அமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை
A.கோபால கிருஷ்னன், A.N.பிரசாத், P.K.ஐயங்கார்.
நாங்கள் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள். 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் முன்னரே நாங்கள் தெரிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விளக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதமர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி அவரைச் சந்தித்து எங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி விவாதித்துள்ளோம்.இந்த அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தான் அமைத்த UPA- இடதுசாரி குழுவிடம் கூட விவரங்களைத் தராமல் IAEAயிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு அரசு அவசரம் அவசரமாக விரைந்தோடுகிறது. இது பரந்துபட்ட விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகவும் கவலையையும் அமைதியின்மையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து நாடு தழுவியதொரு ஆழமான விவாதத்தை நடத்தாமல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள IAEAயிடம் அரசு ஓடக் கூடாது.
குறைந்த பட்சம் UPA- இடது சாரி குழு, இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளாத நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு முழுமையான விவாதம் நடத்தாமல் ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது என அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகின்றோம்.ஒப்பந்தம் வெளிநாட்டில் தயாரான அணு உலைகளை இறக்குமதி செய்ய வழிவகுக்கும்; நாட்டின் ஆற்றல் தேவையை ஈடுகட்ட இது உத்தரவாதம் அளிக்கும் என்ற வாதத்தின் அடிப்படையில் அரசு மிகவும் ஆசை ஆசையாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது. ஆனால் இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழக்கமான அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மூலம் - எந்தவித வெளிநாட்டு இறக்குமதியுமில்லாமல் - உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் மனதில் அறையும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமுலாக்கத்திற்கு வந்தபிறகு, இந்தியாவின் வர்த்தகரீதியான அணு ஆற்றல் பரிவர்த்தனைகள் அனைத்தும் அது அமெரிக்காவோடு இருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டோடு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டம் இதற்கு வழி வகுக்கின்றது. அணு ஆற்றல் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் குழு (Nuclear Suppliers Group) அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா ஹைடு சட்டத்தை ஏவமுடியும். இல்லை அணு ஆற்றல் கூட்டுறவை 123 இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமே தீர்மானிக்கும் என்று சிலர் சொல்வது ஏற்க முடியாது.
ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் மீதுதான் நிற்கின்றது! அதில் ஹைடு சட்டமும் அடங்கும்.ஹைடு சட்டம் இரு தரப்பு அணு ஆற்றல் வர்த்தகத்திற்கு சம்பந்தமில்லாத பல சரத்துகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் தொடர வேண்டுமென்றால் இந்தியா எத்தகைய வெளியுறவுக் கொள்ளகையைக் கைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, அணு ஆற்றல் குறித்த நமது சுயேட்சையான உள்நாட்டு ஆய்வு முயற்சிகள் எல்லாவற்றையும் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் என்ன பயன்? வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா?
இந்த விலைகளைக் கொடுத்து ஒப்பந்தம் காண்பது அவசியமா என்பவையே நாட்டின் முன் வந்துள்ள விவகாரம்.இந்த அணு ஆற்றல் கூட்டு வேறு பல கவலை தரும் விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இந்தியாவின் கைவசமுள்ள அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear deterrent) என்பதையும் பலகீனப்படுத்தக் கூடிய சரத்துகள் உள்ளன. அணு ஆற்றலில் உள்நாட்டு தொழில் நுட்பத்தினையும் ஆய்வு முயற்சிகளையும் வளர்த்தெடுத்து முன்னேறுவதற்கு தடைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது; தனக்கு ஆதரவாக ஊடகங்களை அரசு வளைத்துள்ளது; அதன் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்து கட்டியெழுப்பி உள்ள ஆதரவு; சில அமைப்புகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளான தனிநபர்களின் மிகவும் குறுகியதும் சுயநலமிக்கதுமான நிலைபாடுகள்; துரதிஷ்டவசமாக பெருவாரியான பொது மக்களிடம் உள்ள அறியாமை ஆகியவை அனைத்தும் இணைந்து நாட்டை மிகவும் அபாயகரமான பாதையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இது இந்த தலைமுறை இந்தியர்களின் நலன்களை மட்டுமல்லாது இனி வரவிருக்கும் பல தலைமுறை இந்தியர்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கக் கூடியதாகும். அமெரிக்கா வழங்கியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அவசர அவசரமாக IAEA தலைமை வாரியத்திற்கு ஓடி அதன் சம்மதத்தைப் பெற்று, பின் அமெரிக்க காங்கிரசில் இப்போதைய புஷ் அரசு அமெரிக்காவிலும் மன்மோகன் சிங் அரசு இந்தியாவிலும் பதவியிலிருக்கும்போதே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட வேண்டுமென துடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து ஆழமான பரிசீலனையும் பரந்துபட்ட விவாதமும் நடத்தவேண்டும். இதனை மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதை இன்றைய சிக்கலான நிலை கோருகின்றது.IAEA பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களின் மையமான கருத்து,
இந்த பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவு இந்தியாவிற்கு பிரத்யேகமானவை என்பதாகும். ஹைடு சட்டம் மற்றும் 123 உடன்பாடு ஆகியவற்றில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. IAEAயின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையங்களுக்குத் தடங்களில்லாது எரிபொருள் வழங்கப்படுவதை இவை உத்தரவாதம் செய்யவில்லை. IAEA உடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை இதனை சரிசெய்யும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. IAEA எந்தக் காலத்திலும் எரிபொருள் வழங்குவதை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்ததில்லை. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் இந்த உத்தரவாதம் குறித்து பேசினார்களா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதாகும்.IAEA உடன்படிக்கையின் சரத்துகள் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வழங்கப்படுவதில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா தகுந்த சீர் நடவடிக்கை (Corrective Measures) எடுத்து தடங்களில்லாத மின்னுற்பத்தி செய்ய அநுமதிக்கும் என்பது 123 ஒப்பந்ததின் ஓர் அம்சம் என அரசு ஓயாமல் திட்டவட்டமாகக் கூறி வந்தது. இதனை கணக்கிலெடுத்துக் கொண்டு இதன் அடிப்படையில்தான் IAEAவின் கட்டுபாட்டுக்குள் இந்திய அணுமின்நிலையங்களை நிரந்தரமாக வைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஒப்பந்தத்திற்குள் தலை குப்புற விழுவதற்கு முன்பு அந்த “தகுந்த சீர் நடவடிக்கைகள்" எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகின்றது.ஒப்பந்தப்படி இந்தியா IAEA கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகளை மட்டுமே IAEAயின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியும். அதுவும் கூட அந்த அணு உலையின் எரிபொருள் மொத்தத்தையும் அதாவது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத கதிர் வீச்சுப் பொருட்கள், உதிரிப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். இது தடங்களற்ற மின் உற்பத்திக்கான பாதுகாப்பு அல்ல. இதனை ‘தகுந்த சீர் நடவடிக்கை’ எனக் கூறுவது சற்றும் சரியல்ல.மேலும் இந்த சலுகை கூட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்கு இல்லை.
அணு ஆற்றலுக்கு நாம் செய்யும் முதலீட்டின் பெரும்பகுதியை உண்டுவிட்டு IAEA கட்டுப்பாட்டில் இருக்கும் இவை எரிபொருள் மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பின்பும் நிரந்தரமாக IAEA கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாக (IAEA மூலமாகவோ ஒரு மூண்றாம் நாட்டின் மூலமோ) எரிபொருள் வழங்குவதை ஹைடு சட்டம் தடுக்கின்றது. எனவே UPA - இடதுசாரி குழுவிடமும் தேச மக்களிடமும் சரியான விளக்கம் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.123 உடன்படிக்கையின்படி கூட்டு முறிந்தால் இந்தியா இறக்குமதி செய்த அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக IAEAவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது குறித்து இந்தியாவிற்கான பிரத்யேகமான IAEA உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு IAEAயும் இந்தியாவும் விவாதித்து ஒத்த கருத்தை அடைந்து கூடுதல் முறைபாடுகள் (Additional Protocol) ஒரு உடன்படிக்கையினைச் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உடன்படிக்கையினை இப்போதே IAEAயுடன் விவாதித்து முடிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகும். பாதுகாப்பு குறித்து IAEAயுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே இதனை முடிப்பது அவசியமாகும். IAEA பாதுகாப்பு நடவடிக்கையின் மிகவும் மோசமான தலையீடுகள் எல்லாம் இது போன்ற கூடுதல் முறைபாடுகள் குறித்த உடன்படிக்கையின் சரத்துகள் மூலமே நடந்துள்ளன. நமது ராணுவரீதியான அணு ஆற்றல் முயற்சிகளிலும் சந்தேகம் என்பதின் பேரில் எந்தவித அடிப்படையும் இல்லாது மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய இந்த கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை அநுமதிக்கும்.IAEA எந்த அளவு தலையிட முடியும் அதன் எல்லைகள் யாவை என்பதை இந்தியா மிகவும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
மேலும் சாதாரணமாக அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு அமுலாகும் வழக்கமான விதிமுறைகள் இந்தியாவிற்கு அமுலாகாது என்பதையும் இப்போதே தெளிவுபடுத்திவிட வேண்டும். கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை குறித்து பேரம் பேசுவதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம் அனைத்தும் IAEAயுடனான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்தானால் போய்விடும். கூடுதல் முறைபாடுகள் குறித்த வரம்புகள் குறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எத்தகைய வரம்புகள் இந்தியாவிற்கு ஏற்பு எவை ஏற்பல்ல என்பது IAEAக்கு தெளிவாக்கப்படவில்லை. அவை பாதுகாப்பு குறித்து IAEAவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் சரத்துகளிலும் இல்லை. இது குறித்து அரசு என்ன கருத்து கொண்டுள்ளது என்பதை IAEAயுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே அரசு தெளிவுபடுத்தவேண்டும்.
மின்நிலைய அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் (யுரேனியம்) பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு (Reprocessing) உட்படுத்தப்பட்டு புளூட்டோனியமாக ஆக்கப்படுவது நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த புளூட்டோனியத்தைக் கொண்டே அதிவேக ஈனுலை (fast Breeder Reactor) மற்றும் உயர் கனநீர் அணுஉலை (AHWR) ஆகியவை இயக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் மறுசுழற்சி என்பது நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு என்பதற்கு இந்தியா கொண்டுள்ள திட்டத்திற்கு ஆதாரமான தேவையாகும்.நிபந்தனையற்ற மறுசுழற்சி உரிமையை விட்டுக் கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தது. இந்த உரிமை குறித்து எந்த பேரமும் பேச அரசு தயாரில்லை (non negotiable) என்று கூட கூறப்பட்டது. ஆனால் இறுதியில் 123 உடன்படிக்கையில் கிடைத்ததென்னவோ மறுசுழற்சி உரிமை பற்றிய வெற்று வார்த்தைகள்தான். மறுசுழற்சிக்கான உண்மையான உரிமை எதிர்காலத்தில் இதற்கென பிரத்யேகமான மிக நவீனமான மறுசுழற்சி நிலையம் ஒன்று கட்டப்பட்ட பின்தான் ஏனைய பிற நிலையங்களோடு சேர்த்து அநுமதி வழங்கப்படும். அதற்கும் பிரத்யேகமான பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் கூடுதல் முறைபாடுகளும் (Protocols) நடைமுறைப்படுத்தப்படும்.
ஆக இத்தனை தடைகளைத் தாண்டிய பிறகே மறுசுழற்சி என்பதை ஆரம்பிக்க முடியும். இவை குறித்து இப்போதே தெளிவாகப் பேசி முடிவெடுத்து உடன்படிக்கை காண வேண்டும். IAEAயின் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளுமுன் இதனை முடிவு செய்யவில்லை என்றால் பிறகு ஒருநாளும் இது நடக்காது. ஆனால் அரசு சமீபத்தில் IAEA உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதனைச் செய்யவில்லை. இந்த குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் குறைபாடு எதிர்காலத்தில் இந்தியாவை மிகவும் மோசமாக சீரழிக்கும்.இது போன்று மிகவும் முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்த வினாக்கள் உள்ளன. இவற்றுக்கான விளக்கங்களை அரசு இதற்காக அமைக்கப்பட்ட UPA- இடதுசாரி குழுவிற்கு கூட அளிக்கவில்லை.
இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கும் அரசிடம் பதில் இல்லை. அனைத்து ஒப்பந்தங்களையும் ஏனைய பேச்சுவார்த்தை விவரங்களையும் UPA-இடதுசாரி குழுவின் முன்னரும், இது குறித்த ஆழமான விவரம் தெரிந்த சுயேட்சையான நிபுணர் குழுவிடமும் அளிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு அரசு சார்பில் IAEA உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.
கையொப்பமிட்டவர்கள்:
Dr.பி.கே. அய்யங்கார், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி ஆணையம். (Former Chairman - Atomic Energy Commission)
Dr. ஏ. கோபாலகிருஷ்ணன், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி நெறியாள்கை வாரியம். (Former Chairman - Atomic Energy Regulatory Board)
Dr. ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குனர், பாபா அணுவியல் ஆய்வு மையம். (Former Director - Bhabha Atomic Research Centre)
(pkrajan_61@yahoo.co.in)
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
39 minutes ago
No comments:
Post a Comment