Saturday, October 25, 2008

சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்

குமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது.யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது.

எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம். எஸ்தோனியாவைப் போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம்.

குமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.வழக்கமான குமிழ் பல்புகளைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன.

குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்துவிடுகின்றன. மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்துவிடுவதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

http://www.sciencedaily.com/releases/2008/10/081001093454.htm-

நன்றி தகவல்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)

No comments: