எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள். எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.கடந்த 18 வருடங்களாக, இந்திய முதலாளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் உலக முதலாளிகளின் டேப் ரிக்கார்டர்களாக இங்கே ஒப்பித்துக் கொண்டிருக்கும் வாசகங்கள் இவை. சோஷலிசத்தின் பெயரால் பொருளாதாரத்தை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்து, இந்தியாவைக் குட்டிச் சுவராக்கியவர் நேரு என்று அவரை ஓயாமல் இன்னமும் வசை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட தத்துவங்களின் ஊற்றுக்கண்ணாகிய அமெரிக்காவில் இன்று புஷ் அரசாங்கம் தனியாரிடம் மார்க்கெட்டை விட்டது தப்பு; தன் மூக்கை நுழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கிறது. காரணம், லெஹ்மன் பிரதர்ஸ் நிதி நிறுவனம் திவாலானதுதான்.
அமெரிக்க அரசாங்கம் தன் மக்கள் வரிப் பணமான சுமார் 900 பில்லியன் டாலர்களைக் (சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களை) கொடுத்து இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தேசத்தையும் உலகத்தையும் மீட்க முயற்சித்திருக்கிறது. இராக், ஆப்கன் யுத்த செலவு மட்டும் 300 பில்லியன் டாலர் (12 ஆயிரம் கோடி ரூபாய்). வருடந்தோறும் மொத்தமாக அமெரிக்காவில் மக்களிடம் வரி வசூல் தொகை: 3600 பில்லியன் டாலர் (144 ஆயிரம் கோடி ரூபாய்கள்)
லெஹ்மன் பிரதர்ஸ் மட்டுமல்ல, இதற்கு முன்பு ஃபேனி மே, ஃபிரெட்டி மேக் கம்பெனிகள். அடுத்து அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி). எல்லாமே நிதி நிறுவனங்கள். பழைய தமிழில் லேவாதேவிகள். வட்டிக் கடைக்காரர்கள்.
லெஹ்மன் பிரதர்ஸ் அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனம். இதற்குத் திரும்பி வராத கடன் மட்டும் 60 பில்லியன் டாலர். (240 கோடி ரூபாய்.) மெரில் லிஞ்ச் கம்பெனியின் கடன் 40 பில்லியன் (160 கோடி ரூபாய்).
இவர்களெல்லாம் முழுகும்போது கூடவே இவற்றில் முதலீடு செய்தவர்கள், இவர்களுடன் வர்த்தகம் செய்தவர்கள் எல்லாரும் சேர்ந்து தர்ம அடி வாங்குகிறார்கள். இந்தியாவில் சத்யம், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் முதலிய ஐ.டி கம்பெனிகளும், ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குகிறார்கள்.
ஏன் அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாகின்றன என்பதை விவரித்தால் பொருளாதார வகுப்பு நடத்துவது போலாகிவிடும்; ஏனென்றால் ஒரு நிறுவனம் கடன் கொடுக்கும்; அப்படி கடன் கொடுத்ததையே தன் முதலீடாகவோ சொத்தாகவோ காட்டி இன்னொரு கம்பெனியிடம் கடன் வாங்கும். இந்தக் கடன்களையே தன் பங்குகளாகக் காட்டி அவற்றை விற்க முற்படும். இப்படி இடியாப்ப சிக்கலாக நிறைய வழிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
எளிமைப்படுத்திச் சுருக்கமாக சொல்வதானால், கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்ததால் திவாலானார்கள். இவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக் கேட்கும்போது திவால் நோட்டீஸ் கொடுத்தார்கள்.
இப்படி அடுத்தடுத்து நிதி நிறுவனங்கள் திவாலாகும்போது அதை அரசு கண்டுகொள்ளாமல் விட்டால், தொடர் சங்கிலியாக, பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கடுமையாகிவிடும். எனவே அரசு தலையிட்டுக் காப்பாற்றியாகவேண்டும் என்று புஷ் அரசு அவசர அவசரமாக பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.
இந்தியாவில் பண வீக்கம் ஏற்பட்டால், விலைவாசி உயர்ந்தால், உடனே மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் வழக்கமாக சொல்லும் சாக்கு _ இது உலகளாவிய பிரச்சினை. அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம். உலகப் பொருளாதாரத்துடன் இந்தியப் பொருளாதாரம் இணைக்கப்பட்டுவிட்டதால் நாம் படுவேகமாக வளர்ந்து வருகிறோம். அதே போல பாதிப்புகளும் தவிர்க்க முடியாதவை என்பார்கள்.
ஆனால், இப்போது லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சி நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை என்றும் இதே பொருளாதார மேதைகள் சொல்கிறார்கள். ஏன் பாதிக்கவில்லை? நம்முடைய ரிசர்வ் வங்கியின் மூலம் நாம் பின்பற்றி வரும் கட்டுப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன என்பதால், நமது வங்கிகளுக்கு, கம்பெனிகளுக்கு பெரும் பாதிப்பு இல்லையாம். அரசின் ரிசர்வ் வங்கி மூலம் பொருளாதாரத்தையும் நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது நேரு காலத்துக் கோட்பாடுதான் !
இதற்கு முன்பு இங்கேயும் நிதி நிறுவனங்களும் சீட்டு கம்பெனிகளும் ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படாமல் இயங்கியபோது எப்படி திவாலாகி பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டனவோ, அதே போல மிகப்பெரிய அளவில் இப்போது அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
அமெரிக்க திவாலுக்கு அடிப்படை என்ன - கடன் வாங்கியவர்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிக் கட்டவில்லை என்பதுதான்.யார் இவர்கள்? ஏன் கடனைத் திருப்பிக் கட்டவில்லை? அல்லது கட்ட முடியவில்லை?
அமெரிக்காதான் பூலோக சொர்க்கமாயிற்றே. அங்கே எல்லாருமே பணக்காரர்கள்தானே. கடனே வாங்கத் தேவையில்லாதவர்கள் என்றுதானே இங்கே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? சரி. அப்படியே வாங்கினாலும் திரும்பச் செலுத்தும் சக்தி இல்லாதவர்கள் கூட அங்கே உண்டா என்ன? அல்லது சக்தி இருந்தும் வேண்டுமென்றே திருப்பித் தராமல் மோசடி செய்கிறார்களா? என்னதான் நடக்கிறது பூலோக சொர்க்கத்தில்?இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி திடீரென்று வந்தது அல்ல. ஐந்தாறு வருடங்களாகவே மெல்ல மெல்ல முற்றி வருகிறது. அடிப்படைக் காரணம் - வீடு வாங்கக் கடன் கொடுக்கும் திட்டம்தான். ஹவுசிங் லோன்கள் அள்ளி அள்ளிக் கொடுக்கப்பட்டன.
கடன் தவணையை ஒழுங்காகக் கட்டாதவர்கள், கட்டமுடியாதவர்கள் எல்லாருக்கும் கொடுத்ததால், வட்டிக்கடைக்காரர்கள் மட்டும் திவாலாகவில்லை. கடனில் வீட்டை வாங்கி அதில் குடியிருந்தவர்கள், வாடகைக்கு இருந்தவர்கள் எல்லாரும் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.
இன்றைக்கு அமெரிக்காவிலேயே அமெரிக்கர்கள் பலர் அகதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும், ஊருக்கு வெளியில் கூடாரக் குடியிருப்புகள் முளைக்கின்றன. சென்னையில் கூவம் ஓரமாகவும், பெரிய சாலைகளில் நடைபாதைகளில் பெரிய மதில் சுவர்களின் ஓரமாகவும் குடிசை போட்டு வசிப்பவர்களைப் போல, அமெரிக்காவிலும் ஊருக்கு வெளியே திறந்த வெளிகளில் டென்ட் போட்டு வசிப்போர் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சொந்த ஊரிலேயே அகதிகளானவர்கள் இவர்கள்.
இரு அறை கொண்ட ஒரு வீட்டுக்கான வாடகை சுமார் 1120 டாலர். வருமானம் 45 ஆயிரம் டாலராவது இருந்தால்தான் இந்த அளவுக்கு வாடகை தரமுடியும். ஆனால், பல நகரங்களில் ஒருவரின் சராசரி வருமானம் 30, 35 ஆயிரம் டாலர்தான்.
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. அப்படி ஜகத்தினை அழிக்கும்போது, அதில் இருக்கும் அமெரிக்காவை மட்டும் பாவம் அழிக்கக்கூடாது என்றார் ஒரு நண்பர். ஏன் என்றேன். அங்கேதான் உணவில்லாத தனி ஒருவன் கூடக் கிடையாதே என்றார் நண்பர்.
குறைந்தது மூன்று கோடி 50 லட்சம் பேர் தினசரி உணவு சரியாகக் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள் என்று அவருக்குச் சொன்னேன். இவர்களுக்கு உணவு தருவதற்காக பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் கணக்கின்படி வருடத்துக்கு 2 கோடி பவுண்ட் உணவுப் பொருட்களை நன்கொடையாகத் திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் பணக்கார அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 96 கோடி பவுண்ட் உணவுப்பொருட்களை வீணடிக்கிறார்கள் என்றும் தொண்டு அமைப்புகள் வருத்தப்படுகின்றன.
வாரத்துக்கு 40 மணி நேர வேலை. மணிக்கு 10 டாலர் சம்பளம் என்ற குறைந்தபட்ச ஊதியமும் வேலையும் கிடைக்காத அமெரிக்கர்கள் பல கோடி பேர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன.
அதனால்தான் இந்தியாவுக்கு ஒரு அணு உலையை விற்றால் 3 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்க அரசு கணக்கிடுகிறது. உலகத்தில் எங்கேயாவது யுத்தம், சண்டை நடந்துகொண்டே இருந்தால்தான், அமெரிக்கப் பொருளாதாரம் பிழைக்க முடியும். இரு தரப்புக்கும் ஆயுதம் விற்கலாம்.
சிங்களவர்களும் ஈழத்தமிழர்களும் சமரசத்துக்கு வந்துவிட்டால் இழப்பு அமெரிக்காவுக்குத்தான். இரு தரப்பினரும் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா மூன்று நாடுகளும் நேசமாகிவிட்டால், பேரிழப்பு அமெரிக்காவுக்குத்தான்.
உலகத்தில் வருடந்தோறும் விற்கப்படும் துப்பாக்கிகள், கிரெனேடுகள், ராக்கெட் ஏவுகணைகள் முதலியவற்றால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் சாகிறார்கள். விற்பனைத்தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் !
அமெரிக்க நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவே திவாலானால் கூட உலகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை. உலகம் திவாலாக திவாலாக அமெரிக்காவுக்குத்தான் லாபம். அதனால்தான் உலகெங்கும் அரசியலிலும் மீடியாவிலும் தன் ஏஜெண்ட்டுகளை நட்டு வைத்திருக்கிறது.
அந்த ஏஜெண்ட்டுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் மந்திரங்கள்தான்: எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டுவிடுங்கள்.
எதையும் மார்க்கெட் தீர்மானிக்கட்டும். எதிலும் அரசு மூக்கை நுழைக்க வேண்டாம்.
அந்த வரிசையில் புஷ் உருவாக்கியிருக்கும் புதிய மந்திரம்: ஒவ்வொரு தொழிலிலும் லாபம் வரும்போது அது தனியாருக்கு; நஷ்டம் வரும்போது அது அரசுக்கு..
THANKS: GNANI - KUMUDAM
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
1 comment:
pls vist my blog.
Post a Comment