குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும்நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம்.
எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர்.எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது.நான் வானத்தைப் பார்த்தேன்...
அது எனது கண்களை வசியம் செயதது...
நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்...
எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது..
(ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்)
‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’‘‘இன்னும் ரெண்டு கிலோமீட்டர்ல அவங்களை பிடிச்சுருவாங்களாமே? அவங்க கதை முடிஞ்சிடுமா?" வட இந்திய ஊடக நண்பரின் குரலில் கலந்திருந்த பதட்டமும் சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்பும் எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.நான் இப்படி அவருக்குப் பதில் சொன்னேன்.‘‘நீங்கள் பல முறை அவர்களை காட்டிக் கொடுத்து விட்டீர்கள்.
சில முறை அவர்களை களவாடியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள் பல முறை உங்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒன்றை மறந்து விடுகிறீர்கள். உங்களின் நண்பர்கள் பல முறை அவர்களை வென்று விட்டதாகச் சொன்ன கதைகளை தமிழகமே கதைகள் என்று நிரூபித்தது. இனியும் நிரூபிக்கும்.’’ என்றேன்.வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்துக்குள்ளும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றினால் சிங்களர்கள் கொண்டாடுவார்களோ இல்லையோ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் இவர்கள் கொண்டாடி விடுவார்கள் போல. சரி கிடக்கட்டும்.
காலம் இவர்கள் கிழித்த எத்தனையோ கோடுகளை அழித்துப் போட்டிருக்கிறது.கடந்த 14ஆம் தேதி ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்படியான கோரிக்கையோடு தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கடந்த பத்தாண்டுகளில் இப்படியான ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் இந்தியாவின் ஒட்டு மொத்த மீடீயாக்களும் தமிழகத்தின் அந்த முடிவுக்காக காத்திருந்தன. பல நேரலை ஒளிபரப்பு வாகனங்கள் தமிழகத்தின் போராட்ட மேடைகள் தோறும் வலம் வர இந்தியா முழுக்க கவனம் பெற்றது தமிழகத்தின் கொந்தளிப்பு.கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமாய் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதெல்லாம் தமிழக தமிழர்கள் கொதிப்பை மனதுக்குள் பூட்டியே வைத்திருந்தார்கள். தொடர்ந்து கட்டப்பட்ட புலிவேஷம் மத்திய மாநில அரசுகளுக்கு பொருந்தியே வந்தது.
ஈழம், புலிகள், தமிழ்ச்செல்வன் என எதைப் பேசினாலும் அடக்குமுறைச் சட்டங்களால் காட்டிய பூச்சாண்டிப் புலி வேஷம் பல நேரங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கவும் பயன்படுத்தப்பட்டது.பொடா சட்டம், தடா சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் பலதையும் கடந்து வந்த தமிழகம் அதனூடாக இந்தியாவுக்கே சில கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் தங்களின் மனித உரிமைக் குரல்களை சென்னையில் இருந்து ஒலிக்கவும் துவங்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்தக் கொடிய சட்டங்கள். புலி வேடம் போட்டவர்களின் தடாவும் பொடாவும் இன்று இல்லை. பயங்கரவாதத்தின் பெயரால் இதை விடக் கொடிய சட்டங்கள் நாளை வரலாம் புலி வேஷத்தோடு.
அதற்குள், மொத்த தமிழகமும் இன்று ஈழத்தமிழருக்காய் திரண்டிருக்கும் சூழலை ஆதிக்கத்தின் மேல் விழுந்த உடைப்பு எனலாம். இந்த கட்டுரைக்கு உடைப்பு என்று பெயர் வைத்தால் கூட அது பொருத்தமானதாகத் தானிருக்கும். இந்த உடைப்பு அதிகப்படியான தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் வழக்கம் போல சிலருக்கு கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.சர்வ கட்சிக் கூட்டம் நடந்த அன்று காலை வெளிவந்த ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது.
சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் அந்தக் கட்டுரை ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் வெங்காயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.
# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.
# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?
# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.
# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.
# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.என்றெல்லாம் இந்திய உபகண்ட உலக வரலாறு தெரிந்த மாலினி பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.
தோழர்களே - நீங்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் அப்படி எந்த புதிய கள்ளும் இந்த பழைய மொந்தையில் இல்லையாதலால் நீங்கள் அவர் எழுதிய கட்டுரையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்தக் கட்டுரைக்கு எவ்விதத்திலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கட்டுரையின் தரம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் ஆக வேண்டும் என்று வேண்டி விரும்பி ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு கள முனைக்கு வரவில்லை என்பதை உணர்த்த சில வரிகளில் சிங்கள இன வெறி வரலாற்றை நினைவுறுத்த வேண்டியிருக்கிறது....
# வாளை செங்குத்தாக ஏந்திப் பிடித்திருக்கும் சிங்கக் கொடியோடு 1948 பிப்ரவரியில் சிங்களம் ஆட்சிக்கு வந்தபோது டான் ஸ்டீபன் சேனநாயகா அதன் முதல் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற ஒரு வருடத்துக்குள் அவர் ‘பிரஜா உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அடர்ந்த காடுகளைத் திருத்தி காப்பியும் தேயிலையும் பயிர் செய்த மலையக மக்கள் சிங்கள் இன வெறிக்கு முதல் பலியானார்கள். 1840லிருந்து 1850 வரை கிட்டத்தட்ட பத்து இலட்சம் கூலி அடிமைகள் தமிழகத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடியுறிமை மறுக்கப்பட்ட அவர்களைத்தான் இன்று வரை மலையகத் தமிழர்கள் என்றும், இந்திய வம்சாவளிகள் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.
# 1956ல் பண்டாரநாயகா பதவிக்கு வந்த ஜூன் மாதத்தில் தனிச் சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசின் கல்வித்துறையில் இருந்து ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்.
# இவ் வேறுபாட்டின் கொடுமைகளை அன்றே அனுபவித்த தந்தை செல்வா அதை ஜனநாயக வழிகளில் அவர் நம்பிய அஹிம்சா கொள்கைகள் வழியே தீர்க்கலாம் என நம்பினார். அதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவை வழங்கினார். சேனநாயகா, பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா என்று சிங்கள வெறியர்களோடு அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் பௌத்த பிக்குகளாலும் சிங்கள அடிப்படைவாதிகளாலும் கிளித்தெறியப்பட்டது. அஹிம்சா போராளிகள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. # 1981ல் யாழ்நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்று மூலமான 90,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின
# தேடுதல் வேட்டையினால் பல நூறு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜூலை 25 ஆம் தேதி சிங்கள கைதிகள் அரசின் ஆதரவோடு மிகப்பெரிய வன்முறையில் இறங்கினர். 34 கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி என ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாள் கழித்து மேலும் 18 பேர் கொல்லப்பட, தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் எங்கும் பரவியது. கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டனர். உலகின் கறுப்பு வரலாற்றில் இந்த இன வெறித்தாக்குதலை ஜூலை கலவரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
# குமுதினி, செம்மணி, செஞ்சோலை என சிங்கள இனவெறி வரலாற்றில் கோரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களின் கதைகளை நாம் குறைவாகவே பதிவு செய்திருக்கிறோம். அது போல 1956, 1958, 1961, 1974, 1981, 1983 என்று வரலாற்றின் மிக நீண்ட தக்குதல்களால் ஈழத்தமிழர்கள் உயிரையும் உடமைகளையும் இழந்திருக்கிறார்கள்.
83 ஜூலை கலவரங்களுக்கு பிறகு ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் சிங்களர்கள் தமிழர்களை படுகொலைகள் செய்வதை நிறுத்தினர். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ததை இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது. இன வெறி அன்றும் இன்றும் அரசு பயங்கரவாதமாக இலங்கையில் இருக்கிறது.வெறும் இருபது வருடங்களுக்குள் அடங்காத பாசிசத்தின் கோரமுகம் இப்போதும் பல்லிளிக்கிறது அதே கோரத்தோடு.
‘‘இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் இருந்து கொள்ளலாம் இங்கே’’ என்று இலங்கை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா சொல்லும் போது இன வெறிப் பாசிசத்தின் இறுகிய வடிவமான அந்த வார்த்தைகள் இந்தியா வகுத்துக் கொடுக்கும் இலக்கணத்தின் படியே சொல்லப்படுகிறது. இன்று நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பயிற்சி எடுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்துகிறது இந்தியா. இது அவரை உற்சாகப்படுத்துவதாய் சரத் பொன்சேகா சொல்கிறார். இது இன்றைய கதை.அன்று, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழ மக்களை கொன்று குவித்தது.
# திலீபனின் உயிரைக் காவு வாங்கியது
# குமரப்பா புலேந்திரன் உடபட 17 பிரதானப் போராளிகளை சிங்களனிடம் காட்டிக் கொடுத்தது இந்தியா.
# கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானது.
இதற்கெல்லாம் இன்று இந்தியாவிடம் பதில் இல்லை. மௌனம் மட்டுமே பதில். அந்த மௌனம்தான் இன்று யுத்த தந்திரமாக ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கிறது. ஆனாலும் இன்று தமிழகம் கொந்தளித்த பிறகு முதன் முதலாக வாய் திறந்திருக்கிறது இந்தியா. ‘‘இந்தியாவின் பிராந்திய நலனும் இந்து மகாசமுத்திரத்தில் வேறு எந்த நாடும் ஆதிக்கம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. ஆகவே இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறோம்’’ என்கிறது.
இந்துமாக்கடல் பிராந்தியத்தை அமெரிக்காவும், சீனாவும், பாகிஸ்தானும் பங்கு போட்டிருக்கிறது. திருகோணமலை துறைமுகத்தை தன் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா.எண்பதுகளில் போராளிக் குழுக்களுக்கெல்லாம் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இந்தியா அவர்களை தனது செல்லப் பிள்ளைகளாக்க நினைத்தது. தூண்டிலில் வைத்த இறை மீனுக்கு உணவு என்று நம்பி இந்தியாவிடம் ஏமாந்தவர்கள் இன்று இலங்கை அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள். 1989ல் மாலத்தீவில் இந்தியாவின் ரா அமைப்பு நிகழ்த்திய போலிக் கிளர்ச்சிக்கு பயன்பட்டவர்களை காரியம் முடிந்ததும் கழட்டி விட்டார்கள்.
சில ஆயுதக்குழுக்களை போராளிகள் என்று உருவாக்கியது இந்தியா. அதன் விளைவைத்தான் முப்பதாண்டுகாலமாய் நீண்டு கொண்டிருக்கும் ஈழப் போர் வலி நிறைந்த கதைகளோடு உலகுக்கு உணர்த்துகிறது. உண்மையான போராளிகள் போரிட்டார்கள். அன்று போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்த இந்தியா இன்று சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது.2004ம் ஆண்டு தெற்காசியாவின் கடலோரங்களை காவு கொண்ட சுனாமி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டதட்ட பத்தாயிரம் தமிழர்கள் தமிழகத்தின் நாகையிலும் குமரியிலும் சுனாமிக்கு பலியானார்கள்.
இந்திய அரசின் உதவிகள் கிடைக்க நான்கு நாட்கள் ஆனது. ஆனால் சுனாமி வந்த மறுநாளே இந்தியாவின் விமானங்கள் இலங்கையையும் மாலத்தீவையும் சென்றடைந்தது. சொந்தக் குடிகள் ஆயிரக்கணக்கில் மடிந்தபோது வராத விமானமும், கப்பலும் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் செல்கிற நோக்கத்தின் ரகசியம் இந்து மகாசமுத்திரத்தில் பொதிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த கடலைக் காரணம் காட்டி இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறீர்களோ அந்தக் கடலில்தான் இன்று சீனா தனது கண்காணிப்பை தீவீரப்படுத்தி இருக்கிறது. தென்னகத்தில் உள்ள உங்களின் அனல் மின் நிலையங்களையும் ரஷ்யாவின் உதவியோடு இந்தியா நிறுவிக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் அது தீவீரமாக கண்காணிக்கிறது. அது இந்துமாக்கடலையும் தாண்டி வங்காள விரிகுடா, அரபிக்கடல் என தன் ராணுவக் கண்காணிப்பை இலங்கையின் உதவியோடு தீவீரப்படுத்தி இருக்கிறது.அது போல அகதிகளாக ஈழத்தமிழர்கள் இங்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வேறு எங்குதான் போவார்கள்.
இந்தியாவின் கையாலாகத்தனத்தால்தான் ஈழப்பிரச்சனை ஐய்ரோப்பிய நாடுகளை நோக்கி திரும்பியது. ஈழ அகதிகளுக்கு நீங்கள் செய்து கொண்டிருப்பது துரோகம், பெருந்துரோகம். காரணம் சீனாவோடு முரண்பட்டு இந்தியாவுக்கு வருகிற திபெத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கர்நாடகாவின் கூக்ளியில் பல நூறு ஏக்கர் பசுமைப் பள்ளத்தாக்கை திபெத்திய அகதிகளின் சுய சார் பொருளாதரத்திற்கு கொடுத்து உதவியது இந்தியா. இன்று அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவான சக்திகளாக வளர்ந்து வரும் சூழலில் எங்கள் மக்கள் மட்டும் இன்னும் அகதி முகாம் என்னும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைந்து கிடந்து சாகத்தான் வேண்டுமா?இந்தக் கேள்விகள் நீண்ட காலங்களாகவே எங்களால் கேட்கப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. இன்றைய கொந்தளிப்புகள் இந்தியாவின் நாடகங்களைப் புரிந்து கொண்டு எதிர் உணார்வால் எழுந்தது. ஆக இந்த எதிர்ப்பு எப்படி இலங்கை அரசுக்கு எதிரானதோ அது போல இந்திய அரசுக்கு எதிரானதும் கூட, தமிழகத்தின் பெரும் பங்கு மக்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக நம்புகிறார்கள். அதை பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.முதலில் இந்திரா காலத்தில் எண்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு, பின்னர் அமைதிப்படை இலங்கையிலே நிகழ்த்திய மனித உரிமைகளுக்கு எதிரான கொந்தளிப்பு, பின்னர் போருக்கு எதிராக இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு என தொடர்ந்து கொண்டிருக்கிறது ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான உறவு.
ஆனால் இந்த உடைப்புகளில் இருந்து கொந்தளிப்புகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள். ஈழமும் தமிழகமும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பிரிக்க முடியாத கலாசாரப் பின்னணியைக் கொண்ட இரு வேறு நாடுகள். அதாவது ஒரு கடல் இரு கரைகள் (நன்றி சா.பாலமுருகன்) அவ்வளவுதான்.கடந்த பத்து ஆண்டுகளாக வெள்ளம் பாத்தியில் ததும்பிக் கொண்டிருந்தது. இப்போது அது உடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.... காலம் கிழித்து விட்ட இந்த பத்தாண்டுகள் இடைவெளியில் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்பதைக் காலம் இன்னுமொரு முறை நீரூபித்திருக்கிறது.
நீங்கள் இது வரை காட்டிய புலிப்பூச்சாண்டியையே மீண்டும் காட்டுகிறீர்கள். ஜெயலலிதா, ‘சோ’ ராமசாமி, இந்து ராம், சுப்ரமணியன் ஸ்வாமி நீங்களெல்லாம் யார்? யாரின் நலனுக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு தமிழர்கள் மீது உங்கள் கொதிப்பைக் கொட்டுகிறீர்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிடும் வரை கலைஞர் பட்டும் படாமலுமே இருந்தார்.
காரணம் இரண்டு முறை அநியாயமாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திமுக பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் இன்று மீண்டும் தன் முழு சக்தியையும் செலவழிக்க கலைஞர் வீதிக்கு வந்திருக்கிறார். தன் அதிகாரத்தை இன்னொரு முறை ஈழ மக்களுக்காக துறக்க கலைஞர் உணர்வுப்பூர்வமாய் வந்திருக்கிறார்.கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதத்துக்கு திமுக அழைக்கப்படாத சூழலில் அழைத்து, வருவதாக ஒப்புக் கொண்ட ஜெயலலிதா கடைசி நேரத்தில் காலை வாரினார். ‘‘ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசே மௌன சாட்சி’’ என்று ஈழ மக்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் ஒரு இரவுக்குள் காட்சி மாறியது. மறுநாள் போய்ஸ்கார்டனில் நடந்தது அந்தச் சந்திப்பு. சோ ராமசாமியும் ‘ஜெ’வும் போயஸ் கார்டனில் சந்தித்துக் கொண்டனர். மறுநாளே ஜெயலலிதாவின் குரல் மாறுகிறது. கருணாநிதி பதவி விலக வேண்டும். மத்திய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அம்மா சாமியாடியது.
தொடர்ந்து 14ஆம் தேதி சர்வக் கட்சிக் கூட்டத்தை அறிவிக்கிறார் கலைஞர். அன்று காலையில்தான் இந்து பத்திரிகை தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாலினியின் கட்டுரையை வெளியிடுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யசாபா உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றார் கலைஞர். வைகோ தான் எங்கே ஈழ விவகாரத்தில் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து தனது எம்பிக்களும் பதவி விலகுவார்கள் என்று அறிவிக்கிறார்.மத்திய அரசுக்கு தமிழகம் என்ன நெருக்கடியைக் கொடுக்க முடியுமோ அந்த நெருக்கடியை கொடுக்கிறார் கலைஞர். உடனே ஜெயலலிதா சொல்கிறார்.
‘‘இலங்கை அரசை போரை நிறுத்தச் சொல்லி இந்திய அரசு உத்தரவிட முடியாது. அது புலிகளுக்கு ஆதாயமாகப் போய் முடியும்’’ என்கிறார். முந்தின நாள் ஈழ மக்களுக்கு எதிரானதாகத் தெரிந்த போர் ஒரு இரவுக்குள் புலிகளுக்கு எதிராக திரும்புகிற வித்தையை நாம் போயஸ்கார்டனில் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். சந்திப்புகள் போரை தங்கள் சுயலாபத்துக்கு மாற்றுகிறது. ஹிந்து பத்திரிகை மாலினி பார்த்தசாரதியின் கட்டுரையும் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளி பார்ப்பனீயம் என்னும் இந்திய தத்துவ மரபில் இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிகா அம்மையார் அடிக்கடி சென்னைக்கு வருவார். இருவரும் சந்தித்துப் பேசுவார்கள்.
இலங்கை அதிபரான சந்திரிகாவுக்கு பல முறை போயஸ்கார்டனில் விருந்து சமைக்கப்பட்டிருக்கிறது.சந்திரிகாவின் கணவர் ஹிந்து ராமுக்கு நண்பர். சந்திரிகாவை போயஸ் கார்டனுக்கு அழைத்துப் போனது ஹிந்து ராம். அன்றிலிருந்துதான் தமிழகத்தின் பிரதான திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை தடுக்கப் போராடினார் ஜெயலலிதா. இதே சேதுக் கால்வாயை சந்திரிகா அம்மையாரும் எதிர்த்தார். ஜெயலலிதாவும் சந்திரிகாவும் நட்புக்கூட்டணி போட்ட காலத்தில்தான் (2006ல்) ஹிந்து ராமிற்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சிங்கள கேல்’ விருது சந்திரிகா அம்மையாரால் வழங்கப்பட்டது. அதற்கு நன்றிக் கடனகாக இந்து தன் பார்ப்பன பாசிசத்தை வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை.உண்மையில் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் பதவி விலக வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு.
ஆனால் ‘ஜெ’ கலைஞரை தனிமைப்படுத்தி தாக்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி பார்ப்பன பாசிசம் அல்லாமல் வேறென்ன தோழர்களே? தமிழக எம்பிக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும். மத்தியில் ஆட்சி கவிழும் அல்லது திமுக மத்திய அரசில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று நடக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் என்ன நடக்கும்?எதுவும் நடக்காது.உலகிலேயே இன்று பாசிச அரசாக திகழும் ராஜபக்ஷே அரசு இந்தியாவை தூக்கி எறிந்து விட்டு சீனாவின் பக்கமும் பாகிஸ்தான் பக்கமும் சாய்வது ஒரு பக்கம் இருந்தாலும் உதைக்கிற தம்பியை அண்ணன் எப்படி அணுகிறான் எனப் பார்ப்போம்.நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இலங்கையை அது சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் போரற்ற பகுதியாக மாற்ற வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரை இலங்கை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஆக்ரமிக்கப்பட்டு சிங்கள சிப்பாய்களின் பூட்ஸ் கால்களில் மிதிபடும் எமது விவசாய நிலங்களில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்கிறோம். அதுதான் இந்தியாவுக்கு தமிழகம் வைக்கும் நிபந்தனை அல்லது வேண்டுகோள்.
ஆனால் இந்தியா இலங்கையுடன் கெஞ்சுகிறது, எப்படி தெரியுமா? ‘‘யுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. போரில் மக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. மக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்’’ என மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறது இந்தியா.சரத்பொன்சேகா சொல்கிற ஒன்றுபட்ட இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமாக இருக்கும்போது தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு சுதந்திர ஈழத்தைக் கோருவதில் என்ன தவறு? ஒன்று அதைக் கண்டிக்கிற அரசியல் நேர்மை இருக்க வேண்டும் இல்லை என்றால் ‘‘போரை நிறுத்துங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும்’’ இந்த இரண்டு அரசியல் நேர்மையும் அற்ற இந்தியா இலங்கையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே ஆயுதங்கள் கொடுக்கிறபோது தெற்காசியாவில் பாசிசத்துக்கு நீங்கள் துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
உங்களின் அடுத்த கவலை, தனி ஈழத்தை ஆதரித்தால் காஷ்மீரையும் ஆதரிக்க வேண்டுமே..... என்பது. ஆனால் என்ன செய்ய? ஈழத்தில் நாம் தனி ஈழத்தை ஆதரிக்கிறோமோ இல்லையோ காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்பதில் ஜனநாயகத்தை பேணக் கோருகிறோம். காஷ்மீரை ஆக்ரமித்திருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் அங்கிருந்து வெளியேற வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட நேரு காலத்திய வாக்குறுதிகளின்படி காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா?
இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா? இல்லை இந்த இருவரிலிருந்தும் விலகி தனியாக இருக்க விரும்புகிறார்களா? என்று வாக்கெடுப்பு நடத்தி அதை அந்த மக்களின் முடிவுக்கே விட வேண்டும்.அது போலத்தான் ஈழமும். அங்கு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையே தவிர அது சுதந்திர தமிழீழமா? இல்லை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் பெற்ற ஈழமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமையும் பொறுப்பும் ஈழ மக்களுக்கு மட்டுமே உண்டு.
எந்த மூன்றாவது நாடும் அதைத் தீர்மானிக்க முடியாது. இந்தியாவுக்கும் அந்த உரிமை இல்லை. இதைச் சொன்னால் நம்மையும் ஜிகாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.1987ல் தீர்வைச் சொல்கிறேன் என்று அதிகப்பிரசங்கித்தனமாக இலங்கை விவாகரத்தில் ஒரு தலைப்பட்சமாக தலையிட்டது இந்தியா. ஈழ மக்களை சதுரங்கக் காய்களாக்கி இந்தியாவும் இலங்கையும் ஆடிய விளையாட்டில் பலியானதென்னவோ ஈழ மக்களும் இந்திய சிவிலியன்களும்தான். ஈழ மக்களுக்காய் போராடிக் கொண்டிருந்த புலிகளோ அதை வேடிக்கை பார்க்கும்படியாயிற்று. கடைசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீர்களை இழந்து, அமரிக்கா வியட்நாமில் சந்தித்ததை இந்தியா ஈழத்தில் சந்தித்தது. சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வி முகத்தோடு நாடு திரும்பும்படியாயிற்று. இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் அரசியல் ரீதியிலான ராணுவ ரீதியிலான தோல்வி மட்டுமல்ல நமது ராஜதந்திரத்தின் மீது விழுந்த அசிங்கமான அடியாகும்.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திய அந்த ஒப்பந்தத்தின் சாரமே இன்று இலங்கை அரசால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்து அதில் கிழக்கை துரோகக் குழுவான கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது இலங்கை அரசு. (இப்போது பிள்ளையானும் கருணாவுமே ஒருவரை ஒருவர் கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக்கதை)உலகெங்கிலும் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டங்களை உண்மையாக இந்தியா ஆதரித்த காலம் ஒன்று உண்டு. பாலஸ்தீனத்துக்கு தார்மீக ஆதரவைக் கொடுத்த காலம் உண்டு.
மத்திய கிழக்கோடு உறவு வைத்த காலங்களும் உண்டு. எப்போதெல்லாம் இந்தியாவை அண்டி நடக்கும் இன விடுதலைப் போரை அது ஆதரித்தது வந்ததோ அப்போதெல்லாம் இந்தியாவின் இறைமை காக்கப்பட்டதும் உண்டு. ஆனால் பாலஸ்தீனத்தை ஆதரித்தவர்கள் இப்போது இஸ்ரேலின் டெக்சார் ஏவுகணையை சிறிகரிகோட்டாவில் இருந்து ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பாலஸ்தீனத்திற்கு 100 கோடி ரூபாய் உதவியும் செய்கிறார்கள். அப்படியானால் இந்தியாவின் வெளியிறவுக் கொள்கைதான் என்ன? அணிசேராக் கொள்கை என்னவானது?சரி ஈழத்தை ஆதரித்தால் இந்தியாவின் வட கிழக்கில், காஷ்மீரில், தமிழகத்தில் கொந்தளிப்புகள் உருவாகும் என்பதெல்லாம் கடந்த முப்பதாண்டுகளக சொல்லப்பட்டு வந்த புனைவாகும். காஷ்மீரின் சுயாட்சிக் கோரிக்கையும், வடகிழக்கின் கொந்தளிப்புகளையும் புரிந்து கொண்டு பார்த்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவர்கள் பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளே அன்றி உழைக்கும் மக்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தண்ணீருக்கான நமது உரிமையை மறுத்தாலும் பெங்களூரில், மும்பையில் தமிழர்கள் தாக்கப்பட்டாலும் பிற இன மக்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் அறுந்து போகவில்லை. மாறாக தேசியம் என்பது இங்கு தரகு முதலாளித்துவம் சார்ந்ததாகவும், சாதியத்தைப் பேணுவதாகவும் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றுவதாகவும் இருக்கிறது. இது தங்கள் இன மக்களை தாங்களே சுரண்டும் உரிமை கோரும் முறையாக இருப்பதால் இனவாரி தேசியத்தை இன்று ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.
இந்தியாவின் பன்மைத்தன்மையில் சாதி இழிவு, சுரண்டல் பொருளாதாரம், பார்ப்பன பாசிசம், இவைகளைத் தவிற பல்லின உழைக்கும் மக்களிடம் கொண்டாடவும் உறவு கொள்ளவும் எவ்வளவோ கலாசார அம்சங்கள் இருக்கிறது. தவிரவும் பிற இன உழைக்கும் மக்கள் எப்போதும் இன்னொரு இன மக்களிடம் துவேசம் காட்டியதில்லை என்பதே என் கருத்து. ஆனால் இந்தியாவின் இந்த பன்மைத் தன்மையை சிதைத்தவர்கள் யார்? பாபர் மசூதியை உடைத்தவர்கள் யார்? தேவாலயங்களைத் தாக்கி கிறிஸ்தவர்களைக் கொன்றவர்கள் யார்? ஈழத்தில் இன்று வரை படுகொலைகளை செய்தது யார்? ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்கள் யார் என்றால் இன்று ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று பார்ப்பனர்களின் மாஸ்டர் மைன்டாக செயல்பட்டு இதை செய்கிறார்கள். அவர்களே இந்த நாட்டை இந்துப் பாசிசமாக மாற்றுகிறார்கள். இலங்கையில் சிங்களப் பாசிசத்துக்கு உதவி புரிகிறார்கள்.தோழர்களே! நமக்கெல்லாம் இந்த நாட்டில் பூர்வீக இடமொன்று உண்டு. மலையாளிக்கும், தெலுங்கர்களுக்கும், கன்னட மக்களுக்கும், கூர்க்காக்களுக்கும், தமிழர்களுக்கும் ஓர் இடம் உண்டு.
கலாசார ஓர்மைகளுடன் வாழவும் மொழியைப் பேணவும் ஒரு மாநில அமைப்புக்குள் முரண்பாடுகளோடு இருந்து கொண்டே இந்த தேச நலனில் அக்கறை பேணுகிறோம். ஆனால் இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கான இடம் எது? எந்த மாநிலம் உங்கள் மாநிலம்? உங்கள் மொழி எந்த மாநிலத்தில் பெருமளவு மக்களால் பேசப்படுகிறது? என்றால் இந்த கேள்விகளுக்கு விடையாகத்தான் நீங்கள் இந்துப் பாசிச கலாசார தேசியத்தை கட்டமைக்கிறீர்கள். அதற்குத் தோதாக தேசிய இனங்களின் சிறைச்சாலையான இந்தியா உங்களுக்கு வாய்த்திருக்கிறது. சிறைகள் உடைவது இயல்பு வெலிக்கடை சிறையைப் போல....அப்படி ஒரு வேளை இந்தியா சிதறுமானால் அழிந்து போவது பார்ப்பனர்கள் மட்டுமே... இப்போது உங்களுக்குப் புரிகிறதா, ‘ஜெ’ ஏன் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பதும், காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதும். இந்து ராம் ஏன் ஈழத்துக்கும் காஷ்மீருக்கும் முடிச்சுப் போடுகிறார் என்பதும் என்ன காரணத்திற்காய் அவருக்கு சந்திரிகாவின் தலைமையிலான அரசு விருது கொடுத்தது என்பதும். அக்டோபர் 14ஆம் தேதி மாலினி பார்த்தசாரதிக்கு ஏன் கொதிப்பு வருகிறது என்பதும் உங்களுக்குப் புரிகிறதுதானே?
ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் இந்தக் கொந்தளிப்புகள் தேர்தல் நேர ஸ்டன்ட் என்றிருக்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். ஜெயலலிதாவும், வைகோவும் வேறு வேறு நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் சந்தோசமாகச் சொல்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். அவர்கள் அப்படி சொல்லும் நிலையில்தான் வைகோவின் அரசியலும் இருக்கிறது என்பது வேறு கதை. ஆனால் இப்போது நம்முன்னால் திரண்டிருக்கும் கேள்விகள் இரண்டு.ஒன்று இந்த கொந்தளிப்புகள் உண்மையிலேயே தேர்தல் நேர ஸ்டண்ட் மட்டும்தானா?இரண்டு இந்த கொந்தளிப்புகளை எத்தனை காலத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்.இவைகள் சிக்கலான கேள்விகள். ஆனால் விடை கண்டாக வேண்டிய கேள்விகள். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் (அமெரிக்காவின் ராணுவக் கொள்கைதான் இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை) கூட இன்று நேரடியாக மாநில அரசுகளைப் பாதிக்கும் சூழலில் தமிழக அரசு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்ற எளிய மக்களை பாதிக்கும் சிக்கல் சுழலில் சிக்கியிருக்கிறது. அது மக்களையும் பாதிக்கிறது. ஆனால் இதற்கு முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே பொறுப்பேற்க முடியாது. மக்கள் விரோத காங்கிரஸ் அரசுதான் இந்த விலைவாசி உயர்வுகளுக்கு காரணம். தமிழகத்தில் கொண்டு குவிக்கப்படும் அந்நிய முதலீடு மக்களை ஏற்றத் தாழ்வு என்னும் வகிடில் நின்று இரண்டாகப் பிரிக்கிறது என்பதை கலைஞர் அரசு உணர வேண்டும்.
அதே சமயம், மீண்டும் தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற பார்ப்பன பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவார் என்றால் இதே விலைவாசியையும், மின்வெட்டையும் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடுவதோடு மக்கள் விரோத ஜனநாயகமற்ற ஒரு பாதையில் தமிழகம் இன்னொரு முறை பயணிக்க நேரிடும். ஏனென்றால் கருத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட காலங்களை ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி வரை நாம் காண முடியும். திரட்சியான மக்கள் போராட்டங்களின் போது, மக்களுக்கு எதிரான தவறான திட்டங்களை தன்னுடைய ஆட்சியில் கலைஞர் ஒத்திப் போட்டே வந்திருக்கிறார்.ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இவைகள் எதுவும் மறுக்கபட்டு ஜனநாயகமற்ற ஏதேச்சதிகாரமான நடைமுறைகளை மட்டுமே நாம் அனுபவிக்க நேர்ந்தது. காலமும் சூழலும் கனிந்துள்ள இந்த வேளையில் நாம் கலைஞரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக.இல்லை என்றால் நாம் அழிந்துதான் போவோம். முதலில் அவர்கள் பின்னர் நாம்.
- நன்றி பொன்னிலா, Keetru
Thursday, October 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment