Friday, August 8, 2008

அமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி

புதிய ஜனநாயகம் - 2008


முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.


நாடாளுமன்றமும் அவைத்தலைவரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர். இலஞ்சப் பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. விசாரணை நடத்தி, குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று அவைக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதோ, சுமார் 20 ஆண்டுகளாகி விட்டன. தங்கராசு இறந்து போய்விட்டார். ஜெயலலிதா இரண்டுமுறை முதலமைச்சராகி, பல ஆயிரம் கோடி சொத்துடனும், ''இசட் பிரிவு'' பாதுகாப்புடனும் பவனி வருகிறார். திருநாவுக்கரசு, ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு எதிரான யோக்கியர்''களின் கட்சியாக நடிக்கும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் அதன் மத்திய அமைச்சர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டார். ஆனால், இந்த இலஞ்சஊழல் வழக்கு நாடாளுமன்ற சாக்கடையில் மூழ்கிப் போய்விட்டது. நாடும், வாக்காளப் பெருமக்களும் மறந்து போய் விட்டார்கள்.


இப்போது, ''தேசிய நலன்களுக்காகவும், எரிசக்தி உத்திரவாதத்துக்காகவும்'' என்று சொல்லி இந்தியாஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடும் மன்மோகன் சோனியா கும்பலைப் போலவே, உலக வங்கிஐ.எம்.எஃப். மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றோடு ஒப்பந்தங்கள் போட்டு நாட்டை மறுகாலனிய அடிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நரசிம்மராவ் சோனியா கும்பல் அரசு, 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜூலை 1993இல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது. நாடாளுமன்றத்தில் 14 வாக்குகள் குறைவாக இருந்த நரசிம்மராவ் அரசு, எதிர்க் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றது. சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் விடுதலை முன்னணியின் நான்கு உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, அப்போது நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்த நான்கு ஜார்க்கண்ட் எம்.பி.க்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீதும் நரசிம்மராவ் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கோ, வாக்களிப்பதற்கோ அதன் உறுப்பினர்கள் மீது எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கவோ, தண்டிக்கவோ முடியாது; அவர்கள் அரசியல் சட்டவிதிகளின்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இலஞ்சம் பெறும் எம்.பி.க்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், ஆனால் இலஞ்சம் தருபவர்களை வேண்டுமானால் தண்டிக்கலாம் என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. அப்போது நான்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கிய ஆதாரங்களை வைத்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தன் அந்தரங்கச் செயலரைக் கடத்திக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மன்மோகன் அரசில் மத்திய நிலக்கரி அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர்தான் சிபுசோரன். இப்படிப்பட்ட அரசியல்கிரிமினல் குற்றங்களில் கைதேர்ந்த சிபுசோரனை மீண்டும் மத்திய அமைச்சராக்குவது என்ற பேரத்தின் பேரில் இப்போது ஆதரவைப் பெற்றது மன்மோகன் சிங் அரசு.


2005ஆம் ஆண்டு, ''தெகல்கா'' என்ற இணைய தள பத்திரிக்கை நடத்திய புலனாய்வு நிழல் நடவடிக்கையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்விகள் எழுப்புவது வாடிக்கைதான் என்பது 11 பேர் கையும் களவுமாகப் பிடிபட்டபோது அம்பலமானது. இந்த விவகாரத்தை விசாரித்து, நிழல் நடவடிக்கைப் புலனாய்வும், அதற்கு அடிப்படையான ஒலிஒளி நாடாவும் உண்மை தான் என்பதை ஏற்று, கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கும் நிழல் நடவடிக்கையில் சிக்கிய 11 எம்.பி.க்களை நாடாளுமன்றமே பதவிநீக்கம் செய்தது. இந்த குற்றச்சாட்டில் சிக்கிப் பதவி இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமைகள் சலுகைகள், தொகுதி வளர்ச்சிக்கான நிதி போன்ற பலவற்றையும் முறைகேடுகள் செய்து பணம் பார்ப்பதும் வாடிக்கைதான்; பயணச்சீட்டுகளை விற்பது, குடியிருப்புகளை வாடகைக்கு விடுவது போன்ற அற்பச் செய்கைகள் முதல் எம்.பி.க்கள் தமது கடவுச் சீட்டு, அடையாள அட்டைகளைக் காட்டி வெளிநாடுகளுக்குப் பெண்களைக் கடத்துவது வரை பல குற்றச்செயல்கள் புரிவது வாடிக்கைதான் என்று பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை தவிரக் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாவதும் கூட உண்டு. நாடாளுமன்றத்திலேயே கூச்சல், குழப்பம், செருப்பு வீச்சு, அடிதடி போன்ற ரௌடித்தனங்கள் செய்வதும், ஆபாசமாக ஏசுவதும், சைகை காட்டுவதும் பலமுறை நடந்திருக்கிறது.

லல்லு, முலயம், மாயாவதி போன்ற சீரழிவு அரசியல்வாதிகளின் நுழைவால்தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டது; நேரு, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் காலத்தில் இப்படி இல்லை என்று பொய்யான வரலாறு பேசுகின்றனர், "தேசிய' அறிவுஜீவிகள். ஆனால் 194762 ஆகிய 15 ஆண்டுகளில் மொத்தம் 542 சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சி தாவியுள்ளனர். 196768இல் மட்டும் உச்சகட்டமாக ''ஆயாராம் காயாராம்'' அரசியல் தேசம் தழுவியதாக இருந்தது. 13வது நாடாளுமன்றத்தில் 40 எம்.பி.க்களும், 14வது நாடாளுமன்றத்தில் 100 எம்.பி.க்களும் ஏழு மத்திய அமைச்சர்களும் கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்ததாக அவர்கள் தமது வேட்பு மனுவிலேயே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.


இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதை என்றபோதும் கடந்த ஜூலை 22, 2008 அன்று மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில மணிகள் முன்னதாக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கொடுக்கப்பட்ட இலஞ்சத்தின் முன்பணம் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் மூன்றுபேர் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக எடுத்து அசைத்துக் காட்டியதும், நாட்டின் ஜனநாயகத் தூண்கள் எல்லாம் பதறிப் போய்விட்டன. நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புக்கும், புனிதத்துக்கும் முதன்முறையாக இழுக்கு நேர்ந்துவிட்டது போலவும், இவ்வளவு நாளும் கட்டிக் காக்கப்பட்டு வந்த அதன் அரசியல் தரம் தாழ்ந்து போய் விட்டதாகவும், சரி செய்ய முடியாத இழுக்கு நேர்ந்து விட்டதாகவும் தேசிய அறிவுஜீவிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பதவிக்காகவும் இலஞ்சப் பணத்துக்காகவும் அணிமாறி வாக்களித்து நாடாளுமன்றத்தை தரம் தாழ்த்திவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள்.


நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல, உச்சநீதி மன்றத்துக்கும் கூட மாண்பும் புனிதமும் இவர்களால் செயற்கையாக இட்டுக் கட்டப்பட்டதுதான்; அவற்றுக்குத் தரத் தாழ்வும் இழுக்கும் எப்போதோ நேர்ந்து விட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. ஆனால், ஒவ்வொருமுறை இப்படி சீரழிவும் இழுக்கும் நிகழும் போதெல்லாம் அதிர்ச்சியுற்றுப் புதிதாக இவையெல்லாம் நிகழ்வதைப் போல நாடகமாடுகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிவில்லாதவர்கள், அதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்; அந்த ஒப்பந்தம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களே நடக்கவில்லை; அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்த்துச் சாடிக் கொண்டும், கூச்சல் போட்டுக் கொண்டுமிருந்தனர் என்று செய்தி ஊடக மேதாவிகள் அம்பலப்படுத்துகிறார்கள்.


ஜூலை 21,22 தேதிகளில் அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்குவாதங்களும், வாக்கெடுப்பும் என்பது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலாக எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அப்படி நடக்கவும் இல்லை. நடந்திருக்கவும் முடியாது. நடந்தது மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் வாதங்களும்தான். இரண்டு உண்மைகள் இதற்குக் காரணங்களாக உள்ளன. முதலாக அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, அந்நிய நாடுகளுடனான வேறு எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதிக்கவும், வாக்கெடுத்து நாடாளுமன்ற ஒப்புதல் தந்த பிறகுதான் நிறைவேற வேண்டும் என்று கூறுவதற்கும் இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது.


அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தமாகட்டும், உலக வங்கி, ஐ.எம். எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்திய நாடாளுமன்றத்துக்கு மேலாக, அதன் வாக்கெடுப்புக்கு விவாதத்துக்கு வராமலேயே போடப்பட்டன. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிப்பதற்கு சில உறுப்பினர்கள் முயன்றபோது பழம் பெரும் போலி மார்க்சிஸ்டும் சபாநாயகருமான சோமநாத் சட்டர்ஜி இதைப் பகிரங்கமாகவே கூறி அனுமதி மறுத்துவிட்டார்.


இரண்டாவதாக, ஒருவேளை அணுசக்தி ஒப்பந்தம் மீதான வாக்குவாதமும் வாக்கெடுப்பும் நடந்திருந்தால், அதற்கு போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் அடிப்படையில் எதிரானவர்கள் அல்ல என்ற குட்டு வெளிப்பட்டு விடும். கடந்த ஆண்டே ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியபோது, மன்மோகன் சிங் ஜார்ஜ் புஷ் போட்டுக் கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவின் "ஹைட்' சட்டம் பாதிக்குமோ என்ற தமது ஐயப்பாட்டை நீக்கும்படிதான் இடதுசாரிகள் கோரினர். மற்றப்படி எந்தவொரு ஓட்டுக் கட்சியும் அணுசக்தி ஒப்பந்தத்தை அடிப்படையில் எதிர்ப்பதாகக் கூறவில்லை.


அந்நிய நாடுகளுடனான துரோகிகளின் ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கு எப்போதும் தயாராக உள்ள ஓட்டுக்கட்சிகள் — இவை பற்றிய உண்மையை மக்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக நடந்ததுதான் மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நாடாளுமன்றக் கூத்து!

No comments: