சாலை திறந்து கிடக்கிறது.
சாலையின் நடுவே எங்காவது பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?
நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.
அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் வந்த பல அனுபவங்கள் எனக்கு நேர்ந்திருக்கிறது.பைக், டிராக்டர், லாரி, ராணுவத்திற்கு சொந்தமான ஜீப் என்று அறியாத மனிதர்களின் தயவில் கடந்து வந்திருக்கிறேன்.
பெரும்பான்மையினருக்கு பயணம் என்பது எவ்விதமான சிறு தடங்கலும் இல்லாமல் எல்லாமே முன்கூட்டி முடிவு செய்யப்பட்டு இருக்கை வசதி துவங்கி வழியில் சாப்பிடும் வாழைப்பழம் வரை யாவும் முறையாக இருக்க வேண்டும் . அந்த ஒழுங்கில் எங்கே சிறு தவறு நேர்ந்தாலும் பதற்றம் அடைந்து போய்விடுகிறார்கள். இப்போது செல்போன்கள் வந்தபிறகு பயணத்தில் ஏறிய இடம் துவங்கி வந்திறங்கும் இடம்வரை பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரு முறை ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்ற ஊரின் அருகே இரவில் பேருந்து பயணத்தில் பழுது ஏற்பட்டது. இருட்டிற்குள்ளாகவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்து கிடந்தோம்
அந்தப் பகுதியில் வேறு பேருந்து கிடைக்காது என்பதால் நடக்கும் வரை நடந்து செல்லலாம். எங்காவது வேறு வாகனம் கிடைத்தால் போய்விடலாம் இல்லாவிட்டால் பழுது நீக்கபட்டு வரும் பேருந்திலே ஏறிச்செல்லலாம் என்று அறிவித்த போது உடன் வருவதற்கு நாலு பேரே முன்வந்தார்கள். நாலு பேரும் இரவில் நீண்ட சாலையில் நடக்கத் துவங்கினோம்.
அநேகமாக விடிகாலை வரை நடந்திருப்போம். வேறு வாகனங்களே வரவில்லை. எதற்காக இப்படி நடக்கிறோம் என்று எவருக்கும் தோன்றவில்லை. ஆனால் லேசான குளிரும் புளியமரங்கள் அடர்ந்த சாலையில் கசியும் மணமும் ஆகாசத்தின் மென்னொளியும், இராப்பூச்சிகளின் சப்தமும் நடையைச் சோர்வடையாமல் செய்தது. அன்றிரவு தொலைதூர கிராமங்களின் மீது எப்போதும் மறையாத வெளிச்சம் ஒன்று பரவியிருப்பதை கண்டேன். அந்த காட்சி இன்றும் என் கண்ணில் படிந்திருக்கிறது.
ஆனால் நான் அறிந்தவரை எவரும் விரும்பி சாலையில் எதிர்படும் எவராவது தன்னை ஏற்றிக் கொண்டு செல்வார்கள் என்று மட்டுமே நம்பி பயணம் மேற்கொள்வதில்லை.
கையில் காசிருந்து முறையாக பயணம் செய்யும் போதே ஆயிரம் தடுமாற்றங்கள் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று புலம்பும் மக்களின் நடுவில் தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவு செய்யாமல் ஒரு மனிதன் உலகம் முழுவதையும் கடந்து வந்திருக்கிறான் என்ற செய்தி நிச்சயம் நிஜம் என்றே நம்ப முடியாதது தான்
ஆனால் இது உண்மை. பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த லுடோவிக் ஹப்ளர் (Ludovic Hubler ) என்ற இருபத்தைந்து வயது இளைஞன் சாலையில் எதிர்படும் வாகனங்களிடம் உதவி கேட்டு மட்டுமே பயணம் செய்வது என்று முடிவு செய்து கிட்டதட்ட 1700000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்றிருக்கிறான். அதுவும் 59 நாடுகள் 1825 நாட்கள் கார்கள், டிரக், ஒட்டகம், கழுதை சவாரி, படகு என்று தன்னை கடந்து செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி உதவி கேட்டு உலகைச் சுற்றியிருக்கிறான்.
காசிருந்தால் மட்டுமே பயணம் செல்லமுடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையாலும் உலகைச் சுற்றிவர முடியும் என்பதற்கு சான்று லுடோவிக்.
இவனது உலகப்பயணத்தை சாத்தியமாக்கியவர்கள் 1300 வாகன ஒட்டிகள். அவர்கள் சாலையில் நின்றபடியே விரலை உயர்த்தி வழிப்பயண உதவி கேட்ட லுடோவிக்கிற்கு உதவி செய்திருக்கிறார்கள். சில வாகனங்களில் இருநூறு முதல் ஐநூறு கிலோ மீட்டர வரை பயணம் செய்திருக்கிறான்.
பனி மூடிய சாலையில் குளிருடன் நடுங்கியபடியே யாராவது ஒருவர் தனக்கு லிப்ட் கொடுக்கமாட்டார்களா என்று 26 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு முறை காத்திருந்திருக்கிறான். அதைத் தவிர அவனது பயணத்தில் உதவ முன்வந்த பெரும்பான்மையினர் எளிமையான , அடித்தட்டை சேர்ந்த காரோட்டிகளே. அவர்கள் தங்களால் முடிந்த அளவான தூரத்திற்கு லுடோவிக்கை வாகனத்தில் கொண்டு இறக்கிவிட்டிருக்கிறார்கள்
2003ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கிய போது தன் நண்பர்களோடு ஆல்ப்ஸ் மலையில் இருந்து தனது உலகப்பயணத்திற்கான முதலடியை லுடோவிக் துவங்கினான். அப்போது வயது 25.
பயணத்திற்காக கையிலிருந்து செலவு செய்யாமலே உலகைச் சுற்றி வர வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கனவு கண்டு கொண்டிருந்த லுடோவிற்கிற்கு வழிச்செலவிற்கு தேவையான பணத்தை சேமிக்க சில வருடங்களாகி போனது. சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் அடிப்படையாக நாள் ஒன்றுக்கு பத்து டாலர் செலவு செய்வது என்ற முடிவுடன் தனது பயணத்தை துவக்கினான்.
ஆல்ப்ஸ் மலையில் பயணம் துவங்கும் போதே எந்த காரணத்தை முன்னிட்டு தனது சொந்த செலவில் எந்த வாகனத்திலும் செய்ய கூடாது. அது போலவே தான் மேற்கொள்ளும் இலவசப்பயணங்கள் உத்தேசித்துள்ள நகரின் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் வரை மட்டும் தான். அதன் பிறகு இன்னொரு வாகனத்தை நாடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அதற்காக தன் பயணத்தை துவக்கியிருக்கிறான்.
2003 ம் ஆண்டின் புத்தாண்டு இரவில் சாலையில் நின்றபடியே லிப்ட் கேட்டபோது முதலாக அவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டவர் இது சாத்தியமில்லை என்று சிரித்தபடியே அவரை பனியில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.
நண்பர்கள் குடும்பம் யாவும் துறந்து பெயரற்ற ஒரு சாலையில் நின்ற போது தான் இனி வீடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் லுடோவிற்கு உண்டானது. ஆனாலும் உலகை நோக்கி சாலை திறந்து கிடக்கிறது. செல்வதற்கு தேவையான மனத்துணிச்சல் மட்டுமே நமக்கு வேண்டும் என்ற உறுதியோடு அடுத்த வாகனத்தின் வருகைக்காக காத்திருக்கிறான்.
தனது இந்த பயணத்தின் போது வாழ்க்கையை நேரடியாக அருகில் இருந்து கற்று கொண்டதாக சொல்லும் லுடோவிக் பெரும்பான்மை மனிதர்களுக்கு அடுத்தவர் மீதான நம்பிக்கை குறைந்து போய்விட்டது. சாலையில் கடந்து செல்லும் வாகனங்களில் எண்பது சதவீதம் வழியில் நிற்கும் மனிதனை கண்டு கொள்வதில்லை. தான் சாலையில் உதவிகேட்டு நிற்பதை அறிந்தும் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் அலட்சியமாக கடந்து போயிருக்கின்றன.
அதற்கு முக்கிய காரணம் பயம். அது ஒருவகையில் உண்மையும் கூட. வழிப்பறி கொலை கொள்ளை யாவும் சாலையில் தான் அதிகமாக நடக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அறியாத மனிதர்களுக்காக உதவி செய்ய வருகின்றவர்கள் தொழிலாளர்கள், ஏழ்மையான மனிதர்கள். அவர்கள் பல நேரங்களில் தங்குமிடம் மற்றும் உணவு தந்து லுடோவிக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
தனது பயணத்தை வெறும் சாகசபயணமாக மட்டுமே கொள்ளாமல் தான் கடந்து செல்லும் வழியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் உலக சமாதானம் மற்றும் அன்பு குறித்து தான் கண்ட தெரிந்த செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறான் லுட்விக்
அவன் நினைத்தது போல பயணம் எளிமையானதாக இல்லை. சில இடங்களில் கால் கடுக்க நாள் முழுவதும் நின்று கொண்டேயிருந்தால் ஏதாவது ஒரு வாகனம் நிறுத்தப்படும். ஆனால் அவர்கள் எளிதில் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு அவர்களின் மொழி தெரியாத காரணத்தால் உரையாடவும் முடியாது.
இதற்காகவே தன்னை பற்றிய குறிப்புகளை ஒரு அட்டையில் பலமொழிகளில் எழதி அதை நீட்டி காட்டுவது அவனது வழக்கம். அப்படியும் நம்ப மறுப்பார்கள். ஒரு வாகன ஒட்டி அவனை வண்டியில் ஏற்றி கொண்டு வாகனமே கிடைக்காத சாலை ஒன்றில் வேண்டும் என்றே கொண்டு போய்விட்டுவிட்டு சென்று விட்டான். அங்கிருந்து நெடுஞ்சாலையை நோக்கி நடந்து வந்து ஒரு வாகனத்தை பிடிக்க இருபத்திரெண்டு மணி நேரமாகியிருந்திருக்கிறது. வழியில் சாப்பாடு தண்ணீர் கூட கிடையாது.
தனது ஐந்தாண்டு பயணத்தில் வாகனத்தில் பயணம் செய்த நேரத்தை விடவும் அதற்காக காத்திருந்த நேரமே அதிகம் என்று குறிப்பிடும் ஹெப்ளர் ஆங்காங்கே 450 இடங்களில் தங்கியிருக்கிறான். சில இடங்களில் போலீசாரிடம், ராணுவத்திடம் பிடிபட்டிருக்கிறார். இரவுக்காவல் என்று சிறைச்சாலைகளில் தங்க வைக்கபட்டிருக்கிறான். சில இடங்களில் வேறு வழியில்லாமல் பெண்களை போல பர்தா அணிந்து கொண்டு உதவி கேட்டு பயணம் செய்திருக்கிறான்.
இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இந்தியாவிற்கு வருகை தந்து டெல்லி பனாரஸ் கல்கத்தா மும்பை பெங்களுர் என்று சுற்றியலைந்து திரும்பியிருக்கிறான். இந்தியாவை பற்றிய தனது பதிவுகளில் காந்தியின் மீதான ஈர்ப்பு. அதிகமான மக்கள் ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்வது. தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக ஆரோக்கியமாக உள்ளன என்று பாராட்டுவதுடன் இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரங்களின் மீதான வியப்பும் இந்திய இசை மற்றும் திரைப்படங்கள் உணவு மீது உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்.
இந்தியாவில் தனக்கு பிடிக்காத பத்து விஷயங்கள் என்று இவர் பட்டியல் இட்டுள்ளது மிக முக்கியமான ஒன்றாகும்.
1) இந்தியாவெங்கும் நிரம்பியுள்ள குப்பைகள். : நகரங்கள் வீதிகள் வீடுகள் என்று எல்லா பொது இடங்களிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் கால் வைக்கமுடியாத நிலை உள்ளது. குப்பை குறித்த விழிப்புணர்வு முற்றிலும் இந்தியாவில் இல்லை
2) சுயநலம்.: எண்பது சதவீத இந்தியர்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில் துவங்கி அன்றாட சின்னஞ்சிறு காரியங்கள் வரை அடுத்த மனிதர்களை பற்றி எவ்விதமான அக்கறையும் இன்றியே செயல்படுகிறார்கள். சுயநலம் என்பது மிதமிஞ்சியும், அடுத்தவர்களை சகிக்க முடியாத அளவிலும் காணப்படுகிறது
3) நன்றி தெரிவிக்க மறுப்பது - யாரும் யாருக்கும் எந்த நிலையிலும் நன்றி சொல்லிக் கொள்வதில்லை. ப்ளீஷ் தேங்க்ஸ் என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறவர்கள் சொற்பமே.
4) புரியாத விஷயங்கள் : எதற்காக மக்கள் இவ்வளவு சப்தமாக செல்போனில் பேசுகிறார்கள். திரை அரங்கங்களில் வந்த பிறகும் ஏன் மக்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பொது இடங்களில் மூத்திரம் பெய்வது, எச்சில் துப்புவது.காரை நிறுத்துவது என்ற பழக்கம் ஏன் யாரையும் பாதிப்பதில்லை. காரணமில்லாமல் மற்றவர்கள் மீது எரிந்து விழுவது, சின்னஞ்சிறு விஷயங்களில் கூட ஏமாற்றுவது என்பது ஏன் என்றே புரியவில்லை
5) எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.: இந்தியாவில் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. எல்லா இடங்களிலும் தள்ளுமுள்ளு, போன் பேச சென்றால் அது வேலை செய்யாது. இன்டர்நெட் மையங்களுக்கு சென்றால் அது முறையாக இருக்காது. இருந்தால் அவர்கள் கேட்கும் பணம் மிக அதிகமாகயிருக்கும். இது போலவே உணவகம் தங்குமிடம் பயணம் என்று எதிலும் எவ்விதமான ஒழுங்கும் முறைமையும் இருப்பதில்லை
6) சாதி : எல்லா மாநிலங்களிலும் சாதி முக்கியமான பிரச்சனை. யாரை சந்திக்க சென்றாலும் சாதியை பற்றி பேசுகிறார்கள். சாதியின் பெயரால் ஏற்படும் அதிகாரம் சச்சரவுகள் நீக்கமற்று உள்ளது
7) ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் : நண்பனே, சகோதரனே என்று அன்பு ஒழுக அழைத்து உபசாரம் செய்த போது அடிமனதில் இவன் வெளிநாட்டுக்காரன் இவனை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் பெரும்பான்மையினருக்கு உள்ளது. வெளிநாட்டுபயணிகளை பணம் காய்க்கும் மரமாகவே கருதுகிறார்கள்.
8) லஞ்சம் ஊழல் : பள்ளிபடிப்பில் துவங்கி கடவு சீட்டுவாங்குவது வரை எல்லாவற்றிலும் நீக்கமற லஞ்சம் உள்ளது. லஞ்சம் கொடுப்பது வாங்குவது பற்றி எவ்விதமான குற்றவுணர்வும் எவருக்கும் கிடையாது
9) பொது வெளிகள் : கோவில்களை தவிர வேறு பொது வெளிகள் கிடையாது. மக்கள் ஒருவரோடு மற்றவர் சந்தித்து பேசி கொண்டாடி மகிழ கலச்சார வெளிகள் கிடையாது. நடன அரங்கம், மதுவிடுதிகள் போன்றவை தடைசெய்யபட்ட பகுதி போன்றவை. மக்கள் சேர்ந்து ஒன்றாக பகிர்ந்து கொண்டாடுவது என்ற வாரஇறுதி கொண்டாட்டங்கள் இந்தியாவில் மிக அரிது
10) இன்றும் மக்கள் : ஏழ்மை வறுமை அரசியல் பாகுபாடு என்று பல்வேறு பிரச்சனைகள் பல லட்சம் மக்கள் இன்றும் கல்வி கற்ற வசதியற்று உள்ளார்கள். கோவில்கள் மிக முக்கிய வணிக மையமாகிவிட்டிருக்கிறது.
தனது பயணத்தில் திபெத்திற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்தது மிகமுக்கிய நிகழ்வு என்று சொல்லும் ஹப்ளர் இதற்காக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. தலாய் லாமாவை சந்திப்பதற்கான நேரம் கேட்டு ஒரு ஆண்டு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி காத்திருந்து பயன் இல்லாமல் திபெத்திற்குள் பயணம் செய்திருக்கிறார். திபெத்தில் முறையான வாகனங்களின் வழியே பயணம் செல்லாமல் வழிப்பயணியாக யாராவது உள்ளே நுழைந்தால் அவர்கள் உடனடியாக பிடிக்கபட்டு சிறையில் அடைக்கபட்டுவிடுவார்கள் என்பது சட்டம். ஆகவே திபெத்திற்கு எப்படி போவது என்று தடுமாறி போயிருக்கிறான்.
தனது மனவுறுதியின்படியே ஒவ்வொரு இடமாக உதவி கேட்டு திபெத் எல்லை வரை சென்ற போதும் அவர் முறையான வாகனத்தில் வரவில்லை என்று தங்குமிடம் மறுக்கபட்டிருக்கிறது. தெரிந்த இடத்தில் தங்கி நேரடியாக தலாய்லாமாவின் காரியதரிசியை சந்தித்து விளக்கியபிறகு அவனுக்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. மூன்று நிமிச நேரம் தலாய் லாமை சந்தித்து பேசியிருக்கிறான்.
இந்தச் சந்திப்பிற்காக திபெத் எல்லையில் காத்திருந்த போது திபெத்திலிருந்து புனித யாத்திரை செல்லும் மக்களை சந்தித்திருக்கிறான். அவர்கள் இமயமலையை நோக்கி வரையான 2000 மைல் தூரத்தை நடந்தே கடக்க கூடியவர்கள். அப்படி நடக்கும் போது ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபிறகும் தலையால் பூமியை தொட்டு வணங்கி தன்னை ஆசிர்வதிக்கும்படியாக வேண்டிக் கொண்டே நடக்கிறார்கள். அதனால் ஒரு மனிதன் இந்த பயணத்திற்குள் பல்லாயிரம் தடவை பூமியை தனது தலையால் தொட்டு வணங்கியிருப்பான். அது தான் புனித பயணத்தின் உன்னதம் என்று விவரிக்கிறான்
பாகிஸ்தானிற்குள் நுழைவதற்காக அனுமதி கிடைக்காத போது அவனை பிரெஞ்சு தூதரகம் திரும்பி செல்லும்படியாக வற்புறுத்தியிருக்கிறது. ஆனால் தொடர்ந்து காத்திருந்து அனுமதி வாங்கி உள்ளே சென்றிருக்கிறான். ஆப்கான், பாகிஸ்தான் பற்றிய பொது அபிப்ராயங்கள் யாவும் தவறானவை. அங்கும் மக்கள் உலகமெங்கும் உள்ளவர்களை போலவே அன்புடன் நடத்துகிறார்கள். வறுமையும் ஏழ்மையும் நிரம்பியிருக்கின்றன. ஊடகங்கள் உருவாக்கும் பொய்களை தாண்டிய நிஜத்தை நேரடியாக கண்டேன் என்கிறான் லுட்விக். அதே நேரம் வன்முறை, தீவிரவாதம் அடிப்படைவாதம் போன்றவற்றால் எளிய மக்கள் எந்த அளவு உயிரிழப்பும் பயமும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்துகிறான்.
உலகெங்கும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கில் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள் அது தான் தன் பயணத்தில் கண்ட முக்கிய உண்மை என்று சொல்லும் ஹப்ளர் எந்த ஒரு சிறு பொருளையும் வாங்கும் போது இது நமக்கு எளிதாக கிடைக்கிறது ஆனால் இது கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் இப்போது உருவாகிறது. இந்த எண்ணத்திற்கு காரணம் உலகப்பயணம் தான் என்கிறார்
ஐந்தாண்டு காலம் உலகம் சுற்றி முடிந்து திரும்பி ஹப்ளரிடம் தனது பயணத்தை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவன் சொன்ன ஒரே வார்த்தை
Never Again .
சகமனிதனை நம்பி துவங்கிய பயணம் வெற்றிகரமாகவே நடந்தேறியிருக்கிறது. உண்மையில் உலகம் முழுவதும் சாலைகள் திறந்துகிடக்கின்றன. அதை நோக்கி செல்லும் மனத்துணிவும் அடுத்த மனிதர்கள் மீது மெய்யான அக்கறையும் இருந்தால் உலகம் சுற்றுவது எளிதானதே.
அதற்கு மொழியோ, பொருளாதார காரணங்களோ தடையில்லை. சரித்திர கால சாகசபயணிகளாக யுவான்சுவாங், பாஹியான் பற்றி வாசிக்கையில் சிலிர்ப்பு கொள்ளும் நாம் அருகாமையில் உள்ள அறியாத இடங்களை நோக்கி பயணம்செய்யவே தயங்குகிறோம்.
எல்லா பயணங்களும் வலிகளும் வேதனைகளும் அவமானங்களும் நிரம்பியதே. அந்த வலியை தாண்டி பயணம் நமக்குள் உருவாக்கும் அக சந்தோஷம், உலகில் பலரும் கண்டிராத இயற்கை காட்சிகள், மனிதமுகங்கள், கொண்டாட்டங்கள் என்று நீளும் நினைவுகள் தான் பயணம் தரும் சந்தோஷம். அதற்காகவே பயணம் செய்யலாம்.
***
Thursday, July 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment