத்திருந்த அனுமதிப் பத்திரத்தை என் கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு எழுந்த என்னிடம் வந்து, ‘You have taught me a lesson in my life. God bless You!’ என்று சொல்லிக்கொண்டே நேற்று நான் அவர் பாக்கெட்டில் திணித்த அதே பத்து நூறு ரூபாய் நோட்டுகளை என் பாக்கெட்டில் திணித்து வாசல்வரை தோளில் கை போட்டுக் கொண்டே வந்து வழியனுப்பினார் அந்த வயதானவர். அதன்பின் அவர் ரிட்டயராகும் வரை இருவரும் இன்னும் நெருக்கமான நண்பர்களானோம். இதுதான் எனது லட்சுமண ரேகை!

இப்போதிருக்கும் உயர் அரசு அதிகாரிகள் மிகத் தெளிவாகிவிட்டார்கள். விஞ்ஞான யுகமல்லவா? அவர்களுக்கு இந்த ‘சோளப்பொரி’யெல்லாம் வேண்டாம். ‘கொடுப்பதைப் ‘பெட்டி’யாகவே கொடு. என்ன வேண்டுமென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்’ என்று சொல்லி, ரிட்டயராகுமுன் Disproportionate Income என்ற வகையில் தன் மாமனார், கொழுந்தியாள் வீடுகளிலும் இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கு ஆளாகிறார்கள். பெரிய மீன் எதுவும் சிக்குவதில்லை. ஏதோ ஒரு சிற்றூரில் கிராம அதிகாரி ஐநூறோ ஐயாயிரமோ லஞ்சம் வாங்கியதாகத் தீர்ப்பாகி தண்டிக்கப்படுகிறார்! லஞ்ச ஊழலில் பிடிபட்ட மாஜி மந்திரி சுக்ராம் தன் டைரியில் LKA - 50 L என்று எழுதி வைத்திருந்ததற்கு, தன் ‘அத்வானி’ என்ற மாடு 50 லிட்டர் பால் கறந்ததைத் தான் டைரியில் எழுதி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கிறார். C.B.I.யும் ஏற்றுக்கொள்கிறது. வாழ்க ஜனநாயகம்!

அப்போதெல்லாம் நமக்கு வேலை ஆகவேண்டியவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஆராயவேண்டும். நிதித்துறையிலிருந்த ஒரு அதிகாரி ‘ஜெயகாந்தன் பிரியர்.’ அவருக்காக மதுரை மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்து ஜெயகாந்தன் அதுவரை எழுதிய புத்தகங்களின் கட்டு வரவழைத்து அவர் வீட்டுக்கு அனுப்புவேன். இன்னொரு அதிகாரிக்காக பிராங்க்பர்ட்டிலிருந்து விலையுயர்ந்த டென்னிஸ் ராக்கெட்டில் ஒரு செட் அனுப்பப்படும். மற்றொரு பக்திமானுக்கு மாதம் ஒருமுறை ஹரித்வார் போய்வர கார் அனுப்பவேண்டும். நாலாமவர் கல்கத்தா ரஸகுல்லாவுக்கு அடிமை! இன்னொருவருக்கு மாதத்தில் ஒருமுறை திருப்பதி பிரசாதம்! ஓர் ஆங்கில இலக்கியப் பிரியருக்கு, லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்தில், இந்தியாவில் கிடைக்காத Mario Puzo எழுதிய ‘Godfather’ நாவலை சுடச்சுட வாங்கிவந்து கொடுத்தேன்! (க.நா.சு.வுக்கும் இன்னொரு பிரதி வாங்கிவந்தேன்.) எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. அதைக் கண்டு பிடிப்பதுதான் எங்கள் வேலை! நான் பிர்லாவில் இருந்த பத்தாண்டு காலத்தில், எல்லா மாதமும் முதல் வாரத்தில் ஐந்து மத்திய மந்திரிகளுக்கு தலா ரூ.5,000 வீட்டில் கொண்டுபோய் பட்டுவாடா செய்ய வேண்டும். அப்போது ரூ. 5,000 மந்திரிகளின் இருமாதச் சம்பளம்! அதில் அப்போதிருந்த தகவல் ஒலிபரப்பு மந்திரி திரு. சத்ய நாராயண் சின்ஹாவும் அடக்கம்! அறுபதுகளின் இறுதியில் இந்திரா காந்தி பிரதமராக அறிவிக்கப்பட்டபோது, தன் மந்திரிசபையில் இவரைத் தவிர்த்துவிட்டு, 50 மந்திரிகளின் பட்டியலைத் தயார் செய்து, ராஷ்டிரபதி பவன் எடுத்துச்சென்றார். ஆனால் அன்று அதிகாலை வெளியிடப்பட்ட ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் 51-வது பெயராக Shri Satya Narain Sinha - Union Minister Without Portfolio என்று இவர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது! இந்த மாற்றம் எப்படி நடந்ததென்பது எனக்கும், எனது ‘பாஸ்’ மறைந்த திரு. பி.எம். பிர்லாவுக்கும் மட்டுமே தெரியும். என் வாழ்வில் நான் செய்த திருகுதாளங்களில் இதுவும் முக்கியமானது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததென்றாலும், அந்த ரகசியத்தை உங்களுக்கு சத்தியமாகச் சொல்லமாட்டேன்! காரணம், எனது ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தில் ‘காந்திபாய் தேசாய் - தலைவர்களும் தனயர்களும்’ கட்டுரையின் கடைசிப் பாராவில் சொல்லியிருக்கிறேன்! ‘இதைப் போன்ற, இதைவிடக் ‘கனமான’ சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வந்தாலும், அவைகளையெல்லாம் நான் எழுத ஆரம்பித்தால், எனக்குப் பிடித்த தில்லியில், எனக்குப் பிடிக்காத திஹார் ஜெயிலில், நிரந்தரமாக எனக்கு ஓர் இடம் நிச்சயம்! ‘அங்கே... ஏ....ஏ.... எனக்கோர் இடம் வேண்டும்!’ என்று இந்த வயதில் நான் பாடத் தயாரில்லை!’

அந்தக் காலத்து மூத்த அதிகாரிகளிடம் மந்திரிகளுக்கு வளையாத முதுகெலும்பும், தேவைக்கு அதிகமான நேர்மையும் இருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சொந்த முயற்சியால் I.C.S. தேர்வில் முதலிடம் பெற்ற இளைஞர்களுக்கு, பணக்காரக் குடும்பங்களிலிருந்து பெண் கொடுக்க முன்வந்தார்கள். உதாரணத்துக்கு எஸ். பூதலிங்கம், I.C.S. (மனைவி எழுத்தாளரான மதுரம் எனும் ‘கிருத்திகா’), டி.எஸ். ஸ்வாமிநாதன், I.C.S. (சுந்தரி ஸ்வாமிநாதன்), சி.எஸ்.ராமச்சந்திரன், I.C.S. (மனைவி ஜானகி ராமச்சந்திரன். இவர் சென்னையில் பிரபலமான டாக்டர் திருமூர்த்தியின் மகள். டாக்டர் திருமூர்த்தியின் பெயரில் நுங்கம்பாக்கத்தில் ஒரு நகரே இருக்கிறதாம்!) போன்றவர்கள். எனக்கு ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்புண்டு. இவர் வாரிசுகளில் ஒரு மகள் உட்பட நான்கு I.A.S. அதிகாரிகள். மற்றொரு மகன் I.A.&.A.S. திரு. ராமச்சந்திரன் சிறந்த பக்திமான். அதிர்ந்து பேசாதவர். தினமும் அதிகாலை பூஜை முடித்து, நெற்றி நிறைய விபூதி குங்குமமில்லாமல் வெளியே இறங்க மாட்டார் (தில்லியில் பஜனை சமாஜ், சௌத் இந்தியன் சமாஜ் போன்ற அமைப்புகளின் தலைவர்). அறுபதுகளில் இவர் பாதுகாப்புத்துறை செயலராக இருந்தபோது, நேரு தன் காபினெட்டில் லண்டனில் ஹை கமிஷனராக இருந்த கிருஷ்ண மேனனைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கிறார். பதவியேற்றபிறகு, மரியாதை நிமித்தம் தன்னை முதன் முதல் பார்க்க வந்த செயலரிடம் கிருஷ்ணமேனன் கையைக் காட்டி, ‘ராமச்சந்திரன், இதென்ன பட்டை பட்டையாக நெற்றியில்? நாளையிலிருந்து நான் இதைப் பார்க்க விரும்பவில்லை!’யென்றதும், ராமச்சந்திரன் பணிவாக, ‘No Sir, You will not see this tomorrow! I promise you!’ என்று பதிலளித்துவிட்டு வெளியேறினார். உடனே அப்போது காபினெட் செக்ரட்டரியாக இருந்த திரு. கே.பி. லால், I.C.S. அலுவலகத்துக்குச் சென்று, அன்று மதியமே பாதுகாப்புத் துறையிலிருந்து விடுபட்டு, வர்த்தக-தொழிற்துறை செயலராக உத்யோக் பவனில் பொறுப்பேற்றார். கிருஷ்ணமேனன் இறக்கும்வரை அவரைச் சந்திக்கவேயில்லை! இப்படிப்பட்ட செயலர்களிடம் எந்த அரசியல்வாதிக்கு ஊழல் குறித்தோ, லஞ்சம் குறித்தோ பேச தைரியமிருக்கும்?

பல்லாயிரம் கோடி நிறுவனமான ஏர்டெல் (Airtel) அதிபர் சுனில் மித்தலின் தந்தை சத்ய பால்மித்தல் (மிட்டல் அல்ல) காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் பொருளாளராகவும் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் பெயரில் அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக ஒரு வழக்குப் பதிவானது. அந்த மகானுபாவரும் வழக்குத் தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். அவர் மீதிருந்த வழக்கும் வாபஸானது. அந்தப் பணம்தான் சுனில் மித்தலின் ஏர் டெல்லுக்கு ஆரம்ப மூலதனம் என்று என் டெல்லி நண்பன் அடித்துச் சொல்லுவான்!

தில்லியில் எங்கள் ‘வியாபகம்’ தொழிற்துறை/நிதித்துறைகளைக் கடந்தும் இருக்கும்/இருக்கவேண்டும். சங்கீத நாடக அகாதெமி, சாகித்ய அகாதெமி, Directorate of Film Festivals, Department of Culture, கலைஞர்களை வெளிநாட்டுக்கனுப்பும் Indian Council of Cultural Relations போன்ற அமைப்புகளிலும் ‘நம் ஆட்கள்’ இருக்கவேண்டும். சாகித்ய அகாதெமியில் செயலராக இருந்த பிரபாகர் மாச்வே, இந்திரநாத் சௌத்திரி போன்றவர்களும் எனக்கு நண்பர்கள். அந்த வருடம் யாருக்கு விருது என்பது நான்கு நாட்களுக்கு முன்பாகவே தகவல் வந்துவிடும். தமிழ்நாட்டில் அவர்கள் Land Line-ஐத் தேடிக் கண்டுபிடித்து, எல்லோருக்கும் முன்பாக, ‘ஸார், இந்த வருடம் ஃபைனல் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறது. Congrats!’ என்று சொன்னால், முதலில் நம்ப மறுப்பார்கள். அதிகாரபூர்வமாகத் தெரிந்தபிறகு, ‘மணி சார்! ரொம்ப நன்றி!’ என்று நாம் செய்யாத வேலைக்கு நன்றி சொல்வார்கள். 1986-ல் க.நா.சு.வுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது பற்றி எனக்கு மூன்று நாட்கள் முன்பே தெரியவந்தது. நான் சொன்னதை அவர் நம்பவில்லை. சென்னை எழுத்தாள நண்பர்களுக்கு போன் போட்டுத் தெரிந்தபிறகு தான் நம்பிக்கை வந்தது. மறைந்த வயலின் வித்தகர் குன்னக்குடி வைத்யநாதன் தனது ‘பத்மஸ்ரீ’ விருதுக்காக ஒரு பெரிய ஃபைலே தயார் செய்து எனக்கனுப்பியிருந்தார் (அதில் அவர் நெற்றியில் வழக்கமாக இருக்கும் - நாம் ஜுரத்துக்குப்போடும் பற்றைப்போல - பச்சை/கருப்பு/வெள்ளை பற்றுக்களுடன் ஒரு முழு ரூபாய் அளவில் குங்குமப்பொட்டோடு கோட் சூட்டு, டையுடன் இருந்த போட்டோவும் அடக்கம்!) இரு வருடங்கள் முனைந்து பாடுபட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. மூன்றாம் வருடம் நான் முயற்சி எடுக்கவேயில்லை. ஆனால் அந்த வருடம் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது கிடைத்தது! அது என் முயற்சியால்தான் என்று அவர் இறக்கும்வரை பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்வார்! இப்போதிருந்தால் அவரிடம் உண்மையை சொல்லியிருப்பேன்!

இப்போது மேலே என் மகள் சொன்ன ‘Mutton Tallow திருகுதாளம்’ என்ன என்பதைப் பார்ப்போம். பழையகால ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் பற்றி புத்திசாலியான உங்களுக்குப் புரியவைப்பதற்கான எழுத்துச் சாதுரியம் என்னிடம் உண்டாவென்று தெரியவில்லை. முயன்றுதான் பார்க்கிறேனே!

அப்போதெல்லாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி எங்களுக்கு மிக முக்கியமான நாள். ‘முட்டாள்கள் தினம்’ என்பதால் மட்டும் அல்ல! அன்று தான் அரசு அந்த வருடத்துக்கான ஏற்று-இறக்குமதிக்கான Export-Import Policy வெளியிடும். பட்ஜெட் தொடர் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத்தில்தான் அந்தப் புத்தகம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதுதான் எங்களுக்கு அந்த வருடத்திய திருக்குறள்-பைபிள்-கீதை எல்லாம்! அடுத்த வாரம் கனாட் பிளேஸிலிருக்கும் ஜெயின் புக் டிப் போவில் ரூ.20-க்கு வாங்கக் கிடைக்கும் அந்தப் புத்தகத்துக்கு அன்றைய பிளாக் மார்க்கெட் விலை ரூ.2,000க்கு குறையாது. முக்கால்வாசி எம்.பி.க்கள் அதை சுடச்சுட கிடைக்கும் விலைக்கு விற்றுவிடுவார்கள். இரு பகுதிகளாக வரும் அந்தப் புத்தகத்தை வேகவேகமாக, ஆழப்படித்து, புரிந்துகொண்டு பதவுரை-பொழிப் புரையோடு தேவையானவர்களுக்கு விளக்கம் அளிக்க என்னைப்போன்ற ‘பரிமேலழகர்கள்’ தில்லியில் நிறைய இருந்தார்கள்! பகல் 12 மணியிலிருந்து கல்கத்தா, ஜலந்தர், ஜெய்ப்பூர், பம்பாய், அஹமதாபாத், நவ்ஸாரி, சூரத் போன்ற இடங்களிலிருந்து தொழிலதிபர்கள்-இறக்குமதியாளர்கள் தங்கள் துறையில் இந்த வருடம் என்னென்ன மாற்றங்கள், அவை தமக்கு சாதகமா பாதகமா என்றறிய ஆவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். என் வீட்டுத் தொலைபேசிக்கு நள்ளிரவுவரை ஓய்வே கிடையாது. அவரவர்கள் ராசிக்கு (அவர்கள் செய்யும் தொழிலைப்பொறுத்து) அந்த வருடத்திய பலன்களைச் சொல்ல வேண்டும். பல நண்பர்கள் ஓசியிலேயே உபாயம் கேட்பார்கள். எல்லோருக்கும் பொறுமையாகப் பதிலளிக்கவேண்டும்.

அப்படியான ஒரு ஏப்ரல் மாத முதல்வாரத்தில், ஜெயின் எக்ஸிம் என்ற பெரிய அமைப்பை நடத்தி வந்த திரு. ஜெயினைப் பார்க்கப் போயிருந்தேன். வயதில் இளையவரானாலும், மார்வாடிகளுக்கே உரித்தான கூரிய வியாபார மூளையுடையவர். எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயங்காதவர். நாட்டில் எந்தெந்த பொருட்களுக்குத் தட்டுப்பாடிருந்ததோ, அவைகளையெல்லாம் இறக்குமதி செய்து பணம் பார்த்துக் கொண்டிருந்தவர். சிமெண்ட், நியூஸ்பிரிண்ட், சர்க்கரை போன்ற Canalised Items-ஐ STC-க்கு வெளி நாட்டிலிருந்து தருவித்துக் கொடுப்பவர். அந்த லிஸ்ட்டில் Mutton Tallow (மாமிசக்கொழுப்பு)ம் இருந்தது. அப்போது இதை விலைகுறைந்த சோப் உற்பத்திக்கு மூலப்பொருளாக உபயோகித்தார்கள் (இப்போது இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்). நாம் தினமும் பார்க்கும் தார் ரோட்டுக்கான தார் போல பெரிய பீப்பாயில் வரும். விலை ஒரு டன்னுக்கு நூறு டாலருக்குள்ளாகவே இருக்கும். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘ஜெயின் ஸாப்! பாலிஸி புத்தகத்தில் வருடாவருடம் எதையாவது கோட்டை விடுகிறார்கள். இந்த வருடம் Exim Policy-யில் மட்டன் டாலோவுக்கான கொள்கலன் பற்றிய விவரணையை மறந்துவிட்டார்கள். பீப்பாய் தகரத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, Mutton should be packed in any Metal container of 3 mm thickness and of 500 Kg. net.wt. என்று பொதுவாக விட்டுவிட்டார்கள். என்னிடம் மட்டும் இப்போது இரண்டு கோடி ரூபாய் இருந்தால், அரசாங்க விதிமுறைகளை மீறாமல், ஆறு மாதத்தில் இருநூறு கோடியாக ஆக்கிக்காட்டுவேன்!’ என்று சொன்னேன். ‘எப்படி?’யென்று ஆச்சரியத்துடன் கேட்டார். ‘Any Metal’ என்று பொதுவாகச் சொன்னால், கொள்கலன் தங்கத்திலும் ஆகலாம்... வெள்ளியிலும் ஆகலாம். தங்கம்... வெள்ளியென்றால் Contraband என்று முடக்கி விடுவார்கள். நான் என் வெளிநாட்டு சப்ளையர்களிடம் எனக்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 3 mm- 500 Kg. கொள்கலனில் Mutton Tallow அனுப்பச் சொல்வேன். இப்போது இந்தியாவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வெள்ளியை விட விலை அதிகம். அதில் வரும் மட்டன் டாலோவைக் கடலில் கொட்டிவிட்டு எனக்குக் கொள்கலன் மட்டும் போதும். நான் அரசை ஏமாற்றவில்லை. அவர்களது வழிமுறைக்கு உட்பட்டே நடக்கிறேன்! அரசாங்கம் விழித்துக் கொண்டு இதற்கு ஓர் Amendment கொண்டு வருவதற்குள் இருநூறு கோடி பார்த்துவிடுவேன்!’ என்று விளையாட்டாகச் சொல்லி, அவர் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு வீட்டுக்குப் போனேன்.

இது நடந்தது ஏப்ரல் மாதம். அந்த வருட தீபாவளிக்கு நான்கு நாள் முந்தி ஜெயின் என்னை ஆபீசுக்கு வரச்சொன்னார். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னால், மூன்று அலங்கரிக்கப்பட்ட கூடைகளை - ஒன்றில் நிறைய பழங்கள், இரண்டாவதில் உயர்ந்த இனிப்பு வகைகள், மூன்றாவதில் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், அக்ரூட் வகையறா- தவறாமல் என் வீட்டுக்கு அனுப்புவார். அதற்குத்தான் இருக்குமென்று அனுமானித்துக் கொண்டேன். போனதும் மேசையிலிருந்த என் கார் சாவியை எடுத்து தன் பியூனிடம் கொடுத்து, ‘மணி ஸாப் டிக்கியில் எல்லாவற்றையும் வைத்து விடு!’ என்று சொல்லியனுப்பினார். நான் புறப்படத் தயாரானதும், ஒரு சிறிய பெட்டியை என் பக்கம் தள்ளி, ஹிந்தியில் ‘இது உங்களுக்காக.....’ என்றார். திறந்து பார்த்தால் அதில் இரண்டு லட்சம் நோட்டாக இருந்தது. ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்றதற்கு, ‘உங்கள் குழந்தைகளுக்கு என் சார்பில் தீபாவளிக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்!’ நான் மறுக்கவில்லை.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஏதோவொரு நாள் மாலையில் என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரை நான் ஜெயின் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். கும்பகோணத்துக்காரர். உட்காரச் சொன்னேன். ‘ஸார்! இப்ப நான் ஜெயின்கிட்டே இல்லே. உங்களிடம் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு.. .அவன் கிட்டே வேலை பாத்ததுனாலே சொல்லமுடியலே... இன்னிக்குத்தான் வாய்ச்சுது. எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அப்போ நீங்க குடுத்த ஐடியா பிரகாரம் நாலு ஷிப்மெண்ட் வந்தது. அதுக்குள்ளே Container Amendment வந்துடுத்து. அஞ்சாவதிலே மாட்டிண்டான். சின்ன பெனால்டி குடுத்து க்ளியர் பண்ணினான். ஆறு மாசத்திலே பம்பாயிலே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வித்தே 250 கோடிக்கு மேலே லாபம்! உங்களுக்கு 2 லட்சம்தான் குடுத்தாங்கிறதும் தெரியும். இதை நீங்க விடப்படாது. . . அவங்கிட்டே கேக்கணும்!’

இது நடந்து நான் சென்னை திரும்பும்வரை இருபது வருடங்களுக்கும் மேலாக திரு. ஜெயினிடம் பழகி வந்தேன். மறந்தும் இதைக் குறித்து அவரிடம் கேட்டதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் போகிறபோக்கில் கொடுத்த ஒரு ஐடியாவுக்கு வரவு ரூ. 2 லட்சம்! ஒரு புது வீட்டுக்கு அச்சாரம் கொடுக்க முடிந்தது! என் வாயளவில் இருந்த ஐடியாவை, தலை நிறைய முடியிருக்கும் திரு.ஜெயின் எனும் சிங்காரி அதை அள்ளி முடிந்து கொண்டால், அதற்கு நான் எப்படிப் பொறாமைப்பட முடியும்?

இன்றைய பத்திரிகைச் செய்தியில், லண்டனில் ருடால்ஃப் எல்மர் எனும் முன்னாள் ஸ்விஸ் பாங்க் ஊழியர், 2,000-க்கும் மேற்பட்ட கருப்புப்பண முதலைகளின் பட்டியலை ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சேயிடம் கொடுத்திருக்கிறார். அந்த லிஸ்ட் வெளிவரும் போது நாம் 2-ஜி ஊழலையும், நீரா ராடியாவையும் சுத்தமாக மறந்துவிடுவோம்!

எனக்கொரு சந்தேகம்! ஒரு நீரா ராடியா எப்படி தொழில்முறை போட்டியுள்ள ரத்தன் டாடாவுக்கும், அனில் அம்பானிக்கும் ஒரே சமயத்தில் வலதுகையாக இருக்க முடியும்? சாத்தியமா? இருவரும் எப்படி ராடியாவை நம்புகிறார்கள்? தில்லியில் ஒரு ஜோக் கேட்டேன்: மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காபினெட் மீட்டிங்கை மந்திரிகள் தவிர்க்கலாம். தப்பில்லை. ஆனால் மாலை வேளை நீரா ராடியா தன் சத்தர்பூர் ஃபார்ம் ஹௌஸில் நடத்தும் பார்ட்டிகளுக்கு அவசியம் போயாக வேண்டும். எல்லாம் காலத்தின் கோலம்! தில்லியில் இதற்கு முன்பும் நீரா ராடியாக்களும், பர்க்கா தத், வீர் சங்வி, பிரபு சாவ்லாக்களும் இருந்திருக்கிறார்கள். அப்போது தில்லியிலிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் எஸ். நிஹால் சிங், ராம்நாத் கோயங்கா, பி.ஜி. வர்கீஸ், கே.எஸ். ஷெல்வங்கர், ஜிகே ரெட்டி, குல்தீப் நய்யார் போன்றவர்களுக்குத் தெரியாத அரசாங்க ரகசியங்களா பிரபு சாவ்லாக்களுக்கு தெரியப்போகிறது? ஒவ்வொரு மந்திரிசபை மாற்றத்தின் போதும், நேரு ‘ஹிந்து’ பத்திரிகையின் மூத்த தில்லி நிருபர் கே.எஸ். ஷெல்வங்கரை தீன்மூர்த்தி பவனுக்கு அழைத்து, சேர்க்கப்போகும் மந்திரிகளின் திறமை, நாணயம் பற்றி விவாதிப்பாரென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று டாக்டர் மன் மோகன் சிங், பர்க்கா தத்தை 7, ரேஸ்கோர்ஸ் ரோடுக்கு அழைப்பாரா?

அப்போது இரவு நேரங்களில், தில்லி ராய்ஸினா ரோடிலிருக்கும் தில்லி பிரஸ் க்ளப்பில் ஒரு கிளாஸ் விஸ்கியுடன் ஓரத்து மேஜையில் உட்கார்ந்திருந்தாலே பல ராடியா டேப்களைக் கேட்கும் பாக்கியம் கிட்டும்! நேரம் ஆக ஆக, உண்மையான கிசுகிசுக்கள் ‘சூடு’ பிடிக்கத் தொடங்கும்!

Thanks: Bhrathimani, http://www.uyirmmai.com

Wednesday, April 6, 2011

ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் !


இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்.

பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது. விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. உண்மையில் பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது. இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது. தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது. உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம். வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம். இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது. கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.

இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை. சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது. மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன.
ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர்.

பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம். ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வ‌தில்லை. மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே. சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).

இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது). ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும். மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல. இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது. தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).

இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்).

கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது. இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல. மாறாக, அரசின் கொள்கை முடிவு. இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட். இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை. கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

நன்றி – தி இந்து 07/03/11)
- தமிழாக்கம் : சித்ரகுப்தன்
www.vinauv.com

Wednesday, January 5, 2011

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.
‘ஜனநாயகம்’ என்ற சொல்லிலிருந்து குடிமக்களின் உரிமைகள் மென்மேலும் அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், முசோலினி வகுத்த இலக்கணத்திற்கு மிகவும் அண்மையில் இருக்கிறது இந்திய அரசு. எனினும், கார்ப்பரேட் அதிகாரம்தான் ஜனநாயகம் என்ற புதிய தாராளவாதக் கருத்து உலகெங்கும் கோலோச்சுவதாலும், ஜனநாயக அங்கியைக் கழற்றி வீசாமலேயே தமது நோக்கத்ததை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலும், இந்திய ஜனநாயக சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான, நடுநிலையான அரசு அதிகாரம் நிலவுவதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து பேணப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் கொள்ளை தொடர்பாக, அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுகின்றன. டாடா குழுமத்தின் அதிகாரத் தரகராகப் பணியாற்றி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு டாடாவுக்குத் தரகு வேலை பார்த்த நீரா ராடியா, ராசா மற்றும் அதிகாரிகளின் வீடுகளும் நிறுவனங்களும் சோதனையிடப்படுகின்றன. இவர்களையெல்லாம் சி.பி.ஐ., ‘துருவித்துருவி’ விசாரிக்கிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியவர்களும், இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுமான டாடாவோ பிற தரகு முதலாளிகளோ விசாரிக்கப்படவில்லை. அவர்களது நிறுவனங்களை சி.பி.ஐ. சோதனையிடவும் இல்லை.

எனினும், தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் வெளியிடப்பட்டுவிட்டதனால் தனது உயிர்வாழும் உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக டாடா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பாரம்பரியமிக்க இந்தியத் தொழிலதிபர்கள் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாகவும், அவர்களையெல்லாம் அரசு உடனே சமாதானப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல், தமது முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் எச்.டி.எஃப்.சி. என்ற பன்னாட்டு வங்கியின் தலைவர் தீபக் பரேக்.

பிரதமரும் பெரும் விசனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தோற்றுவித்துள்ள அச்சத்தைப் புரிந்து கொள்வதாகவும், அதனைப் போக்குவதற்கு ஆவன செய்வதாகவும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘லாபியிங் செய்வது ஜனநாயக உரிமை’ என்றும் அதனை முறைப்படுத்துவதற்கு ஆவன செய்வதாகவும் முதலாளிகளுக்கு உறுதியளித்திருக்கிறார், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். புதிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் நாயகர்களான டாடா, அனில் அம்பானி, மிட்டல் ஆகியோரை நேரில் சந்தித்து தொலைதொடர்புக் கொள்கை வகுப்பது குறித்த அவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.

இப்படி ஊழல் நதியின் ஊற்றுமூலமான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் சந்நிதியில் மன்மோகன் சிங் அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடிய சாக்கடைகளான ராடியாவையும், ராசாவையும், இன்ன பிறரையும் சி.பி.ஐ., தூர் வாரிக்கொண்டிருக்கும் கேலிக்கூத்து பரபரப்பு செய்தியாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல; ஊழல் குறித்த விவாதங்கள் அனைத்தும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான திசையில் திட்டமிட்டே கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள்தான் தனியார்மயக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், முதலாளிகளுக்குச் சோர்வை ஏற்படுத்துவதாகவும், எனவே இத்தகைய ஊழல்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சாமியாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். இத்தகைய மெகா ஊழல்களைச் சாத்தியமாக்கிய தனியார்மயக் கொள்கையும், இந்த ஊழல்களால் பல்லாயிரம் கோடி ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளுமே ‘பாதிக்கப்பட்டவர்கள்’ போலச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ராடியா, கனிமொழி, ராசா போன்றவர்களின் கையில் சிக்கி இந்திய ஜனநாயகம் சிரிப்பாய்ச் சிரிப்பதாகவும், டாடாவைப் போன்ற பாரம்பரியமிக்க கவுரவமான தொழிலதிபர்கள் இந்த நாலாந்தர மனிதர்களிடம் விவரம் தெரியாமல் சிக்கிச் சீரழிந்து நிற்பதாகவும் சித்தரிக்கிறார் “சோ” ராமஸ்வாமி. தனது தமிழ் வெறுப்பு, திராவிட வெறுப்பு, சாதித் துவேசம் ஆகியவற்றை வன்மத்துடன் வெளியிடுவதற்கான நல்வாய்ப்பாகவும் தி.மு.க.வினரின் இந்தக் களவாணித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், பார்ப்பன-இந்திய தேசியவாதிகள்.

மொத்தத்தில் இந்த ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் எல்லா ஊழல்களையும் காட்டிலும் பெரிய ஊழலாகும்.
பொதுச்சொத்தை அம்பானி திருடினால், அது திறமை!
ஆ.ராசா திருடினால், அது ஊழலாம்!

இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ எதிரான பொதுக்கருத்தையும், அறம் சார்ந்த வெறுப்புணர்ச்சியையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் ‘ஊழல்’ என்பது மிக முக்கியமான கருவியாக இருந்துவந்திருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் வலிமையானதொரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமும் ‘ஊழல்’ தான். “அரசுத்துறை என்றால் ஊழல், தனியார் துறை என்றால் நேர்மை; அரசுத்துறை என்றால் திறமையின்மை, அலட்சியம்; தனியார்துறை என்றால் திறமை, பொறுப்புணர்ச்சி” என்ற கருத்தினைப் பரப்பி, அவற்றின் மீது சவாரி செய்துதான் அரசுத்துறைகளை விழுங்கும் தனது நோக்கத்துக்கு ஆதரவான பொதுக்கருத்தைத் தரகு முதலாளி வர்க்கம் உருவாக்கியது. நகராட்சி, மின்வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், போலீசு நிலையம், நீதிமன்றம் முதலான அனைத்து வகையான அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊழலையும் அதிகாரத்திமிரையும் அன்றாடம் அனுபவித்து வரும் மக்களும் ஆளும் வர்க்கத்தின் இந்தச் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகினர், இன்னும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளில், அதாவது தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991-க்குப் பிறகுதான் இந்திய அரசியலில் நாம் கேள்விப்படும் ஊழல்களின் தொகைகள் 40,50 கோடியிலிருந்து ஆயிரம் கோடிகளுக்கும் இன்று இலட்சம் கோடிகளுக்கும் உயர்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஹர்சத் மேத்தா, கேதன் பரேக் முதல் சத்யம் ராஜு வரையிலான அனைவரும் தனியார்மயம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே. 1990-க்கு முன் எவையெல்லாம் சட்டவிரோதமென்றும், ஊழலென்றும் வரையறுக்கப்பட்டிருந்தனவோ, அவை அனைத்தையும் 1991 முதல் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் படிப்படியாகச் சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. அந்நியச் செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்தும் சட்டம் நீக்கப்பட்டு, மோசடி சட்டபூர்வமாக்கப்பட்டது; கருப்பை வெள்ளையாக்கும் பல திட்டங்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது; வரி ஏப்புகளைத் தண்டிப்பதற்கு பதிலாக, முதலாளிகளுக்கான பல வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமானவை அனைத்தும் சட்டபூர்வமானவை ஆக்கப்பட்டு விட்டதால், 1991-க்கு முன் முதலாளிகளின் ஊழல்களாகக் கருதப்பட்டவை அனைத்தும் இப்போது அவர்களது உரிமைகள் ஆகிவிட்டன.

டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இரும்புத் தாதுவை டன் 27 ரூபாய்க்கு சுரங்க முதலாளிகளுக்கு விற்பனை செய்கிறது அரசு. இதனை ஊழல் என்றோ பகற்கொள்ளை என்றோ நாம் கூறலாம். ஆனால், முறையாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்த விற்பனை நடப்பதால், இது சட்டபூர்வமானதாகிவிட்டது. எண்ணெய் வயல்கள், பொதுத்துறை ஆலைகள், விளைநிலங்கள் போன்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள். மலைகளும் ஆறுகளும் காடுகளும் காணாமல் போகின்றன. தற்போது இரும்புத்தாது வெட்டியெடுக்கப்படும் வேகத்தில், அடுத்த 30 அண்டுகளில் இந்தியாவில் இரும்புக் கனிமமே இருக்காது என்று எச்சரிக்கிறார்கள், துறைசார் வல்லுநர்கள். ஒரு மிகப்பெரும் சூறையாடலையும் பேரழிவையும் கண்முன்னே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். நாட்டின் தொழில் வளர்ச்சி என்று இது போற்றப்படுகிறது.

இப்படி ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து அம்பானி, அகர்வால், டாடா, மித்தல் போன்ற பெரும் தரகு முதலாளிகள் தமது சொத்துகளை 40,50 மடங்கு பெருக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாக உயர்ந்திருப்பதும், அவர்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளையே விலைக்கு வாங்குவதும் அவர்களுடைய தொழில் திறமைக்குக் கிடைத்த சன்மானமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வல்லரசாவதற்கான ஆதாரமாகவும் காட்டப்படுகிறது.

இந்தக் கொள்ளைக்கே தனியார்மயம் என்று பெயர் சூட்டி, சட்டபூர்வமான கொள்கையாக மாற்றி, நிறைவேற்றித் தருகின்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் இதற்காக முதலாளிகளிடம் கையூட்டு பெறுவதும், இதே தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்தி கருணாநிதி, சரத் பவார் முதலான அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பொதுச்சொத்துக்களை வளைப்பதும் மட்டும்தான், ஊழல் என்ற பெயரில் மக்கள் முன் நிறுத்தப்படுகிறது.

தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விவாதங்களையே எடுத்துக் கொள்வோம். இதில் “அரசின் சொத்தான அலைக்கற்றைகளை ஏன் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டும்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அவ்வாறு விற்பனை செய்வதற்கு கையாளப்பட்ட வழிமுறை, பின்பற்றத் தவறிய நெறிமுறைகள், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்கிய அமைச்சர்கள் – அதிகாரிகளின் முறைகேடுகள் ஆகியவற்றை மையப்படுத்தியே ஊழல் குறித்த இந்த விவாதம் சுழன்று கொண்டிருக்கிறது.

அதாவது, அரசு சொத்துகளை முதலாளிகளுக்குத் தாரை வார்க்கின்ற தனியார்மயக் கொள்கை என்பது பொருளாதார ரீதியில் மிகவும் சரியான, அப்பழுக்கற்ற, அறிவுபூர்வமான கொள்கை போலவும், அதனை அமல்படுத்துகின்ற அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கைப் போல, மோடி, புத்ததேவ், நிதிஷ் குமாரைப் போல தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்காத உத்தமர்களாக நடந்து கொள்ளும் பட்சத்தில், இந்தியா வல்லரசாவது உறுதி என்பது போலவுமே சித்தரிக்கப்படுகிறது.
முதற்பெரும் ஊழல் - தனியார்மயமே!

தனியார்மயம் என்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மன்மோகன், அலுவாலியா, சிதம்பரம் முதலான பொருளாதார மேதைகள் இராப்பகலாகக் கண்விழித்து ஆராய்ந்து கண்டுபிடித்த கொள்கை அல்ல.

முன்பு இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அரசுத் துறை ஏற்படுத்தப்பட்டதற்கும், தொலைபேசி, மின்சாரம், ரயில்வே, சுரங்கங்கள், துறைமுகங்கள் போன்ற கேந்திரமான துறைகளிலிருந்து முதலாளிகள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. இத்தகைய துறைகளை நிர்மாணம் செய்வதற்குத் தேவைப்படும் மூலதனம் அதிகம், இலாபம் குறைவு என்ற காரணத்தினால் முதலாளிகளே இவற்றை அரசின் தலையில் கட்டி விட்டு, அந்தச் சேவைகளை மட்டும் சலுகை விலையில் அனுபவித்தனர். மேலும், இத்தகைய உயிர்நாடியான துறைகளை முதலாளிகளின் முழுக்கட்டுப்பாட்டில் விடுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணமாகக் காட்டித்தான், அரசு இத்துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இத்தகைய துறைகளைத் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பது என்று முந்தைய கொள்கையைத் தலைகீழாக மாற்றிய போது, இதனால் நாட்டின் தற்சார்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எந்தக் கட்சியும் விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இக்கொள்கை டில்லியில் உருவாக்கப்பட்டதல்ல; அது வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது.

அது, அமெரிக்காவின் தலைமையிலான உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் முதலான நிறுவனங்கள், பன்னாட்டு நிதிமூலதனத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிய கொள்கை. இந்தியா போன்ற நாடுகளின் மீது அவர்களால் விதிக்கப்பட்ட ஆணை. பிரதமர் நாற்காலியில் மன்மோகனுக்குப் பதிலாக சேடப்பட்டி முத்தையா அமர்ந்திருந்தாலும் அமலாகியிருக்கக்கூடிய கொள்கை இதுதான். வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியாவின் பிரதமர் முதல், சின்னஞ்சிறு ஆப்பிரிக்க நாட்டை ஆளுகின்ற யாரோ ஒரு பழங்குடி யுத்தப்பிரபு வரையிலான அனைவரின் தலையிலும் அணிவிக்கப்பட்டிருக்கும் தொப்பி அது. அத்தொப்பிக்கு ஏற்ப தலையைச் செதுக்குவதும், தனியார்மயம் என்ற கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பொதுக் கருத்தை உருவாக்குவதும்தான், ஓட்டுக்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கியிருக்கும் பணி. எனவே, ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மென்று துப்பியதைத் தின்று எடுக்கும் வாந்திதான், தனியார்மயத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங் முதலானோர் தயாரித்துப் பரிமாறும் வாதங்கள்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் தொடங்குவதற்கு முன், அரசும் ஆளும் வர்க்கங்களும் முன்வைத்த வாதங்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.

இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய நிதி மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் முதல் பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி வரையிலான எல்லா யோக்கிய சிகாமணிகளும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினர்.

முதன் முதலாக 1991-92 – இல் (மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது) விற்கப்பட்ட பொதுத்துறைப் பங்குகள் அனைத்தும் சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டதால், இந்த விற்பனையை ஒரு ‘மோசடி’ என்று அன்றைய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. பொதுத்துறை பங்கு விற்பனை குறித்த கணக்குத் தணிக்கையாளரின் 20 ஆண்டு அறிக்கைகளைத் தொகுத்தால், ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த மோசடியின் மொத்தத் தொகை பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.

இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.

இன்று, “2-ஜி அலைக்கற்றை உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றுக் கொள்ளையடிக்க சில நிறுவனங்களுக்கு உதவினார்” என்பதுதான் ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ‘ராசா தந்திரம்’தான் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையிலும் நடந்திருக்கிறது. சில நூறு கோடிகளுக்குப் பொதுத்துறை பங்குகளை வாங்கி, கம்பெனியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அதன் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கும், விற்றுக் காசு பார்ப்பதற்கும் ஏற்ற ‘கொள்கையை’ வகுத்துத் தருவதற்காகவே ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி’ என்றொரு கமிட்டி (அதாவது பொதுத்துறை முதலீடுகளை விற்பதற்கான கமிட்டி) நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை வகுத்துத் தந்த கோமான், ரங்கராஜன் என்பவரின் பெயரால் அது ரங்கராஜன் கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பது, உலக வங்கியின் ஆணைப்படி பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியை இவர் முன்வைத்தார். சர்வதேசக் கடன் நிறுவனங்களிடம் இந்திய அரசு வாங்கிய கடனுக்கு ஈடாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு விற்றுவிடலாம் என்பதே அந்த யோசனை. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகளையும் சொத்துக்களையும் அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது என்பதே இந்த யோசனையின் விளைவு.(இப்பேர்ப்பட்ட அரிய யோசனையை வழங்கிய அந்த ரங்கராஜன்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார ஆலோசகர்!)

பிறகு வந்த பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது சி.பி.ஐ. அவரைத் துருவித்துருவி விசாரிக்கிறதாம். பெஜால் என்ன பதில் சொல்வார்? “1999 முதல் 2006 வரை அரசு அதிகாரி என்ற முறையில் நான் தனியார்மயக் கொள்கை வழி நடந்தேன். ஓய்வு பெற்ற பின்னரும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் தனிப்பட்ட முறையில் அதனை அமல்படுத்தினேன்” என்று தனது வரலாற்றுக்கு அவர் சீர் பிரித்து இலக்கணம் கூறக்கூடும். ஓய்வு பெற்றபின் அவர் நீரா ராடியாவின் நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை; நெஸ்லே, ஜி.வி.கே. பவர்ஸ் அண்டு இன்ப்ஃராஸ்ட்ரக்சர்ஸ், பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களிலும் அவர் பதவி வகிக்கிறார்.

பொதுத்துறை விற்பனைகளுக்கு விலை நிர்ணயம் செய்த முறை குறித்து அவரிடம் சி.பி.ஐ. கேட்குமானால், அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர் ரங்கராஜன்தான் என்று அவர் வாக்குமூலம் தருவார்; ரங்கராஜனைக் கேட்டால் தனது பொருளாதார ஞானகுரு என்று மன்மோகன் சிங்கை அடையாளம் காட்டுவார்; மன்மோகன் சிங்கோ “நான் ஐ.எம்.எஃப். – க்குப் பிறந்தவன் என்ற உண்மையை எந்தக் கமிட்டியின் முன்னாலும் சொல்லத் தயார். இதைத் தவிர என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என்று பதிலளிக்கக்கூடும்.

நேற்று தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த பெஜால், இன்று நெஸ்லே என்ற ஏகாதிபத்திய தொழில் நிறுவனத்தின் இயக்குநர். நேற்று ஐ.எம்.எஃப். என்ற ஏகாதிபத்திய கந்து வட்டி நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த மன்மோகன் சிங், இன்று பிரதமர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? தனியார்மயத்துக்கும் ஊழல்மயத்துக்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாடுதான்! ஒழுக்க சீலர் மன்மோகனுக்கும் அயோக்கியன் பெஜாலுக்கும் என்ன வேறுபாடு? சங்கிலியைத் திருடுவதற்காக பெண்ணின் கழுத்தை மட்டும் அறுக்கும் ‘நல்லவனுக்கும்’, கற்பழித்துவிட்டு அதன்பின் கழுத்தை அறுக்கும் ‘அயோக்கியனுக்கும்’ உள்ள வேறுபாடு!
விலையைக் குறைப்பது ஊழல் – வரியைக் குறைப்பது?

2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக் கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம். இத்தகைய அனுமானங்கள் எதற்கும் இடம் வைக்காமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையில் புதிது புதிதான நேர்முக வரித் தள்ளுபடிகள், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித் தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள் அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக் கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம். “அலைக்கற்றைகளின் விலையை முதலாளிகளுக்குக் குறைத்துக் கொடுத்தால் கட்டணத்தையும் குறைப்பார்கள்; செல்பேசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும்; அதனால்தான் விலையைக் குறைத்தேன்” என்று கூறுகிறார், ராசா. சிதம்பரம் ஆங்கிலத்தில் விளக்குவதைத்தானே ஆ.ராசா அழகு தமிழில் விளக்குகிறார். தமிழ் ஊழலென்றால் ஆங்கிலமும் ஊழல்தானே!

“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த 1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது. அலைக்கற்றை விற்பனையை ஊழல் என்று அழைத்தால், வரித் தள்ளுபடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வைப் பேயாப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்போதே, நோக்கியாவுக்கு 600 கோடி ரூபாய் வரி மானியத்தை வாரி வழங்குகிறார், கருணாநிதி. இதனை ஊழல் என்று சொல்வாரில்லை. தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் கொடுத்ததாக ராடியா கூறும் 600 கோடி மானியம் மட்டும்தான் “சோ” வுக்கு ஊழலாகத் தெரிகிறது.

ராடியா டேப் அதை மட்டுமா சொல்கிறது? வரித்தள்ளுபடி குறித்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேறுகின்றன என்ற இரகசியத்தையும்தான் விளக்குகிறது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையையும்தான் புட்டு வைக்கிறது.

இந்த 91,000 கோடி என்பது அலைக்கற்றை ஊழல் போல அனுமான இழப்பு அல்ல; பருண்மையான இழப்பு. எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் இதனைக் கூட்டாக நிறைவேற்றியிருப்பதனால்தான், இதற்கு “நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று பா.ஜ.க. கோரவில்லை போலும்! அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றிய ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையையே தானும் பின்பற்றியதாகக் கூறுகிறார், ராசா. சில சில்லறைத் தில்லுமுல்லுகளை மட்டும் தவிர்த்திருப்பாரேயானால், கருணாநிதி சொன்னதைப் போல “தி.மு.க.- வின் தகத்தகாயமாக மின்னும் கொள்கைத் தங்கமாகவே” ராசா நீடித்திருந்திருப்பார். தேசிய நலனை முன்னிட்டு அம்பானிக்குப் படைக்கப்பட்ட 91,000 கோடியைப் போலவே, இந்த 1,76,000 கோடியும் தேசத்துக்கு வைக்கப்பட்ட படையலாகவும், தனியார்மயக் ‘கொள்கை வழியில்’ தேச முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட முடிவாகவுமே விளக்கப்பட்டிருக்கும்.

“பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அலைக்கற்றை விற்பனையால் 1.43 இலட்சம் கோடி இழப்பு” என்று ஒரு குண்டை தற்போது அமைச்சர் கபில் சிபல் வீசியிருக்கிறார். இந்தத் தொகை மொத்தமுமே தேசிய நலனுக்கு படைக்கப்பட்ட பொங்கல்தானா, அல்லது தம்பி தயாநிதியும், அண்ணன் அருண் ஷோரியும் இதில் கொஞ்சம் வழித்து நக்கியிருப்பார்களா? தரகு முதலாளிகளுக்கிடையே சமாதான உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் யுத்தம் நீடித்தால், மேலும் பல உண்மை கசியக்கூடும்.
ராசா..! அரண்மனைக்கு அடியில்
எத்தனை பெரிய பெருச்சாளிப் பொந்து!

‘ராசா ஊழல்’ என்று சித்தரிக்கப்படும் இந்த அலைக்கற்றை ஊழலுக்குள் கையை விட்டால், அந்தப் பெருச்சாளிப் பொந்து அரண்மனை முழுவதற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கியிருக்கும் நிறுவனங்கள், அரசு வங்கிகளிடமே ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அரசுக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிர்ந்து விட்டார்களாம். பொதுத்துறை நிறுவனங்களை வளைத்துப் போடும் இந்தியத் தரகு முதலாளிகள், எந்தக் காலத்திலும் தம் கைக்காசைப் போட்டு அவற்றை வாங்கியதில்லை என்ற உண்மை, ‘கற்றறிந்த’ நீதிபதிகளுக்குத் தெரியாது போலும்! அரசு வங்கிகள்தான் அவர்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. மருத்துவத்துக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவிட அரசாங்கத்திடம் பணமில்லையென்பதால்தான் பொதுத்துறைப் பங்குகளை விற்க வேண்டியிருப்பதாகச் சொல்லி தனியார்மயத்தை நியாயப்படுத்தினார், அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். முதலாளிகளோ அதே நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கிகளின் கையை வெட்டி அரசுக்கே சூப் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது சிதம்பரம் அறியாத இரகசியமல்ல. மக்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் சிதம்பர இரகசியம்.

தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும், “ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், கேதன் பரேக் ஊழல்” என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு தாய்ப்பிள்ளைகளே. அலைக்கற்றை ஊழலிலிருந்து ஒரு கிளை வலப்புறம் பிரிந்து வீட்டுக் கடன் ஊழலுடன் இணைகிறது. அங்கிருந்து அது இடப்புறம் திரும்பி அரசு வங்கியுடன் போய் இணைகிறது. அரசு வங்கியிலிருந்து பிரியும் பைபாஸ் சாலை மீண்டும் ஸ்பெக்ட்ரம் நெடுஞ்சாலையில் சங்கமிக்கிறது.

வீட்டுக் கடன் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டீஸ் என்ற நிறுவனம், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டிருக்கும் எடிசாலட் டி.பி. என்ற நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது, இல்லாத வீட்டை அடமானம் வைத்து அரசு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய டி.பி.ரியால்டீஸ் நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை வைத்து, தொலைபேசிச் சேவையே நடத்தாத ‘தொலைத்தொடர்புக் கம்பெனியான’ எடிசாலட் டி.பி. என்ற தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமத்தை விலைக்கு வாங்குகிறது. அந்த லைசன்சு காகிதத்தை அடமானம் வைத்து மீண்டும் வங்கியில் கடன் வாங்குகிறது. பிறகு அந்த உரிமத்தை வங்கியிலிருந்து மீட்டு, அதனை 4 மடங்கு விலைக்கு விற்று சில ஆயிரம் கோடிகளையும் சுருட்டுகிறது.

அலைக்கற்றை உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் பினாமி ‘உப்புமா’ கம்பெனிகள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். உரிமத்தை ரத்து செய்தால் திவாலாகப்போவதும் அவர்களல்ல, உரிமக் காகிதத்தை அடமானம் வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே. எனவேதான், இவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று முடிவு செய்துவிட்டார், அமைச்சர் கபில் சிபல்.

விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ., போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து, அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே. இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான்.
எது இலஞ்சம், எது ஊழல், எது கொள்கை?
விடை காண முடியாத தத்துவஞானக் கேள்வி!

ஸ்பெக்ட்ரம் மோசடிக்காக முன்னாள் அமைச்சர் ராசா முதல் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தேடிச் செல்கிறது சி.பி.ஐ. ஆனால், ஸ்பெக்ட்ரம் பணத்தை விழுங்கிச் செரித்த டாடா, மித்தல், அம்பானி போன்றோரை வீடு தேடிச் சென்று சந்தித்து, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை வகுப்பதற்கு அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார், அமைச்சர் கபில் சிபல். இதுவும் பா.ஜ.க. அரசு ஏற்கெனவே போட்ட பாட்டின் ரீ மிக்ஸ்தான். அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம் இயற்றப் போவதாக 2003 – இல் சொன்னார் வாஜ்பாயி. இந்தச் சட்டத்துக்கான முன்வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு, ரூயா, பிர்லா, ராஜீவ் சந்திரசேகர் முதலான தரகு முதலாளிகள் அடங்கிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியில் அரசு வங்கிகளுக்கு ரூயா வைத்திருந்த கடன் பாக்கி 1577 கோடி, பிர்லா 212 கோடி, சந்திரசேகர் 56 கோடி. இதுதான் அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதி!

திருடர்களுக்குக் கடனை வாரிவழங்குமாறு வங்கிகளுக்கு அரசு கொடுத்த வழிகாட்டுதலாகட்டும், திருடர்களைத் தண்டிப்பதற்கான ‘சட்ட முன்வரைவினை’ தயாரிக்கும் பொறுப்பைத் திருடர்கள் கமிட்டியிடமே ஒப்படைத்ததாகட்டும்; இவையெல்லாம் சிதம்பரமும், யஷ்வந்த் சின்காவும், வாஜ்பாயியும் மேற்கொண்ட கொள்கை முடிவுகள்தான். ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்று அலைக்கற்றையை வாரி வழங்கியதும்கூட ‘கொள்கை முடிவு’ என்றுதான் ராசா சொல்கிறார். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ‘கொள்கை’ முடியும் இடம் எது – ‘ஊழல்’ தொடங்கும் இடம் எது? இதனை எவ்வாறு கண்டறிவது?

தனியார்மயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மான்டேக் சிங் அலுவாலியா இதற்கான விடையை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். “40,000 கோடி வீட்டுக்கடன் ஊழலை, ‘ஊழல்’ என்று அழைப்பது தவறு. அது வழக்கமான இலஞ்சம் மட்டுமே” என்று விளக்கியிருக்கிறார். நமக்குத் தெரிந்த இலஞ்சங்களான டிராபிக் போலீசு லஞ்சம், தாலுக்கா ஆபீஸ் லஞ்சம், ஆர்.டி.ஓ. ஆபீஸ் லஞ்சம் போன்றவை மூன்று நான்கு பூச்சியங்களைத் தாண்டியதில்லை. நாடு வல்லரசாகி வரும் காரணத்தினாலும், கோடீசுவரர்களின் எண்ணிக்கை பெருகிவரும் காரணத்தினாலும் இலஞ்சத்தின் இலக்கணம் தற்போது மாறியிருக்கக் கூடும். எத்தனை பூச்சியங்கள் வரையில் ‘இலஞ்சம்’, எத்தனை பூச்சியங்களுக்குப் பின் ‘ஊழல்’, எத்தனை பூச்சியங்களுக்கு மேல் ‘கொள்கை’ என்பது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தி, தேசிய பொதுக்கருத்தை எட்டினால் மட்டுமே, ஊழல் விவாதங்களினால் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டிருக்கும் தேசிய கவுரவத்தைக் காப்பாற்ற முடியும் போலும்!
நீரா ராடியா அல்லது சல்வா ஜுடும்!

அலைக்கற்றைகளாக இருக்கட்டும், ஆலைகள், சுரங்கங்கள், காடுகள், விளைநிலங்களாக இருக்கட்டும்; அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தடையற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் தனியார்மயம் என்ற கொள்கை. காசை வாங்கிக் கொண்டு, கதவைத் திறந்து விடக் காத்திருப்போரிடம் டாடா – அம்பானிகளின் சார்பில் ராடியா பேச்சுவார்த்தை நடத்துவார். ராடியாக்களுடன் பேச மறுக்கும் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் போன்றோரிடம் டாடாவின் சார்பில் இந்தியத் துணை இராணுவப்படை பேசுகிறது.

ராடியா ஒரு அதிகாரத் தரகர் என்பதால் அவர் நடத்திய பேரங்கள் ஊழல் என்றும் முறைகேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இதே நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையையோ, சட்டிஸ்காரில் துணை இராணுவப் படைகள் நடத்தும் காட்டுவேட்டையையோ ஊழல் என்று யாரும் அழைப்பதில்லை.

ஒரு கொள்கைக்குரிய கவுரவத்துடன் அழைக்கப்படுகின்ற ‘தனியார்மயம்’ என்பதும் கூட தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்திக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைதான். தீவட்டிக் கொள்ளையர்களைத் தமது நாயகர்களாக எந்த சமூகமும் கொண்டாடியதில்லை. ஆனால் டாடா, அம்பானி, மித்தல் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். “பில் கேட்ஸை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடுவார் முகேஷ் அம்பானி” என்ற செய்தி, இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியாக மொழிபெயர்க்கப்பட்டு மக்களின் காதில் ஓதப்படுகிறது.

“இந்திய முதலாளிகளின் தொழில் முனைப்பைத் தனியார்மயக் கொள்கை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது” என்று போற்றப்படுகிறது. அதே கொள்கைதான் டில்லியில் ராடியாவையும் சட்டீஸ்கரில் சல்வாஜுடுமையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கொள்ளையர்கள் கட்டவிழ்த்து விடப்படுவதனால் நேரும் விளைவு பகற்கொள்ளையே அன்றி முன்னேற்றமல்ல. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையிட்ட வெள்ளையர்களும் கூட “இந்தியாவை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றுதான் கூறிக்கொண்டார்கள். 200 ஆண்டுகளில் அவர்கள் அடித்த கொள்ளையை விட, தனியார்மயம் அமலாகத் தொடங்கிய 20 ஆண்டுகளில் இந்தியத் தரகுமுதலாளிகள் அடித்திருக்கும் கொள்ளையும், வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்திருக்கும் பணமும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
அரசுத் தலையீடின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை:
முதலாளித்துவ மூலமந்திரங்களின் உட்பொருள்!

இவையெதுவும் தம் தொழில் முனைப்பினாலோ, திறமையினாலோ அவர்கள் உருவாக்கிய செல்வம் அல்ல. அமெரிக்காவின் சப் பிரைம் மோசடியில் தொடங்கி இந்தியாவின் ஸ்பெக்ட்ரம் மோசடி வரை கார்ப்பரேட் வர்க்கம் நிரூபித்திருக்கும் திறமை என்பது, சூதாடிகளும் பிக்பாக்கெட் திருடர்களும் கொண்டிருக்கும் திறமையை மட்டும்தான்.

ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடி, “முதன் முதலில் எனது உறவினர்களை வைத்தே கிரிக்கெட் டீம்களை ஏலம் எடுக்க வைத்து, கொள்ளை இலாபம் கிடைத்ததாக அவர்களை ‘சாட்சியம்’ சொல்லவைத்து, அதைக் காட்டியே மற்றவர்களையெல்லாம் கவர்ந்திழுத்தேன்” என்று லண்டன் பத்திரிகையொன்றிற்கு பெருமை பொங்க பேட்டி கொடுத்திருக்கிறார். இதுதானே, நம்மூர் மூணு சீட்டுக்காரன் மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு அன்றாடம் செய்து கொண்டிருக்கும் தந்திரம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடியதும், வரி விலக்குகளால் கோடி கோடியாக ஆதாயம் அடைந்ததும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து காடுகளையும் விளைநிலங்களையும் தம் உடைமையாக்கிக் கொண்டதும்தான் இவர்களது சொத்து மதிப்புகள் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்ததற்குக் காரணம். 1667 கோடிக்கு ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கி, அதில் 28 சதவீதத்தை மட்டும் (சுமார் 400 கோடி மதிப்பு) 13,000 கோடி ரூபாய்க்கு டோகோமோ நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் டாடா.
இதனைக் கொள்ளை என்பதா, ஊழல் என்பதா அல்லது டாடாவும், அம்பானியும், ராடியாவும் வெளிப்படுத்தியிருக்கும் திறமை என்பதா?

தொழில் – வர்த்தகத் துறைகளில் நிலவும் அரசுத் தலையீடுகள்தான் ஊழலுக்கு அடிப்படை என்றும், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அரசு நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் (transparency) கொண்டுவருவதன் மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவ்வப்போது பேசி வரும் இந்த கார்ப்பரேட் யோக்கிய சிகாமணிகள்தான், அரசாங்கத்துடன் தாங்கள் போட்டுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மட்டும் அரசாங்க இரகசியமாகப் பேணச் சொல்கிறார்கள். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் நோக்கியா நிறுவனம் போட்டிருக்கும் மூலதனத்தை விட அதிகம் என்ற உண்மையும், குஜராத்தில் நானோ காருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காரின் உற்பத்திச் செலவுக்கே இணையானது என்ற உண்மையும் தோண்டித் துருவி வெளியே எடுக்கப்பட்ட பின்னர்தானே தெரியவந்தது! தனியார்துறை – அரசுத்துறை கூட்டு என்ற பெயரில் சாலைகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றில் போடப்படும் ஒப்பந்தங்கள், கனிமவளங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகியவை அனைத்தையும் அரசாங்க இரகசியங்களாக மறைக்கச் சொல்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இந்தத் தடையே ஊழலா, அல்லது இத்தகைய தடைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு ராடியாக்கள் நடத்தும் தரகு வேலைகள் மட்டும்தான் ஊழலா, எது முதற்பெரும் ஊழல் என்பதே கேள்வி.

“கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை மக்களுக்குத் தெரியாத இரகசியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் கொள்ளையர்களுக்கிடையே வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்பதுதான் அவர்கள் கோருகின்ற வெளிப்படைத் தன்மை (transparency).

‘அரசின் தலையீடுகளை அகற்றுதல்’ என்ற அவர்களுடைய தாராளமயக் கோரிக்கையின் உட்பொருள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசின் தலையீடுகளை’ நீக்கவேண்டும் (deregulation) என்பது மட்டும்தான். மற்றபடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்பது, எதிர்த்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவது, தொழிற்சங்கங்களை ஒடுக்குவது போன்ற விசயங்களில் அவர்கள் அரசின் உறுதியான தலையீட்டை வரவேற்கவே செய்கிறார்கள். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடினாலும் குறைந்தாலும் அதற்கேற்ப ஏற்றுமதியாளருக்கும் இறக்குமதியாளருக்கும் மானியம் வழங்குவது, பணப்புழக்கத்தை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பது, கல்வி வியாபாரம், கார் வியாபாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் சுறுசுறுப்பாக நடப்பதற்கு ஏற்ப நுகர்வோர் கடன்களை வாரி வழங்குமாறு அரசு வங்கிகளைத் தூண்டுவது போன்ற விசயங்களிலும் அவர்கள் அரசின் அக்கறையுள்ள தலையீட்டைக் கோரவே செய்கிறார்கள். மக்களுடனான முரண்பாட்டில் சிங்குரிலும் நந்திக்கிராமிலும் அரசு தங்கள் சார்பாகத் தலையீடு செய்ததை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்கவே செய்தார்கள்.

அலைக்கற்றைப் போரில் எழுந்த முரண்பாடோ கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலானது. டாடா – மித்தலுக்கு இடையிலான இந்த பாரதப் போரில் அரவான் களப் பலி ஆ.ராசா. சாம்ராச்சியச் சண்டையான பாரதப்போர், தரும யுத்தமாகச் சித்தரிக்கப்படுவதைப் போலவே, இந்த கார்ப்பரேட் யுத்தமும் ஊழலுக்கு எதிரான போராக சித்தரிக்கப்படுகிறது. தனியார்மயக் கொள்கையின் அமலாக்கத்திலிருந்து ஊழலை மட்டும் நீக்கிவிட்டால் சொர்க்கலோகத்தைக் கண்டு விடலாம் என்றும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும் கயிறு திரிக்கிறார்கள், கார்ப்பரேட் வியாசர்கள். முதலாளித்துவத்திடமிருந்து ஊழலை நீக்குவதென்பது அதன் இதயத்தையே நீக்குவதாகும். இலாபம்தான் அதன் இலட்சியம். அதனை அடைவதற்கு எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்பதே முதலாளித்துவ நிர்வாகவியலின் முதல் விதி.

மோதிக்கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் தமக்கிடையிலான போட்டியில் யுத்த தருமத்தையும், ஒழுக்கத்தையும் எந்தக் காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள்? ஒரு விமானக் கம்பெனி தொடங்க விரும்பியதாகவும், அதற்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதால், விமானக் கம்பெனி தொடங்கும் யோசனையையே கைவிட்டு விட்டதாகவும் கூறி, தனக்குத் தானே ஒளிவட்டம் சூட்டிக்கொண்டார் ரத்தன் டாடா. அடுத்த வந்த நாட்களில் நல்லொழுக்க சீலர் டாடாவின் யோக்கியதையை ராடியா டேப்புகள் நாட்டுக்கே ஒளிபரப்பின.

பா.ஜ.க.-ராடியா கள்ள உறவு குறித்த செய்திகளைக் கசியவிட்டு பதிலடி கொடுக்கிறது காங்கிரசு. ராடியாவை ஆளாக்கி வளர்த்ததே பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த்குமார் தான் என்றும், பா.ஜ.க. வின் ஆட்சிக் காலத்தில்தான் ராடியா தனது தொழிலில் கொடி நாட்டினார் என்றும், டில்லியில் ராடியாவின் ஸ்பான்சர்ஷிப்பில் பேஜாவர் ஸ்வாமிகள் நடத்திய வைபவத்துக்கு அத்வானி வருகை புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. தனியார்மயத்தின் முதல் பத்தாண்டுக்கு, ஹவாலா ஊழல் – ஜெயின் டயரி. இரண்டாவது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராடியா டயரி!

இந்திய நாடாளுமன்றத்துக்கு கீழே ஒரு நிலவறை இயங்குவதும், நிஜ உலக ஜனநாயகத்தில் பரிமாறப்படும் கதை – வசனங்கள் அனைத்தும் நிலவறையின், கார்ப்பரேட் சமையலறையில் தயாராவதும் அம்பலமாகிச் சந்தி சிரிப்பதைக் கண்டு இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பூசாரிகள் சங்கடத்தில் நெளிகின்றனர். ‘முழுதும் நனைந்த பின்னே முக்காடு எதற்கு?’ என்று எண்ணிய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “லாபியிங் (தரகு வேலை) ஒரு ஜனநாயக உரிமை. அதை முறைப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது” என்று பிரகடனமே செய்து விட்டார். “வரி ஏப்பு அதிகரித்தால் அதற்குத் தீர்வு, வரிகளை நீக்குதல்; கறுப்புப் பணம் அதிகரித்தால் அதற்குத் தீர்வு, அவற்றை வெள்ளையாக்கும் திட்டத்தை அறிவித்தல்’’ – இதுதானே புதிய தாராளவாதக் கொள்கையின் ஒழுக்கவிதி!

எனவே, லாபியிங் உரிமையை முறைப்படுத்துதவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. “அமெரிக்காவில் இருப்பதைப் போல, எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கும் இருக்கவேண்டும்” என்று ஊழல் ஒழிப்புக்கான ‘அமெரிக்க வழி’யை முன்மொழியத் தொடங்கிவிட்டனர், முதலாளித்துவ அறிவுஜீவிகள். ‘கட்டுப்பாடுகளை நீக்குதல்’ என்ற புதிய தாராளவாதத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு, ‘ஒழுக்கத்தை நீக்குதல்’ என்ற கலாச்சார கொள்கை பொருந்தித்தான் வருகிறது

மற்றெல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டாலும், புதியதோர் உரிமையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது தனியார்மயம்! நமக்கு வழங்கப்படவிருக்கும் இந்த உரிமைக்குப் பொருள்தான் என்ன?

எந்த எம்.பி., எந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை! அல்லது டாடா-அம்பானி-மித்தல்-அகர்வால்-ரூயா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள், எந்த அமைச்சரின் உதவியுடன் நமது சட்டைப் பைக்குள் கை விடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை. அரசு அதிகாரத்தின் உண்மையான பொருள் கார்ப்பரேட் முதலாளிவர்க்கத்தின் அதிகாரம்தான் என்று தெரிந்து கொள்ளும் உரிமை!

இனி இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் செல்வோம். அட, இந்த உரிமையை தனது நாட்டு மக்களுக்கு சென்ற நூற்றாண்டிலேயே வழங்கியிருக்கிறாரே முசோலினி!

Thanks: - மருதையன், புதிய ஜனநாயகம், ஜனவரி-2011