மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இயக்கம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கும் பாஸ்டியர் நிறுவனம் நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. பாரம்பரியமிக்க இந்த நிறுவனத்தை மூடும்படி மத்திய சுகாதார அமைச்சரகம் உத்தரவிட்டது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளைத் தனியாரிடம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான பாஸ்டியர் நிறுவனத்தை மூடியது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்புகிறது.அதே போல், எத்தனையோ ஆண்டுகளாக கிண்டி பி.சி.ஜி. நிறுவனம் நோய்த் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. அந்த நிறுவனத்தையும் மூடும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. அங்கே உற்பத்தி செய்யப்பட்ட மருந்தும் இனி மாறுவேடத்தில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும்.
அந்தத் தனியார் நிறுவனங்களிலிருந்து இனி மத்திய சுகாதார அமைச்சரகம் கொள்முதல் செய்து கொள்ளும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அதனை அனுமதிக்கக் கூடாது என்று போர்க்குரல் எழுப்பி வருகிறது.இமாசலப் பிரதேசத்தில் மத்திய சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வந்தது. அதனையும் மூடும்படி அமைச்சர் அன்புமணி உத்தரவிட்டார். இப்போது மூடப்பட்டும் விட்டது. இதனை அந்த மாநில பி.ஜே.பி. அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த ஆராய்ச்சி நிலையத்தை தாங்களே நடத்தத் தயாராக இருப்பதாகவும் அதனை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதே போல் குன்னூர் பாஸ்டியர், கிண்டி பி.சி.ஜி. மருந்து உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டாமா? அவற்றை மாநில அரசே ஏற்று நடத்த முடியாதா?குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் குழந்தைகளின் நோய்த் தடுப்பிற்காகப் பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. கக்குவான், தொண்டை அடைப்பான், ரணஜன்னி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமல்ல; நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான `ரேபிஸ்' மருந்தும் இங்குதான் தயாரிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காக 2003-ம் ஆண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதி வரை லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரையைப் பின்பற்ற இந்த நிறுவனம் தவறியதால் மூடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சரகம் அறிவித்தது. அந்தப் பரிந்துரையை யார் செயல்படுத்தவில்லை? அப்படிச் செயல்படுத்தத் தவறியிருந்தால் அதற்குப் பொறுப்பு மத்திய சுகாதார அமைச்சரகம்தானே? ஆகவே, தண்டிக்கப்பட வேண்டியது குன்னூர் நிறுவனமா? மத்திய சுகாதாரத்துறையா?
குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் மூடப்பட்டதை ஊழியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீலகிரி மாவட்ட மக்களே எதிர்க்கிறார்கள். பொய்யான காரணங்களைக் கூறி பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை இப்போது நாடே உணர்ந்து விட்டது.எனவே, மீண்டும் பாஸ்டியர் நிறுவனத்தை ஆராய மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தரும் அறிக்கை மீது அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம். அந்த நிறுவனத்தை மூடுவதென்று முடிவு செய்து விட்டனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை தனியார் நிறுவனங்களில் வாங்குவது என்றும் முடிவு செய்து விட்டனர். அதன் பின்னர் அமைக்கப்படும் குழு என்ன அறிக்கை தரும் என்பது பாமரருக்கும் புரியும்.
ஆங்கிலேயர் காலத்திலேயே மருந்து உற்பத்திக்குத் தகுதியான இடம் என்று குன்னூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கட்டடங்களும் கட்டப்பட்டன. அதனை விரிவுபடுத்துவதற்கு இன்னும் தேவையான இடங்கள் இருக்கின்றன. அங்கேயே நவீன கருவிகளை அமைக்க முடியும்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முடியும் என்று 2002_ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் மீதுதான் 30 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கித் தந்தது.
சென்ற ஆண்டு இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. லூயிஸ்பாஸ்டியர் சிலை நிறுவப்பட்டது. நூற்றாண்டு விழா கலையரங்கமும் கட்டப்பட்டது. இங்குள்ள தரக்கட்டுப்பாட்டு நிலையம் சர்வதேசத் தரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுக் கூடமும் 16 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் திறக்கப்பட்ட
இத்தனைக்கும் பின்னர் குன்னூர் நிறுவனம் எதற்கும் தகுதியில்லை என்று மூடப்பட்டதன் பின்னணி மர்மமாகவே இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தைப் பார்வையிட்டார். எந்தக் காரணம் கொண்டும் இந்த நிறுவனம் மூடப்படமாட்டாது என்று ஊழியர்களுக்கு உறுதி அளித்தார். அடுத்த சில நாட்களிலேயே அந்த அதிகாரி வேறு இடத்திற்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.
குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தையும் கிண்டி பி.சி.ஜி. நிறுவனத்தையும் இமாசலப் பிரதேச ஆய்வுக் கூடத்தையும் மூடிவிட்டு செங்கல்பட்டு அருகே 50 ஏக்கரில் புதிய நிறுவனத்தை மத்திய சுகாதாரத் துறை துவக்கப் போகிறதாம். உறை மோரைக் கொடுத்து விட்டு விலை மோருக்கு அலைந்த கதைதான். புதிய நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கும் வரை தனியார் நிறுவனங்களில் மருந்துகளைக் கொள்முதல் செய்யப்போகிறார்கள்.கொடிய நோய்களிலிருந்து லட்சோப லட்சம் குழந்தைகளைக் காக்க மருந்து தயாரித்துத் தந்த பல நூறு ஊழியர்கள் வீதிக்கு விரட்டப்படுகிறார்கள்.
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
1 hour ago
No comments:
Post a Comment