அந்தச் செய்தியைக் கண்டவுடன் ஜெயலலிதா தான் என் நினைவுக்கு வந்து போனார். என்ன இருந்தாலும் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டு முதலமைச்சராகப் பணியாற்றுவதென்றால் சும்மாவா! அதற்கெல்லாம் ஒரு BIG மனசு வேண்டும். அந்த BIG மனசு இப்போது BIG 3 நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வந்துள்ளது; சரியாகச் சொன்னால் வந்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் ஆகிய மூன்று முக்கியமான வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே BIG 3 என அறியப்படுகின்றன. மேட்டுக்குடி சமூகத்தின் சொத்து எனக் கருதப்பட்ட மோட்டார் காரை வெகு மக்களும் வாங்கிப் பயனுறுமாறு வடிவமைத்து, அதற்கேற்ப தயாரிப்பு முறைகளையும் தொழிற்சாலையையும் தகவமைத்து மாடல் - T கார் மூலம் புரட்சியை ஏற்படுத்தியவர் ஹென்றி ஃபோர்டு. அவரது 'ஃபோர்ட் மோட்டார்ஸ்' நிறுவனம் உலகின் முதன்மையான கார் கம்பெனியாக விளங்கியது. அதன் பிறகு தொடங்கிய ஜெனரல் மோட்டார்ஸ் ஃபோர்டை முந்திக்கொண்டு சென்றது. ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிர்வாகியாக இருந்த கிரைஸ்லர் தனியாகப் பிரிந்து சென்று ஆரம்பித்தது மூன்றாவது கம்பெனி. இவை மூன்றுமே BIG 3 என அமெரிக்க ஆட்டொமொபைல் அகராதியில் குறிக்கப்படுகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் நிறுவனங்கள் படிப்படியாகத் தலையெடுக்கும் வரை இந்த மும்மூர்த்திகளையும் அடித்துக்கொள்ள ஆளில்லை. பல பத்தாண்டுகளாக உலகின் மிகப் பெரிய கார் கம்பெனி என்று ஜெனரல் மோட்டார் கம்பெனி தக்க வைத்திருந்த இடத்தை இப்போது டொயாட்டா கம்பெனி பிடித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு பிரபலமான ஜப்பானிய கார் கம்பெனியின் அமெரிக்கத் தொழிற்சாலைக்காகப் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அப்போது ஃபோர்டு கம்பெனி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. ஜப்பானிய நிறுவனங்கள் இயங்குவதற்கும், அமெரிக்காவின் BIG 3 நிறுவனங்கள் இயங்குவதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தை உணரும் வாய்ப்பும் கிட்டியது.
அமெரிக்க நிறுவனங்கள் டெட்ராய்ட் நகர் உள்ள மிசிகன் மாகாணத்தில் அமைந்துள்ளன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மிக வலுவான United Auto Workers தொழிலாளர் யூனியனில் அங்கம் வகிக்கிறார்கள். அந்த கம்பெனிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மாதாமாதம் வீடு தேடி வந்து விடும். இந்த மூன்றுக்கும் போட்டியாக, பெரும் சவாலாக இருப்பவை டொயாட்டா மற்றும் ஹோண்டா ஆகிய ஜப்பான் கம்பெனிகள். ஆரம்பத்தில் ஜப்பானில் இவை உருவாக்கிய கார்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பைக் கண்டு BIG 3 பாய்ஸ் கலங்கித்தான் போனார்கள்.
அவை மூன்றும் ஆட்சியாளர்களிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இறக்குமதிக்கு முட்டுக்கட்டையும், உச்சவரம்பும் நிர்ணயிக்க முயன்றன. விளைவு? ஜப்பானிய நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தொழிற்சாலை திறந்தன. மலிவான விலையில், நீடித்து உழைக்கும் எஞ்சினோடு, குறைந்தபட்ச பராமரிப்பு மட்டுமே தேவைப்படுகிறதும் நிறைய மைலேஜ் கிடைக்கிற மாதிரியானதுமான கார்களை அவை உருவாக்கின. அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு நேரெதிர். தொடக்கத்தில் 'மக்கள் கார்' என்பதை மனதில் வைத்து வளர்ந்த ஃபோர்டு உள்ளிட்ட அமெரிக்க ஆட்டொமொபைல் நிறுவனங்கள் ஆடம்பரக் கார்களையே பெருமளவில் தயாரித்துக் கொண்டிருந்தன.SUV எனப்படும் படோபட வாகனங்களுக்கும், எருமை மாதிரி பெரிய கார்களையும் அமெரிக்கக் கம்பெனிகள் உருவாக்கின. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துப் பழகிய அமெரிக்க வெகுஜனத்தைக் குறிவைத்தே அது செய்யப்பட்டது. மைலேஜ் பற்றியெல்லாம் கவலையில்லை. எரிபொருள் குறைவாக இழுக்கும் கார்களைவிட இவை இலாபகரமானவை. SUV ரக வாகனங்களில் 15 முதல் 20 விழுக்காடு வரை இலாபம் சம்பாதித்த நிறுவனங்கள் சாதாரணக் கார்களில் 3 விழுக்காடு மட்டுமே இலாபம் ஈட்டின. மிசிகன் மாகாணத்திலேயே குவிந்து கிடந்த BIG 3 போலன்றி டொயாட்டாவும், ஹோண்டாவும் பிற மாநிலங்களில் கார்களை உற்பத்தி செய்தன. கடந்த 15 ஆண்டுகளில் 83,000 ஆட்டொமொபைல் வேலைகள் மிசிகன் மாகாணத்தில் குறைந்துள்ளன.
பிற மாகாணங்களில் சுமார் 91,000 பணிகள் உருவாகியுள்ளன. இதற்குப் பெருங்காரணம் BIG 3 அல்லாத நிறுவனங்களே ஆகும். மேலும் ஜப்பானிய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புச் செலவு கூடுதல். கடந்த காலத்தில் பணியாற்றிய ஊழியர்களின் ஓய்வூதியம், தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள், இதர வெட்டிச் செலவுகள், உயர் அதிகாரிகளின் படோபடம் என எல்லா வகையிலும் செலவுகள். ஒரு கார் தயாரிப்பதில் ஜப்பானிய நிறுவனங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கம்பெனிகளில் கிட்டத்தட்ட 1,500 டாலர் வரை கூடுதலாகச் செலவழிகிறது. வேறு விதமாகச் சொன்னால் ஒரே மாதிரியான காரை அமெரிக்க நிறுவனங்களைவிட ஜப்பானிய கம்பெனி ஒன்று சுமார் 75,000 குறைத்து விற்க இயலும்.
யுனைட்டேட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரம் 10-20 டாலர் வரை கூடுதலாக சம்பளம். இன்னொரு புறம் புதுமையான தயாரிப்பு முறைகள் மூலம் திறம்பட இயங்குவது ஜப்பானிய நிறுவனங்களுக்கே உரித்தானச் கூடுதல் அனுகூலம். 2006 இல் வெளிவந்த ஆய்வொன்று வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் முதல் பத்து மாடல்களும் ஜப்பானிய நிறுவனங்களின் தயாரிப்புகளே என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவில் 'முப்பெரும்' கம்பெனிகளின் மார்க்கெட் ஷேர் கடந்த பத்தாண்டுகளில் 70 இல் இருந்து 53 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே நாம் தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையை நோக்க வேண்டியிருக்கிறது.
இவ்வருட ஆரம்பத்தில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 140 டாலர் வரை போனது. ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, மலிவுக் கடன் கிடைக்காமை முதலிய அச்சுறுத்தல்களால் பெட்ரோல் குடிக்கும் அமெரிக்கக் கார்களை வாங்குவதை அமெரிக்கர்கள் குறைத்துக் கொண்டனர். அதிகக் காசு கொடுத்து, அதிகமாக எரிபொருள் குடிக்கும் காரை வாங்க வேண்டுமா என்ற பகுத்தறிவுக் கேள்வி அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாததை விட இப்போது வரவேற்கத் தக்க வகையில் அதிகரித்துள்ளதாகவே ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. லீமன் பிரதர்ஸ் உள்ளிட்ட சில மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் திவாலானதை அடுத்து ஜார்ஜ் புஷ் நிர்வாகம் நலிவடைந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக 700 பில்லியன் டாலர் மீட்புத் திட்டத்தை அறிவித்தது. அந்தப் பணம் பெரும்பாலும் நிதி நிறுவனங்களை மீட்பதற்கே பயன்படும் என்று கருதப்படும் நிலையில் அமெரிக்காவின் 'முப்பெரும்' வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் உதவி கேட்டுக் கையேந்தின.
உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் எல்லா நாடுகளிலும் தானியங்கி வாகனத் தொழிலில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாத கார் மற்றும் மோட்டர் பைக் விற்பனை, அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் போன வருடத்து எண்ணிக்கையில் இருந்து வெகுவாகக் குறைந்துள்ளது. மாருதி 27.4 சதவீத வீழ்ச்சி, டாடா மோட்டார்ஸ் 12.2 சதவீத வீழ்ச்சி, மகேந்திரா & மகேந்திரா 41.55 சதவீத வீழ்ச்சி, பஜாஜ் ஆட்டொ 37 சதவீத வீழ்ச்சி, டி.வி.எஸ் 12.7 சதவீத வீழ்ச்சி (ஹீரோ ஹோண்டாவிற்கு மட்டும் கூடவும் இல்லை குறையவும் இல்லை). உலகத்தில் அனைத்து தேசங்களிலும் இதே நிலைதான். அமெரிக்காவில் கார் விற்பனை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 17.7 சதவீதம் சரியுமெனக் கணிக்கப்படுகிறது. இது 1980 க்குப் பிறகு அந்தப் பொருளாதார வல்லரசு சந்திக்கும் மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும். 1980 இல் தானியங்கி வாகனத் துறை 19.1 சதவீதம் வீழ்ந்தது.
நான்கு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக சரிவையே அது சந்தித்தது. மறுபடியும் அப்படிப்பட்ட பரிதாபக் காட்சிகள் அரங்கேறும் என்பதே அநேக நிபுணர்களின் அவதானம். ஆயிரம் பேருக்கு எத்தனை கார் விற்றது என்று கணக்குப் போட்டால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறைவாம். கடந்த காலத்தில் 1961 இல் ஆயிரம் மக்களில் 37.6 பேர் வாகனம் வாங்கினார்கள். 2008 நிலவரம் அதை விடக் கீழே இருக்குமாம். மறுபடியும் 2007 விற்பனை அளவை எட்ட அமெரிக்காவிற்குக் குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டுகள் பிடிக்குமாம். ஐரோப்பா, ஜப்பான், இந்தியா என மற்ற நாடுகளில் பார்த்தாலும் தெம்பு உண்டாகவில்லை. 2007 இல் 7.1 கோடியாக விளங்கிய உலக ஆட்டோமொபைல் விற்பனை 2009 இல் 6.22 கோடியாகக் குறையுமென்று எதிர்பார்க்கிறார்கள். முப்பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் "திவாலான ஃபைனான்ஸ் கம்பெனிக்கெல்லாம் உதவி செய்றீங்கோ! எங்களுக்கு ஏதாவது பாத்துப் பண்ணுங்க.
நாங்க போண்டியானா மில்லியன் கணக்கில வேலை போகும். அதனால ஒரு 25 பில்லியன் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்ற தொனியில் பிரைவேட் ஜெட் விமானத்தை எடுத்துக்கொண்டு வாஷிங்டன் சென்று பேசினார்கள். அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் டிசம்பர் முடிவில் திவாலாகும் அபாயம் தனக்கிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. அதன் அக்டோபர் விற்பனை 45 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஃபோர்டும், கிரைஸ்லரும் அதை விட மெச்சும்படியாக இல்லை. மீறிப் போனால் சில மாதங்கள் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கும். அவ்வளவே! ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் ஷேர் வரலாறு காணாத வகையில் வீழ்ந்தது, அதாவது 1946 இல் நிலவிய விலைக்கு மீண்டும் திரும்பிச் சென்றது. எனினும் இந்த முறை கொஞ்சம் பிகு பண்ணிய அமெரிக்க ஆளும் வர்க்கம் உடனடியாகச் சம்மதிக்கவில்லை.
பல காலமாகவே எரிபொருள் சிக்கனப்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு வலியுறுத்தியதை இந்த மூன்று நிறுவனங்களும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினர். ஜப்பானில் ஒரு கேலன் பெட்ரோலுக்கு 45 மைல் (லிட்டருக்கு 19.125 கிமீ) அளிக்க வேண்டும் என்ற நியதி உள்ளது. அதே போல சீனாவில் கேலனுக்கு 35 மைல் (லிட்டருக்கு 14.875 கிமீ) என்ற நியதியும், ஐரோப்பாவில் 2012 க்குள் கேலனுக்கு 52 மைல் (லிட்டருக்கு 22.1 கிமீ) என்ற நியதியும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நிர்ப்பந்திக்கப்படுவது கேலனுக்கு 25 மைல் (லிட்டருக்கு 10.625 கிமீ) மட்டுமே. எனவே 2020 க்குள் கேலனுக்கு 35 மைல் கொடுக்குமளவு தொழில்நுட்ப மேம்பாடு செய்வதற்காக ஏற்கனவே அவற்றுக்கு 25 பில்லியன் உதவியளிக்க அமெரிக்க நிர்வாகம் சம்மதித்துள்ளது.
எனவே இதற்கு மேல் எதற்காகக் கூடுதல் நிதியுதவி என்ற கேள்வியும், நியாயப்படுத்துமாறு வேண்டுதலும் முன்வைக்கப்பட்டன. தவிர எப்படியெல்லாம் கம்பெனியை இலாபப் பாதைக்கு மீட்கப் போகிறார்கள் என்ற வரைவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அதே நேரம் இந்த மூன்று நிறுவனங்களையும் அப்படியே கைவிட்டு அவற்றை இழுத்து மூடினால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தப் போகும் கடுமையான பாதிப்புகளைப் பற்றி அமெரிக்க அரசு அறியாமல் இல்லை. 12.2 இலட்சம் பேருக்கு நேரடியாக வேலை பறி போகும். அவற்றை நம்பியுள்ள உதிரி பாக நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்களில் 17 இலட்சம் பேரும் வீட்டுக்குச் செல்ல நேரிடும். ஒரு வருடத்தில் 151 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மூன்று வருடத்தில் 398 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கிறார்கள்.
இருந்தாலும் குருட்டாம்போக்காக இந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதில் அமெரிக்க செனட் சபை இருதரப்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. அதனால் தான் மேலே குறிப்பிட்டது போல, எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கார்களை விற்று கம்பெனியை மீட்புப் பாதைக்குத் திருப்பப் போகிறீர்கள் என்ற கேள்விக் கணையைத் தூக்கி வீசி நவம்பர் 19 ஆம் தேதி திருப்பி அனுப்பிவிட்டது செனட். அந்த மூன்று கம்பெனிகளின் உயரதிகாரிகள் மிசிகனில் இருந்து இருபதாயிரம் டாலர் கம்பெனிக் காசு செலவழித்து கார்ப்பரேட் சொகுசு பிரைவேட் ஜெட்டில் வாஷிங்டனுக்கு வந்திருந்தனர். மற்றவர்களைப் போல விமானம் பிடித்திருந்தால் இரு வழிப் பயணம் வெறும் 500 டாலரில் முடிந்திருக்கும் என்று பத்திரிகைகள் கரித்துக் கொட்டின. ஏற்கனவே நிதி நிறுவனங்களை மீட்பதற்கு ஒதுக்கிய 700 பில்லியன் டாலரில் பெரும்பகுதி உயரதிகாரிகளுக்குப் போவதாக ஒரு குற்றச்சாட்டு உலவுகிறது.
அதே போல முப்பெரும் கம்பெனிகளின் மேலதிகாரிகளும் லவட்டிச் செல்லக் கூடாது என்பது பொதுமக்களின் நிலைப்பாடு. எனவே வேறு வழியில்லை. ஜெயலலிதா வழியில் ஜெனரல் மோட்டார், ஃபோர்டு, கிரைஸ்லர் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அடியெடுத்து வைக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. டிசம்பர் 2 ஆம் தேதி அவர்கள் மறுபடியும் வாஷிங்டன் வந்தனர். கூடவே, "எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்" என்ற அறிவிப்பு. அம்மாவே அசந்து போயிருப்பார். ஏனென்றால் சென்ற ஆண்டு ஃபோர்டு தலைவரின் ஊதியம் 21 மில்லியன், ஜெனரல் மோட்டார் தலைவருடையது 14.4 மில்லியன். கூடவே நிறுவனம் வைத்திருக்கும் விலையுயர்ந்த கார்ப்பரேட் ஜெட் விமானங்களையும் விற்பதாக உறுதியளித்துள்ளனர். தனது 47 தொழிற்சாலைகளை 2012 க்குள் 38 ஆகக் குறைப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் வரைவுத் திட்டம் கூறுகிறது. அதில் 31,500 பேருக்கு வேலை பறி போகும்.
2000 சமயத்தில் 1,91,465 பேர் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் தற்போது 96,537 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். வகுத்தபடி இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினால் 2012 இல் டொயாட்டோ நிறுவனத்தை நேருக்கு நேர் சமாளிக்கும் அளவுக்கு முன்னேறிவிடுவோம் என்றும் அமெரிக்க பிரதிநிதி சபை காங்கிரஸிடம் அது உத்திரவாதம் கொடுத்துள்ளது. மூன்று கம்பெனிகளும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 31 பில்லியன் டாலர் நிதியுதவி கேட்டுக் கையேந்தியுள்ளன. இதில் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும் 18 பில்லியன் கோரியுள்ளது.
அமெரிக்க நிர்வாகம் எந்த அளவுக்கு இந்த வேண்டுகோளை மதித்து இணங்கும் என்ற கேள்விக்கு இந்தக் கட்டுரை பிரசுரமாகும் போது ஒரு வேளை விடை கிட்டியிருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் திண்ணம். தொகை வேண்டுமானால் கூடக் குறைய இருக்கலாமே தவிர, வேண்டுகோளை அப்படியே நிராகரிக்க மாட்டார்கள் என்பதே அனைவரது கணிப்பும் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.
நன்றி: uyirosai@uyirmmai.com , kuppusamy18@gmail.com
இரா.முருகன், சுஜாதா- ஒரு விவாதம்
1 hour ago
1 comment:
எனக்கொரு ஐடியா. இவ்வளவு பணத்தையும் மக்களிட்டா கொடுத்தா கார் வாங்கி ஓடுவாங்க. அப்புறம் வியாபார்ம் ஓடுமே? ஏன் செய்யல?
Post a Comment