மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் படுகைகளில் பொழியும் மழைநீரில் பெருமளவு யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் மேற்கு நோக்கி மலைகளின் வழியே பாய்ந்து சென்று அரபிக் கடலில் கலந்து வீணாகி வந்தது. அந்த மழை நீரைப் பயன்படுத்த அப்பகுதிகளில் நிலங்கள் எதுவும் கிடையாது.அதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமான நிலங்கள் போதிய நீர் ஆதாரம் இன்றி தரிசு நிலங்களாக வீணாகிக் கிடந்தன.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கடந்து வீணாகும் மழைநீரை ஒரு அணை மூலம் தடுத்து கிழக்கு நோக்கித் திருப்புவதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற முடியும் என்ற நிலை நிலவியது.
அதற்காகத்தான் தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாயத்தை மேம்படுத்த அப்போது நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசால் 1886-ல் திருவிதாங்கூர் மன்னருடன் 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 1895-ல் கட்டப்பட்டது முல்லை முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 176 அடி. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர் நிரம்பும் போது முழ்கும் கேரள பகுதிகளுக்கு குத்தகைத் தொகையாக ஆண்டு தோறும் ரூ.42,963.13 திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சென்னை அரசு கொடுப்பது என்று அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
இதனால் தமிழகத்தின் கம்பம், தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, மத்தி, மேற்கு, மேலூர், நத்தம், சோழவந்தான், திருமங்கலம், சமயநல்லூர், திருப்பரங்குன்றம், திருப்பத்தூர், சிவகங்கை, இராமநாதபுரம், நிலக்கோட்டை, மானாமதுரை, திண்டுக்கல், பரமக்குடி, சேடப்பட்டி என 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 68558 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. அப்போது இந்த முல்லைப் பெரியாறு அணை நீர் கேரளாவில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்திற்குக் கூட தேவைப்படவில்லை என்பதே நம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும்.
பல ஆண்டுகளாக எந்தவிதமான சிக்கலும் இல்லாமல், முல்லைப் பெரியாறு அணை நீரிணை தமிழகம் பயன்படுத்திவந்த நிலையில்தான் திடீரென முல்லைப் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது எனவும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட ஆரம்பித்து விட்டதாகவும் முல்லைப் பெரியாறு அணை உடைந்து போகக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மலையாள இதழ்கள் செய்திகளை வெளியிட்டன.கேரள அரசியல்வாதிகளும் இந்தக் கருத்துகளை வலியுறுத்த ஆரம்பித்தனர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் மலையாள பத்திரிக்கைகளும் , கேரள அரசியல்வாதிகளும் முல்லைப் பெரியாறு அணை பற்றி பரப்பிய இந்த அவதூறுகள் கேரள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திவிட்டன.
ஆனால் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தையும், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்ட கேரள பகுதிகளின் உயரங்களையும், ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த அவதூறுகள் எப்படிப் பட்டவை என்பது அனைவருக்கும் விளங்கும், முல்லைப் முல்லைப் பெரியாறு அணை கடல் மட்டத்தில் இருந்து 2950 அடி உயரத்தில் உள்ளது.
மற்ற நகரங்கள்,
குமுளி 3200 அடி,
வண்டிப் பெரியாறு 3350 அடி,
பாம்பனர் 3700 அடி ,
ஏலப்பாறை 4850 அடி .
ஒருவேளை கேரள அரசியல் வாதிகள் கூறுவது போல , முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருந்து உடைபட்டால் வெளியேறும் தண்ணீர் 2900 அடி உயரத்தில் இருந்து கீழ்நோக்கிப் பாயுமா அல்லது 3000 அல்லது 4000 அடி உயரம் உள்ள நகரங்களை தாக்கும்படி மேல்நோக்கிப் பாயுமா?
நிலைமை இப்படி இருந்தபோது கேரள அரசியல்வாதிகள் வீண் பிடிவாதம் பிடித்து அணையின் உயரத்தைக் குறைத்தே ஆக வேண்டும் எனப் போராடி வந்தனர். கேரள மக்களிடையேயும் பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்தினர்.இதனால் ஏற்பட்ட குழப்பங்களினால் தமிழக அரசும் பிரச்சினையை சமாளிக்க திணறியது. இறுதியாக 1979ல் திருவனந்தபுரத்தில் தமிழக, கேரள இருமாநில அரசுகளுக்கிடையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக் கொள்வது என்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அதிகப் படுத்திய பின்னர் அணையின் உயரம் மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது.1979 முதல் 27 ஆண்டுகளாக எந்த தீர்வும் ஏற்படாமல் இந்த நிலங்கள் தரிசு நிலங்களாகவே வீணாகக் கிடைக்கின்றன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பெரும்பாலான மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதித்துள்ள இந்தப் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு 1979 க்குப் பின்னர் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற யாராலுமே தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
கேரளாவில் ஒரு அடி நிலம் கூட முல்லைப் பெரியாறு அணை நீரைப் பயன்படுத்திப் பாசன வசதி பெறவில்லை என்றால் பின்னர் கேரள அரசியல்வாதிகள் எதற்காக இந்த முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை குறைக்கப் பாடுபடுகிறார்கள் என்று நாமும் சிந்திக்க வேண்டும் அல்லவா? இந்தக் கேள்விக்கான விடையை தமிழக அரசியல்வாதிகள் யாரும் எப்போதும் மறந்தும் நம்மிடம் கூறியதில்லை, நமது தமிழக தரப்பு பாதிப்பை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்காமல் கேரள அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கத்தையும் உணர்ந்தால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படலாம் அல்லவா?
நமது தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்பது தற்போது ஒரு ஆறு மாதங்களாகத்தான் தலை தூக்கி உள்ளது, ஆனால் கேரளா, கர்நாடகா , ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களும், பல வட மாநிலங்களும் காலம் காலமாகவே மின்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இந்த மின் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கும், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் அப்போதுதான் கேரளா அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்துக் கிளப்பும் அவதூறுகளின் உள்நோக்கம் என்ன என்பது புரிகிறது, அதாவது 1959ம் ஆண்டு தமிழக அரசு கேரள அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது.
ஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு நீர் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளும். அதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் ரூ.2,57,789 கேரள அரசுக்கு செலுத்தி வரும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தமிழக அரசு 140 MW உற்பத்தி திறன் கொண்ட முல்லைப் பெரியாறு மின்நிலையத்தை அமைத்துக் கொண்டது. அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழக அரசுக்கு சொந்தமானது.
இந்நிலையில்தான் முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீர் செல்லும் கேரளப் பகுதியில் இடுக்கி அணையை கேரள அரசு 1976ல் கட்டியது. 2ச.கி.மீ. தண்ணீர் பரப்பளவும், 555 அடி உயரமும் 72 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது இடுக்கி அணை. இடுக்கி அணை கேரளா அரசால் நீர் மின் உற்பத்திகாகவே கட்டப்பட்டது. 180 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது இடுக்கி அணை. முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீர் வந்தால் மட்டுமே இடுக்கி அணை நிரம்பும். அப்போதுதான் அங்கு நீர் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் 1976ல் இடுக்கி அணை நிரம்பாததால் அந்த அணையில் முழு அளவில் மின் உற்பத்தி நடக்கவில்லை.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை நீர் மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ந்து உற்பத்தி நடந்தது. இது கேரளா அரசியல்வாதிகள் கண்ணை உறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு வினாடிக்கு 140 மெகாவாட் மின்உற்பத்தி செய்து பயன் பெற்றது தமிழகம்- ஆனால் இடுக்கி அணை நிரம்பாததால் இடுக்கி அணையில் 60 மெகாவாட் மின் உற்பத்தி கூட செய்ய முடியவில்லை- எனவே முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைத்தால் தான் இடுக்கி அணைக்கு முழுமையாக தண்ணீர் வரும்-அதன் பின்னரே இடுக்கி அணையின் நீரைக் கொண்டு முழு அளவிலான மின்சார உற்பத்தியை செய்ய முடியும்
-- என்றெல்லாம் கணக்குப் போட்ட கேரள அரசியல்வாதிகள் அதற்கான வழிகளில் தொடர்ந்து முயன்று அன்றில் இருந்து இன்று வரை முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க விடாமல் தடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசியல்வாதிகளோ, ஆக்கப் பூர்வமாக எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் எப்போதும் போல தங்களுக்கு இடையேயான வழக்கமான மோதல் அரசியலுக்கு இந்தப் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையையும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு உள்ளனர்.
கேரளாவின் தேவை முல்லைப் பெரியாறு அணை நீரில் இருந்து கிடைக்கும் நீர் மின்சாரம் மட்டுமே என்று இருக்கும் போது, தமிழகத்தின் தேவை முல்லைப் பெரியாறு அணையின் நீரும் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் என்ற நிலை இருக்கிறது. எனவே இரு மாநில அரசுகளும் தங்களுக்கு இடையேயான மறைமுக மோதல்களை விட்டுவிட்டு, இரு மாநிலங்களின் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளும் படியான புதிய ஆக்கப்பூர்வமான கூட்டுத் திட்டங்களை செயல்படுத்தினால் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு இரு மாநில மக்களின் நலன்களும் பாதுகாக்கப் படும் அல்லவா?
நன்றி http://arivili.blogspot.com/
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment