இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம்.
பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை.
காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர்.
அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.மத்திய கிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன.துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.
அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது.இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது.
இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது.அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம்.
ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள். ஆனால், அது தான் உண்மை. அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது.
ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது.ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை. ஏன் இந்த வீழ்ச்சி வந்தது என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தோமானால், விடிந்து போய்விடும்.
அதை தனியாக ஒரு பதிவாகப் போடலாம்.எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கடன் பிரச்னையில் பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் சிக்கிக் கொண்டுள்ளன. 600 பில்லியன் டாலர் கடன் வீடுகளின் மேல் வராக் கடனாகப் போய் அடைந்து விட்டது. இது வரை 150 பில்லியன் டாலர்தான் நட்டமாக காட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள 450 பில்லியன் டாலர் நட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும். மொத்தமாக காட்டினால், பேங்க் திவாலாகும் என்று சொல்வார்களே அது நடக்கும்.
இங்கு ஒரு நாட்டின் நாணயமே திவாலாகிப் போகும்.ஆகையால், வங்கிகள் சிறிது சிறிதாக நட்டம் காட்டுவார்கள். ஆனால், வீட்டிற்காக கடனாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் வேறு யாரிடமோ, எங்காவது இருந்து தான் ஆக வேண்டும் இல்லையா. அந்தப் பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டிருந்தால், கரைந்துதானே போகும். எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்வது என்று ஒரு பெரிய கூட்டமே வால்ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்தார்கள்.1960களிலேயே சிலபேர் கம்மோடிட்டீஸ் எனப்படும் மரபு சாரா நிதித்துறை முதலீடுகளில் (Non-traditional investment instruments) முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தனர்.
அதன் வளர்ச்சி, தங்கத்தின் மூலம் மட்டுமே பிரமிக்கத் தக்கதாக இருந்தது. தங்கம் மட்டுமல்லாது உணவுப் பொருள்கள், உற்பத்தி மூலப் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களிலும் அவர்கள் ஃப்யூச்சர்ஸ் (FUTURES) என்ற வகை முதலீட்டைச் செய்திருந்தனர்.எக்காலத்திலும், அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. டாலர் போகும் போக்கைப் பற்றி அறிந்த, (சாதாரண மாதச்சம்பளம் வாங்குபவனுக்கெல்லாம் புரியாத விஷயமது), நெளிவு சுளிவு தெரிந்த அந்த நிபுணர்கள், நெருப்பில் மாட்டிய புழுபோல் தவித்தனர். எப்படியாவது, தமது நிறுவனத்தின் பணத்தை சரியான அளவில் முதலீடு செய்து போனஸ் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய அடிப்படை நோக்கம்.
வீழ்ந்து வரும் டாலரால் ஏற்படப் போகும் நஷ்டத்தைச் சரிகட்ட முயற்சிக்கும் பரபரப்பு அது.ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளை வருங்காலத்தில், அதாவது இன்ன தேதியில், இன்ன அளவிற்கு, இந்த விலை என்று ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஐந்து வருடத்திற்கு முன்போ கணிப்பது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பொருளின் விலை, மேற்படி விலையை விட கூடுதலாக மார்க்கெட்டில் விற்குமேயானால், அந்த பத்திரத்தை விற்றவர், சொன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும். வாங்குபவர் சந்தையில் கிடைக்கும் கூடுதல் விலையின் வித்தியாசத்தில் கொள்ளை லாபம் பார்ப்பார்.
அதாவது, 2008 ஏப்ரல் மாதம் 30ம் தேதி, அரிசி ஒரு குவிண்டால், ஆயிரம் ருபாய் விற்கும் என்று, 10,000 டன்னுக்கு ஆறு மாதம் முன்பே அதாவது 2007 நவம்பர் 30ம் தேதியே, 10 ஆயிரம் டன்னுக்கான பணத்தை வங்கியில் கட்டி அல்லது அதன் 10 சதத்தை கட்டி (மீதத்தை வங்கி செலுத்தும்) அதை வாங்கிக் கொள்வது. நவம்பர் மாதத்தில் அரிசியின் விலை 700 ருபாயாக இருக்கலாம். அதனால், விற்றவர் நினைப்பார், நாம் 300 ருபாய் லாபத்திற்கு இதை விற்றிருக்கிறோம் என்று. ஆனால், ஏப்ரல் மாதத்தில் (எப்படியோ) அதன் விலை 1500 ருபாயாக ஆகிப் போயிருக்கும்.வாங்கியவருக்கு 500 ருபாய் ஒரு குவிண்டாலுக்கு லாபம். விற்றவருக்கு லாபத்தில் தான் நட்டம். அப்படியென்றால் எத்தனை கோடி லாபம்?
இதில் லாபம் தரக்கூடிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பொருளுக்கு விலை ஏறியிருந்தால் தான். இல்லையென்றால் நட்டப் பட வேண்டிவரும். லாபம் வர வேண்டுமானால் விலை ஏற வேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு பொருளின் விலை ஏறும். இப்போது இந்த விளையாட்டில் தட்டுப்பாடு எப்படி முக்கியக் காரணியாகிறது என்று புரிந்திருக்குமே?ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு தனி நபர், இந்த அளவிற்கு போனஸ் பெற்றால், அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்திருக்கும். சம்பாதித்த பணம், வேறு எங்கு செல்லும்? மீண்டும், அதே விளையாட்டிற்குத் தான்.பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதிசெய்ய் அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். மலேசியாவில் ஒரு மாநிலத்தில் பல பில்லியன் டாலர் ஒதுக்கி, அரிசி விளைச்சலை அதிகரிக்கப் போகிறார்கள். உணவுப் பொருள் இறக்குமதிக்கெல்லாம் வெளிநாடுகளையெல்லாம் நம்பி இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.
மேற்படி நிதித்துறை விளையாட்டு ஒரு காரணம் தான் என்றாலும், உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தரும் பணத்தால், விவசாயம் செய்வது என்பது அருகி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொருந்தும். 7 சதவீத விளைநிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த இரு நாடுகளும் பெரும்பான்மையான உணவுத் தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றிருந்தன. WTO என்பது ஒரு வகையில் வரப்பிரசாதம்தான். ஆனால், உள்நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, உணவுப் பொருட்களை எந்த நாடாவது ஏற்றுமதி செய்ய முடியுமா?
விவசாயம் பார்க்க மக்களுக்கு மனநிலை இல்லை. இயந்திரமயமாதல்தான் ஒரே வழி. ஆனால், உழ நிலம் வேண்டுமே? விவசாய நிலம் எல்லாம் வீடாகிக் கொண்டிருந்தால், என்ன செய்வது?பயோப்யூவல் எனப்படும் உயிர்ம எரிபொருள், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த எரிபொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியாததால் இந்தத் துறை பின்தங்கியிருக்கிறது என்று முதலீட்டாளர்கள் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது எண்ணெய்ப் பீப்பாய் விற்கும் விலையைக் கண்டால், அதைவிட குறைந்த விலையில் உற்பத்தி செய்து அதிக லாபம் பார்க்க முடியும் என்று, உயிர்ம எரிபொருள் கம்பெனிகளின் பின்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள்.
சோளத்திலிருந்து, சோயாவிலிருந்து, ஏன் பாமாயில் கூட உயிர்ம எரிபொருள் தயாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால், மனிதன் சாப்பிடத் தேவையான உணவு வகைகள் விலை உயர்ந்து போவதை யாராலும் தடுக்க இயலவில்லை.லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும்.பங்குச் சந்தை நிதித்துறையில் வேலை பார்ப்பவர்கள், லாபத்தை மட்டுமே மனதிற்கொண்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இல்லாமல் ஆடுகின்ற இந்த ஆட்டம், அப்பாவி ஏழைகளை உலகெங்கும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறது.
உணவுப் பஞ்சத்தையும் உலகமயமாக்கியிருக்கின்ற இந்தக் கொடுமை எப்பொழுது நிற்கும்? பசிக் கொடுமை தவிர்க்க முடியாத தடுக்க இயலாத புரட்சிகளைக் கொண்டு வந்து, ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்டிருப்பதை வரலாற்றின் ஏடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஒரு முறையல்ல, இரு முறையல்ல, நூற்றாண்டுகள் தோறும் இது நடந்திருக்கிறது.
நன்றி: WWW.KEETRU.COM
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
1 hour ago
No comments:
Post a Comment