தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் மட்டுமல்லாது பண்டைய தமிழர்கள் என அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமே 150 அண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டபோது அகமகிழ்ந்த தமிழ் சமுதாயம் இன்றைய அரசியலார்களின் அரசியலாகிவிட்டதை எண்ணி மனமுடைந்த நிலையில் உள்ளனர்.
மதத்தின் பெயரால் சீர்மிகு திட்டத்தை சிலர் அரசியலாக்கிவரும் நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடோ நாளுக்குநாள் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி தான் தற்போது பதிலாய் உள்ளது போலும் தமிழர்களுக்கு...சிங்கள தீவினிற்கோற் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருட்டி வீதி சமைப்போம் என்று பாடினான் புரட்சி கவிஞன் பாரதி. ஆனால் சிலரோ பாலத்தின் பெயரால் கொல்லன் பட்டறை தெருவில் ஊசி விற்றுக் கொண்டிருக்கின்றனர்.
7517 கிலோமீட்டர் கடற்பரப்பை கொண்ட நம் பகுதியில் 12 பெரிய துறைமுகங்களும், 185 சிறிய துறைமுகங்களும் உள்ளன. ஆனால் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் மற்ற பகுதிகளுக்கு கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையை கடந்து தான் செல்லவேண்டும். இலங்கைக்கு கப்பம் கட்ட வேண்டும், நேரத்தை வீண் விரையம் செய்யவேண்டும். அப்போதுதான் நம் நாட்டு எல்லைக்குள் இருந்து நம் நாட்டின் மற்ற பகுதிக்கு செல்லமுடியும். அப்படி ஒரு துர்பாக்கியமான நிலை இந்தியனுக்கு. இதையெல்லாம் யோசித்த நமது முன்னோர்களும், ஆங்கிலேயர்களும் இதுவரையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை சம்ர்பித்துள்ளனர். பல்வேறு நிலைகளில் ராமர் பாலத்தை பற்றி அறிந்திராத பலருக்கும் இப்போது ஞானம் பிறந்துள்ளது அரசியல் நடத்துவதற்கு.
1) 1860 ல் கமாண்டர் டெய்லர்
2) 1861 ல் டவுன் சென்ட்ஸ்
3) 1862 ல் பாராளுமன்ற குழு
4) 1863 ல் சென்னை கவர்னர் சர் வில்லியம் டென்னிசன்
5) 1871 ல் ஸ்டாட்டர்ஸ்
6) 1872 ல் பொறியாளர் ராபர்ட்சன்
7) 1884 ல் சர் ஜான் கோட்ஸ்8) 1903 ல் தென்னக ரயில்வே பொறியார்களின் ஆய்வு
9) 1992 ல் சர் ராபர்ட் பிரிஸ்ட்டோ ( தெளிவானதும், விரிவானதுமான அறிக்கை)
என 9 ஆய்வுகள் சேது சமுத்திர திட்டம் குறித்து கொடுக்கப்பட்ட நிலையில் 1967ம் ஆண்டு நாகேந்திரசிங் தலைமையிலான குழு 30 அடிக்கு 37.46 கோடியை ஒதுக்கிட பரிந்துரைத்துள்ளது. 1981ல் லட்சுமி நாராயண் தலைமையிலான குழு 282 கோடி ஒதுக்கிட பரிந்துரைத்துள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளும், அதற்குண்டான தொகையை தீர்மானிக்கும் முடிவுகளும் பல நேரங்களில் அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக தற்போது பணிகள் நடைபெற்றுவரும் பாதைக்கு கடந்த பா.ஜ.க அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் திட்டம் குறித்த இறுதி அறிக்கைக்காக மத்திய அரசின் 2000-2001 பட்ஜெட்டில் ரூ 4.8 கோடி ஒதுக்கவும்பட்டுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர் டி.ஆர்.பாலு சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சரானதும் சேது சமுத்திர திட்டத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டினார். அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டார்.
ஒருவழியாக திட்டத்திற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு கடந்த 2005 ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி சேது சமுத்திர திட்டத்திற்கான துவக்கவிழா நடைபெற்றது. பணிகளும் துவக்கிவைக்கப்பட்டது. புணிகளை முடிக்க மத்திய அரசோ ரூ 495 கோடியை ஒதுக்கி அனுமதியும் வழங்கியது.தமிழர்களின் நெஞ்சம் குளிர்ந்தது. இனி தென் தமிழகம் வளர்ச்சியடைந்துவிடும். வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்று எல்லோரும் இருந்தனர். பாக் நீரினைப் பகுதி மற்றும் ஆதம் பாலம் பகுதிகளில் கிட்டதட்ட 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சதிகாரர்கள் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் நீதிமன்றத்தினை நாடினர்.
திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தது 9 கப்பல்களும், ஓர் ஆண்டிற்கு 3055 கப்பல்களும் நம்மைக் கடந்து செல்லும், இதனால் நம் நாட்டு கப்பல்களும், பிற நாட்டு கப்பல்களும் வீணாக இலங்கையைக் கடந்து செல்ல வேண்டியதில்லை. 254 முதல் 424 கடல் மைல் தொலைவு மிச்சமாவதுடன் பயண நேரத்தில் 21 முதல் 36 மணி நேரம் வரையில் குறையும். இதனால் எரிபொருளும் மிச்சம். கப்பல் நிறுவனங்கள் சுலபமாக ஏற்றுமதி இறக்குமதியை மேற்கொள்ளலாம்.
கடலோர மாவட்டங்கள் முன்னேறும், உலகத் தரம் வாய்ந்த எற்றுமதியாளர்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் உருவாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல சிறிய அளவிலான துறைமுகங்கள் உருவாகும். குறிப்பாக மீனவர்கள் நேரடி லாபம் பெறும் வாய்ப்பு உண்டாகும்.இருவழி கப்பல் போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது. தற்போது இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நடந்துவரும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40 சதவீதம் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் நடக்கிறது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த வர்த்தகம் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமே நடைபெறும்.
இப்படி நன்மை பயக்கக் கூடிய திட்டத்தை வழக்கைப் போட்டு நிறுத்திவிட துடித்துக் கொண்டு உள்ளனர் சிலர்.சேது சமுத்திர திட்டத்தை முடக்க வேண்டும் என்ற மலிவான எண்ணத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர்களின் வாதத்தை மத அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் தங்களின் தேவைக்கேற்ப சில அரசியல்வாதிகள் பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். ஆதம் பாலத்தில் உள்ள மணல் திட்டுகளைப் போல் உலகின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற மணல் திட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே கடல் பரப்பிலும், ஆஸ்திரேலியா அருகிலும் இது போன்ற மணற்திட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன.மத்திய அரசின சார்பில் வாதிட்டுள்ள வழக்கறிஞர் புராண ஆதாரம் மற்றும் கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டியே எதிர்வாதமிட்டுள்ளார். அப்படிப் பட்ட நிலையில் தான் அவர் தான் கட்டிய பாலத்தை ராமர் தனது மனைவியை மீட்டு கொண்டவந்த பிறகு தனது வில்லால் பாலத்தைத் தகர்த்துவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றமோ திட்டத்தை நிறைவேற்றிட பணிகள் நடைபெற்றுவரும் 6வது பாதையிலிருந்து 4 வது பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.ராமர் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ள துடிக்கும் மதவாதிகளும், அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திவரும் அரசியல் தலைவர்களுக்கும் மத்திய அரசே இராமர் பாலம் என்பதை ஏற்றுக் கொண்டாகிவிட்டது என்று பொய் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கையாய் அமைந்த மணல் திட்டு மனிதரால் கட்டப்படவில்லை என்று முன்பு கூறியவர்கள் தற்போது ராமர் கட்டினார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் காமெடி அடித்து வருகின்றனர். இப்படியெல்லாம் பொய்யுரைத்து வரும் அதிமேதாவி நண்பர்கள் இப்படிப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களேயானால் ராமர் இருந்ததையும், அவர் தான் பாலம் கட்டினார் என்பதையும் ஒப்புக் கொண்டபின் இது குறித்த வாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று தானே கூறியிருக்கவேண்டும் ஏன் மாற்றுபாதையை பற்றி கூறவேண்டும்.
ராமர் பாலம் ஒருவழிபாட்டுத் தலம் என்றால் கடலுக்கள் எங்காவது 25 கிலோ மீட்டர் தொலைவில் வழிபாட்டுத் தலம் உள்ளதா?, பூமியை வணங்குகிறோம் என்பதற்காக பூமியை யாரும் தோண்டி எதுவும் செய்யக்கூடாதா? மலைகளில் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கிறது என்பதற்காக மலையைத் தோண்டி எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாதா? என்ற கேள்விகளையும் கேட்டுள்ள நீதிபதிகள் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியிலிருந்து மண்ணை அள்ளி வேறொரு இடத்தில் போடுவதால் புனிதம் கெட்டுவிடுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொழில் பக்தியுடைய பல பத்திரிகைகளும், ஊடகங்களும் மறைத்துவிட்டன. சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதன் மூலம் ஏற்படும் வளர்ச்சிகளையும், வாய்ப்புகளையும் மறுக்கமுடியாது என்று எழுதித் தள்ளிய ஊடகவியலார், இன்று காவி மனிதர்களின் முட்டாள்தனமான கூற்றிற்கு தீனி போடும் வகையில் செய்திகளை வெளியிட்டு தங்களின் இரட்டை நாக்குத் தண்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுப்பிரமணிய சாமி ஒருமுறை வாதிட்டபோது குறுக்கிட்டுள்ள நீதிபதி, ராமர் பாலம் வழிபாட்டுத்தலமென்றால் கடலில் மூழ்கியுள்ள அதனை யார் சென்று வழிபட்டுள்ளார்கள் என்றபோது மவுனசாமியாய் இருந்துள்ளார். இத் திட்டத்தை துவங்கும் வரையில் ஆதரித்த பலரும் இன்று எதிராய் நிற்பது தமிழக மக்களிடம் வேடிக்கையாய் உள்ளது. இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டி சென்ற ராமர் பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் பகுதியில் போக்குவரத்து வசதியில்லாத அந்த கால நிலையில் எப்படி கடல் பரப்பை கடந்து சென்றிருக்கமுடியும்? அங்கு இவர்கள் கூறும் வகையிலான பாலங்கள் ஏதும் இன்று இல்லையே? ஏப்படி ராமர் ராமேஸ்வரம் சென்றிருக்க முடியும்?கடலுக்கள் பாலம் கட்டியதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் பலர் எப்படி ராமர் பாம்பன் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பார் என்பதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்.
ஒரு சிலர் கூறலாம் ராமர் கடவுள் அவர் எப்படியும் சென்றிருக்கலாம் என்று. எப்படியோ மாய வித்தைகளைக் கொண்டு இதை கடந்தவர் ஏன் கடலுக்குள் போய் பாலத்தை கட்டவேண்டும் எனபதையும் சிந்திக்கவேண்டும்.இப்போது வழக்கு தொடரப்பட்டு பணிக்கு தற்காலிக முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கும் நேரத்தில், வழக்கு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு பல நேரங்களில் பலவிதமாய் இருந்துள்ள நிலையில் மத்திய அரசிற்கு குட்டுவைக்கும் அளவிற்கு தமிழக அரசு ஏதாவது காரியங்களை செய்திருக்கவேண்டும்.
தமிழகத்தின் தயவு இல்லாமல் இன்றைய மத்திய அரசு நீடிக்க வாய்ப்பில்லை. அதனால் இது போன்ற விசயங்களில் மத்திய அரசு முதலில் தனது நிலையில் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நிலையில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நிலையானதும், இறுதியானதுமான முடிவில் இருக்கவேண்டும், இதற்குண்டான தைரியத்தையும், பலத்தையும், மருந்தையும் தி.மு.க தான் கொடுக்கவேண்டும்.திட்டத்தை நிறைவேற்றவிடாமல் இடையில் இருப்பவர்கள் தடுத்து வருகின்றனர் என்று கூறும் தமிழக முதல்வர் எதற்கும் அஞ்சாமல் தமிழகத்தின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை தாங்கிக் கொள்ளாமல் மத்திய அரசிடம் கடுமையான போக்கை கடைபிடித்து திட்டத்தை முடிக்க வேண்டும்.
வேண்டுமென்றால் மத்திய அமைச்சர் பதவிகளை துறந்தாவது திட்டத்தை நிறைவேற்றும் பணிக்கு மக்களை தயார்படுத்திட வேண்டும். ஏனென்றால் இனி மதவாதிகளிடம் இருந்து - மக்களின் எழுச்சியுடன் தான் திட்டத்தை நிறைவேற்றிட முடியும்.
- நன்றி மு.ஆனந்தகுமார். (anandhammu@gmail.com)(பத்திரிகையாளர் - சமூக ஆர்வலர்)
நவீன அறிவியலின் வழிமுறைகள்
10 hours ago