நன்றி: அருண்பாரதி
அப்படி என்னதாங்க பிரச்சினை? அரசியல்வாதிங்க யாரு? மக்கள் யாரு? இந்த 2 பேரும் என்ன பன்றாங்க? - கொஞ்சம் சீரியஸா சி(ரி)ந்திக்கலாம்!'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது.
ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு ‘மார்க்சிஸ்ட்’ மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர். கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன.
இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு மட்டுமின்றி இந்திய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன.
இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.
மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான ‘ஏழைகள்’ ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக்கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது. ’மிகச்சிறந்த பொருளாதார நிபுணராம்’ மன்மோகன் சிங், ‘புள்ளிவிவரப் புலி’யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), ‘சிறந்த நிர்வாகி’யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட ‘அமெரிக்க’ அறிவு ஜீவிகள்.
இப்பொழுது அதே ஊடகங்களுக்குப் பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட ‘மாபெரும் ஏழைகளுக்கு’ சலுகைகள் அளித்தார்கள்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் ‘மக்கள்’ இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை மக்கள் தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிக விலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற ‘ஏழை’ நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள். 'நாங்கள் தான் ‘புரட்சிகரப் போராளிகள்’, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்’ என மார்க்சிஸ்ட் நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், ‘தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான’ ரத்தன் டாட்டாவிற்கு சோஷலிச சமுதாயம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு மிகச்சிறிய ஏழை? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை.
கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த பணக்கார ஏழைகள் வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த பணக்கார கடங்கார ஏழைகளை சுதந்திரமாக திரியவிட்டதைப் போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் ‘விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்’ என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.இன்னும் இருக்கு சாமியோவ்... ரொம்ப வருத்தப்பட்டா, ஒடம்புக்கு நல்லது இல்லியாம்!
நாளைக்கு கண்டிப்பா வாங்க...
2 ம் பாகத்திற்கு
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment