Saturday, July 26, 2008

அன்புள்ள சாரு,

நான் உங்கள் இணைய தளத்தின் வாசகர்களில் ஒருவன். ‘ இந்தியா விற்பனைக்கு ’ கட்டுரையைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியுள்ள படி விவசாயிகளின் நிலை, கல்வி போன்ற விஷயங்களில் உங்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அணுசக்தி பற்றி நான் வேறு விதமாக நினைக்கிறேன். நிலக்கரியிலிருந்து இன்னும் 200 ஆண்டுகளுக்கு நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அணுசக்தியிலிருந்து 700 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிடைக்கும். மேலும் இது சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்காது. இதன் ஒரே பக்க விளைவு என்னவென்றால், இதன் மூலம் உருவாகும் ரேடியோஆக்டிவ் கழிவுகளை 1000 ஆண்டுகளுக்கு கவனமுடன் கண்காணிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அக்கழிவை glass matrix – ஆக மாற்றி சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஒரு இடத்தில் வைத்து விடவும் முடியும். இந்த அணுசக்தியை நாம் விட்டுவிட முடியாது; கூடாது.

யுரேனியத்தைப் பொறுத்தவரை அது நம் நாட்டில் அதிகம் கிடைக்கவில்லை. ஆந்திரப் பிரதேசம் நாகார்ஜுன சாகரிலும், மேகாலயாவிலும்தான் யுரேனியம் தாது கிடைக்கிறது. அங்குள்ள சில உள்ளூர்ப் பிரச்சினைகளால் சுரங்கம் தோண்டி அதையும் எடுக்க முடியாத நிலை. அப்படி எடுத்தாலும் அது நமக்குப் போதாது.

தோரியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்வது சரி. இந்தியாவில் தோரியம் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் தோரியம் பிளவு படக் கூடிய பொருள் அல்ல. அதை முதலில் அணு உலையில் வைத்து யுரேனியம்-233 ஆக மாற்றியாக வேண்டும். அதன் பிறகே அதை நாம் அணுசக்தியாகப் பயன்படுத்த முடியும். இதில் மூன்று கட்டங்கள் உள்ளன.
முதல் கட்டம், யுரேனியத்திலிருந்து ப்ளூட்டோனியத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், இந்த ப்ளூட்டோனியத்தை தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐ உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது கட்டத்தில், மின்சார உற்பத்திக்காக இந்த யுரேனியம்-233ஐ எரிக்க வேண்டும். ஆக, தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், யுரேனியத்தைத்தான் நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இதைத் தவிர தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேறு எந்த வழியும் இல்லை.

எனவே, அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான். ஆனால் இதை வைத்துக் கொண்டு இந்தியா அமெரிக்காவுக்கு அடிமையாகி விடக் கூடாது. அது ஒன்றுதான் இந்தியா கவனமாக இருக்க வேண்டிய விஷயம்.

நான் கல்பாக்கத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். உங்களுடைய ராஸ லீலாவைத் தவிர மற்ற நூல்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது சத்தியத்தின் வெகு அருகாமையில் இருப்பது போல் உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

சோமசுந்தரம்,
கல்பாக்கம்.

No comments: