மீண்டும் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு முயற்சி ஸ்டேட் வங்கி விழுங்குகிறது சௌராஷ்டிரா வங்கியை
கௌதம்
புலி வருது; புலி வருது என்று பயந்ததுபோல் புலி உண்மையாகவே வந்து விட்டது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் முதல்படியாக ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிராவை (SBI), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் (SBS) இணைக்கும் முயற்சி பலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வங்கிகளின் இயக்குநர் குழுவிலும் இதற்கான தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி சுலபமாக நிறைவேறியுள்ளது. எப்போது இணையுமென்ற தேதி மட்டுமே அறிவிக்கப் பட வேண்டியிருக்கிறது.
UFBU முடிவு காற்றில்....."
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டால் ருகுக்ஷரு ஒட்டு மொத்தமாக எதிர்க்கும்; வேலைநிறுத்தம் உட்பட அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அத்தகைய முயற்சியினை முறியடிக்கும்" என்று 2005 மார்ச் மாதம் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. SBIயிலும், SBSலும் ஊழியர்களைப் பொறுத்தவரை NCBE தான் பெரும்பான்மை சங்கம். இரண்டிலும் அதிகாரிகள் மத்தியில் AIBOC தான் பெரும்பான்மை சங்கம். இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த இரண்டு சங்கங்களுமே மேற்படி இணைப்பிற்கு ஆதரவான நிலையை எடுத்தன.
UFBU முடிவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. உண்மையான இணைப்பு என்று வரும்போது இரண்டு சங்கங்களும் தமக்கு வசதியான நிலையெடுத்துள்ளன.இதனைத் தொடர்ந்து மற்ற ஆறு துணை வங்கிகளும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப் படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இணைப்பின் சூத்திரதாரி
1991ல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நரசிம்மம் (முதல்) கமிட்டி, பொதுத்துறை வங்கிகள்இணைப்பு பற்றி பரிந்துரைத்துள்ளது. 1998ல் நரசிம்மம் - இரண்டாம் கமிட்டி அனை வலியுறுத்திக் கூறியதுடன் மேலும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியது.
* இரண்டு பொதுத்துறை வங்கிகள் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
* மத்திய அரசாங்கம் அதற்கு அணுசரணையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அத்தகைய இணைப்புகள் பணியாட்களையும், கிளைகள் எண்ணிக்கையையும் வெட்டி சுருக்கப் பயன்பட வேண்டும்.
* ஊழியர்களை ‘தேவையான' இடங்களுக்கு இடமாற்றல் செய்ய வேண்டும்.
* ‘பலவீனமான'வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக இணைப்புகள் நடத்தப்படக்கூடாது.
* பலமான வங்கிகள்தாம் இணைக்கப்பட வேண்டும்
இவைதாம் இணைப்பு பற்றி நரசிம்மம் (இரண்டாவது) பரிந்துரையின் சாராம்சம்.
அதன் முதல் படிதான் SBS ஐ SBI யுடன் இணைக்கும் முயற்சி. மற்ற துணை வங்கிகளும் இணைக்கப்பட்டால், கிளைகள் மூடல், ஆட்குறைப்பு, சாதாரணமக்களுக்கு வங்கிச் சேவை மறுப்பு உட்பட அனைத்து மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளும் அரங்கேறும்.
இத்துடன் நரசிம்மம் கமிட்டி செய்துள்ள மற்றொரு முக்கிய பரிந்துரை "பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு குறைந்தபட்சம் 51ரூலிருந்து 33ரூ ஆக குறைக்கப்படவேண்டும்" .
யானும் அவ்வண்ணமே கோரும்
அதைத்தான் ஸ்டேட் பாங்க் தலைவர் திரு. O.P. பட் சென்ற மாதம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசியுள்ளார். திரு. H.N. சினோர், IBAவின் நிர்வாகக்குழுவின் முடிவாக "பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கு 33ரூ அல்லது 26ரூ ஆகக் குறைக்கப்பட வேண்டும்" என்று மத்திய அரசிற்குப் பரிந்துரைத்துள்ளார்.ஏற்கனவே வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில உள்ள சரத்துப்படி ஒருவர் எவ்வளவு பங்கு வைத்திருந்தாலும் அவருக்கு ஓட்டுரிமை அதிகபட்சம் 10ரூ என்ற உச்சவரம்பை நீக்குவதற்கான முயற்சி மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.2008 ஏப்ரல் மாதத்திலிருந்து BASEL II விதிமுறைகள் முதல் கட்டமாகவும், 2009 ஏப்ரல் முதல் முழுமையாகவும் அமுலாகப் போவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.
அபாயம் ஆரம்பம்
இது நடைமுறைக்கு வந்தால் இன்றைக்குப் பெயரளவில் அந்நிய வங்கிகளுக்கு உள்ள கட்டுப்பாடு கூட (கிளைகள் திறப்பதில், முன்னுரிமைக்கடன் வழங்கப்பட வேண்டும் என்பதில்....) முற்றிலுமாக நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்திய வங்கித்துறையில் சமமாக விளையாடலாம். அதற்கான சமதள ஆடுகளம் (Level Playing Field) அமைத்துத் தரப்படும்.இவையெல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போதுதான் மத்திய அரசு எவ்வாறு மற்றும் உலக வங்கியின் சதியை நிறைவேற்றும் கருவியாக செயல்பட்டு வருகிறது என்பதை உணர முடியும். ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியோடு இணைத்துவிட்டு, கிளைகளையும், ஊழியர்களையும் வெட்டிச் சுருக்கி குறைத்துவிட்டு, அரசு வசமுள்ள பங்கினை 33 ரூ (அ) 26ரூ ஆகக் குறைத்துவிட்டு, ஓட்டுரிமையின் உச்ச வரம்பை நீக்கிவிட்டு, அந்நிய பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்கு ஸ்டேட் வங்கியை தங்கத்தட்டில் வைத்து தாரை வார்ப்பதுதான் அந்த சதி ஸ்டேட்வங்கி ஒரு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியானால் என்ன நிலை ஏற்படும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமல்ல.
சதி வலையும் சலுகைப் பொறியும் (Trap)
இந்த சதியின் முதல்படிதான் ஸ்டேட் பாங்க் ஆஃப் சௌராஷ்டிராவை ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது, என்ன விலை கொடுத்தாலும், அதை சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.28.09.07ல் டெல்லியில் கூடிய SBI இயக்குநர் குழுவில், SBS ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்காலத்தை சமமாக 1:1 என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்வதென்றும்,SBS பணியாளர்களுக்கும் ஸ்டேட் வங்கி பணியாளர்களைப் போல் பென்ஷன், பி.எப்., கிராஜிவிடி என்று மூன்று ஓய்வூதிய சலுகைகளை வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஊழியர்களைப் போல் SBS ஊழியர்களில் பெரும் பகுதியினர் பி.எப் தேர்வு செய்வதவர்களாகவும், சிறுபகுதியினரே பென்ஷன் தெரிவு செய்தவர்களாகவும் உள்ளனர். பென்ஷன் தேர்வு செய்ய இரண்டாவது வாய்ப்பிற்காகப் பெரிய அளவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பென்ஷன் கூடுதல் சலுகையாக மூன்றாவது பலனாக சிக்கலில்லாமல் கிடைக்கும் என்றால் இயற்கையாகவே ஊழியர்களிடம் இணைப்பை எதிர்க்கும் கூர்முனை மழுங்கடிக்கப்படும் அல்லவா? அதைத்தான் மத்திய அரசு பயன்படுத்தி தனது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது.
மூன்று சங்கங்களின் வேலைநிறுத்தம்
மிகச் சரியாக இதனைப் புரிந்துகொண்ட AIBEA மற்றும் AIBOA சங்கங்களின் தனித்தனியான அறைகூவலுக்கிணங்க 27.09.07 அன்று ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளில் நாடு தழுவிய மகத்தான வேலை நிறுத்தம் நடைபெற்றது.30.9.07 அன்று கட்டாக் நகரில் நடைபெறும் UFBU கூட்டத்தில் இந்த பிரச்சினை நிச்சயம் முன்னுக்கு வருமென்று தெரிகிறது.சர்வதேசநிதி நிறுவனங்களின் கட்டளைப்படி இந்தியாவில் நடைபெறும் நிதித்துறை சீர்திருத்தங்களை எதிர்க்கும் வகையில் ஒன்றுபட்ட போராட்டத்தினை உருவாக்கி நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த திசைவழியில் வங்கித்துறையிலும், பொதுவாக நடைபெறும் போராட்டங்களிலும் முழுமையாக இணைவதன் மூலமே பிடிவாதமான மத்திய அரசை பின்னுக்குத் தள்ள முடியும். இந்தப் பார்வையில் சரியான நேர்க்கோட்டில் எல்லா சங்கங்களும் நிற்பதில் நிலவும் பிரச்சினை அபாயங்களை முறியடிக்க உதவாது.
ICICI : தொடரும் அராஜகங்கள்
3 பெண் குழந்தைகளும் தமது தந்தையை இனி புகைப்படத்தில் தான் பார்க்க முடியும். அதற்கு சமாதானமாக, வெட்கமில்லாமல் 15 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறது ஒரு தனியார் வங்கி - வேறு யார், அராஜக ICICI வங்கிதான்!
50 ஆயிரம் ரூபாய்க் கடனை திருப்பிச் செலுத்தாததற்கு ஆள்களை திரும்ப திரும்ப அனுப்பி மிரட்டியதால், மும்பை மாநகரின் பிரகாஷ் சர்வங்கர் (38 வயது) இந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டு விட்டார். ஹைதராபாத் யாதய்யா கொலைக்குப் பிறகு (BWU: ஜூலை 2007) மீண்டும் செய்தியில் ICICI வங்கியின் பெயர் மோசமாக அம்பலமானது.
பிரகாஷ் சர்வங்கரின் 6 வயது பிஞ்சுக்குழந்தை பிரஜக்தா ‘அப்பாவை அடிப்போம் னு சொல்லி மிரட்டினாங்க' என்கிறது. தற்கொலைக்கு முன் எழுதிய வாக்குமூலத்தில், ‘என்னை (ICICI ஏஜெண்டுகள்) தற்கொலைக்குத் தள்ளிவிட்டார்கள். செத்து கூடப் போ, ஆனால் எங்களுக்குப் பணம் வந்தாகணும் என்று மிரட்டினர்,' என்று எழுதி வைத்திருக்கிறார். பிடியரிசி இல்லாத கொடுமையில் செத்தவனுக்குப் படி அரிசி வாய்க்கரிசி போடுவது மாதிரி தனது ‘குற்றத்தைக்' கழுவ 15 சில லட்சம் ரூபாயை குடும்பத்தின் பெயரில் முதலீடு செய்து மாதாமாதம் வட்டி வழங்குவோம் என்று சொல்லி இருக்கிறது ICICI வங்கி.
அண்மையில் சென்னையில் கூட ஒரு தற்கொலை நடந்திருக்கிறது. கடன் அட்டைகளைப் பரிவோடு வியாபாரம் செய்கிற இந்த நிறுவனங்கள், வசூலை மட்டும் தாதாக்களின் பொறுப்பில் விட்டிருக்கின்றன. கட்டுப்பாட்டாளர்கள் (Regulators) இன்னும் எத்தனை மரணங்களுக்குத் தான் காத்திருப்பார்கள்?
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
1 hour ago
No comments:
Post a Comment