உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். இதற்கு முக்கிய காரணமாக, விவசாய உற்பத்தி(குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி) திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதும், பயோ டீசலுக்கு என்று உணவு தானியங்கள் திருப்பி விடப்படுவதும், இருக்கின்ற கொஞ்ச விவசாய விளை பொருட்களும் பங்கு சந்தை சூதாட்டத்திற்கு என்று முன்பேர வர்த்தகம்(Futures Trading) மற்றும் காமாடிட்டி(Commodity) வர்த்தகம் என்ற பெயரில் திறந்துவிடப்பட்டுள்ளது, சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எண்ணைய் விலை உள்ளிட்டவைதான் காரணமாக உள்ளன.
எண்ணைய் விலை உயர்விற்க்கும் அமெரிக்காவில் வேர் கொண்டுள்ள உலக நிதி மூலதன சிக்கலுக்கும் தொடர்புள்ளது என்று சொல்கிறார் ஒரு பதிவர். மேற்காசிய நாடுகளில் உள்ள எண்ணைய் வளங்கள் மீதான தனது ஆதிக்கத்திற்க்காக அங்கு தொடர்ந்து யுத்தங்களை உருவாக்கி அரசியல் செய்யும் அமெரிக்காதான் எண்ணைய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.குறிப்பாக எண்ணைய் விலை என்பது ஒரு பேரல் என்பது 90டாலரோ என்னவோ இருந்து தற்போது 135டாலருக்கு உயர்ந்துள்ளது. இது மேலும் கடுமையாக உயரும் 1000 டாலரைக் கூட கடக்கும் என்று சொல்லி அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
இப்படி தனது லாப வெறிக்காக உலக மக்களின் தலையில் அனைத்து அபாயங்களையும் ஏற்றியுள்ள அமெரிக்கா உலக மக்கள் அனைவரின் எதிரியாக நிற்கிறது. அமெரிக்க மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசின் தலைமையிலான சர்வதேச ஏகாதிபத்திய முதலாளிகள் அதன் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் உள்ள தரகு-நிலபிரபுத்துவ அதிகார வர்க்கம் மாமாக்களாக இருந்து ஓட்டச் சுரண்டிக் கொள்ளையடிக்க உதவுகின்றனர். இந்தியாவில் அம்பானி, பாஜக, டாடா, காங்கிரசு, CPM, CPI உள்ளிட்ட கட்சிகள் இந்த வேலையை தலைமேல் எடுத்துக் கொண்டு செய்து வருகின்றன.
இதுதான் தற்போதைய இந்த உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்த சுருக்கமான விவரனையாக உள்ளது.இதன் விளைவாக அமெரிக்காவில் கூட ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு எ-காவிற்கு அமெரிக்காவில் அரிசியின் விலை ஒரே மாதத்தில் 10 டாலர் இருந்தது 25 டாலர் என்று உயர்ந்துள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாடுகள் மிக மிக மோசமான விலைவாசி உயர்வை சந்தித்து வருகின்றன. உலகின் பல பகுதிகளும் ரேசன் விநியோகத்தை தொடங்கியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் மண் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். இந்தோனேசியா அரிசிக்கு பதிலான எண்ணைய் தருவதாக பேரம் பேசுகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றில் தானிய/நெல் கிடங்குகளுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியான்மரில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போரட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உணவு தானிய ஏற்றுமதியை தடை செய்துள்ளன.இந்த பிரச்சினைகள் குறித்து தமிழ்மணத்தில் கூட பல பதிவர்கள் ஆக்கப்பூர்வமாக பல்வேறு கட்டுரைகள் எழுதியிருந்தனர். வாழ்க்கை என்பதே கும்மிதான் என்று வசதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற (ரொம்ப) நல்லவர்களை இங்கு குறிப்பிடவில்லை.
இழவு வீட்டிலும் கும்மியடிக்கும் அளவு நீச்சலனமான மனநிலை கொண்ட மிக உயர்ந்த ஆன்மாக்கள் அவர்கள். மாறாக அதிகளவு வாசகர்களை இழுக்காவிட்டாலும் இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு குறித்து ஒவ்வொரு குறிப்பிட்ட அம்சங்களில் அலசி ஆராய்ந்து, சிந்தனையை செலவழித்து எழுதும் அந்த முகம் தெரியாத பதிவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். அவர்களை தனித்தனியே பாராட்ட பேரவாவாக இருந்தாலும் அதற்க்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த கட்டுரை ஊடாக சமூக அக்கறை மிளிர எழுதும் அந்த பதிவர்களை பாராட்டுகிறேன்.நிற்க, உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வில் முக்கிய காரணியாக இருப்பனவற்றில் ஒன்றான பங்கு சந்தை சூதாட்டத்தில் பதுக்கி வைத்து கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் கார்ப்போரேட் வேளாண் கழகங்கள் குறித்துதான் சுருக்கமாக இப்போது பார்க்க இருக்கிறோம்.
எரிகிற வீட்டில் சுருட்டிய வரை லாபம் என்று கொள்ளையடிக்கும் கல் நெஞ்சு படைத்த மிருகங்களாக பன்னாட்டு நிதி மூலதன முதலைகளும், கம்பேனிகளும் செயல்பட்டுள்ளதற்க்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும். சுனாமியால் மக்கள் லட்சக்கணக்கில் செத்து மடிந்த பொழுது அந்த அழிவை மறுகட்டுமானம் செய்யும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொண்டு கட்டுமான தொழில்கழகங்களின் பங்குகளில் சர்வதேச நிதி குவிந்து சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளின் பங்கு சந்தை குறீயீடு சுனாமி சாவைவிட படு வேகமாக உயர்ந்த அநாகரிகம் ஒன்று போதும் இவர்களைப் பற்றி புரிந்து கொள்ள.
தற்போது ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தானியங்களை பதுக்கியும், ஊகமாக தானியங்கள் இருப்பதாக காட்டி அதன் மீது பேரம் பேசி விலைஏற்றும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் தமது லாபத்தை 80% வரை உயர்த்தியுள்ளன இந்த சர்வதேச கொள்ளைக்கார கும்பல். உலக மக்களின் இழவில் தனது பாகாசுர வயிற்றை ரொப்பிக் கொள்கின்றனர் இந்த கிரிமினல் கும்பல்கள்.தானிய கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட தானிய சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சப்ளை செயின் எனப்பட்டும் அதன் முழுமையான விநியோக சங்கிலியிலும் ஈடுபட்டுள்ள கார்க்கில் எனும் அமெரிக்க கம்பேனி 2.34பில்லியன் டாலர் லாபம சம்பாதித்துள்ளது 2007ல் இது போன வருடத்தை விட 54% லாபம். இந்த கம்பேனி தற்போதைய உலகத்தின் இழவில் சூதாடி எவ்வளவு சம்பாதித்துள்ளது என்பதை பாருங்கள்.
2008 முதல் காலாண்டு நிதி அறிக்கையில் காமாடிட்டி வர்த்தகத்தின் மூலம் மட்டும் அதனது வருவாய் 86% உயர்ந்துள்ளது. இதே போன்ற வேளாண் கழகமான அமெரிக்க கார்ப்போரேட் கம்பேனியான ஆர்ச்சர் டேனிய்ல் மிட்லாண்ட்ஸ் என்ற கம்பேனியும் பல மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த நோபல் குழுமம் வேளாண் பொருட்களின் மீது காமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு 95% லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது.நம்மக்கிட்ட இருந்து அடிமாட்டு விலைக்கு நம்மோட ஒரு பொருளை வாங்கிட்டு பிறகு அதே பொருளை நமக்கே பல மடங்கு விலை உயர்த்தி விற்றால் அந்த பொருளை வாங்குபவனை அடி முட்டாள் என்று சொல்வது தகும் எனில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்து வருவது அதைத்தான். என்ன ஒரேயொரு வித்தியாசம் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி கொடுத்துள்ள ஓட்டுக் கட்சி தரகர்கள்தான் நம்மை அடிமுட்டாள்களாக மாற்றியுள்ளனர்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு பாருங்கள் 1996-ல் அமெரிக்க கோதுமை உற்பத்தி பூச்சி தாக்குதலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டது. வேளாண் வியாபாரத்தில் முழு விநியோக சங்கிலியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்க்கில் நிறுவனம் ஒரு டன் 60$ முதல் 100$ வரை கொடுத்து இந்திய கோதுமையை வாங்கி அதனை சர்வதேச சந்தையில் 230$ முதல் 240$ வரை லாபம் வைத்து கொள்ளையடித்தது. இந்த பன்னாட்டு பன்றிகளுடன் வியாபரம் செய்ததால் மட்டும் நூறு மில்லியன் டாலர் ஏற்றுமதி லாபத்தை இந்தியா இழந்தது. இந்த ஏற்றுமதி இந்தியாவில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது இதன் விளைவாக சர்வதேச சந்தையில் விலை கூட இருந்த தான் தயாரித்த அதே கோதுமைய அதிக விலை கொடுத்து வாங்கியது இந்தியா.
அதாவது அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2மில்லியன் டன் கோதுமையை திரும்ப சர்வதேச சந்தை விலை கொடுத்து வாங்கியது இந்தியா. ஒன்னுமே செய்யாமல் பல மில்லியன் கோடிகளில் நக்கிக் கொண்டு சென்றன பன்னாட்டு கொள்ளைக்காரர்கள். இது பாஜக ஆட்சியின் போது நிகழ்ந்தது.இதே விசயம் வேறு வகையில் நடந்ததற்க்கு இன்னொரு எடுத்துக்காட்டு பாருங்கள். போன வருடம் கோதுமை, அரிசி கொள்முதலை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டது மத்திய அரசு. மேலும் விவசாயிகள் கேட்ட கொள்முதல் விலையும் தர மறுத்தது. இன்னிலையில் விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விளை பொருட்களை விற்றுவிட்டனர். அதற்க்கு பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நமது விவசாயிகள் உருவாக்கியதை விட தரம் குறைந்த கோதுமை, அரிசியை விவசாயிகளுக்கு கொடுத்த கொள்முதல் விலையை விட அதிகம் கொடுத்து இறக்குமதி செய்தது இந்த அரசு.
1996-ல் போடப்பட்ட இந்தியா அமெரிக்க வேளாண் துறை ஒப்பந்தத்தின் (U.S.-India Agricultural Agreement) படிதான் இந்திய விவசாயத் துறை பன்னாட்டு கார்ப்போரேட் கம்பேனிகளின் சூறையாடலுக்கு திறந்துவிடப்பட்டது. 1990க்கு முன்பு உணவு உற்பத்தியில் தான் அடைந்திருந்த தன்னிறைவை உலகமயத்திற்க்கு பிறகு அதுவும் குறிப்பாக 1996 ஒப்பந்ததிற்க்கு பிறகு மொத்தமாக இழந்துவிட்டு நிற்கிறது இந்தியா. இந்த ஒப்பந்தத்தின் ஊடாகத்தான் கார்க்கில், AWB, கோனக்ரோ, ITC, லீவர் உள்ளிட்ட கார்ப்போரேட் கொள்ளையர்கள் இந்திய விவசாயத்தை சூறையாடியுள்ளனர்.
இப்படி பெரும்பான்மை மக்களின் அன்றாட வயிற்றுப்பாடு ஒரு சில ஊக வணிக வெறியர்களின் லாப வெறியின் நிழலில்/கருணைப் பார்வைக்காக விட்டு வைக்கப்பட்டுள்ளது . மனித ரத்த ருசி கண்ட காட்டு விலங்காக கொழுத்த லாபம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள் ரத்த வெறி பிடித்து உலகை உணவு பஞ்சத்தை நோக்கி நகர்த்தி செல்கின்றன.
உலக மக்களின் எதிரியான அமெரிக்கா அரசயும், லாப வெறி பிடித்து உலகை வெட்டுகிளியாக சூறையாடி வரும் பன்னாட்டு-தரகு முதலாளிகளையும், அவர்களை போற்றி பாதுகாத்து நாட்டை கூட்டிக் கொடுக்கும் ஓட்டு கட்சிகளையும், இந்த போலி ஜனநாயக சுரண்டல் அமைப்பையும் தூக்கியெறியாமல் விடிவு இல்லை என்பதைத்தான் நாளுரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடக்கும் அனைத்து சம்பவங்களும் நிரூபிக்கின்றன.
Thanks: அசுரன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment