Saturday, October 4, 2008

ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன் ?

வருடம் 1971. இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் (ஏன், என் வாழ்க்கையிலும் கூட) மிக முக்கியமான மாற்றங்கள் அந்த வருடம் நிகழ்ந்தன. சில வரலாற்றாசிரியர்கள் மகத்தான மாற்றங்கள் நடந்த வருடமாக 1967ஐக் குறிப்பிடுவார்கள். அந்த வருடம் டெல்லியில் ஆட்சியைக் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்ட போதும் பெரும் பலவீனமடைந்திருந்தது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆட்சியை இழந்திருந்தது. எனவே அரசியலில் 1967 ஒரு முக்கியமான வருடம் என்று கருதப்படுவதுண்டு.

ஆனால் அதை விட முக்கியமான வருடம் 1971தான். காங்கிரசை இந்திரா காந்தி இரண்டாக்கினார். வங்கிகளை தேசியமயமாக்கி, ராஜமான்யத்தை ஒழித்த இந்திராவை ஒழித்தே தீருவோம் என்று அதுல்ய கோஷ், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, காமராஜ் முதலிய காங்கிரஸ் வலதுசாரிகளும் இந்துத்துவ சக்தியான ஜன சங்கமும், முழு வலதுசாரியான ராஜாஜியும் ஓரணி சேர்ந்தார்கள்.

இந்திராவுடன் தமிழகத்தில் கூட்டு சேர்ந்தார் கலைஞர் கருணாநிதி. இருவரும் தங்கள் கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்கள். இந்திரா பெற்ற பலம் அவரை வங்க தேச விடுதலைப் போரில் இந்தியாவை ஈடுபட வைத்தது. தொடர்ந்து தன்னை எதிர்த்த வலதுசாரிகளை சமாளிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக விரோதமான நெருக்கடி நிலையையே அறிவித்தார். தன்னை ஆதரித்த தி.மு.கவையே அதன் உட்பூசல்களைப் பயன்படுத்தி உடைத்தார்.

இந்திராவால் தி.மு.க அப்போது கடும் தாக்குதலுக்கு உள்ளானபோதும், காங்கிரசால் மறுபடியும் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதற்கான பல காரணங்களில் முக்கியமான ஒரு காரணம் 1971 தேர்தலில் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய உத்திதான். வலதுசாரிகளை வீழ்த்தி, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே தன் வாழ்வா சாவா பிரச்சினையாக அன்று கருதியிருந்த இந்திராவுக்குத் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை எம்.பி. சீட்டுகள் கிடைக்கும் என்பது மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு கலைஞர் கருணாநிதி, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவதற்குக் கூட ஒரு சீட்டையும் தரவில்லை. பத்து எம்.பிகள் இருந்தும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் உள்ளூர் முக்கியத்துவத்தை காங்கிரஸ் மேலும் இழந்தது. பின்னாளில் எம்.ஜி.ஆர் தயவில்தான் மெல்ல மெல்ல காங்கிரஸ் இப்போதுள்ள நிலைக்கு மீள முடிந்தது.

தந்திரமாக அப்போது காங்கிரஸை தலை தூக்கவிடாமல் உறவாடிக் கெடுத்தபோது, கலைஞருக்கு வயது 47. அவரையும் இந்திராவையும் கத்தியின்றி ரத்தமின்றி சோஷலிஸத்தைக் கொண்டு வரப்போகிறவர்கள் என்று அப்போது நம்பிய எனக்கு வயது 17. அவர் இந்தியாவிலேயே முதல் இளம் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவராக இருந்தார். நான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ் நாடகம், தமிழ்ப் பேச்சு, தமிழ் படைப்புகள் என்று திரிந்த ஆங்கில இலக்கிய மாணவனாக இருந்தேன்.

என் பள்ளித் தோழன் ரவீந்திரன் தி.மு.க ஆதரவாளன். நான் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். 1971 தேர்தலில் கலைஞரையும் இந்திராவையும் ஆதரித்து என் சொந்த ஊரான செங்கல்பட்டிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் பல பொதுக் கூட்டங்களில் பேசினேன்.

அப்போது ரவீந்திரனைத் தவிர எனக்கு இருந்த இதர உள்ளூர் நண்பர்களும் அவர்களின் குடும்பங்களும் கடும் தி.மு.க எதிர்ப்பாளர்கள். நான் கறுப்பு சிவப்பு கொடியின் கீழ் நின்று பேசியதைக் கூட அவர்களால் தாங்க முடியவில்லை. என் அப்பாவோ நேரு பிரியர் ; ராஜாஜி எதிர்ப்பாளர்; காங்கிரஸ் ஆதரவாளர்; காமராஜருக்கு நெருக்கமானவர் என்றாலும் நேருவின் சோஷலிசத்தை காமராஜர் கைவிட்டுவிட்டதால், நான் இந்திரா&கலைஞர் கூட்டை ஆதரித்தது அப்பாவுக்கு உடன்பாடாகவே இருந்தது.

அப்போது நான் தி.மு.க, கலைஞர் கருணாநிதி சார்பு நிலை எடுத்தது முதல் அடுத்த 28 ஆண்டுகளுக்கும், தேர்தல் அரசியல் வட்டத்துக்குள் தி.மு.க அனுதாபியாகவே இருந்து வந்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த பரந்த இடதுசாரி ஜனநாயக அரசியல் பார்வையிலிருந்து மதிப்பிட்டபோது, எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி அதுதான் என்றே தோன்றியது.

தி.மு.க ஆட்சியின் லஞ்ச ஊழல்கள், நிர்வாகக் கோளாறுகள், அராஜகங்கள், கலைஞரின் குடும்ப அரசியல், இவற்றை விட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசியல் இன்னும் மோசமானது என்ற பார்வையில் இருந்து வந்தேன். காமராஜர் சொன்னது போல இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற ஞானம் எனக்கு 1999க்குப் பிறகுதான் ஏற்பட்டது.

1999ல் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க கூட்டு சேர்ந்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பெரியார் உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைகளில் முக்கியமானது மதவாத எதிர்ப்பு. ஆனால் தன் மதவாதக் கொள்கையை ஹிந்து மஹா சபா காலத்திலிருந்து ஜனசங்கம், பாரதிய ஜனதா என்று பற்பல அவதாரங்களில் வலுப்படுத்திக் கொண்டே வந்ததிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் அதனால் வேரூன்ற முடியாமல் இருந்துவருகிறது. பாரதிய ஜனதா என்ற அவதாரத்தில் அது வேரூன்ற முதல் உதவி செய்தவர் ஜெயலலிதா. ஆனால் அந்த உறவில் பெற்ற பயனை விட அதிக பயனை தி.மு.க உறவில்தான் பாரதிய ஜனதா அடைந்தது. பாபர் மசூதி இடிப்பு என்ற மாபெரும் அராஜகத்தைச் செய்த பின்னரும் பாரதிய ஜனதாவுடன், பெரியார் இயக்கத்திலிருந்து வந்த கலைஞர் உறவு கொண்டது, என்னால் ஏற்கவே முடியாத துரோகமாகும். வாஜ்பாயி என்ற இந்துத்துவாவின் நேசமான முகமூடியை தமிழகமெங்கும் பரிந்துரைத்து ஆதரவு திரட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதிதான்.

இந்துத்துவ&வர்ணாசிரமப் பார்வையில் காஞ்சி பரமாச்சாரியாரான சந்திரசேகரேந்திரருக்கும் அடுத்தவரான ஜயேந்திரருக்கும் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்பது என் கருத்து. ஆனால் ஜயேந்திரரை விட சந்திரசேகரேந்திரர் மரியாதைக்குரியவர் என்று நற்சான்றிதழ் வழங்கியவர் கலைஞர். இதே போலத் தான் பாரதிய ஜனதாவின் மதவாதப் பார்வையில் வாஜ்பாயிக்கும் அத்வானிக்குமிடையே சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் வாஜ்பாயி தப்பான இடத்தில் இருக்கும் நல்லவர் என்று நற்சான்றிதழ் வழங்கினார் கலைஞர்.

என் பார்வையில் இன்று சாராம்சத்தில் ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் கலைஞர் பரமாச்சாரியார், வாஜ்பாயி பாணியைப் பின்பற்றுபவர். ஜெயலலிதாவோ ஜயேந்திரர், அத்வானி வகையறா. பின்னவர்கள் எளிதில் அம்பலமாகிவிடுவார்கள். முன்னவர்களை அம்பலப்படுத்துவது கடினமான வேலை.

காரணம் அவர்களுடைய புத்திசாலித்தனம்தான். கலைஞர் கருணாநிதி அளவுக்கு புத்திசாலியான ஓர் அரசியல்வாதியைத் தமிழகம் கடந்த 50 ஆண்டுகளில் சந்திக்கவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். அண்ணாவை விட, பெரியாரை விட, காமராஜரை விட, நிச்சயம் கலைஞர் கருணாநிதி அதிக புத்திக் கூர்மை உடையவர் என்பதே என் மதிப்பீடு.
அவரைப் பாராட்டுபவர்கள் சுட்டிக் காட்டும் ஒவ்வொரு அம்சத்திலும் இருப்பது இந்த புத்திசாலித்தனம்தான். பத்திரிகையாளர்களிடம் கடுமையாக தொலைபேசியிலும் நேரிலும் கூடப் பேசுவார். ஆனால் ஒரு போதும் பத்திரிகைகளைப் புறக்கணிக்கமாட்டார். எதைப்பற்றியும் கருத்து சொல்லத் தயாராக இருப்பார். கட்சிக்குள் அவர் வைத்ததுதான் சட்டம். ஆனால் யாரும் அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து தங்கள் அடிமைத்தனத்தை அவருக்கு நிரூபித்துக் காட்டவேண்டிய கேவலத்துக்கு அவர்களை ஆளாக்கமாட்டார்.

மேடைப் பேச்சாற்றல், அடுக்கடுக்கான வாதங்கள், வார்த்தை விளையாட்டு, உடனடி பதிலடிக்கான சிந்தனை வேகம், இவையெல்லாம் அவருடைய திறமையின் அடையாளங்கள். இடங்களுக்குப் புதுப்பெயர் வைக்கும்போது கெல்லிஸை கிள்ளியூராகவும், ஹாமில்டன் பிரிட்ஜை அம்பேத்கர் பாலமாகவும் மர்மலாங் பிரிட்ஜை மறைமலையடிகள் பாலமாகவும், பழையதன் ஒலி சார்ந்து புதியதைச் சூட்டிய அவருடைய புத்திசாலித்தனங்கள் ரசிக்கத்தக்கவை.

அண்ணாவைப் போன்ற ஆங்கிலப் புலமையும் ஜெயலலிதாவைப் போன்ற ஹிந்திப் புலமையும் அடைந்திருந்தால், கலைஞர் இருபதாண்டுகளுக்கு முன்பே இந்தியப் பிரதமராகியிருக்கக் கூடியவர். அவை இல்லாதபோதும் கூட, இந்தியப் பிரதமரை முடிவு செய்யும் பலத்தை அவர் இன்று பெற்றிருப்பது, அரசியலைத் தனக்கு சாதகமாக வளைப்பதில் அவருக்கு இருக்கும் புத்திக் கூர்மையினால் மட்டும்தான்.

இன்று தமிழ்நாட்டில் ஊழல், லஞ்சம் என்பதெல்லாம் கீழ் மட்டம் வரை சாதாரணமான வாழ்க்கை முறையாக மக்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதற்கு விதை போட்டது 1969லிருந்து 1976 வரை கலைஞர் நடத்திய ஆட்சியில்தான். அந்த நச்சு விதையில் முளைத்த மரத்தின் கிளைகள்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். மாணவர் விரோதப் போக்கு, தொழிற்சங்க விரோதப் போக்கு, பத்திரிகை விரோதப் போக்கு, நிர்வாக அராஜகங்கள், மிகையான விளம்பரங்கள், கொண்டாட்டங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றை அரசியல் வழிமுறையாகவே ஆக்கிய அஸ்திவாரத்தைப் போட்டவர் கலைஞர் கருணாநிதிதான்.

அடுத்து புதிதாக உருவாகி வரக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் அவர் பாணியைப் பின்பற்றும் குளோன்களாகவே இருக்கவேண்டிய கட்டாயத்தை அவரது அரசியல் வழிமுறை ஏற்படுத்திவிட்டது. அரசாங்கத்துக்குள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் போலீஸ், அரசு ஊழியர்கள் வரை, அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் முதல் நக்சல்பாரிகள் ஈறாக ஒவ்வொரு கட்சிக்குள்ளும், தன்னுடைய ஆதரவு கோஷ்டி என்று ஒன்றை உருவாக்கி பிரித்தாளும் அரசியலை பிரிட்டிஷாருக்குப் பிறகு திறமையாக செய்துவருபவர் கலைஞர் கருணாநிதிதான்.

THANKS: GNANI
தன் சொந்த நலனுக்காக எம்.ஜி.ஆருக்கு எதிராக தன் மகன் மு.க முத்துவை முன்னிறுத்தியபோது கலைஞர் கருணாநிதி தன் மகனின் வாழ்க்கையை மட்டும் குட்டிச்சுவராக்கவில்லை. அரசியலில் ஒரு குட்டி கிரகமாக மட்டுமே இருந்த எம்.ஜி.ஆரை ஓர் பிரும்மாண்டமான அரசியல் சக்தியாக மாற்றியதால் தமிழக அரசியலையே குட்டிச்சுவராக்கினார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டே விலகும் மன நிலையில் இருந்தபோது, கலைஞர் கருணாநிதி அவசர ஆத்திரமாக போலீஸ் ரெய்டு நடத்தி அந்த ராஜினாமா கடிதத்தை முட்டாள்தனமாக சபாநாயகருக்கு அனுப்பச் செய்ததுதான் ஜெயலலிதாவை சீண்டி விட்டது. இல்லாவிட்டால் அரசியலை விட்டு விலகி அவரும், தமிழகமும் நிம்மதியாக தத்தம் வாழ்க்கையைக் கழித்திருப்பார்கள்.
அவர் தனிப்பட்ட முறையில் தோற்ற ஒரே இடம் அவர் குடும்ப வாழ்க்கையில்தான். தனக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள், மதிப்பீடுகள், அரசியல் எதையும் அவரால் தன் மனைவிக்கும் துணைவிக்கும் கற்பிக்க முடியவில்லை. மாறாக அவர் கற்றது அத்தனையையும் குடும்பப் பாசம் என்ற பலிபீடம் முன்னால் காணிக்கையாக்கும் நிலைக்கு தன்னைத் தானே ஆளாக்கிக் கொண்டதுதான் அவருடைய மிகப் பெரிய தோல்வி.
சுமார் நாற்பது வருட காலமாகத் தமிழக அரசியலைத் தன்னை சுற்றி மட்டுமே இயங்கச் செய்திருப்பது கலைஞர் கருணநிதியின் சாதனை. சமூகத்தின் அடித்தளத்திலிருந்து அதிக கல்வி வாய்ப்புகள் இல்லாத ஒருவரான அவர் இதை சாதித்திருப்பது அவருடைய புத்திசாலித்தனத்தினால்தான். அவருடைய அத்தனை பலவீனங்களையும் குறைகளையும் மக்கள் பார்க்க விடாமல் மறைக்கும் கேடயமாகவும் இதே புத்திசாலித்தனம்தான் அவரை இன்றளவும் காப்பாற்றி வருகிறது.
தன் நெருக்கமான நண்பரும் கொள்கைரீதியில் எதிரியுமான ராஜாஜி இறந்தபோது பெரியார் எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். ராஜாஜியை துளியும் சுயநலம் இல்லாதவர் என்று பல வரிகளில் வர்ணிக்கிறார் பெரியார். அவருடைய அத்தனை தியாகமும் உழைப்பும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்படுவதாக ஆகிவிட்டதே என்பதுதான் தன் வருத்தம் என்கிறார் பெரியார். ராஜாஜி மட்டும் தான் முன்வைத்த இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பாரானால், தன் ஆயுள் முழுவதும் அவ்ருடைய தொண்டனாக வேலை செய்து கழிப்பதிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்கிறார் பெரியார்.
எனக்கும் கலைஞர் பற்றி அத்தகைய உணர்ச்சியே ஏற்படுகிறது. கடந்த ஐம்பதாண்டு கால தமிழக அரசியலில் இருந்த எவரையும் விட அதிக புத்திசாலி கலைஞர் கருணாநிதிதான் என்று அடித்துச் சொல்வேன். ஆனால் அத்தனை புத்திசாலித்தனமும் அவருடைய குடும்ப நலனுக்கு மட்டுமே அவரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் அப்படிச் செய்வதைத் தொடர்ந்து மக்களிடம் மறைக்கவும் மட்டுமே பயன்பட்டு வருகிறது என்பதும்தான் என் வருத்தம். மாறாக கலைஞரின் திறமைகள் தமிழுக்கும் தமிழருக்கும் சமத்துவமும் வளமும் ஏற்படப் பயன்பட்டிருக்குமானால் என் ஆயுள் முழுவதும் அவருடைய ஆதரவாளனாகத் தொடர்ந்து இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
திறமை இருந்தும் அவரிடம் நேர்மை இல்லை என்பதால் தொடர்ந்து அவரை எதிர்த்து விமர்சனம் செய்ய வேண்டியவனாக இருக்கிறேன்.
இந்தியா டுடே 2008 ஜூன் கடைசியில் வெளியிட்ட கலைஞர் சிறப்பிதழுக்காகக் கேட்டதன் பேரில் பிரத்யேகமாக எழுதப்பட்ட கட்டுரை இது. ‘‘தமிழகத்தின் புத்திசாலி அரசியல்வாதி’’ என்ற மாற்றுத் தலைப்பில் என் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.
கடைசி வாக்கியத்தை மட்டும் ஆசிரியர் குழுவினர் எனக்குத் தெரிவிக்காமல், ‘‘திறமை இருந்தும் அவை தமிழக நலன்களுக்காக இன்னும் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பதால் அவரை விமர்சிக்கிறேன்.’’ என்று மாற்றிக் கொண்டனர். கீழ்வரும் ஆறு பத்திகளும் என் அனுமதி பெறாமல் நீக்கப்பட்டுவிட்டன.
1. என் பள்ளித் தோழன் ரவீந்திரன் தி.மு.க ஆதரவாளன். நான் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டுமென்று அவன் விரும்பினான். 1971 தேர்தலில் கலைஞரையும் இந்திராவையும் ஆதரித்து என் சொந்த ஊரான செங்கல்பட்டிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் பல பொதுக் கூட்டங்களில் பேசினேன்.
2. அப்போது ரவீந்திரனைத் தவிர எனக்கு இருந்த இதர உள்ளூர் நண்பர்களும் அவர்களின் குடும்பங்களும் கடும் தி.மு.க எதிர்ப்பாளர்கள். நான் கறுப்பு சிவப்பு கொடியின் கீழ் நின்று பேசியதைக் கூட அவர்களால் தாங்க முடியவில்லை. என் அப்பாவோ நேரு பிரியர் ; ராஜாஜி எதிர்ப்பாளர்; காங்கிரஸ் ஆதரவாளர்; காமராஜருக்கு நெருக்கமானவர் என்றாலும் நேருவின் சோஷலிசத்தை காமராஜர் கைவிட்டுவிட்டதால், நான் இந்திரா&கலைஞர் கூட்டை ஆதரித்தது அப்பாவுக்கு உடன்பாடாகவே இருந்தது.
3. இந்துத்துவ&வர்ணாசிரமப் பார்வையில் காஞ்சி பரமாச்சாரியாரான சந்திரசேகரேந்திரருக்கும் அடுத்தவரான ஜயேந்திரருக்கும் சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்பது என் கருத்து. ஆனால் ஜயேந்திரரை விட சந்திரசேகரேந்திரர் மரியாதைக்குரியவர் என்று நற்சான்றிதழ் வழங்கியவர் கலைஞர். இதே போலத் தான் பாரதிய ஜனதாவின் மதவாதப் பார்வையில் வாஜ்பாயிக்கும் அத்வானிக்குமிடையே சாராம்சத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் வாஜ்பாயி தப்பான இடத்தில் இருக்கும் நல்லவர் என்று நற்சான்றிதழ் வழங்கினார் கலைஞர்.
4. என் பார்வையில் இன்று சாராம்சத்தில் ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் கலைஞர் பரமாச்சாரியார், வாஜ்பாயி பாணியைப் பின்பற்றுபவர். ஜெயலலிதாவோ ஜயேந்திரர், அத்வானி வகையறா. பின்னவர்கள் எளிதில் அம்பலமாகிவிடுவார்கள். முன்னவர்களை அம்பலப்படுத்துவது கடினமான வேலை.
5. இன்று தமிழ்நாட்டில் ஊழல், லஞ்சம் என்பதெல்லாம் கீழ் மட்டம் வரை சாதாரணமான வாழ்க்கை முறையாக மக்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதற்கு விதை போட்டது 1969லிருந்து 1976 வரை கலைஞர் நடத்திய ஆட்சியில்தான். அந்த நச்சு விதையில் முளைத்த மரத்தின் கிளைகள்தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். மாணவர் விரோதப் போக்கு, தொழிற்சங்க விரோதப் போக்கு, பத்திரிகை விரோதப் போக்கு, நிர்வாக அராஜகங்கள், மிகையான விளம்பரங்கள், கொண்டாட்டங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றை அரசியல் வழிமுறையாகவே ஆக்கிய அஸ்திவாரத்தைப் போட்டவர் கலைஞர் கருணாநிதிதான்.
6. அவர் தனிப்பட்ட முறையில் தோற்ற ஒரே இடம் அவர் குடும்ப வாழ்க்கையில்தான். தனக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட சித்தாந்தங்கள், மதிப்பீடுகள், அரசியல் எதையும் அவரால் தன் மனைவிக்கும் துணைவிக்கும் கற்பிக்க முடியவில்லை. மாறாக அவர் கற்றது அத்தனையையும் குடும்பப் பாசம் என்ற பலிபீடம் முன்னால் காணிக்கையாக்கும் நிலைக்கு தன்னைத் தானே ஆளாக்கிக் கொண்டதுதான் அவருடைய மிகப் பெரிய தோல்வி.
Thanks: Gnani

No comments: