உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் தனது அதிகாரத்தை நுளைத்து, அதற்குரிய சமூக நீதியையும் கட்டமைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்திவந்த அமரிக்காவும் அதன் பங்கு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இன்று பதட்டமும் அதிர்ச்சியுமடைந்து போயிருக்கின்றன. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையில், ஐரோபிய-அமரிக்கத் தலை நகரங்களிலெல்லாம் நாளிகைக்கு நாளிகை நிபுணர்கள் புடைசூழ கூட்டம்போட்டுப் திட்டங்கள் வகுத்துக் கொள்கிறார்கள்.
வறிய மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக ராட்சதக் கோப்ரேட் கம்பனிகளைக் காப்பாற்ற வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத தோல்வியென்பது அதிகமாகக் கடன் வாங்கியதாலும் அதிகமாகச் சாப்பிட்டதாலும் ஏற்பட்டதென்று வறிய மக்களின் தலையில் பழியைப் போட்டுவிட்டு வறிய மக்களைச் சுரண்டி வாழ புதிய திட்டங்களை வகுக்கவாரம்பித்து விட்டார்கள்.
ஏகாதிபத்தியம் என்பது அதிகார வர்க்கத்திற்குச் சேவை செய்யும் அமைப்புமுறை. ஜனநாயகத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மக்களைச்சுரண்டி வாழும் தன்மைகொண்ட இந்த அமைப்புமுறை நிலைபெறாது. என்ற ஜோன் ஹொப்சனின் கூற்று இன்றைக்கு மறுபடி நிரூபணமாகிறது.
வியாபாரம் செய்வதற்காக மட்டுமே ஏனைய நாடுகளை ராணுவ வன்முறையூடாக அடிமகளாக்கி காலனித்துவ ஆட்சி நடாத்திய வல்லரசு நாடுகள், முதலாமுலக யுத்தத்திற்குப் பின்னதாக வறிய நாடுகளைச் சுரண்டுவதற்காக முதற்தடவையாக தமது அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை மறு ஒழுங்கமைப்புச் செய்துகொண்டன. நிலப் பிரப்புத்துவ சமூக அமைப்புமுறை போன்ற முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த அமைப்பு முறைகளைப் போலல்லாது முதலாளித்துவ அமைப்பு தோன்றிய மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பல தடவைகள் சரிந்து விழுந்திருக்கிறது.
அமைப்பியல் நெருக்கடி
1970 களின் ஆரம்பத்தில் உருவாகியிருந்த பொருளாதார நெருக்கடியின் போதே இன்று உடைந்து சரியும் நவ-தாராளவாதக் கொள்கை தொடர்பான படிமங்களும் கட்டமைகளும் உருவானது. 70 களின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு உருவாக்கப் பட்ட ஒழுங்கமைப்பு முறையே இந்த நவ-தாராள வாதக் கொள்கையும் அதனைத் தொடந்துவந்த உலகமயமாதலுமாகும். உலக மயமாதல் மட்டும் தான் உலகத்தின் விடிவெள்ளி எனப் பாராட்டி மிகச்சில மாதங்களுகுள்ளேயே இத்தாலிய நிதியமைச்சர் ஜூலியோ திரிமொந்தி “உலகமயமாதலின் அபாயம்” என்ற நூலைப் எழுதியிருக்கிறார்.
70 களில் மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு மிகவும் அடிப்படையான எதிர் சக்தியாக அமைந்தததும் பயவுணர்வைக் கொடுத்ததும் சோசலிச நாடுகளாக அமைய, ஐரோப்பிய அமரிக்க தொழிலாளர் வர்க்கத்தைப் பலவீனப்படுத்தி அதிக இலாபத்தை பெறும் நோக்கிலேயே மூலதன உடமையாளர்கள் தமது முதலீடுகளை மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்த்தவாரம்பித்தன.
நவதாராள வாதக் கொள்கை அல்லது உலகமயமாதலுக்கு மேற்குலகத் தொழிலாளர்கள் கொடுத்த விலைகளில் ஒன்று வேலையிலாத் திண்டாட்டமாகும். இதனால் தேவையானளவு நிலுவைத் தொழிலாளர் (Reserve army of labour) படையை தத்தமது நாடுகளில் உருவாக்கிக் கொண்ட முதலாளித்துவம், வேலையற்ற தொழிலாளர்களை திருப்திப்படுத்த சமூக உதவித் திட்டங்களை அதிகப்படுத்தியதுடன், அச்சமூக உதவித்திட்டங்களையும், வறிய நாடுகளிலிருந்து சுரண்டிய பணத்தில் அமுல்படுத்திக் கொண்டது.
1970 களில் அமைப்பியல் நெருக்கடி (Structural Crisis) என வர்ணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி 80 களின் ஆரம்ப்பம் வரை நீடித்தது. அருகிப்போன தொழில் உற்பத்தித் திறன், குறைவடைந்த வளர்ச்சி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பொருளாதார நிலையற்ற தன்மை (Macro Instability - Boom and recessions) என்பனவையே அமரிக்கவின் ஜனாதிபதியாகவிருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த மாக்ரட் தட்சர் ஆகியோரின் தலைமையில் இன்று உலகமயமாதல் என்ற, நெருக்கடிககு உள்ளாகியிருக்கும் பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்ட தென்பதை குறித்துக் காட்டும் ஜோர்ஜ் சொரஸ் இன்றைய நெருக்கடியென்பது முற்றிலும் வேறுபட்ட இருப்பிலுள்ள முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் தீர்க்க முடியாத பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஏறத்தாள 20 வருடங்களில் உலகின் மூலைமுடுக்கெல்லாம் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கிராமப்புறங்களாகிவிடுமோ என அச்சம் கொள்ளும் அளவிற்கு அளவிற்கு இந்த உலகமயமாதல் பரந்து விரிந்துவிட்டது.
ஏகதிபத்தியத்தின் உச்ச வடிவமான இந்த உலகமயமாதலே சரிந்து விழுகிற நிலைக்கு வந்தபின்னர் இனிமேலும் ஏகாதிபத்திய அமைப்பு முறையும் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நாடுகளும் இன்னும் நிலைக்க முடியுமா என்ற கேள்வி பொருளியியல் வல்லுனர்களிலிருந்து சாதாரண மக்கள்வரை பதிலுக்காக அலசப்படுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் முதலாளித்துவம் பொறிந்து விழும் போதும், 70 களில் ஏற்படுத்தப்பட்ட நவ-தாராளவாதம் என்ற புதிய ஒழுங்கமைப்பைப் போல புதிய ஒழுங்கமைப்புகளூடாக அது மறுபடி மறுபடி தூக்கி நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தடவை நிலமை முற்றிலும் மாறுபடுகின்றது.
இனிமேல் இன்னொரு மறு ஒழுங்கமைப்புச் சாத்தியமில்லை என்ற நிலை தோன்றிவிட்டதைப் பல முதலாளித்துவப் பொருளியல் வல்லுனர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஐரோப்பாவினதும், அமைக்காவினதும் ஆதிக்க வாழ்வுக்காலம் இன்னும் சில குறுகிய வருடங்களே என பலர் எதிர்வுகூற ஆரம்பித்துவிட்டார்கள்.
கார்மார்க்ஸ் சொன்னபடி..
ஆனால் 160 வருடங்களுக்கு முன்னமே கார்ல் மார்க்ஸ் இந்த நெருக்கடியை எதிர்வு கூறிய போது அவர் பயங்கர வாதியாகவும், குழப்பவாதியாகவும் சித்தரிக்கப்பட்டார்.
‘Trajectories a la Marx’ என்று பிரபலமாக அறியப்பட்ட சொற்தொடர்களூடாக குறித்துக்காட்டப்படும் கார்ல் மார்க்சின் பொருளியல் சிந்தனை கூறும் விசைப் புலம் என்பது முதலாளித்துவம் நீண்ட காலத்திற்கு நிலைபெற முடியாது என்பதற்குரிய காரணத்தை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவுபடுத்துகின்றது.
இந்தத் தர்ககீக நிறுவலிலிருந்துதான் கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் முதலாளித்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து கம்யூனச சமுதாயம் உருவாகும் என்ற முடிபுக்கு வருகின்றனர்.
விஞ்ஞான பூர்வமான சமூகவியலை உலகிற்கு அறிமுகப்படுத்திய கார்ல் மார்க்ஸை இன்று முதலாளித்துவப் பத்திரிகைகள் மட்டுமல்ல மதகுருக்கள் கூட நிலைவுகூருகின்ற நிலை உருவாகிவிட்டது. “கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் முதலாளித்துவ பொருளியல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.” என்று பிரித்தானிய கார்டியன் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. “கம்யூனசத்தின் நவீன தந்தையான கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் பற்றி விமர்சித்தது பகுதியாகச் சரியானதே” என்கிறார் கன்பரி மதகுரு.
மூலதனத்தை, சொத்துக்களைப் பொது உடமையாகவல்லாமல் தனி உடமையாகப் பேணுவதென்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சாராம்சமாக அமைய, மூலதனத்தின் முகாமைத்துவம் என்பது இன்னொரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
இவை இரண்டையும் தவிர, பெரும் பொருளாதாரக் கூறுகள் (Macro economy) மூலதனத்தைத் தனியுடமையாகப் பேணுதலில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
1. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஓரிடத்தில் -தனி மனிதர்களிடமோ, பெரும் கம்பனிகளிடமோ- மூலதனம் குவியும் போது, அதனைப் சேமிக்கவேண்டிய தேவை அதன் உடமையாளர்களுக்கு அவசியமாகிறது. இதனூடாக கடன் பொறிமுறை(Credit Mechanism) உருவாகிறது. இவ்வாறான கடன் பொறிமுறை என்பது, வங்கிகளூடான பண வினியோகத்தினூடாக நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறான பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத எல்லையற்றதாக இயல்பாகவே உருவாகிவிடுவதால் இலாபத்தினூடாகக் குவிந்த மூலதனத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது என்று டொமிக் லேவிஸ் மற்றும் ஜெரா டுமினெல் ஆகியோர் தமது ” நவதாரளவாதத்தின் இயல்பும் முரண்பாடுகளும்” என்ற தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது அடிப்படையே இதிலிருந்து தான் உருவாகிறது.
2. கார்ல் மார்க்ஸ் தெளிவாகக் கூறுவது போல உழைப்பு சக்தியை வாங்குதல் என்பது முதலாளித்துவத்திற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக அமைகிறது. ஊதியத்தின் விலையைத் தீர்மானிப்பதற்கு காலத்திற்குக் காலம் தொழிலாளர்படையின் மீளமைப்பு (periodic replenishment of army of labour) என்பதே மையப் பகுதியாக அமைகிறது. இந்த மீளப்பினூடாக வேலையற்ற ஒரு பகுதித் தொழிலாளர்களை உருவாக்குவதனூடாக ஏனையோரின் ஊதியத்தின் உயர்வைத் தடுப்பதற்கும் அதனூடாக இலாபத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பைப் பேணுவதற்கும் முதலாளித்துவம் மறுபடி மறுபடி திட்டங்களை வகுத்துக் கொள்ளும்.
இந்த இரண்டு முக்கிய முதலாளித்துவப் பொறி முறையின் அடிப்படைக் கூறுகளே 2008 இல் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடியினதும் முதலாளித்துவத்தின் சரிவினதும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.
70 களில் உருவான பொருளாதார நெருக்கடின் போது உலகமயமாதல் என்ற புதிய ஒழுங்குமுறை மூலதனத்தை சுதந்திரமாக உலாவவிட்டது. இதனால் வளர்ச்சியடைந்த ராட்சத வியாபார நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகரவாரம்பித்தன. இதனால் தம்மை மேற்குலகக் வியாபார நிறுவனங்கள் மறுபடி வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பணம் பெருகியது. மூலதனம் குவியவாரம்பித்தது.
இன்றைய நெருக்கடியின் அடிப்படைகள்
70 களில் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட முதலாளித்துவம், புதிய திட்டங்களை வகுக்கத்தொடங்கியது. 70 களில் ஏகாதிபத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து வந்த அமைப்பு மயப்பட்டிருந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள், கூலியுர்வுக்கான தொழிற்சங்கப் போராட்டங்கள், ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் போன்றவற்றாலும் மார்க்சிய தத்துவத்தின் ஆதிக்கத்தாலும் திகிலடைந்து போயிருந்த ஏகாதிபத்திய அதிகார வர்க்கம் புதிய ஒழுங்கமைப்பு ஒன்றை முன்வைத்து தன்னை மறுபடி நிலை நிறுத்திக்கொள்வதில் வெற்றிகண்டது.
1. இலாபம் என்பதையே அடிப்படையாக் கொண்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கூலியுயர்வுப் போராட்டங்களை நடாத்திவந்த ஒழுங்கமைக்கப்பட்ட மேற்குலக தொழிலாளிகளிடமிருந்து தப்பித்து வறிய நாடுகளில் மலிவான கூலியைத் தேடி நகரவாரம்பித்தது. இந்த நடைமுறைதான் கார்ல் மார்க்ஸ் கூறும் வேலையற்ற தொழிலாளர்களை உருவாக்கும் நடைமுறை வேலைத்திட்டமாக அமைந்தது.
இவ்வாறான தொழிலாளர் படையின் உருவாக்கத்தினால், பிரித்தானிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கட்டுபடுத்தப்பட்டது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எண்ணை பிரித்தானிய லொறிச் சாரதிகளுக்கு 1922 இலிருந்து எந்த ஊதிய உயர்வுமே வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடலாம். இத்தொழிலாளர்கள் வேலைனீக்கம் செய்யப்பட்டால் பிரதியீடு செய்யப்படுவதற்கு வேலையற்ற தொழிலாளர்படை ஒன்று தயாராகவுள்ளது. முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் இந்த நடைமுறையூடாக இன்னொரு மிகப்பெரிய மாற்றம் இயல்பாகவே நடந்தேறியது. இது தான் இன்றைய மீட்சியற்ற நெருக்கடிக்கு முதலாளித்துவத்தை நகர்த்தியது.
நெருக்கடியின் ஆரம்பம் என்பதே உற்பத்தி மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்ந்ததிலிருந்து தான் உருவாகிறது.
உற்பத்தித் திறனுள்ள தொழிற்துறைகளெல்லாம் மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்ந்ததன. இந் நகர்வின் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்திசார் தொழிற்துறைகள், மின்னியற் தொழிற்சாலைகள், என்பன முற்றாக அழிந்துபோக, சிறிய உற்பத்தித் துறைகளும் சேவைத் துறையும், வங்கி மூலதனமும் மட்டுமே ஏகாதிபத்திய நாடுகளை, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் மூலதன இயக்கததை செலுத்திக் கொண்டிருந்ததது. உதாரணமாக மின்னியற் துறையென்பது 90 களின் பின்னர் வேகமாக வளந்ததன் கூறாக, தகவற் தொழில் நுட்பம் விரிந்து பரவியது.
பிரித்தானியாவிலும் அமரிக்காவிலும் 80 வீதமானவர்கள் கணணிப் பாவனையாளர்களாகவும் அதனோடு பரீட்சயமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால், HP, Dell போன்ற மிகப் பிரபலமான கணணித்தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி சார் தொழில்களெல்லாம் இந்தியா சீனா போன்ற நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
கணனிப் பொறிகளின் பொதுவாக எல்லா உபகரணங்களும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட அவற்றின் பெரும் பகுதியான விற்பனை மட்டும் ஏகாதிபத்திய நாடுகளில் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்ததது.
இவாறு மலிந்த உழைப்புச் சக்தியூடாக குவிந்த மூலதனத்தின் அதிபதிகளாக ஐரோப்பிய-அமரிக்க முதலாளித்துவம் அமைய, அவற்றின் பாதுகாவலர்களாக இந்நாடுகளின் அரசுகள் திகழ்ந்தன. இந்த அரசுகளுக்கு தாம் சார்ந்த உள்ளூர் மக்களைத் திருப்திப்படுத்தவும், மூலதனத்தின் இயக்கத்தைப் பேணவும் ருவாக்கப்பட்டதே கடன் பொறிமுறை.
2. வங்கிகளின் ஊடான கடன் பொறிமுறை.
பங்குச் சந்தையில் முதலிடப்படும் பணத்தையும் சேமிப்புப் பணத்தையும் பொதுமக்களுக்கான கடனாக வழங்கும் நடைமுறையூடாக கடன் பெறுவோரிடமிருந்து வட்டிப்பணத்தை லாபமாகப் பெற்றுக்கொள்ளல் என்ற வியாபார இயக்குனிலைதான் ( Business dynamism) இந்தக் கடன் பொறிமுறை. இந்தக் கடன் வழங்கும் பொறிமுறையில் ஒரு உச்ச நிலைதான், வீட்டுக் கடன் திட்டமாகும். வீட்டுக் கடன் வட்டி வீதம் குறைவடைய, வீடுகளைப் பல தேவைகள் கருதிக் கொள்வனவு செய்யும் போக்கு அதிகரித்தது.
இதனால் வீடுகளின் கேள்வி(Demand) அதிகரித்தது. இதனால் வீடுகளின் விலை அதிகரித்தது. அமரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் இதன் விலை 10 வருடங்களுக்குள் சராசரியாக 60 வீதமாக அதிகரித்தது. இதனால் வீட்டுச் சந்தையில் முதலிடும் நிறுவனங்களின் தொகையும் கடன் வழங்கும் வங்கிகளின் தொகையும் அதிகரித்தது. மறுபுறத்தில் மூலதத்தின் இயக்கம் (Dynamism of capital) அதிகரிக்க முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை பாதுகாக்கப்பட்டது.
இவ்வாறான முதலாளித்துவக் கடன் பொறிமுறையூடாக:
1. மூலதனத்தின் சுற்று முறையும் முதலாளித்துவமும் பாதுகாக்கப்பட்டது.
2. மூன்றாமுலக நாடுகளை நோக்கிய முதலீடுகளூடான இலாபம் மேலும் பெருகியது.
3. ஐரோப்பியத் தொழிலளர்களின் சம்பள உயர்வு குறித்தளவு உறுதி செய்யப்படிருந்தாலும் கடன் தொகைக்கான வட்டியாகவும் வரியாகவும் அது மறுபடி அறவிடப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் உற்பத்தித் திறன் சார் தொழிற்துறைகளில் முதலீடுகளே அற்றுப்போயிருப்பதாகக் கூறும் பொருளியலாளர் மைக்கல் ரொபேட், வீட்டுக்கடன் திட்டம் மட்டுமே பொருளாதாரத்தை இயக்கும் பிரதான காரணியாக அமைகிறது என்று 24/06/2008 இல் வெளியான தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
ஆக, வேறு உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்துறைகள் மூன்றாமுலக நாடுகளை நோக்கி உலக மயப் பொருளாதாரத் திட்டத்தினூடாக நகர்ந்துவிட, கடன் பொறிமுறையில் இயங்கிக் கொண்டிருந்த அமைப்புமுறை சரிந்து விழுந்துகொண்டிருக்கிறது. மூன்றாமுலக நாடுகளில் உற்பத்திசெய்து, லாபப் பணத்தை மறுமுதலீடு செய்வதனூடாக இயங்கிக் கொண்டிருந்த முதலாளித்துவம் மாற்றுவழிக்காகத் திண்டாடிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு உருவான உற்பத்தித் திறனற்ற கொள்வனவு மனோபாவமுள்ள சமூகமானது, பிரித்தானியாவில் மட்டும் ஒவ்வொரு குடும்பத்தையும் சராசரியாக 59,350 ஸ்ரேளிங் பவுண்ட் கடன் தொகையைச் செலுத்த வேண்டிய கடனாளியாக மாற்றியுள்ளது.
மொத்தக் கடன் தொகையானது 10.6 பில்லியன் ஸ்ரேளிங் பவுண்களாக கடந்த 12 மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது.2007ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சராசரி தனிமனித ஊதியம் 1338 பவுண்களாயிருக்க சராசரி வாழ்க்கைச் செலவு இதற்குச் சற்று அதிகமானதாக அமைந்திருந்தது.
இந்நிலையில் அதிகரிக்கும் கடனை மீளச் செலுத்த முடியாத வாழ்க்கைசெலவின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் மேற்குறித்த வேலையில்லாத் திண்டாட்டதின் அதிகரிப்பையும் கொண்டிருந்த மேற்கத்திய வாழ்வு முறை, கடன்வழங்கிய வங்கிகளுக்கு பெருத்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. 90 பாகையில் விலையேறிக் கொண்டிருந்த வீடுகளை விட்டுவிட்டு கடனாளிகளான பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வர, வீடுகளின் விலை சரிய வாரம்பித்தது.
இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த பெருமுதலாளிகளும் நிறுவனங்களும், வங்கிகளிலிருந்து தமது பங்குகளை மீளப் பெற்றுக்கொள்ள, வங்கிகள் சரியவாரம்பித்தன.
2006 ஆம் ஆண்டிலிருந்தே அமரிக்காவில் வங்கிகளில் இழப்புக்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தாலும் அதன் பெரிய அளவிலான இழப்பு 2008 இலிருந்தே ஆரம்பித்த்து. சேமிப்பு வங்கிகள் ஆரம்பத்தில் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக, பின்னதாக பிரதான பெருந்தெரு வங்கிகளும் நஷ்டத்திக்குள்ளாகி வங்கிகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
என்ன செய்யப் போகிறோம்?
முதலாளித்துவம் இந்தநெருக்கடியைத் தற்காலிகமான கடன்நெருக்கடி என்ற மாயையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பின் மீது ஏற்படக்கூடிய அவநம்பிக்கையை தவிர்க்கும் எல்லாப் பிராயத்தனங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருக்கிறது.
இன்று இயங்கிக் கொண்டிருந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தினது இயக்கம் நின்று போய் விட்டது. உற்பத்தித் திறனுள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியற்றுப் போன நிலையில் வேறு வகையான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்வைக்க முடியாத இருப்பிலுள்ள அமைப்பு, புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான காலத்தை வங்குவதற்காக மட்டும், தற்காலிகத் திட்டங்களை முன்வைக்கின்றன.
700 பில்லியன் டொலர் சாதாரண மக்களின் வரிப்பணத்தை வங்கிகளுக்குத் தாரைவார்த்த அமரிக்க அரசாங்கமோ, 50 பில்லியன் இழந்த பங்குகளைத் தனதாக்கிக் கொண்ட பிரித்தானிய கோர்டன் பிரவுண் அரசோ மேலதிகமான திட்டங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.
பெரும் கோப்ரேட் நிறுவனக்களிடம் குவிந்து போயிருக்கும் மூலதனத்தைப் பற்றி இன்னும் மூச்சுக்கூட விட முடியாத நிலையில், கட்டுப்பாடான முதலாளித்துவ முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் உலகின் வங்கிகளிடையேயான ஒத்துளைப்புப் பற்றையும் பேசிக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகள், முன்னைய பொருளாதார நெருக்கடிகளின் போது வறிய நாடுகளைச் சுரண்ட புதிய திட்டங்களை வகுக்க முனைகின்ற போதும், அது இலகுவானதல்ல. சீன முதலாளித்துவத்தின் பாய்ச்சல் நிலை வளர்ச்சியென்பதும், மூன்றாமுகல நாடுகளில் பகுதியான உற்பத்திசக்திகளின் நவீன மயப்படுத்தலும் முன்னைய நேருக்கடிகளின் புறச் சூழ்னிலைகளல்ல.
அமரிக்கா தலைமையிலான பொருளாதார ஏகபோகம் முடிபுக்கு வருகிறது.
இது மீண்டும் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயலும். இங்கு இடது சாரிகளின் மாற்று வழியென்ன? பொருளாதார ஏகபோகம், அதிகாரம் என்பன மேற்கிலிருந்து கிழக்க்குக்கு இடம் பெயர்வதையும், மேற்கு முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் கார்ல் மார்க்ஸ் முன்னமே சொல்லிவிட்டார் என்று பெருமையடித்துக் கொண்டால் மட்டும் போதுமானதா?
Bibliography:
Britain: The housing tsunami: Michael Robert. 2008
The politics of financial service revolution: Michael Morgan. 1991
The Globalisation Decade: A critical Reader : AAKAR BOOKS. 2006
Financial Time UK
The New Paradigm for Financial Markets: The Credit Crisis of 2008 and
What It Means : George Soros.2008
Copyright:thinnai.com
நன்றி : சபா நாவலன், thinnai.com
காவி கும்பலின் கோரப்பிடியில் நீதித்துறை
1 hour ago
1 comment:
me the first
Informative Post
Post a Comment